Vilakilla vithigal ‘AVAN’-20
20
துர்காவுடன் அன்று இரவு மருத்துவமனையில் பாரதியும் தங்கிவிட்டான். விடிந்ததும் அவனை தேடி வந்த தியாகு, பத்திரிக்கைகளில் வந்த செய்தியை அவனிடம் காட்டினார். அதனை படித்தவனுக்குப் பேரதிர்ச்சி. அவனையே குற்றவாளி போலச் சித்தரித்திருந்தனர்.
துர்காவின் மனதில் காதலை வளர்த்து அவளை காப்பகத்திலிருந்து ஓடி வர வைத்தது அவன்தான் என்று எழுதியிருந்ததைக் கண்டு அவன் இரத்தம் கொதித்தது.
“தப்பு செஞ்சது அந்த காப்பகத்து லேடி… அப்புறம் துர்காவை கடத்தின ரவுடி இவங்கல பத்தி எல்லாம் போடாம… என்னையும் துர்காவையும் சேர்த்து வைச்சு தப்பு தப்பா எழுதி இருக்கீங்க” என்று அவன் கொதிக்க,
“எல்லாம் அரசியல் பாரதி அரசியல்” என்றார்.
“இதை நான் சும்மா விட மாட்டேன்” என்றவன் வேகமாக துர்கா இருந்த அறைக்குள் நுழைந்தான்.
“துர்கா” என்று அழைத்த நொடி அவனை பார்த்தவள், “கிளம்பலாமா? என்னை டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா?” என்று பரபரப்பாக கேட்டாள். இன்னுமே நடந்த மோசமான சம்பவத்தின் தாக்கத்திலிருந்து அவள் மீளவில்லை.
“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்” என்று நிதானமாக ஆரம்பித்தவன், “போலிஸ்கிட்ட நீ என்ன சொன்ன?” என்று வினவினான்.
“நான் எதுவும் சொல்லல… ஆனா அவங்க ஒரு கையெழுத்து மட்டும் கேட்டாங்க போட்டு கொடுத்தேன்” என்றவள் தயக்கமாகச் சொல்ல,
“கையெழுத்துப் போட்டு கொடுத்தியா?” என்று அதிர்ச்சியானவன், “ஆமா அதுல என்ன எழுதி இருந்துதுன்னு படிச்சியா?” என்று உக்கிரமாக கேட்டான்.
“உஹும்” என்று மறுப்பாக தலையசைக்க,
“அறிவிருக்கா உனக்கு… என்ன ஏதுன்னு தெரியாம யாராச்சும் இந்த மாதிரி கையெழுத்து போட்டு தருவாங்களா… இப்போ நியூஸ் பேப்பர்ல என்ன போட்டிருக்காங்கன்னு பாரு” என்றவன் கோபமாக அந்த செய்தி தாளை அவளிடம் கொடுத்தான்.
“பொறுமையா பேசு பாரதி… அந்த பொண்ணுக்கு என்ன தெரியும் பாவம்… எல்லாம் போலிஸ்காரங்க செய்ற வேலை” என்று தியாகு பாரதியிடம் கூற, துர்கா அதிலிருந்து செய்தியைப் படித்துவிட்டு அதிர்ச்சியோ கோபமோ அடையவில்லை. மாறாக அவள் முகம் செவ்வானமாகச் சிவந்தது.
பாரதியும் அவளும் காதலிக்கிறார்கள் என்று எழுதியிருந்தது அவள் மனதைக் குளிர்வித்தது. ஆனால் அவள் எண்ணத்திற்கு நேருக்கு மாறாக பாரதி கனலாகப் பார்த்தான்.
நேற்று இரவு அவளை சமாதானப்படுத்திய பிறகு காவலர்கள் அவளை தனிப்பட்ட முறையில் விசாரிக்க வேண்டுமென்று சொன்னதில் அறையை விட்டு வெளியே வந்துவிட்டான். அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இப்படியொரு காரியத்தை காவல் துறையினர் செய்திருக்கின்றனர் என்று எண்ணுகையில் அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.
