You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thriller

Vilakilla vithigal ‘AVAN’ – 17

17

தோட்டத்தில் இருக்கை போல வடிவமைக்கப்பட்டிருந்த கல்மேடையில் சற்று இடைவெளிவிட்டு இருவரும் அமர்ந்திருந்தனர். 

 நந்தினியின் பார்வை பாரதியிடம் லயித்திருந்தது. அவள் சொல்லிக் கொண்டிருந்த தங்களின் இளமைக் கால கதைகளை அவன் தன் நினைவுகளுக்குள் தேடி கொண்டிருந்தான்.

“அன்னைக்கு அந்த முகுந்தன் செஞ்ச வேலையில என் காலில சூடா தோசை கல்லு விழுந்துடுச்சு… வலி தாங்காம நான் ராத்திரி பூரா அழுதிட்டே இருந்தேன்…

சத்தம் கேட்டு ஒருத்தர் கூட என்ன ஏதுன்னு வந்து பார்க்கல… ஒரு வேளை நான் அப்படியே வலில துடிச்சு செத்திருந்தா கூட யாரும் வந்து பார்த்திருக்க மாட்டாங்க… eஎனக்கு தெரியும்

ஒரு வேளை நான் அப்படியே செத்துருவேன்னு நினைச்சாங்களோ என்னவோ? ஆனா அவங்க துரதிஷ்டம்? அப்படி எதுவும் நடக்கலயே” என்றவள் குரலில் அந்த நொடி அதீதமான வஞ்சம் தொனித்தது. அதுவும் கடைசி வரியை சொல்லி முடிக்கும் போது சட்டென்று அவள் விழிகளில் மின்னல் வெட்டியது.

அவளது அடங்கா பழியுணர்வின் ஒளிர்ந்த நெருப்பு ஜுவாலைகள் அவை! 

பாரதி அவற்றை கவனிப்பதற்கு முன்னதாக அவள் இயல்பு நிலைக்கு மாறிவிட, அவனோ சிறு பெண்ணாக எந்தளவு அவள் துயர் அனுபவித்திருக்கிறால் என்று எண்ணி அவளுக்காக அவன் கண்ணீர் உகுத்தான்.

 “அம்மாவும் நானும் அங்கிருந்திருந்தா நீ கொஞ்சமாச்சும் சந்தோஷமா இருந்திருப்ப இல்ல?” என்று இரக்கமாய் அவளிடம் வினவினான். அவள் சொன்னவற்றை எல்லாம் கேட்டதில் அவன் மனம் உருகிக் கரைந்திருந்ததை அவள் நன்குணர்ந்திருந்த போதும் எந்த வகையிலும் சுயபச்சாதாபத்தை அவள் முகத்தில் கொண்டு வரவில்லை.   

ஆமோதிப்பாக தலையசைத்தவளின் இதழ்களில் உயிர்ப்பில்லா ஒரு புன்னகை வெளிவந்தது. அந்த புன்னகையில் உயிரை அறுத்து போடும் ஆழமான வலியை அவன் உணர்ந்தான்.

“சாரி நந்தினி” என்றவன் அவள் துயரங்களை எண்ணி ஆத்மார்த்தமாகக் கூற, அவன் விழிகளை நோக்கினாள்.

அவற்றில் அவளுக்கான வருத்தம் தெரிந்தது. ஆனால் அவள் வேண்டியது அதுவல்லவே? பொங்கிய கண்ணீரை சிரமப்பட்டு உள்வாங்கி கொண்டவள் விழிகளை மூடி பெரு மூச்செறிந்தாள்.

மெல்லத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் சில  நிகழ்வுகளை விவரிக்கத் துவங்கினாள்.

***

பாரதியைக் கல்லூரி போட்டியில் பார்த்து அடையாளம் கண்டுகொண்ட பின் வித்யாவை அவள் சென்று பார்க்க, அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதேநேரம் நந்தினியை தன்னிடம் அழைத்து வர முடியாமல் போனதுக்கு அவளிடம் மன்னிப்பு வேண்டினார்.

“சின்ன பொண்ணு… நான் பாட்டுக்கு உன்னை வீட்டை விட்டு கூட்டிட்டு வந்து அதனால உனக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்துட்டா… அதுவும் அந்த சமயத்துல ரவுடி பசங்க அரிசயல்வாதிங்க ஆராஜகம் எல்லாம் ரொம்ப அதிகாமாகிடுச்சு… அப்படியொரு நிலைமையில பொம்பள பொண்ணு… உன் கஷ்ட நஷ்டத்தைவிட உன் பாதுக்காப்புதான்  எனக்கு ரொம்ப முக்கியம்னு பட்டுச்சு… அதுவுமில்லாம அப்பவே உனக்கு ஓரளவு முதிர்ச்சி இருந்ததால நீ சமாளிச்சிப்பேன்னு நினைச்சேன் நந்தினி” என்றவர் சொன்னதிலிருந்த நியாயம் அவளுக்கு புரியாமல் இல்லை.

