You don't have javascript enabled
Audio booksMonisha NovelsRomanceRomantic thriller

Solladi sivasakthi-3&4

3

அவன் யாரோ?

ஆரம்பத்திலேயே நாம் சில அசாதாரணமான சூழ்நிலைகளைக் கடந்து வர நேர்ந்ததினால் சிவசக்தியை குறித்த அறிமுகம் தராமலே கதைக்குள் பயணித்துவிட்டோம். ஆதலால் இப்பொழுது நம் கதை நாயகியின் அறிமுகத்தைக் கொஞ்சம் தாமதமாகவே விவரிக்கிறோம்.

சிவசக்தி. சிவமும் சக்தியாய் அவள் பெயருக்கு ஏற்றாற் போல் பெண்மையின் குணங்களும், வசீகரமும் அதன் கூடவே ஒரு ஆணுக்கு இருக்கும் அசட்டுத் தைரியமும் அவளிடம் கலந்தே இருந்தது.

சிவசக்தியின் சிறிய குடும்பத்தில் அவளின் தாய் மகேஷ்வரி மற்றும் ஒரே சகோதரன் அருண். இன்றைக்கு அவர்கள் இருவருமே இப்பூவுலகில் இல்லை என்பது அவளின் துரதிஷ்டம்தான்.

அவளின் தாய் மகேஷ்வரி காதலித்து மணந்த கணவனைப் பிரிந்து பெரும் போராட்டத்தோடு சிவசக்தியையும் அருணையும் வளர்த்தாள். அந்தப் போராட்டத்தில் தன்னையும் தொலைத்துவிடாமல் பிரபல வழிகறிஞராகத் தனக்கென்ற ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டாள்.

அதுமட்டுமின்றிக் குடும்ப வாழ்கையில் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற பெண்களுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வந்தாள். அத்தகைய துணையில்லா பெண்களைச் சுயமரியாதையோடும் பாதுகாப்போடும் வாழ வைக்கும் இல்லத்தின் பெயர் சிவசக்தி இல்லம்.

இப்படி வாழ்க்கையைத் தொலைத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதைகளைக் கேட்டு வளர்ந்த நம் கதைநாயகிக்கு பொதுவாகவே காதல் மற்றும் கல்யாணம் மீது அவநம்பிக்கை வளர்ந்து வந்தது.

அவளின் பதினாறு வயதில் தாய் மகேஷ்வரி உடல் நலம் குன்றி மரணித்தாள். இதனால் சிவசக்தி நிலைகுலைந்து போக, அருண் தன் தங்கைக்குத் துணை நின்று அவள் வாழ்க்கையை வழிநடத்திச் சென்றான். அருண் அவனுடைய கல்லூரி நாட்களில் திவ்யாவை காதலித்தான்.

திவ்யாவின் குடும்பத்தில் எழுந்த பெரும் எதிர்ப்பை மீறி திருமணமும் முடித்தான். ஆனால் துரதிஷ்டவசமாய் ஒரு விபத்தின் காரணமாய் அவனும் இன்று இல்லாமல் போய்விட்டான். அந்தச் சமயத்தில் திவ்யா கருவுற்றிருந்ததினால் பெங்களூரில் இருக்கும் அவள் பிறந்துவிட்டார் அவளை அழைத்துச் சென்றுவிட்டனர்.

இன்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் துணையற்றுத் தனிமையில் நின்ற சிவசக்தி தன் தாய் ஏற்படுத்திய சிவசக்தி இல்லத்தில் ஆதரவற்ற பெண்களைத் தம் உறவுகளாகவே மாற்றிக் கொண்டு குடிபெயர்ந்து விட்டாள்.

இப்போதைக்குச் சிவசக்தி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவளுடைய கனவு ஐ. ஏ. எஸ் படிக்க வேண்டுமென்பதுதான். அந்த எண்ணம் அவளின் தாய் மகேஷ்வரியின் மூலமாகச் சிறு வயதில் விதைக்கப்பட்டது. அதை நிறைவேற்றுவதே சிவசக்தியின் இன்றுவரையிலான இலட்சியம்.

இப்படியான அவள் வாழ்க்கை பாதையில் தன் அண்ணியின் மகள் தீக்ஷாவை பார்க்கும் ஆசையில் பெங்களூர் புறப்பட்டு வந்து இப்படி ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டாள்.

சிவசக்தியை இந்தச் சூழ்நிலையில் திவ்யா ரொம்பவும் நன்றாகவே கவனித்துக் கொண்டாள். ஆதலால் அவளின் உடல் நலம் ஒரளவு முன்னேற்றம் அடைந்திருந்தது. அருண் திவ்யாவை மணமுடித்து வந்த நாளிலிருந்தே நாத்தனாரும் அண்ணியும் நல்ல தோழிகளாகவே பழகி வந்தனர்.

