Iru thruvangal-6to10
6
காதலின் வலி
விந்தியா வனிதாவையும் சிந்துவையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சிவாவின் வீட்டை நோக்கி புறப்பட்டாள். ‘சிவாவை எப்படி எதிர்கொள்ள போகிறோமோ’ என்று கவலை ஒரு புறமும், ‘வனிதாவின் பிரச்சனையை எப்படித் தீர்க்கப் போகிறோம்’ என்ற கவலை மறுபுறமும் அவளை வேதனையுற செய்து கொண்டிருந்தது.
ஆனால் வனிதாவின் கவலையோ முற்றிலும் வேறு. விந்தியாவை நோக்கி அவளின் கேள்வியை எழுப்பினாள்.
“அக்கா…”
“ம்ம்ம்ம்…” என்றாள் சிரத்தையின்றி.
“நீ இன்னுமும் மாமாவை மறக்கலையா?” விந்தியா பதறிக் கொண்டு வனிதாவை நோக்கினாள்.
“என்னடி உளர்ற?” என்றாள் விந்தியா கோபத்தோடு.
“எனக்குத் தெரியும் அக்கா… மாமா கல்யாணம் ஆன முதல் நாளிலேயே உங்க காதலை பற்றிச் சொல்லிட்டாரு”
நெற்றி பொட்டில் கை வைத்துக் கொண்டு, ‘சிவாவுக்கு அறிவே இல்லை’ என்று நினைத்து கொண்டாள்.
“வனிதா… தேவையில்லாததைப் பற்றி யோசித்து மனசை போட்டு குழப்பிக்காதே”
“அப்போ அந்த ஃபோட்டோ?” விந்தியாவின் பார்வையில் வீசிய கோபத்தைக் கண்டு வனிதா மெளனமானாள். ஆட்டோ நேராகப் போலீஸ் குவாட்டர்ஸ் வாசலில் நின்றது. சிவா சப்–இன்ஸ்பெக்டராக இருக்கிறான்.
அந்த வேலை அவனுடைய சிறு வயது கனவு. பெரும் முயற்சிக்குப் பின் நிறைவேறியது.
சரோஜா விந்தியாவைப் பார்த்ததும் ஆவலோடு வரவேற்றாள். சரோஜாவின் அண்ணணை விந்தியாவின் தாய் மாதவி மணந்து கொண்டாள். மாதவியின் அண்ணன் தனசேகரனை சரோஜாவுக்கு மணமுடித்தனர்.
இது இரு வழி உறவுமுறை. இவர்களின் ஒரே மகன் சிவா.
விந்தியா உள்ளே நுழையும் போது வனிதா தயங்கி நின்று,
“என்னைக் கூப்பிடவேயில்லை?” என்றாள்.
“நீ என்ன விருந்தாளியா? இது உன்னுடைய வீடு” என்று சொல்லி அவளை இழுத்து வந்தாள்.
சிந்து உள்ளே நுழைந்ததும் சோபாவில் அமர்ந்திருந்த தன் தாத்தாவின் மடியில் ஏறிக் கொண்டாள்.
தனசேகரன் விந்தியாவைக் கண்டவுடன் அளவில்லா ஆனந்தத்தோடு வரவேற்றார். அத்தை, மாமா இருவரும் விந்தியா தன் குடும்பத்தை ஒற்றை ஆளாய் தாங்குகிறாளே என்று எண்ணத்தில் பச்சாதாபத்தையும் பாராட்டடையும் மாறி மாறி பொழிந்தனர்.
வனிதாவிற்குப் பொறாமை கனலாய் எரிந்து கொண்டிருந்தது.
அங்கே மாட்டப்பட்டிருந்த சிவாவின் சிறு வயது புகைப்படம் தேங்கியிருந்த பழைய எண்ணங்களை வடிய விட்டது. சிவாவிற்கும் விந்தியாவிற்கும் கிட்டதட்ட ஒரே வயது. பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தது மட்டுமல்லாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர்.
