Virus 143-4
நாயகி எப்பொழுதும் போல சாலையில் போவோர் வருவோரை எல்லாம் வம்பிழுத்தபடி மேனகாவின் வீட்டு வாயிலுக்கு வந்து சேர்ந்தாள்.
கதவு மூடியிருப்பதை பார்த்து சற்றே வியப்பானவள், “இன்னா இது…எப்பவும் விடியாங்காட்டியும் கதவை திறந்து வைச்சுடும்… இன்னைக்கு இம்மா நேரமாயும் கதவூ மூடி கீது… சொல்லாம கொள்ளாம எங்கனயாச்சும் வெளியே பூடுச்சா” என்று யோசித்துவிட்டு,
“ஆன்… கதவை தட்டி பார்ப்போம்” என்று சில முறைகள் கதவை தட்டினாள் அவள்.
ஆள் அரவமே இல்லாதது போல், கதவைத் திறக்கும் சந்தடியும் கேட்காது போக, “எங்கயோ போயிருக்கு போல… சரி அப்பாலிக்கா வருவோம்” என்று நாயகி புறப்பட எத்தனிக்கும் போது கதவு திறக்கும் ஒசை கேட்டது.
அவள் பட்டென்று திரும்ப எதிரே தலையில் டர்பனெல்லாம் அணிந்து கொண்டு சர்தாஜி போல ஒருவன் வந்து நிற்கவும்,
‘இவன் யாரு… ஒரு வேளை வூடு மாறி கீறி வந்துக்கினோமோ’ என்று சுற்றும் முற்றும் குழப்பமாக பார்த்தாள் நாயகி!
“தும் கோண் ஹே?” என்று அவளை மிரட்டலாய் கேட்டான் அந்த சர்தாஜி.
நம் நாயகிதான் ஆல் இன் ஆல் அழகு ராணியாயிற்றே! அவன் பேசுவது என்ன மொழி என்பதை திறம்பட புரிந்து கொண்டவள் போல் இடுப்பில் கை வைத்து கொண்டு,
“என்ன கோணே கேனேன்னு தமில்நாட்ல இருந்துக்கின்னு என்னடா இங்கிலீபீஸு” என்று பொங்கி எழுந்தாள்.
“இது இங்கிலீபிஷ் நகி… ஹிந்தி… ஹிந்தில தும் கோன் ஹேன்னா நீ யாருன்னு அர்த்தம்! ஸம்ஜீ”
“ஓ!” என்றவனை ஏற இறங்க பார்த்தவள்,
“நீ முதல தும் கோணி ஹை?” என்றவள் பேசிய ஹிந்தியில் அவன் திணறி போனான்.
“ஹிந்தியை கொலை பண்ணாதே… நீ பேசற இந்த பஹுத் சுந்தர் ஹிந்தில… எனக்கு தெரிஞ்ச கொஞ்ச நஞ்சம் வார்த்தையும் மறந்து போயிடும்! எனக்கு நல்லாலே தமிழ் தெரியும்… நீ தமிழ்லயே பேசு” சிங் சொல்ல,
“அப்போ தமிழ் தெரிஞ்சுக்கின்னே என்னைய கலாஞ்சிக்கின்னியாடா பேமானி” என்றவள்,
“முதல நீ யாருன்னு சொல்லுடா வெண்ணைய்” என்று சீறீனாள்.
“வெண்ணெய்” என்றவளை புரியாமல் பார்க்க,
“ஆமான்டா தொண்ணை” என்றாள் அவள் மேலும்!
“ஹே… ஸ்டாப்… ஸ்டாப்… என்ன நீ கொஞ்சம் கூட ரெஸ்பெக்ட் இல்லாம பேசறே” சிங் கடுப்பாக,
“எனக்கு எந்த பிஸுகெட்டும் தெரியாது ரெஸுபெக்டும் தெரியாது… நீ முதல ஏன் மேனகா அம்மா வூட்டுல இருக்க… அதை சொல்லு” தன் அதிகாரத்தைக் காண்பித்தாள் நாயகி.
“அதை கேக்க நீ யாரு?
மேனகா மேடமுக்கு இனிமே நான்தான் ஆல் இன் ஆல்… என் பெர்மிஷன் இல்லாம நீ உள்ள வர முடியாது சம்ஜீ!” சிங் குறி பார்த்து அடிக்க,
“இன்னாது… நீதான் இனிமே அல்லாமேவா? அப்போ என்னைய வேலையை வுட்டு தூக்கிடுச்சா…
ஏதோ சும்மாங்காட்டியும் வேலையை வுட்டு போறேன்னு சொல்லிக்கினே… அதுக்கு தொப்பி போட்ட உன்னய வேலைக்கு வைச்சுக்கும்மா?” தன் உரிமை போராட்டத்தைத் தொடங்கினாள் நாயகி!
