vilakilla vithigal ‘AVAN’-16
16
ஹிமாச்சல பிரதேசம். அடியும் முடியும் தெரியாமல் அதிகம்பீரமாக நின்றிருந்த அம்மலையில் மிக ஆபத்தான பாம்பென வளைந்து நெளிந்து சென்ற சாலையில் முகுந்தனின் கார் மூர்க்கமாகச் சென்று திரும்பியது.
அவனது வாகனத்தைத் தொடர்ந்த மூன்று காவல் வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அந்தச் சாலையோரத்தில் அணிவகுத்து நிற்க, பனிச்சரிவில் சாலைகள் துண்டிக்கப்பட்டதில் அவர்கள் பயணம் தடைப்பட்டது.
இரத்த நாளங்களை உறைய வைத்து உடலை உருக்கி எடுக்கும் அந்த பயங்கரமான குளிரில் கிருஷ்ணனைத் தேடுவது அத்தனை எளிதில் முடிகிற காரியமில்லை. இருப்பினும் மிகத் தீவிரமாக தங்கள் தேடல் படலத்தை அவர்கள் மேற்கொண்டனர்.
சிம்லாவிற்கு இன்ப சுற்றுலா வந்த கிருஷ்ணனும் அவன் நண்பர்களும் இரண்டு நாட்கள் குதூகலமாகத்தான் இருந்தனர். வந்த இடத்தில் யாரோ ஒரு புதிய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கிருஷ்ணன் அவளுடன் சென்றுவிட்டான். பின்னர் அவனிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.
அழகான பெண்களைப் பார்த்தால் நண்பர்களைக் கழற்றிவிடுவது அவனுக்கு வழக்கம் என்பதால் அவர்களும் அவனை தேட முற்படவில்லை.
முகுந்தன் அவர்களைத் தேடி வந்து விசாரித்த பிறகுதான் நிலைமையின் தீவிரம் அவர்களுக்கு புரிந்தது. கிருஷ்ணனின் கைப்பேசி தடம் இந்த ஆபத்தான மலை சாலைகளைத்தான் சுட்டிக்காட்டியது.
நடுசாலையில் அந்த கடுங்குளிரில் கிட்டத்தட்ட முகுந்தன் பித்துப் பிடித்தவன் போலத்தான் நின்றிருந்தான். தாங்க முடியாத அந்த குளிரும் உள்ளூர எரிமலையாக தகிக்கும் கோபமும் ஒன்றாகச் சேர்ந்து அவனை எரித்துக் கொண்டிருந்தது.
இதில் கிருஷ்ணன் காணாமல் போன செய்தியைத் தீபம் சேனலில் போட்டு அவனை டென்ஷன்படுத்தியதோடு அல்லாமல் மதியழிகியையும் மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டாள்.
அந்த கடுப்பில்தான் நந்தினியை மிரட்ட அவன் ரவுடிகளை அனுப்பியது. ஆனால் அவன் நினைத்ததற்கு நேர்மாறாக அல்லவா நடந்தது.
கத்தி முனையில் ஒருவன் நந்தினியை நிற்க வைத்திருக்க,
“அட ச்சே! இதுக்கு போயா நான் இப்படி ஓடி வந்தேன்” என்று அலட்சியமாக மொழிந்தவளை பார்த்து அவர்கள் அதிர்ச்சியுற,
“என்னைதான் மிரட்ட வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா இவ்வளவு கஷ்டப்பட்டு நான் மூச்சு வாங்க ஓடி வந்திருக்கவே மாட்டேன்” என்று கடுப்படித்தாள்.
“என்ன திமிரா?” என்றவன் கத்தியை அவள் கழுத்தில் அழுத்த வரவும்,
“இங்கே என் உயிர் போச்சு… அங்கே அமைச்சர் தம்பியோட உடம்பு துண்டா துண்டாகிடும்… பரவாயில்லயா?” என்றவள் கேட்ட தொனியில் அவன் ஆடிப்போனான்.
அவன் கொஞ்சமாக பின்வாங்க, “நான் என் வீட்டுக்கு போய் சிக்னல் அனுப்புனாதான் தம்பி பத்திரமா வருவாப்பல… ஒரு வேளை நான் எதுவும் மெசஜ் அனுப்புல” என்றவள் நிறுத்தி கைகளைக் கட்டி நின்று அவர்களைப் பார்த்த பார்வையில் அவனது கத்தி அவள் கழுத்தை விட்டு அகன்றது.
