Vilakilla vithigal ‘AVAN’-6
6
பூமி தமது சுழற்சியை நிறுத்தி கொண்டது போல…
ஆகாயம் பிளந்து விட்டது போல… எரிமலைகள் எல்லாம் வெடித்துச் சிதறி எரிகுழம்பாய் பாய்ந்து வருவது போல… அவன் மனம் ஏதேதோ கற்பனைகளில் ஆழத் தொடங்கியது.
‘துர்கா இறந்துவிட்டாள்’
இல்லை! தான் கேட்ட வார்த்தை நிஜமில்லை. கனவாக இருக்க வேண்டும்.
கனவாக இருந்துவிடக் கூடாதா? ஆழமான ஏக்கத்திலும் தவிப்பிலும் அவன் மனம் புதையத் தொடங்கியது. விரும்பாத ஒரு விஷயத்தை மனம் நம்ப மறுப்பது இயல்புதான்…
முன்னுக்குப் பின் முரணாக அவன் மூளை சிந்தித்தது.
அவனால் உண்மையில் நம்ப முடியவில்லை. சரியாகத்தான் கேட்டோமா?
அந்த வார்த்தைகள் நிஜம்தானா? அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னும் தன் உடலில் ஜீவனிருக்கிறதா?
உயிருக்கு உயிராக நேசிக்கும் ஒரு உறவின் இழப்பின் வலியை எவ்விதம் விவரிக்க முடியும். ஒவ்வொரு நரம்புகளையும் அறுத்துப் போட்டது போல உணர்வுகளற்று உடலும் உயிரும் தொடர்பற்று மனம் முழுவதும் வெறுமையும் சூனியமும் சூழ்ந்து கொண்டது.
மயக்க நிலையிலிருந்து அவனால் எழுந்திருக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவன் விரும்பவில்லை.
துர்காவை முதன்முதலில் சந்தித்த அந்த நாளை நோக்கி நகர்ந்தது அவன் மனம்!
*****
கிழக்கு வானம் சிவந்து மெல்லச் சூரிய கதிர்கள் மேலெழும்பி வெளிச்ச கீற்றுகள் நகரவீதிகளில் பரவ தொடங்கியது.
சரியாக அந்த சமயத்தில் தெருவோரத்திலிருந்த டீ கடையில் சுடச்சுடத் தேநீரோடு அன்றைய செய்தித்தாளைப் புரட்டியபடி புரளி பேச ஒரு கூட்டம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
பெரும்பாலும் வெட்டியான அரசியல் பேச்சுக்களே ஒழிய அதில் எந்தவொரு பகுத்தறிதலோ அல்லது அர்த்தங்களோ இருக்காது. வெறும் அந்த நொடிக்கான செய்தியின் தாக்கங்கள் மட்டுமே அவர்கள் உரையாடலில் நிரம்பியிருக்கும்.
அன்றைய அவர்களின் பேச்சு முதல் பக்கத்தை ஆக்கிரமித்திருந்த பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் தொடங்கி அடுத்த பக்கத்திலிருந்த அரசியல் களத்திற்கு தாவியது.
ராஜ்களைச் சொட்டும் இளம் காளையாக முதலமைச்சர் அறிவழகனின் அருகில் கை குலுக்கியபடி நின்றிருந்தவன்தான் அந்த டீக்கடை புரளிப் பேசுபவர்களின் கவனத்தை ஈர்த்திருந்தான்.
அவன்தான் தீபச்சுடர் கட்சியின் இளைஞர் அணி செயலாளரான சேஷாத்ரியின் புதல்வன் முகுந்தன்.
அவனது அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் நோக்கில் தீபச்சுடரின் எதிர்காலமே! இளம் சிங்கமே! என்று நகரத்தின் முக்கிய சாலைகளிலும் வீதிகளிலும் ராட்சத உயரத்தில் பதாகைகள் அமைக்கப்பட்டன.
அதே போன்ற பதாகை ஒன்று டீக்கடையின் எதிரே உள்ள அந்த விநாயகர் ஆலயத்திற்கு அருகிலும் நிறுவப்பட்டிருந்தது.
அறிவழகனுக்கு அருகில் பவ்யமான பாவனையில் தோற்றமளித்த முகுந்தனின் புன்னகையில் வஞ்சமும் விழிகளில் வன்மமும் முற்றிலுமாக மூடிமறைக்கப்பட்ட ஒரு முகமூடியை அவன் தரித்திருந்ததை யார் அறிய இயலும்?
