Solladi sivaskathi-21&22
21
செக்
மீனாக்ஷி தன்னோடு பேசவேண்டும் என்று சொல்ல சிவசக்தி சிறிது நேரம் மௌனமானாள். ஏன் எதற்கு என்ற கேள்விகள் அடுக்கடுக்காய் சிவசக்தி மனதில் எழ மீண்டும் மீனாக்ஷி, “என்னச்சு சிவசக்தி?” என்று கேட்டாள்.
“என்கிட்ட நீங்க என்ன பேசினோம்?” என்று சந்தேகமாய்க் கேள்வி எழுப்பினாள்.
“சக்தி… உன்னைச் சந்திக்காமலே இருந்திருந்தால் உன்கிட்ட எல்லாம் பேச வேண்டிய அவசியமே எனக்கு ஏற்பட்டிருக்காது” என்று மீனாக்ஷி சொல்லும் போது அதில் ஒரு ஏளனம் தெரிந்தது. சிவசக்தி குறுக்கே பேசாமல் அமைதிக் காத்தாள்.
“நீ சக்திக்கு எந்தவிதத்திலும் பொருத்தமானவ இல்லை… தேவையில்லாம உன்னால அவன் கஷ்டப்பட்டிட்டு இருக்கான்… எப்பவுமே எல்லா விஷயத்தையும் ஷார்ப்பா டிசைட் பண்றவன் உன்னைச் செலக்ட் பண்ணி பெரிய மிஸ்டேக் பண்ணிட்டான்” என்று சொல்லி முடிக்கச் சிவசக்தி லேசான கோபத்தோடு,
“நீங்க இதெல்லாம் என்கிட்ட சொல்ல கூடாது… உங்க மகன் கிட்ட பேசனும்” என்றாள்.
“கண்டிப்பா நான் அவன் கிட்ட சொல்லத்தான் போறேன்… அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஏன் பேசிறேன்னா… சக்தி என்ன நினைக்கிறானோ அதைச் செஞ்சி முடிச்சிடுவான்… உன்னை எப்படியும் அவன் கன்வின்ஸ் பண்ணிடுவான்… ஆனா நீ கன்வின்ஸ் ஆகக் கூடாது… இதுவரைக்கும் எப்படி இருந்தியோ அப்படியே இருந்திரு” என்றாள்.
“அப்படின்னா?” என்று சிவசக்தி குழப்பத்தோடு வினவினாள்.
“அவனை இதுவரைக்கும் நீ விரும்பல… இனிமேயும் அப்படியே இருந்திரு… தப்பித்தவறி நீ ஒகே சொல்லிட்டா அவன் என்கிட்ட சம்மதம் கேட்க வருவான்… நான் நிச்சயம் உன்னை மாதிரி திமிரு பிடிச்சவளை மருமகளா வருவதை ஒத்துக்க மாட்டேன்.
என் மகனும் என் டெசிஷனை மீறி எதுவும் செய்ய மாட்டேன்… அது உனக்குமே கஷ்டம்தான்… என் பையனோட விருப்பத்திற்கு எதிரா நிற்க எனக்கும் சங்கடமா இருக்கும்… அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாவதை நான் விரும்பல… டூ யூ அன்டர்ஸ்டான்ட்” என்று மீனாக்ஷி சிவசக்திக்கு தெளிவுபடுத்தினாள்.
“நீங்க சொன்னது எனக்கு நல்லா புரியுது… பட் இது நாள் வரைக்கும் என் டெசிஷனை நான்தான் எடுத்திருக்கேன்… அதனால் ஏற்படுகிற என்ன விளைவையும் நான் சந்திப்பேன்.
வேற யாரும் என் முடிவில் தலையிட்டதில்லை… சக்தியை நான் வேண்டாம்னு சொன்னதும் என் சொந்த முடிவுதான்… அதே மாதிரி இப்போ நிலைமை வேற… சக்தியை நான் காதலிக்கிறேன்… ஐ வான்ட் டூ மேரி ஹிம்“ என்று அவள் விருப்பத்தைச் சொல்லி முடித்தாள்.