என்ன செய்வதென்று புரியாமல் அந்த ரவுடி கும்பல் குழம்பி நின்றது.
“அண்ணனுக்கு கூப்புடுறா?” என்று ஒருவன் சொல்லவும்,
“இப்போ உங்க அண்ணன் இருக்க இடத்துல சிக்னல் கிடைக்காது… எங்கயாச்சும் ரோட்டுல நின்னு போக வழி தெரியாம முழிச்சிட்டு இருப்பான்… நான் சொன்னதெல்லாம் வாய்ஸ் மெஸஜா போட்டு அனுப்பி விடுங்க… சிக்னல் கிடைச்சதும் கூப்பிடுவான்…” என்று அவள் அசட்டையாய் சொல்ல, அவள் சொன்னது போலவே அவர்களுக்கு முகுந்தனின் இணைப்பு கிடைக்கவில்லை.
அவள் துளி கூட அச்சமில்லாமல் பேசும் தொனியிலே அவள் எப்பேர்ப்பட்டவள் என்று அவர்களுக்குப் புரிந்துவிட்டது.
“போங்கடா போய் உங்க அமைச்சர் தம்பிக்காகக் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க… ம்ம்ம் கிளம்புங்க” என்றவள் விரட்ட, வேறு வழியல்லாமல் அவர்கள் வந்த வழியே திரும்பவும்,
“ஆன் தம்பிங்களா… ஒழுங்கா என் செக்யுரிட்டிஸ் கொண்டு போய் ஹாஸ்பெட்டில் சேர்த்துட்டு போங்க… அவங்களுக்கு ஏதாவது ஆச்சுனாலும் உங்க அமைச்சர் தம்பி… திரும்பி வர மாட்டான்… சொல்லிட்டேன்?” என்றாள் மிரட்டலாக.
“கண்டிப்பா சேர்த்துடுறோங்க க்கா… தம்பியை மட்டும் அனுப்பி விட்டுடுங்க” என்று பணிவாகச் சொல்லிவிட்டு அந்த கும்பல் அகன்றுவிட,
ஒருவாறு அந்த பிரச்சனை முடிந்துவிட்ட திருப்தியில் நந்தினி பாரதியை திரும்பிப் பார்க்க அவன் தூரமாக நடந்து செல்வது தெரிந்தது.
“இப்போ இவனை எப்படி சமாதானம் செய்றது” என்றவள் யோசித்திருக்கும் போதே பாரதி திரும்புவது போலத் தெரிய, கணபொழுதில் தரையில் மயங்கி விழுந்தது போல அவள் நடித்தது வேறு கதை!
அதன் பின் அங்கிருந்த சென்ற அந்த ரவுடி கும்பல் நந்தினி சொன்னவற்றை முகுந்தனுக்கு ஒலிப்பதிவாக தகவலிட்டு அனுப்பினர். அவன் செல்பேசியை அந்த செய்தி எட்டிய மறுகணம் அவன் இரத்தமெல்லாம் சலசலவென கொதித்தது.
தன் விரலிடுக்கிலிருந்த சிகரெட்டின் போதையை மூர்க்கமாக உள்ளிழுத்துக் கொண்டான். அதன் சாரம் நாசி தொண்டை என்று அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உஷ்ணத்தைப் பரப்பி குளிரை மட்டுப்படுத்தியது.
நந்தினியை எதுவும் செய்யத் திராணியற்று தீராத வெறியில் கொதித்தது அவனுள்ளம்! சிகரட்டின் சிவந்த கனல் போலவே அவள் மீதான பகையும் அவனுக்குள் கனன்று கனன்று புகைந்தது.
அவள் மீதான வஞ்சமும் கோபமும் அவனுக்கு இன்று நேற்று உருவானதில்லை. இருவரின் பிறப்பிலிருந்தே தோற்றுவிக்கப்பட்டது. அத்தனை சீக்கிரத்தில் அந்தப் பகை நெருப்பு அடங்கிவிடாது.