“ஏ சுப்… நான் மேனகா மேடமோட செர்வென்ட் நஹி… செக்யூரிட்டி”
“நீ எந்த சுக்கா ரொட்டியா இருந்தாலும் எனக்கு இன்னா டா… என்னை மாதிரி நீ கூட்டி பெருக்குவியா… அந்த நாத்தம் புடிச்ச லேப்ல இரண்டு நிமிசம் நிக்க முடியுமா உன்னால?
எங்க நீ போய் நின்னு கூட்டு பார்க்கலாம்” என்று தன் வீரப் பிரதாபங்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தாள் நாயகி!
‘என்னாது நாத்தம் பிடிச்ச லேப்பா’ என உள்ளுக்குள்ளே கொஞ்சம் ஜெர்க் ஆனாலும், “ஏ ஸ்டுப்பிட் லேடி… செக்யூரிட்டின்னா மேனகா மேடமோட பாதுகாப்புக்கு வந்துருக்குது… பாடி கார்ட்” என்றவன் கடுப்பாகக் கத்தவும்,
“பாது காப்பா???” என்று கேவலமாக ஒரு பார்வையை அவன் மீது ஓட்டியவள்,
“அது ரோட்ல போனாலே எவனும் சீண்ட மாட்டேன்… நீ இன்னா வூட்ல பாதுகாப்புக்கு நிற்குற… லூசாய்யா நீ” என்றாள் அவள்.
“ஷீ இஸ் அ ஜீனியஸ் சைன்டிஸ்ட்… அவங்க இந்தியாவோட பொக்கிஷம்… அவங்கள பாதுகாக்க சொல்லி டெல்லில இருந்து ஆர்டர் வந்திருக்கு” விட்டுக்கொடுக்காமல் பேசினார் அந்த சிங்.
“எவனோ தப்பு தப்பா போட்டு வுட்டிருக்கான்யா… அந்த ம்மாவுக்கு நல்லதா ஒரு சட்டை பேண்டை கூட போட தெரியாது” அவள் மேலும் மேலும் மேனகாவின் இமேஜை டேமேஜ் செய்துகொண்டே போக,
“அதெல்லாம் எனக்கு தெரியும்… நீ மேனகா மேடமோட செர்வன்ட்தானே”
“அதெல்லாம் இல்லை… நான் அந்தம்மாவுக்கு வேலைக்காரி”
‘வேலைக்காரி! என்னவோ பெரிய மினிஸ்டர் போஸ்டிங் மாதிரி பெருமையா சொல்லுது பாரு லூசு’ என்ற எண்ணம் தோன்ற, வந்த சிரிப்பை அடக்கியவாறு அவளை ஏற இறங்க பார்த்தவன், “யாரா இருந்தாலும் செக் அப் பண்ணிதான்… உள்ளே அனுப்ப முடியும்” என்றவன் வேகமாக இறங்கி நாயகியைச் சோதனை செய்வது போல அவள் இடையைத் தொட்டுவிட்டான் அவன்.
அவ்வளவுதான்! காளியாத்தா அவதாரமே எடுத்துவிட்டாள் நாயகி.
“அடிங்க… என் மேலயே கையை வைச்சுட்டியா… உன் நெஞ்சுல இருக்க மஞ்சா சோத்தை உருவரேன் பாரு” என்று அவளைக் கீழே தள்ளி மிதி மிதி என்று மிதிக்கத் தொடங்கினாள் நாயகி.
“ஐயோ!! நாயகி விடு வலிக்குது” என்று கதற கதற அவனை புரட்டி எடுத்தாள் நாயகி.
“ஏ தொல்லை நாயகி நான் மேனகா” என்று அவன் கூப்பாடு போட,
“என்ன தொ. நாயகின்னு கூப்பிட்டியா” என்று உச்ச பட்ச ஆத்திரத்தில் நாயகி அவனது டர்பனை போட்டு ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட அது தனியே கழன்று விழுந்தது.
பயத்தில் அவசரமாக அவன் தன் தாடியைப் பிய்த்து எடுக்க, வெளிப்பட்ட முகத்தைப் பார்த்தவள்,
“அய்ய… மேனகாம்மா…. நீயா!?