இதுநாள் வரை அந்த வீட்டில் அவள் சகித்துக் கொண்டிருக்கவும் அதுதான் காரணம். வெளியே அதேயளவு அவளுக்கான பாதுக்காப்பு கிடைக்குமா? ஒண்டி கொள்ள எந்த பறவைக்கும் ஒரு கூடு தேவையல்லவா?!

மேலும் வித்யாவுடன் நிறைய விஷயங்களை அளவளாவிய பின் அவள் மெல்ல பாரதியை பற்றி ஆரம்பித்தாள்.

“பாரதியை காலேஜ்ல பார்த்ததும் பேசணும்னு ஆசையா இருந்துச்சு… ஆனா அவன் என்னை யாருன்னு கேட்டா… அதுதான் முதல உங்களை பார்க்க வந்தேன்” என்றவள் குறிப்பிட,

“அப்போ பாரதிக்காகதான் என்னை பார்க்க வந்த… ம்ம்ம்”   என்று வித்யா அவளை ஆழ்ந்து பார்த்து அளவெடுத்தார்.

“அப்படி எல்லாம் இல்ல அத்தை… உங்களையும் பார்க்கத்தான் வந்தேன்” என்றவள் சமாளிப்பாக மழுப்பினாலும் அவள் கன்னங்கள் நாணத்தில் செவ்வானமாய் சிவந்தன.  

வித்யாவிற்கு அப்போதே நந்தினியின் மனம் புரிந்துவிட்டது. சிறு வயதிலிருந்து இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்ததில்லை. அழகான அபூர்வமான நட்பு அவர்களுடையது. விதியின் வசத்தால் இருவருமே அத்தகைய நட்பை இழக்க நேர்ந்தது துரதிஷ்டம்தான்.

எனினும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவர்கள் நட்பின் நீட்சியாக நந்தினி பாரதியுடன் தன் உறவை புதுப்பித்து கொள்ள நினைப்பதில் தவறொன்றுமில்லை என்றுதான் தோன்றியது. ஒரு வகையில் அவள் விருப்பத்தை வித்யாவும் ஆதரித்தார். 

இருப்பினும் அவளிடம், “எனக்கு உன் மனசு புரியுது நந்தினி… இருந்தாலும் பாரதியை நீ இப்போதைக்கு சந்திக்கிறது சரியா வராது… கொஞ்ச நாள் போகட்டும்… நீயும் அதுக்குள்ள உன் படிப்பை முடிச்சிடுவதானே” என்றவர் நயமாகக் கூறவும் அவளுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இருப்பினும் அத்தையின் வார்த்தைகளை அவளால் மீற முடியவில்லை.

தன் உயிர் தேடலைப் பார்த்தும் பேச முடியாமல் போன அவளது துயர் வார்த்தைகளால் சொல்லி மாளாது. இருப்பினும் அவள் விடவில்லை. அவனை சந்தித்துத்தானே பேச கூடாது. ஒளிந்திருந்து ரகசியமாய் பார்க்கலாம்தானே!

இதற்காகவே இசைக் கச்சேரிகளுக்காக அவன் பங்கேற்கும் திருமண விழாவில் எல்லாம் முதல் ஆளாய் கையில் பரிசுடன் சென்று கடைசி இருக்கையில் அமர்ந்து அவனை ஆசை தீர பார்த்து ரசித்துவிட்டு வருவாள். யார் வீட்டுத் திருமணம் என்பதெல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவனைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்!

பாரதிக்கு வியப்பாக இருந்தது. இந்தளவு தன் மீது ஒருத்தி விருப்பம் கொண்டிருப்பதை உணராமல் இருந்திருக்கிறோமா?

அவன் உள்ளம் குற்றவுணர்வில் குறுகுறுத்தது.

வருடங்கள் ஓடியது. பாரதி ஐ.ஏ.எஸ் தேர்விற்கான முதல் கட்டத்தில் முன்னேறி இருந்த அதேசமயம் நந்தினி கணினியியல் பாடப்பிரிவில் இறுதி வருடத்திலிருந்தாள்.

அவளுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. பாரதியை எப்படியாவது சந்தித்துப் பேசிவிட வேண்டுமென்று ஆவல்!

வித்யாவை அன்று அவள் பள்ளியிலேயே சென்று சந்தித்து தன் விருப்பத்தை தெரிவித்தாள்.

“அத்தை ப்ளீஸ்… பாரதியும் நானும் மீட் பண்ண இப்பவாச்சும் பெர்மிஷன் கொடுங்க… ப்ளீஸ் ப்ளீஸ்” என்றவள் அவர் கையை பற்றி கெஞ்ச தொடங்க,

“உன்னை யார் இங்க ஸ்கூலுக்கு வர எல்லாம் சொன்னது… எனக்கு இப்போ கிளேஸ் இருக்கு நந்தினி… நான் போகணும்” என்றார்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது… நீங்க பெர்மிஷன் கொடுத்தாதான்… நான் உங்களை போக விடுவேன்”

“இப்போ என்கிட்ட நீ பெர்மிஷன் கேட்குறியா? இல்ல மிரட்டிறியா?”