மதியழகியின் கருவறையில் அவன் ஜனிப்பதற்கு முன்பாகவே உயிராக உருப்பெற்றவள் நந்தினிதான். தவறான தொடர்பு தீய பழக்கவழக்கங்கள் கூடவே தந்தை தமையனின் அரசியல் செல்வாக்கு என மதியழகி கெட்டுச் சீரழிய இந்த காரணங்களே போதுமானது.
கருவைக் கலைக்க முடியாதளவுக்கு அவள் தேகம் பலவீனப்பட்டிருந்தது. குழந்தையைப் பெற்றெடுத்துவிடுவதே நல்லது என்ற மருத்துவரின் வார்த்தையில் அறிவழகனும் அவன் தந்தையும் என்ன செய்வதென்று புரியாமல் நிலைகுலைந்தனர்.
ஊடகத்தில் மெல்ல இந்த விஷயம் கசியத் தொடங்கியதில் இருவருமே அரண்டுவிட, அப்போதுதான் அறிவழகனின் நண்பனாகவும் அரசியல் ஆலோசகனாகவும் இருந்த சேஷாத்ரி இந்த பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு சொன்னார்.
மதியை திருமணம் செய்து அவள் பெற்றெடுக்கும் குழந்தையையும் மனமார ஏற்றுக் கொள்வதாக சேஷாத்ரி உறுதி கூற, அவர்கள் திருமணம் உடனடியாக நடந்தேறியது.
பெருந்தன்மையாக அவளை ஏற்று வாழ்க்கை தருவது போல சூட்சமமாக தன் அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டுக் கொண்டார் சேஷாத்ரி!
மதியழகி வெளிநாட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் அந்த குழந்தையைப் பெற்றெடுத்து வந்துவிட்டாள்.
சேஷாத்ரி அந்த பெண் குழந்தையை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இருந்த போதும் மதியழகிக்கு துளியும் விருப்பம் இருக்கவில்லை. அம்மா என்ற வாசத்தை கூட அந்த பிஞ்சுக்கு உணர கொடுக்கவில்லை அவள்! பிறந்த மறுநாளே பால்மணம் மாற அக்குழந்தை வேலைக்காரியின் அரவணைப்பில் விடப்பட்டது.
யார் கேட்டாலும் தத்து குழந்தை ஆதரவில்லாத குழந்தை என்றுதான் சொல்லப்பட்டது. வீட்டில் வேலை செய்பவர்களுக்குக் கூட அவள் பிறப்பின் ரகசியம் தெரியாதபடிக்கு பார்த்துக் கொண்டனர். நந்தினிக்கே கூட இந்த உண்மை தெரியாதுதான்.
மதியழகியை பொறுத்துவரை நந்தினி ஒரு அவமான சின்னம். தன்னுடைய வெறுப்பையும் கோபத்தையும் முழுமையாக நந்தினியின் மீது கொட்டிய அதேசமயம் அதற்கு நேர்மாறாக அவர்களுக்குப் பிறந்த மகன் முகுந்தனிடம் தாய்ப்பாசத்தைக் கொட்டி தீர்த்தாள்.
நந்தினி உறவுக்காகவும் அன்புக்காகவும் ஏங்கிய போது தன் கண் முன்பாகவே முகுந்தன் முழுமையாக அதனைப் பெற்றதைப் பார்க்க, அவள் மனம் வேதனையில் புழுங்கியது.
முதலில் முகுந்தனுக்கு நந்தினி என்ன உறவென்று புரியவில்லை. அவள் ஏதோ ஆதரவில்லாத பெண். இந்த வீட்டில் வளர்கிறாள் என்று மட்டுமே நினைத்திருந்தான்.
மதியழகிக்கு அவளைப் பிடிக்காது என்பதால் அவனுக்குமே அவளைப் பிடிக்காது. பெரியவர்கள் காட்டும் துவேஷமும் பகையும்தான் குழந்தைகள் மனதிலும் ஆழமாகப் பதிவாகிறது.
மதியழகியை பொறுத்துவரை முகுந்தன் மட்டுமே மூத்த மகன். அந்த உரிமையை எந்தவிதத்திலும் நந்தினிக்கு தர அவருக்கு விருப்பம் இல்லை. அதோடு வேறொரு பிரச்சனையும் மதியழகிக்கு இருந்தது.