நான் வேற எவனோ புறம்போக்கு பயன்னு நினைச்சு?
இன்னாம்மா வேசம் இது?!” என்று சிரித்துக்கொண்டே சாவகாசமாக கேட்டாள் நாயகி.
“அம்மா… என்னா அடி” என்று வடிவேல் பாணியில் இடுப்பை பிடித்து கொண்டு எழுந்து கொள்ள முடியாமல் எழுந்து நின்று அவளை முறைத்து,
“சும்மா உன்கிட்ட ஆம்பள வேசம் போட்டு ஒரு ஒத்திகை பார்த்தா… அதுக்கு இப்படியா போட்டு மிதிப்ப” என்றாள் மேனகா.
“அட இன்னாம்மா நீ… இப்பவும் ஆம்பள குரலில் பேசுற… அதான் நீல சாயம் வெளுத்துப்போச்சு ராசா வேசம் கலைஞ்சு போச்சில்ல” என்று வெடித்துக் கிளம்பிய சிரிப்போடு கேட்டாள் நாயகி.
அவளை படுகோபமாக முறைத்த மேனகா, தள்ளாடி கொண்டே நடக்க நாயகி அவளை கை தாங்கலாக பிடித்தாள்.
“விடு” என்றவள் பிடியை உதறிவிட்டவள் தண்ணீர் பாட்டிலை தொண்டையில் சரித்து கொண்டு செருமியபடி,
“இப்ப பழைய குரல் வந்துருச்சா” என்று கேட்டாள்.
“அங்காங்… வந்துருச்சு” என்றவள் வியப்பாக,
“அது நான் கண்டுபிடிச்ச ஒரு மருந்து… அது ஒரு டிராப் தொண்டையில போட்டுக்கிட்டு பேசுனா ஆம்பள குரல் வரும்” என்று சொல்லி மேனகா தன் காலரை தூக்கி கொள்ள முயன்ற போது வலியெடுக்க, “பாரபட்சம் பார்க்காம வெளுத்துருக்கா” என்று முனகினாள்.
நாயகியோ அந்த பாட்டிலை பார்த்து, “இதெல்லாம் ஒரு மருந்துன்னு வேலை வெட்டியில்லாமா கண்டுபிடிக்கிறியாம்மா நீ” என்று படுகேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்.
மேனகாவின் முகம் கோபத்தில் சிவந்தது.
“என் கண்டுபிடிப்பு பத்தியெல்லாம் நீ பேசாதே… என் லேபை பார்த்து என்ன சொன்ன… நாத்த பிடிச்ச லேபுன்னா” என்றவள் சீற,
“அதெல்லாம் சும்மாங்காட்டியும் அப்படி சொன்னேன்… அதை போய் பெருசா எடுத்துக்கிறியாம்மா நீ” என்று நாயகி மழுப்பலாய் சொல்லி அசடு வழிய சிரித்து சமாளித்து வைக்க,
“பேசாதே” என்று முகம் கடுகடுக்க அவளை பார்த்தவள், “உன்கிட்ட பேசிட்டு இருந்தா என் வேலைதான் கெட்டு போகும்… ஒழுங்கா கிளம்பு” என்றாள்.
“இன்னாம்மா நீ… வூடெல்லாம் ஒரே குப்பையா இருக்கு… கூட்டி பெருக்க வோணாமா?” என்று நாயகி துடைப்பத்தை கையிலெடுத்து தட்ட,
“நீ இன்னைக்கு வேலை செஞ்சு ஒண்ணும் கிழிக்க வேணாம்… எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு… நான் கிளம்பணும்” என்றாள் மேனகா.
“இன்னா ம்மா… என் மேல கோபமா?” என்று நாயகி குழைய,
“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல… நான் ஒரு முக்கியமான வேலைக்காக கிளம்பிட்டு இருக்கேன்… வர லேட்டாகும்… நீ கிளம்பு… நான் வந்ததும் போன் பண்றேன்” என்றவள் பேசி கொண்ட் மீண்டும் அந்த சர்தார்ஜி வேடத்தை போட்டு கொண்டிருந்தாள்.
“அட இன்னாத்துக்குமா இந்த வேசம்… இதையெல்லாம் மாட்டுக்கின்னு இப்ப என்ன முக்கியமான வேலயா போறியாம்” என்று நாயகி ஆவல் பொங்க கேட்க,
“அது ஒரு பெரிய கதை” என்ற மேனகா அவளிடம் அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
“இப்ப நீ சாமி ஆசிரமத்துக்காமா போற” என்றவளின் தலைக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டம் தெரிந்ததென்றால் அது மிகையில்லை.