அரசியல்வாதியாக பரிணமிக்க அதிமுக்கிய தகுதி அத்தகைய முகமூடிகள்தானே! மற்றபடி அவன் ஓர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதும் அவனுக்கு வளமான அரசியல் எதிர்காலம் இருப்பதாக ஜிங்சான் அடிக்க ஒரு பெரிய கூட்டமும் அவன் அரசியல் சாம்ராஜ்யத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள போதுமானது.
பூரண அமைதியோடும் ஆழ்ந்த பக்தியோடும் இறைவனை வணங்கிவிட்டு தம் விழிகளை திறந்து திருநீற்றைப் பூசிக் கொண்டிருந்த சமயத்தில்தான் பாரதி அந்த பதாகையை ஊன்று கவனித்தான்.
“கோவிலை கூட விட்டு வைக்க மாட்டாங்க போல” என்று எரிச்சல் தொனியில் அவன் உதடுகள் முனகிய போதும் அந்த படத்திலிருந்து ஏதோ ஒன்று அவன் மனதிற்குள் ஆழமாகத் துளையிட்டு சென்றது. அது என்னவென்று விவரிக்க முடியாத ஓர் உணர்வு.
வெறுப்பா கோபமா அல்லது அதையும் தாண்டிய உணர்வா?
யோசனைகளோடு அந்த பதாகையை ஒரு சில முறைகள் திரும்பிப் பார்த்தபடி கடந்தவன் தேநீர்க்கடையில் வந்து செய்தித்தாளைப் பெற்றுக் கொண்டான்.
புரளி பேசும் அந்த கூட்டத்தில் தியாகுவும் இருந்தார். அவர் பாரதியை பார்த்து,
“இன்னைக்கு டவல்த் ரிசல்ட் வருது பாரதி?” என்று அச்சத்தோடு உரைத்துவிட்டு, “எனக்கு பயமா இருக்குடா?” என்று படபடத்தார்.
“டென்ஷனாகாதீங்க மாமா… வசு நிச்சயம் பாஸாகிடுவா?”
“உனக்கு நம்பிக்கை இருக்கா… ஆனா எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லைடா”
“ரிசல்ட் வரத்துக்கு முன்னாடியே ஏன் நெகட்டிவா பேசுறீங்க?”
“ஹும் என்னவோ போ… நீ சொல்ற” என்றவர் முகம் அப்போதும் அவநம்பிக்கையை பிரதிபலித்தது.
“முதல ரிசல்ட் வரட்டும் மாமா… அப்புறம் பார்த்துக்கலாம்” என்று அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து அகன்றான்.
அவன் சென்ற பிறகு தியாகுவிடம் அவரின் டீக்கடை நண்பர் ஒருவர்,
“எப்போ பாரதிக்கு… மெய்ன்ஸ் எக்ஸாம்?” என்று கேட்க,
“இந்த மாசம்தான்னு நினைக்கிறேன்… கண்டிப்பா அவன்தான் இந்தியாவுல முதல் மார்க் எடுப்பான் பாருங்களேன்” என்று உறுதியாக கூறினார். அந்தளவு அவருக்கு பாரதியின் மீது நம்பிக்கை மற்றும் மதிப்பும் இருந்தது.
எல்லோரிடமும் மிகவும் அன்பாகப் பழகக் கூடிய தியாகு தன்னுடைய இளம் வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் மனைவி இறந்து போய்விட குழந்தைகளுக்காக இராணுவ பணியைத் துறந்துவிட்டார்.
தன்னுடைய வயதான அம்மா இறந்த பிறகு பிள்ளைகளை வளர்க்க, அவர் மிகவும் சிரமப்பட்ட காலத்தில்தான் வித்யாலட்சுமி தன் மகன் பாரதியோடு அங்கே குடித்தனம் வந்தார்.
பாரதியோடு சேர்த்து வசுமதியையும் ராஜாவையும் அவர் கவனித்துக் கொண்டதில் தியாகுவின் மனதிற்கு நிம்மதியாக இருந்தது. பரஸ்பரம் உதவிகளில் தொடங்கிய அவர்கள் பந்தம் பின் அழகான சகோதரத்துவமாக மலர்ந்தது.