பலரும் அவர்களைக் காதலர்கள் என்று பறைசாற்ற அது அவர்களின் மனதிலும் ஆழமாய்ப் பதிந்து போனது. போதாக்குறைக்கு அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தனர்.
படிப்பை முடித்ததும் சிவா தன் கனவின் பின்னோடு செல்ல விந்தியா தன் குடும்பத்திற்காக பணத்தின் பின்னோடு ஓடினாள். கடைசியில் சிவாவின் போலீஸ் கனவு நிறைவேறியதும் விந்தியாவைப் பெண் கேட்க வந்தனர். அப்பொழுதுதான் வனிதாவின் ஆசை தெரிய வர விந்தியா கதையை மாற்றினாள்.
அங்குதான் சிவாவின் கோபம் விந்தியாவின் மீது பாய்ந்தது.
“அம்மா அப்பாக்கிட்ட நம்ம இரண்டு பேரும் நண்பர்கள்னு சொன்னியா?”
“ம்… சொன்னேன். அதுதானே உண்மை! சுற்றி இருக்கிறவங்க நம்மைக் குழப்பிட்டாங்க. நம்ம வயசும் அப்படி யோசிக்க வைச்சிடுச்சு” என்று சிறிதும் சலனமில்லாமல் பதிலுரைத்தாள்.
“சோ… நான் வனிதாவை கல்யாணம் செஞ்சிக்கணும்… அப்படித்தானே மிஸ். விந்தியா?” இந்தக் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.
“நீ பெரிய தியாகச் செம்மலா இருந்துட்டு போ… ஐ டோன்ட் கேர். ஆனா, என்னோட வாழ்கையையும் சேர்த்துத் தியாகம் செய்ய நீ யாருடி?”
“அப்படி இல்ல சிவா… நான் உனக்காகத்தான்…” என்று அவள் ஏதோ சொல்ல தொடங்க, சிவா விந்தியாவின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“நான் உன் கூட இருக்கேன்டி. உன் குடும்பத்தோட எல்லாத் தேவைகளையும் பூர்த்திச் செய்ய உனக்குத் துணையா இருக்கேன்”
விந்தியா கைகளை உதறிக் கொண்டாள்.
“என் குடும்பத்துக்காக யாரும் எந்த உதவியையும் செய்ய வேண்டாம். உன்னோட துணை எனக்குத் தேவையும் இல்லை... நான் அத்தனை பலவீனமானவளும் இல்லை”
“அப்படின்னா சரி… ஆனால், கனவிலும் உன் தங்கையைத் திருமணம் செய்துப்பேன்னு நினைக்காதே” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே விந்தியா அங்கிருந்து அகன்றாள்.
அது அவனை நிராகரிக்க அல்ல. அவளையும் மீறிக் கொண்டு வந்த கண்ணீரை மறைக்க.
அவன் பிடிவாதம்… அவன் பெற்றோரின் வேண்டுதலுக்கு முன் பொய்யாய் போனது. விதி அவனை வனிதாவோடே இணைத்து வைத்தது.
வனிதாவுக்கும் சிவாவுக்கும் திருமணம் முடிந்த அன்று சிவா விந்தியாவிடம், “இனி என் கண் முன்னே வராதே…” என்று கோபமாக உரைத்தான்.
அந்தச்சமயத்தில் ஆபிஸில் அவளுக்குக் கிடைத்த வெளிநாட்டு வாய்ப்பு சிவாவை விட்டு அவள் வெகுதூரம் செல்ல ஏதுவாய் இருந்தது. மீண்டும் மூன்று வருடங்களுக்கு பிறகு தன்னை அவன் சந்திப்பது அவனுக்குத் தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
இப்படி எண்ணிக் கொண்டு சமையலறையில் இருந்த சரோஜாவிடம் விடைபெற சென்றாள்.