“அப்படி ஒண்ணு உன் கனவில கூட நடக்காது” என்றாள் மீனாக்ஷி கொஞ்சம் அழுத்தத்தோடு,
“நடக்குமா நடக்காதுன்னு அப்புறம் மேடம்… ஆனா என் மனசில இருக்கிறதை சக்திக்கிட்ட நான் சொல்லியே தீருவேன்”
“சக்தி உன்னை நிராகரிச்சிட்டா அதை உன்னால தாங்கிக்க முடியுமா?” என்று மீனாக்ஷி கேட்க அந்தக் கேள்வியே சிவசக்தியை கலங்க வைத்தது.
அவனை இத்தனை நாளாக நிராகரிக்கும் போது அதன் வலியை அவள் உணர்ந்ததில்லை. உண்மையிலேயே அப்படிச் சக்தி தன்னை நிராகரித்தால் என்ற வார்த்தையே கண்ணீரை வரவழைத்தது.
“மேலும் மேலும் இந்த விஷயத்தைச் சிக்கலை மாற்றாதே… சக்தி அங்கிருந்து கிளம்பிற வரைக்கும் நீ அவன்கிட்ட இருந்து விலகியே இரு… அதுதான் உனக்கு நல்லது” என்று மீனாக்ஷி சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
தொலைப்பேசி அழைப்பு மட்டுமே துண்டிக்கப்படவில்லை. சிவசக்திக்கும் சக்திக்கும் இடையிலான காதலை சேர்த்தே மீனாக்ஷியின் உரையாடல் துண்டிக்க முற்பட்டது.
சக்திசெல்வன் விவரம் அறியாமல் ஆனந்தியோடு பேசிக் கொண்டிருக்கச் சிவசக்தி அவரகள் முன்னே நின்று,
“நீங்க விளையாடுங்க… எனக்கு மூடு இல்ல” என்றாள்.
சக்தி அவளையே கூர்மையாய் பார்த்தான். அவளிடம் ஒருவிதமான வேதனைக் குடி கொண்டது. யார் அவளிடம் பேசி இருப்பார் என்ற கேள்வியோடு,
“உங்க சக்தி அக்காவுக்கு எந்த ஆட்டத்தையும் முழுசா விளையாடுகிற தைரியம் இல்லை… தோற்று போயிடுவோமோன்னு பயம்” என்று ஆனந்தியின் முகத்தைப் பார்த்து உரைத்தான்.
“நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க சக்தி… உங்களுக்கு எதுக்குத் தேவையில்லாத சங்கடம்னு ஒதுங்கி போறேன்” என்றான்.
“வாட் டூ யூ மீன்?” என்று புரியாமல் கேட்டான்.
“என்னோட ஆட்டத்தை உங்களால சமாளிக்க முடியாது” என்றாள்.
“பார்க்கலாம்… கம்மான் கன்ட்டின்யூ” என்று சக்தி அழுத்திச் சொல்ல சிவசக்தி ஆனந்தியை படிக்கச் சொல்லி உள்ளே அனுப்பினாள்.
அவளின் முகத்தைப் பார்த்தபடியே, “யார் போன்ல?” என்று கேட்டான்.
சிவசக்தி அவனை நிமிர்ந்து நோக்கி, “மிஸஸ். மீனாக்ஷி வாசுதேவன்” என்றாள்.
சக்திசெல்வன் முகத்தில் புருவங்கள் சுருங்க,
“மாம் பேசினாங்களா… அதுவும் உன்கிட்டயா… எதுக்கு?” என்றான்.
“நெக்ஸ்ட் மூவ் உங்களோடதுதான்” என்றாள்.
“எனக்கு இப்போ கேம் விளையாடுகிற மூட் இல்ல… மாம் என்ன பேசினாங்க உன்கிட்ட?!” என்றான்.
“நானும் இதையே சொன்ன போது நீங்க கேட்டீங்களா?… இப்போ நீங்க கேம்மை கம்பிளீட் பண்ணுங்க… அப்புறம் சொல்றேன்” என்றாள்.
சக்தி அவளைப் பார்த்து முறைத்தபடி வேண்டா வெறுப்பாய் அந்த விளையாட்டை விளையாட சிவசக்தி, “செக்” என்று சொல்லி தம் வெள்ளைக் குதிரையைக் கருப்பு நிற ராணிக்கும் ராஜாவுக்கும் இடையில் வைத்தாள்.
சக்திசெல்வனின் கவனம் சிதறிய நேரத்தில் சிவசக்தி அவனைச் சிக்க வைத்தாள்.
