vithai-3
விதை 3
அடுத்து வந்த நாட்களில் அமரால் சரிவர வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை. சதா சர்வ காலமும் சிந்தையில் முந்தியது ஆதியின் நினைவுகளே. ஏதேனும் ஒரு காரணம் உருவாக்கி அடிக்கடி ஆதியை சந்தித்து வந்தான்.
அவ்வாறு சந்தித்த வேளைகளில், வேலையில் ஆதியின் அர்ப்பணிப்பு, அதில் தெரிந்த லயம்,நேர்த்தி,மனிதர்களிடம் பழகும் பாங்கு என்று நாளுக்கு நாள் அவளின் நற்குணங்கள் அவனை ஆளத் துவங்கிவிட்டன.
அவள் கண்களில் கசியும் கனிவும் காருண்யமும், அவள் பேச்சில் புரளும் பரிவும் எத்தகைய மோசமான மனநிலையையும் அமைதிப்படுத்திவிடும்.
அத்துடன் அவள் அவ்வப்போது அவனிடம் வீசும் ஆழப் பார்வையிலும், அடக்கப்பட்ட குறுநகையிலும், விழிகளில் அவ்வப்போது வந்து போகும் சிறு ஏக்கமும் தவிப்பும் அவனுக்கு ஏதோ சொல்ல விழைவதாகவே தோன்றியது. தன் அதீத கற்பனையோ என்றும் தோன்றியது.
இவ்வாறாக இரு மாதங்கள் கழிந்திருந்த நிலையில்தான் தன் நிலை உணர்ந்தான் அமர். அவளது ஒவ்வொரு செயலும் தன்னுள் சிலிர்ப்பையும் பரவசத்தையும் தோற்றுவிப்பதை உணர்ந்தான்.தான் அவள் வேலையை மட்டும் மதிக்கவில்லை. அவளையும் சேர்த்தே ரசிக்கிறோம் என்று உணர்ந்தான்.
காதலோ என்று யோசித்தவன், தான் ஒரு இஸ்லாம் மார்க்கத்தை சேர்ந்தவன். அவளோ இந்து மதத்தினை சேர்ந்தவள்.தன் குடும்ப வகையில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் அவள் வழியில் தெரியவில்லை. எதற்கு பிரச்சினை என்று இதனை முளையிலேயே கிள்ள எண்ணினான்.
அப்போதுதான் உணர்ந்தான் அவன் காதல் அவன் உயிர் வரை வேர் விட்டுள்ளதை.அவளைப் பார்ப்பது பேசுவது என அனைத்தையும் தவிர்த்து வந்தான். அதுவே அவனுக்கு மிகுந்த வலி தந்தது.
இந்நிலையில்தான் அவளுக்கு விபத்து என்றும், ஒரு மருத்துவமனையை குறிப்பிட்டு அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அமருக்கு அழைப்பு வந்தது.
அவன் மேற்கொண்டு எதையும் விசாரிக்காமல் பதறி அடித்து ஓடி அந்த மருத்துவமனையில்தான் நின்றான் .
அது ஒரு சிறு விபத்து .
ஸ்கூட்டியில் சென்றவள், சாலை ஒரு புறம் புதிதாகப் போடப்பட்டிருந்ததால், சரியாக சமன்பாடாமல் இரட்டை சாலையாக இருந்ததில் ஏற்றும் பொழுது தடுமாறி விழுந்துவிட்டாள்.
பேலன்ஸ் செய்ய காலை ஊன்ற முயற்சித்த போது பாதம் நன்றாக மடங்கியதில் சுளுக்கும், சிறு தசைநார் கிழிதலும் ஏற்படவே கடுமையான வலியில், எழவும் முடியாமல் அவஸ்தையுற்றாள்.
அந்த வழியாகச் சென்ற ஒரு நல்ல உள்ளம், அவளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவள் அலைபேசியை வாங்கி, அதில் முதலில் இருந்த எண்ணிற்கு அழைக்கவே அமரிற்கு சென்றுவிட்டது.
அவர் சிறு விபத்து என்று கூறியிருந்தாலும், அமரிற்கு பதட்டம் பாய்ந்தோடியது அவன் உள்ளத்திலும் உடலிலும். அது அவனையும் பாய்ந்தோடச் செய்து மருத்துவமனையில்தான் நிறுத்தியது.
அதற்குள் அவளுக்கு சிகிச்சையும் முடிவுற்றிருந்தது. அதிதிக்கு அமரைக் கண்டவுடன் அவள் வலி தற்காலிக ஓய்வு பெற்றது.