“அத்தை” என்று சரோஜாவின் கைகளைப் பிடித்தாள்.
“என்னடா?” என்று செல்லமாகச் சரோஜா அவள் தலையைத் தடவினாள்.
“வனிதா ஏதோ விவரம் புரியாம நடந்துக்கிட்டா… நீங்க அவளை மன்னிச்சிடுங்க” என்று பணிவாக உரைத்தாள்.
“தப்பு அவளுடையது மட்டுமில்லை… என்னுடையதும்தான்… நான் அவகிட்ட கொஞ்சம் பொறுமையாய் நடந்து கொண்டிருக்கணும். அம்மாவாக இல்லாம மாமியாராக நடந்துக்கிட்டேன்…” என்று சரோஜா வருத்தப்பட்டாள்.
“அப்போ நீங்க கோபமா இல்லையா?”
“இல்லம்மா… ஆனா சிவா என் மேலே ரொம்ப கோபமா இருக்கான்… முகத்தைப் பார்த்து பேசியே ஒரு மாசமாயிடுச்சு…”
“ஏன் அத்தை?”
“அவன் மனைவிகிட்ட சண்டைப் போட்டு துரத்திட்டேன்னு…” சொல்லிக் கொண்டே புடவை முந்தானையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
விந்தியா சரோஜாவை தேற்றினாள்.
நாம் வந்த வேலை முடிந்தது என்று எண்ணிக்கொண்டு உடனடியாகக் கிளம்ப எத்தனித்தாள். சாப்பிட்டுவிட்டு போகும்படி வற்புறுத்தியும் வேண்டாம் என்று காரணங்களைச் சொல்லி வனிதாவை அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.
வனிதாவிடம் இனியாவது பொறுப்போடு இருக்கும்படி புத்திமதி உரைத்தாள். பின்பு சிந்துவினை தூக்கி முத்தமிட்டுவிட்டு புறப்பட்டாள்.
கடைசியாகத் தன் பர்ஸிலிருந்த சிவாவின் ஃபோட்டோவை நீட்டினாள்.
“இதை ஞாபகார்த்தமாக வச்சிக்கல… தூக்கிப்போட மனசில்லாமல் இது என்னோட பர்ஸலயே தங்கிடுச்சு” என்று சொல்லி வனிதாவின் கையில் திணித்துவிட்டு புறப்பட்டாள்.
ஆனால் அவள் கிளம்பும் முன் சிவா வீட்டு வாசலில் கம்பீரமாய் பைக்கில் வந்து இறங்கினான்.
போலீஸ் உடையில் அவனுடைய கம்பீரம் பன்மடங்கு அதிகமாய் தோன்றியது. அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே இருந்த அவனுடைய கூர்மையான பார்வை விந்தியாவினை நோக்கின.
அவனைப் பார்த்த மாத்திரத்தில் விந்தியாவின் கண்கள் கலங்கின. விழிகளுக்குள் தேங்கிய நீரை வெளியே வரவிடாமல் துடைத்துக் கொண்டாள்.
அவன் பாராமுகமாய் போய்விடுவானோ என்று அவள் மனம் நினைத்துக் கொண்டது. வெகு நாட்களுக்குப் பின் விதி அவர்களை நேரெதிரே சந்திக்க வைத்தது.
7
தோழமை
விந்தியாவை நோக்கி சிவா நடந்து வந்தான். அவன் பார்வை அவள் மீதே பதிந்திருந்தது.
“எப்ப வந்த விந்தியா?” என்று ரொம்பவும் இயல்பாகக் கேட்டான் சிவா.
அவன் திடீரென்று அவள் முன்னாடி வந்து நின்றதினால் கொஞ்சம் திகைப்போடு நின்றிருவந்தவள், சில நொடிகள் கழித்து அவன் கேள்வியைப் புரிந்தவளாய்,
“வியாழக்கிழமை” என்றாள்.