“போலிஸ்காரங்க கூட அந்த ரவுடிக்கு உடந்தையா?” என்றவன் சீற,
“போலிஸ்காரங்க மட்டும் என்ன செய்வாங்க… எல்லாம் மேலதிகாரிங்க கொடுக்கிற ப்ரஷர்… இதுல நிறைய அரசியல் புள்ளிங்க இன்வால்வ் ஆகி இருப்பாங்க… அதான் இந்த பிரச்சனையை அப்படியே மூடி மறைக்க பார்க்கிறாங்க” என்றார் தியாகு!
“அப்படின்னா அந்த ரவுடியையும் காப்பகத்துல இருக்க அந்த இன்சார்ஜ் பொம்பளையும் ஒன்னும் பண்ண முடியாதா?” என்றவன் ஆதங்கத்தோடு வினவ,
“நம்ம கையில அதிகாரமும் பதவியும் இல்லாத வரைக்கும் நாம இங்கே எதுவும் பண்ண முடியாது… இதான் இங்க நிதர்சனம்… ஒரு வகையில் நீ துர்காவை இந்த பிரச்சனையிலிருந்து முழுசா மீட்டதே பெரிய ஆச்சரியம்தான்” என்றவர் சொன்னதை அவனால் ஏற்கவே முடியவில்லை.
துர்காவை போல இதில் பல பெண்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது.
இப்படியொரு குற்றத்திற்கு அரசாங்க அதிகாரிகளே துணை போவதை விட மோசமான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு நாடு எந்த துறையில் முன்னேற்றத்தைக் கண்டாலும் அது தோற்று போன தேசம்தான்.
அவன் இவ்வாறு சிந்தித்து கொண்டிருக்கும் போது துர்கா அவனிடம், “எனக்கு நேத்து நடந்ததை நினைச்சா இப்போ கூட உடம்பெல்லாம் நடுங்குது… அந்த ரவுடி என்கிட்ட நீ எங்களைப் பத்தி எதுவும் சொல்ல கூடாதுன்னு கழுத்துல கத்தி வைச்சு மிரட்டுனான்” என்றவள் அச்சத்தோடு நடந்தவற்றை விவரித்தாள்.
“அப்போ அந்த ரவுடியை நீ பார்த்தியா துர்கா? அவன் முகம் எப்படி இருந்துது” என்று பாரதி ஆர்வமாக வினவ,
“அவன் முகம் தாடியும் கீடியுமா பார்க்கவே படுபயங்கரமா இருந்துச்சு… இனிமே என் ஜென்மத்துல அவனை திரும்ப பார்த்திடவே கூடாது” என்றவள் சொல்லிவிட்டு முகத்தை மூடி அழ,
“இனிமே எந்த பிரச்சனையும் இல்ல… நீ இப்போ சேஃபா இருக்க… அழாதே” என்று பாரதி அவளை தேற்றினான். சட்டென்று திரும்பி அவன் கரத்தை பற்றி கொண்டவள்,
“என்னை திரும்பியும் தனியா விட்டுட்டு போயிட மாட்டீங்க இல்ல… ப்ளீஸ் என்னை உங்க கூடவே கூட்டிட்டு போயிடுங்க… நானும் உங்க கூடவே இருக்கேன்” என்று கண்ணீரோடு அவள் உரைக்க பாரதி சங்கடமாய் தியாகுவை பார்த்தான்.
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளை எப்படி தன்னுடன் வைத்து கொள்ள முடியும் என்றவன் யோசித்திருந்த சமயத்தில் மருத்துவர் உள்ளே நுழைந்தார்.
“டாக்டர் வராங்க துர்கா… நாம இதை பத்தி அப்புறம் பேசிக்கலாம்… கையை விடு” என்றவன் லாவகமாக அவள் பிடியிலிருந்து கரத்தை விடுவித்து கொண்டு வெளியே வந்தான்.
