Vithai- Final
விதை 11
அனைவரும் இருக்கும் பொழுது செய்த விஷயம் என்னவென்று காண்போம் வாருங்கள்.
அதிதியும் அமரும் செய்ய நினைக்கும் விஷயத்தினை அன்றே வர்ஷனும் வந்தனாவும் வெளியிட்டனர்.
“மனிதம் ஆர்மி” என்றொரு முகநூல் புத்தக பக்கத்தினைத் துவங்குவது.
சமீப காலமாக மலிந்துவிட்ட ஒன்று என்னவென்றால்,’ பச்சை தமிழனா இருந்தா ஷேர் பண்ணு’, ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ இது போன்ற பல அடைமொழிகளுடன் வரும் பதிவுகள்.
உண்மையில் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லைதான்.ஆனால் இது போன்ற பதிவுகளில் உள்ள சில தகவல்கள், நம்மை முட்டாள்களாக்கி,நம் முன்னோர்களையும் முட்டாள்களாக காட்டிவிடும் போலும்.
அது மட்டுமின்றி, மதம் குறித்த சில தவறான தகவல்கள், ஒற்றுமையை குலைக்கும் விதமான தகவல்கள், மருத்துவம் குறித்த பயமுறுத்தும் தவறான தகவல்கள் இப்படி சொல்லிக்கொண்ட போகலாம்.
இதனால் மக்களுக்கு எல்லாவற்றிலும் நம்பகத்தன்மை குறைந்து எதனையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனப்பான்மை வளர்கிறது.ஒரு சாரார் அதனை அப்படியே நம்பி அவதியுறுகின்றனர்.
சமூக வலைதளம் என்பது முறையாகப் பயன்படுத்தினால் அது மிகவும் அழகானதொரு வரம்.ஆனால் அதனை அடுத்தவரை கேலி செய்வதிலும், முகத்தினை மறைத்துக்கொண்டு இருக்கும் தைரியத்தில் மிகவும் மலினமான கொச்சையான சொற்களைக் கொட்டுவதாலும் குப்பைக் கூடையாக மாறி சாபமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
இதனை எல்லாம் ஒருவர் நினைத்து மாற்றுவது என்பது இயலாத செயல். ஆனால் தன்னால் இயன்றவரை தானும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் இணைத்து அதனை முறையாகப் பயன்படுத்த எண்ணினர்.
இந்து, இஸ்லாம் இருவரும் இருக்கிறார்கள்.ஒரு கிறித்துவ நண்பரையும் இணைத்துக் கொண்டனர்.
மதம் குறித்த தவறான பரப்புரைகளுக்கு சரியான வகையில் பதிலடி கொடுக்கும் பதிவுகளை போடுவது. மருத்துவம் தொடர்பான,மருந்துகள் தொடர்பான தவறான பதிவுகளுக்கு விளக்கம் அளித்தல்,சந்தேகங்களை தீர்த்து வைத்தல் இது போன்ற பல நல்ல விஷயங்களை இயன்ற அளவில் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கெல்லாம் நிறைய ஆய்வுகளும் அயராத உழைப்பும் தேவைப்படும் என்று தெரியும்.அதனை செய்யத் தயாராக இருந்தனர். தங்களைப் போன்றே எண்ணம் கொண்ட நண்பர்களை உதவிக்கு அழைத்தனர்.
இதனை அறிவித்து, ஆர்வமுள்ளவர்களை அவர்களுடன் இணைந்து கொள்ளப் பணித்தனர். இந்த முகநூல் பக்கம் ஒரு கருவிதான். அதன் மூலம் பல ஆக்கபூர்வமான செயல்கள் செய்யத் திட்டமிட்டனர். அவர்களின் பணி சிறப்பாய் அமைய நாமும் அவர்களை வாழ்த்துவோம்.
ஒரு வழியாக இப்படி ஒரு நல்ல துவக்கம், கேலி, கிண்டல் என்று அனைத்தும் முடிந்து அவர்களைத் தனிமையில் விட்ட அடுத்த நொடி,அதிதி அமருள் அடங்கி இருந்தாள்.
