Virus Attack – Pre-Final
வைரஸ் அட்டாக்-17
நடு நாயகமாக அவரை உட்கார வைத்து சுற்றிலும் நின்றுகொண்டு, வளைத்து வளைத்து கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளிக்கொண்டிருந்த நான்கைந்து சி.பி.ஐ அதிகாரிகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி ஓய்ந்து போனார் நிர்மலானந்தா.
அவருடைய ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளிலும் ‘ரெய்ட்… ரெய்ட்… ரெய்ட்’தான்.
பொருளாதார குற்றங்கள், ஆள் கடத்தல், கொலை முயற்சி என ஒன்றில்லை இரண்டில்லை கிட்டத்தட்ட நாற்பது பிரிவுகளில் அவர்மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அவற்றின் சம்பந்தமான விசாரணைதான் நடந்துகொண்டிருந்தது. முறைப்படி காவல்துறை அவரை கைது செய்திருக்க, பதினைந்துநாள் ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டிருந்தார் அவர்.
‘இருந்திருந்து இப்பொழுது என்று பார்த்துதானா இந்த நிலை வர வேண்டும்?’ என மனம் நொந்தார் நிம்மி.
சிறை ஒன்றும் அவருக்குப் புதிதில்லை. முன்பாவது அவர் செய்யாத குற்றத்திற்குச் சிறை சென்றார். ஆனால் இப்பொழுது அவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்துமே உண்மைதான்.
இவர் செய்த மூளைச் சலவையினால் பல இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு இவரது ஆசிரமமே கதி என்று கிடந்தாலும் யாரையும் இவர் வற்புறுத்தி அங்கே தங்க வைத்திருக்கவில்லை. யாரையும் கடத்தியும் வந்திருக்கவில்லை.
மற்றபடி, உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் அவருக்குப் பண வரவு இருக்க, கருப்பு வெள்ளை என அதைப் பதுக்கி வைக்க, பாதுகாக்க அரசியல்வாதிகள் அதிகாரிகள் எனப் பலரின் துணையும் அவருக்குத் தேவையாக இருக்க, உலக நியதிப் படி அது பொருளாதார குற்றங்களில் முடிந்தது உண்மைதான்.
முதன்முறை அவர் சிறை சென்றதற்குக் காரணம் தந்தையென்றால் இந்த முறை அந்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது அவரது மகன் விஸ்வா.
அந்த ஆசிரமத்தின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவனுக்கு அத்துப்படி என்பதினால் விடுபட முடியாத அளவுக்கு அவரை வகையாகச் சிக்கவைத்துவிட்டான் அவன்.
தந்தையைப் பழிவாங்க அவருக்கு ஆப்பாக மகனைப் பயன்படுத்த எண்ணியவர் அவரையும் அறியாமல் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதுதான் கொடுமையிலும் கொடுமையாகிப்போனது அவருக்கு.
இதிலிருந்து எப்படி விடுபடுவது எனத் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார் நிர்மலானந்தா.
*
உண்மையிலேயே நிர்மலானந்தாவைத் தேடித்தான் தனது தனி விமானம் மூலம் விஸ்வா அந்த காட்டுக்குள் வந்ததே.
சம்பந்தமே இல்லாமல் நடுக்காட்டிலிருந்து கிளம்பிய சிவப்பு நிற புகை தேவையில்லாத சந்தேகத்தை கொடுக்க, அங்கேயே தன் விமானத்தைத் தரை இறக்கியவன் எதிர்பாராதவிதமாக மேனகாவை அங்கே பார்க்கவும் உண்மையிலேயே ஆடித்தான் போனான் விஸ்வா.
அதுவும் அவளது இதழ்கள் அவனுடைய பெயரை உரிமையுடன் உச்சரிக்கவும் அடுத்த நொடி கொஞ்சமும் தயங்காமல் அதைச் சிறை செய்தவன் அவளை மொத்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தான்.
அவளுடைய இந்த அனாதரவான நிலைக்குக் காரணமான தனது அப்பாவான சந்திரமௌலியையும் சரி, குருவான நிர்மலானந்தாவையும் சரி, லேசில் விடத் தயாராக இல்லை அவன்.
உண்மையிலேயே இருவருமே ஆளுக்கு ஒரு விதத்தில் அவனுக்கு இன்னல் செய்தவர்கள்தான். மௌலிக்கு இதுவரை செய்ததே போதும் என்று எண்ணியிருந்தவன், தெரிந்தோ தெரியாமலோ நிர்மலானந்தா இதுவரை அவனுக்குச் செய்திருந்த நன்மையைக் கருத்தில் கொண்டு அவரை அப்படியே விட்டு விடலாம் என்ற மன நிலையிலும்தான் இருந்தான். ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு அப்பாவி பெண்ணிற்கு இப்படி ஒரு தீங்கு நினைத்ததைக் கொஞ்சம் பொறுக்க முடியவில்லை விஸ்வாவால்.
