Solladi sivasakthi-5&6
5
அவனைத் தேடி ஒரு பயணம்
சக்தியின் குரல் கேட்டதும் மறுபுறத்தில்
“எப்படி இருக்க சக்தி?… இப்ப பெயின் குறைஞ்சிருக்கா… நல்லா நடக்க முடியுதா… ஆர் யூ ஒ. கே நவ்?” என்று அவன் கனிரென்ற குரல் மென்மை தன்மையோடு வெளிப்பட்டது.
“யா… ஐம் ஆல்ரைட்” என்று சக்தி ஏளனமாய்ப் பதிலளித்தாள்.
“நானே போஃன் பண்ணிருக்கலாம்… ஆனா நான் போஃன் பன்றதை நீ விரும்பலன்னா… அதான் நம்பர் அனுப்பினேன்… உன் போஃனிற்காக நான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தேன்”என்று சொல்லும் போதே அதில் அவன் மனம் புரிந்தது.
மறுபுறத்தில் சக்தி “இப்பவும் நான் விரும்பி எல்லாம் கால் பண்ணல… நீங்க எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்கீங்க… என் உயிரை காப்பாத்தினதையும் சேர்த்து… ஸோ… அதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லதான் கால் பண்னேன்…
நீங்க செஞ்ச உதவிக்கெல்லாம் தேங்க்ஸுன்னு ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது… பட் என்ன பன்றது… இப்போதைக்குத் தேங்க்ஸ்னு மட்டும்தான் என்னால சொல்ல முடியும்” என்றாள்.
“நான் உன் தேங்க்ஸை எதிர்பார்த்து இந்த உதவி எல்லாம் செய்யல சக்தி”
“பின்ன வேற என்ன எதிர்பார்க்கிறீங்க மிஸ்டர்ர்ர்…?” என்று இழுத்துவிட்டு, “வாட்ஸ் யுவர் நேம்?” என்று சக்தி ஆர்வத்தோடு வினவினாள்.
மறுபுறத்தில் லேசான நகைப்புச் சத்தம் கேட்க, “நிச்சயமா சொல்றேன்… ஆனா இப்ப இல்ல… நாம ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணும் போது” என்று சொல்ல சக்தியின் முகத்தில் சலிப்புத் தட்டியது.
சக்தி அவனைப் பார்க்கும் ஆர்வத்தில்,”அப்போ வாங்க மீட் பண்ணலாம்”என்று பளிச்சென்று கேட்க,
“சாரி சக்தி… நான் இப்போ டெல்லியில் இருக்கேன்… ரிடன் வர டென் டேஸ் ஆகும்” என்றான் தயக்கத்தோடு!
“ஸோ வாட்… நீங்க நினைச்சா வர முடியாதா என்ன?” என்று தீர்க்கமாய்க் கேட்டாள்.
“உனக்காக நிச்சயம் வருவேன்… பட் என் சிட்டுவேஷன் அப்படி இருக்கு… அன்டஸ்டேன்ட் சக்தி” என்று கொஞ்சம் தாழ்மையாய் உரைத்தான்.
“நான் போகிற இடத்துக்கெல்லாம் ரோஸஸ் அனுப்பி இரிடேட் பண்ணுவீங்க… பட் நேர்ல வர சொன்னா மட்டும் தயங்கிறீங்க” என்று கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டாள்.
“சக்தி காம் டவுன்… நான் சமாளிக்கிறதுக்காக அப்படிச் சொல்லல… புரிஞ்சிக்கோ” என்று அவன் அவள் கோபத்தைக் குறைக்க முயற்சி செய்தான்.
“ஓகே… அப்போ நான் டெல்லிக்கு வர்றேன்… மீட் பண்ணலாம்” என்று சக்தி சொல்ல மறுபுறத்தில் நம் நாயகனிடம் அமைதி நிலுவியது.
“வாட்… மிஸ்டர்… பதிலே காணோம்?!” என்று சக்தி மீண்டும் கேட்டாள்.
“சக்தி… ஆர் யூ சீரியஸ்?” என்று அவன் கேள்வியில் ஆச்சர்யமும் சந்தேகமும் கலந்திருந்தது.
“யா… ஐம்” என்றாள் தீர்க்கமாக!
“நவ் ஒன்லி யுவர் கெட்டிங் வெல்… இந்த நேரத்தில இவ்வளவு தூரம் டிராவல் பண்ணனுமா?!” என்றான் கேள்வி குறியோடு.
