You don't have javascript enabled
ComedyMonisha Novels

VIRUS143-1

143-1

அழகும் ஏடாகூடமான அதிபுத்திசாலித்தனமும் கலந்த ஒரு விசித்திர கலவை அவள்!

அவள்தான் மேனகா. நம் கதையின் நாயகி

அந்த கலவையானவள் தற்சமயம், “இன்னைக்கு நம்ம நினைச்சது நடக்கணும்; நடக்கும்; அதுவும் நல்லபடியா நடக்கும்!” எனக் கர்மசிரத்தையாகக் கண்களை மூடி வழிப்பட்டுக் கொண்டிருந்தாள்!

கடவுளிடம் இல்லை. கண்ணாடியிடம்!

காலை எழுந்தது முதல் உறங்கச்செல்லும் வரை ‘எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான்’ என்று ஒவ்வொன்றுக்கும் கடவுளை ஊறுகாயாகத் தொட்டுக்கொள்ளும் ரகம் இல்லை அவள்.

மாறாக தன்னை மட்டுமே முழுமையாக நம்புபவள்.

‘நம்மை மீறின ஒரு சக்தின்னு இந்த உலகத்துல எதாவது உண்டா?!’ என்று கேட்பவள்!

அதேநேரம் கடவுள் இல்லையென்று சொல்பவளும் அல்ல.

‘கடவுள் இருந்தா அவர் வேலையை அவர் செய்யட்டும்.

என் வேலையை நானே பார்த்துக்கறேன்!’ என்று சொல்லும் ரகம்.

ஆழ்வார் பேட்டை ஆண்டவரை போல புரிந்தும் புரியாமலும் பேசும் அவளிடம் இரண்டே இரண்டு நிமிடம் பேசினாலும் அவளுககு எதிரே இருப்பவரைத் தலையைப் பிய்த்துக் கொண்டு ஓட வைப்பதுதான் அவளின் பிரத்தியேக திறமை!

‘ச்சுசுசு… யாரு பெத்த புள்ளையோ?!’ என்று உச்சு கொட்டி இரக்கப்பட்டு அவளைக் கடந்து போவோரும் உண்டு.

‘சரியான கழண்டு கேஸு போல’ என்று அவளைக் கலாய்த்துவிட்டு செல்வோரும் உண்டு.

ஆனால் அவர்கள் நினைப்பது போல அவள் பரிதாபத்திற்கு உரியவளும் அல்ல! கழண்ட கேஸும் அல்ல! பைத்தியமும் அல்ல!

அதிபயங்கரமான அதிபுத்திசாலி அவள்!

அந்த புத்திசாலித்தனம்தான் பலரும் அவளைப் பாவமாகப் பார்க்கவும் கேலியாகப் பேசவும் காரணம்.

ஆனால் அவர்களைத் தப்பு சொல்ல முடியாது. அவள் பாதி நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருப்பாள். அப்படி யாரிடமாவது பேசினாலும், ‘நியூக்ளியஸ்’ ‘டீ.என்.ஏ மாலிக்யூல்’ என அறிவியல் பெயர்களைக் கொண்டு ஏதாவது 2n=46 என பார்மூலாவை சொல்லித் தொலைப்பாள். அதுதான் அவள் பிரச்சனையே!

இப்படி அவள் தனக்குத்தானே நம்பிக்கை கொடுத்துக் கொண்டு கண்ணாடி முன்பு நின்று வெகு தீவிரமாக பிராத்தனை செய்து கொண்டிருக்கும் அந்த வேளையில்,

“யாரைப் பார்த்து தொ…. நாயகின்னு கூப்பிடுக்கின்னே! கஸூமாலம் சோமாரி! ஒன் மூஞ்சில என் பிச்சாங் கையை வெக்கோ; ஒன்னையும் ஒங் கடையையும் குப்பவண்டிக்காரன் அள்ளி போட்டுக்கின்னு போவ போறான் பாரு!

அப்போ புரியும் இந்த நாயகியோட கரிநாக்கோட மகிம!” என்று சிங்காரச் சென்னையின் செந்தமிழில் யாரையோ செம்மையாகத் திட்டியவள்,

“என் அப்பன சொல்லணும்.

அந்த ஆளு ஒளுங்கா பேரும் வெக்கல; சோறும் வெக்கல!

எவனோ எலக்கியவாதி… ஏலக்கா வியாதின்னு ஒருத்தங்கிட்டபோய் பேர் வெக்க சொன்னா…

அவன் எந்த கடுப்புல இருந்தானோ!