“நீங்க எப்படி எடுத்துக்கிட்டாலும் சரி… என்னால இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது… பாரதியை பார்த்து நான் பேசியே ஆகணும்” என்றவள் பிடிவாதமாக நிற்க,

“அவன் பர்ஸ்ட் யுபிஎஸ்ஸி எக்ஸாம்ல செலக்ட் ஆகட்டும் நந்து” என்றவர் அவளுக்கு புரிய வைக்க முயல,

“அதுக்கும் நாங்க பார்க்கிறதுக்கும் என்னங்க அத்தை சம்பந்தம்?” என்றாள்.

இருவருக்கும் இடையில் உரையாடல் நீண்டு கொண்டே இருந்ததே ஒழிய வித்யா பிடி கொடுப்பதாக இல்லை.

“அப்ப ஒத்துக்க மாட்டீங்க” என்று நந்தினி கடுப்பாக,

“இல்ல நந்து… உங்க இரண்டு பேரையும் பார்க்கவிட கூடாதுங்குறது என் மோட்டிவ் இல்ல… பாரதிக்கு பழைசு எல்லாம் எதுவும் நினைவுல இல்ல… அந்த நினைவுகள் எல்லாம் அவனுக்கு எப்பவுமே தேவை இல்லன்னு நினைக்கிறேன்… அப்படி இருக்கும் போது உன்னை பார்த்தா யாருன்னு கேட்டா என்னன்னு சொல்றது…” என்றவர் தயங்கி இழுக்க, 

“இதானா அத்தை உங்க பிரச்சனை… சிம்பிள் மேட்டர்… பேசாம என்னை உங்க ஸ்டூடன்ட்னு சொல்லிடுங்க” என்றாள்.

“அவனுக்கு என்னோட எல்லா பேட்ச் ஸ்டூண்ட்ஸ் பத்தி தெரியும் நந்து… என்னை விட எல்லோரையும் அவன் நல்லா ஞாபகம் வைச்சு இருப்பான்” என்றவர் சொன்னதில் சில நொடிகள் நந்தினி தாடையைத் தடவியபடி தீவிரமாக யோசித்துவிட்டு,

“இன்னொரு வழி இருக்கு?” என்றவள் தன் விரல்களை சொடுக்கிட்டாள்.

“பாரதிக்கிட்ட நான் அவனுக்குப் பார்த்திருக்க பொண்ணுன்னு சொல்லிடுங்க… சிம்பிள்”

“எது?” என்றவர் அவளைக் கடுமையாகப் பார்க்கவும்,

“இதை விட பெட்டர் ஐடியா எதுவும் இல்ல அத்தை… பேசாம நான் சொன்ன மாதிரியே சொல்லி உங்க பர்த்டே அன்னைக்கு குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருங்க… ஒரு வேளை நீங்க கூட்டிட்டு வரல நான் அந்த மலை மேல இருந்தே குதிச்சிடுவேன்… ஆமா” என்றவள் எச்சரிக்கை விடுக்க, அவர் பதறிப் போனார்.  

“அடியேய்… என்னடி பேச்சு இதெல்லாம்” என்றவர் பதறவும்,  

“எனக்கு இதை விட்டா வேற வழி தெரியல அத்தை… சாக்கு போக்கெல்லாம் சொல்லாம உங்க பிள்ளையை வர சொல்லிடுங்க” என்றாள்.

“மறந்துட்டேன் நந்து… அன்னைக்கு அவனுக்கு எக்ஸாம்” என்றவர் சொன்ன போதும் அவள் அலட்சியமாக திரும்பி,

“அதுக்கென்ன? எக்ஸாம் முடிச்சிட்டு வரட்டும்… நம்ம இரண்டு பேரும் காலையில ஊரெல்லாம் சுத்திட்டு பொறுமையா கோவிலுக்கு போவோம்… ஒகே வா” என்றவள் தலையசைத்து புன்னகையாய் கேட்க,

“நீயே  எல்லாமே முடிவு பண்ணிட்ட… அப்புறம் எதுக்கு என்னைய கேட்குற?” என்றவர் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டார்.

“ப்ளீஸ் அத்தைமா” என்று நந்தினி அவர் கையை பற்றி இறைஞ்ச,

“ம்ம்ம் போதும் போதும்… பாரதியை பார்த்த பிறகும் இதே பாசம் என் மேல இருக்குமா?” என்றவர் இறுக்கமாகத் தலையசைத்துக் கேட்டார்.

“அப்போ மீட்டிங் கன்பார்ம்… ச்ச்சோ ஸ்வீட்… இப்ப மட்டும் இல்ல… எப்பவும் எனக்கு உங்க மேல இருக்க பாசம் மாறாது” என்றவள் அவர் கன்னங்களை கிள்ளி கொஞ்ச,

“போதும்டி ஐஸ் வைச்சது… க்ளேஸுக்கு டைமாச்சு… முதல நீ இடத்தை காலி பண்ணு” என்றவர் அவளை ஒரு வழியாகப் பள்ளியிலிருந்து கிளப்பிவிட்டார்.   

அவள் மனங்கள் முழுக்க அலைகடலாக அள்ள அள்ளக் குறையா பருவ வயதின் ஆசைகள். சந்தோஷத்தில் பறவை போல சிறகடித்த அவள் உள்ளம் நிகழ்காலத்தில் விட்டு வெகுதூரமாகப் பயணித்து வந்திருந்தது.