“இந்த மூவ்ல நீங்க தப்பிக்கவே முடியாது… ராணியை விட்டுக் கொடுத்தால்தான் ஆட்டத்தைத் தொடரவே முடியும்” என்று அவனைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தாள்.
“இது வெறும் கேம்தானே” என்றான் சந்தேகத்தோடு அவளை நிமிர்ந்து பார்த்து.
“இட்ஸ் நாட் அக் கேம்… சீரியஸா இப்படி ஒரு சிட்டுவேஷன் வந்தா என்ன பண்ணுவீங்க?” என்றாள்.
மீனாக்ஷி சொன்னதைச் சிவசக்தி சூட்சமமாக உரைத்துவிட்டாள். சக்தி செல்வனை இப்போது சிவசக்தி சங்கடத்தில் ஆழ்த்தினாள். விளையாட்டாக ஆட ஆரம்பித்து இப்போது அது கொஞ்சம் விபரீதமான பாதையில் போய்க் கொண்டிருந்தது.
22
எதிர்பாராத திருப்பம்
சக்திசெல்வன் வேறு வழி ஏதேனும் இருக்கிறதா என்று அந்தச் சதுரங்க பலகையினைத் தன் பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்தான்.
சிவசக்தி அவன் யோசிப்பதை பார்த்தபடி,
“ராணியைக் காப்பாத்த நினைச்சீங்கன்னா… நீங்க கேம்ல தோற்று போயிடுவீங்க… அதனால இவ்வளவு யோசிக்காதீங்க… கம்மான் சக்தி… ராஜாவை சேஃ பண்ணுங்க” என்றாள்.
சதுரங்க ஆட்டத்தைப் பொறுத்த வரை அது ஒன்றும் அத்தனை இக்கட்டான சூழ்நிலை இல்லை. எல்லோருமே ராஜாவைத்தான் காப்பாற்ற முற்படுவார்கள். ஆனால் சக்திசெல்வன் வித்தியாசமானவன்.
ராஜாவை நகர்த்துவதற்குப் பதிலாய் ராணியை நகர்த்தினான். பின்னர் சிவசக்தியின் கண்களைப் பார்த்து,
“கேம்மை நான் உனக்கு விட்டு கொடுத்திட்டேன்னு வைச்சுக்கோ… ஆனா எந்தக் காரணத்துக்காகவும் உன்னை என்னால விட்டுக் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
சிவசக்திக்கு அவனின் வார்த்தைகள் நெகிழ்ச்சியாய் இருந்தது. உடனே அவனிடம் சென்று பேசினால் தேவையில்லாத வாக்குவாதம் உண்டாகுமே என அமைதி காத்தாள்.
அன்றைய இருள் சூழ்ந்த இரவில் சக்திசெல்வனையும் புரியாத குழப்பம் சூழ்ந்து கொண்டிருந்தது. அவன் தீவரமாய் யோசித்துக் கொண்டிருந்தான்.
ஏதோ ஒரு எண்ணம் அவனை ரொம்பவும் அலைக்கழித்துக் கொண்டிருக்க அது அவன் அம்மாவின் கோபமா அல்லது சிவசக்தியின் செயலா எனப் புரியாத புதிராய் இருக்க சிவசக்தி எப்போதும் போல் அவனுக்கான இரவு உணவை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அவன் அவளைக் கவனித்த போதும் பேசாமல் நின்றிருக்க உணவை எடுத்துச் சென்று அவள், அறைக்குள் சென்று வைத்தாள். சக்திசெல்வன் ஏதேனும் கேள்வி எழுப்பக் கூடுமோ என்று அவள் எண்ணினாள். ஆனால் அவன் மௌனமாகவே நின்றான்.
ஆதலால் சிவசக்தியே அவன் அருகாமையில் சென்று நின்றபடி,
“சக்தி உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசனும்… பேசலாமா?” என்று தயங்கியபடிக் கேட்டாள்.
“என்ன புதுசா சொல்லிடப் போற… மாம் ஏதாச்சும் கோபமா பேசி இருப்பாங்க… அந்த விஷயத்தை மனசில வைச்சிக்கிட்டு என்னைக் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணப் போற” என்றான்.
சிவசக்தி சிரித்தபடி, “முதல் முறையாய் உங்க கணிப்புத் தப்பு…” என்றாள்.
“அப்புறம் வேறென்ன?” என்று அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் திரும்பியபடி கேட்டான்.