கொற்றவ பேர வெக்கறேன்… கெட்டவ பேர வெக்கறேன்னு; இப்புடி தொல்லை நாயகின்னு பேரு வெச்சு இப்படி என்ன நாற வெச்சுட்டான்.

எங்கப்பன் உஷாரா எஸ் ஆயிட்டான்!

ஏலக்காவாதி மவனே நீ கண்டி இப்ப என் கைல கிடைச்ச கைமாத்தான் பாரு”

தன் நினைவில் வந்தவர்களையெல்லாம் வசைபாடிக்கொண்டிருந்தாள் மேனகாவின் வேலைக்காரி அந்த தொ…நாயகி என்ற பெயருக்கு சொந்தக்காரி!

நாயகி சொன்னது போல அவள் பெயர் கொற்றவை என்ற பழம் பெரும் தமிழ் கடவுளான தொன்மை நாயகியின் பெயர்தான. அதுதான் தொல்லை நாயகி!

அந்த பெயரிலுள்ள தொ… வுக்கும் நாயகிக்கும் இடைப்பட்டிருக்கும் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துச் சொல்லிவிட்டால் அவள் எரிமலையாகப் பொங்கிவிடுவாள்.

அதன் பின் வரதா புயலும் தானே புயலும் ஒன்று சேர்ந்து தாக்கியது போலச் சொன்னவன் படு சேதாரமாகி விடுவான்.

ஆனால் அவளை, “தொல்லை நாயகிஈஈஈஈஈ” என்று நீட்டி முழக்கிக் கூப்பிட்டாலும் எந்தவித சேதாரமும் ஆகாமல் உருப்படியாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒரே ஒருத்தி நம் கதையின் நாயகி மேனகா மட்டும்தான்.

அவள் அழைப்பில் கடுப்போ கடுப்பாகி புடவையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு இவள் உள்ளே வந்தாள் என்று விவரிக்கலாகாது.

ஏனென்றால் புடவை உடுத்திய பழைய வேலைக்காரிகள் போல் இல்லை இவள்.

இவள் ஒரு ஜீன்ஸ் போட்ட முனியம்மா!

லோக்கலாக பேசினாலும் ஆள் பார்க்க செம ஸ்டைலாகவே இருக்கும் குப்பம்மா!

பேரிளம்பெண் பருவத்திலிருந்தாலும் தன வயதைக் கூடுமானவரையில் குறைத்துக் காட்ட என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து கொண்டு நம் டிக்-டாக் அழகிகளைப் போல வலம் வருபவள்.

ஒரு வேளை அவளின் பின்னழகை பார்த்து யாராவது அவளது பின்னோடு வந்தாலும், அவளின் பேச்சைக் கேட்ட பின் கூவத்தில் தலை குப்புற விழுந்தது போல நாறி போய்விடுவர்.

அப்படி நாறிப்போனவர்கள் பட்டியல் மிக மிக நீளம்!

இதனால் ஒருத்தன் கூட திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்காமல் முதிர்கன்னியாகத் அவளை நிற்கவைத்த காரணத்தால் அவளுக்கு ஆண் வர்க்கத்தின் மீதே வெறுப்பு! கூடவே அபரிமிதமான கடுப்பு!

அத்தகையவள் தற்போது மேனகாவிற்கு முன் மூக்கு சிவக்க கோபமாக நிற்க, பதிலுக்கு இவளும் முறைத்தபடி நின்றாள்.

“எம்மா தபா மா ஒனக்கு சொல்றது… என் பேரை அப்படி கூப்பிடத கூப்பிடாதன்னு.

த பாரும்மா; இன்னொரு தபா நீ என் பேரை அப்படி கூப்பிட்ட வையி; உன் வேலையும் வோணா ஒண்ணும் வோணான்னு போயிக்கின்னே இருப்பேன் ஆமா!” என்றவள் முடிவாகச் சொல்ல,

“ஓ! தட்ஸ் பிரில்லியன்ட்… ஆனா அதுக்கு முன்னாடி நான் உனக்கு கொடுத்த 100 ஸ்கொயிர் + 11 ஸ்கொயிர்+ 22 ரூபீசை எடுத்து எண்ணி வைச்சிட்டு கிளம்பிட்டே இரு” என்றாள்.