ஒருபுறம் நிர்மலானந்தாவை ‘வைத்து’ செய்து கொண்டிருந்தான் என்றால் மற்றொருபுறம் சந்திரமௌலியையும் விட்டு வைக்க வில்லை அவன்.
மகன் ஆடும் ஆட்டத்தை நிறுத்த வழி தெரியாமல் விழி பிதுங்கிப் போனார் அவர். அந்த அளவிற்கு விஸ்வா அவரை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான் என்றால் அது மிகையில்லை.
மிகச் சொற்ப அளவிலான சொத்துக்களை மட்டும் மௌலிக்கும் அவரது இணைவிக்கும் விட்டுவைத்துவிட்டு அனேகமாக மொத்த சொத்துக்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான் அவன்.
மேனகா என்ற ஒருத்தி அவனுடைய வாழ்க்கைக்குள் வராமலேயே போயிருந்தால் இந்த அளவுக்கு கூட சந்திரமௌலியை அவனால் எதிர்கொண்டிருக்கவே முடியாமல் போயிருக்கும். அதனால் உண்டாகப்போகும் விபரீதத்தை உணராமல்.
காரணம் நேஹா!
படிப்பை முடித்த கையுடன் பல புதிய திட்டங்களுடன் இளமையின் வேகமும் துள்ளலுமாக அவர்களது வர்த்தக சாம்ராஜ்ஜியத்திற்குள் கால் வைத்த சமயம், அவனுடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க ஏதுவாக, அறிவும் அழகும் பேச்சு சாதுரியமும் ஒருங்கே அமையப்பெற்றிருந்த படு திறமைசாலியான தன் பிரத்தியேக காரியதரிசியாக இருந்த நேஹாவையே அவனுக்குத் துணையாக நியமித்தார் சந்திரமௌலி.
அவன் எள் என்பதற்கு முன்பாக எண்ணெய்யாக நின்றாள் அவள். ஒவ்வொரு வேலையிலும் அவ்வளவு கனகச்சிதமாக, அவனுடைய எண்ணங்களுக்கு அவள் செயல் வடிவம் கொடுக்க, வெகு இனிமையுடன் பழகும் அவளது பாங்கும் சேர்ந்துகொள்ள, அவனையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு அவளிடம் உண்டாகிவிட்டது விஸ்வாவுக்கு.
இப்படி ஒருத்தி தனக்கு நிரந்தர துணையாக இருந்தால் உலக பணக்காரர்களின் வரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கும் தங்கள் பெயரை முதல் இடத்தில் சுலபமாகக் கொண்டு வந்து நிறுத்தலாம் என்ற ஒரு மூடத்தனமான நம்பிக்கையில், தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தத் தகுந்த தருணத்தை எதிர்பார்த்து அவன் காத்திருக்க, அந்த நேரம் பார்த்து தோதாக வந்து சேர்ந்தது அந்த வருடத்தின் ‘வேலண்டைன்ஸ் டே’ வேறு.
மிகப் பெரிய கோலாகல கொண்டாட்டத்துடன், தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தி அவளுக்கு ஆச்சரியம் கொடுக்க எண்ணி, அன்றைய தினம் அவர்களுடைய சென்னை விருந்தினர் மாளிகையில், அவனுடைய நண்பர்கள் அத்தனைப்பேரையும் அழைத்து, ஒரு பிரம்மாண்ட ‘பார்ட்டி’க்கு ஏற்பாடு செய்திருந்தான் அவன்.
‘பார்ட்டி’ என்றெல்லாம் அவளிடம் தெரிவித்திருக்கவில்லை. லண்டனிலிருந்து அவனுடைய சில முக்கிய நண்பர்கள் அங்கே வரவிருப்பதாகவும் அவர்களை முறைப்படி வரவேற்கவேண்டுமென்றும் அவளிடம் சொல்லி அங்கே வரச் சொல்லியிருந்தான் அவ்வளவுதான்.
இப்படிப்பட்ட ஒருவன் அவளைக் காதலிப்பதாகச் சொன்னால் நிச்சயம் அது அவளுக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சியாகத்தான் இருக்கும். கட்டாயம் அதை அவள் ஏற்றுக்கொள்வாள் எனக் கண்மூடித்தனமாக நம்பினான் அவன்.
அவளைப் பொறுத்தவரை அது எவ்வளவு அபத்தம் என்பதை அப்பொழுது அறிந்திருக்கவில்லை விஸ்வா.
அங்குதான், அன்றுதான் ஆரம்பித்தது பிரச்சனை.
‘பிங்க் நிற லாங்க் கவுன்’ அணிந்து அன்று அவள் அந்த ‘பார்ட்டி ஹால்’லின் உள்ளே நுழையவும் ஒரு தேவதையே மிதந்து வந்தது போல் தோன்றியது விஸ்வாவுக்கு.