மருத்துவமனை வாசனையும் அதன் சூழலும் சிவசக்திக்கு மனச்சோர்வை ஏற்படுத்த அவள் திவ்யாவிடம்,

“எனக்குத் தீக்ஷாவை பார்க்கனும்… எப்ப அண்ணி வீட்டுக்குப் போகலாம்?!” என்று கேட்டாள்.

“இன்னைக்கு ஒரு நாள்தான்… நாளைக்கு டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காரு” என்றாள் திவ்யா.

“ஒடுகிற டிரெயின்ல இருந்து குதிச்சிட்டு… உடனே வீட்டுக்கு போனோமாமே?” என்று திவ்யாவின் தம்பி ஜெகதீஷ் கேலியான புன்னகையோடு உரைத்தான்.

“பாருங்க அண்ணி… நானே குதிச்ச மாதிரி பேசிறாரு உங்க தம்பி” என்று திவ்யாவிடம் சக்தி சொல்ல,

“வாய மூடு ஜெகி” என்று தன் தம்பியை திவ்யா கண்டித்தாள்.

“உங்களுக்குத் தூக்கத்தில நடக்கிற வியாதி இருக்கோ?! !” என்று மீண்டும் சக்தியை விடாமல் கேலி செய்தான் ஜெகதீஷ்.

“ஆமாங்க சார்… எனக்குத் தூக்கத்தில நடக்கிற வியாதி இருக்கு… அதனாலதான் டிரயின்ல இருந்து நடந்து வந்து வெளியே குதிச்சிட்டேன்… போதுமா?!” என்று சக்தி ஜெகதீஷை கோபமாய் முறைத்தபடி உரைத்தாள்.

இவர்களின் பேச்சிற்கிடையில் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் தயங்கியபடி அந்த அறைக்குள் நுழைந்தாள். பின்னோடு வர்ஷினியும் வந்தாள்.

சக்தி அவர்களை அடையாளம் கண்டு கொண்டுவிட்டு,

“ஹாய் வர்ஷு” என்று முகத்தில் புன்னகையோடு வரவேற்றாள்.

வர்ஷினி படுக்கையிலிருந்த சக்தியை நெருங்கி, “ஐம் வெரி சாரி” என்றாள்.

“எதுக்குச் சாரி?” என்று சக்தி கேட்க,

வர்ஷினியின் தாய் முன்னாடி வந்து, “தப்பு எல்லாம் என்மேலதான் நான் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது… உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுன்னே எனக்குத் தெரியல… நீங்க மட்டும் இல்லைன்னா… வர்ஷினிக்கு… யோசிச்சி பார்க்கவே பயமா இருக்கு… ரொம்பத் தேங்க்ஸ்” என்றாள் கண்ணில் நீர் பெருக!

“பரவாயில்ல… விடுங்க” என்று இயல்பாக உரைத்து சக்தி அந்தப் பெண்ணின் வேதனையை ஆற்றினாள்.

“உங்களுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா ?!” என்று அந்தப் பெண் தன் கைகுட்டையால் மீண்டும் கண்களைத் துடைத்தாள்.

சிவசக்தி இயல்பாகப் புன்னகையித்தபடி,

“நத்திங்… நீங்க இவ்வளவு பீஃல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை… ஐம் ஆல்ரைட்…” என்றாள்.

“நீங்க இன்னைக்கு நல்லா இருக்கீங்கன்னா… உங்க கூட வந்தவர்தான் காரணம்… நீங்க விழுந்திட்டீங்கன்னு நான் கத்தினதும் முதல் ஆளா ஓடிவந்து… டிரெயினை நிறுத்தி… உங்களைக் காப்பாத்தி… பஃஸ்ட் எயிட் பண்ணி…” என்று அந்தப் பெண் சொல்லிக் கொண்டிருக்க சக்தி உடனே,

“ஒரு நிமிஷம்… யாரு என்னைக் காப்பாத்தினது?” என்று சக்தி ஆர்வத்தோடு கேட்டாள்.

“உங்க ப்ஃரண்டுன்னு சொன்னாரு… அவர் உங்க கூட வந்தவர் இல்லையா?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

சிவசக்தி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மௌனமாய் யோசிக்க இப்போது வர்ஷினி முன்வந்து, ”அதான் ரோஸ் கொடுக்கச் சொன்ன அங்கிள்” என்றாள்.

வர்ஷினி சொன்னதைக் கேட்டு சிவசக்தியின் இதழ்கள் விரிந்தன. அம்மாவும் மகளும் சக்தியிடம் இன்னும் சில மணிநேரம் நன்றி உணர்வுகளைப் பரிமாறிவிட்டுப், பின் மனம் நிம்மதி பெற அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் செல்வதற்கு முன்பு சக்தி இரயிலில் விட்ட அவளின் பையையும் கைப்பேசியையும் கொடுத்தனர்.