அவன் உடல் மொழியில் தெரிந்த பதற்றமும், இவள் மீதான அவன் விழிகளின் பரிதவிப்புடன் கூடிய பரிசோதனையும் அவள் கண்களில் கனிவையும் பிரகாசத்தையும் தோற்றுவித்தது. கண நேரத்தில் அது மறைந்து வலி சுமந்து நின்றன அவள் விழிகள்.
அவளை ஆராய்ந்துகொண்டிருந்த அவன் விழிகள்,இம்மாற்றங்களை கவனிக்கத் தவறவில்லை.அவன் தவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியவளாய்,
“ஐம் ஓகே அமர். ப்ளீஸ் டோன்ட் வொர்ரி.ஜஸ்ட் சுளுக்குதான். சின்னதா லிக்மென்ட் டேர்.த்ரீ டேய்ஸ் ரெஸ்ட் எடுத்தா போதும்”
“பார்த்து போலாம்ல. ஆர் யூ ஸ்யூர். வேற எங்கயும் அடி படலயே.கால் இப்டி வீங்கிருக்கு.எக்ஸ்ரே எடுத்து பார்த்துக்கலாமே.
அவள் சிரித்துவிட்டாள்.
“நானே டாக்டர்தான்.பார்த்துக்க மாட்டேனா. ஒன்னும் ப்ரோப்லம் இல்ல.ப்ளீஸ் காம் டவுன் அமர்.உங்க பேஸ் பார்த்தா ரத்தத்தை பார்த்து பயந்து போன குட்டி பாப்பா போல இருக்கு.”
அவள் சிரிப்பை பார்த்தவுடன் தான் அவன் சிந்தை தெளிந்தது.
“சரி வாங்க,நான் உங்கள உங்க வீட்ல ட்ராப் செய்றேன். உங்க ஸ்கூட்டி என்னாச்சு”
“நிறைய சேதாரம் ஆச்சு”
“ஜோக்கா. எவ்ளோ ட்ரை பண்ணாலும் சிரிப்பு வரல”
“அம்மா கிட்ட ட்ரைவர் அனுப்ப சொல்லி எடுக்கணும்.அங்கயே நிக்குது. அப்பா ஊர்ல இல்ல.இல்லனா அவரே பார்த்துப்பார்.”
அவளை அவள் இல்லத்தில் விட்டுவிட்டுச் சென்றவனுக்குத் தெள்ளத் தெளிவாக ஒன்று புரிந்தது.தான் அவள் மீது காதல் கொண்டிருப்பதும், அவளின்றி வாழ்க்கை கடினம் என்றும். எனவே அவளிடம் தன் காதலை கூறிவிட முடிவு செய்தான். அவள் ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் எந்தப் பிரச்சினை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
அதன் பின் நலம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று, அவள் கொண்ட காயங்களே கடுப்பாகி விரைவில் காய்ந்து காணாமல் போகுமளவு அழைத்துப் பேசினான்.ஒரு வாரம் கழித்துதான் பணிக்கு வர வேண்டும் என்ற கொசுறு வேறு.
இவன் அலப்பறையில் இன்பமாய் நொந்து போனாள் அவள்.
ஒரு வாரம் கழித்து சென்றவளை,அங்கிருந்து வரவேற்றவன் கேட் வாக் ஒன்றுதான் செய்ய வைக்கவில்லை .அந்த அளவிற்கு பரிசோதித்துவிட்டு,தனியே பேச வேண்டும் என்று அங்கிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.
அங்கே யாருமில்லை. அதிதிக்கு ஊஞ்சல் ஆடுவது மிகவும் பிடிக்கும்.அவள் ஊஞ்சலையே பார்த்துக் கொண்டிருக்க,
“உங்களுக்கு ஊஞ்சல் ஆடணுமா இப்போ?” என்று அவன் வினவ,
அவனை ஆச்சர்யமாக பார்த்தவள்,
“இல்ல, ஏதோ பேசணும்னு சொன்னீங்களே சொல்லுங்க” என்று கேட்டாள்.
“நீங்க போய் ஆடுங்க.நான் அப்டியே சொல்லிடறேன்” என்றான் அவன்.