கணவனை இழுந்துவிட்ட வித்யாலட்சுமிக்கு ஒரு நல்ல சகோதரனாக தியாகு இருந்தார். பாரதிக்கு நிறைய வகையில் அவர் ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார்.
அவனுடைய ஐ ஏ எஸ் லட்சியத்திற்கும் ஒருவகையில் அவர்தான் உந்துதலும் கூட.
பயங்கரவாதிகளை விட நம் நாட்டின் அரசியல்வாதிகளே மிகவும் ஆபத்தானவர்கள். ஊழலெனும் துர்நாற்றம் நாடு முழுக்க வீசிக் கொண்டிருக்கின்றன. தற்சமயம் அந்த துர்நாற்றம் எல்லோருக்கும் பழகி போய் அந்த ஊழலில் மக்களும் சேர்ந்தே உழல தொடங்கிவிட்டனர்.
ஊழல் செய்யும் இந்த கூட்டத்தில் நேர்மையான அதிகாரிகள் விதிவிலக்காகிவிட்டார்கள். விதிகளுக்கு உட்பாடாதவன்தான் விதிவிலக்காகிறான். ஆனால் இங்கே விதிக்கு உட்பட்டு நடக்கிறவன்தான் விதிவிலக்காகிறான்.
பாரதி அத்தகைய நேர்மையான அதிகாரியாக உருவாக வேண்டுமென்பது தியாகுவின் ஆசை. அவர் மகன் ராஜாவுக்கு இதில் பெரிதாக விருப்பமில்லை. அவனுக்கும் பாரதிக்கும் ஒரே வயதுதான். ஆனால் அவன் சிவில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்ட போதும் பாரதி தன் படிப்பை முடித்துவிட்டு சிவில் சர்விஸ் தேர்வுக்கு தீவிரமாகப் பயின்று முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தான்.
அதேநேரம் கல்யாணம் மற்றும் விழாக்களில் ‘சிகரம்’ என்ற இன்னிசை குழுவில் பாடகனாக இருக்கிறான்.
வரிசையாக ஐந்து வீடுகள் கொண்ட அந்தக் குடித்தன வாசல் தற்போது ஆளரவமின்றி அமைதியாக இருந்தாலும் பாரதியின் வீட்டில் மட்டும் மெல்லியளவில் ரெகார்டரில் இசை கானம் ஒலித்திருந்தது, அது எப்போதும் வழக்கம்தான்.
காற்றோடு உருகி வந்த அந்த பாடலில் புல்லாங்குழல் இசை இணைந்தது போல அவன் குரலும் இழைந்து இனிமையைக் கூட்டியது என்று சொன்னால் அது மிகையில்லை.
லட்சியத்தின் மீது அவனுக்கு எந்தளவு காதல் இருந்ததோ அதே அளவு இசையின் மீதும் இருந்தது. அது இசையின் மீதான அலாதியான அழகான காதல்.
லட்சியம் என்று சொல்லி வெறித்தனமாக வாழ்க்கையின் சந்தோஷங்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு அதனைத் துரத்தி ஓடும் ரகம் அல்ல அவன். எல்லாவற்றிலும் ரசனையும் காதலும் வேண்டும் என்று எண்ணுபவன்.
பாடல் கேட்கும் போதும் பாடும் போதும் கூட அவனுக்கு அப்படித்தான். தன்னையே மறந்த நிலைக்குச் சென்றுவிடுவான்.
மனதை ஒருநிலைப்படுத்தும் தியான நிலை என்பது இசையிலும் கூட உண்டு அல்லவா? அவனும் அவ்விதம் விழிகளை மூடி இசைதியானத்தில் மூழ்கிவிடும் தருணங்கள் அதிகம்!
அவன் மனநிலை புரிந்த அவன் தாயானவள் அவன் முடியை விரல்களால் கோதிவிட்டு, “காபியை குடி டா” என்று சொல்லி கொண்டே அவன் கையிலிருந்த செய்தித்தாளை வாங்கி கொண்டார்.
“தேங்க்ஸ் மா” என்று அதனைப் பெற்றுக் கொண்டு செய்தித்தாளைப் பிரித்தவர் அதிர்ச்சி பாவத்தில்,
“இன்னைக்கு ட்வல்த் ரிசல்ட்டா? வசு பாஸாகிடுவாளா?” என்று பதட்டமாக மகனை பார்த்து வைக்க,
“சேம் ரியாக்ஷன்… தியாகு மாமாவும் உங்களை போலயேதான் ஷாக்கானார்” என்று சொல்லிச் சிரித்தான்.