“மூன்று வருடத்தில ஒருமுறை கூட வந்து போக நேரமில்லையா உனக்கு?” என்று சிவா கொஞ்சம் கோபம் கலந்த குரலோடு கேட்டான்.
“வந்து வந்து போகிற செலவை யார் சமாளிக்கிறது?” என்று விந்தியா அவள் நிலைமையைச் சொன்னாள்.
“அப்போ உறவுகளைவிட செலவு பத்திதான் கவலை?” என்று சிவா அவளைக் குத்திக்காட்ட, அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் விந்தியா ஏளனமாய் ஒரு பார்வை பார்த்தாள்.
‘என் கஷ்டம் உனக்கு எப்படி புரியும்?’ என்று அவள் மனதில் நினைக்க அதை உணரந்தவனாக அவனும் புன்னகை புரிந்தான்.
புறப்படுவதாக விந்தியா அவசரப்பட, சிவா அவளைக் கட்டாயபடுத்தி உள்ளே அழைத்துக்கொண்டு வந்தான். சிந்து ஓடி வந்து அப்பாவின் கால்களைக் கட்டிக்கொண்டாள். சிந்துவை தூக்கி கொண்டு ஆசையாய்க் கொஞ்சினான். பிறகு விந்தியாவை நோக்கி,
“விந்து நம்ம இரண்டு பேரும் இன்னைக்கு ஒன்றாகச் சாப்பிடறோம்… ஓகே வா?” என்றான் ஆர்வமாக.
“கிளம்பணும் சிவா” என்று தயங்கினாள்.
“கொன்னுடுவேன்” என்று மிரட்டிவிட்டு உடை மாற்ற அறைக்குள் செல்ல வனிதாவும் பின்னோடு சென்றாள்.
அவன் கழட்டிய தொப்பியை வாங்க முற்பட்டாள். அந்த தொப்பியை மேஜை மீது வைத்து விட்டு வனிதாவின் கையினைப் பிடித்து வெளியே இழுத்து வந்தான்.
“உனக்கும் எனக்கும் என்னடி சம்பந்தம்? உன் இஷ்டத்துக்குப் போற… உன் இஷ்டத்துக்கு வர்ற. என்னைப் பாத்தா எப்படித் தெரியுது உனக்கு?” இப்படி அவன் போட்ட சத்தத்ததில் எல்லோருமே மிரண்டு போயினர்.
தனசேகரனிடம் சிந்துவை தந்து சிவா வெளியே கூட்டிப் போகச் சொன்னான். வனிதா கதறி அழத் தொடங்கினாள்.
“நடிக்காதடி… என் கோபம்தான் அதிகமாகுது”
“தப்புதான் மாமா… ஏதோ புத்தியில்லாம…”
“அதான் உனக்கு இல்லையே… கோபப்பட்டு அம்மா வீட்டுக்கு போயிட்ட. சரி… இரண்டு நாள்… இலைன்னை ஒரு வாரம்… ஓரேடியா என்னைப் பத்தி கவலையில்லாம குழந்தையோட போய் அங்க ஒரு மாசம் தங்கிட்ட”
அவனின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் வனிதா விசும்பினாள்.
விந்தியா கணவன் மனைவி சண்டை என்று நாகரிகத்தோடு பேசாமல் அமைதியாக நின்றாள்.
“நீ பேசாம உங்க அம்மா வீட்டில நிரந்தரமா இருந்திடு” என்றான்.
“வேண்டாம் சிவா… கொஞ்சம் பொறுமையா பேசு” என்றாள் சரோஜா.
“அம்மா… நீங்க சும்மா இருங்க” என்று சரோஜாவையும் அடக்கினான்.
வனிதா ‘அவன் மன்னிப்பானா’ என்பது போல் பரிதாபமாகப் பார்த்தாள். சிவாவின் கோபம் குறையாமல் அது மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போக விந்தியாவின் பொறுமை உடைந்தது.