பாரதி சிந்தனை வயப்பட்டு அமர்ந்திருக்க, “இப்போ என்ன பண்றது பாரதி… ஏற்கனவே துர்கா ரொம்ப பயந்து போயிருக்கா” என்று தியாகு சொல்லவும், “இல்ல மாமா… திரும்பியும் துர்காவை ஹாஸ்டலுக்கோ… இல்ல காப்பகத்துக்கோ அனுப்பி நான் ரிஸ்க் எடுக்க விரும்பல” என்றான்.
“அப்படின்னா” என்றவர் அவனைக் குழப்பமாக பார்க்க,
“துர்காவை நம்ம வீட்டுக்கே அழைச்சிட்டு போயிடலாம் மாமா” என்றான்.
“என்ன சொல்ற பாரதி… ஏற்கனவே உன்னை பத்தியும் துர்காவை பத்தியும் நியுஸ் பேப்பர்ல எல்லாம் தப்பு தப்பா எழுதியிருக்கும் போது”
“அவங்க என்ன வேணா எழுதிட்டு போகட்டும்… எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்ல… துர்காவிற்கு இனிமே எந்த பிரச்சனையும் வர கூடாது” என்று தீர்க்கமாக உரைத்தவன், அவளை வீட்டிற்கு அழைத்துப் போக முற்பட்டான். ஆனால் பிரச்சனை அங்கிருந்துதான் பூதாகரமாக மாறியது.
மகளிர் குழுக்கள் எல்லாம் இவனுக்கு எதிராகத் திரும்பிவிட்டனர். துர்காவிற்கு இன்னும் பதினேழு வயது முடியாத நிலையில் அவள் மைனர் பெண் என்று சொல்லி எந்தவித உறவுமுறையும் இல்லாத அவனுடன் அனுப்ப மறுத்துவிட்டனர். காவலர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததில் அவனுக்கு நெருக்கடி அதிகமானது.
இதெல்லாம் சங்கர் அவர்களுக்கு எதிராக செய்யும் சதிச்செயல் என்பதை பாரதி அறிந்திருக்க வாயப்பில்லை. அவன் துர்காவை அந்த காப்பகத்திலிருந்து மீட்டுவிட வேண்டுமென்பதில் தீவிரமாக இருந்தான்.
அதற்காக தியாகுவை வைத்து துர்காவை மகளாக தத்தெடுக்க வைக்க முடிவு செய்தான்.
இந்த செயல்முறைகளை எல்லாம் சட்ட ரீதியாக செய்து துர்காவை காப்பகத்திலிருந்து மீட்கும் வரை பாரதி ஓயவேயில்லை. இருப்பினும் அங்கிருந்த ஆதரவற்ற பெண்கள் அனைவரையும் காப்பாற்றும் எண்ணம்தான் ஈடேறவில்லை. விரைவில் அவர்களையும் காப்பாற்றி விட வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டான்.
ஒருவாறு இந்த பிரச்சனையெல்லாம் தியாகு துர்காவை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அங்கே வந்த பிறகுதான் வித்யா இறந்த விட்ட தகவல் வசு மூலமாக துர்காவிற்கு தெரியவந்தது.
பாரதி வீட்டிற்கு ஓடி சென்றவள் அங்கிருந்த வித்யாவின் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதற, “துர்கா… ப்ளீஸ் அழாதே” என்று அவளைத் தேற்ற,
“மிஸ்ஸுக்கு ஏன் இப்படியாச்சு… நீங்க ஏன் முன்னாடியே இதை பத்தி என்கிட்ட சொல்லல?” என்றாள்.
“சொல்லி இருந்தா என்ன பண்ணி இருப்ப… இபப்டித்தான் உட்கார்ந்து அழுதிருப்ப” என்றவன் அவள் கையை பற்றி எழுப்பி,
“முதல அழுறதை நிறுத்து… இதெல்லாம் நடந்த முடிஞ்சு இரண்டு மாசத்துக்கு கிட்ட ஆகிடுச்சு… நீ சும்மா அழுது என்னையும் கஷ்டப்படுத்தாதே” என்று கண்டிக்க, அவள் முகத்தை துடைத்து கொண்டாள்.
“சரி… நீ உட்காரு… நான் போய் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் தர அதனை பருகிவிட்டு மெல்ல ஆசுவாசமாக மூச்சுவிட்டு அவனைப் பார்த்தாள்.