உள்ளே நுழைந்ததுமே அப்படி ஒரு அதிர்ச்சி தெரிந்தது அவளுடைய முகத்தில். ஆனாலும் அதைக் காண்பித்துக்கொள்ளாமல் இயல்பாக இருக்க வெகுவாக முயற்சி செய்தாள் நேஹா.
அது புரியவும் உள்ளுக்குள்ளேயே அதை ரசித்துச் சிரித்துக்கொண்டான் அவன்.
காதலைச் சொல்லும்பொழுது அவளது விரலில் அணிவிக்கவென அவன் வாங்கி வைத்திருந்த வைர மோதிரம் அடங்கிய சிறு நகைப்பெட்டி அவனது ‘கோட் பக்கெட்’டுக்குள் பத்திரமாக இருக்க, அவனுடைய நண்பர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகம் செய்துவைத்தான் அவன். அதந் பின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கேளிக்கைகள் என அங்கே தொடர்ந்துகொண்டிருக்க, சரியாக அவளிடம் அவன் தன் மனதைத் திறக்கும் நேரம் பார்த்து அப்படி ஒரு செய்தி வந்தது அவனுக்குக் கைப்பேசியில்.
அடுத்த நொடியே, போட்டது போட்டபடி அனைத்தையும் மறந்து அங்கிருந்து பதறி ஓடினான் விஸ்வா, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவனுடைய அம்மாவை அனுமதித்திருந்த அவர்களுக்குச் சொந்தமான மருத்துவமனையை நோக்கி.
அதன்பிறகு இரண்டு தினங்கள் ஆனது, அவனுடைய அம்மா உயிர் பிழைத்துக் கண்விழிக்க. அது வரையிலுமே பித்து பிடித்த நிலையில் தான் இருந்தான் விஸ்வா.
அவனுக்கு அவனுடைய அம்மா தான் எல்லாமும். பிறகுதான் மற்ற எதுவுமே. மிக இனிமையான பெண்மணி. அவனுக்கு ஒரு நெருங்கிய தோழி அவர் என்றால் அது மிகையில்லை.
சொல்லப்போனால் அவன் நேஹாவை காதலிப்பதையும் அவளிடம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்தவிருப்பதையும் அவரிடம் சொல்லி, ‘ஆல் த பெஸ்ட்’ என்கிற வார்த்தைகள் மூலம் மறைமுகமாக அவர் தன் அங்கீகாரத்தைத் தெரிவித்த பின்தான் அந்த ‘பார்ட்டி’க்கு அவன் ஏற்பாடு செய்ததே.
காதல், திருமணம் என்பதெல்லாம் அவரவர் விருப்பம் என்கிற வழியை அவர்கள் பின்பற்றுவதால் இதெல்லாம் வெகு இயல்பாக இருந்தது அவர்களுக்குள்.
உண்மையில், அவனுடைய அப்பாவிடம் கூட இதை அவன் சொல்லியிருப்பான்தான். ஆனால் வியாபார நிமித்தம் அவர் உலகை சுற்றிக்கொண்டே இருப்பதால் அவரை நேரில் சந்திக்க அவனுக்கு நேரம் அமையாமல் போக, தொலைப்பேசி மூலம், ஒரு செய்தியாக இது போன்ற வாழ்க்கையின் முக்கியமான ஒரு விஷயத்தை அவரிடம் சொல்ல விரும்பவில்லை அவன் அவ்வளவுதான்.
முந்தைய இரவில் கூட மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாகப் பார்த்த அவனுடைய அம்மாவின் இந்த திடீர் நிலைமைக்குக் காரணம் என்னவென்று புரியாமல் தவித்தான் விஸ்வா.
மேலும் அவனுடைய அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்ததுவிட்டு, விஸ்வா அங்கே வருவதற்கு முன்பாகவே அங்கிருந்து சென்றிருந்தார் மௌலி.
முன்னறிவிப்பு ஏதுமின்றி அவசரமாக அவர் சென்னை வந்ததே அவனுக்கு புதிய தகவலாக இருக்க, இது வரையிலும் கூட அவர் அவனைத் தொடர்புகொள்ளாமல் இருக்கவும், அவன் குழம்பித் தவிக்க, கண் விழித்ததும் அவனுடைய அம்மா சொன்ன செய்தியில் இந்த பூமியே பிளந்ததுபோல்தான் இருந்தது விஸ்வாவுக்கு.
அதாவது, அவனுடைய அப்பா தனது இரண்டாவது திருமணத்தை அதுவும் சட்டப்படி செய்துகொள்ள எழுத்துப்பூர்வமாக அவனுடைய அம்மாவின் சம்மதத்தைக் கேட்டதுதான் அவரது இந்த நிலைமைக்குக் காரணம் என்பது தெரியவந்தது அவனுக்கு.
ஆனால் அது மட்டும் அவனுடைய அம்மாவின் இந்த நிலைமைக்கும் அவனது இந்த உச்சபட்ச அதிர்ச்சிக்கும் காரணம் இல்லை.
