You don't have javascript enabled
Monisha NovelsRomanceRomantic thrillerThriller

Vilakilla vithigal avan- 9

9

“வர்மா ஜீ க்கி ஜே ஹோ! வர்மா ஜீ க்கி ஜே ஹோ!”

தொண்டர் கூட்டங்களின் ஜே கோஷங்களால் அவ்விடமே பூகம்பம் வந்தது போல குலுங்கியது. அக்கூட்டத்தைச் சமாளிக்க இயலாமல் பாதுகாவலர்கள் திக்கித் திணறி அவர்களை வாயிலின் இரும்பு கதவுக்கு வெளியே நிறுத்திப் பிடித்த அதேநேரம் சேஷாத்ரியின் கார் மட்டும் எவ்வித இடையூறுமின்றி ராஜபோக வசதி படைத்த அந்த பங்களாவின் வாயிலினுள் அனுமதிக்கப்பட்டது.

முதல் மாடியின் பலகணியிலிருந்து தொண்டர்களுக்கு கைகளை அசைத்தார் துணை பிரதமர் கோபால் வர்மா அவர்கள்!

தவறாத உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் தீவிர பிரம்மச்சரியம் என்று அறுபது வயதைக் கடந்தும் வர்மா கட்டுக்கோப்பான உடலமைப்பும் இளமையான தோற்றமும் கொண்டவராக இருந்தார்.

எனினும் வெள்ளை வெளேரென்று இருந்த அவரது தாடியும் மீசையும்தான் கொஞ்சம் அவரை முதிர்ச்சியாகக் காட்டியது. 

டெமாக்ரட்டிக் பாரத் கட்சியின் தற்போதைய செயலாளர் வர்மா ஜீதான். மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அக்கட்சி இயங்குவது மதக்கொள்கையின் அடிப்படையில்தான்.

மூத்த அரசியல்வாதியான ஷிவேஷ் பாண்டேவை பிரதமர் பதவியில் பொம்மை போல அமர்த்திவிட்டு வர்மா அவர்கள் ஆட்சியின் கடிவாளத்தை தன்வசம் வைத்ததிருந்தார்.

 எதிர்க்கட்சிகளும் பலவீனமாக இருந்ததால் வர்மா ஜீயை  எதிர்த்து கேள்வி கேட்க ஒருவருமில்லை. இந்தியாவில் மிக பெரிய அரசியல் சக்தியாக ஒரு தனிமனிதர் வர்மா உருவெடுத்துக் கொண்டிருந்தார். அவரது அனுமதியின்றி மத்தியிலும் மாநிலத்திலும் எந்தவொரு முக்கிய நிகழ்வும் நடைபெறாது.

வர்மா ஜீயின் அரசியல் சூட்சமங்களில் மிக முக்கியமானது மதக்கலவரங்கள்தான். எக்காலத்திலும் ஆட்சி பீடங்களை கவிழ்க்க மதக்கலவரங்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.

ஆனால் இந்தக் கலவரங்கள் வடமாநிலங்களில் ஏற்படுத்தும் பாதிப்பில் பாதியைக் கூட தென்மாநிலங்களில் ஏற்படுத்த முடிவதில்லை என்பதுதான் துயரம்.

டி.பி கட்சி தென்மாநிலங்களைப் பொறுத்தவரைச் செல்லாக்காசுதான். தங்கள் கட்சியின் பலத்தைத் தென்மாநிலங்களை நிரூபிக்க வர்மா ஜீ தம் கவனம் முழுவதையும் தென்திசை பக்கம் திருப்பியிருந்தார்.

பலவிதமான சூழ்ச்சிகள் செய்து தென்மாநிலங்களிலும் தன்னுடைய ஆக்கிரமிப்புகளை தொடங்கினார். அதில் மிக முக்கியமாகத் தென்மாநில கட்சிகளுக்கு நெருக்கடி தருவது. அதிகாரத்தை பிடுங்குவது போன்ற வேலைகளைச் செய்தார்.

அதுவும் வர்மா ஜீக்கு தமிழ் நாட்டு அரசியல் மீது தனிப்பட்ட ஆர்வமிருந்தது. கிடைக்காத பொருளின் மீதுதான் நமக்கு விருப்பமும் ஆர்வமும் பிறக்கும். அந்த வகையில் தேசிய கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் முன்னேறிய மாநிலம் தமிழ் நாடு. தீபம் கட்சியை தவிர வேறெந்த கட்சிக்கும் தமிழ் நாட்டில் பெரும்பான்மையே கிட்டியதில்லை.