“மேடமுக்கு அழுகை நின்னுடுச்சா?” என்றவன் கேட்ட நொடி தலையை மட்டும் அசைத்தவள்.
“மிஸ்ஸுக்கு இப்படி ஆகும்னு நான் நினைச்சு கூட பார்க்கல” என்றவள் குரல் தழுதழுக்கவும்,
“நான் மட்டும் அம்மாவுக்கு இப்படி ஆகும்னு நினைச்சேன்னா என்ன? இப்படியெல்லாம் நடக்கணும்னு இருக்கு… நடந்து போச்சு… அழுகுறதுனால நடந்த எதையும் மாத்திட முடியாது துர்கா” என்றவன் தெளிவாக கூற, அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
அவன் என்ன சொன்னாலும் அவளால் அவரின் மரணத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியபடியே இருந்தது.
“துர்கா” என்றவன் அழைக்கவும்,
“என்னை நீங்க சமாதானப்படுத்தினாலும் உங்க மனசு எந்தளவுக்கு வலிக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுது பாரதி… எனக்கும் உங்களை மாதிரி அம்மா மட்டும்தானே… அம்மா இல்லாம போகிற வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்… அதுவும் தீடீர்னு ஒரு நாள் இப்படி நடந்தா” என்றவள் கூறியபடி அவன் கண்களை பார்க்க, அவனையும் அறியாமல் விழியோரம் நீர் கசிந்தது.
“என்னை அழ வைக்கத்தான் வந்தியா துர்கா நீ?” என்றவன் கோபமாகக் கடிந்து கொள்ள,
“சத்தியமா இல்ல… உங்க கூட வாழ்க்கை பூரா துணையா இருக்கணும்னுதான் வந்தேன்… உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும்” என்றவள் அவன் கண்களை கூர்மையாக பார்த்தாள்.
அவன் உள்ளத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தை மறைத்து கொண்டவன், “நீ சின்ன பொண்ணு துர்கா… முதல உன் படிப்பை முடி… அப்புறமா மத்த எல்லாத்தை பத்தி யோசிக்கலாம்” என்று அவளை மனதைக் காயப்படுத்தாமல் சாமர்த்தியமாக பேசினான்.
“அன்னைக்கு மிஸ் கூட இதான் சொன்னாங்க… நீ சின்ன பொண்ணு உனக்கு ஏற்பட்டிருக்கிறது வெறும் அட்ரெக்ஷன்… அதுவே நாளைடவில சரியா போயிடும்… நீயே பாரதியை மறந்துடுவேன்னு சொன்னாங்க” என்றவள் நிதானமாக மூச்சை இழுத்துவிட்டு,
“நான் சின்ன பொண்ணுதான்… ஆனா உங்க மேல ஏற்பட்டது நிச்சயமா அட்ரேக்ஷன் இல்ல… எத்தனை வருஷமானாலும் அது மாறவும் மாறாது… உங்களை என்னால மறக்கவும் முடியாது… இதை நீங்க ஒருநாள் புரிஞ்சிப்பீங்க” என்றவள் திடமாக சொல்ல, அவள் பேச்சும் நேராக அவனை பார்த்த அவள் விழிகளும் அவனை மனதை அசைத்து பார்த்தது.
நினைவுகளிலிருந்து மீண்டு வந்தவன் அதீத மன அழுத்தத்தில் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான். தூரமாக நின்று அவன் செயல்களை கவனித்து கொண்டிருந்தவள் பதட்டத்துடன் அவனருகே வந்து,
“பாரதி… என்னாச்சு? தலை வலிக்குதா?” என்க,
“இல்ல… என் துர்கா அப்படியெல்லாம் பண்ண மாட்டா… நிச்சயம் பண்ண மாட்டா… அவ என்னை உயிருக்கு உயிரா நேசிச்சா” என்றவன் தனக்கு தானே பேசி கொள்வது போல சொல்லவும் அவன் மனநிலையை ஒருவாறு புரிந்து கொண்டு பேசினாள்.