என்னதான் தத்து குழந்தை என்று சொல்லி வைத்தாலும் மதியழகியின் முக ஜாடை நந்தினிக்கு அப்படியே அச்சில் வார்த்தது போல அமைந்திருந்தது. அவள் வளர வளர வேலைக்காரர்கள் எல்லோரும் அரசல் புரசலாகப் பேசிக் கொள்ளத் தொடங்கினர். இதனால் நந்தினியை விருந்தாளிகள் முன்னிலையில் கூட வரவிடமாட்டாள்.
இந்த பிரச்சனையைத் தீர்க்க நந்தினியை ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம் என்று மதியழகி கணவனிடம் சொல்ல,
“அவ இங்க இருக்கிறதுல உனக்கு என்ன பிரச்சனை… இருந்துட்டு போட்டும் விடு” என்றார்.
“வேணா அவளை ஹாஸ்டலில் சேர்த்து விட்டுடலாம்” என்று மதி அடுத்த யோசனையைச் சொன்னாள்.
“அவளை நம்ம பொண்ணுன்னு சொல்லி வளர்க்கலாம்னு முன்னமே சொன்னேன்… கேட்டியா? அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்போ ஹாஸ்டலுக்கு அனுப்பணும் ஆசிரமத்துக்கு அனுப்புனுங்குற… வெளியே போன பிறகு இந்த விஷயம் ரகசியமா இருக்குமா? எவனாவது பத்திரிக்கைகாரன் நோண்டி கிளரினான்னா யார் மானம் போகும்?!!” என்று சேஷாத்ரி பொங்க அதற்கு மேல் மதியழகியால் ஒன்றும் பேச முடியவில்லை.
“சீ… சனியனே எல்லாம் உன்னாலதான்… என் கண் முன்னாடி வந்து தொலைஞ்சிராதே” என்று அந்த கோபத்தையும் சேர்த்து நந்தினியிடம் காட்டி அவளை விரட்டுவாள் மதியழகி!
இதில் சேஷாத்ரிக்கு தன்னுடைய அரசியல் எதிர்காலம் மட்டுமே முக்கியமாகப்பட்டது. தீபம் கட்சியின் மூத்த தலைவர் அறிவழகனின் தந்தை இறந்ததில் அடுத்த முதலமைச்சராக அறிவழகன் பதவியேற்கவும் சேஷாத்ரியின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகம் கண்டது.
அவர் தன் வீட்டை மாற்றிக் கொண்டு அறிவழகன் பங்களாவிற்கு அருகிலேயே வசிக்க ஆரம்பித்ததில் யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ?
நந்தினிக்கு நடந்தது. வித்யாவின் மூலமாக நந்தினிக்கு அன்பும் அரவணைப்பும் கிட்டியது. அதேநேரம் பாரதிக்கும் நந்தினிக்கும் இடையில் அழகான நட்பு மலர்ந்தது.
வித்யா நந்தினி படும் துயரங்களைச் சகிக்க இயலாமல்,
“சின்ன பொண்ணு… அவ மேலே போய் உங்க தங்கச்சி வெறுப்பையும் கோபத்தையும் காட்டிறது எனக்கு ஒன்னும் சரியா படலைங்க… நந்தினி பாவம்ங்க” என்றவர் கூறவும்,
“அதுக்கு இப்போ என்ன பண்ணனும்குற?” என்று அறிவழகன் கடுகடுக்க,
“அவளையும் நம்ம வீட்டுலேயே வைச்சு பார்த்துக்கலாம்” என்று வித்யா தயங்கித் தயங்கி ஒருவாறு சொல்லி முடித்தாள்.
“என்ன விளையாடுறியா? அதெல்லாம் முடியாது… அவளை இந்த வீட்டுப் பக்கமெல்லாம் கூட்டிட்டு வர வேலை வைச்சுக்காதே” என்று முடிவாக சொல்லிவிட்டார். முறை தவறிப் பிறந்த குழந்தை என்ற எண்ணத்தில் அவருமே நந்தினியை வெறுத்தார்.
