Madhu’s maran- 8
அத்தியாயம் 8:
அன்று மருதனின் விருந்தில்…
வாணியும் மாறனும் உண்பதற்காக உணவு மேஜையில் அமர்ந்திருக்க மருதன் பரிமாறியிருந்தான்.
“மாறன், மதுராவ லவ் பண்ணி மேரேஜ் செஞ்சிக்கிட்டீங்களா??” என்றுக் கேட்டான் மருதன்.
உணவருந்தியிருந்த மாறனுக்கு புரைக்கேறியது அவனின் இக்கேள்வியில்.
உடனே மாறனின் தலையில் தட்டி தண்ணீரை அவனிடம் அளித்தவள்,
“அதென்ன எல்லாருக்கும் எங்க மேரேஜ் லவ் மேரேஜானு அப்படி ஒரு சந்தேகம். மேரேஜ்க்கு இன்வைட் செய்யும் போது தான் எல்லார்கிட்டயும் அரேஜ் மேரேஜ்னு சொன்னேனே. அப்புறம் என்ன இவரை பார்த்ததும் இந்த கேள்விய கேட்டிடுறீங்க”
என தன் பெங்களுர் தோழமைகளும் இக்கேள்வி தானே கேட்டார்கள் என்ற நினைவு வந்துச் செல்ல, அதன் பலனாய் மருதனிடம் பொரிந்துக் கொண்டிருந்தாள் வாணி.
“அதை உன் வெற்றிப்பாகிட்ட கேளு மதுரா பொண்ணு” என நகைத்தான் மருதன்.
“நான் என்ன செஞ்சேன்?” என்பது போல் கேள்வியாய் மாறன் மருதனை பார்க்க,
அவனின் பார்வையில் சிரித்த மருதன், “நீ டாபிக்க மாத்தாம சொல்லு மதுரா பொண்ணு” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் லவ் மேரேஜ் இல்ல. அவர் மேரேஜ் முன்னாடி என்னை எங்கயோ பார்த்ததா சொல்லியிருக்காரு. அவ்ளோ தான்” என்றாள் வாணி.
“ஓ வாவ் அப்ப பார்தததும் லவ்வா மாறன்??” என சந்தோஷமாய் கேட்டான் மருதன்.
வாணியுடனான மாறனின் முதல் சந்திப்பு வாணிக்கே முழுதாய் தெரியாத நிலையில் இதை எவ்வாறு மருதனிடம் கூறவென யோசித்தவன்,
பதில் கூறாமல் அமைதியாய் சிரித்து மழுப்ப,
“இந்த ஆறு மாசத்துல நானே விதவிதமா கேட்டு பதில் கிடைக்காம சொல்லுற அன்னிக்கு கேட்டுப்போம்னு விட்டுட்டேன். இதுல உன்கிட்டயா சொல்லிட போறாரு. உன்கிட்டயாவது எனக்கு அந்த கதை முழுசா தெரியாதுனு சொல்லிட்டேன். ஆனா என் பெங்களுர் ஃப்ரண்ட்ஸ்லாம் என்னமோ இவர் என்னை உருகி உருகி லவ் பண்ணி மேரேஜ் செஞ்சிக்கிட்ட மாதிரி எனக்கு அந்த கதைலாம் முழுசா தெரியும்ங்கிற மாதிரி நினைச்சிட்டு இருக்காங்க” என்று இவள் ஆற்றாமையில் பொறும,
அவளின் ரியாக்ஷனில் வாய்விட்டு சிரித்த மருதன்,
“நீ இன்னும் குட்டிபொண்ணு தான் மதுரா பொண்ணு. மெச்சூர்ட்டான குட்டிப் பொண்ணு” என்று அவள் தலையில் கை வைத்து ஆட்டியவன்,
“மதுரா இந்தா இறா…. உனக்கு பிடிக்கும்னு ஸ்பெஷலா நானே யூடியூப் பார்த்து சமைச்சேன்” என ஆசை ஆசையாய் அவள் தட்டில் இவன் பரிமாற,
“என்னது இறா இவளுக்கு பிடிக்குமா?” என்பது போல் மாறன் அதிர்வாய் வாணியை பார்க்க,
“நீ எப்ப நான்வெஜ் சாப்பிட்ட?” என வாணியின் காதைக் கடித்தான் மாறன்.