“உன்னை கஷ்டப்படுத்தணும்னு நான் அப்படி சொல்லல… துர்காவை பத்தி நான் கேள்விப்பட்டதைதான்” என்றவள் பொறுமையாக எடுத்துரைக்க, அவளைச் சுட்டெரிப்பது போல உஷ்ணமாய் பார்த்தவன்,
“நீ கேள்விப்பட்டது தப்பு… என துர்கா அப்படி கிடையாது… நீ இல்ல வேறு யார் துர்காவை பத்தி தப்பா சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்” என்றவன் எழுந்து ஆக்ரோஷமாகக் கத்திவிட,
“சாரி பாரதி… தப்புதான்… நான் அப்படிச் சொல்லி இருக்க கூடாது… நீ உள்ளே வா” என்றவள் அவனை அமைதியடையச் செய்து வீட்டினுள் அழைத்து சென்றாள்.
“சாப்பிட்டு மாத்திரை போட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தன்னா… மனசு கொஞ்சம் ரிலேக்ஸ் ஆகும்” என்றவள் அவனை டைனிங் டேபிள் முன் அமர உணவு பரிமாற வரவும்,
“எனக்குச் சாப்பாடு வேண்டாம் நந்தினி” என்று எழுந்து கொண்டான்.
“கொஞ்சமாச்சும் சாப்பிட்டாதான் மாத்திரை போட முடியும் பாரதி” என்றவள் வாஞ்சையாக அவனைப் பார்த்தாள்.
“தொண்டை குழில இறங்க மாட்டேங்குது நந்தினி” என்று வேதனையோடு கூறியவன்,
“ஜெயில் சாப்பாட்டை சாப்பிடுறது ரொம்ப கொடுமையா இருக்கும்… அப்ப கூட நான் சாப்பிடாம எல்லாம் இருந்ததில்லை… ஆனா இப்போ என்னை சுத்திலும் வெறுமையா இருக்கு… வாழ்க்கையே சூனியமா இருக்கு” என்றவன் மேலும் அவளிடம் தன் மனநிலையை விவரித்தான்.
“இந்த பத்து வருஷ ஜெயில வாழ்க்கையில நான் எல்லாத்தையும் தொலைச்சிட்டேன்… என கனவு லட்சியம்னு எல்லாத்தையும் தொலைச்சிட்டேன்… ஆனா அப்பவும் என்னை நேசிக்க ஒரு உயிர் வெளியே இருக்கு… அந்த உயிர்க்காக நான் வாழணும்னு நினைச்சேன்…
ஆனா எனக்கு மிச்சமா இருந்த அந்த ஒரு சந்தோஷத்தையும் கடவுள் என்கிட்ட இருந்து பறிச்சிப்பான்னு நினைக்கவே இல்ல… இதற்க்கிடையில நீ துர்காவை பத்தி சொன்னதெல்லாம் என்னால தாங்கவே முடியல… நாங்க இரண்டு பேரும் கணவன் மனைவியா வாழலதான்… ஆனா மனசார ஒருத்தரை ஒருத்தர் உண்மையா நேசிச்சோம்… உண்மையா நேசிச்சோம்… அந்த நேசம் பொய்யா இருக்கவே முடியாது” என்றவன் உறுதியாக சொல்லிவிட்டு மாடியேறி தன்னறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டான்.
நந்தினியின் கண்கள் சிவந்தது. உஷ்ணமாக அவள் உள்ளம் கொதித்தது. உள்ளம் குமுறியது. அவன் வார்த்தைகளில் அவள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் வெடித்துச் சிதற உணவு மேஜை மீதிருந்தவை அனைத்தையும் ஆவேசமாகக் கலைத்துப் போட்டாள்.
“சாப்பிட மாட்டேன்னு… போ… சாப்பிடாதே… துர்காவாம்… துர்கா… பெரிய இவ… அவ இல்லன்னா இவனுக்கு வாழ்க்கையே இல்லையாம்ல” என்று பொருமியவள் அருகே இருந்த நாற்காலி எல்லாம் சீற்றமாக தள்ளிவிட, சமையல்கார பெண்மணி அரண்டு போய் ஒதுங்கி நின்றாள்.