அந்தச் சமயத்தில் சிவசக்தி வர்ஷினியின் தாயிடம்,

“தப்பா எடுத்தாக்காதீங்க… ஒரு சின்ன விஷயம்… கணவன் மனைவியா நீங்க சில முடிவுகளை எடுக்கிறதுக்கு முன்னாடி ஒரு அம்மா அப்பாவாகவும் யோசிங்க… நீங்க அவசரத்தாலும் கோபத்தாலும் எடுக்கிற எந்த முடிவும் உங்க பொண்ணோட எதிர்காலத்தையும் பாதிக்கும்…” என்று சொல்ல அந்தப் பெண் சிவசக்தியின் பேச்சில் கொஞ்சம் வியந்தபடி நின்றாள்.

பின்னர் தன் இமைகளை மூடி அவள் புரிதலை உணர்த்திவிட்டுப் புறப்பட்டாள். சிவசக்தியின் இந்த முதிர்ச்சி பல பெண்களின் வாழ்க்கை பாடத்திலிருந்து அவள் கற்றுக்கொண்டதே.

இத்தனை நேரம் சிவசக்தியை கேலி செய்து கொண்டிருந்த ஜெகதீஷுக்கும் நடந்தவற்றைப் பார்த்து அவள் மீது நன்மதிப்பு ஏற்பட்டது.

அவர்கள் சென்ற பின் குழப்பத்திலிருந்த திவ்யா சிவசக்தியிடம்,

“உன்னை காப்பாத்தின அந்த ப்ஃரண்டு யாரு?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியாது அண்ணி” என்று அலட்சியமாய்த் தலையாட்டினாள் சிவசக்தி.

“உன் போன், பேக் எல்லாம் இவங்க கிட்ட இருந்திருக்கு… அப்புறம் உன் பேரு… எங்க போன் நம்பர் எல்லாம்… உன்னை அட்மிட் பண்ணவருக்கு எப்படித் தெரியும்… எனக்கு ஒண்ணும் புரியல சக்தி…” என்றாள் திவ்யா.

சக்தி அவள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த தயங்கியபடி ஜெகதீஷை பார்க்க, உடனே திவ்யா அவனைப் பார்த்து சிறிது நேரம் வெளியே இருக்கும்படி சமிக்ஞை செய்தாள்.

ஜெகதீஷ் வெளியேறிய பின்,

“சரி சக்தி… இப்போ சொல்லு… உன்னை அட்மிட் பண்ணது யார்… உன் காதலனா… என் கிட்ட சொல்றதுல உனக்கு என்னடி தயக்கம்?” என்று திவ்யா சிரித்தபடி கேட்டாள்.

“அய்யோ அண்ணி… காதலும் இல்ல ஒரு மண்ணும் இல்லை… எனக்கு அவன் யாரு… என்னன்னு ஒண்ணும் தெரியாது… ஆனா அவனுக்கு என்னை நல்லா தெரியும்…” என்று சொல்லி சக்தி சலிப்புற்றாள்.

“என்னடி… புதிர் போடற?!” என்று திவ்யா புரியாமல் கேட்க சிவசக்தி கொஞ்சம் நேரம் யோசித்து விட்டு அவன் தன் வாழ்வில் வந்த நாளில் இருந்த நடந்தவற்றை எல்லாம் சுருக்கமாகத் திவ்யாவிடம் சொல்லி முடித்தாள்.

“என்ன சக்தி… இவ்வளவு விஷயம் நடந்திருக்கு… ஆனா இதைப் பத்தி நீ என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல?!” என்று திவ்யா அதிர்ச்சியோடு கேட்டாள்.

“நீங்களே அண்ணனை இழந்து வருத்தத்தில் இருந்தீங்க… போதாக் குறைக்குக் கர்ப்பமாக வேற இருந்தீங்க… அந்தச் சமயத்தில் எப்படி உங்ககிட்ட நான் சொல்லுவேன்…” என்றாள்.

திவ்யா கண்கள் கலங்கியபடி மனதில் வேதனைப் பொங்க, “உங்க அண்ணன் இருந்திருந்தா இப்படி எல்லாம் நடக்க விட்டிருப்பாரா சக்தி?!” மனதில் வேதனைப் பொங்க உரைத்தாள்.

சிவசக்தி தன் அண்ணியின் கரங்களை ஆதரவாய் பற்றி,

“ப்ளீஸ்… வருத்தப்படாதீங்க அண்ணி… முடிஞ்ச விஷயத்தைப் பத்தி இப்ப பேசி என்னவாகப் போகுது” என்று சமாதானம் செய்தாள்.

“சரி அதை விடு… இவ்வளவு உதவி செஞ்சிருக்காரு… அவர் முகத்தை நீ ஒரே ஒரு தடவை கூடப் பார்த்ததே இல்லையா…” என்று திவ்யா சந்தேகமாய் வினவ,

“எங்கே… அந்தக் கேரக்டர் என் கண் முன்னாடி வந்ததானே… இந்த ஆக்ஸ்டிடென்டிலதான் அவன் குரலையே முதல் தடவையா நான் கேட்டேன்… பட் என் பக்கத்தில இருந்தும் அவனை நான் பார்க்க முடியல… என் நேரம்” என்று சக்தி வெறுப்போடும் சலிப்போடும் சொல்ல திவ்யா சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள்.