அவள் பாதங்களிரண்டும் தரையில்தான் பதிந்தனவா அல்லது மேகங்களில்தான் மிதந்தனவா என்று உணர முடியாத வண்ணம் கனவுலகத்தில் சஞ்சரித்திருந்தவளின் கவனம் எதன் மீதும் பதியவில்லை.

வீட்டிற்குள் நுழைந்து எதிர்பாரா விதமாக யாரென்று தெரியாத ஒரு நபர் மீது மோதியதெல்லாம் கணபொழுதில் நடந்து முடிந்திருந்தது. அந்த பதட்டத்தில் அவள் கையிலிருந்த பர்ஸ் நழுவி கீழே விழுந்தது.

சேஷாத்ரி, முகுந்தனோடு ஆஜானுபாகுவாக நடந்த வந்த நபர் அவளைக் கூர்மையாக பார்த்திருந்ததில் அவளுக்கு ஒருமாதிரியாகி போனது.

எப்போதும் விருந்தாளிகளின் கார்களை பார்த்தாலே பின்பக்கமாக ஓடிவிடுபவள் இன்று அவற்றை எல்லாம் கவனிக்காமல் முன்வாசல் புறம் வந்துவிட்ட தன் அறிவீனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.

அதற்குள் முகுந்தன், “கண்ணு தெரியல… இப்படியா மோதுவாங்க… மாடு மாதிரி” என்று காட்டமாகச் சத்தமிட்டான்.

புது மனிதர் முன்னிலையில் ரொம்பவும் அவமானமாகி போக, “சாரி” என்று நிமிர்ந்தும் பார்க்காமல் அவரிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். அந்த மனநிலையில் அங்கே விழுந்திருந்த தன் பர்ஸையும் அவள் எடுக்க மறந்திருந்தாள்.

அறைக்குள் வந்து சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்ததில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவள் வெகுநாட்களாக வடிவமைத்துக் கொண்டிருந்த பாட்டுப் பாடும் இயந்திரத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் தன் கவனத்தைச் செலுத்தினாள்.  

அதில் முழுக்க அவன் பாடி வைத்த பாடல்களின் பதிவுகளை மட்டும் சேகரித்து போட்டிருந்தாள்.

“ப்ளே… ஸ்டாப்” என்று வார்த்தைகளைக் கொண்டு அதுவே பாடல்களை ஒலிக்கச் செய்யவும் நிறுத்தவும் குரல்களை அங்கீகரிக்கும் கருவிகளை ஏற்கனவே பொருத்திவிட்டவள் தற்சமயம் அவற்றோடு ஜோடி புறாக்கள் அழகாக இசைக்கும் போது அந்த தட்டின் மீது இசைக்கு ஏற்றார் போல வலதிலிருந்து இடமும் இடதிலிருந்து வலமும் சுழலும் வகையில் ஜோடி புறா பொம்மையை இணைத்து அதன் இயக்கத்தைத் தயார் செய்து கொண்டிருப்பதில் மற்ற எதுவும் அவள் நினைவுகளில் ஓடவில்லை. 

இந்த இசை பொம்மையை அத்தைக்குப் பரிசாகத் தருவதன் மூலம் பாரதியிடமும் இதனை கொண்டு சேர்த்துவிடலாம் என்று மனதளவில் ஒரு தனி கற்பனை படலத்தை ஒட்டிக் கொண்டே அதனை வண்ண தாள்களில் மூடிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

வேலையை முடிக்காமல் எழுந்திருக்க மனமின்றி கடுப்பாகச் சென்று கதவைத் திறக்க, முகுந்தன் நின்றிருந்தான். தான் வெளியே செய்த காரியத்திற்காக திட்ட வந்திருப்பான் என்று எண்ணி மௌனமாக அவனை ஏறிட்டாள்.

அவளுக்கு அதெல்லாம் பழகி போய்விட்டதில் ‘உன் இஷ்டம் போல திட்டிக் கொள்’ என்று மரம் போல் நின்றவளிடம் அவன் ஆச்சரியிக்கும் விதமாக, “இது உன் பர்ஸ்தானே” என்று சிரித்த முகமாக நீட்டினான்.

அதனை அவசரமாகப் பெற்றுக் கொண்டவள் அவனை விசித்திரமாகப் பார்க்க, அவனோ மீண்டும் அவளை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு அகன்றான். அவன் சிரிப்பின் பின்னணியிலிருந்த பெரும் அபாயத்தை அவள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

சூரியனின் செங்கதிர்கள் பூமியைத் தொட்டு புது வண்ணங்கள் தீட்டியது போல அன்றைய பொழுது அவளுக்கு புதிதாகவும் அழகாகவும் தெரிந்தது. மிக உற்சாகமாகப் புறப்பட்டு தன் அத்தையை பார்க்க அவர்கள் வீடிருக்கும் தெரு முனையில் வந்து காத்திருக்க, அவரும் சில நொடிகளில் அவளுடன் வந்து இணைந்து கொண்டார்.

வாழ்த்துக்களும் அணைப்புகளும் என அவர்களின் சந்திப்பு சிறப்பாகவே துவங்கியது. 