“நான் மட்டும் என்ன பைத்தியக்காரியா? உன்னையே நினைச்சிக்கிட்டு என் கனவு எல்லாம் தொலைச்சிட்டு நிற்குற என் காதல் புரியல இல்ல உனக்கு? புரியாதுடா புரியாது… உனக்கு புரியவே புரியாது” என்று தன் கையில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் உடைத்துப் போட்டவள் அறைக்குள் சென்று சீற்றமாகக் கதவை அடைத்துக் கொண்டு வெடித்து அழுதாள்.
மனதில் தேக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம் கண்ணீராக வழிந்தோடியது. ஆனால் அவள் உள்ளத்தின் குமுறல் அடங்கவே இல்லை. தன் விருப்பங்களையும் ஆசைகளையும் தனக்குள்ளாகவே புதைத்துக் கொண்டதில் ஏற்பட்ட அழுத்தம்… கோபமாகவும் கண்ணீராகவும் வெளியேறியது.
அழுது தோய்ந்து போனவள் தரையில் சரிந்துவிட்டாள். உறக்கமும் அல்லாது மயக்கமும் அல்லாது ஒருவித சக்தியற்ற நிலையில் வீழ்ந்து கிடந்தாள்.
இரவு நடுநிசியில் அவள் விழித்த போது தூரமாக அவள் கைப்பேசி அழைக்கும் ஒலி. உடல் சோர்ந்து வீழ்ந்திருந்தாலும் மனம் மட்டும் விழித்துக் கொண்டேயிருந்தது. பல வருடங்களுக்கு மேலாக ஓய்வையும் உறக்கத்தையும் அவள் மனம் தொலைத்துவிட்டிருந்தது.
இப்போதும் அப்படியே கிடந்தவளின் காதில் இடைவிடாது ரீங்காமரிட்ட அவளுடைய ரகசிய கைப்பேசியை மெல்ல எழுந்து அதன் எண்ணைப் பார்த்த நொடி முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு எடுத்துப் பேசினாள்.
“சொல்லு லெனின்” என்றவள் குரல் கரகரத்தது.
“இன்னும் கொஞ்ச உள்ளே போயிட்டா நாங்க போற இடத்துல சிக்னல் கிடைக்காது… அதான் முன்னாடியே உன்கிட்ட பேசிடலாம்னு”
“நடுவுல எங்கேயும் எந்த பிரச்சனையும் இல்லயில்ல”
“இல்ல”
“பத்திரமா பார்த்து போங்க” என்றவள் குரலில் எப்போதும் இருக்கும் உற்சாகமும் திடமும் இப்போது இல்லையென்று தோன்றியது.
“என்ன நந்தினி ஏதாச்சும் பிரச்சனையா… ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு” என்றவன் கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… நான் நல்லா இருக்கேன்… நீங்க பத்திரமா போய் சேருங்க” என்றாள்.
அவர்கள் உரையாடல் முடிந்து அழைப்பை துண்டித்து பிறகு அந்த ஜீப் ஒரு காட்டு வழியில் புகுந்தது.
“அண்ணே… இந்நேரத்தில இந்த வழியா போறோமே… ஏதாவது காட்டு மிருகம் வந்துட்டா” என்று விஜ்ஜூ நடுக்கத்தோடு கேட்க,
“நம்மல விட கொடூரமான மிருகம் ஒன்னு இந்த உலகத்திலேயே இல்ல… அப்படி எந்த மிருகமா இருந்தாலும் அது நம்மல பார்த்துதான் பயப்படணும்” என்றவன் கேரளா எல்லைப் பகுதியில் வனவிலங்குகள் அதிகமுள்ள உள்ள அடர்ந்த காட்டு சாலையில் சீராக தன்னுடைய ஜீப்பை இயக்கி சென்றான் லெனின்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு , மிகவும் எதிர்பார்ப்பு உடன் கதை சென்று கொண்டு இருக்கிறது .
Lovely update