Vilakilla vithigal ‘AVAN’-25
25
கருணாவுடன் பாரதி காரில் சென்ற தகவல் நந்தினியை வந்தடைந்த அடுத்த நொடி அவள் முகுந்தன் வீட்டுக்கு விரைந்தாள்.
வீட்டிற்குள் புயலெனப் புகுந்தவளை யாராலும் தடுத்த நிறுத்த இயலவில்லை. அவள் நேராக சென்று முகுந்தன் அறை கதவை படபடவென தட்ட அவனது காரியதரிசி முன்னே வந்து,
“சார் ஏதோ முக்கியமா பேசிட்டு இருக்காரு மேடம்” என்று அவளைத் தடுக்க முற்பட்டான்.
“இப்போ மட்டும் உங்க சார் வெளியே வரல… இங்க இருக்க எல்லா பொருளையும் தூக்கி போட்டு உடைப்பேன்… தரையில இல்ல… உங்க சாரோட மண்டையில… என்னை நீ தடுத்த… உன் மண்டையும் சேர்ந்து உடையும்… ஒழுங்கா ஓரமா போயிடு” என்றவள் சீற்றமாக எகிற, ‘நமக்கு எதற்கு வம்பு?’ என்று அவன் ஒதுங்கி நின்றுவிட்டான்.
“அது” என்று எச்சரித்தவள் மீண்டும் பலமாக கதவைத் தட்டி,
“டேய் முகுந்தா… கதவை திறடா” என்று கத்தி கூப்பாடு போட்டாள். சில நொடிகள் தாமதத்திற்கு பிறகு கதவு திறக்கப்பட்டது. உஷ்ணமாகத் தகித்திருந்த அவள் விழிகள் பாரதியைப் பார்த்ததும் குளிர்ந்து போனது.
“பாரதி” என்று அவனை இறுக்கமாக அணைத்து கொண்டவளின் கண்களில் கண்ணீர் ஊற்றாக பெருகியது. அவனோ எந்தவித எதிர்வினையுமின்றி மௌன கெதியில் நின்றான்.
அப்போது அவன் பின்னோடு நின்றிருந்த முகுந்தனை பார்த்து கோபமாக முறைத்தவள், “நான் உன்னை அந்தளவுக்கு வார்ன் பண்ணியும் நீ அடங்கல இல்லடா” என்று சீற,
“இல்ல நந்தினி… நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல” என்று அவன் பம்மினான்.
“ஏய் ஏய்… உன்னை பத்தி எனக்கு தெரியும் டா”
அந்த நொடி பாரதி அவளிடம், “நந்தினி பிரச்சனை வேண்டாம்… நம்ம இங்கிருந்து போலாம்” என்க,
“இல்ல பாரதி… உனக்கு இவனை பத்தி தெரியாது… இவன் என்ன ப்ளேன் பண்ணிருக்கான்… ஏன் உங்க இங்க வர வைச்சிருக்கான்னு எனக்குதான் தெரியும்” என்றவள் குதிக்க,
“என்ன காரணம்?” என்று பாரதி கேட்ட நொடி வாயடைத்து நின்றாள். முதலமைச்சர் கடத்தல் விஷயம் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்ற அச்சம் எட்டிப் பார்த்தது.
அதனை மறைத்துக் கொண்டவள், “அவன் உன்னை கொல்றதுக்கு துடிச்சிட்டு இருக்கான் பாரதி” என்று சமாளிக்க,
“முகுந்தன் என்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கலயே” என்று கூறவும், அவளுக்கு ரொம்பவும் அதிர்ச்சியாக இருந்தது.
“உனக்கு அவனை பத்தி தெரியாது பாரதி” என்றவள் சொல்லி கொண்டே முகுந்தனை பார்க்க அவன் ஐயோ பாவம் போல நின்றிருந்தான்.
“நம்ம இங்கே இருக்க வேண்டாம்… வா கிளம்பலாம்” என்றவள் முகுந்தனை எச்சரிக்கையாக பார்த்துவிட்டு பாரதி கையை பற்றி அழைத்து செல்ல, செல்வதற்கு முன் பாரதி முகுந்தனை திரும்பி பார்த்தான். அவன் கண்கள் சூட்சமமாக ஒளிர்ந்தன.