“சிவா… இதான் உனக்கு லிமிட். அவதான் தப்ப உணர்ந்திட்டா இல்ல… அவள போட்டு டார்ச்சர் பண்ற?”
“நான் டார்ச்சர் பண்றேனா?”
“ஆமாம் நீதான்… என்னதான் இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாது சிவா உனக்கு”
“உங்க தங்கச்சி செய்த காரியத்துக்குக் கொஞ்சுவாங்களாக்கும்…” என்றான் சிவா முறைப்போடு.
இருவரும் நேருக்கு நேராய் நின்று பேசிக் கொண்ட விதமே வனிதாவிற்குப் பயத்தை ஏற்படுத்தியது.
“கொஞ்சங்கூட நாகரீகமே இல்லாம எல்லார் முன்னாடியும் பொண்டாட்டிய திட்டற…”
“முதல்ல நீ உன் தங்கச்சிக்கு நாகரிகத்தைக் கத்துக்கொடு. சின்னச்சின்னப் பிரச்சனைக்கெல்லாம் அம்மா வீட்டுக்குப் போறதுதான் நாகரிகமா?”
“அவ சின்னப் பொண்ணு… புரியாம செஞ்சிட்டா”
“கல்யாணமாகி மூணு வருஷம் முடிஞ்சி போச்சு. அவளுக்கே ஒரு பொண்ணு இருக்கு… மறந்திட்டியா?”
“மறக்கல… ஆனா அவ எனக்கு சின்னப்பொண்ணுதான்…”
“அப்போ சரி… உன் செல்ல தங்கச்சியை நீயே அழைச்சிட்டுப் போய்ச் சீராட்டு” என்று கையெடுத்துக் கும்பிட்டான்.
சரோஜாவுக்கு விந்தியா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் எனக் குழப்பமாய் இருந்தது. அவர்கள் பேச்சு தடுத்து நிறுத்தும் நிலையில் இல்லை.
விந்தியா சிவாவை கோபமாய்ப் பார்த்துக் கொண்டே,
“அவ்வளவுதானே… வா வனிதா” என்றாள்.
இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் கண்ணீர் உறைந்து போக நின்றாள். வனிதாவின் கைகளைப் பிடித்து விந்தியா இழுத்துச் செல்ல,
“கைய விடுக்கா… நான் தப்புச் செய்தேன்… அவரு என் மேல கோபப்பட்டார்… அதுக்குப் போய் நீ இப்படி நடந்துக்கிறது ஒன்னும் சரியில்ல” என்று கைகளை உதறினாள்.
வனிதாவின் செயல் ஒரு வித நிசப்தத்தை ஏற்படுத்தியது. உடனே விந்தியா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிடவும், சிவாவும் அதே சமயத்தில் சிரித்தான். சரோஜாவுக்கும் வனிதாவுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் குழம்ப இவர்கள் விடாமல் சிரித்துக் கொண்டனர். சிவாவின் கண்களில் நீர் துளிர்த்தது.
“அவ வந்திருந்தா கூட்டிட்டே போயிருப்ப… இல்ல?” என்றான் சிவா.
“பின்ன… ஆனா வரமாட்டேன்னு சொல்லிட்டாளே. போயும் போயும் உனக்காக சப்போர்ட் பண்ணி என் கைய உதறிட்டா பாரு… எல்லாம் விதி!” என்றாள் கொஞ்சம் வருத்தமான பாவனையில்.
“என்னடா நடக்குது இங்க?” என்று புரியாமல் கேட்டாள் சரோஜா.