“உங்களுக்குக் கேட்கிற விருப்பமில்லன்னா நான் அப்புறமா சொல்றேனே” என்று புறப்பட யத்தனிக்க!
இப்போது அவன் கோபத்தோடு, “வெறுப்பேத்தாதே சக்தி… என்ன சொல்ல வந்தியோ அதைச் சொல்லிட்டு போயிடு” என்றான்.
“ரொம்பக் கோபமா இருக்கீங்க… நான் அப்புறமா வர்றேன்” என்று நகர்ந்தவளை சக்திசெல்வன் அருகில் இழுத்து அணைத்தபடி, “நான் கோபமா எல்லாம் இல்ல… இப்ப சொல்லு” என்றான்.
அவனின் கரத்தின் அணைப்பு அவளைச் சலனப்படுத்த அந்த உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“ஹெலோ மிஸ்டர்… கொஞ்சம் கூட டீஸன்ஸி இல்லாம… விடுங்க” என்றாள்.
சக்திசெல்வன் அந்த நெருக்கத்திலும் அவள் விழிகளை உற்று நோக்கியபடி,
“நான் இதுவரைக்கும் டீஸன்டாதானேடி நடந்துக்கிட்டேன்… நீதானே வலிய வந்து வம்பிழுத்த” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவசக்தி அவனின் பிடியிலிருந்து வெளியே வர முயற்சித்தாள்.
ஆனால் அவளின் தவிப்பிற்கும் முயற்சிற்கும் அவனின் கரம் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.
“நீங்க செய்யறது கொஞ்சம் கூடச் சரியில்ல” என்றாள் கோபத்தோடு!
“நீ செய்றதெல்லாம் ரொம்பச் சரியா… நானும் உனக்காக எவ்வளவு இறங்க முடியுமோ இறங்கிட்டேன்… ஆனா நீ கொஞ்சங் கூட இறங்கி வர மாதிரி தெரியல… போதாக் குறைக்குக் கேம்ல என்னை லாக் பண்ணி… கேள்வி கேட்கிற… இவ்வளவு திமிரு ஆகாது” என்றான். உண்மையிலேயே அவனின் பேச்சில் கோபம் வெளிப்பட்டது.
“என்னைப் பாத்தா உங்களுக்கும் உங்கம்மாவுக்கும் திமிரு பிடிச்சவ மாதிரி தெரியுதா? ஒரு பக்கம் நீங்க உன் பிடிவாதத்தை விட்டுட்டு இறங்கி வான்னு சொல்றீங்க.
இன்னொரு பக்கம் உங்கம்மா நீ அவனுக்குத் தகுதியில்லாதவ… விலகி இருன்னு சொல்றாங்க… நான் என்ன விளையாட்டு பொம்மையா… நீங்க சொல்றபடி எல்லாம் ஆடறதுக்கு” என்று அவள் வெறுப்புடன் சொல்ல சக்திசெல்வன் அவளின் தேகத்தின் மீதான பிடியை விலக்கித் தள்ளினான்.
சக்திசெல்வன் பார்வையில் சினம் வெளிப்பட,
“உன் விருப்பப்படி எல்லாம் நான்தான் ஆடிட்டு இருக்கேன்… இதுல உனக்காக எங்கம்மாக்கிட்ட வேற பொய் சொல்லிட்டேன்” என்றான்.
அவன் தள்ளிவிட்டதில் அவளுக்கு எரிச்சல் ஏற்பட அவனின் வார்த்தை இன்னும் அவளின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது.
“வாட் டூ யூ மீன்… நான்தான் உங்கம்மாக்கிட்ட நீங்க பொய் சொல்ல காரணம்னு சொல்றீங்களா?” என்று கேட்டாள்.
“ஆமாம்… உன் திமிரு, பிடிவாதம் இதெல்லாம்தான் காரணம்” என்றான்.
“திஸ் இஸ் யுவர் லிமிட்… போதும் நிறுத்துங்க” என்று கைகளால் நிறுத்த சொல்லி சைகைச் செய்தாள்.
அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லையை மீற அப்போது அதனைக் கட்டுப்படுத்த இருவருமே சிறிது நேரம் மௌனமாய் நிற்க சிவசக்தி தலையில் கை வைத்துக் கொண்டாள்.