பிரதிநிதிகள் யாரென்று கூட தெரியாமல் தீபம் சின்னத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஒட்டு போடுமளவுக்குத் தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரே கட்சி தீபம் கட்சிதான்!

அறிவழகனின் குடும்ப சொத்தாகவே தமிழ் நாடு மாறிவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு தீபம் கட்சியின் ஆதிக்கம் ஆலமரமாக வேரூன்றி விழுது விட்டு வளர்ந்திருந்தது. எப்படியாவது தீபம் கட்சியின் செல்வாக்கை உடைக்க எண்ணிய வர்மா ஜீ தம் சூழ்ச்சிகளுக்கு சேஷாத்ரியை பயன்படுத்திக் கொண்டார்.

சேஷாத்ரியும் டில்லியில் பிறந்தவர். ஆனால் அறிவழகனின் தங்கையை மணந்ததால் தமிழ் நாட்டு அரசியலில் அவர் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த வகையில் வர்மாவின் வேலை மிகவும் சுலபமானது. சேஷாத்ரிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து தன்  சொற்படியெல்லாம் ஆட்டிவித்தார். அதோடு தமிழ் நாட்டின் டெமாக்ரடிக் பாரத் கட்சியின் முக்கிய பிரதிநிதியான வேதநாயகத்தின் மகளைத் தீபம் கட்சியின் எதிர்காலமாக விளங்கும் முகுந்தனுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தைத் தீட்டியதும் வர்மாதான்.

முகுந்தனை முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வருவதன் மூலம் தமது கட்சியின் ஆதிக்கத்தைத் தமிழ் நாட்டில் நிர்மானித்துவிடலாம் என்பதுதான் வர்மாவின் ராஜதந்திரம்!

முகுந்தனை முகப்பறையில் காத்திருக்கச் சொல்லிவிட்டு, வர்மாவின் அலுவலக அறையில் வெகுநேரம் சேஷாத்ரி ரகசியப் பேச்சு வார்த்தை நடத்தினார்.

“கண்டிப்பா நம்ம நினைக்குறது சீக்கிரம் நடக்கும் ஜீ…  முகுந்தன் தமிழ்நாட்டு சி எம் ஆகிடுவான்” என்று கை கட்டி கூனி குறுகியபடி சேஷாத்ரி பேசிக் கொண்டிருக்க,

வர்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. பரபரப்பாக நடந்து கொண்டே பேசினார்.

“அதெல்லாம் இருக்கட்டும்… அந்த பொண்ணு… ஆ… அவ பேர் என்ன… எஸ் நந்தினி… அவ யாரு?” என்ற வர்மாஜீயின் கேள்வியில் அதீத கொந்தளிப்பு!

சேஷாத்ரி என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திகைத்து நிற்க, மேலும் வர்மா துபாய் நட்சத்திர விடுதியின் புகைப்படங்களைத் தூக்கிவீசிவிட்டு,

“இந்தியால இருக்க பிஸ்ன்ஸ்… துபாய் செவன் ஸ்டார் ஹோட்டல்… இதெல்லாத்துக்கும் அந்த பொண்ணுக்கு மணி சோர்ஸ் எங்கிருந்து வருது… வாட் இஸ் ஹெர் பேக் கிரௌண்ட்? வூ இஸ் ஷீ?” என்று வர்மா தீவிரமான முகபாவத்தில் கேட்க சேஷாத்ரி பதில் சொல்ல முடியாமல் விழித்தார்.

“ஒகே நீங்க பதில் சொல்ல வேண்டாம்… நானே விசாரிச்சு தெரிஞ்சிக்கிறேன்” என்றவர் பற்கள் நறநறக்க கூற,

சேஷாத்ரி படபடப்பாக, “இல்ல வர்மா ஜீ… அவ ஒரு அனாதை பொண்ணு… ஆர்ஃபனேஜ்லதான் வளர்ந்தா… அவளுக்கு நானும் மதியும்தான் ஸ்பான்ஸர் பண்ணோம்” என்றவர் தயங்கித் தயங்கி உரைக்க, வர்மா ஜீ அவரை கூர்மையாக அளவெடுத்தபடி,

“உங்க குடும்பத்துக்கும் நந்தினிக்கும் அப்போ எந்த சம்பந்தமும் இல்லை… அப்படித்தானே?” என்றார். 

“இல்ல… அது வந்து… நந்தினியை நாங்க தத்து எடுத்துக்கிட்டோம்” என்று சொல்லும் போதே அவர் தொண்டைக் குழியில் ஏதோ அடைக்கும் உணர்வு. வார்த்தைகளை வெளிக்கொணர அவர் ரொம்பவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

“அப்போ இந்த ஹோட்டலுக்கான பணம் எல்லாம்”

“சத்தியமா இல்ல வர்மா ஜீ… அவளுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்துதுன்னு எங்களுக்கு எதுவும் தெரியாது”

வர்மாவின் முறைப்பில் சேஷாத்ரி வெடுவெடுத்து நின்றார்.  

