Vilakilla vithigal ‘AVAN’ – 13
13
எல்லோரிடமும் அன்பாக பழகுவதிலும் அன்பை பகிர்வதிலும்தான் மனித மனங்கள் செழிக்கிறது என்பதை பாரதி உறுதியாக நம்பினான். இதனாலேயே பாரதியால் எல்லோரிடமும் இலகுவாகப் பழக முடிந்தது. நட்பு பாராட்ட முடிந்தது. உதவ முடிந்தது.
இளம் வயதிலேயே பாரதி இத்தனை மேம்பட்டவனாக வளர்ந்ததற்கு முக்கிய காரணம் வித்யாதான். அன்பின் அடித்தளத்தில்தான் ஒழுக்கமும் உயர்வான அனைத்து குணங்களும் பெறப்படும் என்பதால் வித்யா தன் மகனுக்கு கற்று கொடுத்ததெல்லாம் அன்பின் சக்தியைத்தான்.
தாய்மையின் அரவணைப்பை அப்பாவின் கண்டிப்பைத் தோழியின் நேசத்தை என்று பலவித உறவுகளின் பரிமாணங்களாக அவனுக்கு வித்யா மட்டுமே இருந்திருக்கிறார்.
தன் தாயின் பிறந்த நாளை தன்னுடைய பிறந்த நாளை விடவும் கொண்டாடுவதில்தான் அவனுக்கு எப்போதுமே மகிழ்ச்சி!
ஒன்பதாவது படிக்கும் போது தன் அன்னைக்காக எழுதிய கவிதையைப் பாட்டாகப் பாடி அவரை ஆச்சரியப்படுத்தினான்.
இப்படி ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக தன் கைகளாலேயே ஏதேனும் ஒன்றை வடிவமைத்தோ அல்லது உருவாக்கியோ தன் அம்மாவிற்கு பரிசளிப்பதில் அவனுக்கு அலாதியான சந்தோஷம்தான். அதே போல அவன் என்ன புதுசாக தருவான் என்று தெரிந்து கொள்வதில் வித்யாவிற்கு அடங்கா ஆர்வம் இருக்கும்.
ஆனால் இம்முறை அவருடைய பிறந்த நாளும் தேர்வு தேதியும் ஒரே நாளாக அமைந்துவிட்டது. தேர்வை அணுகுவதை முன்னிட்ட பரபரப்பில் அவன் அவர் பிறந்த நாளை மறந்துவிட்டிருந்தான். ஆனால் அவன் வாழ்வணைத்தும் மறக்க முடியாத நாளாக பெரும் வலியையும் வேதனையையும் அவனுக்கு அந்த நாள் தர காத்திருந்தது.
முந்தைய நாள் தேர்விற்குத் தேவையானவற்றைக் கவனமாக அவன் எடுத்து வைத்து கொண்டிருந்த போது,
“பாரதி… நாளைக்கு எக்ஸாம் முடிச்சிட்டு குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு வந்துடுறியா?” என்றார் வித்யா.
“நாளைக்கு கஷ்டம்மா… இன்னொரு நாள் போகலாம்” என்றவன் தன் புத்தகத்தை புரட்டியபடி சொல்ல,
“அப்போ நாளைக்கு என்ன நாளுன்னு மறந்துட்டியா பாரதி? இந்த தடவை சர்ப்ரைஸ் கிஃப்டெல்லாம் ஒன்னும் கிடையாதா?” என்றவர் முகத்தை தூக்கி வைத்தபடி சோபாவில் அமரவும்தான், அவன் நினைவில் தட்டியது.
“ஐயோ! சை… எப்படி மறந்தேன்? போன வாரம் கூட ஞாபகம் வைச்சு ஜமால் கிட்ட சொல்லிட்டு இருந்தேன் ம்மா… எப்படி மறந்தேன்னே தெரியல ம்மா… ம்மா சாரி ம்மா… சாரி ம்மா… எக்ஸாம் டென்ஷன்ல… மறந்திருக்க கூடாது சாரி ம்மா” என்றவன் அவரருகில் அமர்ந்து அவர் கரம் பிடித்து வருந்தவும்,
“சும்மா சொன்னேன் டா… பரவாயில்ல விடு… எனக்கு தெரியாதா? நீ எக்ஸாம் டென்ஷன்ல இருக்கேன்னு” என்று அவர் சகஜமாக அவன் தோளை தட்டினார்.