அவனிடம் தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த வந்து தேவையில்லாமல் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அப்போதுதான் உணர்ந்தாள். இந்தச் சூழ்நிலையில் அவனிடம் பேசுவது சரியில்லை என்று எண்ணியபடி போக நினைத்த போது,
“சக்தி ஒரு நிமிஷம் “ என்று கம்பீரமாய் அழைத்தான்.
அவனை நோக்கித் திரும்பியவளிடம்,
“நான் உனக்கு நிறையத் தொந்தரவு கொடுத்திட்டேன் இல்ல… சாரி பாஃர் எவிரித்திங்… இனிமேயும் தேவையில்லாம இந்த விஷயத்தை வளர்க்க வேண்டாம்… என்னோட காதலை நீ புரிஞ்சிக்கவே போறதில்லை.
இந்த நிமிஷத்தோட நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல… எல்லாம் முடிஞ்சிப் போச்சு… எக்ஸேம்ஸ் முடிஞ்சதும் நான் இங்க இருக்க மாட்டேன்… நான் உன் கண் முன்னாடி வரவும் மாட்டேன்” என்று சொல்ல சிவசக்தி அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்.
அவன் மேலும் அவளை நோக்கி,
“நான் சந்திச்ச முதல் தோல்வி நீ சக்தி” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.
சிவசக்தி அவனின் கோபத்தைப் பார்த்து ஸ்தம்பித்துப் போனாள். அவனிடம் சொல்ல நினைத்தது ஒன்று. ஆனால் நிகழ்ந்தது மற்றொன்று. அவனின் கோபத்திற்கு முன்னிலையில் தான் சொல்ல வந்ததை மறந்து ஊமையானாள். அவனும் கோபத்தின் காரணமாக அவள் சொல்ல நினைத்ததைக் கேட்கத் தவறினான்.
அவனைப் பார்க்க ஆவலோடு இருந்த போது அவளால் சந்திக்க முடியாமல் போனது. அவள் தவிர்க்க நினைத்த போது அவன் வம்படியாய் முன் வந்து நின்றான். அவள் காதலிக்கவே விருப்பமில்லாமல் இருந்த போது அதை நாடியவன் இன்று அவளே தன் காதலைச் சொல்ல நினைத்த போது நிராகரிக்கிறான்.
யாரிடமும் தன் வேதனையைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் சிவசக்தி தனக்குள்ளேயே மருகினாள். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நாட்கள் வேகமாய் நகர்ந்துச் செல்ல சக்திசெல்வன் எல்லோரிடமும் இயல்பாய்ப் பழகினான். எல்லோருமே அவனுக்கு நெருங்கிய உறவாய் மாறச் சிவசக்தியிடம் மட்டும் அவன் விலகியே நின்றான்.
பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வு நெருங்க நெருங்க மாணவர்கள் எல்லாம் படிக்கும் வேலையில் மும்முரமாகினர். அந்தப் பள்ளியில் உள்ள எல்லோரையும் தேர்வை குறித்த கவலை பற்றிக் கொண்டது.
சக்திசெல்வனின் நடைமுறை மட்டும் வழக்கத்திற்கு மாறாய் இருந்தது. எல்லோரையும் வகுப்பறைக்குள் அடைக்காமல் அதிக நேரம் விளையாடச் செய்தான்.
மனமும் உடலும் ஆரோக்கியமாக இருப்பது அவசியமென்று அவனின் எண்ணம் யாருக்கும் விளங்கவில்லை. அவனுக்கான பாதையை அவன் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளவில்லை.
தேர்வு நாள் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் துரிதமாயின. ஜெயாவும் சிவசக்தியும் தங்கள் பொறுப்புகளைச் சரியாகவே செய்து முடித்தனர். மாணவர்களின் மனதில் குறுகிய நாட்களில் சக்திசெல்வன் இடம்பிடித்துவிட்டான்.
ஆனந்தியும் காலம் நேரம் பார்க்காமல் உழைத்து அவளின் மருத்துவப் படிப்புக்கான கனவை நிறைவேற்றிக் கொள்ளப் பாடுபட்டாள். இமை மூடித் திறக்கும் நேரத்தில் தேர்வுகள் முடிந்துவிட்டன.
நண்பர்களையும் ஆசிரியர்களையும் பிரிவதினால் ஏற்பட்ட கண்ணீரை சுமந்தபடியும் புது அனுபவத்தை நோக்கிய பயணத்தையும் எதிர்கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அந்தப் பள்ளியை விட்டுப் பிரியா விடைபெற்றனர்.