பின்னர் மீண்டும் திவ்யா சக்தியிடம், “நீ அவரைக் காதலிக்கிறியா சக்தி?” என்று குழப்பத்தோடு கேட்டாள். சக்தி கொஞ்சம் சூட்சமமாய்ச் சிரித்தபடி, “இந்தக் கேள்வியை அவன் நேரில வந்து கேட்டா நான் அவனைக் காதலிக்கனுமா வேணாமான்னு முடிவெடுப்பேன்… முகமே தெரியாதவன் மீது காதலில் விழ இதென்ன சினிமாவா?” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவு தட்டப்பட, திவ்யா உள்ளே வரும்படி அழைத்தாள்.

அப்போது முகம் தெரியாத ஆடவன் உள்ளே நுழைந்தான். அந்த இளைஞன் ஒரு அழகான சிவப்பு நிற ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தோடு நிற்க சிவசக்தி சந்தேகமாய் அவனாக இருக்குமோ என்று விழிகள் ஸ்தம்பிக்கப் பார்த்தாள்.

“எங்க பாஸ்… இந்தப் பூங்கொத்தை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாரு மேடம்” என்று அந்த இளைஞன் சொல்லியபடி அந்த அழகிய மலர்களைச் சிவசக்தியிடம் நீட்டினான்.

சக்தி அந்தப் பூவை பார்த்துப் பெருமூச்சுவிட்டபடி,

“யார் உங்க பாஸ்… எதுக்கு இந்தப் பொக்கே… ப்ளீஸ் டேக் இட் அவே” என்று எரிச்சல் மிகுதியால் உரைக்கஅவன் இயல்பான புன்னகையோடு,

“கோபப்படாதீங்க மேடம்… நீங்க என்ன கேட்கனும்னாலும் எங்க பாஸ்கிட்டேயே கேளுங்க… அவரோட கான்டெக்ட் நம்பர் இதுல இருக்கு” என்று அந்த நபர் சொல்ல, சக்தி அந்த மலர்களை ஆர்வமாய் வாங்கினாள்.

அதிலிருந்த அட்டையில் ‘கெட் வெல் சூன் சக்தி’ என்று இருந்தது. அதன் இன்னொரு புறத்தில் ஒரு கைப்பேசி எண் அச்சிடப்பட்டிருந்தது.

அதற்குள் அந்த நபர் தன் வேலை முடிந்ததென வெளியேற,

“ஹெலோ மிஸ்டர்” என்று சக்தி குரல் கொடுத்து அவனைத் தடுத்தாள்.

அவன் அவள் புறம் திரும்ப,

“உங்க பாஸ் பேர் என்ன?!” என்று கேட்டாள்.

அவன் லேசாக நகைத்துவிட்டு,

“சாரி மேடம்… இந்தக் கேள்வியை நீங்க அவரையே கால் பண்ணி கேட்டுக்கோங்க” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.

திவ்யாவுக்கு நடந்த நிகழ்வுகள் எல்லாம் திகைப்பை ஏற்படுத்தியது. ஆனால் சக்திக்கோ இவை எல்லாம் பழகிப்போயிருந்தது. இருப்பினும் அந்தப் பூங்கொத்தை பார்க்க பார்க்க அவளின் முகம் கோபத்தில் சிவந்தது.

எங்கேயோ ஒருவன் கண்களுக்கு மறைவாய் இருந்து கொண்டு தன்னைக் கண்காணிக்கிறான் என்பதே சிவசக்திக்கு வெறுப்பை ஏற்படுத்த அவன் யாராக இருக்கும் என்று யூகிக்கக் கூட முடியாமல் அவள் ரொம்பவும் தவிப்புற்றாள்.

4

அவளின் அழைப்பு

சிவசக்தி அந்தக் கைப்பேசி எண்களைப் பார்த்ததிலிருந்து அவனைத் தொடர்பு கொள்வதா வேண்டாமா எனக் குழப்பத்தோடே இருந்தாள். திவ்யா சக்தியின் தெளிவற்ற மனநிலையைப் பார்த்து தன் கருத்தை அவளிடம் தினிக்க விரும்பாமல் அமைதி காத்தாள்.

இரவு வெகுநேரமாகியும் சக்தியால் உறங்கவே முடியவில்லை.

அவளுடைய அழகான சுவாரஸ்யம் நிறைந்த கல்லூரி நாட்கள் சிவசக்தியை ஆட்கொண்டது.

எஸ். எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சிவசக்தி பி. ஏ. வரலாறு கடைசி வருடம் பயின்று கொண்டிருந்தாள்.