ஏனென்றால் அவனுடைய அப்பாவின் ராஸலீலைகள் பற்றி அவர்கள் இருவருக்குமே நன்றாகத் தெரியும். உண்மையான காரணம் என்னவென்றால் அவனுடைய அப்பா திருமணம் செய்ய விரும்புவது நேஹாவை என்பதுதான்.
அதற்கு, மகனின் மனதைத் தெளிவாக விளக்கி அவனுடைய அம்மா அதற்கு முற்றிலும் மறுத்திருக்க, விதிர்விதிர்த்துப்போன சந்திரமௌலி நேஹாவுடன் ஏற்கனவே நெருங்கிய தொடர்பில் இருப்பதை அவரிடம் வெளிப்படையாகச் சொல்லி விட்டார். அவ்வளவு அருவருப்பாக உணர்ந்தார் அந்த பெண்மணி.
இதுவரை, இல்லை கிடையாது போன்ற வார்த்தையையே கேட்டறியாத தங்கள் மகன் அவன் வாழ்க்கையில் முதன்முறை கேவலமாக அதுவும் அவனுடைய அப்பாவிடமே தோற்றது அவனிடம் எத்தகைய விளைவை உண்டாக்குமோ என்ற கவலையும் அதிர்ச்சியும்தான், கை கால் செயலிழந்துபோய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அவரை அனுமதிக்க வேண்டிய சூழ்நிலையில் கொண்டுவந்து விட்டிருந்தது.
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்க, உடைந்து போனான் விஸ்வா.
இருவராலுமே இப்படி ஒரு நிலைமையை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.
நேஹாவுக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தவன் உச்சபட்ச அதிர்ச்சியில் தானே ஸ்தம்பித்துப் போனான் விஸ்வா.
வாழ்க்கையே வெறுத்துப் போனது அவனுக்கு. அன்னையின் உடல்நிலை சற்று தேறிய பின், அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினான் அவன் ஒரு இலக்கின்றி. அப்பொழுதுதான் நிர்மலானந்தாவை அவன் சந்தித்தது, தன் பாதையை மாற்றிக் கொண்டது எல்லாம்.
ஒரே நேரத்தில் மனதுக்கு அமைதியையும் கொடுத்து சந்திரமௌலியை பழிவாங்க ஒரு சந்தர்ப்பத்தையும் அமைத்துக்கொடுத்தது சன்னியாசம் என்ற அந்தப் பாதை.
காரணம் எவ்வளவு மோசமான வழியில் சென்ற போதும் சந்திரமௌலியின் பலம் பலவீனம் இரண்டுமே விஸ்வாவாக இருந்ததுதான். அவன் மீது அவர் கொண்ட கண்மூடித்தனமான பாசம்தான். அதை அவன் நன்றாகவே அறிந்துவைத்திருந்ததும்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே துடிதுடித்துத்தான் போனார் மனிதர். ஆனாலும் அவனுடைய மனம் அமைதி அடையவே இல்லை அவன் மேனகாவை முதன்முதல் சந்திக்கும் வரையிலுமே.
ஒரு பெண்ணைப் பார்த்து, அவளது புற அழகில் தன்னை தொலைத்து, அவள் பழகும் விதம் பிடித்துப்போய், சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து லாபத்தராசு தாழ்ந்திருந்த ஒரே காரணத்தினால் காதல் என்ற முடிவுக்கு வந்திருந்தவனுக்கு, முதல் முறை பார்க்கும் ஒரு பெண்ணை எப்படி இந்த அளவுக்குப் பிடித்துப் போனது என்றே புரியவில்லை.
அவளை மீண்டும் ஒரு முறை பார்க்க மாட்டோமா அவன் ஏங்கித் தவித்த தவிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும். அதுவும் அவளை மறுபடி பார்க்க நேரவும், எக்காரணம் கொண்டும் அவளை கை நழுவ விடவே கூடாது என்ற ஒரு வெறியே உண்டானது அவனுக்கு. அவனை அடைத்து வைத்து தொல்லை செய்ததால் உண்டான எரிச்சலில், நிர்மலானந்தாவை நேரில் பார்த்து உண்டு இல்லை என ஒரு வழி செய்து அந்த ஆசிரமம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் அங்கே வந்தவன், மேனகாவை அங்கே பார்த்ததும் தன் எண்ணத்தை வேறுவிதமாக மாற்றிக்கொண்டான்.
தன் கரங்களில் துவண்டு மயக்க நிலையிலிருந்தவளை முதல் வேலையாக அங்கிருந்து மீட்டு சில மணிநேரங்களில் தங்கள் சென்னை விருந்தினர் மாளிகைக்கு கொண்டுவந்திருந்தான்.
*
திருமணம் என்கிற பெயரில் பெரிய ஆர்ப்பாட்டமில்லை, ஆடம்பரமில்லை, பெருங்கூட்டம் இல்லை.