“லண்டன்ல இருந்தப்ப மட்டும் சாப்பிட்டிருக்கேனு சொல்லிருக்கேன்ல” என்றாள் அவளும் அவன் காதில்.
“எப்ப இவ சொன்னா??” என மாறன் சிந்தித்திருக்க,
புருஷன் பொண்டாட்டி என்ன ரகசியம் பேசுறீங்க என்றான் மருதன்.
ஏற்கனவே தன்னிடம் அவனின் காதல் கதையை முழுதாய் கூறவில்லை என்ற ஆற்றாமையில் இருந்தவள், மருதன் கேட்ட இக்கேள்வியில் மாறனை வம்பிழுக்கும் பொருட்டு அவன் காலை வாரினாள்.
“அவருக்கு நான் எப்பலருந்து நான் வெஜ் சாப்பிட ஆரம்பிச்சேனு டௌட்” என்றவள் கூறியதும்,
“என்னது உனக்கு இறா பிடிக்கும்னு மாறனுக்கு தெரியாதா?” என்று மருதன் ஆச்சரியமாய் கேட்க,
அவள் அவ்வாறு கூறியதும் மருதனின் இக்கேள்வியில், பொதுவில் தன்னை அவள் விட்டுக்கொடுத்து பேசியதாய் எண்ணி மாறனின் மனம் சுணங்கியது.
மாறனின் முகமாற்றத்தை கண்டவள், தன் விளையாட்டை கைவிட்டு அவனை சரிசெய்யும் பொருட்டு,
“நான் அங்க இருந்த வரை தான் நான்வெஜ் சாப்பிட்டேன். இப்ப இங்க வந்து சாப்பிடுறதை விட்டுட்டேன் மருதா. இப்ப நீ எனக்காக செஞ்சங்கிறனால தான் சாப்பிடுறேன்” எனக் கூறி அவள் உண்ண,
“தான் எத்தனை முறை அவளை அசைவம் உண்ண கூறி கெஞ்சியிருப்போம். அப்போதெல்லாம் உண்ணாது இப்போது இவனுக்காக உண்பதாய் இவள் கூறுகிறாளே!!” என மாறனின் மனம் வெகுவாய் வெகுண்டெழ கோபம் ஆறாய் ஓட ஆரம்பித்தது.
இவன் பலவாறாய் யோசித்துக் கொண்டிருக்க, வாணி மருதனிடம் நன்றாய் வாயடித்துக் கொண்டு சாப்பிட்டிருந்தாள்.
“ஆமா மதுரா, நீ என்னமோ ப்ளாக்லாம் ஆரம்பிச்சி எழுதுட்டு இருந்தியே!! அது என்னாச்சு??” என்று மருதன் கேட்க,
“இன்னும் அதெல்லாம் நியாபகம் வச்சிருக்கியாடா” என்று வாணியின் கேள்வியில் நெகிழ்ச்சியிருந்தது.
“உனக்கு பிடிச்ச பிடிக்காத எல்லா விஷயங்களும் எனக்கு நியாபகம் இருக்கு” என்று மென்மையாய் சிரித்து உரைத்தான் மருதன்.
“இதெல்லாம் எப்போ எழுதினா??” என்பது போல் மாறன் வாணியை பார்க்க,
“லண்டன்ல இருக்கும் போது எழுதினேன்ங்க… அப்ப ரொம்ப ஃப்ரீ டைம் இருந்துச்சு. லோண்லியா ஃபீல் ஆச்சு. அப்ப எழுதினது. அப்புறம் இந்தியா வந்ததும் நானே அதை மறந்துட்டேன். இவன் இப்ப சொல்லும் போது தான் ஞாபகம் வருது” என்றாள் வாணி.
இவர்கள் உண்டு முடித்து முகப்பறைக்கு வந்து அமர கையில் ஒரு பரிசுடன் வந்தான் மருதன்.
இது மதுரா பொண்ணுக்கு என்னோட பரிசு என அவளிடம் வழங்க போனவன், “மாறன் என்னனு கெஸ் பண்ணுங்க பார்ப்போம்” என்றான்.