அது தலைமை ஆசிரியர் அலுவலகம். வெளியே நிறைய மாணவர்கள் கூச்சல் குழப்பங்களோடு நிற்க அலுவலகத்தின் உள்ளே ஆங்கிலப் பேராசிரியை அமிர்தா சக்தியை நோக்கி வசைமாறிப் பொழிந்து கொண்டிருந்தாள்.

பின்னோடு அவள் தோழி ஜெயாவும் நின்று நேரத்திற்கு ஏற்றாற் போல் தன் கருத்தை சக்தியின் காதோடு உரைத்துக் கொண்டிருந்தாள்.

“பைஃனல் இயர்னு ரொம்ப ஆட ஆரம்பிச்சிட்டீங்களா?!” என்று அந்தப் பேராசிரியை அந்தத் தோழிகளை நோக்கி மிரட்டலாய் கேட்டாள். ஆனால் அவர்கள் இருவரும் மிரட்சி அடையவில்லை.

“நோ மேடம்” என்று சக்தி உரைத்தாள்.

“மத்த டிபார்ட்மன்ட்ஸோட எப்ப பாரு சண்டை… பிரச்சனை…” என்று அமிர்தாவின் குரல் இன்னும் கோபத்தோடு எதிரொலித்தது.

“நாங்க சண்டை போடல மேடம்… அந்தச் சி. எஸ் சி டிப்பார்மன்ட் விஜய்தான் பஸ் ஸ்டான்ட்ல கேர்ல்ஸை எல்லாம் கிண்டல் பண்ணான்” என்று சக்தி தன் பக்கம் உள்ள நியாயத்தை அச்சமின்றி வெளிப்படுத்த

“ஸோ… நீ உன் டிபார்ட்மன்ட் ஸ்டூண்டஸை கூட்டிக்கிட்டு அவன் கூடச் சண்டைக்குப் போயிட்ட… ரைட்” என்று அமிர்தா குரலை உயர்த்திக் கேள்வி எழுப்பினாள்.

ஜெயா பின்னோடு நின்று கொண்டு,

“அவன் கிண்டல் பண்ணான்னு சொல்றோம்… அதைக் காதுல போட்டுக்காம நம்மலேயே திட்டிட்டிருக்கு… பக்கி” என்று சக்தியின் காதோரம் முணுமுணுத்தாள்.

இப்பொழுது பிரின்ஸிப்பால் சக்தியை நோக்கி “இது காலேஜ்… இங்க நீங்க படிக்க வந்திருக்கீங்க… குரூப் சேர்த்துகிட்டு ரௌடீஸம் பன்றது… அதுவும் பெண்கள்… ரியலி அஷேம் ஆஃப் யூ… இத பாரு சக்தி… நீ பாய்ஸ் கூட எப்ப பாரு வம்புக்குப் போயிட்டிருக்க… இது உனக்கு லாஸ்ட் வார்னிங்… திரும்பி இப்படி நடந்துச்சு… காலேஜை விட்டு சஸ்பென்ட் பண்ணிடுவன்… டூ யூ அன்டர்ஸ்டேண்ட் ?!” என்று கடூரமான குரலில் கத்த,

ஜெயா சக்தியின் காதில், ”அதெல்லாம் பண்ணாது… சும்மா பூச்சாண்டி காட்டுது” என்றாள்.

சக்தி எரிச்சடைந்தலவாய் ஜெயாவை பார்த்து முறைக்க, அதற்குள் அந்த ஆங்கிலப் பேராசிரியை மீண்டும் சக்தியை நோக்கி

“சரி… அந்த அரிவிந்த் பைக்கை பஞ்சர் பண்ணது யாரு?” என்றாள்.

ஜெயா உடனே முன்னாடி வந்து,

“அது நாங்க இல்ல மேம்” என்றாள்.

“நடிக்காதீங்க… எனக்கு எல்லாத் தெரியும்…” என்று அமிர்தா மிரட்ட, இம்முறை சக்தி கொஞ்சம் கோபம் கொண்டவளாய்,

“காலேஜுக்கு வர்றவங்க பைக்கெல்லாம் பஞ்சர் ஆகிறதுக்கெல்லாம் நாங்க பொறுப்பு ஆக முடியுமா மேம்?” என்றாள்.

“மேடம்… முதல இவங்க பேரண்ட்ஸை கூப்பிட்டு கண்டிச்சு வைக்கச் சொல்லனும்” என்று அந்தப் பேராசிரியை பிரின்ஸ்பாலிடம் உரைத்தாள்.

ஜெயா மிரண்டபடி முன்னாடி வந்து,

“நோ மேடம்… இனிமே இந்த வருஷம் முடிகிற வரைக்கும் எந்தப் பிரச்சனையும் பண்ணமாட்டோம்… ப்ளீஸ் மேடம்” என்று கெஞ்சினாள்.

“என்ன சக்தி… வாட் அபௌட் யூ?” என்று அந்த ஆங்கிலப் பேராசிரியை கேட்க,

“சாரி மேம்… இனிமே இந்த மாதிரி நடக்காது” என்று தலையைக் குனிந்தபடி கோபத்தை மறைத்துக் கொண்டு உரைத்தாள்.