“ஆமா… அங்க லேடிஸ் அலவ்ட் இல்லையாம்… அதான் இந்த வேஷம்” என்றவள் தன் ஒப்பனையை சரி செய்து முகத்தில் தாடியை பொருத்தி கொண்டிருக்க,
“ம்மா… ம்ம்மா என்னையும் சாமி ஆசிரமத்துக்கு கூட்டிக்கினு போம்மா” என்று நாயகி ஆர்வம் பொங்க கேட்க,
“எது? உன்னை கூட்டிட்டு போகவா? நான் எதுக்கு போறேன்னு தெரியுமா உனக்கு” என்று மேனகா அவளை அலட்சிய பார்வை பார்த்தாள்.
“நீ எதுக்கு வோணாம் போம்மா… ஆனா என்னையும் கூட்டிகினு போம்மா… சாமி ஆசிரமத்துக்கு போனோம்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை ம்மா”
“அங்க லேடிஸ் அலவ்ட் இல்ல. அதனாலதான் நானே இந்த கருமம் பிடிச்ச கெட்டப்ல போக போறேன்”
“நானும் இதே கெட்டு..அப்புல… அந்த மாதிரி மண்டையில கொண்டையெல்லாம் கட்டிக்கின்னு வரேன் மா… என்னையும் கூட்டிகினு போம்மா… ம்மா ம்மா ம்மா பிளீச்” என்று நாயகி கெஞ்ச தொடங்க,
“அதெல்லாம் முடியாது நாயகி…
பெரிய ரிஸ்க்” என்று மேனகா திட்டவட்டமாக மறுத்தாள்.
“அட இன்னாம்மா நீ… ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸுக்கு சாப்புடுற மாதிரி… அஆங்” என்று நாயகி அவளை விடாமல் துரத்த,
“ரிஸ்க் உனக்கு இல்ல… எனக்கு!
அதுவும் நீ இந்த வேஷம் போட்டு சிங் மாதிரி பேசறதெல்லாம்” என்று மேனகா முகம் அஷ்டகோணலாக மாறியது.
“அதுக்கு இன்னா ம்மா… என் வாயிலயும் அந்த மருந்தை ஊத்துக்கினா நானும் ஆம்பள குரல பேசுவேன் இல்ல”
“பேசுவ பேசுவ.. ஆனா பஞ்சாப் சிங் மாதிரியா பேசுவ?
சித்தாந்திரபேட்டை சிங் மாதிரி இல்ல பேசுவ…
நீ சிங்கா மாறினா… அப்புறம் எனக்கு சங்குதான் தெரிஞ்சிக்கோ” என்றவள் அவளிடம் மறுப்பாக, “நோ வே” என்றாள்.
“என்னம்மா நீ இன்னாம்மா நீ நோ வே ப்ராட்வேன்னுட்டு… நம்ம அப்படியா பழகனோம்” என்று நாயகி மூக்கை சீந்தி அழ தொடங்கியதோடு, “நானும் அனாத! நீயும் அனாத! எனக்கு ஒண்ணுனாகாட்டி நீதான் வரணும்! உனக்கு ஒண்ணுனாகாட்டி நான்தான் வருவேன்! இப்படி என்னை கலட்டி உட பாக்கறயே! நாயமா?” என மேனகாவிடம் சென்டிமென்ட் நாடகம் ஒன்றை அரங்கேற்றியிருந்தாள் நாயகி.
அதற்கு பிறகு மேனகாவால் மறுத்தலிக்க முடியவில்லை. வேறு வழியின்றி நாயகியையும் உடன் அழைத்து சென்றாள்.
அவரே அனுப்பியிருந்த வாகனத்தில் வந்ததால் அவர்கள் மாளிகைக்குள் அவர்கள் நுழையத் தடையேதும் இருக்கவில்லை.
இருவரும் டர்பன் கட்டி கொண்டு சிங் வேஷத்தில் தன்னுடைய ரசாயனம் மற்றும் ரிமோட் சகிதம் சந்திரமௌலியின் முன்பு சென்று நின்றிருந்தனர்.
அந்த வேஷத்திலிருந்த மேனகாவை பார்த்து தனது சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாள் நேஹா.