“என் நிலையமையைப் பத்தி நீங்க கவலை பட வேண்டாம் மிஸ்டர்… உங்களுக்கு ஒகேவான்னு மட்டும் சொல்லுங்க”
அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு,
“நாம மீட் பண்ண போற அந்த ஸ்பெஷல் மொன்டுக்காக… நான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் சக்தி… கம் சூன்” என்று களிப்புடன் உரைத்தான்.
அத்தகைய களிப்பு நம் நாயகியிடம் இல்லை.
“நானும் அந்த ஒரு மொமன்டுக்காகதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்”என்று சொல்லி விட்டு,
“அந்த நாளை நீ மறக்கவே முடியாத மாதிரி பன்றேன்” என்று சக்தி மனதில் நினைத்துக் கொண்டாள்.
“இங்க நீ வருவதற்கான ஏற்பாடு எல்லாம்” என்று அவன் சொல்லும் போதே சக்தி உடனே,
“நீங்க எதுவுமே செய்ய வேண்டாம்… ஐ கேன் மேனேஜ்” என்றாள்.
“வெல்… பட் டிக்கெட் நான் ஸென்ட் பண்றேன்… ப்ளீஸ் டோனட் சே நோ” என்றான்.
சக்தி சில நொடிகள் மௌனமாய் இருந்து விட்டுப் பின்,
“தட்ஸ் ஒ. கே… அனுப்புங்க… பட் ஒன் லாஸ்ட் திங்… அங்கேயும் உங்க கண்ணாமூச்சி விளையாட்டைக் காட்டாதீங்க… ரைட் “ என்றாள் அதிகார தொனியில்.
“நிச்சயம் மாட்டேன்” என்றான்.
“ஓகே… நாம நேர்ல மீட் பண்ணி பேசுவோம்… பை” என்று சக்தி சொல்ல,
“ஒகே சக்தி… ஐம் வெயிட்டிங் டு சீ யூ” என்று எதிர்புறத்தில் அவனும் சொல்ல, அவள் இணைப்பைத் துண்டித்தாள்.
சக்தி அவன் பேசிய விதத்தை வைத்து அவன் மன ஓட்டத்தை ஓரளவுக்குப் புரிந்து கொண்டாள். இன்று அவள் கேட்ட குரலிலிருந்த வசீகரம் அவளைக் கொஞ்சம் நிலைதடுமாறவே செய்தது. குரல் மட்டுமே இல்லை. பேசிய விதத்திலும் ஒரு நேர்த்தியும் தெளிவும் இருந்தது.
அப்படிப்பட்டவன் எப்படி இருக்கக் கூடும் என்று என்னதான் சிந்தித்தாலும் பாராத முகத்தை அவள் எப்படி நினைவுகூர முடியும். இந்த எண்ணம் ஒரு புறம் இருக்க, அவன் முன்பு தான் எந்தக் காரணத்துக்காகவும் இறங்கிப் போய்விடக் கூடாதென்று சக்தி திடமாக எண்ணிக் கொண்டாள்.
அவன் தன்னை இதுவரை தவிக்கவிட்டதற்கு எல்லாம் சேர்த்து அவனைச் சந்திக்கும் தருணத்தில் பழி தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள்.
மீண்டும் தன் கைப்பேசியை எடுத்து அவள் தோழி ஜெயாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
மறுபுறத்தில் அழைப்பை ஏற்றுக் கொண்ட ஜெயா,
“என்ன சக்தி… என்னாச்சு ?… நானும் உனக்கு ட்ரை பண்ணிட்டிருக்கேன்… கான்டெக்ட் பண்ண முடியல” என்றாள்.
நடந்த அந்த மோசமான நிகழ்வை எல்லாம் சக்தி சுருக்கமாய்ச் சொல்லி முடிக்க,
“ஓ மை காட்! இப்போ ஒண்ணும் பிரச்சனை இல்லையே” என்று பதட்டத்தோடு கேட்டாள் ஜெயா.
“இல்ல ஜெயா… ஐம் ஒகே”
“எப்படியோ ஹீரோ சார் உன்னைக் காப்பாத்திட்டாரு” என்றாள்.
“சும்மா ஹீரோன்னு சொல்லாதே… ஹீரோன்னா நேருக்கு நேரா வரனும்… இப்படி ஒலிஞ்சி விளையாடக் கூடாது” என்றாள் சக்தி கோபமாக!