விஸ்வாவுக்காக, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அவனுடைய அம்மாவும் கூடவே சந்திரமௌலியும், மேனகாவுக்காக சகுந்தலா, அவருடைய கணவர் மற்றும் மகன் மட்டும் என மேனகாவின் வீடு இருக்கும் பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்தில் வெகு எளிமையாக சில கையொப்பங்களுடன் முடிந்தது அவர்களுடைய திருமணம்.
‘நடப்பதெல்லாம் உண்மைதானா?’ என இந்த நொடி வரை நம்ப இயலவில்லை மேனகாவுக்கு. எப்படி தான் இதற்குச் சம்மதித்தோம் என ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
தொடர்ந்து மூன்று நாட்கள் சரியான உணவு உறக்கமின்றி அந்த அடர்ந்த காட்டுக்குள்ளேயே சுற்றித்திரிந்தனர் மேனகா, தொல்லைநாயகி, விஜித் மூவரும். அங்கிருந்து வெளியேற முனைந்து எந்த திசை நோக்கிச் சென்றாலும் மறுபடி மறுபடி கிளம்பிய இடத்திற்கே வந்து சேர, ஒரு கட்டத்தில் நிம்மியின் அடியாட்களிடம் வகையாகச் சிக்கிக் கொண்டனர்.
அதில் ஒருவன் அடித்த ஒரே அடியிலேயே விஜித் சுருண்டுவிட, அதில் அதிர்ச்சியாகிப்போய், மேனகாவுக்குப் பேச்சே வரவில்லை என்றால் பயத்தில், ‘கஸ்மாலம்… சோமாறி… பேமானி’ என சகட்டுமேனிக்குக் கத்த தொடங்கிவிட்டாள் நாயகி.
மேனகாவுக்கு மேலும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் நாயகி போட்ட கூச்சல் ஒவ்வொன்றிற்கும் அவளை விட்டுவிட்டு அவர்கள் மேனகாவை அறைந்ததுதான்.
அதற்காவது அவள் கொஞ்சம் அடங்கியிருக்கலாம். ஆனால் மேனகா வாங்கிய ஒவ்வொரு அரைக்கும் தன்னையே அடித்தது போல் பதறி நாயகி மேலும் மேலும் கத்தவும் அதைக் கவனித்தவர்கள் நாயகியை அடக்க மேனகாவை பயன்படுத்திக்கொண்டனர்.
அதற்கேற்றாற்போல, அவளை மரத்தில் கட்டிப்போட்டு அவளுடைய கழுத்தில் கத்தியை வைக்கவும்தான் கொஞ்சமாவது அடங்கினாள் தொல்லைநாயகி. ஆனாலும் அவளுடைய வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தொணதொணத்து முணுமுணுத்து, அவளுடைய வாயில் பிளாஸ்டர் ஒட்டும் நிலைக்கு அவர்களை தள்ளினாள் நாயகி.
இதில் மேனகாவே அதிசயித்த ஒன்று என்னவென்றால் தொல்லைநாயகியை அவர்கள் கொஞ்சம் கூட தொல்லையே செய்யவில்லை என்பதுதான். அதுவும் நிம்மி அங்கே வந்ததும் அவர் பரிவுடன் நாயகியைப் பார்த்த பார்வையும், தொடர்ந்த அவர்களுடைய பார்வை பரிமாற்றங்களையும் பார்த்து, அந்த நிலையிலும் கூட சிரிப்புதான் வந்தது மேனகாவுக்கு.
ஒரு கட்டத்தில் அவளை மட்டும் அம்போவென விட்டுவிட்டு நாயகியையும் விஜித்தையும் அவர்கள் தங்களுடன் இழுத்துச்சென்றதும், அதுவும் மறுப்பே தெரிவிக்காமல் தொல்லை நிம்மியுடன் கையை கோர்த்துக்கொண்டு சென்றதும் ஆடித்தான் போனாள் மேனகா.
நிச்சயம் நிம்மி சொன்னதை போலப் புலிக்கோ சிறுத்தைக்கோ உணவாகத்தான்போகிறோம் என உறுதியாக நம்பிக்கொண்டிருந்தவளை, அந்த இடத்தில் அதுவும் அந்த நேரத்தில் இப்படி ஒருவன் வந்து காப்பாற்றக் கூடும் என்று கற்பனையில் கூட எண்ணவில்லை மேனகா. அரை மயக்க நிலையில் நடக்கும் அனைத்துமே கனவு என்றுதான் நம்பினாள் அவள்.
அதுவும் அந்த சாமியார் வேடமெல்லாம் களைந்து, மெய் நிகர் பிம்பமாக அவளுடைய மனதில் பதிந்திருந்த தோற்றத்தில் கண்முன் அவனைக் காணவும், அது உண்மை நிகழ்வுதான் என யாராவது சத்தியம் செய்திருந்தால் கூட அவள் அதை நம்பியிருக்கவே மாட்டாள்தான்.