“பாரதி எக்ஸாம் போயிட்டானா?” என்று அவள் அவரிடம்  வினவவும்,

“ம்ம்ம் போயிட்டான்… இப்பதான் கிளம்பினான்” என்று இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.

“கண்டிப்பா பாரதி வந்திருவான் இல்ல” என்றவள் குரலில் வழிந்த ஆர்வத்தை கண்டுகொண்டவர்.

“கண்டிப்பா வந்திருவான்” என்று உறுதி கொடுத்தார். ஆனால் இங்கே நாம் நினைப்பதெல்லாம் நினைத்தபடி நடந்துவிடுவதில்லையே.

 “அத்தை நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று பீடிகையுடன் ஆரம்பித்து, “ஹேக்கிங் சம்பந்தமா நானே எழுதின கோடிங்கை பார்த்துட்டு யூ எஸ் கம்பெனில எனக்கு ஜாப் ஆபர் பண்ணி இருக்காங்க… டூ லேக்ஸ் சேலரி” என்க,

“நிஜமாவா நந்து” என்றவர் பொங்கிய ஆவலுடன் அவளைப் பெருமிதமாகப் பார்த்தார். 

“ஆனா எனக்குதான் போக இஷ்டமில்ல அத்தை” என்றவள் முகத்தைச் சுருக்க,  

“ஏன் டி?” என்றார்.

“பாரதியை பார்க்க முடியாதே” என்றாள் பாவம் போல பரிதாபமாக தலையை சாய்த்து!

“ம்க்கும் அவன் ட்ரைனிங் போயிட்டா எப்படி பார்ப்ப… பேசாம அவன் ட்ரைனிங் முடிச்சு போஸ்டிங் வாங்குற வரைக்கும் நீ அந்த வேலையில சேர்ந்துடு… அதான் உனக்கு நல்லது… புரிஞ்சுதா?” என்றார்.

“நிஜமா போக சொல்றீங்களா?”

“ஒரு இரண்டு மூணு வருஷம் நந்து… அப்புறமா திரும்பி வந்துடேன்”

அவள் போகலாமா என்று ஆழ்ந்து யோசனையில் மூழ்கியிருக்கவும் அவள் கரத்தை பற்றி ஒரு ஐஸ் க்ரீம் பார்லருக்கு அழைத்து வந்தவர்,

“சரி வா… இந்த சந்தோஷத்தைக் கொண்டாட… நம்ம இரண்டு பேரும் ஜில்லுனு ஒரு ஐஸ் சாப்பிடுவோம்” என்றார்.

அந்த நாளை முழுக்க எப்படிக் கடத்தப் போகிறோம் என்ற யோசனையில் நந்தினி ஐஸ் க்ரீமை ஸ்பூனில் கரைத்து கூழாக மாற்றிக் கொண்டிருந்தாள். அதுவுமில்லாமல் ஏதோ சொல்ல முடியாத சோகம் அவள் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.

“என்னடி பண்ணிட்டு இருக்க? சாப்பிடு” என்று அவள் அத்தை கையில் தட்டினார். அந்த நொடியே யோசனைகளை விடுத்து அவசரமாகச் சாப்பிட்டு முடித்தவளுக்கு அப்போதைக்கு பாரதியைத் தவிர வேறெதுவும் இன்பம் தராது என்பது அவருக்குப் புரிந்தது. 

உடனடியாக வித்யா தன் பையிலிருந்த வளையலை எடுத்து நீட்டி, “இதை பாரதி அவன் கையால செஞ்சான்… இது உனக்குத்தான்… போட்டுக்கோ” என்றார்.

அத்தனை நேரம் சோர்ந்திருந்த முகம் புது மலராக மலர்ந்தது.

“வாவ்” என்றவள் அதன் வடிவமைப்பை ரசித்துப் பார்க்க,

“போட்டுக்கோ நந்தினி” என்றார்.

“உஹும்… இதை பாரதி அவன் கையால போட்டுவிடணும்” என்று சொல்லி அந்த வளையலை பத்திரமாக தன் தோள் பையில் வைத்துக் கொண்டாள்.

அதன் பின் இருவரும் அந்த ஐஸ் க்ரீம் பார்லர் விட்டு புறப்பட்டு சில தூரங்கள் நடந்திருப்பர்.

அப்போதுதான் அவள் எதிர்பாரா அந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. முதலில் நடந்தது வெறும் விபத்தாகவே தெரிந்தது.  ஆனால் அது திட்டமிட்ட செய்த சதி என்பது முகுந்தனைக் கண்ட நொடிகளில்தான் அவளுக்குப் புரிய ஆரம்பித்தது.

வித்யாவை வேகமாக வந்த லாரி இடித்துத் தள்ளியதில் உடலில் சிராய்ப்புகளோடும் தலையில் பலமான காயத்தோடு அவர் வலியில் துடிதுடிக்க, நந்தினி ஓவென்று கதறிவிட்டாள்.