“உனக்குப் பிரச்சனை வரும் போதெல்லாம் உன்னைக் காப்பாத்தினா அவன்தான்டி ஹீரோ… சின்னதாய் ஒரு உதவி செஞ்சிட்டு நம்மை அவங்க காலடியில் வைச்சுக்கனும்னு எதிர்பார்க்கிற ஆம்பிளைங்க கூட்டத்தில… ஹீ இஸ் அ ஹீரோ… நீ இம்பிரெஸ் ஆனியோ இல்லையோ… ஐம் இம்பிரெஸ்ட்” என்றாள் ஜெயா.
“உன் ஹீரோ புரணத்தை நிறுத்து… நான் சொல்றதை கேளு… நான் கொடுக்கிற போஃன் நம்பரை… நம்ம ஸ்கூல் ஸ்போட்ஸ் டேக்கு வந்தாங்களே… டீ. சி காயத்ரி… அவங்க கிட்ட கொடுத்து டிரேஸ் பண்ண சொல்லி… அவன் டீடைல்ஸை கண்டுபிடிச்சுட்டு எனக்குக் கால் பண்ணு” என்றாள் சக்தி.
“ஹீரோ சார் நம்பரா சக்தி?” என்று ஜெயாவின் குரலில் ஆர்வம் நிரம்பியது.
“ஆமாம்”
“ஏ லூசு… அவருக்கே போஃன் பண்ணி டீடைல்ஸ் கேட்க வேண்டியதுதானே”
“அவன் சொல்ல மாட்டிறான் ஜெயா… அவன் பேரை கூட என்னை நேர்ல் பாத்துதான் சொல்லுவானாம்… அதான் அவனைப் பத்தின டீடைல்ஸை நானே தெரிஞ்சிகிட்டு அவன் முன்னாடி போய் நின்னு அவனை நோஸ் கட் பண்ணனும்” என்றாள்.
“உனக்கு உதவி செஞ்சவங்களை நோஸ் கட் பண்றதுதான் உனக்குத் தெரிஞ்ச நாகரிகமா?!” என்று ஜெயா கோபமாய் வினவினாள்.
“ஸ்டாப் இட் ஜெயா… உதவியும் செஞ்சிட்டு கூட உபத்திரமும் செய்றான்… நீ எனக்கு உதவுவியா… இல்ல நானே பாத்துக்கட்டுமா?” என்றாள்.
“உன்னையும் உன் பிடிவாதத்தையும் மாத்தவே முடியாது… ஒகே… பண்ணித் தொலைக்கிறேன்… நான் காய்திரி மேடம்கிட்ட உனக்காகப் பேசிறேன்… ஆனா ஒண்ணு… இது செம சேன்ஸ்… நீ இந்தத் தடவை ஹீரோ சாரை மிஸ் பண்ணிட்ட… உன் லைஃப் வேஸ்ட்” என்றாள் ஜெயா.
சக்தி சத்தமாய்ச் சிரித்துவிட்டு,
“ஓ ரியலி… அப்போ கண்டிப்பா… ஹீ இஸ் நாட் இன் மை லைஃப்” என்று உறுதியோடு உரைத்தாள்.
ஜெயா பெருமூச்சுவிட்டபடி, “எப்படியோ போ” என்று வெறுப்போடு சொன்னாள்.
சக்தி பேசி முடித்த பின்அழைப்பை துண்டித்துவிட்டு இன்னும் ஆழமாய்ச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள் அவனை நிராகரிக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் தீர்க்கமாய் இருந்தாள். ஆனால் அந்த முடிவு அவனைச் சந்தித்த பிறகு மாற்றமடையுமோ என்னவோ.
காலையில் அவன் சொன்னதைப் போல் ப்ஃளைட் டிக்கேட் வீடு தேடி வந்தது. அதைப் பார்த்த திவ்யா அதிர்ச்சியானாள். சக்தியிடம் அவள் எடுத்த முடிவைக் குறித்துக் கொஞ்சம் அதிகாரமாய்ச் சண்டையிட்டாள்.
திவ்யாவின் பயமே அவள் தனியாய் அத்தனை தூரம் செல்லப் போகிறாள் என்றுதான். நாம் ஏற்கனவே சொன்னது போல நம் கதாநாயகிக்குக் கொஞ்சம் அசட்டுத் தைரியம்.