இடையில் தவித்த தவிப்பிற்கெல்லாம் சேர்த்து வைத்து, தற்போது அவனுள் அடங்கி அமைதி கொண்டாள். மனதை ஆட்கொண்டிருந்த அத்தனை அலைப்புறுதல்களும் அடங்கி நிம்மதியும் நிர்ச்சலனமும் நிறைந்தது இருவர் மனதிலும்.
இருவரும் எதுவும் பேசாமல் அணைப்பினை ஆட்கொண்டு அமைதியுள் அடங்கினர். அதனை உயிர்வரை நிரப்பிக்கொண்டே பிரிந்தனர்.
இருவரும் தங்களின் பிறப்பிற்கும் இந்தக் காதலுக்கும் ஒரு காரணம் இருப்பதாகவே உணர்ந்தனர். காதல் என்று இல்லை,எந்த ஒரு உண்மையான அன்பும் வீழும் பொழுது விதையாகவே வீழ்கிறது, அது எழும் பொழுது இன்னும் வலிமை கூடி விருட்சமாக எழும் என்று தோன்றியது அவர்களுக்கு. எந்தப் பிரச்சினையால் அவர்கள் வீழ்ந்தனரோ, அதற்கு ஒரு மிகச்சிறு தீர்வாகவேனும் இருக்க விரும்பினர்.
நடப்பிற்கு வந்தவர்கள், தீண்டலும் சீண்டலுமாய், நாணமும் நயமுமாய் அன்பும் ஆசையுமாய் சமாதானப் போரில் இறங்கினர்.
அமைதிப் புறாக்கள ஆத்திரப் புறாக்கள் ஆக்காம ஓடிருவோம் வாங்க.
இனி அவங்க எப்படி காதல் பயிர் வளர்த்து கடமை ஆத்துனாங்கனு பார்க்கலாம் வாங்க.
அதிதி அமரின் காதல் காட்சிகள்:
காட்சி 1:
“அமர், உங்களுக்கு உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும்.”
“ஏன்டி?”
“டுமாறோ உங்க பர்த்டே! அதான் செய்லாம்னு”
“ஓஹ்ஹ் பர்த்டே ஸ்வீட்டா என்று மனதுள் கள்ளச் சிரிப்பு சிரித்தவன்,
வெளியில் இதமாக, “குலாப் ஜாமூன். தேங்க்ஸ்டா”
என்று கன்னம் தட்டிவிட்டுச் சென்று விட்டான். அடுத்த நாள் அவள் அவன் கேட்டதை செய்து தரவே,அவளையே ஊட்டிவிடச் சொன்னான்.
ஜாமூனை வாயிலும் அவளை பார்வையிலும் ருசித்தவன், “ஜாமுன்னா சர்க்கரைப் பாகுல நல்லா ஊரிருக்கணும்” என்றான்
அவள் வாட்டத்துடனும் கடுப்புடனும், “நல்லாத்தான் ஊறிருக்கு.பாருங்க,எவ்ளோ ஈஸியா ஸ்பூனில கட் ஆகுது.ஏன் அமர், பிடிக்கலையா ” என்றாள்.
அவன் கள்ளச் சிரிப்புடன், “நான் அப்டி சொல்லலையே” என்று கூறி, அவளை இழுத்து அணைத்து, இதழ்களை ஜாமூன் ஆக்குவது எப்படி என்று செய்முறை விளக்கம் கொடுத்தான்.
அவளை விடுவித்துவிட்டு, “இந்த அளவு அது சுகர் சிரப்ல ஊறலனு தானே சொன்னேன்” என்று அவள் இதழ்களை வருடியவாறே கூறினான்.