“நான் சொல்றேன் அத்தை… உங்க பிள்ளை என்னைக் கோபப்படுத்திப் பார்க்க வனிதாவை திட்டி இவ்வளவு பெரிய டிராமா பண்ணிருக்கான்…ராஸ்கல்”
“நான் நடிக்கிறேன்னு எப்படிக் கண்டுபிடிச்ச”
“நீ வனிதாவை திட்டுக்கிட்டே என் முகத்தைப் பார்த்தியே… அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்… உன்னை எனக்குத் தெரியாதாடா?”
“நீ உன் தங்கச்சி கை பிடிச்சு இழுத்துட்டு போகும்போதே நினைச்சேன்டி… நீ என்னைக் கண்டுபிடிச்சிட்டன்னு”
“ரொம்ப நாளைக்குப் பிறகு சண்டை போட்டுக்கிட்டோம்… இல்ல?” என்று இருவரும் சிரித்தபடி பழைய நட்புகாலத்தை நினைவுப்படுத்திக் கொண்டனர்.
இவர்கள் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்துக் கொண்டதை வேறு யாரும் யூகிக்கக் கூட முடியவில்லை. இந்தக் கலாட்டாவுக்குப் பின் இருவரும் வெகு நேரம் பழைய இனிமையான நாட்களை நினைவுப்படுத்தியபடி சாப்பிட்டனர்.
இருபது வருட நட்பின் புரிதல் அத்தனை சாதரணமானதாக இல்லை. அந்த ஆழமான நட்பு வனிதாவிற்குப் பொறாமையை ஏற்படுத்தியது. சிவா விந்தியாவிடம் உரிமையோடு பேசிக் கொண்டிருந்த விதம் வனிதாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
விந்தியா வாசலை தாண்டிய பிறகுதான் வனிதா பெருமூச்சுவிட்டாள்.
சிவா விந்தியாவைப் பைக்கில் அழைத்துச் செல்வதாகச் சொல்ல விந்தியா பிடிவாதமாய் மறுத்துவிட்டாள். இருந்தும் விடாமல் கூடவே சென்று விந்தியாவை ஆட்டோவில் ஏற்றினான்.
ஆட்டோ கிளம்பும் சமயத்தில் விந்தியா கடைசியாக அவனை நோக்கி ஒரு கேள்வி கேட்டாள்.
“உனக்கு என் மேல் கோபம் இல்லையே?”
“ஏன் இல்லை… நிறைய இருக்கு… ஆனால் அந்தக் கோபத்தைக் காண்பிக்க இப்போ உன் முன்னாடி நிக்கிறது உன்னை லவ் பண்ண சிவா இல்ல… உன்னோட நண்பன் சிவா” என்றான் அழுத்தமாக.
விந்தியா கண்களில் வழிந்த நீரை துடைத்தபடி அவனின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனாள். அவளுக்குள் இருந்த குற்றவுணர்வும் தயக்கமும் அவன் பேசியதை கேட்டு முழுமையாய் மறைந்து போனது.
இவர்கள் பேசிக் கொள்வதை வீட்டின் வாசலில் நின்று வனிதா பார்த்து கொண்டிருந்தாள். அவர்களின் நட்பு வானமும் பூமியும் போல என்றுமே ஒன்றுக்கொன்று பிரியாமல் கூடவே துணை வரும். ஆனால் அவரவர்களுக்கான எல்லைகளில் நின்றபடி.
வெகு தூரத்தில் வானமும் பூமியும் சேர்ந்திருப்பது போல் தோன்றுவது வெறும் பிம்பம். வனிதா அந்தப் பிம்பத்தை உண்மையென்று நினைத்து கொண்டாள்.
அவர்கள் வாழ்வில் கிடைத்த உண்மையான தோழமை பலருக்கு கிடைப்பபதற்கு அரிது.
8
ஊடல்
அன்று இரவு சிவா கையில் ஏதொ ஒரு ஃபைலை வைத்துக் கொண்டு தீவரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
கேத்ரீன் கேஸை நடத்தும் இன்ஸ்ப்பெக்டர் விஜயன் இந்தக் கேஸை சரியான வழியில் கொண்டு செல்ல மாட்டார் என்று சிவாவுக்குத் தோன்றிற்று.