ஆனால் அவனுடைய இதழ் தீண்டல் அவளுடைய உயிர்வரை ஊடுருவி அது உண்மைதான் என அவளது அறிவிற்கு உணர்த்திய தருணம் வியப்புடன் தனை மறந்து அவள் ‘விஸ்வா’ என்று அவனுடைய பெயரை உச்சரித்துவிட, அவளை விட அதிகம் வியந்துபோனவன் தன் வசமிழந்து அவளது இதழ்களை சிறை செய்தான். மீள முடியாமல் மொத்தமுமாக மயங்கித்தான் போனாள் மேனகா.
மயக்கம் தெளிந்து அவள் கண் விழித்தது, கவலையும் எதிர்பார்ப்புமாக அவளையே பார்த்துக்கொண்டிருந்த விஸ்வாவின் முகத்தில்தான். பசி மயக்கத்திலிருந்தவளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டிருப்பது புரிந்தது.
அவளை அவன் காப்பாற்றிய நிகழ்வுகள் நினைவில் வரச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது அவளுக்கு.
அந்த இடம் அவளுக்குப் பரிச்சயமானதாக இருக்கவே இயல்பாக அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றவள், தள்ளாடியபடி மெதுவாக எழுந்து உட்கார்ந்து, “தேங்க்ஸ் மிஸ்டர் விஸ்வா” என்று சொல்லிவிட்டு, அவன் ஏதும் பேசுவதற்கு முன்பாகவே, “என்னை என் வீட்டுல விட சொல்றீங்களா” என்று கேட்டாள் மேனகா.
பதிலுக்குப் புன்னகைத்தவன், “ம்… சொல்லலாமே” என்று சொல்லிவிட்டு, “பட்… இந்த நிலைமைல தனியா உன்னால மேனேஜ் பண்ண முடியுமா?” என அவளுடைய முகத்தையே கூர்ந்து பார்த்தபடி கேட்க, “ம்ம்… நவ் ஐம் ஃபீலிங் பெட்டெர். ஒரு நாள் ரெஸ்ட் எடுத்தா போதும்” என அவள் தெளிவாகச் சொல்லவும், மறுப்பேதும் சொல்லாமல், அங்கே பணியிலிருந்த ஒரு ஓட்டுநரை அழைத்தவன் அவளை வீட்டில் விடச் சொல்லிவிட்டான்.
அவன் வேண்டாம் என்று சொல்லவேண்டும் என அவள் மனம் எதிர்பார்த்ததோ என்னவோ. அதில் ஏமாற்றமும் வெறுமையும் சூழ்ந்தது அவளை.
*
அவளுடைய வீடுதான். ஆனால் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு. காரணம் தொல்லையும் இல்லை மில்லியும் இல்லை அங்கே.
மற்ற எலிகளையெல்லாம் கூட ஒரு காப்பகத்தில் விட்டிருந்தாள். அவற்றை மீண்டும் அங்கே கொண்டு வரவேண்டுமென்றும் தோன்றவில்லை அவளுக்கு. கல்லூரிக்குப் போகவும் மனமில்லை.
விஸ்வாவின் அக்கரையில், நேரம் தவறாமல் உணவு அவளுடைய வீடு தேடியே வந்தது. வேண்டாம் என்று அவள் மறுத்தபோதிலும் அவன் கேட்கவில்லை. ஏதோ ஒரு பரிதாபத்தில் அப்படி செய்கிறான் என்றே தோன்றியது அவளுக்கு.
ஏதோ சாப்பிட்டாள், உறங்கினாள் அவ்வளவுதான். அவளுடைய ஆராய்ச்சி பற்றியெல்லாம் மறந்தேபோனதுபோலிருந்தது அவளுக்கு. காரணம் வேறெதையும் எண்ண விடாமல் அவளுடைய நினைவு முழுவதும் விஸ்வா மட்டுமே நிறைந்திருந்தான்.
‘அவளுடைய ஆராய்ச்சிக்கு உதவி செய்யவே அவ்வளவு யோசிப்பவர் சந்திரமௌலி. அப்படியிருக்க, ஊர் பேர் தெரியாத ஒருத்தி, அவருடைய மகனை மணக்க விட்டுவிடுவாரா என்ன? விஸ்வாவை எடுத்து கொண்டலும் கூட, ஏதோ ஒரு ஆபத்தில் அவளுக்கு உதவினான். மற்றபடி அவளுடைய பெயர் என்ன என்பது கூட அவனுக்குத் தெரிந்திருக்காது? அவன் இருக்கும் நிலைக்கு விஸ்வா போன்ற ஒருவன் அவளை ஏறெடுத்து பார்க்கவும் வாய்ப்பில்லை. அவளுக்கு அது அவசியமும் இல்லை. அனைத்தையும் மறந்து இனி தனது ஆராய்ச்சியைத் தவிர வேறெதைப் பற்றியும் சிந்திக்கவே கூடாது’ இப்படி பலவாறான எண்ணங்கள் அவள் மனத்திற்குள் சுழன்று கொண்டிருக்க, ‘ஆராய்ச்சிக்காக இனி சந்திரமௌலியை நம்பி எந்த பயனும் இல்லை’ என்பது தெளிவாக விளங்க, நான்கு நாட்கள் இப்படியே சென்றன.