“சீ போடா! நீ இப்டி ஜாமூன் சாப்பிட நான் எதுக்கு கஷ்டப்பட்டு செய்யனும். “(செல்லச் சிணுங்கல் அதான் ‘டா ‘லாம் வரும்.நீங்க கண்டுக்காதீங்க😜)
“அதை விட இது டேஸ்டினு சொன்னேன். அது வயித்துக்கு, இது வயசுக்கு”
“ரொம்ப பேசற போடா” என்று சிணுங்கியவள் பின்பு விறைப்பாக,
“அது சரி!பொதுவா தேனில் ஊறிய இதழோனுதானே ரீல் சுத்துவீங்க. எப்போ இருந்து சக்கரப் பாகுனு மாத்துனீங்க”
“அதெல்லாம் காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்க வேண்டிதான். அப்போ ஸ்வீட்னா அது தேன்தான். அதான்அப்டி சொல்லிருப்பாங்க.இப்போ இதானே ஸ்வீட் அதிகம்”
“ஸ்வீட்க்கு மட்டும் சொல்லலை! தேன் அதிகமா குடிச்சா போதை வருமாம். இதுலயும் ஒரு மாதிரி போதை வருதில்ல.அதான்அப்டி சொல்லிருக்காங்க” என்றாள் நாணச் சிரிப்புடன்.
“ஓஹ் அப்டியா? நான் கம்மியா தேன் குடிச்சிட்டேன் போல, நிறைய குடிச்சா போதை வருதா பார்க்கலாம்” என்று மீண்டும் கள் உண்ட வண்டாய் மாறினான்.
கள்(தேன்)பருகினால் போதை வரும்,ஆனால் கள்ளின் (பொண்ணு) உள்ளம் களவாடியவன் பருகியதால் அந்த கள்ளிற்கே போதை ஏறியதே ஆச்சர்ய குறி!
காட்சி 2:
ஒருநாள் அமர் தான் சீக்கிரமே வந்துவிடுவதாகவும் அதிதியையும் சீக்கிரம் வருமாறும் கூறி இருந்தான் வெளியில் செல்லலாம் என்று எண்ணி இருந்தனர். ஆனால் வர முடியவில்லை. மிகவும் தாமதமாக வந்தான்,என்ன சொல்லி சமாளிப்பது என்று புரியாமல் யோசித்துக்கொண்டே.
வந்தவுடன் எரிமலையென வெடித்தாள் அதிதி (அதான் வைஃப் ஆயிட்டோம்ல.இனிமேல் அப்டித்தான்😜)
“கல்யாணம் பண்ணா காதல் காத்தோட போய்டும் போல, முடியாதுனா ஏன் சொல்றீங்க, எதிர்பார்க்க வச்சு ஏமாத்துறது ரொம்ப கஷ்டமா இருக்கு.
நம்ம ஒர்க் நேச்சர்க்கு அடிக்கடி இப்டி பிளான் பண்ண முடியுமா? கிடைச்ச சான்சும் போச்சு. எவ்வ்ளோ ஆசையா காத்திருந்தேன் தெரியுமா?”
இப்படியாக இன்னுமாக விடாமல் திட்டினாள். அவன் கெஞ்சி கொஞ்சி பார்த்தவன் ஒரு கட்டத்தில் முடியாமல்,
“இப்போ நீ நிறுத்தலனா ரொம்ப வருத்தப்படுவ சொல்லிட்டேன்” என்றான் கோபமாக ,
“பண்றதையும் பண்ணிட்டு கோபம் வேற வருதா உங்களுக்கு,இதுக்கு மேல ஃபீல் பண்ண என்ன இருக்கு.என் ஆதங்கம் நான் கொட்டிதான் தீருவேன்.நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க,நான் நிறுத்தமாட்டேன்”
“சரி உன் இஷ்டம்” என்று கூறியவன், அவனோடு யுத்தமிட்ட இதழ்களுடன் தன் இதழ்களால் யுத்தமிட்டான் .
‘நாணம் வந்தால் ஊடல் போகும்’ என்ற பாடல் வரிகள் மெய்யானது. அவளை விடுவித்தவன்,
“இனிமேல் நீ சண்டை போட்டா,நானும் இப்டிதான் சண்டை போடுவேன் . வெளில எதுக்கு போறது , ரொமான்டிக் மொமெண்ட்ஸ்க்குதானே,அதை இங்கயே செய்லாம் வா ” என்று மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.”