பின்பு சக்தியையும் ஜெயாவையும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கையெழுத்திட சொல்லி வாங்கிக் கொண்டனர். சக்தியும் ஜெயாவும் அமைதியாய் வகுப்பறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க,

“அந்த அமிர்தா வாயிலேயே குத்தனும்… எப்படிப் போட்டு கொடுத்திடுச்சு பாத்தியா… போதாக் குறைக்குப் பேரண்ட்ஸ் கூப்பிட்டு பேசனமுமாமே… ஒரு நாள் என் கையில தனியா மாட்டட்டும்” என்று ஜெயா புலம்பிக் கொண்டே வந்தாள்.

சக்தி அவள் புறம் திரும்பி,

“வாய மூடு ஜெயா… சம்பந்தமில்லாம என்னை ஏன்டி இந்தப் பிரச்சனையில் இழுத்து வீட்டீங்க ?… நான் பாட்டுக்கு கிளாஸ்ல படிச்சிட்டிருந்தேன்… என்னைக் கூட்டிட்டு போய் அந்த விஜய்கிட்ட கோத்துவிட்டுட்டு… கடைசில நான்தான் எல்லாரையும் தூண்டிவிட்ட மாதிரி ஆயிடுச்சு… போதாக் குறைக்கு அந்த அரவிந்த் பைக்கிலக் காத்தை பிடுங்கிவிட்டது நீங்கெல்லாம்… பழி என் மேலயா?!” என்று கேட்டுவிட்டு முறைத்தாள்.

“என்னடி… நம்ம பிரண்டஸ் இல்லயா… எனக்காக நீ திட்டு வாங்க மாட்டியா?!” என்று ஜெயா புன்னகையோடு சொல்ல,

சக்தி கோபத்தோடு, “அப்போ நீ அடி வாங்குடி” என்று அவள் கையிலிருந்த புத்தகத்தை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள்.

“சக்தி… நோ… அந்தப் புக் இருக்கிற சைஸுக்கு அதைப் படிக்கவே முடியாது… அதுல போய் அடிக்கிறியே… நியாயமா… ஐம் பாவம்” என்று ஜெயா அவளைத் தடுத்தாள்.

ஒருவழியாய் இருவரும் சண்டையிட்டபடி வகுப்பறையை வந்தடைய அங்கே மயான அமைதி குடிக்கொண்டிருந்தது. உள்ளே ஆசிரியை இல்லாத போதும் இரண்டு டிபார்ட்மன்டுக்கும் நடந்த கலவரத்தால் அவர்கள் அனைவரும் அப்போதைக்கு அமைதியாய் இருந்தனர் போலும்.

நம் தோழிகள் உள்ளே நுழைந்ததும் மாணவர்களில் ஒருவன்,

“ஏய்… செம கெத்து… நிறையப் பாராட்டு மழை கிடைச்சுதா?” என்று சொல்ல, இப்பொழுது அந்த வகுப்பறை ஆரவாரமானது.

ஜெயா நடந்ததை விவரிக்க சக்தி தன் நாற்காலியில் அமைதியாய் அமர்ந்து கொண்டு புத்தகத்தை மேஜைக்கு அடியில் வைக்கப் போன போது உள்ளே சிறிதாய் வண்ணநிற காகிதத்தால் மூடப்பட்ட ஒரு பரிசு இருந்தது.

அந்தக் கவரின் மேலே, “டூ சிவசக்தி” என்று பெரிதாய் எழுதி இருக்க அவள் கோபத்தோடு எழுந்து,

“யாருடா இந்த வேலையைப் பார்த்தது?” என்று உரக்க கத்தி ஆண்கள் அமர்ந்திருந்த திசை நோக்கினாள்.

மாணவர்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

பின்னர் ஒருவன், “அம்மா தாயே! எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை…” என்றான்.

ஜெயா அந்தப் பரிசை வாங்கிப் பார்த்துவிட்டு,

“இவனுங்க யாராச்சும்தான் இந்த வேலையைப் பார்த்திருப்பானுங்க… திருட்டு பசங்க” என்று சொல்லிக் கொண்டே பிரித்தாள்.

உள்ளே ஒரு கவிதை புத்தகம் இருந்தது.

அதன் தலைப்பு, “விழித்தெழு பெண்ணே!” என்றிருக்கக் கீழே சிவசக்தி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. சிவசக்தி திகைப்போடு அந்தப் புத்தகத்தைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்.

பின்னர் ஜெயாவின் முகத்தைப் பார்த்து,

“இதெல்லாம் நான் என்னோட டைரில எழுதி வைச்சிருந்த கவிதை” என்று சக்தி அதிர்ச்சியோடு உரைத்தாள்.

“ஓ… அதை யார் புக்கா போட்டிருப்பா?” என்று ஜெயாவுமே புரியாமல் விழித்தாள்.