அன்று மாலையில் விமானம் ஏறுவதற்காகப் புறப்படும் முன் கோபமாய் இருந்த திவ்யாவிடம் ஏதோ ஒரு பத்திரத்தை கொடுத்தாள்.
“என்ன சக்தி இது?” என்று திவ்யா கேள்வி எழுப்பினாள்.
“நம்ம தங்கியிருந்த வீட்டுப் பத்திரம்… அண்ணி” என்றாள் சக்தி
“இதை எதுக்கு என்கிட்ட?”
“உங்க பேர்ல மாத்திட்டேன்… பாப்பாவுக்கும் உங்க எதிர்காலத்துக்கும் உதவியா இருக்கும்”
“ஏன் சக்தி… இப்படி எல்லாம் பன்ற ? அந்த வீடு உங்க அம்மா கஷ்டபட்டு கட்டினது… அது உன் லைஃப்க்கு உதவியா இருக்கும்”
“இல்ல அண்ணி… எங்கம்மா எனக்காகக் கொடுத்துட்டு போனதா நான் நினைக்கிறது என்னோட தன்னம்பிக்கையும் தைரியமும்தான்…
இதை நான் உங்களுக்குக் கொடுத்ததிற்குக் காரணம் நீங்களும் பாப்பாவும் என்னைக்கும் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. அது உங்க அம்மா, அப்பா, தம்பியாவே இருந்தாலும் சரி” என்று சக்தி சொல்ல,
திவ்யா அவளைக் கண்ணீரோடு கட்டியணைத்துக் கொண்டாள். அவளின் பிடிவாதத்தைத் திவ்யாவால் மாற்ற முடியவில்லை.
ஜெகதீஷ் தான் விமான நிலையம் வரை துணைக்கு வருவதாகச் சொல்லியும் சக்தி மறுத்துவிட்டு தனியாகவே விமான நிலையத்தை அடைந்தாள்.
சிவசக்தி அவளின் செயலை எண்ணி அவளே வியப்புற்றாள். முகம் தெரியாத ஒருவனைத் தேடி தான் எந்தத் தைரியத்தில் இத்தனை தூரம் செல்ல இருக்கிறோம்.
அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலின் காரணமாகவே நேரப் போகும் எதைக் குறித்தும் கவலையில்லாமல் அவளுக்கே உரிய அசட்டுத் தைரியத்தோடு தன்னந்தனியே அந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.
சக்தி ஏறிய விமானம் நம் தலைநகரம் டெல்லி வரை பயணிக்க ஆயுத்தமானது. இந்தப் பயணம் அவர்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கண்ணாமூச்சி விளையாட்டை முடிவுறச் செய்யுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காற்றில் மேகங்களுக்கிடையே அந்த விமானம் பறந்து கொண்டிருக்க சக்தி கல்லூரியில் மீண்டும் அவன் தன்னைக் குழப்பத்தில் ஆழ்த்திச் சென்ற அந்த நாட்களை எண்ணிக் கொண்டாள்.
6
கண்டுபிடிப்பாளோ!
இரண்டு நாட்களாய் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இன்டர் காலேஜ் கல்சுரல்ஸால் எஸ். எஸ் கல்லூரியே கலை கட்டியது. மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கக் கல்லூரி முழுவதும் ஒரே ஆராவாரமாய் இருந்தது.
புதுப்புது முகங்களின் நடமாட்டங்களும் வெற்றி தோல்வி குறித்த சில சர்ச்சைகளும் கேட்டுக் கொண்டே இருந்தன. இவற்றை எல்லாம் ஒருபுறமிருக்க மாணவ மாணவிகளின் கண்களை அகல விரிய செய்யச் சிறப்பு விருந்தினர்களாய் நடிகர் நடிகைகளின் வருகைகள் எல்லோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தின.
கலை நிகழ்ச்சிகளுக்கென்று தனியாகக் கட்டப்பட்ட அந்தப் பிரமாண்ட ஹால் ஒலிஎழுப்பிகளால் பூகம்பங்கள் வந்தது போல் ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.
ஆட்டம் பாட்டம் மேடை மீது மட்டும் அரங்கேறவில்லை. பார்வையாளர்களாய் அமர்ந்திருந்த மாணவ மாணவிகளும் ஆடி அந்த இடத்தையே அதிரச் செய்தனர். இந்தக் கூட்டத்தில் நம் கதைநாயகி சக்தி என்ன செய்து கொண்டிருப்பாளோ என நம் வாசகர்கள் எண்ணக் கூடும்.