“அது இன்னா மா 100 ஸ்.. குயரு” என்றவள் புரியாமல் தலை சொரிந்தவாறே, கடுப்பாகி, “யம்மா… எல்லாரண்டையும் பேசற மாதிரி என்னாண்டையும் பேசாத.

எது சொன்னாலும் கொஞ்சம் புரிற மாதிரி சொல்லு”

வரிந்துகட்டிக்கொண்டு வந்தாள் நாயகி.

“என் கூட இவ்வளவு நாள் இருக்க; அது கூட தெரியல உனக்கு” என்று சொல்லி முறைத்தவள் மேலும்,

“பத்தாயரியத்து நூத்தி நாற்பத்தி மூணு ரூபாவை எடுத்து வைச்சிட்டு நீ வேலையை விட்டு போவியோ எங்க போவியோ” என்றாள் மேனகா கறாராக.

“அம்மாங்… காசா?

அதெப்படி ம்மா; எட்டாயிரம்தானே வாங்கியிருக்கேன்; நோட்டுல கூட எழுதி வெச்சிருக்க இல்ல” என்று அவள் குழம்ப,

“ம்ம்ம்… அது போன வாரம்; இது இந்த வாரம்”

மேனகா நக்கலாக சொல்ல…

“யம்மா… இந்த வடிவேலு காமடிலாம் வாணாம்! கணக்கா சொல்லு” என அவள் எகிற,

“போன வாரம் லேப்பை கீளின் பண்ணும் போது என்னோட ஒரு பீக்கர்; நாலஞ்சு டெஸ்ட் ட்யூப்; எல்லாத்தையும் ஒடச்சியே அதென்ன கணக்கு

நான் ஆன்லைன்ல வாங்கி வெச்சிருந்த ஜீன்ஸை ‘யம்மா யம்மா கீர்த்தி சுரேஷ் அந்த பாட்டுல போட்டிருக்கிற ஜீன்ஸ் மாதிரியே இருக்குது;

இத எனக்கு குடுத்துட்டு நீ வேற வாங்கிக்கோ’ன்னு கெஞ்சி அதை எடுத்துப்போய்; லூஸ் பண்ணி போட்டுட்டு சுத்தினியே…

அது என்ன கணக்கு?” என்றாள் மேனகா கறாராக.

“அந்த கணக்கெல்லாம் இப்ப இன்னாத்துக்கு மா?

ஃப்ரீயா வுடு.

நாமல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணாங்காட்டியும்.

வூட்டில பாரு எம்மா குப்பை.

நீ அந்தாண்ட போ கொஞ்சம்.

கூட்டணும் பெருக்கணும் எம்மா வேலை கடக்கு?” என்று துடைப்ப கட்டையை எடுத்து மேனகாவின் முகத்திற்கு நேராக ஆட்டு ஆட்டு என ஆட்டிவிட்டு பெருக்க ஆரம்பித்தவள்,

“ஒரு வூட்டுல குப்பை தொட்டி இருக்கலாம்; ஆனா இப்புடி வூடே குப்பை தொட்டி கணக்கா இருந்தா எப்புடி.

இதுல… கக்கூஸ் கழுவற ஆசிட் கணக்கா இந்த லேப்புல வேற ஓரே கப்பு நெடி!

மூச்சே முட்டுது!” என்று புலம்பித் தீர்த்தபடி தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தாள் நம் தொல்… சாரி சாரி வெறும் நாயகி.

அவள் புலம்பியது போலத்தான் அந்த வீடு, ஒரு குப்பைக் கிடங்கோ என்று சந்தேகப்படும்படியாக இருந்தது. எங்குப் பார்த்தாலும் புத்தகங்கள் இரைந்திருந்தன.

போதாக்குறைக்கு வீட்டின் சுவர் முழுக்க பலவித கிறுக்கல்களுடன் ‘ஸ்டிக் நோட்’கள் ஒட்டப்பட்டு, சமையலறை மேடை தொடங்கி டைனிங் டேபிள் முழுவதும் பரவி, செருப்பு வைக்கும் ராக் வரை ஏதாவது கெமிக்கல் பார்முலாக்கள் கிறுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதோடு, ஹால் முழுதையும் அடைத்துக்கொண்டு போடப்பட்டிருந்த நீண்ட மேசையின்மேல் பல வண்ண ரசாயனங்களை தாங்கிய கண்ணாடி குடுவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அவளின் படுக்கையறையையும் கூட விட்டுவைக்காமல் ஆராய்ச்சி செய்யும் கூடமாக மாற்றி வைத்திருந்தாள்.