 “யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்… ஏதாச்சும் வண்டியை நிறுத்துங்க… ஹாஸ்பெட்டில் சேர்க்கணும்” என்றவள் தன் தேகத்தை மடியில் போட்டுக் கொண்டு இறைஞ்சி அழுதாள். அவர்களைச் சுற்றிக் கூடியிருந்த கூட்டத்திடம் சில நிமிடங்களில் ஒரு கார் அவர்கள் அருகில் வந்து நின்றது.

அந்த காரின் பின்னிருக்கையில் அத்தையை மடியில் கிடத்தியபடி அவளும் ஏறி அமர்ந்த பின்னரே நடக்கும் சூழ்ச்சிகள் விளங்கத் தொடங்கின.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த முகுந்தன் நந்தினியைத் திரும்பிப் பார்த்து விஷமமாகச் சிரித்த போது அவள் பேச்சற்று போனாள்.

“இப்படியொரு ட்விஸ்ட் நீ எதிர்பார்க்கவே இல்ல இல்ல நந்தினி” என்றவன் கர்ண கொடூரமாக சிரிக்க, அவள் முகம் வெளிறிப் போனது. அன்று அவளைப் பார்த்துச் சிரித்த அதே சிரிப்பு!

‘உன்னை அழ வைத்து காட்டுகிறேன் பார்…’ என்று அவன் அன்று சூழ்ச்சியோடு சிரித்திருக்கிறான்.

 ‘உன் சந்தோஷத்தைத் தரைமட்டமாக்கி காட்டுகிறேன்’ என்ற சேடிஸ்ட்டாக சிரித்திருக்கிறான்.

எல்லாவற்றிற்க்கும் மேல் பெரும் இரத்தம் குடிக்கும் வேட்கையைக் கொண்டிருந்தது அவனின் இரக்கமற்ற அச்சிரிப்பு!

“முகுந்தா ப்ளீஸ்… உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்… உன் காலில வேணாலும் விழறேன்… அத்தை ஹாஸ்பெட்டில சேர்க்கணும்” என்றவள் கையெடுத்து கும்பிட,

“சேர்க்கலாம்… அதுக்கு முன்னாடி பாரதிக்கு ஃபோன் பண்ணி இருக்கேன்… அவன் கிட்ட விஷயத்தை சொல்லி பக்கத்துல இருக்க அருணா ஹாஸ்பெட்டில் வர சொல்லு” என்றான்.

அவள் அதிர்ச்சியாக அவன் முகத்தை ஏறிட, “பேசடி… அப்பத்தான் வண்டி ஹாஸ்பெட்டில் போகும்” என்றான் மிரட்டும் தொனியில்.

“பாரதி எக்ஸாம் எழுத போயிருக்கான்” என்றவள் தவிப்பாகக் கூற,

“அப்போ உன் அத்தை உயிர் மேல உனக்கு அக்கறை இல்ல” என்றவன் கேட்ட நொடி அத்தையின் துடிப்பை கண்டவள் வேறு வழியில்லாமல் பாரதியிடம் தகவலை உரைத்தாள்.

பாரதி அதிர்ந்து போனான். தன் அம்மாவின் மரணத்தின் பின்னணியில் இப்படியானதொரு பயங்கரமான திட்டமிடல் இருக்கமென்று அவன் இதுவரை யோசித்திருக்கவும் இல்லை.

 “அப்போ அன்னைக்கு என்கிட்ட ஃபோன்ல பேசனது நீயா நந்தினி?” என்று அவன் வினவ,

“ம்ம்ம்” என்று தலையசைப்போடு திரும்பிப் பார்த்தவளுக்குக் கல்லாக இறுகியிருந்த பாரதியின் முகம் மனதை அழுத்த,

“இதெல்லாம் சொல்லி உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு நினைச்சாலும்… எத்தனை நாளைக்கு இதெல்லாம் உன்கிட்ட இருந்து மறைக்கிறது… அதான் சொல்லிட்டேன்

பட் ப்ளீஸ் உன் வலிகளை வருத்தமாவோ கண்ணீராவோ மாத்திடவே மாத்திடாதே… கோபமா தேக்கி வைச்சுக்கோ” என்று கடினத்தோடு கூறியவளை ஆழ்ந்து பார்த்தவன், 

“நீ இன்னும் முடிக்கல… ஹாஸ்பெட்டில நீ இருந்தியா அன்னைக்கு… நான்தான் உன்னை பார்க்கலையோ… சரி அப்போ இருந்த சூழ்நிலையில பார்க்கலன்னாலும் ஏன் என்னைப் பார்க்க நீ முயற்சி பண்ணல… ஏன் இதெல்லாம் அப்பவே என்கிட்ட சொல்லல?” என்றவன் சரமாரியாகக் கேட்ட கேள்வியில் கொந்தளிப்பாக எழுந்து நின்றவள்,

“ஆமா உன்னை பார்க்க அதுக்கு பிறகு நான் முயற்சி பண்ணல… அந்த கதையெல்லாம் உனக்கு தேவையும் இல்ல… உனக்குதான் இதமா சாஞ்சிக்கவும் உன் கவலையை இறக்கி வைக்கவும் ஓர் தோள் கிடைச்சிருச்சு இல்ல… நீயும் எல்லா ஆம்பளைங்க மாதிரி உணர்ச்சிகளுக்கு அடிமையாவன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல” என்றவள் குற்றம் சாட்டும் நோக்கில் அவனிடம் கூற, அவனுக்கு அவள் துர்காவை மனதில் வைத்து பேசுகிறாள் என்பது புரிந்தது.