“இல்ல ம்மா என்னதான் இருந்தாலும் நான் மறந்திருக்க கூடாது” என்றவன் புலம்ப,
“ப்ச்… பரவாயில்ல விடு பாரதி” என்று அவனை சமாதானம் செய்தவர்,
“எப்பவும் நீதான் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிற… இந்த தடவை நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இருக்கேன்” என்றதும் அவன் விழிகள் ஆச்சரியமாக விரிந்தன.
“சர்ப்ரைஸா? என்ன ம்மா அது?”
“அதான் சர்ப்ரைஸ்னு சொல்லிட்டேன் இல்ல… அப்புறம் என்னன்னு கேட்டா”
“ம்மா ப்ளீஸ் சொல்லிடுங்களேன்… நாளைக்கு எக்ஸாம் எழுதும் போதும் மூளைக்குள்ள இதுவே ஓடும்… சொல்லுங்க ம்மா” என்றவன் கெஞ்சியதில் சற்றே மனமிறங்கியவர்,
“சரி சொல்றேன்…” என்றவர் பீடிகையோடு ஆரம்பித்தார்.
“அது வந்து… நான் உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வைச்சு இருக்கேன்… பார்க்க அப்படியே தேவதை மாதிரி இருப்பா டா” என்றவர் படுசுவரசியமாக சொன்னதில் அவன் கடுப்பாக அவரை ஏறஇறங்க பார்த்து,
“பொண்ணு பார்த்து வைச்சு இருக்கீங்களா? என்ன ஜோக் பண்றீங்களா?” என்றான்.
“டே நம்பு டா… சீரியஸா”
“சும்மா விளையாடாதீங்க… போங்க ம்மா”
“விளையாடுறேனே… சரி நீ அப்படியே நினைச்சிக்கோ… நாளைக்கு நீ கோவிலுக்கு வருவ இல்ல… அப்போ நேர்ல பார்த்ததும் உனக்கே தெரிய போகுது”
அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நெற்றியைத் தேய்த்துக் கொண்டே, “அப்போ உண்மையாவா சொல்றீங்க?” என்றவன் மீண்டும் கேட்க,
“ஆமான்டா” என்றார்.
“உங்களுக்கே நீங்க பண்றது நியாயமா இருக்கா? நான் இன்னும் எக்ஸாம்ஸ் கூட முடிக்கல… எக்ஸாம் எழுதி செலக்ட் ஆகணும்… இன்டர்வியூ பாஸ் பண்ணணும்… ட்ரைனிங் போகனும்… இன்னும் எவ்வளவோ இருக்கு” என்றவன் வரிசை கட்டி கொண்டிருக்க,
“இருக்கட்டும்… இப்பவே உன்னை என்ன கல்யாணமா பண்ணிக்க சொல்றேன்… கொஞ்ச நாள் லவ் பண்ணு… அப்புறமா ட்ரைனிங் முடிச்சு போஸ்டிங் வாங்குன பிறகு கல்யாணம் பண்ணிக்கோ” என்றவர் சொன்னதைக் கேட்டு அவன் கோபமாக முறைத்தான்.
“ஒரு பொறுப்புள்ள அம்மா மாதிரியா பேசுறீங்க” என்றவன் நொடித்துக் கொள்ள,
“என்னை என்னடா பண்ண சொல்ற? அவதான்டா அவசரப்படுறா… உன்கிட்ட நாளைக்கு பிரப்போஸ் பண்ணனும்னு அடம் பிடிக்குறா… பேசாம ஒகே சொல்லிடுறா… இல்லாட்டி என்னை ஒரு வழி பண்ணிடுவா?” என்றவர் கெஞ்சும் முகம் பாவனையில் அவனைப் பார்க்க,
“என்ன ம்மா சொல்றீங்க? யாரு ம்மா அவ?” என்று அவன் குழப்பமாக தலையைப் பிய்த்து கொண்டான்.
“அதான் நாளைக்கு பார்க்க போற இல்ல… அப்ப தானாவே தெரிய போகுது… ஆனா மறக்காம வந்துடுறா… இல்லாட்டி குன்றத்தூர் மலை மேல இருந்து குதிச்சிடுவன்னு வேற சொல்லிட்டு இருக்கா… அவ குதிக்கிறாளோ இல்லையோ… என்னை முதல் தள்ளி விட்டுடுவா?”
அவன் மூச்சை இழுத்துவிட்டு தலையில் கை வைத்துக் கொள்ள,
“டே நாளைக்கு கண்டிப்பா வந்துடுவ இல்ல” என்றவர் பாவமாகக் கேட்டதில்,
“கண்டிப்பா வருவேன்… அப்பத்தான் நீங்க சொல்ற கதையெல்லாம் உண்மையா பொய்யான்னு எனக்கு தெரியும்” என்றவன் கடுப்பாகச் சொல்லிவிட்டு,
“இன்னும் கொஞ்ச நேரம் உங்க கூட பேசிட்டு இருந்தேன்னு வைய்யுங்க… எனக்கு படிச்சது எல்லாம் மறந்துடும்… நான் யசோ வீட்டுக்கு போறேன்” என்றவன் ஓடியேவிட்டான்.