பலவிதமாக ஆராய்ச்சி செய்யும் உபகரணங்களோடு வொயர்கள் ஒன்றோடொன்று பின்னி பிணைத்துக்கொண்டிருக்க, மூன்று சிறிய ரக கணினிகள் ஒளிர்ந்தவண்ணம் இருக்க அந்த அறையை பார்த்தாலே தலைசுற்றி போகும்.

அதோடு ரசாயன நெடிகள் வேறு. நாயகிக்கு அந்த அறை வாசனையே அலர்ஜி.

அவளுக்கு இரவு வரையிலும் மேனகா வீட்டில்தான் வேலை. சமையல், சுத்தம் செய்வது என்று அனைத்து வேலைகளும் அவளுடையதுதான்.

ஆனால் என்ன ஆனாலும் இரவு நேரத்தில் தூங்க அவள் தன் வீட்டிற்குப் பறந்து கட்டிக் கொண்டு ஓடிவிடுவாள்.

முதல் காரணம் அந்த ஆராய்ச்சி கூடத்தில் வீசும் ரசாயன நெடி என்றால் இரண்டாவது காரணம் ஆராய்ச்சி என்ற பெயரில் மேனகா எலி போல எதையாவது உருட்டிக் கொண்டே இருப்பது.

தொல்லை நாயகியே அவள் தொல்லையில் நிம்மதியாகத் தூங்க முடியாமல் வீட்டிற்குச் சென்றுவிடுவாள்.

“ஏம்மா பாத்ரூம கூட உட மாட்டியாமா நீயி?

அங்க கூட கிறுக்கி வெச்சிருக்க?

உனக்கு வேற பொழப்பே இல்லையா?” என்று நாயகி fm ரேடியோ போல நிறுத்தாமல் புலம்ப மேனகா முகம் கோபத்தில் சிவந்தது.

“உனக்கு அதோட முக்கியத்துவம் எல்லாம் புரியாது” என்று கடுப்பாகி, “நீ முதல உன் ஸ்பீக்கர் வாய மூடு!

காலைல நான் எவ்வளவு முக்கியமான மேட்டருக்காக ப்ரெயர் பண்ணிட்டு இருந்தேன்!

வந்து கண்ட மேனிக்கு பேசி மூடையே ஸ்பாயில் பண்ணிட்டியே” என்று எரிந்துவிழுந்தாள் மேனகா.

“ஆங் கான்… பெரிய ப்ரேயரு… கண்ணாடி முன்னால நின்னு சாமி கும்பிடுறதுதெல்லாம் பிரேயரா” என்று நொடித்துக் கொண்டாள் நாயகி.

“வேறெப்படி சாமி கும்பிடணும்… நீதான் சொல்லேன்” மேனகா கிண்டலாக கேட்க,

உடனடியாக நாயகி தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த காகிதத்தை உருவ, கூடவே சில வேப்பிலைகள் வெளியே வந்து விழுந்தன.

அவள் எடுத்த பொட்டலத்திலிருந்த திருநீற்றை எடுத்து, “நிர்மலாலாலாலா னந்தம்” என்று கர்ம சிரத்தையாகக் கண்களை மூடி கொண்டு,

“காயா மாயா…

சிவாய சாயா” என்று சொல்லி மேனகாவின் நெற்றியில் பூசிவிட்டாள்.

“என்ன கர்மம் இது?” என்று அவசரமாக நெற்றியைத் துடைத்துக் கொண்டவள்,

“அதென்ன காயா சாயா மாயா? உன் நிர்மலாவோட ஆளா அவளுங்க மூணு பேரும்?” என்று கிண்டலாகக் கேட்டாள் மேனகா.

“இன்னாமா நீயி; எங்க சாமியாருக்கு பொம்பளைங்கனாலே பிடிக்காது தெரிமா? அவரு ஆசிரமத்துக்குள்ள பொம்பளைங்களே போக முடியாது தெரிமா” என்று வருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நல்ல ஒரு கெமிஸ்ட்ரிதான் போ!

உனக்கு ஆம்பிளைங்கனாலே பிடிக்காது!

அந்த ஆளுக்கு பொம்பளைங்கனா பிடிக்காதா?”

“இன்னாமா நீ ஆளு கீளுன்னு சொல்ற; சாமி ம்மா அவரு” என்று பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டாள் நாயகி.