காரில் ஏறியதும், “திரும்பவும் உன்னை தொலைச்சிடுவேனோன்னு பயந்துட்டேன்… தெரியுமா?” என்றவள் ஆதங்கத்தோடு கூற அவனோ நெற்றியில் தட்டி கொண்டு,
“ப்ச்… நான் உள்ளே என் பேகை மறந்துட்டேன்” என்று சொல்லவும்,
“என்ன பேக்?” என்றவள் புரியாமல் வினவ,
“நான் ஜெயில இருந்து எடுத்துட்டு வந்த பேக்… ஜமால் கிட்ட இருந்துச்சு… இப்பதான் வாங்கிட்டு வந்தேன்” என்றான்.
“சரி… நான் உள்ளே போய் எடுத்துட்டு வரேன்” என்று நந்தினி கார் கதவை திறக்க,
“இல்ல… நான் போறேன்… நீ இங்கேயே இரு” என்று பாரதி இறங்கி விறுவிறுவென நடந்தான்.
நந்தினிக்கு ஏதோ தப்பாக தோன்றியது. இந்த இடைப்பட்ட நேரத்தில் பாரதியிடம் முகுந்தன் ஏதாவது பேசியிருப்பானோ? அப்படி பேசியிருந்தால் என்ன பேசியிருப்பான்?
இவ்வாறாக அவள் யோசித்திருக்கும் போதே காரில் வந்து ஏறியவன், “கிளம்பலாம்” என்றான். ஆனால் அதன் பின் அவன் எதுவும் பேசவில்லை. தீவிரமான சிந்தனையில் மூழ்கிவிட்டான்.
தாமாக எதுவும் ஆரம்பிக்க வேண்டாமென்று அவளும் அமைதியாக வந்தாள்.
அவள் பங்களாவில் கார் வந்து நின்றதும் அவன் பாட்டுக்கு இறங்கிச் சென்றுவிட, அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அவன் தன் அறைக்குள் யோசனையாக அமர்ந்திருக்க, “நைட்ல இருந்து நீ எதுவும் சாப்பிடல… முதல குளிச்சிட்டு வா… சாப்பிடலாம்” என்று அவள் மெதுவாகச் சொல்ல, மறுப்பேதும் இல்லாமல் ‘உம்’ என்று மட்டும் தலையசைத்தான்.
அவன் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் தெரிந்தது. இருப்பினும் அமைதியாக டைனிங்கில் சென்று அமர்ந்தாள்.
சில நிமிடங்களில் குளித்துவிட்டு வந்தவன் நந்தினியின் எதிரே வந்து அமர்ந்து, “நீயும் ப்ரெஷாகிட்டு வா… ஒண்ணா சாப்பிடுவோம்” என்றான்.
“நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்… நீ முதல சாப்பிடு” என்று அவனுக்கு பரிமாற போனவளை தடுத்து,
“நீயும் நைட் சாப்பிடலன்னு எனக்கு தெரியும்… என்னை தேடுனதுல காலையிலயும் நீ நிச்சயம் சாப்பிட்டிருக்க மாட்ட… ஒழுங்கா போய் ப்ரெஷாகிட்டு வா… இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்றான்.
அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவள் வியப்பில் நின்றுவிட, “என்ன அப்படியே நிற்குற… போய் ப்ரஷாகிட்டு வா… எனக்கு ரொம்ப பசிக்குது” என்க, அவன் அப்படி சொன்னதில் அவளுக்கு உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.
“அஞ்சே நிமிஷம்… இதோ வந்துடுறேன்” என்று பரபரப்பாக ள் ஓடினாள்.
அவள் வந்த பின் இருவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை முடித்தனர்.
நந்தினியின் முகம் புது மலராக மலர்ந்திருந்தது.