“எல்லோரோட சூழ்நிலையும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை நந்தினி… அந்த சமயத்துல எனக்கு துர்கா ஆறுதலா இருந்தது உண்மைதான்” என்றவன் சன்னமாக உரைக்க,

“அதான் காதலாக அப்படியே கசிந்துருகிட்டீங்களோ?!” என்றவள் எள்ளலாகக் கேட்டாலும் அதில் அளப்பரிய கோபம் இருந்தது. அவன் முறைப்பைக் கண்டவள்,

“என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி முறைக்குற? அவ என்ன? உனக்கு ஆறுதலை மட்டுமா கொடுத்தா… அவ ஆசையையும் சேர்த்து எல்லாம் கொடுத்தா… நீயும் கொஞ்சம் அதிகமாவே மயங்கிட்ட” என்றவன் சொன்ன நொடியில் அவளை எரித்து விடுவது போலப் பார்த்தவன்,

“நந்தினி ஸ்டாப் இட்… நீ ரொம்பம் அதிகமா பேசற… துர்காவை பத்தி இந்த மாதிரி இன்னொரு தடவை பேசுன அவ்வளவுதான்” என்றவன் கண்டிப்பாக முடித்தான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை கர்ப்பமாக்கிறளவுக்கு பழகனது தப்பு இல்ல… நான் பேசனதுதான் தப்பாம்” அவள் மெதுவாக முனகிய போதும் அவன் செவியில் தெள்ளத்தெளிவாக அந்த வார்த்தைகள் விழுந்து அவன் இதயத்தை குத்தி கிழித்தன.

“என்ன தெரியும்னு நீ உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க… கல்யாணத்துக்கு முன்னாடி நான் போய்… சை! இப்படியெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காம எப்படி உன்னால பேச முடியுது” என்றவன் முகம் அசூயை உணர்வை தோற்றுவிக்க,

“அப்போ துர்கா கர்ப்பத்துக்கு நீ காரணம் இல்லன்னு சொல்றியா?” என்றதும் அவன் முறைத்து பார்த்து,

“துர்கா கர்ப்பாமவே ஆகி இருக்க முடியாது… எங்களுக்குள்ள எந்த பிஸிக்கல் காண்டெக்ட்ஸும் கிடையாது” என்றவன் திட்டவட்டமாகக் கூறினான்.

“அப்போ துர்கா கர்ப்பத்துக்கு நீ காரணம் இல்லன்னு சொல்லு… துர்கா கர்ப்பமாவே இருக்க முடியாதுன்னு சொல்லாதே” என்றவள் மிக சாதாரணமாகக் கூற அந்த வார்த்தையில் பெரிதுமாகக் காயப்பட்டவன் கடுங்கோபத்துடன் அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டான்.

அவள் அப்போதும் அடங்கவில்லை.

“நீ கோபப்பட்டாலும் உண்மை பொய்யாகிடாது பாரதி… நீ ஜெயிலுக்கு போகும் போதே துர்கா கர்ப்பமாதான் இருந்திருக்கா”

“நந்தினிஈஈஈ” என்றவன் கொதித்து எழ,

“நான் சொல்றதை நீ நம்ப வேண்டாம்… தியாகு மாமா சொன்னா நம்புவதானே” என்று உரைத்த நொடி அவன் ஸ்தம்பித்துவிட்டான். அதற்கு மேல் அவனால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. 

  “எனக்கு தெரியும் பாரதி… நிச்சயம் நீ அந்த கர்ப்பத்துக்குக் காரணமா இருந்திருக்க மாட்டேன்னு… என் அத்தை வளர்ப்பு தப்பா போகாது” என்றவள் திடமாகச் சொல்லிவிட்டு அவனைத் தோட்டத்திலேயே தனியாக யோசிக்க விட்டுவிட்டு உள்ளே வந்தாள்.

சமையல்கார பெண்மணி அவளைப் பார்த்ததும் தொடர்ந்து அடித்திருந்த அவள் கைப்பேசியைக் காட்ட, அதனைப் பார்த்தவளின் முகம் கடுமையாக மாறியது.

அவள் தன் படுக்கையறை சென்று தன்னுடைய ரகசிய போனை எடுத்து அழைத்தவள், “எதுக்கு அந்த லைன்ல வந்த விஜ்ஜூ” என்று கடுகடுக்க,

“நீதான் இந்த லைனுக்கு வந்தாலே கட் பண்றியே” என்றவனும் எரிச்சலாக மொழிய,

“கட் பண்றேன்னா நான் பிஸியா இருக்கேன்னு அர்த்தம்” என்றாள்.

“யார் கூட? உன் எக்ஸ் லவர் கூடவா?” சற்றே எள்ளல் தொனியில் கேட்டு அவன் பெருங்குரலில் சிரிக்க, அவள் சீற்றாமானாள். 