ஒருவாறாகச் சிந்தித்து, குழம்பி, தெளிந்து கடைசி வாய்ப்பாக சகுந்தலா மூலமாக எதாவது உதவி கிட்டுமா என முயன்று பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள் மேனகா.
*
அடுத்த நாள் காலை… ஓரளவுக்கு மனம் தெளிந்து மீண்டிருந்தவள், குளித்து கையில் கிடைத்த உடையை எடுத்து மாட்டிக்கொண்டு, கூந்தலை அள்ளி கொண்டையாகப் போட்டுக்கொண்டு, சில நிமிடங்கள் விரயம் செய்து அவளது மூக்குக்கண்ணாடியைத் தேடி எடுத்து அணிந்துகொண்டு, முகம் பார்க்கும் கண்ணாடி முன் வந்து நின்று, “இன்னைக்கு நம்ம நினைச்சது நடக்கணும்; நடக்கும்; அதுவும் நல்லபடியா நடக்கும்!” என வழக்கம் போல கர்மசிரத்தையாகக் கண்களை மூடி வழிப்பட தொடங்கினாள்.
பிரார்த்தனையை முடித்து அவள் தன் விழிகளைத் திறக்க, கண்ணாடியில் அவளுடைய முகத்துக்கு அருகில் தெரிந்த விஸ்வாவின் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள் மேனகா.
சில நாட்களாக அடிக்கடி அவள் கண்களில் தோன்றி மறையும் அவனது மாயத்தோற்றம்தானோ என்கிற எண்ணத்தில், “ஐயோ கோட்ட முதல்ல இருந்து போட்றியே. இப்பதான் ஒரு வழியா உன்னை மறந்துட்டேன்னு நெனச்சேன். மறுபடியும் மறுபடியும் இப்படி வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கியே. உனக்கே இது நியாயமா இருக்கா? டேய் விஸ்வா! நீ மட்டும் என் கைல கிடைச்சன்னு வை அவ்வளவுதான்” என எப்பொழுதும் தனக்கு தானே பேசிக் கொள்வது போல மேனகா சத்தமாகப் பேச, “என்ன… டேய் விஸ்வா..வா?” என அதிர்ந்து சிரித்தது கண்ணாடியில் தெரிந்த விஸ்வாவின் பிம்பம். அதுவும் அந்த சிரிப்பொலி அவளது செவிக்கு அருகில் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பியவள் அவளுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்த விஸ்வாவின் மீதே மோதி தடுமாறினாள் மேனகா. அவளைத் தாங்கிப் பிடித்தவன் தன்னுடன் அவளை நெருக்கிக் கொண்டு, “அந்த அளவுக்கு நான் உன்ன டிஸ்டர்ப் பண்றேனா பிரின்சஸ்?!” எனக் குதூகலத்துடன் விஸ்வா கேட்க, அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி விட்டு கண்களைக் கசக்கியவாறு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மேனகா.
“நான் உன் கைல கிடைச்சா என்னவோ பண்ணுவேன்னு சொன்னியே… என்ன பண்ணுவ” என அவன் கண்சிமிட்டிக் கிறக்கமாக கேட்க, அடுத்த நொடி அவனை தன்னிடமிருந்து விலக்கித் தள்ளியவள் பளாரென அவனை அறைந்தாள் மேனகா ஏதோ ஒரு உந்துதலில்.
அதை சற்றும் எதிர் பாராதவனாய், “ஹௌச்… ஆஆஆஆ… லூசு” என தன் கன்னத்தைத் தேய்த்துக்கொண்டே விஸ்வா எரிச்சலுடன் அவளைப் பார்க்க, “ஐயோ அப்படினா நீங்க நிஜ விஸ்வா..வா? அடிக்கடி எனக்கு வர இல்யூஷன் அப்படின்னு இல்ல நினைச்சேன். சாரி” என மேனகா பதற, அவள் சொன்ன அந்த வார்த்தைகளில் அவள் எப்போதுமே அவனது நினைவாகவே இருக்கிறாள் என்பது புரிய, ஒரு உவகை உண்டானது அவனுக்கு.
“ஓஹோ… அப்படியா விஷயம். அப்படினா இதை சரி பண்ண உனக்கு ஒரு ஐடியா சொல்லட்டுமா” எனத் தீவிர பாவனையில் விஸ்வா கேட்க, “ஹ்ம்ம்…” என்றவாறே தலையசைத்தாள் மேனகா.
அவளை விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டே, “பேசாம நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் அவன் வெகு இயல்பாக.