“நான் சொல்றது உண்மைதான் வர்மா ஜீ… உண்மையிலேயே எப்படி இதெல்லாம் அவ பண்றான்னு எங்களுக்கும் தெரியல… தீபம் நெட்வொர்க் ஷேர்ஸ் கூட அவ பேர்ல மாத்தி இருக்கா… அதுவும் எங்க சம்மதம் இல்லாமதான்”  

வர்மா ஜீ முகத்தில் சிந்தனை ரேகைகள். யோசனையில் ஆழ்ந்தவர் பின் மெதுவாக, “ஒரு வேளை அந்த நாற்பத்து நாலாயிரம் கோடிக்கு உன்னோட தத்து பொண்ணுக்கும் சம்பந்தம் இருக்குமா?” என்று வினவ, சேஷாத்ரிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இதுநாள் வரை இது பற்றி அவர் யோசிக்கவே இல்லை.

நந்தினி ஒரு கம்புயூட்டர் ஜீனியஸ். அவளுக்கும் அந்தச்  சம்பவத்திற்கும் தொடர்பு இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தனியாளாக அவள் இப்படி ஒரு விஷயத்தைச் செய்திருக்க முடியுமா?

இவ்வாறாக அவர் யோசித்திருக்கும் போதே வர்மா அவரிடம், “நான் நந்தினியை மீட் பண்ணணும்… அரேஞ் பண்ணுங்க சேஷாத்ரி” என்று வர்மா கூறியதைக் கேட்டு சேஷாத்ரியின் முகம் வெளுத்துப் போனது.

“எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு… நீங்க கிளம்புங்க… நெக்ஸ்ட் மீட்டிங் உங்க வளர்ப்பு மகளோடதான்” என்று தன் பேச்சை முடித்தவர்,

“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… உங்க மீடியா வேதநாயகம் சூசைட் கேசை ரொம்ப தோண்டுறாங்க… தேவையில்லாத விஷயத்தோடு அந்த கேஸ் இணைச்சு பேசறாங்க… அதை நிறுத்த சொல்லுங்க”

“அப்போ வேதநாயகம் தற்கொலை பத்தி விசாரிக்க வேண்டாமா?” என்ற சேஷாத்ரியின் கேள்விக்கு உக்கிரமாக முறைத்தவர், 

“அதை பத்தி விசாரிச்சா ஷர்மா கேஸ் அந்த டாக்டர் கேஸ் இதெல்லாத்தையும் திரும்பி முதல இருந்து தோண்டுவாங்க… எனக்கு அதுல விருப்பமில்ல” என்று கறாராகக் கூறிவிட்டு வர்மா அங்கிருந்து அகன்றுவிட, சேஷாத்ரி குழப்பமாக வெளியே காத்திருந்த மகனை அழைத்து கொண்டு நடந்தார்.

காரில் ஏறியதிலிருந்து தந்தை மௌனமாக வருவதைக் கண்டவன், “வர்மா ஜீ என்னதான் ப்பா சொன்னாரு?” என்று கேட்க,

“நந்தினியை யாருன்னு கேட்டாரு?” என்றார்.

“சொல்லிட்டீங்களா?” என்றவன் பதட்டமாக, அவர் இல்லையென்பது போல தலையசைத்துவிட்டு வர்மா சொன்னவற்றை முழுவதுமாக சொல்லி முடித்தார். 

முகுந்தன் முகம் கடுகடுத்தது.

“அவளை கருவிலேயே அழிச்சிருக்கணும்… நீங்க பாவம் பார்த்ததுனாலதான் இப்போ இவ்வளவு பிரச்சனையும்… இப்ப கூட ஒன்னு இல்ல… அவளை கொன்னுடலாம் ப்பா… கண்டம் துண்டமா ஆள் அடையாளமே தெரியாத மாதிரி வெட்டி கொன்னுடலாம்” அவன் வெறியோடு சீற, சேஷாத்ரி அவனைக் கடுப்பாகப் பார்த்து.    

“நந்தினியை கொன்னுட்டா பிரச்சனை முடிஞ்சுதா? அவ இது எதையும் தனியா செய்யல… அவளால தனியா செய்யவும் முடியாது… அவளுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க… முதல அவங்களை கண்டுபிடிக்கணும்” என்றார். ஆனால் அவர் சொல்வதை எல்லாம் பொறுமையாக அலசி ஆராயும் மனநிலையில் அவன் இல்லை. தன் முதலமைச்சர் கனவு களைந்துவிடுமோ என்ற கவலை மட்டும்தான் அவனுக்கு!  