சக்திக்கு கலை நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் இவற்றில் எல்லாம் கொஞ்சம் கூட நாட்டமில்லை. அவளும் அவள் தோழி ஜெயாவும் வெளியே சாப்பிடுவதற்கென்று அமைக்கப்பட்ட ஸ்டால்களில் அமர்ந்து கொண்டு கதைப் பேசிக் கொண்டிருந்தனர்.
“சக்தி… வா ஹாலுக்குள்ள போகலாம்… குரூப் டான்ஸ் ஈவன்ட் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க… சீஃப் கெஸ்ட்… வாவ் ஆக்டர் ராகவ் வர்றாரு… கமான் சக்தி” என்றாள்.
“ஒரே விசில் சத்தம்… போதாக் குறைக்கு ஸ்பீக்கர் வேற தம்தம்முனு… நீ போ… எனக்குத் தலைவலிக்குது… நான் இங்கேயே இருக்கேன்” என்றாள் சிவசக்தி.
“என்ஜாய் பண்ண தெரியாதவடி நீ” என்று சொல்லியபடி ஜெயா எழுந்து அரங்கிற்குள் சென்றாள்.
உண்மையிலேயே சக்தி இப்போதைக்குக் கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் நிலையில் இல்லை. அவள் இப்படி வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருக்கக் கல்சுரல்ஸ் செகரட்டரி கீதா பெரிய பிரச்சனையோடு சக்தியை நோக்கி வந்தாள். அவளோடு நம் தோழி ஜெயா இன்னும் சில மாணவிகளும் வந்தனர்.
கீதா வேகமாய் முன்னேறிவந்து “சக்தி” என்று அழைத்தாள்.
சக்தி தலையிலிருந்த கையை எடுத்தபடி, கீதாவை பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டாள். கீதா கம்புயூட்டர் சைன்ஸ் டிபார்ட்மன்ட். அந்த டிபார்ட்மன்ட் ஆட்களைக் கண்டாலே சக்திக்கு பிடிப்பதில்லை.
எல்லாப் போட்டிகளிலும் அவர்களுக்கே முன்னுரிமை என்ற பாரபட்ச நிலை இருப்பதாக சக்தியின் எண்ணம். அவளுடைய கோபத்தில் நியாயமும் இருந்தது. அதனால்தான் அவள் அப்படி ஒரு முகப்பாவனைச் செய்தாள்.
“சக்தி… லிஸன் டூ மி… நம்ம பிரச்சனை எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்… இப்போ நீ ஒரு பெரிய உதவி செய்யனும்” என்றாள் கீதா.
சக்தி அவள் பேச்சை கேட்டுப் புரியாமல் விழித்தபடி,
“என்ன உதவி செய்யனும்?!” என்றாள்.
“மிஸ். க்வின்… சோலோ பேஃஷன் ஷோவில் சௌமியாதான் கலந்துக்கிறதா இருந்தது… ஆனா இப்போ அவளுக்குப் பயங்கர வயிற்று வலி… அவளால் கலந்துக்க முடியாதாம்… ஸோ” என்று மேலே சொல்லாமல் நிறுத்தினாள்.
“சௌமியாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க… இதுல நான் உதவி செய்யறதுக்கு என்ன இருக்கு?” என்று சக்தி கேள்வி எழுப்பினாள்.
“அய்யோ… மேட்டர் புரியாம பேசாதே… அந்த ஈவன்ட்ல அவளுக்குப் பதிலா யாராச்சும் கலந்துக்கனும்… எனக்கென்னவோ நீதான் அந்த ஈவன்ட்ல கலந்துக்கப் பொருத்தமா இருப்பன்னு தோணுது… ஸோ ப்ளீஸ்” என்று கீதா கெஞ்சலாகக் கேட்டாள்.
இம்முறை சக்தி ஜெயாவை பார்த்து சிரித்தபடி,
“ஏதாச்சும் பிரச்சனை என்றதும் நாம ஞாபகத்துக்கு வரோமா…?! எந்த ஈவன்ட்ஸிலயும் நம்ம டிபார்ட்மன்ட்ல இருக்கிறவங்களுக்கு வாய்ப்பே கொடுக்கல… இப்ப மட்டும் என்னவாம் ஜெயா ?” என்று மறைமுகமாய்க் கீதாவை தாக்கிப் பேசினாள்.