ஏற்கனவே மாறனின் முகம் சரியில்லை, எதுவோ அவன் மனதை காயப்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்திருந்த வாணி, இப்பரிசின் பேச்சின் மூலம் அவனை இயல் நிலைக்கு கொண்டு வரலாம் என எண்ணி,
“கெஸ் பண்ணுங்க வெற்றிப்பா” என்றாள்.
அந்த பரிசு வெகுவாய் கனத்தது. அதன் அளவை வைத்து புத்தகம் என கூறினான் மாறன்.
“ஹை சூப்பர்” என மாறனின் கையை குலுக்கினாள் வாணி.
“உனக்கு என்ன கிப்ட்னு தெரியுமா?” என மாறன் வாணியை ஆச்சரியமாய் கேட்க,
“மருதனுக்கு எனக்கு என்னலாம் பிடிக்கும்னு தெரியும். அதுல நான் எதை ரொம்ப விரும்பி வாங்கனும்னு ப்ளான் செஞ்சிருப்பேனும் அவனுக்கு தெரிச்சிருக்கும். சோ ஒரு வைல்ட் கெஸ் தான் வெற்றிப்பா” என்று வாணி கூறியதும்,
பொஸஸிவ்வின் விளிம்பில் மாறன் இருக்க, கனிந்த பாசத்தின் விளிம்பில் மருதன் இருந்தான்.
வாணி மனதில் பட்டதை அப்படியே கூறிவிட்டாளேயொழிய இது மாறனை காயப்படுத்தும் என துளியளவும் அவள் எண்ணவில்லை.
முகமெல்லாம் பூவாய் மலர சிரித்த மருதன், “நம்ம நட்பை இவ்ளோ நாளாகியும் நீ மறக்காம இருக்கிறதே எனக்கு பெரிய சந்தோஷம் மதுரா. பல வருஷம் கழிச்சி பார்த்தாலும் உன் மேல இதே பாசத்தோட தான் நான் இருப்பேன்” என்று பூரிப்பாய் உரைத்தான்.
மதுவும் அவனின் அன்பில் திளைத்து நெகிழ்ந்து தான் இருந்தாள்.
“வேள்பாரி புத்தகம். இது நான் இப்ப ரீசண்ட் டைம்ல வாங்கனும்னு நினைச்சி மாறனுக்கு சொல்லனும்னு நினைச்சு நினைச்சு மறந்து போன ஒரு விஷயம். அதையே நீ பரிசா கொடுத்ததுல ரொம்பவும் சந்தோஷம்டா” என கை குலுக்கியவள்,
“ரொம்ப டைம் ஆச்சு. கிளம்பலாமாப்பா” என மாறனிடம் கேட்க,
இருவரும் மருதனிடம் விடைப்பெற்று கிளம்பினர்.
மாறனுக்கு வாணியின் மீது கொள்ளை பிரியம். ஆனால் அவளுக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்றெல்லாம் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமில்லை அவனுக்கு. வாணி அவளை பற்றி கூறும் போதும் இவன் பெரிதாய் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அது தான் அவனின் சுபாவமும் கூட. வாணியும் அவன் தன்னை பற்றி தனக்கு பிடித்ததை பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டுமெல்லாம் எண்ணவில்லை. அவனை அவனின் சுபாவத்தை அப்படியே ஏற்று அவனை அவனுக்காக நேசித்தாள்.
ஆகையால் இதெல்லாம் பெரும் பிரச்சனையாய் இதுவரை இவர்களின் வாழ்வில் வந்ததில்லை.
ஆனால் இன்று மருதன் தனக்கு தான் வாணியை பற்றி தெரியும் என்பது போல் பேசிக் கொண்டிருந்தது, அதுவும் அந்த பரிசு, அதற்கு வாணி கொடுத்த விளக்கம், மாறனை வெகுவாய் காயம்பட செய்தது. தனக்காக இவளும் பேசாமல் அவனிடம் பாசமழை பொழிந்தது கூடுதல் பொஸஸிவ்னஸ்ஸை உருவாக்கியது மாறனுக்கு.
அதுவே கோபமாய் மாறி வாணியிடம் இரண்டு நாட்கள் பேசாமல் இருக்க வைத்தது.