“அதுக்குள்ள அவ நம்ம திட்டத்தை எல்லாம் முறியடிச்சிடுவா ப்பா?” என்றவன் படபடத்துவிட்டு,

“உங்களுக்கு தெரியுமா… ப்ரண்ட்ஸோட சிம்லா டூர் வந்த கிருஷை காணோம்… அவன் எங்க போனா என்ன ஆனான்னு ஒரு தகவலும் தெரியல” என்றதும் சேஷாத்ரிக்கு தூக்கி வாரிபோட்டது.  

“என்ன முகுந்த் சொல்ற?”

“ஆமா ப்பா… நான் தீபம் சேனல் ஷேர் விஷயமா பல முறை அவனுக்கு ஃபோன் ட்ரை பண்ணிட்டேன் கநெக்ட் ஆகல… ஒரு வேளை நந்தனி” என்று முகுந்தன் தம் வார்த்தைகளை முடிப்பதற்குள்ளாக,

“எல்லாமே உன்னாலதான் முகுந்த்… சும்மா இல்லாம பாரதி மேல நீ கை வைச்சதாலதான் இவ்வளவு பிரச்சனையும்” என்று அவர் எரிச்சலுற,

“ஐயோ! சத்தியமா இல்ல ப்பா… நான் அந்த பாரதியை கொல்ல ட்ரை பண்ணல… உங்களுக்கு தெரியாதா? நான் உங்ககிட்ட கேட்காம எதுவும் செய்ய மாட்டேன்னு” என்று மறுதலித்தான்.

 அவனைக் குழப்பமாக ஏறிட்டவர், “அப்போ ஏன் நீ அவ வீட்டுல அந்தளவு கலட்டா பண்ணும் போது அமைதியா இருந்த” என்று வினவ,  

“அந்த பிடாரி நான் சொன்னா நம்பாது ப்பா… பார்த்தீங்க இல்ல… அவ யார் சொல்றதையும் காதுல வாங்குற எண்ணத்துலயே இல்ல… அப்படியே வெறிபிடிச்சவ மாதிரி எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைச்சிட்டு இருந்தா” என்றவன் படு எரிச்சலாக உரைத்தான். கொதிகலனாக அவன் உள்ளுர தகித்து கொண்டிருந்தான்.

“ஆனா நான் இனிமே சும்மா இருக்க போறதில்ல… அந்த  பாரதியை நான் தூக்குறேன்… அவன்தானே அவளோட வீக்னஸ்… அவனை தூக்குனா அவ தானா வழிக்கு வருவா” என்று முகுந்தன் தான் நினைத்ததை சொல்லி முடித்துச் செயலாற்றுவதற்கு முன்னதாக அவன் எண்ணத்தை முறியடித்திருந்தாள். அதுதான் நந்தினி!

*****

“கம்மான் பாரதி… ரொம்ப யோசிக்காதீங்க… இனிமே நீங்க என் கூட இங்கதான் இருக்க போறீங்க” என்றவள் சாதாரணமாகச் சொல்லிவிட்டு அறைக்கதவைத் திறந்து வெளியேறினாள்.

பாரதிக்கு ஒன்றுமே புரியவில்லை. இதற்கு முன் அவளைப் பார்த்ததாகக் கூட அவனுக்கு நினைவில்லை. அப்படியிருக்க என்னவோ ரொம்பவும் தெரிந்தது போல அவள் பேசுவதும் சிரிப்பதும் அவனுக்குக் குழப்பத்தை உண்டுபண்ணியது.

சற்று முன், “ஐம் ஹம் நந்தினி” என்று தன் கரத்தை நீட்டியளிடம்,

“சாரி… எனக்கு உங்களை யாருன்னு தெரியல… எப்படி நான் இங்க வந்தேன்… என் ப்ரெண்ட் ஜமால்… நான் அவன் வீட்டுலதானே இருந்தேன்” என்று யோசனை குறியோடு அவன் வரிசைக்கட்டி நடந்தவற்றை அனைத்தையும் நினைவுக்கூற, அவளோ அலட்டிக் கொள்ளாமல் அவன் இங்கேதான் இருக்க வேண்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் குரலில் அதிகாரம் இல்லாவிட்டாலும் தீர்க்கமாக ஒலித்தது.  

அவளைப் பின்தொடர்ந்து வந்தவன் பிரமாண்டமான அந்த வீட்டின் அமைப்பைக் கண்டு ஒரு நொடி வியந்தாலும் அங்கே இருப்பதில் அவனுக்குத் துளி கூட உடன்பாடில்லை.