கீதா மீண்டும் சக்தியிடம்,
“இது நம்ம காலேஜ் நடத்துற கல்சுரல்ஸ்… அதுவுமில்லாம சோலோ ஈவன்ட்… இதுல யாரும் நம்ம காலேஜிலிருந்து பங்கெடுத்துக்கலனா… அது பெரிய அவமானம்… ப்ளீஸ் சக்தி நம்ம சண்டை எல்லாம் அப்புறம் வைச்சுக்கலாம்… சம்மதிச்சிரு”என்றாள்.
“என்னால எப்படி முடியும் கீதா?… எதுவுமே தெரியாம அத்தனை காலேஜ் கேர்ல்ஸ் நடுவில என்னை மேடை ஏறச் சொல்ற… நான் சொதப்பிட்டா நம்ம காலேஜுக்குதான் அசிங்கம்“ என்றாள்.
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் சக்தி” என்றாள் கீதா.
“நீ பார்ப்ப கீதா… என்னைப் பிரச்சனையில மாட்டிவிட்டுட்டு நீ நல்லா வேடிக்கை பார்ப்ப… என்னால முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டு சக்தி அகன்றாள்.
ஜெயா கீதாவிடம் “அவளுக்குதான் விருப்பமில்லைனு சொல்றாளே… நம்ம காலேஜ்ல அழகான பொண்ணுங்களுக்கா பஞ்சம்” என்றாள்.
“இந்த ஈவன்ட் கடைசி முக்கியமான ஈவன்ட்… இதுல கலந்துக்கப் போற கேர்ல்ஸ் முதல்ல போல்டா இருக்கனும்… அப்புறம் ஹைட்டா… ஸ்லிம்மா இருக்கனும்… அழகு எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு அறிவும் இருக்கனும்.
கடைசியா ஜட்ஜஸ் கேட்கிற கேள்விக்கு யோசிக்காம உடனே பதில் சொல்லனும்… அதான் நான் சக்தியை டிசைட் பண்ணேன்… நீ எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணி சக்தியை டிரெஸ்ஸிங் ரூமுக்கு கூட்டிட்டு வா” என்று கீதா சுலபமாகச் சொல்லிவிட்டு சென்றாள்.
ஜெயா படாத பாடுபட்டு எப்படியோ சக்தியை கல்லூரி மானத்தைக் காக்க வேண்டுமென்ற காரணத்தைச் சொல்லி சம்மதிக்க வைத்தாள். சக்தி அப்படி ஒரு சிக்கலில் தான் மாட்டப் போகிறோம் என்று அதுவரை அவள் எண்ணவேயில்லை.
சக்தி சம்மதம் தெரிவித்தவுடன் அதோடு பிரச்சனை முடிவடையவில்லை. அவளுக்கான பொருத்தமான உடை, ஆலங்காரம் என எல்லாவற்றையும் சக்தி தானே முடிவெடுத்தாள். குறைவான நேரத்தில் நடைப்பயிற்சி முதற்கொண்டு கற்று கொடுக்கப்பட, சக்திக்கு துளியளவும் நம்பிக்கையே இல்லை.
உண்மையில் தான் எல்லோர் முன்னாடியும் கேலிக்கு உள்ளாகப் போகிறோம் எனச் சக்தி நினைத்தே மேடையேறினாள். பல கல்லூரி மாணவிகள் வேறுப்பட்ட நவநாகரீக உடையில் இருக்க, சக்தி மட்டும் புடவையில் முந்தானையைத் தவழவிட்டபடி இருந்தாள்.
கல்லூரி பெண்களுக்கான அந்தப் பேஷன் ஷோ போட்டி தொடங்க எல்லோருமே தங்கள் தங்கள் தோரணையில் நடக்க சக்தி மட்டும் இயல்பாகவே நடந்தாள்.
ஒவ்வொரு சுற்றிலும் சில பெண்கள் நிராகரிக்கப்பட சக்திக்கு புரியவில்லை. தான் எப்படிக் கடைசிச் சுற்று வரை வந்தோமென. கீதாவும் ஜெயாவும் நகத்தைக் கடித்தபடி பயந்து கொண்டிருக்க, எல்லாப் பெண்களை நோக்கியும் கேள்வி எழுப்பப்பட்டது. கீழே அமர்ந்திருந்த முடிவெடுக்கும் தலைமை பொறுப்பிலிருந்த ஒரு பெண் கேள்வி கேட்டாள்.