“டே சிரிக்காதே டா,… எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு”
“நம்ம டென்ஷனாகுறதால நடக்கிறது நடக்காம போக போகுதா என்ன? ரிலேக்ஸ்… பாசிட்டிவா யோசிப்போம்…
அதுவுமில்லாம நீங்களே என்கிட்ட சொல்லி இருக்கீங்க எக்ஸாம்ஸ் எல்லாம் மாணவர்களோட திறமையையும் அறிவையும் தீர்மானிக்கிற விஷயமில்லன்னு” என்றவன் விவரிக்க,
“அதெல்லாம் சொன்னேன்தான்… ஆனாலும் எனக்கு பயமாதான் இருக்கு” என்றவர் முகத்தில் தயக்கமும் பயமும் நீங்காமல் இருந்தது. சில வாதங்களில் உண்மை இருந்தாலும் எதார்த்தமும் சமுதாயமும் எந்தளவில் அதனை ஏற்கும் என்ற பயம்தான் அவருக்கு!
அவர்கள் எல்லோரும் பயந்தது போலவே வசுமதி தேர்வில் தோல்வியுற்றாள். எங்கே எல்லோரும் திட்டப் போகிறார்கள் என்று வசுமதி சாமர்த்தியமாக அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள். அவள் உள்ளே அழுகிறாளோ அல்லது அழுவது போல நடிக்கிறாளோ. அது அவளுக்குத்தான் தெரியும்!
ஆனால் ராஜா உண்மையிலேயே பயந்துவிட்டான். ஓடி போய் பாரதியை அவன் அழைத்துவர, யாருக்கும் அசைந்து கொடுக்காமலிருந்த அறைக்கதவை, “வசும்மா கதவை திற” என்றவள் பாரதியின் ஒரு குரலுக்கே திறந்துவிட்டது.
“அண்ணா” என்றவன் அழுது கொண்டே வந்து பாரதியை அணைத்துக் கொண்டாள். அவளைத் தேற்றி கொண்டே ராஜாவை கண்டிப்பான ஒரு பார்வை பார்த்தான்.
“டே சத்தியமா நான் எதுவுமே சொல்லல டா”
“பொய் சொல்லாதே”
“நீ வேற… நானே இவ நாலு சப்ஜெக்ட்ல பாஸானான்னு நினைச்சி ஷாக்காகி நிற்குறேன்”
“என்கிட்ட நீ உதை வாங்க போற… சும்மா தங்கச்சியை கிண்டல் பண்ணிட்டு… போடா வெளியே” என்று அவனைத் துரத்திவிட்டு வசுமதியை பார்த்தான்.
அவள் இன்னும் அழுகையை நிறுத்தியபாடில்லை. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
“இப்ப ப்ளஸ் டூ பெயிலானதுனால என்னாயிடுச்சு? எக்ஸாம்ல பெயிலாகிட்டா வாழ்க்கையில பெயிலாகிட்டதா அர்த்தமா?” என்று அவளுக்குச் சமாதானம் உரைத்தவன்,
“இதுக்கு போய் இப்படி அழுவீங்களாக்கும்?” என்று அவள் கண்ணீரையும் துடைத்துவிட்டான்.
“அப்பா திட்டுவாங்க ண்ணா” அவள் குழந்தை போல தேம்பிக் கொண்டே சொல்ல,
“அதெல்லாம் நான் மாமாகிட்ட சொல்றேன்… நீ அழாதே” என்றவன் சொன்ன பிறகும் அவள் அழுகை மட்டுப்பட்டதாக தெரியவில்லை.
“இல்ல… கண்டிப்பா அப்பா வந்தா திட்டுவாங்க ண்ணா” என்று அவள் தேம்பியபடி இருக்க,
“அதான் நான் சொல்றேன் சொன்னேன் இல்ல… நீ அழாதே” என்றான்.
“எல்லோரும் என்னைக் கிண்டல் பண்ணுவாங்க ண்ணா”
“அவங்க பேசறது எதையும் நீ காதுல போட்டுக்காதே… பண்ணிட்டு போகட்டும்”
“இப்ப என்ன உனக்கு கெமிஸ்டிரியும் மேக்ஸ்தானே போயிடுச்சு… நம்ம திரும்பியும் எழுதிடலாம்…. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்”
“நான் திரும்பியும் பெயிலாகிட்டா?”