மருதனின் இல்லத்தில் நடந்த ஏதோ ஒன்று தான் மாறனை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது என புரிந்துக் கொண்ட வாணி, அவனே அதை கூறட்டுமென தான் இரு நாட்கள் அமைதியாய் விட்டுவிட்டாள்.
ஆனால் இந்த ஒதுக்கத்தை அதற்கு மேல் தாங்கமாட்டாதவளாய் அவளே அவனிடம் பேசவிழைந்தாள்.
அந்த பேச்சு தான் இந்த இரவில் இருவருக்கும் சண்டையாய் பெருக்கெடுக்க காத்திருந்தது.
“என்னைய நீங்க புரிஞ்சிக்கவேயில்ல வெற்றிப்பா” என்றிவள் ஒதுங்கி அமர,
தன் மேல் தான் குற்றமோ என எண்ணினாலும் அன்றைய மதுவின் பேச்சிற்கு விளக்கம் கேட்காது தன்னால் இயல்பாய் இருக்க முடியாது என எண்ணிய மாறன்,
“ஏன் மது அன்னிக்கு அவனுக்கு தான் உன்னைய பத்தி எல்லாம் தெரியும்ங்கிறது போல பேசின?? அது என்னைய அவன்கிட்ட விட்டுக்கொடுத்து பேசுறது போல இருந்துச்சு. உனக்கு பிடிச்சது பிடிக்காததுலாம் எனக்கு அவ்வளவா தெரியாதுனு உனக்கு தெரியும் தானே. “பாருங்க அவனுக்கு எல்லாம் தெரியுது, உங்களுக்கு எதுவும் தெரியுதா என்னைபத்தினு” அதை நீ குத்தி காட்டறது போல தோணுச்சு எனக்கு. ரொம்பவே ஹர்ட் ஆச்சு” என மனதின் வலியின் துயரை வார்த்தைகளாய் அவன் கூற,
அவனின் அவ்வலி இவளை பெரிதும் தாக்க, தன்னால் தன்னவன் காயப்பட்டுவிட்டானே என்ற எண்ணமே இவளின் கண்ணில் நீரை வரவழைத்து மனதை தாக்க, அவனருகில் சென்று அவனை தன் நெஞ்சில் தாங்கியிருந்தாள் வாணி.
அவன் கேசத்தை கோதியவள், “என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க? உங்களை உங்க மனசை கஷ்டபடுத்துறா மாதிரி பேசிட்டு நான் நிம்மதியா இருப்பேனு நினைக்கிறீங்களா? உங்க நிம்மதி சந்தோஷத்துல தான் என்னோட எல்லமுமே இருக்கு. உங்க கண்ணாடி மாதிரிப்பா நான். நீங்க கஷ்டப்பட்டா கண்டிப்பா என்னால தாங்க முடியாது. அப்படி இருக்கும்போது நானே எப்படி உங்களை காயப்படுத்துவேன்” என்றிவள் கேட்க, அவன் கண்ணிலிருந்து நீர் வழிந்து அவள் நெஞ்சை நனைத்தது.
இத்தனை நாள் பாரமாய் அழுத்தியிருந்த விஷயத்தை கனம் குறைந்ததன் விளைவாய் வந்த கண்ணீரது.
“நான்லாம் சின்ன விஷயத்திற்கெல்லாம் அழும் ஆளில்லை” என கெத்தாய் சுற்றும் ஆள் தான் மாறன்.
அவனுக்கே புரியவில்லை தனக்கு எதற்காக இவ்வேளையில் கண்ணீர் வருகிறதென்று.