பால்நிலவும் பூங்காற்றும் யாருமற்ற தனிமையும் அவளவன் அருகாமையும் அழகாக மனதில் மாருதம் சேர்க்க , அவனுள் புதைந்து கரைந்து போனாள்
“லேட்டா வந்ததுக்கு தேங்க்ஸ்” என்று கூறியவாறே. வர்ஷன் வந்தனாவின் காதல் காட்சிகள்:
காட்சி 1:
இரவு 11 மணி:
அவள் மடியில் கணினியை வைத்து கண்களை கணினியில் வைத்து மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.
அவன் அலுங்காமல் குலுங்காமல் அவள் பின்னால் வந்து அவன் கன்னங்களை அவள் கன்னங்கள் ஸ்பரிசிக்க எட்டி பார்த்து, “ஏண்டி, எனக்கும் இந்த கம்பியூட்டர்லாம் கத்துக்குடேன் “என்றான்.
அவளிடம் பதிலில்லை. அவன் நாசி விட்ட மூச்சு அவள் காதுமடலில் கபடி ஆட, உடல் சிலிர்த்தவள் நகர்ந்து
“டேய்ய்! நீ கம்பியூட்டர்லயும் கேடி,கசமுசாலையும் கேடினு தெரியும்! ஓடிரு! “
“என்னடி கசமுசான்னு கலீஜா சொல்ற, காதல்னு க்யூட்டா சொல்லு”
“ம்ம்ம்ம்,நீ பண்ற வேலைக்கு பேரு காதலா? வெறி ஏத்தாம போ”
“நான் எங்க வெறி ஏத்தறேன். நீதான் வெறி ஏத்தற” என்று முணுமுணுத்தவன்
“உனக்கு ஹெல்ப் பன்றேன்டி என்று நெருங்கினான்”
“ஆணியே புடுங்க வேணாம் போ”
“போடி! உனக்கு கொஞ்சமும் பொறுப்பு இல்ல, நம்ம குழந்தையை பார்ன் வித் சில்வர் ஸ்பூனா ஆக்க நீயும் ஹெல்ப் செயினும்ல”
“ஓய்! நான்தான் அதுக்கு பொறுப்பா வேலை பார்க்குறேன், நீதான் பொறுப்பில்லாம நடந்துக்குற”
“சில்வர் ஸ்பூன் மட்டும் ரெடி பண்ணி என்ன பண்ண, குழந்தை வேணும்ல”
“உன் கடமை உணர்ச்சி என்னை கண் கலங்க வைக்குதுடா” என்று கூறி அவள் தலையணை எடுத்து மொத்த ஆரம்பித்தாள்.
“பிராடு பிராடு ! நீ தோள்ல கை போடாதன்னு சொன்னப்போ
‘காதலன் சமத்து காதலில் தொல்லைனு’ பாட வப்பணு பார்த்தா’ தீராத விளையாட்டு பிள்ளை’ னு பாட வைக்குற “
அவனும் “என்னைய அடிச்சுட்டேல” என்று தலையணையில் திருப்பி அடிக்க
அந்த தலையணை யுத்தம் இறுதியில் எந்த யுத்தத்தில் முடிந்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
காட்சி 2:
சமையலறையில் மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தவன் கண்ட காட்சி: வெங்காயாத்தை இரக்கமின்றி அவள் கைகள் வெட்டி வீசிக்கொண்டிருக்க, இந்த வன்முறையைக் காணப் பொறுக்காத அவள் விழிகள் கசிந்து கொண்டிருந்தது.
அவன் எந்த சலனமும் இன்றி அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு அங்கே இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தவன்,
“என்னடி, உப்புக்கு பதில் கண்ணீரை கொட்டி சமைக்கப்போறியா?” என்று கேட்டான். இதைக் கேட்டு வெகுண்டவள்,
” ஏண்டா என்னடா ஹீரோ நீ. இந்நேரம் இந்த சுச்சுவேஷன்ல நீ என்ன செஞ்சிருக்கணும். அச்சோ உன் கண்ல தண்ணி கொட்டுதே. என் நெஞ்சுல ரத்தம் வருதே. இனிமேல் நான் வெங்காயம் சாப்பிட மாட்டேன் .ஊர்ல உள்ள வெங்காயம்லாம் கொளுத்த போறேன்னு பொங்கிருக்கணுமா இல்லையா? அதை விட்டுட்டு கேக்கறான் பாரு கேள்வி” என்று கடுகுடன் சேர்ந்து அவளும் பொரிந்து தள்ளினாள். அதைக் கேட்ட அவன்,
“அடிப்பாவி ! முதலுக்கே மோசம் பண்ணிடுவா போல.இப்போ சொல்றேன்.ஒன்னு தெளிவா கேட்டுக்கோ .வாழ்க்கைல எந்த ஒரு தருணத்துலயும் ,’ உனக்கு நான் முக்கியமா இல்ல வெங்காயம் முக்கியமானு ‘மட்டும் கேட்றாத”
“ஏன்? முடிவெடுக்க கஷ்டமோ?”