அடுத்த நாள் விடிந்து வித்யா உறக்கம் களைந்து விழித்த போது எப்போதும் போல் அவர் மகனின் ஆச்சரிய பரிசுகள் அவருக்காகக் காத்திருந்தன.
வானத்தின் நிறத்தில் அழகாக ஓரு நீல நிற புடவையும் அதன் மீது மிக அழகாக வண்ண மணிகளாக கோர்த்து செய்த ஒரு ஜோடி வளைகளும் மின்னின.
“பாரதி” என்றவர் அவற்றைப் பார்த்து வியக்கவும்.
“ஹாப்பி பர்த்டே ம்மா” என்றவன் அவர் கழுத்தை கட்டி கொண்டு வாழ்த்த,
“டே கேடி… அப்போ நேத்து மறந்துட்டேன்னு சொன்னதெல்லாம் பொய்யா?” என்றவன் அவனை முன்னே இழுத்து காதில் திருகினார்.
“இல்ல ம்மா உண்மையிலேயே மறந்துட்டேன்” என்றான்.
“அப்புறம் எப்படிறா புடவை வளையல் எல்லாம்”
“துர்காவுக்கு கொடுத்து அனுப்ப டிரஸ் வாங்கனோம் இல்ல… அப்பவே உங்களுக்கு இந்த புடவையை வாங்கிட்டேன்… வளையல்தான் நேத்து நானே செஞ்சேன்”
“இந்த வளையலை பார்த்ததுமே நினைச்சேன்… கடையில வாங்குன மாதிரி எல்லாம் இல்லையே… புது டிசைனா அழகா இருக்கேன்னு… ஆமா எப்படிறா?”
“ஜமால் அம்மா… இந்த மாதிரி காஸ்மெட்டிக் ஐட்டம் எல்லாம் செய்வாங்க இல்ல… அவங்க கிட்ட ஐடியா கேட்டுதான் செஞ்சேன்”
அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவர், “நேத்து நைட் முழிச்சிருந்து செஞ்சியா டா?” என்றவர் வினவும், அவன் மிதமாக புன்னகை செய்தான்.
“எக்ஸாம் இருக்கும் போது… நல்லா தூங்கி எழுந்திருக்க வேண்டாமா? ஏன் டா?” என்றவர் அவனை வாஞ்சையாகப் பார்க்க,
“எக்ஸாம் எல்லாம் அப்புறம்தான்… எனக்கு முதல நீங்கதான்” என்றவன் சொன்னதில் நெகிழ்ந்து அவன் தலையைக் கோதி புன்னகைத்தவரின் விழிகளினோரம் நீர் கசிந்தது.
“சரி சரி… கையை காட்டுங்க… வளையல் போட்டு பார்க்கலாம்… எப்படி இருக்குன்னு” என்றவன் அவர் கையை பிடித்து வளையலைப் போட எத்தனிக்கவும்,
“உஹும்… இது என் மருமகளுக்கு… அவளுக்குத்தான் இது அழகா பொருத்தமா இருக்கும்” என்று அதனை வாங்கி தன் பைக்குள் வைத்து கொண்டார்.
“ம்மா நீங்க டூ மச்சா பண்றீங்க… மருமக அது இதுன்னு… ஒழுங்கா இந்த வளையலை கையில போடுங்க”
“இது என் மருமக கைக்குதான் போடணும்… சரி சரி நீ எக்ஸாம் முடிச்சிட்டு கோவிலுக்கு வந்துடுறா… மறந்துடாதே” என்று அவர் அவனுக்கு அழுத்தி நினைவுப்படுத்திவிட்டு சென்றார். அவன் புருவங்கள் நெறிந்தன.
ஒரு வேளை அம்மா சொல்வது உண்மையா அல்லது அவர் விளையாடுகிறாரா என்று யோசித்தவன், கோவிலுக்கு சென்ற பிறகு என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என அப்போதைக்கு அந்த சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு தேர்விற்கு புறப்படுவதற்கு ஆயத்தமானான்.
அவனுக்கும் யசோவிற்கும் வேறு வேறு தேர்வு மையம் என்பதால் இருவரும் தனித்தனியாக கிளம்பி சென்றனர். ஆனால் பாரதி தேர்வு மையத்தை அடைவதற்கு முன்னதாக அவன் கைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பு அன்றைய நாளின் எதிர்பார்ப்பை அறவே சிதைத்துவிட்டது.