அவளின் அந்த சந்தோஷத்தைப் பார்த்தவன், “ஐம் சாரி நந்தினி… நான் அந்த மாதிரி உன்கிட்ட சொல்லாம கொள்ளாம போயிருக்க கூடாது” என்றதும்,
“பரவாயில்ல பாரதி… இப்பதான் நீ வந்துட்டியே” என்று சுமுகமாக புன்னகைத்தாள்.
பாரதி அவளை தயக்கமாக பார்க்க அவன் பார்வையை உணர்ந்தவளாக, “என்னாச்சு பாரதி… ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்க,
“ம்ம்ம்… கொஞ்சம் முக்கியமா பேசணும்.. உள்ளே ரூம்ல போய் பேசலாமா?” என்று அவன் வினவ அவள் சந்தோஷம் கரைந்து மீண்டும் சந்தேகம் தலை தூக்கியது.
“ம்ம்ம் பேசலாமே” என்று அவனோடு அறைக்குள் வந்தவள், அவனாகப் பேசட்டும் என்று அமைதியாக நின்றாள்.
அவன் தன் அம்மாவின் படத்தின் முன்னே சென்று நின்று யோசனையில் ஆழ்ந்துவிட்டான்.
“ஏதோ பேசணும்னு சொன்னியே” என்று அவளாக ஆரம்பிக்க,
“இந்த போட்டோ எப்போ எடுத்ததுன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டான்.
“ம்ம்ம் தெரியும்… அத்தை கர்நாடிக் சிங்கர்… நிறைய கச்சேரிகளில பாடிட்டிருந்தாங்க … ஒரு முறை கட்சி விழா நடந்த அத்தையோட கச்சேரி பிக்ஸ் பண்ணி இருந்தாங்க…
அங்கேதான் அத்தையை மாமா முதல்முறையை பார்த்தது பிடிச்சு போய் அவங்க வீட்டுல பேசி அவங்களை கல்யாணம் பண்ணிகிட்டாங்க… அந்த கச்சேரில எடுத்த போட்டோவதான் மாமா அவர் ரூம்ல வைச்சிருந்தாரு” என்றவள் சொல்ல அவன் கோபமாக பல்லைக் கடித்தான்.
“அப்போ அவருக்கு அம்மா மேல இருந்தது வெறும் ஈர்ப்புதான்… காதல் இல்ல… அதனாலதான் எங்க அம்மாவை நிராதரவா தவிக்க விட்டுட்டாரு”
“அப்படி சொல்ல முடியாது பாரதி… மாமா அத்தையை தவிர இப்பவரைக்கும் வேற எந்த பொண்ணுக்கு தான் வாழ்கையில இடம் கொடுத்ததில்லை… அரசியலில் மாமா எப்படி வேணா இருந்திருக்கலாம்… ஆனா பொண்ணுங்க விஷயத்துல மாமா ஜெம்தான்”
புருவங்கள் நெறிய அவளை பார்த்தவன், “அடுத்தவன் மனைவி மேல ஆசைப்பட்டதை தவிர இராவணன் கிட்ட வேற எந்த நெகிட்ட்வும் கிடையாது… அவன் ஒரு சிறந்த அரசன், தீவிர சிவன் பக்தன், இசை கலைஞன்… இப்படி அவன் கேரக்டர்ல பாசிட்டிவ்தான் அதிகம்…இதெல்லாத்துக்காக இராவணனை நீ நல்லவன் லிஸ்ட்ல சேர்த்துடுவியா?” என்று அவன் வினவ, அவள் பதிலின்றி நின்றாள்.
“பொண்ணுங்க விஷயத்துல அவர் ஒழுங்கா இருக்கிறதால அவருக்கு ஒட்டு மொத்தமா நல்லவர் முத்திரை கொடுத்திட முடியுமா?”
“சரி ஒகே… நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும்… ஆனா இப்போ எதுக்கு இதெல்லாம்… உனக்கு பிடிக்கலன்னும் போது அவரை பத்தி நம்ம எதுக்கு பேசணும்?” என்று நந்தினி சாமர்த்தியமாக அந்த பேச்சை முடித்துவிட நினைக்க.,
“அந்த முகுந்தன்தான் காரணம்” என்று சொல்லி நந்தினிக்கு பெரும் அதிர்ச்சி தந்தான் பாரதி. அவளுக்குப் பக்கென்றானது.