அத்தனை நேரம் ஒரமாக நின்று அவர்கள் உரையாடலை அமைதியாகக் கேட்டு கொண்டிருந்த ராஜா கோபமாக, “பார்த்தியா பாரதி… அப்ப கூட நம்பிக்கையா படிச்சு பாஸாகிறேன்னு சொல்றாளா பாரு” என்றான்.
“அதெல்லாம் அவ பாஸாவா?’
“ம்ம்க்கும் கிழிப்பா” என்று சொன்ன ராஜாவை முறைத்துவிட்டு வசுவின் புறம் திரும்பி,
“அவன் கிடக்குறான் வசு… நீ டிபன் வைச்சு சாப்பிடு” என்றான்.
“ஆமா அண்ணா ரொம்ப பசிக்குது… காலையில இருந்து ரிசல்ட் பார்க்கணும்னு சாப்பிடவே இல்லை” என்று ரொம்பவும் மனவருத்தப்பட்டு சொன்னவளை பார்த்து பாரதியின் முகத்தில் குறுநகை படர ராஜாவோ கடுப்பாக,
“பசிக்கும்டி பசிக்கும்… ஏன் நீ பெயிலானதுக்கு நான் வேணா மட்டன் பிரயாணி சிக்கன் 65 வாங்கி தரட்டுமா?” தங்கையை அடிக்க அவள் பாயவும்,
“பாருங்க அண்ணா” என்று வசு பாரதியிடம் தோளில் ஒண்டிக் கொண்டாள்.
“ராஜா… நீ வா என் கூட” என்று நண்பனை இழுத்து கொண்டு வெளியே வந்து நின்று, “சும்மா பெயில் பெயிலாயிட்டான்னு குத்திக் காட்டாதே ராஜா” என்றான்.
“உனக்கு தெரியாது டா…. நான் அவகிட்ட அப்பவே சொன்னேன்…. பிரஸ்ட் க்ரூப் வேண்டாம் வேண்டாம்னு… கேட்டாளா இவ… அவ ப்ரெண்ட்ஸ் எல்லாம் பிரஸ்ட் க்ரூப் எடுத்தாங்கன்னு இந்த பக்கியும் அதேயே எடுத்துது… இப்ப பாரு”
“பழைய கதையெல்லாம் பேசி இப்போ என்ன ஆக போகுது… விடுடா… அவளே பாவம் பெயிலாகிட்டோம்னு சாப்பிடாம கூட அழுதிட்டிருக்கா”
“எது… அவ அழறாளா? நீ இங்கே வா” ராஜா அவனிடம் ஜன்னல் வழியாகப் பார்க்க சொன்னான்.
“பெயிலானதை பத்தி கூட கவலை படமா என்ன கட்டு கட்டுறான்னு பாரு”
அவன் சொன்னது போலதான் வசுமதியும் தட்டில் நிறைய இட்லிகளை வைத்து வேகமாக விழுங்கி கொண்டிருந்தாள். அந்த காட்சியை பார்த்து பாரதி புன்னகைத்தான்.
“இவளுக்கு போய் சப்போர்ட் பண்ணிட்டு இருக்க” என்று ராஜா தலையிலடித்து கொண்டான்.
“சரி விடு… சும்மா அவளைப் போட்டு திட்டிட்டு இருக்காதே”
“திட்டவே மாட்டேன்… உறைக்கிற ஜென்மத்தைத்தான் திட்டலாம்…. இதெல்லாம் உஹும்” என்று ராஜா சொன்ன விதத்தை பாரதி முறைக்க,
“ஐயா சாமி… நான் எதுவும் சொல்லல… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… நான் கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட பாரதி உடனே,
“நான் வீட்டுக்கு போறேன் வசு… நீ கதவை பூட்டுக்கோ” என்று வசுமதியிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு நடந்தான்.
வித்யாலட்சுமியும் வசுமதியின் மதிப்பெண்களைப் பார்த்துப் புலம்பி தீர்த்துவிட்டார்.