“டைரி இரண்டு மாசத்துக்கு முன்னாடியே தொலைஞ்சிடுச்சு ஜெயா” என்றாள் சக்தி.

“யாரு இதை இங்க வைச்சு இருப்பா… கவர்ல ஏதாச்சும் பேர் இருக்கா பாரு…” என்று ஜெயா சொல்ல, சக்தி முற்றிலுமாய் அலசி விட்டு பின்னர் அந்தப் புத்தகத்தைப் பிரித்தாள்.

அதில், “உன் பெயரைப் போலவே… உன் எழுத்தும் அழகு!” என்று எழுதுகோலால் எழுதப்பட்டு இருந்தது.

சக்தி தீவரமாய் யோசிக்க இப்பொழுது ஜெயா சிரித்தபடி,

“உன் மேல இன்டிரஸ்ட் இருக்கிற யாரோ செஞ்சிருக்காங்க… ஆனா இந்தப் புத்திசாலித்தனமான வேலையை நம்ம கிளாஸ் பசங்க எவனும் நிச்சியம் பண்ணி இருக்கமாட்டானுங்க” என்றாள்.

யார் இதைச் செய்தது எனச் சக்தி யோசித்துப் பார்த்து குழப்பமே மிச்சமானது. போதாக் குறைக்குக் கல்லூரியில் சக்தி எங்கே சென்றாலும் அவளின் கவிதையைப் பேராசிரியர்களும் மாணவர்களும் புகழ்ந்து தள்ளினர்.

அவளின் கவிதை புத்தகம் எல்லா வகுப்பறைகளிலும் மற்றும் பேராசிரியர்கள் அறையிலும் கூட ஒன்றொன்று வைக்கப்பட்டிருந்தது. சிவசக்திக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமும் இன்னொரு பக்கம் எரிச்சலும் விளைந்திருந்தது.

என்ன நோக்கத்தோடு யார் இவ்வாறு செய்திருக்க முடியும் என்ற கேள்விக்கான விடையை சக்தியால் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று ஆரம்பித்த கண்ணாமூச்சி விளையாட்டு இன்னும் முடிந்தபாடில்லை.

சிவசக்தி ஓரளவுக்கு உடல் நலம் பெற்றுவிட்ட காரணத்தினால் அவள் மருத்துவமனையில் இருந்து கிளம்ப ஆயுத்தமானாள். திவ்யா எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளப் பில் கட்ட சென்ற ஜெகதீஷ் ஏமாற்றத்தோடு திரும்பிவந்தான்.

“யாரோ பில் பே பண்ணிட்டாங்களாமே?” என்றான்.

திவ்யா சக்தியை நோக்க, அவள் முகம் அவன் மீதான வெறுப்பைப் பிரதிபலித்தது.

எப்படியோ பெரும் மரணப் போராட்டத்திற்குப் பின் சக்தி திவ்யா வீட்டை வந்தடைந்தாள். திவ்யாவின் மகள் தீக்ஷா பிறந்த குழந்தையாய் இருந்த போது சக்தி வந்து பார்த்ததோடு சரி.

மற்றபடி திவ்யாவுடன் போனில் பேசும் போது தீக்ஷாவை பற்றி விசாரித்து அறிந்து கொள்வாள். மீண்டும் சக்திக்கு தீக்ஷாவை பார்க்க இந்தத் தடவைதான் நேரம் கிட்டியது. இன்று சக்தி தீக்ஷாவை சந்தித்த போது அவள் நன்றாகவே நடக்கப் பழகி இருந்தாள்.

சக்தி வந்த குறுகிய நேரத்தில் தீக்ஷாவோடு நெருக்கமானாள். நடந்தவை எல்லாம் மறந்து தீக்ஷாவோடு இன்னொரு குழந்தையாகவே சக்தி மாறிப் போனாள். இந்தச் சந்தோஷம் நீடிக்க சக்திக்கு ஆசையாக இருந்தாலும் திவ்யாவின் பெற்றோருக்கு ஏனோ அவளின் வருகை பிடிக்கவில்லை. அது அவர்களின் செயலிலும் முகத்திலும் நன்றாகவே தெரிந்தது.

அதனைப் புரிந்து கொண்ட சக்தி, வந்த மறு நாளே புறப்பட வேண்டும் எனத் திவ்யாவிடம் சொன்னாள். சக்தியின் பிடிவாதம் திவ்யாவிற்குக் கோபத்தை ஏற்படுத்த அவர்களுக்குள் பெரும் வாக்குவாதம் நிகழ்ந்தது. கடைசியில் அவர்கள் பேச்சு திசைமாறி நாம் கேட்க நினைத்த கேள்வியைத் திவ்யா கேட்டுவிட்டாள்.

“நீ ஏன் அந்த நம்பருக்கு கால் பண்ணி பேசல?”