வித்யா என்ன சொல்லியும் அறிவழகன் மனம் மாறவில்லை. அதவல்லாது நந்தினியின் பேச்சை எடுத்தாலே அவர்களுக்கு இடையில் சண்டை வந்தது. பாரதிக்கு இதெல்லாம் கொஞ்சம் புரியத் தொடங்கிய வயது.
நந்தினிக்கு ஆதரவாக அவன் தன் அம்மாவின் பக்கம் நின்றான். இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரின் வெறுப்பைச் சுமந்தாலும் கூட பாரதியின் நட்பு ஒன்று இருந்தால் போதும் என்று நந்தினி உறுதியாக நம்பத் தொடங்கிய காலகட்டம்!
முகுந்தன் ஒவ்வொரு முறை அவளைக் காயப்படுத்தும் போதும் பாரதி அவளுக்காக வந்து நின்றான். அப்படிதான் ஒருநாள் நந்தினியை பற்றிய உண்மையையும் போட்டு உடைத்துவிட்டான்.
பாரதிக்கு அப்போது பன்னிரண்டு வயது. முகுந்தனோ அவனை விட மூன்று வயது இளையவன்.
“ஏ போடி அநாதை” என்று நந்தினியை முகுந்தன் தள்ளிவிட்டதை பார்த்து கோபம் கொண்ட பாரதி,
“யாருடா அநாதை? அவ ஒன்னும் அநாதை இல்ல” என்றான்.
“அவ அநாதைதான்” என்று முகுந்தன் அழுத்தி சொல்ல,
“இல்ல… அவ உனக்கு அக்கா… அவளும் உங்க அம்மாவுக்கு பிறந்தவதான்… ஒழுங்கா அவ கிட்ட மரியாதையா பேசு” என்று பாரதி கண்டிக்க அந்த உண்மையை முகுந்தனால் மட்டுமல்ல. நந்தினியாலும் ஜீரணிக்க முடியவில்லை. அவள் அதிர்ந்து நிற்க
“ம்ஹும் அதெல்லாம் இல்ல… நான் ஒத்துக்க மாட்டேன்… அவ அநாதைதான்” என்று முகுந்தன் கத்தி கூச்சலிட்டான்.
“ஒத்துக்க மாட்டியா? வா” என்று பாரதி முகுந்தனை மதியிடம் அழைத்து சென்று, “சொல்லுங்க அத்தை… நந்தினியும் உங்க பொண்ணுதானே… முகுந்தன் அவளை அநாதைன்னு திட்டிறான்” என்று உண்மையைப் போட்டு உடைக்க அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அன்று அவர்கள் வீட்டில் பாரதியால் பெரிய கலவரமே வெடித்தடங்கியது. ஆனால் நந்தினிக்கு அந்த உண்மை அதிர்ச்சியாக இருந்தே ஒழிய அவள் வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தையும் அது உண்டாக்கவில்லை.
“என்னை நீ அம்மான்னு கூப்பிட்ட… கொன்னுடுவேன்” என்று மதியழகி பலமாகக் கண்டித்ததில் கொஞ்சமாக உடைந்து போனாள். அவ்வளவுதான்!
ஆனால் முகுந்தனால் அந்த உண்மையைத் தாங்கவே முடியவில்லை. இத்தனை நாளாக தனக்குக் கீழாகப் பார்த்துக் கொண்டிருந்தவளை தனக்கு மூத்த சகோதரி என்று சொன்னால் அவனால் ஏற்க இயலுமா? இல்லை அதனை அவன் ஏற்றுக் கொள்ளத்தான் செய்வானா?
அன்று அவனுக்குள் எரிய தொடங்கிய தீ. முன்பு அவளை திட்டவும் ஒதுக்கவும் செய்தவன் அவளை அந்த நொடியிலிருந்து பெரும் பகையாளியாக பார்க்கத் தொடங்கினான்.
அன்றிலிருந்து நந்தினியை அழ வைத்துப் பார்ப்பது அவனுக்கு வாடிக்கையானது. தேமேனென்று செல்லும் புழுவை குத்தி குத்தி அது வேதனைப்பட்டுத் துடிதுடிப்பதைப் பார்த்துச் சிரிக்கும் குரூரம்தான் அவனுக்கு நந்தினியை அழ வைத்துப் பார்க்கும் போதும்!