“ஹலோ யாரு” என்றவன் கேட்டதற்கு,
“பாரதி பாரதி…” என்று ஓயாமல் அவன் பெயரை சொன்ன அந்த பெண்ணின் குரலில் ஆழமான சோகம் படிந்திருந்தது.
“யாருங்க நீங்க? நான் பாரதிதான் பேசுறேன் சொல்லுங்க”
“பாரதி… அம்மாவுக்கு அக்ஸிடென்ட்” என்றவள் சொல்லிவிட்டு பலமாகக் குலுங்கி அழுத சத்தம் கேட்க, அவன் பதறிவிட்டான்.
தன் பயத்தை எல்லாம் செறித்துக் கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தவன் வேகமாக அந்த பெண் சொன்ன மருத்துவமனைக்கு விரைந்தான்.
குருதியில் நனைந்த அவன் தாயின் தேகத்தில் மூச்சு மட்டுமே மிச்சமிருந்தது. ஆனால் அத்தனை உயிர் வேதனையிலும் அவர்,
“ஏன் பார தி… எ… எக்ஸா ம் எழுதாம வந்த” என்று கேட்டுவிட்டு தன் உயிரை விட்டார்.
‘அம்மா’ என்ற வார்த்தை முழுமையாக அவன் தொண்டை குழியிலிருந்து வடிவம் பெற முடியாமல் அழுகை மட்டுமே வெளிவந்தது.
இப்போதும் அந்த காட்சியை நினைத்தால் அவன் நெஞ்சுக் கூடு உலர்ந்து போகும். அவன் தேகத்தின் ஒவ்வொரு நாடி நரம்புகளும் ஒடுங்கி போக கண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து அவன் கரத்திலிருந்த வளையலை நனைத்தது.
அந்த வளையல்… அன்று அவன் அன்னைக்கு பரிசாக தந்த வளையல்… பாரதி கேட்ட கேள்விக்கு பதிலாக நந்தினி அந்த வளையலைத்தான் அவனிடம் தந்தாள்.
“நடந்து முடிஞ்ச விஷயங்களை பத்தி இப்போ வருத்தப்பட்டு என்னவாக போகுது” என்று நந்தினி உரைக்கவும் தன் கண்ணீரை துடைத்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்து,
“இந்த வளையல் எப்படி உன்கிட்ட?” என்று கேட்டான்.
“எப்படி வந்திருக்கும்? நீயே சொல்லேன்” என்றவள் தலைசாய்த்து அவனைப் பார்த்து கேட்கவும் அவன் நெற்றி சுருங்கியது. அவளைப் புரியாத பார்வை பார்த்தான்.
அவள் இதழ்களில் படர்ந்த புன்னகை அவனை ரொம்பவும் குழப்பியது.
“இல்ல… என்னால நம்ப முடியல” என்றவன் திடமாகக் கூற,
“அப்புறம் உன் இஷ்டம்” என்றவள் அசட்டையாகப் பதில் உரைக்க, அவளை ஏற இறங்கப் பார்த்தவன்,
“ஆமா… அம்மாவோட இந்த மாதிரி போட்டோ… நான் பார்த்தே இல்ல… இதெப்படி” என்று அவன் கேட்க வாயெடுப்பதற்குள்,
“பாரதி ஐம் டய்ர்ட்… உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ற மூட்ல நான் சத்தியமா இல்ல… நேத்து நைட் நீ பண்ண கலட்டால நானும் சாப்பிடல தெரியுமா?” என்றவளை ஒரு மாதிரி பார்த்தவன் அந்த நொடியே அவள் அறையை விட்டு வெளியே வந்து ஹாலில் அமர்ந்துவிட்டான்.
சில நிமிடங்கள் கழித்து அழகாய் ஒரு சிவப்பு நிற சேலையில் அவன் முன்னே வந்தவள், “பாரதி வா சாப்பிடலாம்” என்று அழைக்க, அவளை அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
நடப்பது ஒன்றும் அவனுக்கு விளங்கவில்லை. இங்கே வந்ததிலிருந்து அவனைத் தலையை பிய்த்துக் கொள்ள வைத்துக் கொண்டிருக்கிறாள். அவள் மீதுதான் கோபம் கோபமாக வந்தது. எரிமலையாக அவன் உள்ளூர தகித்துக் கொண்டிருக்க,
“பாரதி” என்று அவன் கரம் பிடிக்கவும்,
“ப்ச் என் கையை விடு” அவள் கரத்தை உதறிவிட்டு முறைத்தவனிடம்,
“சாப்பிட்டு வந்து உன் கோபத்தைக் காண்பி… எழுந்து வா” என்று அவள் கை கட்டி நிற்க அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சாப்பிட வந்தான்.