அவளின் நெஞ்சிலிருந்து முகத்தை நிமிர்த்தி அவள் முகத்தை பார்த்தவன்,
“என்னைய விட அவனை தான் நீ பெரிசா நினைக்கிறனு மனசுல என்னென்னமோ தோண ஆரம்பிச்சிட்டு. உன் காதல் எனக்கு மட்டும் தான்னு எனக்கு தெரியும். ஆனா எல்லா விஷயத்துலயும் தன் மனைவிக்கு தான் தான் ஹீரோவா தெரியனும்னு புருஷன் நினைப்பாங்கல்ல. அப்படி அவன் உன்னைய பத்தி சொல்லும் போதெல்லாம் எனக்கு ரொம்ப பொஸஸிவ்வாகிட்டு” என மாறன் கூற,
அவன் கண்களை துடைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டவள்,
“என் வாழ்க்கைல காதல் ஒருதருக்கு மட்டும் தான். அதுவும் நான் கட்டிக்க போறவருக்கு மட்டும் தான்னு தவம் போல வாழ்ந்து உங்களை நான் கட்டிக்கிட்டேன் வெற்றிப்பா. அன்புக்கு பல பரிமாணங்கள் இருக்கு. அன்பு, பாசம், கருணை இப்படி பல பரிமாணங்கள் இருக்கு. இதெல்லாம் நமக்கு யார் மேல எப்படினாலும் வரலாம். ஆனா காதலும் நேசமும் எனக்கானவனுக்கு மட்டும் தான்னு காத்துட்டு இருந்தேன்ப்பா. அப்படி நான் தவமிருந்து பெற்ற புருஷன் நீங்க. ஐ ஜஸ்ட் லவ் த வே யு ஆர்(I Just love the way you are). எனக்கு நீங்க என்ன செஞ்சாலும் எப்படி இருந்தாலும் பிடிக்கும் வெற்றிப்பா. எனக்காக நீங்க மாறனும்னுலாம் நான் நினைக்கவே இல்ல. என் காதலும் நேசமும் எப்பவும் என்னிக்கும் உங்களுக்கு உங்களுக்கே தான். அதுல நீங்க என்னிக்கும் சந்தேகமாகி கலங்க வேண்டாம்.
நீங்க இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லைங்கிற அளவுக்கு அம்புட்டு லவ்வு உங்க மேல வச்சிருக்கேன். இப்படி சின்ன புள்ள மாதிரி கண்ணை கசக்கிட்டீங்களே என் செல்ல கண்ணப்பா” என அவனை இலகுவாக்க அவன் கன்னத்தை கிள்ளி இவள் கொஞ்ச,
ஆசுவாசமானவன் அவளின் காதலில் திக்குமுக்காடித்தான் போனான்.
அவளின் காதலுக்கு தன் காதல் ஒன்றும் சளைத்ததில்லை என்பதை செயலில் காட்ட தொடங்கினான்.
இல்லறம் நல்லறமாய் அன்பால் இணைந்த கூடலாய் நற்சந்திகளை உருவாக்கும் ஆழ்தியானமாய் இனிதாய் அரங்கேறியது.
மறுநாள் காலை அவளின் கழுத்துவளைக்குள் புதைந்து உறங்கியவனாய் ஆழ் நித்திரையில் மாறன் உறங்க, சற்றாய் வெளிச்சம் வர கண் விழித்தாள் வாணி.
அவனின் கேசத்தை கோதியவள், “வெற்றிப்பா டைம் ஆயிட்டு” என அவனை தன்னிலிருந்து பிரித்தெடுத்து எழுந்தமர்ந்தாள்.
மீண்டும் அவளிடையை கட்டிக் கொண்டு அவள் மடியில் இவன் படுத்துறங்க, அமர்ந்ததும் அவள் கழுத்தின் தாலி வெளி வந்து கண்ணில் பட, அதை எடுத்துப் பார்த்தவள் அதற்கோர் ஆழ்ந்த முத்தம் வழங்கினாள்.
“புருஷனை மடியில் வச்சிக்கிட்டு தாலிக்கு முத்தம் கொடுத்திட்டு இருக்க” என மடியில் முகம் புதைத்து கொண்டு அரை உறக்கத்தில் அவன் கேட்க,
“எனக்கு தாலி ரொம்ப பிடிக்கும் வெற்றிப்பா. கல்யாணத்துக்கு அப்புறம் பொண்ணுங்களுக்கு அழகு கூட்டுறது இந்த தாலியும் நெத்தியில வச்சிருக்க பொட்டும் தான்னு என்னோட நம்பிக்கை. இன்னும் அழகை கூட்டுறது புருஷனோட அன்பும் பாசமும் அது ஏற்படுத்துற பூரிப்பு இப்படி நிறையா இருக்கு. ஆனா எனக்கு ஃபர்ஸ்ட்டா தோணுறது இந்த தாலி தான்”
அவள் முகம் நோக்கி பார்த்தவாறு தலையை திருப்பியவன்,
“ஹ்ம்ம் பாய்ண்ட் நோட்டட். என் பெண்டாட்டிக்கு தாலி பொட்டுலாம் ரொம்ப பிடிக்கும். இனி உனக்கு என்னலாம் பிடிக்கும்னு சொல்றியோ அதெல்லாம் மண்டைல சேவ் செஞ்சிக்க போறேன். அப்ப தான் இப்படி கண்டவன் கிட்டயும் நோஸ்கட் வாங்காம இருப்பேன் நான்” என்று படு தீவிரமாய் உரைத்தான்.