“பசிக்குது ராணிம்மா… டைனிங் டேபிள் டிபன் எதுவும் இல்ல” என்று நந்தினி கேட்க,
“எல்லாம் தீர்ந்து போச்சு… போ… நேரத்துக்கு வந்து கொட்டிக்காம நம்ம உசுரை வாங்கிட்டு” என்று துரத்திவிட்டவளின் கையில் கிண்ணம் நிறைய உணவு இருந்தது.
“அது யாருக்கு… உங்க பையனுக்கா?” என்று நந்தினி ஏக்கமாக கேட்கவும்,
“ஆமா… இப்ப இன்னாங்குற… அம்மாகிட்ட சொல்ல போறியா… போ… போய் சொல்லிக்கோ” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட, நந்தினி பெரிதாக மூச்சு விட்டாள். அவள் பேச்சு அங்கே எடுபடவா போகிறது. சோபா மேஜை போல அந்த வீட்டில் அவளும் ஒரு பொருள்தான்.
நந்தினிக்கு இந்த அவமானங்கள் எல்லாம் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் பசி அந்தளவு பழக்கப்படவில்லை. ஏதாவது மிச்சம் மீதிகளாவது இருக்கும்.
இல்லாவிடிலும் சுலபமாகச் செய்யப்படும் உணவுகளை அவள் செய்து பழக்கப்பட்டிருந்தாள்.
ஆதலால் தோசை மாவை எடுத்து சமையல் மேடையின் உயரத்திற்கு ஏற்றார் போல ஒரு சிறு ஸ்டூலை போட்டு நின்று அடுப்பை பற்ற வைத்து மாவைக் கல்லில் ஊற்றினாள்.
அவள் தோசை ஊற்றிய சமயத்தில் தண்ணீர் குடிக்க வந்த முகுந்தனுக்குச் சமையலறையில் ஏதோ சத்தம் கேட்கவும் எட்டி பார்த்தான். அவள் என்ன செய்கிறாள் என்று புரிந்த மறுகணம் அவன் மூளைக்குக் குரூரமாக ஒரு யோசனை தோன்றியது.
ஒசைப்படாமல் வந்து அவள் நின்றிருந்த ஸ்டூலை அவன் இழுத்து விட்டதில் அவள் தடுமாறி கீழே விழப் போக அவள் கைகளில் பிடித்திருந்த தோசை கல்லின் பிடி நழுவி அவள் காலில் விழுந்தது.
“ஆ… ஆஆஆஅ அம்மா” என்ற அலறி அவள் அழுத சத்தம் அந்த வீடு முழுவதும் எதிரொலித்த போதும் யாரும் அவள் உதவிக்கு வரவில்லை.
அன்று அவள் வலியில் துடித்துக் கதறி அழுததை ஒரு சேடிஸ்டை போலச் சிரித்து மகிழ்ந்தவன் சட்டென்று தன் விரலிடுக்கில் சிகரெட் துண்டு கரைந்து சுட்டதில்,
“ஸ்ஸ்… ஆ” என்று கைகளை உதறியபடி பழைய நினைவிலிருந்து மீண்டு வந்தான்.
அவனவன் வினை அவனவனைச் சுடத்தானே செய்யும்!
நெருப்பின் மீது நிற்பதுபோல்தான் ஒவ்வொரு நொடியும் கடந்தது முகுந்தனுக்கு!
அந்த சாலையைச் சீர் செய்து அவர்கள் பயணத்தைத் தொடங்க எத்தனித்த போது சேஷாத்ரியின் மூலம் ஒரு தகவல் வந்தது. தம்பி நல்லபடியாக கிடைத்துவிட்டான் என்று!
அந்த நொடி உள்ளிருந்து சூடெல்லாம் கரைந்து பனியாக அவனுள்ளம் உருகித் தளர்ந்தது. சிக்னல் வரும் இடமாகப் பார்த்து வண்டியை ஓரம்கட்டி நிறுத்தி தந்தைக்கு அழைத்துப் பேசினான்.