“நீங்கள் இந்தச் சமுதாய நடைமுறையில் தவறென்று கருதும் ஒன்றின் பால் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டுமெனில் என்ன கேட்பீர்கள்?” என்று ஆங்கிலத்தில் கேட்க எல்லோருமே கொஞ்சம் யோசித்தபடியும் தம்முடைய கேள்விகளை உரைத்தனர்.
சக்தியின் முறை வந்த போது அவள் நிமிர்ந்த நின்றபடி கம்பீரமாக,
“ஒரு குழந்தை ஆணாக இருந்தாலும் அது பெண்ணாக இருந்தாலும் அதைப் பெற்று எடுக்கவும் கவனித்துக் கொள்ளவும் தந்தையைவிடத் தாய்க்கே பொறுப்பு அதிகமாய் இருக்க… ஏன் நம்முடைய முதலெழுத்து தந்தைக்கு உரியது? ஏன் தாய்க்கு அதற்கான உரிமையும் தகுதியும் இல்லையா?!” என்று கோபத்தோடும் கொஞ்சம் அதிகாரமாகவும் அழுத்தமாகவும் கேட்க,
அந்தக் கேள்வியால் அரங்கத்தில் உண்டான கைதட்டல் ஒலி காதை செவிடாக்கியது.
அனைத்துச் சுற்றுகளும் முடிவடைய அந்தப் போட்டியில் வெற்றி வாகை சூடியவள் யாரெனத் தலைமையாளர்கள் அறிவிக்க மேடை ஏறினர். முதலில் தனித்தனியே அழகானவள், அழகான புன்னகை, தைரியமானவள், நளினமான நடை என்று பட்டங்கள் பொருத்தமான மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
இறுதியாக எல்லாத் திறமையும் ஒருங்கிணைந்த குயின் பட்டத்தை வென்ற பெண் சிவசக்தி எஸ். எஸ் கல்லூரி மாணவிக்கு என அறிவிக்கப்பட்டது. தலையில் கிரீடம் சூட்டப்பட சக்திக்கு அந்த நிகழ்வு நம்பமுடியாத திகைப்பை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் நிச்சயம் நம் கல்லூரிக்கு வெற்றி கிட்ட வாய்ப்பில்லை என்ற எல்லோருடைய அவநம்பிக்கையையும் சக்தி முறியடித்தாள்.
சிவசக்தியே அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. கல்லூரியே அந்த வெற்றியை பெருமைக்குரியதாகக் கருத அவளுக்குப் பாராட்டுமழை குவிந்தது. அடுத்த நாள் அவள் வகுப்பறையில் தம் டிபார்ட்மன்டுக்காகவும் கல்லூரிக்காகவும் பெருமை சேர்த்ததாகச் சொல்லி கேக் வெட்டி அமர்க்களப்படுத்தினர்.
இந்தப் புகழ்ச்சி முடிவுக்கு வரும் சமயத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஒரு அழகான ரோஜா பூங்கொத்து அவள் மேஜையின் அடியில் இருந்தது.
ஜெயாவும் சக்தியும் மீண்டும் எல்லா மாணவர்களையும் கேட்க, அவர்கள் யாரும் இல்லையெனக் கைகளை அசைத்தனர். அந்த ரோஜா பூக்களில் இருந்த அட்டையில்,
“ரோஜா மலரைப் போன்ற உன் வசீகர அழகிற்கும்… அவற்றின் முட்களைப் போன்ற உன் கூர்மையான அறிவிற்காகவும்…” என்று முடிவுறாமல் இருந்த வரியைப் பார்த்து இவ்வாறு அனுப்பியவன் யாராக இருக்கும் எனச் சக்தி குழம்பினாள்.
ஜெயா சிரித்தபடி, “ரொம்ப ரசனைக்காரன் போல” என்றாள்.
அன்று சிவசக்திக்கு அவன் மீது அதிகமாய் எரிச்சல் ஏற்பட்டது. பலமுறை இதே போல அந்த ரோஜா பூக்கள் சூழ்நிலைக்கேற்ப விதவிதமான முறையில் வந்தடைவது தொடர்ந்து கொண்டே இருந்தது. சக்தி ஒரு சூழ்நிலையில் அவளின் பொறுமையை இழந்தாள்.