“நான் எதுக்குப் பேசனும்… அவனுக்கு நிச்சயமா என் நம்பர் தெரிஞ்சிருக்கும்… வேணும்னா அவனே என்னைக் கான்டெக்ட் பண்ணட்டும்… எனக்கு ஏன் நம்பர் அனுப்பனும் ? நானா அவனுக்குக் கால் பண்ணனும்னு எதுக்கு எதிர்பார்க்கிறான் ?” என்றாள் சக்தி.

திவ்யா கலகலவெனச் சிரித்து விட்டு,

“இதெல்லாம் காரணமில்ல சக்தி… நீ அவன்கிட்ட பேசனா அவன் உன்னை இம்பிரஸ்ட் பண்ணிடுவானோன்னு பயப்படுற”

“நோ வே”என்று சக்தி அலட்சியமாய்ப் பதிலளித்தாள்.

“அப்புறம்… என்ன காரணம்?”

“நானா எதுக்குப் பேசனும்னு தோணுது அண்ணி… அப்புறம் அதை அவன் அட்வான்டேஜாக எடுத்துகிட்டா… காதல் அது இதுன்னு ஏதாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டா?”

“காதலா இருந்தால்தான் என்ன?” என்றாள் திவ்யா புன்னகையோடு!

“காதல் ஒரு பைத்தியக்காரத்தனம்… பெண்களைப் பலவீனமாக்கிற யுக்தி… எனக்கு அதில் உடன்பாடில்லை” என்று சக்தி பதிலுரைக்க, அது பசுமரத்தாணியாய் இளம் வயதிலேயே அவள் மனதில் ஆழ பதிந்த எண்ணம்.

“காதல் பத்தின உன்னோட எண்ணம் ரொம்பத் தப்பு சக்தி… நீ பாத்துப் பழகிய பெண்கள் எல்லாம் ஏதோ ஒரு காரணத்தினால் காதல் கல்யாணத்தில் தோத்து போனவங்க…

அதனால உன் வாழ்க்கையும் அப்படி ஆயிடுமோன்னு நீ நினைக்கிற… நீ சொன்னவரைக்கும் அந்தப் பர்ஸன் உன்னை உண்மையிலேயே நேசிக்கிறாருன்னு நான் நினைக்கிறேன்…

ஆனா அந்த அன்பை நீ உன் தப்பான கண்ணோட்டத்தால் உதாசீனப்படுத்தற… இப்பவும் அவரா போன் பண்ணாம உன்னைப் பேச சொல்லி நம்பர் அனுப்பி இருக்கிறாருன்னா… உன் விருப்பத்துக்கு அவர் ரொம்ப மதிப்பு கொடுக்கிறாரு…

சரி இதெல்லாம் போகட்டும்… உன் உயிரை காப்பாத்தினவருக்கு ஒரு போன் பண்ணி நன்றி கூடச் சொல்ல மாட்டியா…? இது கொஞ்சம் கூட நியாயமே இல்லை…” என்று திவ்யா சொல்ல, சக்தி எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றாள்.

திவ்யா மேலும் “ஒழுங்கா போன் பண்ணிப் பேசு… இந்த விஷயத்தை இன்னும் வளர்க்காம ஒரு முடிவுக்குக் கொண்டு வா” என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

திவ்யாவின் அழுத்தமான வார்த்தைகள் ஏன் தான் அவனிடம் பேச தயங்குகிறோம் என்ற கேள்வியை அவளுக்குள் எழுப்பியது. அவன்தான் தன் உயிரைக் காப்பாற்றியவன் என்பதை எப்படி மறந்தோம்.

ஏதோ வீம்புக்கென்று அவனிடம் நன்றி கூட உரைக்காமல் இருப்பது நியாயமற்ற செயல். இவ்வாறு எண்ணம் தோன்றிய மறுகணமே சக்தி தன் பேகிலிருந்த அட்டையைத் தேடி எடுத்து அந்த எண்ணிற்குத் தன் கைப்பேசியின் மூலம் அழைப்பு விடுத்தாள்.

என்ன பேசுவதென்று யோசித்தபடி சக்தியின் செவியில் அழைப்பு மணி   கேட்டது. அந்த ஒலி ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது.

முதல்முறையாய் அந்த முகம் தெரியாத நபரோடு பேசப் போகிறோம். அவன் என்ன பேசப் போகிறான்? தான் என்ன பேசுவது? என்று சக்தி எண்ணமிட்டுக் கொண்டிருக்க மணி சத்தம் நின்று, “ஹெலோ” என்ற வார்த்தைக்குப் பதிலாய் “சக்தி…” என்று ஒரு ஆண்மை நிரம்பிய குரல் அவள் பெயரை அழைத்தது.

சிவசக்திக்கு லேசாய் தொண்டை அடைத்து பேச்சு வர மறுத்தது. இவள் அமைதியாய் இருக்க, அவன் மீண்டும்

“சக்தி… ஆர் யூ தேர் ?” என்றான்.

இம்முறை தெளிவோடும் தீர்க்கமாகவும் “எஸ்” என்றாள் சிவசக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content