சக்திசெல்வனும் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் நெருங்கியது. ஜோதி சாரிடம் அவன் தன்னைப் பற்றிய விவரத்தைச் சொல்ல அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இறுதியில் சக்தியின் தைரியத்தைக் குறித்து ஜோதி சார் ரொம்பவும் பெருமையோடு பாராட்டினார். அவன் தான் நாளையோடு புறப்படப் போவதாகச் சொல்லத் திடமான அவரையும் அவன் கலங்கடித்தான்.
ஜெயாவிடம் அவன் விடை பெற்றுக் கொள்ள,
“நான் உங்களை ரொம்பவும் மிஸ் பண்ணுவேன் ப்ரோ” என்றாள்.
“நானும்தான் ஜெயா… எனக்கு உங்க கூட இருந்த நாட்கள் மறக்கவே முடியாது… வெரி பியூட்டிபுஃல் மெமரீஸ்” என்றான்.
சிவசக்தி ஜெயா அருகில் நிற்க அவன் அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை.
ஜெயா தயங்கியபடி, “நீங்க சக்தியை…” என்று ஏதோ சொல்ல யத்தனிக்க அவன் அவள் பேசுவதைக் கவனிக்காதது போல்,
“சரி ஜெயா… நான் கிளம்பிறேன்… உன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டுவிட்டு ஸ்கூலை உங்கப்பாவுக்குப் பிறகு நிர்வகக்கிற பொறுப்பை வளர்த்துக்கோ… அப்புறம் உன் மேரேஜுக்கு மறக்காம இன்விட்டேஷன் அனுப்பிடனும்… ஒகே வா” என்றான்.
ஜெயா வருத்தத்தோடு தலையசைத்து வழியனுப்ப சக்திசெல்வன் புறப்பட்டான்.
எப்படியாவது அவனிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்த சிவசக்தி எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியே. அவனின் இந்த நிராகரிப்பை சிவசக்தியால் நம்பவே முடியவில்லை.
பார்வதி அம்மாவிடம் சக்திசெல்வன் அதிகம் பேசியதில்லை எனினும் அவன் அன்று இரவு அவளைச் சந்திக்கச் சென்றான்.
பார்வதி அவனை வித்தியாசமாய்ப் பார்க்க,
“என்னை உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலம்மா… பட் நான் உங்களை எங்கம்மா மாதிரிதான் பார்க்கிறேன்… உங்ககிட்ட ரொம்ப நாள் பழகின மாதிரி ஒரு உணர்வு… இது என்னோட சின்னக் கிஃப்ட்” என்று சொல்லி ஒரு அழகான புடவையைக் கொடுத்தான்.
அவனின் பாசமான வார்த்தைகள் பார்வதியின் விழியோரம் கண்ணீர் தேங்க வைத்தது. திருமணப் பந்தத்திலே இணையாது தனிமையால் ஒதுக்கப்பட்டவளுக்கு அவனின் பாசமான பேச்சு அவளின் தாய்மை உணர்வை ஊற்றெடுக்கச் செய்தது. அவளின் கண்களுக்கு அவன் பெறாத மகனாகவே காட்சியளித்தான்.
“நான் நாளைக்குக் கிளம்பிறேன்மா” என்று சொல்ல, பார்வதி அவன் தலையைத் தடவிப் பேச வார்த்தையின்றி உச்சிமுகர்ந்தாள்.
அங்கே நின்றிருந்த எல்லாப் பெண்களுக்கும் கண்ணீர் மடை திறந்தது போல் வழிந்தோடியது.
ஆனந்தி சக்தி செல்வனிடம், “சார் போகாதீங்க” என்றாள்.
“எனக்கும் இருக்கனும்தான் ஆனந்தி… பட் நிறைய வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கேன்… சோ ஐ ஹேவ் டு கோ… உனக்கு ஒரு கிஃப்ட் இருக்கு… அது உன்னோட எக்ஸேம்ஸ் ரிசல்ட் வந்த பிறகு… உன்னோட டாக்டர் படிப்புக்கான மொத்த செலவும் எஸ். எஸ் டிரஸ்ட் ஏத்துக்கும்… அதனால நீ படிக்கிறதுல மட்டும் கான்ஸன்டிரேட் பண்ணு” என்றான்.