“பாரதி இதெல்லாம் உனக்கு பிடிக்கும் இல்ல” என்றவனுக்கு பிடித்த உணவு வகைகளை அவனுக்கு அவள் பரிமாற வரவும் அவன் அவளை கை காட்டி நிறுத்திவிட்டு,
“பிடிச்ச சாப்பாட்டை சாப்பிடுற மனநிலையில நான் இல்ல” என்றவன் தன் தட்டில் இரண்டு இட்டிலிகளை வைத்து அதனை வேண்டா வெறுப்பாக விழுங்கத் தொடங்கினான்.
ஏன் இவள் சொல்வதையெல்லாம் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று கடுப்பாக இருந்தது. இயலாமையின் வலி அவன் உள்ளம் முழுக்க வியாபித்தது. அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு அவன் எழுந்துவிட்டான்.
அவன் உண்பதைத் தவிப்போடு பார்த்திருந்தவள் தன் தட்டிலிருந்து உணவை உண்ண மனமில்லாமல் கை கழுவி விட்டு எழுந்தாள்.
அவன் தோட்டத்தில் சென்று அமர்ந்துவிடக் கையில் மாத்திரைகளோடு அவன் அருகில் வந்து அமர்ந்தவள், “இந்த டேபிளட்ஸ் மட்டும் போட்டுடேன்” என்று நீட்டியவளிடம்,
“எதுக்கு இந்த மாத்திரை எல்லாம் நான் போடணும்” என்று கடுகடுத்தான்.
“உன் தலைவலி பிரச்சனைக்காகதான் பாரதி… இந்த டேப்ளட்ஸ் நீ தொடர்ந்து போட்டாதான் உனக்குத் தலைவலி வராது” என்றவள் சொல்லவும் அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“என் மேல உனக்கென்ன அவ்வளவு அக்கறை?” என்று வினவ, அவள் தம் விழிகளை மூடி கொண்டாள்.
வெகுநாட்களாக அவளுக்குள் தேக்கி வைத்திருந்த விருப்பத்தை சொல்லிட அவள் மனம் ஏங்கியது. அவன் விழிகளை பார்த்துச் சொல்வது இயலாத காரியம். சொல்லி விடு சொல்லி விடு என்று அவள் காதோரம் ஒரு குரல் அவளை பரபரக்க செய்ய,
“நான் உன்னைக் காதலிக்கிறேன் பாரதி” என்று ஒற்றை வரியில் தன் உள்ளத்தின் மொத்த உணர்வுகளையும் கட்டி முடித்து சொல்லிவிட்டாள்.
ஆனால் அவளின் உணர்வுகள் பாரதியை கொஞ்சமும் பாதிக்கவில்லை. அமைதியாக எழுந்து அவன் நடக்க தொடங்கிவிட்டான்.
விழிகளைத் திறந்து பார்த்தவள் அவன் முன்னே நடந்து செல்வதைப் பார்த்து அவனை வழிமறித்து நின்று மீண்டும் மாத்திரைகளையும் தண்ணீர் டம்ளரையும் நீட்டினாள்.
இம்முறை மிக நிதானமாக அவளைப் பார்த்தவன், “எங்க ம்மாதான் அந்த வளையலை உன்கிட்ட கொடுத்தாங்களா?” என்று கேட்டான்.
“முதல நீ மாத்திரையை போடு… சொல்றேன்” என்றவள் சொல்லவும், ஒன்றும் பேசாமல் அதனை வாங்கி போட்டு கொண்டு, “சரி இப்ப சொல்லு” என்றான்.
“வேற யாரு கொடுத்திருக்க முடியும்னு நீ நினைக்கிற?” என்றவள் பதிலில் அவனுக்கு எரிச்சல் மூண்டது.
“எந்த கேள்விக்கும் நேரா பதில் சொல்ல மாட்டியா?” என்றவன் கடுப்பாகவும்,
“சரி… உன் குழப்பத்தை எல்லாம் மொத்தமா தீர்த்து வைக்கிற மாதிரி நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” என்றவள் அவனை நேர்கொண்டு பார்த்து,
“நான் முதலமைச்சர் அறிவழகனோட தங்கச்சி மக… இப்போ உனக்கும் எனக்கும் என்ன உறவுன்னு புரியுதா?” என்றாள்.
🙄🙄🙄 lovely