“ஆமா பிஸியா இருந்தேன்… என் பெட் ரூம்ல… ஆனா அவன் என் எக்ஸ் லவர் இல்ல… எப்பவும் அவன்தான் என் லவர்… இதுக்கு மேல இன்னும் டீடைலா விளக்கம் கொடுக்கணுமா?” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குரல் மாறியது.

“நான் லெனின் பேசுறேன்” என்ற பெயரை கேட்டதும் சற்றே அமைதியானவள்,  

“விஜ்ஜூதான் தேவையில்லாம பேசுனான்” என்றவள் விளக்கம் போல கூற, “நீ பதில் பேசனது மட்டும் தேவையானதா?” என்றவன் குத்தி காட்டியதில் அவள் மௌனமானாள்.

“பாரதி வாழ்க்கைல நீ தேவையில்லாம நுழைஞ்சு குழப்பம் பண்ணிட்டு இருக்கன்னு எனக்கு தோணது… பேசாம பாரதியை அவங்க போக்கில விட்டுடு உன் வேலையை பாரு” என்றவன் கூறியதில் எரிச்சல் மூள,

“பாரதியை பத்தி யாரும் பேச வேண்டும்… வேற ஏதாவது முக்கியமான விஷயமிருந்தா மட்டும் சொல்லுங்க” என்று கடுப்பாகக் கத்தினாள்.

சில நிமிட மௌனத்திற்குப் பின்,

“கேரளா பார்டர் சீக்கிரம் ரிச்சாகிடுவோம்… இப்ப வரைக்கும் வழில எந்த பிரச்சனையும் இல்ல” என்றான்.

“ஹ்ம்ம்… ஒகே… வேறெதாச்சும்”

“கொஞ்சம் பணம் வேணும்”

“டெனா டவன்டியா?”

“ஃபிப்டி” என்றவன் கூற,

“சரி” என்று சுருக்கமாக பதிலளித்தவள்,

“போனை வைச்சுடவா” என்று கேட்டாள்.

“காதல் ஒரு பைத்தியகாரத்தனம்… அதை யார் செஞ்சாலும்” என்ற வாக்கியத்தோடு அவன் நிறுத்த,

“அப்படின்னா இந்த பைத்தியகாரி அந்த பைத்தியகாரத்தனத்தை செஞ்சிட்டேதான் இருப்பா… பாரதிக்காக… உனக்குப் பணம் வந்து சேர்ந்திரும் லெனின்… போனை வை” என்று பிடிவாதமாக உரைத்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு வெளியே வந்தாள். 

பாரதி இடிந்து போய் அமர்ந்திருந்ததை அவன் அடித்த கன்னத்தைத் தடவியபடி பார்த்தாள். வீங்கி அவன் விரல்கள் நச்சென்று பதிந்திருந்தது. உதட்டில் மெலிதாக புன்னகை எட்டி பார்த்தது.

சூடாக காபியை எடுத்து வர சொன்னவள் எத்தனை மணி நேரத்தில் இவன் இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு எழுகிறான் பார்ப்போம் என்று அமைதியாக உள்ளே நடந்தாள்.

அவனுக்கு இப்போதைக்கு இந்த அதிர்ச்சி வைத்தியங்கள் தேவை. கனலேற்றிய அடிக்க அடிக்கத்தான் இரும்பு உறுதியாகும்.

அவன் உறுதியாக வேண்டும். இந்த அரசியல் களத்தில் முகுந்தனுக்குப் போட்டியாக அவன் இறங்க வேண்டும். அதற்கு முதலில் அவனுக்குள் இருக்கும் நல்லவன் என்ற உணர்வை ஆணிவேரோடு பெயர்த்து எறிய வேண்டும்.

‘இங்கே எவனும் பிறக்கும் போதே கெட்டவனாகப் பிறப்பெடுப்பதில்லை. பசி, துரோகம், நிராகரிப்பு இதில் ஏதோ ஒன்றுதான் அப்படியான ஒவ்வொருவனையும் கெட்டவனாக நிர்மாணிக்கிறது. நல்லவன் என்ற அடையாளத்தைத் துறக்கச் செய்கிறது.  

துரோகங்களைப் பார்த்தே வளர்ந்தவளுக்கு அது பெரிய காரியமில்லை. ஆனால் பாரதி அன்பில் வளர்ந்தவன். அவனுக்கு அந்த பாதை ஏற்புடையதாக இருக்காது.

எனினும் வேறுவழியில்லை. இங்கே நல்லவனாக வாழும் வரை பாரதிக்கும் மதிப்பில்லை. செத்த பிறகாய்தான் சிலை வைத்துக் கொண்டாடுவார்கள்.

விதிவிலக்கானவனாகச் சகமனிதர்கள் மீது இரக்கமும் அன்பும் கொண்டவனாக வாழ்வதை விட  இந்த மந்தை கூட்டத்தின் விதிகளை எழுதுபவனாக வாழ வேண்டும். அதற்கு அவன் அரசியல் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும்.

அப்படி பாரதி அரசியல்வாதியாக மாற வேண்டுமெனில் அவன் சூழ்ச்சிகள் பல புரிய வேண்டும். சூது செய்ய வேண்டும். பொய்கள் புகல வேண்டும். மொத்தத்தில் கெட்டவனாக மாற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content