அதையும் மீறி அவளது முகம் அவன் மனதைக் காட்டிக்கொடுக்க, ‘செய்யறதெல்லாம் செஞ்சிட்டு உனக்கு சிரிப்பா இருக்கா? ஆம்பள வேஷம் போட்டுட்டு போக சொல்லி ஐடியாவா குடுக்கற!
ஒரு நாள் இல்ல ஒருநாள் என் கிட்ட வகையா மாட்டுவடி! அன்னைக்கு இருக்கு உனக்கு’ என மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டாள் மேனகா!
“ஆமா… உன்னை மட்டும்தானே வர சொன்னேன்… இது யாரு?” என்று கேள்வியாக பார்த்தார் சந்ரு.
அவர் பார்வையின் பொருளை உணர்ந்துகொண்டு அதை அப்படியே மொழிபெயர்த்தாள் நேஹா!
“என்னோட அசிஸ்டென்ட்… என் கூட எப்பவும் இருப்பாங்க… பேர் நாயகி” என்று சந்ருவிடம் விளக்கம் கொடுத்தாள் மேனகா.
இருவரையும் கேவலமாக பார்த்தபடி, “ஒன் இஸ் கம்பெனி! டூ இஸ் க்ரௌட்! டோன்ட் யு நோ தட்” கடுகடுத்தார் அவர்.
அவர் மறுப்பாக எதோ சொல்கிறார் என்பது புரியவும், எங்கே தன்னை கழட்டிவிட்டுவிடுவார்களோ என்ற பதட்டத்துடன் முந்திக்கொண்ட நாயகி, “இன்னா கம்பெனி! என்ன க்ரௌடு!
உன் வூட்டுக்குள்ள நுழையவே எம்மாம்பெரிய கரௌட தாண்டி வந்தோங்காட்டி!
நான் வந்தாதான் மேனகாம்மா வரும்! இல்லனா எங்கயும் வராது!” என்றவள் மேனகாவை நோக்கி, “இதெல்லாம் வெளங்காது! நீ வா கண்ணு நாம போய் நம்ம லேப்புல ஆசிட்ட கொட்டி ஆராச்சி பண்ணலாம்” என்று அவளது கையை பற்றி இழுத்துக்கொண்டு திரும்பி நடக்க,
‘அய்யயோ! இவ காரியத்தையே கெடுத்துருவா போலிருக்கே! நாம எப்ப அப்படி சொன்னோம்!’ என மேனகா திருதிருவென விழிக்க, அப்பொழுதுதான் அவர்கள் இருவரின் குரலும் ஆண் குரலாக ஒலிப்பதை உணர்ந்து அதிசயித்தார் சந்திரமௌலி!
“ஹேய்! இரு! இரு! எப்படி இந்த மாதிரி மேல் வாய்ஸ்ல பேசறீங்க ரெண்டுபேரும்!”
வியப்பு மாறாமல் அவர் கேட்க, “அது என்னா மேல் வாய்ஸ்! கீல் வாய்ஸ்?” புரியாமல் நாயகி கேட்க, “ப்ச்… சும்மா இரு நாயகி” என அவளை அடக்கியவள் அவளது கண்டுபிடிப்பான அந்த குரல் மாறும் ரசாயனத்தைப் பற்றி விளக்கினாள் மேனகா.
“தண்ணி குடிச்சா குரல் பழைய மாதிரி ரிவர்ஸ் ஆயிடும்!” என அவள் சொல்ல அசந்தே போனார் சந்ரு.
‘இவளுக்காக நாயகியைச் சகித்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலைக்கு வந்தவர், அவர்களை தன்னுடன் கிளம்பி வரச்சொல்ல, ஆண்கள் மட்டுமே அடங்கிய அவருடைய சிறு பாதுகாப்புக் குழுவுடன் அந்த விருந்தினர் மாளிகையின் மாடியில் ஏற்படுத்தப்பட்டிருந்த ‘ஹலிபேட்’டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை நோக்கிப் போனார்கள் மூவரும்.
கிறுகிறுவென அதன் உச்சியில் சுற்றும் காற்றாடியின் ரக்கைகளைப் பார்த்து தாறுமாறாக மிரண்டு போன நாயகி, “இன்னாது… எலிக்காப்பட்டரா! யம்மாடி! நான் செத்தேன்! கவருமென்ட் பஸ்ஸுல போனாலே எனக்கு வயத்தை பொரட்டிகினு வரும்! இதுலயா!’ எனக் கத்தவும், தலையில் கையை வைத்துக்கொண்டார் சந்திரமௌலி.
To share your comments, please click here
Ha ha tholaya kooda ve kootitu pora
Lovely update dear