“அவன் என்ன சொன்னான்?” என்றவள் படபடப்பாக,
“அவங்க மாமா வுக்கு உடம்பு ரொம்ப சீரியஸா இருக்காம்… நான் அவரை வந்து பார்க்கணுமாம்?” என்றதும் நந்தினிக்கு முகுந்தன் திட்டம் ஒருவாறு புரிந்தது.
பாரதி மேலும், “உனக்கு தெரியுமா நந்தினி? அவர் எத்தனையோ தடவை என்னை பார்த்து பேச ட்ரை பண்ணாரு? ஏன் நான் ஜெயில இருந்த போது கூட தூது அனுப்பினாரு… நான்தான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” என்றவன் சொல்லவும்,
“அப்புறம் இப்போ மட்டும் ஏன் அதைப் பத்தி யோசிக்குற பாரதி… விடு… அவன் சொன்னா நம்ம போய் அவரை பார்க்கணுமா? தேவையில்லை… இதுல கூட அவன் என்ன சதி பண்றான்னு யாருக்கு தெரியும்” என்றாள்.
“நானும் அதான் நினைச்சேன்… ஆனா கிளம்பும் போது அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன?”
“நான் அவரை வந்து பார்த்தா அவன் துர்காவை கொண்டு வந்து என் முன்னாடி நிறுத்துறனாம்” என்றவன் சொன்ன நொடி அவள் உடலில் இரத்தமெல்லாம் வடிந்துவிட்டது போல உணர்ந்தாள். அதேநேரம் தன் அதிர்ச்சியைக் கோபம் கொண்டு மறைத்து,
“புல் ஷிட்… செத்து போனவளை எப்படி அவனால கொண்டு வந்து நிறுத்த முடியுமாம்… அவன் உன்னை முட்டாளாக்க பார்க்கிறான் பாரதி… உன் வீக்நெஸ் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு உன்னை யூஸ் பண்ணிக்க பார்க்கிறான்… அவனை நம்பாதே” என்றவள் படபடத்தாள்.
“நம்புறதா வேண்டாமாங்குற யோசனைக்கு இடையில முகுந்தன் சொன்னது ஒரு வேளை உண்மையா இருந்துட்டா?”
“நான்சென்ஸ்… அதெப்படி உண்மையா இருக்க முடியும்? அவதான் செத்து போயிட்டாளே”
“நீ நேரடியா பார்த்தியா என்ன?” என்றவன் கேட்க அவள் சட்டென்று என்ன சொல்வதென்று புரியாமல் விழித்தாள்.
“பதில் சொல்லு… நீ நேரடியா துர்காவோட டெட்பாடியை பார்த்தியா?”
“இல்ல… ஆனா பார்த்தவங்க இருக்காங்க இல்ல”
“யார் பார்த்தது ?”
“தியாகு சார்… அவருக்கு தெரியும்… நேரடியா அவர் அந்த விபத்தை பார்த்தவர்”
“ஆனா அவர் இத்தனை ஒரு வருஷத்துல ஒரு தடவை கூட துர்கா இறந்துட்டான்னு என்கிட்டே சொல்லவே இல்லையே”
“நீ மனசு கஷ்டபடுவேன்னு சொல்லாம மறைச்சு இருக்கலாம்” என்றவள் குரலை தாழ்த்தி சொல்லவும்,
“இருக்கலாம்… ஆனா அதுவும் இருக்க..லாம்..தானே… துர்கா இறந்துட்டான்னு அதை வைச்சு கன்பார்மா சொல்லிட முடியாது இல்ல” என்றவன் வாதம் செய்தான்.