“ஹா ஹா ஹா” என்று வாய் விட்டு சிரித்தவள்,
“உங்க சுபாவத்துக்கு அதெல்லாம் ரொம்ப கஷ்டம்ப்பா. ஏன் வராததெல்லாம் ட்ரை பண்றீங்க” என்று நகைத்தாள்.
“என் பொண்டாட்டிக்காக இதுகூட செய்யலனா எப்படி?” என்றவன் தீவிரமாய் கேட்க,
“ஓகோ அப்படி!!” என நகைத்தவள்,
“பார்ப்போம் பார்ப்போம் எவ்ளோ நாளைக்கு இப்படினு” என சிரித்தாள்.
அவளின் சிரிப்பை ரசித்து பார்த்திருந்தான் இவன்.
“என்ன பார்க்கிறீங்க??” என்றிவள் கேட்க,
“இன்னிக்கு கம்பெனிக்கு லீவ் போட்டுடலாமா மது” எனக் கண்ணடித்துக் கேட்க,
“நோ” என அவனை தன் மடியிலிருந்து நகர்த்தி முற்பட்டாளவள்.
“சரி சரி லீவ் போடலை. கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கிறேனே. பேசிட்டிருக்கலாம்” என்று மீண்டும் மடியில் படுத்துக் கொண்டான்.
“பேசிட்டு மட்டும் இருந்தா சந்தோஷம் தான்” என மைண்ட்வாய்ஸ்க்குள் பேசியவள்,
“ஏங்க இந்த தாலி பத்தி உங்க அபிப்பிராயம் என்னங்க” என்று கேட்டாள்.
“எனக்கு அதுலலாம் பெரிசா நம்பிக்கை இல்ல மதும்மா” என்றான் இவன்.
“என்னோட நம்பிககைய நான் சொல்றேன். என்னை பொறுத்த வரைக்கும் தாலிங்கிறது ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷன்.
உங்க கிட்ட இருக்க ஒரு பொருளை ஆழ்ந்து ரசிச்சு நீங்க உபயோகிக்கும் போது அந்த பொருளுக்கு ஏதோ ஆக போகுதுன்னா உங்க இன்ஸ்டிங்க்ட் உங்களுக்கு சொல்லும்.
உதாரணத்துக்கு பைக் சொல்லலாம். வாட்ச் சொல்லலாம். பைக்ல வர சின்ன சின்ன பிரச்சனைக்களும் நம்ம அது மேல ரொம்ப பாசமா வச்சி கவனிக்கும் போது நமக்கு அது ஃபீல் ஆகும். வாட்ச் ஓடாம போக போதுன்னா சம்டைம்ஸ் அது நமக்கு முன்னாடியே தோண ஆரம்பிச்சிடும்.”
“சரி இப்ப நீ என்ன சொல்ல வர” என எரிச்சலாய் மாறன் கேட்க,
“என்ன எரிச்சல் இப்ப உங்களுக்கு. எரிச்சலா கேட்டாலாம் சொல்ல மாட்டேன் போங்க” என அவனை பிடித்து தள்ளிவிட,
தலையணையில் விழுந்தவன், அவளின் கைபற்றி இழுக்க அவன் மேலேயே போய் விழுந்தாள் இவள்.
அவள் எழ முற்பட, அவளின் இடை பற்றி தடுத்தவன் மீதி கதைய இப்படியே பேசுவோம் என மாறன் கூற,
“அப்ப ஆபிஸ் போற ஐடியா இல்ல” என இவள் மாறனை முறைக்க,
“ம்ப்ச் அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப நீ சொல்ல வந்ததை சொல்லு” என்றான் மாறன்.