“இங்க திரும்பி வரமாட்டீங்களா சார்…” என்று ஆனந்தி கேட்க, “உன்னைப் பார்க்கிறதுக்கு நிச்சயம் வருவேன் ஆனந்தி… ஆனா சார்னு கூப்பிடக் கூடாது… அண்ணான்னு கூப்பிடனும்”என்றான் பாசத்தோடு கூடிய அதிகார தொனியில்.
“சரிங்க அண்ணா” என்று சொல்லிவிட்டு ஆனந்தி தேம்பி தேம்பி அழுதாள். சிவசக்தி அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டு சமாதானப்படுத்தினாள்.
சக்திசெல்வன் மரியாவிடம் சென்று,
“சிஸ்ட்ர… ஒரு என். ஜி. ஒவில் நீங்க பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தைரியம் தருகிற கவுன்ஸிலிங் வேலையை எனக்காகச் செய்யனும்… செய்வீங்களா?” என்று வேண்டிக் கொண்டான். இதைக் கேட்டதும் மரியாவிற்குப் பேச வார்த்தைகளே வராமல் தவித்தாள்.
சக்திசெல்வன் பின் கமலாவிடம் தன் நண்பனின் ஹோட்டலில் தேர்ந்த தலைமை சமையல் கலைஞன் தேவை. நீங்க உங்க திறமையை வீணாடிக்கிதீங்க என்று சொல்லி சிரமப்பட்டுக் கமலாவை அங்கே வேலை செய்யச் சம்மதிக்க வைத்தான்.
இவற்றை எல்லாம் இவன் எப்போது செய்தான் என்று சிவசக்திக்கு வியப்பாய் தோன்றியது. ஆனால் எல்லோரின் தேவைகளை உணர்ந்தவன் தன்னை மட்டும் குறி வைத்து நிராகரிக்கிறான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. வனிதாவால் சிவசக்தியின் வேதனையை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
சக்திசெல்வனிடம் புரிய வைக்க வனிதா அவன் அறைக்குக் கண்ணனை தூக்கியபடி சென்றாள். கண்ணன் சக்தியை பார்த்ததும் அவனிடம் தாவினான். சக்தி தன் அறையில் அவனுக்காக வாங்கி வைத்திருந்த புதுப் பொம்மைகளை அவனிடம் கொடுத்தான். கண்ணன் விளையாடிக் கொண்டிருக்க வனிதா அவனிடம் பேச நினைக்க சக்தி முந்திக் கொண்டு, “நானே உங்ககிட்ட பேசனும்னு நினைச்சேன்” என்றான்.
“சொல்லுங்க சக்தி” என்று வனிதா ஆர்வமாய்க் கேட்க,
“தப்பா எடுத்துக்காதீங்க… நான் உங்க ஹஸ்பென்ட்கிட்ட பேசினேன்… அவர் சூழ்நிலை காரணமா உங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டாரு… மத்தபடி அவர் தப்பான கேரக்டர்னு எனக்குத் தோணல… உங்க மேல அவர் இன்னும் காதலோட இருக்காரு வனிதா…
அதனாலதான் இத்தனை நாள் பிரிவுக்குப் பிறகும் அவர் உங்கள பத்தி கவலைப்படறாரு… கண்ணன் என்னைச் சில நேரங்களில் அப்பான்னு கூப்பிடும் போது… அவனுக்குள்ள இருக்கிற ஏக்கம் என்னால நல்லா புரிஞ்சிக்க முடிஞ்சிது…
ஏன்னா நானுமே அப்பாங்கிற உறவுக்காக ஏங்கினவன்… பிகாஸ் எங்கப்பா ஒரு பிஸ்னஸ் மேன்… எப்போ எந்த நாட்டில இருப்பார்னு தெரியாது…
இப்ப இல்லன்னாலும் நாளடைவில் அப்பா இல்லையேங்கிற ஏக்கம் கண்ணனுக்கு ஏற்படும்… யோசிச்சு பாருங்களேன்… ப்ளீஸ் கண்ணனுக்காக உங்க ஹஸ்பன்டுக்கு ஒரேயொரு சேன்ஸ் கொடுத்து பாருங்க வனிதா” என்றான்.
வனிதா அதிசயித்தபடி அவனைப் பார்த்து,
“இதெல்லாம் உங்களுக்கு எப்படிச் சக்தி?” என்று கேட்க, “கமலாக்கா சொன்னாங்க” என்றான்.