“இல்லவே இல்ல. நான் கொஞ்சமும் யோசிக்காம வெங்காயம்தான் முக்கியம்னு சொல்லுவேன். அப்பறம் உனக்கு தான் கஷ்டம் .நமக்கு சோறு முக்கியம். அதுல வெங்காயம் அதைவிட அதிமுக்கியம்” என்று வீரமாக வெங்காய உரை ஆற்றினான். முறைக்க முயன்று தோற்று, வெடித்து சிரித்தாள்.
“உன்னோட இந்த பேச்சுக்குத்தான் அந்தக் கேள்வியே கேட்டேன். எப்படிதான் உனக்கு மட்டும் இப்டிலாம் தோணுமோ?” என்று கூறி மீண்டும் சிரித்தாள்.
“அடியே! இதுக்கு நீ கோவப்படணும்டி! ரசிக்குற”
“ஆமா! அப்டியே உன்னை அணுஅணுவா ரசிக்குறாங்க. Npk. போவியா” என்று வாய் கூறினாலும் அவள் கண்கள் அவனை ரசிக்கிறாளா ருசிக்கிறாளா என்ற சந்தேகத்தை எழுப்பியது.
அதனை சுகித்தவன், “ரைட்டு அதை விடு! பாவம் பச்ச புள்ள ஆசப் பட்டு கேட்டுட்ட! ரொமேன்டிக்கா ஏதாச்சும் சொல்றேன்”
“நீ ஆணியே புடுங்க வேணாம். கிளம்பு. பிட்வீன், என்னை ராட்சசினு கூட சொல்லுடா! பச்ச புள்ளனு சொல்லாத.எனக்கே ஒரு மாதிரியா இருக்கு”
காட்சி 3:
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ உன்னிடம் இருக்கிறது என்று கண்களில் காதல் கசிய,குரலில் ரொமான்ஸ் குத்தாட்டமிட உடல் மொழியில் சிறு மயக்கம் உருகி வழிய பாடினான் வர்ஷன்.
இதெல்லாம் பார்த்தா பொண்ணு மயங்காம இருக்குமா. அவளும் கண்களில் கள் (தேன்) நிறைத்தவளாய் நோக்கினாள்.
அவனோ, “யுரேகா கண்டுபிடிச்சிட்டேன். உன்வாய்தான். எனக்கு தெரிஞ்சு எந்தப் பொன்னும் உன் கிட்ட நெருங்கக்கூட முடியாது” என்றானே பார்க்கலாம்.
அதன் பிறகு ஊற்றெடுத்தது ஊடல்.அந்த ஊடல் கூட்டி வந்தது கூடலை. இவ்வாறு இவர்கள் கண்ணும் கருத்துமாக காதல் பணி ஆற்றியதில் ஒரு வருடத்தில் ஒரு குட்டி வந்தனாவும்,அடுத்த ஆறு மாதத்தில் ஒரு குட்டி அமரும் குட்டி அதிதியும் பிறந்தனர்.ஆம் அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.
அவர்கள் வளர வளர அவர்களின் பணியும் அதிவேகமாக வளர்ந்தது.அது நல்லதொரு சமூக மாற்றத்தினை ஏற்படுத்த அவர்களை வாழ்த்தி விடைபெறுவோம்.
…….விருட்சமானது ……
_சிவரஞ்ஜனி
சிறப்பான சிறிய அல்ல அல்ல , பெரிய பெரிய கதை .. வாழ்த்துக்கள் ..