அவன் மார்பில் வாகாய் சாய்ந்துக் கொண்டவள்,
“என்ன சொல்ல வந்தேனா… உயிரற்ற பொருளாவே இருந்தாலும் நம்ம வைக்கிற கேரிங்னால எப்படி நமக்கு சில உள்ளுணர்வு அந்த பொருளை பத்தி உணர்த்துதோ அது போல தான் தாலியும்.
அதுவும் கடவுள்கிட்ட வச்சி அவங்களோட ஆசிர்வாதம் வரம்லாம் வாங்கி பல மந்திர சக்தியை உள்ளடக்கி திருமணத்தன்னைக்கு கட்டுற தாலிய நம்மளும் பக்தியா இல்லனாலும் பிடிச்சி உரிமையா உணர்ந்து பாதுகாத்தோம்னா அது நமக்கு பாஸிட்டிவ் வைப்ரேஷன கொடுக்கும்.
நம் வாழ்க்கை பாதைல ஏற்படுற சுக துக்கங்கள்ல பங்கெடுக்கும். காட்டிக்கொடுக்கும்னு எனக்கொரு நம்பிக்கை. இதெல்லாம் நம்பிக்கை இருந்தா மட்டும் தான் நடக்கும். கேட்க காமெடியா தான் இருக்கும். ஆனா என்னோட நம்பிக்கைய நான் சொல்றேன்” என்றாளிவள்.
“இவ்ளோ நேரம் நீ பேசினத நான் கேட்டேன்ல. இப்ப என் டர்ன்” என்றவன் அவள் இதழை நோக்கி செல்ல,
“இதெல்லாம் ஒத்துக்க முடியாது” என இவள் விலகி செல்ல பார்க்க, அவன் அவளுள் மூழ்கி அவளை முற்றுகையிட முற்பட்ட சமயம் கைபேசி கரடியாய் சத்தமிட்டது.
வாணி அவசர அவசரமாய் சமைத்துக் கொண்டிருக்க, மாறன் பரபரப்பாய் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.
கிளம்பி வாசல் வந்தவன், “டைம் ஆயிட்டு மது. நான் கிளம்புறேன்” என்று தன் காலுரையை நாற்காலியில் அமர்ந்து மாட்டிக் கொண்டிருக்க,
“இருங்க சட்னி அரைச்சிட்டேன். சாப்பிட்டு போங்க” என்று கூறியவள் அவசரமாய் தோசையை ஊற்றிக் கொண்டிருந்தாள்.
“நீ சாப்பிடு மது. எனக்கு நேரமில்லை. ஒரு மீட்டிங் இருக்கு. இப்ப உடனே கிளம்பினா தான் சரியா இருக்கும்” என்றவன் கூற,
“இது காலைல பெட்ல நான் சொல்லும் போது ஞாபகம் வரலியா உங்களுக்கு” என்று சிரிப்பாய் அவனை அவள் கேலி செய்ய,
“என்னம்மா செய்ய?? நீ தான் என்னை அப்படி மயக்கி வச்சிருக்க” என அவளை இவன் கேலி செய்ய,
“யாரு நான் உங்களை மயக்கினேனா??” என இவள் சண்டைக்கு நிற்க,
“இப்படி நீ சண்டை போடுற நேரத்துக்கு எனக்கு ஊட்டி விடலாம்ல” என்றவன் ஆசையாய் கூற,
“ஹ்ம்ம் இந்த பரபரப்பிலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது” என்று சிரித்தவள்,
தோசையை பிட்டு சட்னியை தொட்டு அவனுக்கு ஊட்டினாள்.
காலணி அணிந்துக் கொண்டே உண்டவன், “நீயும் சாப்டு வேலைய பாரு. நான் மதியம் வெளியே சாப்டுகிறேன். உனக்கு மட்டும் தானே சமைக்கனும்னு எதுவும் செய்யாம சாப்பிடாம இருக்காத. அப்புறம் நைட் சேர்த்து வச்சு சாப்பிட வச்சிடுவேன்”
என்றுரைத்து அவளின் நெற்றியில் இதழ் பதித்து விடைபெற்று சென்றான்.
சில மணி நேரங்களிலேயே மாறனை கைபேசியில் அழைத்தாள் மது.