“நீ நினைக்குற மாதிரி யாரும் தம்பியை கடத்த எல்லாம் இல்ல முகுந்த்… அவன் மலை சரிவில போட்டோ எடுக்கும் போது உருண்டு விழுந்துட்டானாம்… அங்கிருந்து கிராமத்து மக்கள்தான் அவனுக்கு வைத்தியம் பார்த்திருக்காங்க… மயக்கம் தெளிஞ்சதும் எனக்கு ஃபோன் பண்ணி பேசுனான்… அந்த இடத்துக்கு அவனை பத்திரமா கூட்டிட்டு வர நான் ஆள் அனுபிட்டேன்”
முகுந்தன் மெலிதாய் சிரித்துவிட்டு, “இந்த கதையெல்லாம் நீங்க நம்புறீங்களாக்கும்” என்று கேட்க,
“உண்மையாதான்டா சொல்றேன்” என்றார்.
“எதையும் ஆதாரம் இல்லாம தெளிவா திட்டம் போட்டு செய்றதுதான் நந்தினியோட ஸ்டைல்… நிச்சயம் அவதான் தம்பியை கடத்தி இருக்கா… ஆனா என்ன… அதை அவ கடத்தல் மாதிரி செய்யல…
ராட்சஸி… என்னை பைத்தியக்காரன் மாதிரி காடு மலையெல்லாம் சுத்த விட்டா… ஒரு வகையில் என்னை அப்படி அலைய வைக்கதான் அவ இப்படியெல்லாம் செஞ்சிருக்கா… சனியன் புடிச்சவ” என்றவன் கொதிக்க மகன் சொன்னதை ஆழமாக யோசித்து பார்த்தவர்,
“நீ சொல்ற மாதிரி கூட இருக்கலாம்” என்க,
“இருக்கலாம் இல்லை… அவதான் செஞ்சிருக்கா… டிவில நியுஸ் போட்டு மானத்தை வாங்கி இருக்கா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் அனுப்பின ரவுடி பசங்க கிட்ட நான் எங்க இருக்கேன்குற வரைக்கும் சொல்லி இருக்கா… அவதான் பா… கண்டிப்பா அவதான்” என்றவன் பொறுமினான்.
“இப்ப டென்ஷனாகி என்ன பிரயோஜனம் முகுந்த… நீ அவளை என்ன கொஞ்ச நஞ்சமா பண்ணி இருக்கா… அதான் அவ சமயம் பார்த்து உனக்கு திருப்பி கொடுக்குறா… நல்லா யோசிச்சு பாரு… அவளை கொட்டி கொட்டி குளவியாக்கினது நீதானே” என்றார்.
முகுந்தனால் பதில் பேச முடியவில்லை. ஒரு வகையில் அது உண்மைதான் என்று அவனுக்கும் தோன்றியது.
தான் ஏற்படுத்திய காயங்கள் யாவும் நந்தினியின் உடல்களில் ஆறியிருந்தாலும் மனதில் ரணமாக இன்னும் தகித்துக் கொண்டிருக்கத்தான் செய்யும். அந்த பழியுணர்வைதான் அவள் தீர்த்துக் கொள்கிறாள்.
இந்த பிரச்சனைகளை இதோடு முடிக்க வேண்டுமென்றால் நந்தினியிடம் சமாதானமாகப் போய்விடுவதுதான் உகந்தது என்று சேஷாத்ரி சொன்னதை அவன் ஏற்க தயாராக இல்லை.
இருப்பினும் தன்னுடைய முதலமைச்சர் கனவிற்காக அவளிடம் கொஞ்சம் தணிந்து போகலாம் என்று எண்ணினான்.
பாரதிதான் நந்தினியின் பலவீனம். அவனை விட்டுவிட்டால் நந்தினி எந்த பிரச்சனையும் செய்ய மாட்டாள். இவ்வாறாக அந்த மலையடிவாரத்தில் இறங்கும் போது அவனுக்குள் கொஞ்சமாய் ஞானோதயம் பிறந்தது.
ஆனால் நந்தனியென்ற ராஜநாகம் இத்தனை காலமாக தனக்குள் சேகரித்திருக்கும் வஞ்சத்தையெல்லாம் அவன் மீது நஞ்சாகக் கக்காமல் விட்டு விடுமா என்ன?
அதுவும் அடுத்து அவள் கக்கப் போகும் விஷ உருண்டையை முகுந்தனால் நிச்சயம் செரிக்கவே முடியாது.