அப்படி ஒருமுறை வெகு அருகாமையில் அவனைச் சந்திக்கக் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தை சக்தி கைநழுவவிட்டாள் என்றே சொல்லலாம். அன்றே அவனைச் சந்தித்திருந்தால் இன்று இத்தனை தூரம் பயணித்து நம் தலைநகரம் வரை வந்திருக்க நேர்ந்திருக்காது.
பயணம் முடிவுற்ற நிலையில் விமானத்தில் இருந்து எல்லோரும் இறங்கி தங்கள் பொருட்களைச் சேகரிக்கச் சென்றனர்.
சிவசக்தி அவன் நிச்சயம் விமான நிலையத்திற்கு வந்திருப்பான் என்ற நம்பிக்கையில் சுற்றும் முற்றும் தேடிக் கொண்டே வந்தாள். வெளியேறுகின்ற வழியாய் சிவசக்தி நடந்து வர,
“வெல்கம் மேடம்… திஸ் இஸ் பாஃர் யூ”என்று அழகான ரோஜா பூக்களை ஒருவர் அவளை வரவேற்க்கும் நோக்கில் நீட்டினார்.
சிவசக்தியின் முகம் கடுப்பாய் மாற, “இந்த ரோஸஸை கொண்டு போய் உங்க பாஸ்கிட்டேயே கொடுங்க” என்றாள்.
அவள் அப்படிச் சொல்லி முடித்ததும் சக்தியின் செல் போன் ஒலித்தது.
அவனின் அழைப்பைப் பார்த்தபடி சக்தி எடுத்துப் பேசினாள்.
“ஹாய் சக்தி” என்றான் ரொம்பவும் இயல்பாக!
“நான் என் வேலையை எல்லாம் விட்டுவிட்டு இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கேன்… இப்ப கூட என் கண் முன்னாடி வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை மிஸ்டர்… இந்த மாதிரி நீங்க யார் மூலமாகவோ அனுப்பிற ரோஸஸ் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தது” என்றாள்.
“நானே வரனும்னுதான் நினைச்சேன்… பட் உன் மேல ரொம்பம் கோபமா இருக்கேன் சக்தி… அந்தக் கோபத்தோட நம்ம முதல் சந்திப்பு இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்… அதனாலதான்” என்றான்.
“நான் என்ன பண்ணினேன்?” என்று கேட்டாள் சக்தி
“என் போன் நம்பர் கொடுத்து டீடைல்ஸ் விசாரிக்கச் சொன்னியாமே?” என்று அவன் கேட்க, சக்தியால் பதில் ஏதும் பேச முடியவில்லை. நாம் என்ன செய்தாலும் இவனுக்குத் தெரிந்துவிடுகிறதே என்று வெறுப்பு உண்டானது.
அவன் மேலும், “நாம நேர்ல மீட் பண்ணும் போது என்னைப் பத்தின எல்லா விஷயத்தையும் உன்கிட்ட சொல்றேன்னு சொன்னே இல்ல… அப்புறம் ஏன் இந்த வேண்டாத வேலை” என்றான்.
சக்தி ஏளனமாக, “எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்ல மிஸ்டர்… அதனாலதான்” என்றாள்.
“அப்போ ஒண்ணு பண்ணலாம்… நீ என் பெயர் மட்டுமாச்சும் கண்டுபிடி… அதுக்கப்புறம் நாம மீட் பண்ணலாம்” என்றான்.
சக்தி இம்முறை தான் தேவையில்லாத காரியத்தைச் செய்துவிட்டோம் என்று தோன்றியது. அவனிடம் இறங்கி போகவும் மனமில்லாமல் அவள் யோசிக்க அவன் மறுபுறத்தில்,
“என்ன சக்தி ஒகேவா?” என்று தீர்க்கமாய்க் கேட்டான்.
“என்ன விளையாடிறீங்களா மிஸ்டர்?” என்று கோபமாய் சக்தி கேட்க,
அவன் சிரித்தபடி, “இந்தத் தடவை கேம்மை நீ ஸ்டார்ட் பண்ண சக்தி… ஸோ அதை நீதான் முடிக்கனும்?” என்றான்.
சக்தி எந்தப் பதிலும் பேசி முடியாமல் மௌனமானாள்.