“நீ ஏன் இவ்வளவு குழம்பற பாரதி… பேசாம தியாகு சார் கிட்ட போன்ல பேசு… உன்னோட குழப்பம் தீர்ந்துடும்” என்றவள் தன் பேசியை எடுக்க,
“போன்ல பேசுனா சரியா வராது… அவர்கிட்ட நான் நேர்ல பேசணும்” என்றான்.
“அவர் இப்போ திருச்சில இருக்காரு… நான் வேணா ப்ளைட் புக் பண்ணட்டுமா? நம்ம போய் பார்த்துட்டு வருவோம்”
“போவோம் நந்தினி… ஆனா அதுக்கு முன்னாடி நாம சிஎம்மை போய் பார்த்துட்டு வந்திருவோம்… அவருக்கு அப்படி என்கிட்ட என்னதான் வேணும்னு நான் தெரிஞ்சிக்கணும்… அவர் சாகிறதுக்கு முன்னாடி என் மனசுல இருக்க கேள்வியெல்லாம் அவர்கிட்ட கேட்கணும்” என்றவன் சொல்ல,
‘இதென்னடா வம்பா போச்சு’ என்று அவள் உள்ளூர கடுப்பானாள்.
“என்ன நந்தினி? போய் பார்த்துட்டு வருவோமோ?” என்றவன் மீண்டும் கேட்கவும்,
“ம்ம்ம்… போவோம்… ஆனா அதுக்கு முன்னாடி முகுந்தன் உன்கிட்ட சொன்னது உண்மைதானான்னு நம்ம தெரிஞ்சிக்கணும்” என்றாள்.
“ஒரு வேளை அவன் சொல்றது பொய்யா இருந்தா? எனக்கு எந்த பாதிப்பும் இல்ல… ஆனா உண்மையா இருந்தா நல்லதுதானே” என்றான்.
“யு ஆர் ரைட்… உண்மையா இருந்தா நல்லதுதான்… ஆனா அந்த டவுட்டை நம்ம கிளியர் பண்ணிக்கணும் இல்ல”
“எப்படி?”
“துர்கா உயிரோடதான் இருந்தான்னா அவளை நம்ம கூட வீடியோ காலில பேச வைக்க சொல்லுவோம்” என்றவள் தெளிவான யோசனையோடு சொல்ல அவளை அவன் ஆழமாக பார்த்தான்.
“இல்ல… நீ அறிவு மாமாவை பார்க்கிறதை நான் வேண்டாம்னு சொல்லல… ஆனா முகுந்தன் சொல்றதை நம்பி முட்டாளாகிட கூடாது… அதான்” என்றவள் விளக்கம் தர,
“ம்ம்ம்… அந்த நிமிஷ பதட்டத்துல இந்த யோசனை எனக்கு தோணல… இப்பவே நீ முகுந்தன்கிட்ட பேசு” என்றான்.
தானாக சென்று இந்த பிரச்சனையில் தலையை கொடுத்துவிட்டோமோ என்று தோன்றியது அவளுக்கு. பாரதி அறிவழகனைப் பார்ப்பதும் சிக்கலென்றால் அதைவிட பெரிய சிக்கல் துர்கா உயிருடன் இருப்பது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லையே. துர்கா இறந்துவிட்டாள்தானே?
பின் எதற்கு முகுந்தன் அப்படி சொல்ல வேண்டும். இவ்வாறாக தனக்குள்ளாகவே குழம்பி நின்றவளிடம்,
“என்னாச்சு நந்தினி? முகுந்தனுக்கு கால் பண்ணு” என்று பாரதி சொல்ல, “ம்ம்ம்” என்று தலையசைத்துவிட்டு அவள் தன் பேசியை எடுத்து முகுந்தனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“ஸ்பீக்கர்ல போடு… அந்த முகுந்தன் என்னதான் சொல்றான்னு கேட்போம்”
‘போச்சு… நந்தினி… நீ இன்னைக்கு நொந்துனி ஆக போற’ என்று அவள் புலம்பி கொண்டிருக்கும் போதே எதிர்புறத்தில் முகுந்தன் , “ம்ம்ம் சொல்லு நந்தினி” என்று உரையாடலை தொடங்கினான்.