அதில் விழி விரித்து அவனைப் பார்த்தவள், “இல்ல… வேண்டாம்… வேற பெட்டெர் ஐடியாவா சொல்லுங்க” என்றாள் பட்டன.
“ஹலோ… நான் ஒண்ணும் உனக்கு சாய்ஸ் குடுக்கல. வேணும் வேண்டாம்னு சொல்றதுக்கு. இதுதான் ஒன்லி ஆப்ஷன்” என்றான் அவன் அலட்டிக்கொள்ளாமல்.
“சாரி மிஸ்டர் விஸ்வா! இது வேலைக்கே ஆகாது” என்றாள் அவள் உள்ளே போன குரலில்.
அவள் முகம் வேறு கசங்கி வேதனையை அப்பட்டமாய் வெளிப்படுத்த, “ஏன்?” என அழுத்தமாகக் கேட்டவன், “என் கண்ணை நேருக்கு நேரா பார்த்து… எனக்கு உன்ன பிடிக்கல போடா… அப்படின்னு சொல்லு. நான் இப்படியே போய்ட்டே இருக்கேன். மத்தபடி வேற எந்த பதிலும் எனக்கு தேவை இல்லை” என்றான் அவன் இறுமாப்புடன்.
“எனக்கு உங்களை பிடிக்காதுன்னு சொல்லவே மாட்டேன். ஆனா பிடிக்கும்ங்கறதுக்காக உங்களை கல்யாணமெல்லாம் செஞ்சுக்க முடியாது?” என அவள் ஆயாசமாக சொல்ல, “சரி… அப்ப வேண்டாம்ங்கறதுக்கு ஒரு நல்ல ரீசன் சொல்லு நான் இதோட விட்டுட்றேன்” என்றான் விஸ்வா சவாலாக.
சில நொடிகள் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், “என்னோட சொந்த ஆதாயத்துக்காக உங்கள வச்சு உங்க அப்பா கூட ஒரு சின்ன பிசினஸ் டீல் போட்டிருக்கேன் மிஸ்டர் விஸ்வா! அது ஒரு விதத்தில் ஃபெயிலியர் ஆயிடுச்சுனாலும், ஐ பீல் ஃகில்டி. என்ன இருந்தாலும் எதிர்காலத்துல இது நமக்குள்ள ஒரு மனகசப்பை ஏற்படுத்தும். அதனாலதான்” என உள்ளது உள்ளபடி அவனிடம் சொன்னாள் மேனகா.
அதுவே இப்பொழுது இருப்பதை காட்டிலும் அவனுக்கு அவளை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடிக்கக் காரணமாகிப்போனது.
அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனமின்றி அவன் அன்று திரும்பிச் சென்றாலும் அடுத்து வந்த நாட்களில் அவன் அவளைச் சம்மதிக்க வைக்க விதவிதமாக போராட, அவள் விதவிதமாக மறுக்க என அதுவே இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் உண்டாகக் காரணமாகிப் போனது.
இருவரையும், ஒருவரை பற்றி ஒருவர் பல விஷயங்களை வெளிப்படையாக மனம் விட்டுப் பேசவும் வைத்தது.
இப்படித்தான் ஒருநாள், நேஹாவுடனான அவனது காதலைப் பற்றி மென்று விழுங்கி அவன் சொன்ன பொழுது, அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது மேனகாவுக்கு. “உண்மையா சொல்றேன் விஸ்வா! உங்களோட டேஸ்ட் கொஞ்சம் மொக்கை தான் போங்க. முதல்ல நேஹா… இப்ப நானா?” என்று கேட்டு இன்னும் பொங்கி சிரித்தாள் அவள்.
அதில் கடுப்பானவன், அதற்கு மேல் அவளைச் சிரிக்க விடவில்லை விஸ்வா. சிரிக்க மட்டும் இல்லை வேறு எதையும் சிந்திக்கக் கூட இயலாமல் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பித்தாக்கிக் கொண்டிருந்தான் தன் முத்தத்தினால், அவளுடைய மறுப்புகள் மொத்தத்தையும் தகர்த்து.
இதோ இப்படி அவர்களுடைய திருமணத்தைப் பதிவு செய்யும் அளவிற்கு அவளைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தான் அவன், தனது பேச்சினால் செயல்களினால் என பலவாறாக அவளது மனதைக் கரைத்து.
சந்தோஷத்தின் உச்சத்தில், விஸ்வா மேனகா இருவரும் அவர்களுடைய திருமணத்தைப் பதிவு செய்து தங்கள் கையெழுத்தைப் போடும் அதே நேரம் அனைத்து ஊடகங்களும் பரபரத்துக் கொண்டிருந்தது, ‘இன்ஜின் கோளாறினால், ஜாமீனில் வெளிவந்த போலிச்சாமியார் நிர்மலானந்தா சென்ற தனி விமானம் தீ பிடித்து வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்திலேயே அவர் காலமானார்’ என்று!
Nice update
Nimmi drama va
Ila real ah va