அந்த ஊஞ்சல் சற்று உயரம் அதிகம்.காலை நிலத்தில் ஊன்றி ஆட இயலாது. யாரேனும் ஒருவர் ஒரு முறை ஆட்டிவிட்டால் மட்டுமே ஆட இயலும்.இவள் ஆட இயலாமல் தடுமாற,இவன் சென்று ஆட்டிவிட்டான் .பதறியவள், “அச்சோ அமர் என்ன செய்றீங்க, எனக்கு சங்கடமா இருக்கு. ப்ளீஸ் டோன்ட் டூ திஸ்” என்றாள்.
“இட்ஸ் ஓகே ஆதி,ஜஸ்ட் ஸ்டார்டிங்க்குத்தானே”
அவன் ஆட்டிவிட்ட போது,அவள் கூந்தலும், துப்பட்டாவும், அவளை ஸ்பரிசித்த தென்றலும் அவனை உரச,பாண்டியனுக்கு வந்த சந்தேகம் வந்திருக்கும் என்று நீங்கள் எண்ணுவீர்கள், அதுதான் இல்லை,அதற்கெல்லாம் அவன் அறிவும் ஆவியும் இங்கிருக்க வேண்டுமே. அவை வான வீதியில் ஊஞ்சலாச் சென்றுவிட்டன.
“அமர் ப்ளீஸ் போதும்,” என்ற அவள் குரலில்தான் நடப்பிற்கு வந்தான்.
இதற்குமுன் யாருடைய கூந்தலோ ஆடையோ உரசினால்,எரிச்சலோ, சங்கோஜமோதான் வரும், ஆனால் இப்போதோ,பரவசம் பொங்கி,உடல் எடையே குறைந்தது போன்ற உணர்வு.இதுதான் காதலின் மகிமையோ.
அங்கே இருந்த திட்டில் அமர்ந்தவன்,
“உங்களுக்கு கவிதை பிடிக்குமா ஆதி” என்றான்
“பிடிக்கும், ஏன் கேக்கறீங்க “
“பேஸ் புக்ல ஒரு கவிதை வந்திருக்கு, அதை படிக்குறேன்.எப்டி இருக்கு சொல்லுங்க”
“ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்களே”
“இந்த கவிதை ரிலேடட்தான் அது”
அவள் குழம்பி போனாள், இருந்தாலும், “சரி சொல்லுங்க” என்றாள்.
“ஊஞ்சலாடுவது நீ மட்டும் அல்ல பெண்ணே!
என் உள்ளமும்தான்!
(இதில் அவள் ஆடிய ஊஞ்சலின் வேகம் வெகுவாகக் குறைந்து உள்ளத்தின் வேகம் அதிகரித்தது )
காற்றில் அலைபாய்வது உன் கற்றை கார்குழல் மட்டுமல்ல,
உன் ஒற்றை வார்த்தைக்கான என்
மொத்த காதலும்தான்!
என் சட்டையை உரசிச் சென்ற உன் துப்பட்டா போல் ,
இதமாக உன் இதயத்தால் என் இதயம் உரசுவாயா ?
உனைக் கண்ட நாள் முதல்,
என் சிந்தையில் முந்துவது
உன் பிம்பம் மட்டுமே!
என் உள்ளம் உழல்கிறது உன் நினைவால்!
உலக ஓசைகள் மொத்தமும் உன் குரலில் ஒலிக்காதா?!
என்ற ஏக்கம் ஏந்துகிறது நெஞ்சம்!
உன் சர்வமும் என்னை சர்வாதிகாரம் செய்கிறது!
அதில் அடங்கி ஆனந்தம் கொள்கிறது உள்ளம்!
நம் மதம் பற்றிய கவலை வேண்டாம்!
என் கரம் பற்ற சிரம் அசைத்தால் போதும்!
யாரும் நோகாமல் எதையும் சமாளிப்பேன் !
உன் கண்களில் அவ்வப்போது தெறித்த மின்னல் ஒளியில்,
உன்னுள் ஒளிந்திருந்த காதல் கண்டேன்!
என் காதல் உரைக்கத் துணிவு கொண்டேன் !
மனம் கவர்ந்தவளே! மனையாளாய் வருவாயா?
அவன் கவிதை கூறி முடிப்பதற்குள் ஊஞ்சலின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நின்றது.
ஊஞ்சலிலிருந்து இறங்கி வந்தவள்,
“நிஜமாத்தான் சொல்றீங்களா அமர்? டூ யூ?” என்றாள்.
“ எஸ் ஐ டூ” என்றான். இதனை அதிதி எவ்வாறு எடுத்துக்கொள்வாள்.அமரின் காதல் கைகூடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Nice intro.. interesting and enthusiastic dialogues.. Going Good..All The Best!