இத்தனை புரிதலோடும் முதிர்ச்சியோடும் இருக்கும் அவனிடம் தான் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை என்று வனிதா நினைத்தாள். அவள் அங்கிருந்து புறப்பட சக்திசெல்வன் கண்ணனை மட்டும் தன்னோடு தங்க வைத்துக் கொண்டு இரவெல்லாம் ஆசை தீர விளையாடித் தீர்த்தான்.
விடியலே வந்துவிடக் கூடாது என்று சிவசக்தி நினைத்தாலும் அது இயற்கைக்கு மாறானதாயிற்றே. சிவசக்தி வாழ்வில் அன்றிலிருந்து படரப் போகும் இருள் குறித்துப் பூமியைப் பிரகாசமாக்கிய கதிரவனுக்குப் பாவம் தெரிந்திருக்கவில்லையே. என்ன செய்வது?
சக்திசெல்வன் மீண்டும் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு அவனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை நோக்கிச் செல்ல, சிவசக்தி அந்தத் தருணத்தில் அவனை அழைத்து,
“ஐ நீட் டு டாக் டூ யூ சக்தி… ப்ளீஸ் வெயிட்” என்றாள்.
“நானே உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன் சக்தி” என்று அவளை அவன் இயல்பாக நோக்கினான்.
அப்படி அவன் சொன்னதும் அவள் பேசாமல் மௌனமாய் நின்றாள்.
சக்திசெல்வன் சிவசக்தியின் இடது கரத்தை பற்றி அழகான வாட்ச்சை கட்டி விட்டான்.
“நைஸ் இல்ல சக்தி… உனக்கு நேரத்தோட அருமை புரிய மாட்டேங்குது… அதான் இந்தக் கிஃப்ட்… ஒரு முக்கியமான விஷயம்… தாமதிக்காம யூபிஎஸ்சி எக்ஸேம்ஸ் எழுது… ஒகே நான் வரட்டுமா” என்று அவளைப் பேச விடாமல் செய்து விட்டுத் திரும்பியவன் அவள் புறம் மீண்டும் திரும்பி,
“நான் உன்கிட்ட ஒண்ணு கேட்டா செய்வியா சக்தி?” என்று எதிர்பார்ப்போடு அவளை நோக்க,
சிவசக்தி அவனின் கேள்வி விளங்காமல் நின்றாள்.
அவன் புன்னகையோடு,
“எனக்காக அந்தப் பாரதியார் பாடல் பாடிறியா?” என்று வினவினான்.
ஏற்கனவே சோகம் தொண்டையை அடைக்கப் பாடல் பாடுவதெல்லாம் எப்படி முடியும் என அவள் யோசித்தபடி நிற்க,
“பாடுங்க அக்கா” என்று ஆனந்தி தோள்மீது கை வைத்தாள்.
“தென் இட்ஸ் ஒகே” என்று சக்திசெல்வன் ஏமாற்றத்தோடு திரும்ப,
“வெயிட் அ மினிட்” என்றாள்.
சிவசக்தி வேதனையோடும் வலியோடும்,
“நல்லதோர் வீணை செய்து
அதை நலம் கெட புழுதியில் எரிவதுண்டோ…
சொல்லடி சிவசக்தி…
என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்”
என்று பாடும் போதே கண்ணீர் எதிரே நின்ற அவனின் முகத்தை மங்கச் செய்ய”தேங்க்யூ… வெரி ஸ்வீட் வாய்ஸ்…… பை சக்தி!” என்று சொல்லி தன் காரில் ஏறி விரைந்தான்.
சிவசக்தி தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல விடாமல் அவன் நினைத்ததைப் பேசி விட்டுப் புறப்பட்டுவிட்டான். அவன் கையில் கட்டிய கடிகாரத்தைப் பார்த்தாள்.
அழுகையை மறைத்தபடி தன் அறைக்குள் சென்றாள். அவளின் அசட்டுத் தைரியம் எல்லாம் காணாமல் போக நடந்தவற்றில் அவள் தொலைத்தது எதை என்பதை இன்னும் உணர முடியாமல் குழந்தையாய் மாறி அழுதாள். ஆனால் அவள் சோகம் வடிந்தபாடில்லை.
இனி எப்போது இத்தகைய ஆண்மகனைக் காண்போம் எனச் சிவசக்திக்கு மட்டுமில்லை நமக்குமே கேள்வி பிறந்தது.