“விடுங்க ம்மா… அவளை பத்தி தெரியும்ல உங்களுக்கு… அவளுக்குத்தான் படிப்புல சுத்தமா இன்ட்ரெஸ்ட் இல்லதானே” என்று அவரை சமாதானம் செய்தான். ஆனாலும் வித்யாலட்சுமியின் மனம் ஆறவே இல்லை.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் என்பதை தாண்டி அந்த தெருவில் உள்ள குழந்தைகளுக்கு அவர்தான் ட்யுஷன் டீச்சர்.
ஆதியிலிருந்து வசுமதியை இந்தளவு கொண்டு வர அவர் படாத பாடுபட்டார். ஆனால் இன்று தன்னுடைய மொத்த முயற்சியும் வீணாகப் போய்விட்டதே என்ற கவலை அவருக்கு!
இந்த சம்பாஷனை நிகழ்ந்து கொண்டிருந்த போதுதான் தொலைப்பேசியிலிருந்து அந்த அழைப்பு வந்தது.
அதனை எடுத்த பேசிய வித்யா பதட்டமானார்.
“………”
“என்ன ம்மா பிரச்சனை?”
“………”
“என்னம்மா சொல்ற நீ… சாக போறியா? லூசா நீ… துர்கா வேண்டாம்”
எதிர்புறத்தில் யார் பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்று பாரதிக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ஏதோ பெரிய பிரச்சனை என்று ஓரளவு புரிந்தது.
அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டதில் வித்யா மீண்டும் முயன்று தோற்று போனார்.
இறுதியாக பேசிய வார்த்தைகளில் பாரதியும் பதறிப் போய்,
“என்னாச்சு ம்மா யாரு… என்ன பிரச்சனை?” என்றான்.
“துர்கா… அவங்க அம்மா கூட பீகாரி… கட்டிட வேலை செய்றவங்க”
“ஆமா தெரியும்”
“சாக போறோம் அது இதுன்னு சொல்லி பயமுறுத்துறா டா… வாடா உடனே கிளம்பலாம்”
“டென்ஷனாகதீங்க…. முதல அந்த பொண்ணு எங்க இருந்து பேசறான்னு சொல்லுங்க” என்றவன் தன் பைக் சாவியைப் பரபரப்பாக எடுத்துக் கொண்டே,
“ஏன் ம்மா எக்ஸாம்ல பெயிலாகிட்டாளா?” என்று கேட்டான்.
“நீ வேற… அந்த பொண்ணுதான் ஸ்கூல் பிர்ஸ்ட்… இப்பதான் போன் பண்ணி வேணி மிஸ் சொன்னாங்க”
ஒரு நொடி வியப்பு குறியோடு தன் அம்மாவை பார்த்தவன் பின் தாமதிக்காமல் அவரையும் அழைத்துக் கொண்டு பைக்கில் சென்று தங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவிலிருந்த கட்டி முடிக்கப்படாத ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தின் முன்பு சென்று நிறுத்தினான்.
சூரியன் மறைந்து மெல்ல இருள் சூழ தொடங்கியது. ஆளரவமின்றி இருந்த அந்த கட்டிடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்கொளிகள் தென்பட்டன. அவர்கள் அந்த இடம் முழுக்க அலசி ஆராய்ந்துவிட்டு,
“நான் மேல போய் பார்க்கிறேன்” என்று ஓடினான்.
“நானும் வரேன் டா” என்று சொல்லி அவனை பின்தொடர்ந்தவரிடம்,
“இல்ல ம்மா நீங்க இங்கேயே நில்லுங்க” என்றவன் அவரை தடுத்து அங்கேயே நிறுத்திவிட்டு வெகுவிரைவாக அந்த நான்கு மாடி கட்டிடத்தின் ஒவ்வொரு தளமாக ஏறி முழுவதுமாக சுற்றி தேடினான்.
மூன்றாவது தளத்தில் உள்ள அறைகளைத் தேடுகையில் காற்றின் நிசப்தங்களோடு மெலிதாக சின்னதாக விசும்பல் சத்தம் கேட்டது.
அவசரமாக சத்தம் கேட்ட அறையில் அவன் நுழைந்து தேட, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிமென்டு மூட்டைகளின் இடுக்குகளில் முடங்கியபடி தன் முகத்தைக் கால்களில் புதைத்துக் கொண்டு விசும்பியபடி அமர்ந்திருந்தாள் அந்த இளையவள்.
நாயகன் நாயகியை பார்க்கும் தருணம் ., waiting for next episode .,
Nice update