அலுவலகத்தில் படு பிசியாய் வேலை செய்துக் கொண்டிருந்தவன் அவளின் அழைப்பையேற்று, “என்ன மது?? எதுவும் அர்ஜண்ட் விஷயமா?? இல்லைனா ஈவ்னிங் நான் வீட்டுக்கு வந்ததும் பேசிக்கலாமா?? இப்ப ஒரு முக்கியமான வேலை ஒன்னு செஞ்சிட்டு இருக்கேன்” என அவளை பேசவிடாது அவனே பேசிக் கொண்டிருக்க,
“ஹப்பா மூச்சு விடுங்கப்பா… அவ்ளோ முக்கியமான வேலையா… சரி வேலைய பாருங்க. மருதன் வந்திருக்கான் நம்ம வீட்டுக்கு. இன்னிக்கு நைட் ஃபிளைட்டாம். அதான் போறதுக்கு முன்னாடி நம்ம இரண்டு பேரையும் பார்த்துட்டு போகலாம்னு வந்திருக்கான்” என்றவள் கூறியதும்,
“ஃப்ளைட்லயா?? ஃப்ளைட்ல எங்க போறான்” என்றான் மாறன்.
“என்ன வெற்றிப்பா?? மறந்துட்டீங்களா?? அன்னிக்கு விருந்துக்கு போனப்ப சொன்னானே… ஆன்சைட் லண்டன் போக போறேன் திரும்பவும்னு” என்றவள் கூறியதும்,
“அன்னிக்கு இருந்த மூட் அவுட்ல நான் எங்கே அவன் பேசுறதை கேட்டேன்” என்றவன் மைண்ட் வாய்ஸ் பேச,
“ஓ மறந்துட்டேன் மது. இதோ இந்த வேலையை முடிச்சதும் வந்துடுறேன். நீ அவனுக்கு சாப்பிட எதாவது கொடுத்து கவனிச்சிட்டு இரு” என்றான் மாறன்.
நேற்றைய இரவின் மதுவின் பேச்சில் தெளிவடைந்திருந்த மாறன், மருதனை மறந்தே போயிருந்தான். தெளிந்த பிறகு தான் பேசியது சிறுபிள்ளைத் தனமாய் தோன்றியது மாறனுக்கு.
அதை தற்போது எண்ணியவன், “இந்த காதல் இப்படி தான் பாடாய்படுத்தும் போல. முன்னாடிலாம் மதுவ நான் கிண்டல் பண்ணுவேன், “என் கிட்ட மட்டும் எப்படி குழந்தைதனமாவே சண்டை போடுறனு” நேத்து நானும் அதை தானே செஞ்சி வச்சிருக்கேன்” இவன் கை வேலையில் இருந்தாலும் மனம் அதன் போக்கில் இவ்வாறாய் சிந்தித்திருக்க காதலால் விளைந்த வெட்க புன்னகை இவன் முகத்தில்.
இன்று இவள் கூறவும் தான் மருதனின் நினைவே வந்தது அவனுக்கு.
“இன்னிக்காவது மருதன் கிட்ட ஒழுங்கா பேசனும்” மனதில் நினைத்துக் கொண்டே வீட்டை நோக்கி கிளம்பினான் மாறன்.
வீட்டில் மருதனிடம் உரையாடிக் கொண்டிருந்தாள் மது.
“என்னடா ஆன்சைட்லயே செட்டில் ஆகிடலாம்னு ப்ளான் பண்ணிட்டியா??” – மது
“இப்போதைக்கு நோ ப்ளான்ஸ். அங்க போய் தான் பார்க்கனும்.” – மருதன்
“சரி எப்ப மேரேஜ் செஞ்சிக்கிறதா ப்ளான். வீட்டுல பொண்ணு பாக்குறாங்களா இல்லையா??” – மது
“இல்ல மதுரா பொண்ணு. உனக்கு தான் தெரியுமே என்னோட லவ் ஃபெய்லியர். மேரேஜ்லயே இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா உன்ன பார்த்த பிறகு உன்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா பண்ணிக்கலாம்னு தோணுது” என்று மருதன் ஆழ்ந்த குரலில் உரைத்திருக்க,
தன் குரலை செருமிக் கொண்டு உள் நுழைந்தான் மாறன்.