“என்னால இங்க இருக்க முடியாது… நான் போகணும்” என்று

அந்த பங்களாவின் வாயிலை கவனித்து அத்திசை நோக்கி அவன் விறுவிறுவென நடக்க, “சாரி பாரதி… நீ இங்கிருந்து போக முடியாது… போனா உனக்குத்தான் ஆபத்து” என்று அவள் தம் கரத்தை நீட்டி மறித்தாள்.  

“நீங்க யாருங்க… நான் ஏங்க இங்க இருக்கணும்? என்னால இருக்க முடியாது” என்று கேட்டுவிட்டு அவளைப் பொருட்டாக மதியாமல் அவன் கடந்து சென்று சில அடிதூரங்கள் எடுத்து வைப்பதற்குள் அவள் கைப்பேசியில் ஒரு பாடல் ஒலித்தது.  

“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா

சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி

முத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ

இது பார் கன்னத்து முத்துமொன்று”

அந்த பாரதியின் கவிதை வரிகளை கேட்டதில் அதிர்ச்சியடைந்து அவள் புறம் திரும்பினான். தன் கல்லூரி போட்டியில் அவன் மேடையில் அவனே இசைத்து பாடிய கவிதை அது!

அதில் ஒரு சிறு துணுக்குதான் தற்போது அவள் கைப்பேசியில் இசைத்தது.

“இந்த பாட்டு… இது என் வாய்ஸ்… எப்படி இது உங்ககிட்ட” என்று அவன் நம்பமுடியாமல் கேள்வி எழுப்ப, அவளோ அந்த பாடலை கேட்டு தியான நிலைக்குச் சென்றது போல தம் விழிகளை மூடியபடி,

“என்ன வார்டிங்கஸ் இல்ல பாரதி! சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா… சாத்திரம் ஏதுக்கடீ… அதுவும் இந்த பாட்டை உன் வாய்ஸ்ல கேட்கும் போது நான் அப்படியே மெய்மறந்து போயிடுவேன் தெரியுமா?

 உன் கைவிரல்கள் என் கன்னங்களை வருட… அப்படியே என் கண்கள் சொருகிடும்… வேற எதிலயும் கிடைக்காத போதை… உன் குரலில் இருக்கு…  இத்தனை வருஷமா உன் குரலோடவே நான் வாழ்ந்திட்டு இருக்கேன் பாரதி” என்று சொல்லி அவள் விழிகளை மலர்த்தி அவனை ஆழ்ந்து பார்த்தபடி நெருங்கினாள்.     

அவளுக்கும் தனக்கும் ஏதோ ஒரு ஆழமான உறவு இருப்பது போல உணர்ந்தான். அவனையும் அறியாமல் ஒருமையில் அவளிடம், “என்னை உனக்கு எப்படி தெரியும்?” என்றவன் கேட்க,  

“என்னை உனக்கு தெரியலயா பாரதி?” என்றபடி அவனை நெருங்கியவளின் மூச்சுக் காற்று அவனைத் தீண்டியது.

அந்த நொடி உணர்ச்சிவசத்தால் உந்தப்பட்டு அவளது விழிகளின் விசையில் கட்டுண்ட போதும் அவன் மனம் விடுத்த எச்சரிக்கையில் தன்னை மீட்டுக் கொண்டு,

“இல்ல எனக்கு உன்னை… உங்களை தெரியல” அவன் விலக எத்தனிக்கும் போது அவன் சட்டை காலரை பற்றி அருகில் இழுத்தவள்,

“பாரதி… நான் உன் துர்கா… என்னை அடையாளம் தெரியலயா?” என்றாள் கண்ணீர் மல்க!

அதிர்ச்சியில் உலகமே சுழலாமல் நின்றது போல அவன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

அந்த முகத்திற்கும் இந்த முகத்திற்கும் துளி கூட ஒற்றுமை இல்லை. எனினும் அவள் சொன்னது உண்மையாக இருக்குமோ? என்று ஒரு சிறிய சந்தேகம் அவன் உள்ளத்தில் எழாமல் இல்லை.

பார்க்கும் காட்சிகளும் கேட்கும் வார்த்தைகளும் கூட பொய்யாகப் போகலாம். ஆனால் அவள் மீது அவன் கொண்ட காதல் உணர்வு… அது பொய்யாகாது இல்லையா? அவனின் அந்த ஆழமான காதல் உணர்வோடுதான் நந்தினி விளையாடினாள்.

2 thoughts on “Vilakilla vithigal avan- 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content