“சரி ஆளு தேளுன்னு சொல்லல விடு” என்றவள், “சாமியா இருந்தாலும் அவரும் ஆம்பிளதானே?” என்று தீவிரமாக தனக்குள்ள எழுந்த சந்தேகத்தைக் கேட்டாள் மேனகா.

“சாமின்னா சாமிதான்; ஆம்பள பொம்பளலாம் இல்ல…

காயா மாயா… சிவாய சாயா” என்று மீண்டும் அந்த மந்திரத்தைச் சொல்லி விழிகளை மூடி பக்திமார்க்கத்திற்குச் சென்றுவிட்டாள் நாயகி.

“கர்மம் டா” என்று தலையிலடித்து கொண்ட மேனகா,

“இவகிட்ட பேசுனா நம்ம போற வேலை உறுப்பிட்ட மாதிரிதான்; பேசாம நம்ம கிளம்பற வேலையை பார்ப்போம்” என்று கோப்புகள் சிலவற்றை தன் பையில் நுழைத்து, கூடவே அவள் தயாராக எடுத்துவைத்திருத்த சிறிய ரப்பர் ட்யூப் போன்ற ஒன்றையும் சிறிய ரிமோட்டையும் தன் பையில் பத்திரப்படுத்திக்கொண்டு புறப்படத் தயாரானாள் மேனகா.

“நான் வர லேட்டாயிட்டா வீட்டை பூட்டி சாவியை எப்பவும் வைக்கிற இடத்துல வைச்சிட்டு போ” என்று எப்போதும் போலச் சொல்லிவிட்டு மேனகா வெளியே சென்றுவிட்டாள்.

மேனகா அலுவலகம் சென்று சேரும் வரை.. காயா மாயா சிவாய சாயா என்ற வார்த்தையே அவள் காதில் தீவிரமாக ஒலித்து கொண்டிருந்தது.

“காயா மாயா சிவாய சாயா அதுக்கென்ன அர்த்தமா இருக்கும்” என்று யோசித்தவள், “சை… அது என்ன அர்த்தமமா இருந்தா நமக்கென்ன… நம்ம அந்த சந்திரமௌலியை மீட் பண்றத பத்தி மட்டும் யோசிப்போம்” என்று சாலையில் நடந்தபடியே அந்த பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான உலகளவிலான பெரிய ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் சொந்தகாரரான அவரை தான் திட்டமிட்டபடி பார்த்தே தீரவேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினாள்.

“யோவ் வியாபாரகாந்தமே! உன்னோட அப்பாயின்மெண்ட்காக ஒரு வருஷமா கணம் பண்ணிட்டு இருக்கேன்.

உன் லெவலுக்கெல்லாம் என்னை மீட் பண்ண மாட்டியோ!

இன்னைக்கு நீயே என்னை தேடி வருவ… வர வைக்கிறேன் பாரு” மனதிற்குள் பேசுவதாக எண்ணி அவள் வாய் விட்டே பேசி கொண்டு சாலையில் நடந்து கொண்டிருக்க,

‘பீகரு சூப்பரா இருக்கு’ என்று அவள் பின்னோடு வந்த இளைஞனோ, “இது ஏதோ அரை லூசு போல” என்று அவளைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டுப் பின்வாங்கிக் கொண்டான்

TO COMMENT PLEASE CLICK HERE

3 thoughts on “VIRUS143-1

  • iva enna aaraichi pannitu irukaa ennathuku anthaala paarka 1 year ra waiting 🤔

    Reply
  • மேனகாவின் தன்னம்பிக்கை மற்றும் புத்திசாலித்தனம் மிகவும் ஈர்க்கக்கூடியவை. அவள் தனக்குத்தானே நம்பிக்கை வைத்து, எதையும் சாதிக்க முடியும் என்று நம்புகிறாள். அவளுடைய அறிவியல் பேச்சுகள் மற்றும் தீவிரமான பிரார்த்தனைகள் அவளின் தனித்துவத்தைக் காட்டுகின்றன. அவள் பலரால் புரிந்து கொள்ளப்படாவிட்டாலும், அவளுடைய திறமைகள் மற்றும் நம்பிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அவள் எப்படி இந்த அளவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டாள்? Given the growing economic instability due to the events in the Middle East, many businesses are looking for guaranteed fast and secure payment solutions. Recently, I came across LiberSave (LS) — they promise instant bank transfers with no chargebacks or card verification. It says integration takes 5 minutes and is already being tested in Israel and the UAE. Has anyone actually checked how this works in crisis conditions?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content