நிச்சயம் அன்று நடந்தது விபத்து அல்ல. கொலையாக இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனால் இதனை ஆரம்பத்திலிருந்தே விபத்து என்று மீடியாக்கள் மக்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கின்றன.
இதில் ஹோட்டல் ஆதித்தியா நிர்வாகமும் சம்பந்தப்பட்டு இருக்குமோ?
விருந்தினர் தங்கியிருக்கும் அறை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவள் விழுந்தது அவள் தங்கியிருந்த அறையிலிருந்து…
கேமராக்கள் இல்லாத இடத்தைக் கொலையாளி ஏன் தேர்ந்தெடுத்திருக்கக் கூடாது.
‘சோ… இட் மே பி எ மர்டர்?’
இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போது வனிதா தூங்காமல் விழித்துக் கொண்டிருந்ததைச் சிவா கவனித்தான்.
“என்ன வனிதா தூக்கம் வரலியா?”
‘இல்லை’ என்று தலையாட்டினாள்.
“இந்நேரத்தில என்னடி யோசிச்சிட்டிருக்க?” என்றான். அவள் உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ஏ அழகி! என்னடி கோபம்?” என்று அவள் முகத்தை அவன் புறம் திருப்பினான்.
“நான் உங்களுக்குப் பொருத்தமானவளா?” என்று மனக்கலக்கத்தோடு கேட்டாள் வனிதா.
“முடியை மட்டும் நீட்டா வளர்த்து வச்சிருக்க… மூளையை வளர்த்தியா? என்னடி பேசற? உன்னைத் தவிர வேற யார் எனக்குப் பொருத்தமா இருப்பா?”
“நீங்க பொய் சொல்றீங்க மாமா” என்றாள் வனிதா கோபத்துடன்.
“ம்… இப்போ உண்மையைச் சொல்லட்டுமா?”என்று சிவா அவளைக் கூர்மையாய் பார்த்தான்.
அவன் என்ன சொல்லப்போகிறான் என்று அவள் ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிவா அவளைத் தன் அருகாமையில் இழுத்து இதழோடு இதழ் பதித்தான். அவனின் இறுக்கமான பிடியிலிருந்து அவள் தப்புவது அசாத்தியமாய் இருந்தது. சில நொடிகளில் அவனாக விலகிப் போக,
“போங்க மாமா” என்று வெட்கத்தோடு உதட்டை துடைத்துக்கொண்டாள்.
அவன் மீண்டும் அவளைத் தன் வசப்படுத்தி அணைத்தபடி, “என்னடி அழகி! சொன்னது புரிஞ்சிதா இல்லை இன்னொரு தடவை புரிய வைக்கட்டுமா?” என்றான் புன்னகை தவழ்ந்த முகத்தோடு.
அவன் அவள் நெற்றியை வருடி முத்தமிட்டு, அந்தப் பிரிவினால் ஏற்பட்ட ஊடலில் மலர்ந்த காதலை அவன் முழுமையாய் அனுபவிக்க வனிதாவின் முகத்தில் அந்த இன்பம் புலப்படவே இல்லை.
ஒரு விதமான இறுக்கம் தென்பட அவளை விட்டு விலகி புருவத்தை உயர்த்தி, “என்னாச்சு?” என்றான் அதிகார தோரணையில்.
“உங்க கூட நான் இத்தனை வருஷமா என்ன வாழ்க்கையை வாழ்ந்திருக்கேன்? நீங்க கோபப்படுறீங்களா நடிக்கிறீங்களானு கூட என்னால கண்டுபிடிக்க முடியல… உங்களை நான் இப்ப வரைக்கும் சரியா புரிஞ்சிக்கவே இல்லையோனு தோணுது”
இதை கேட்டவுடன் சிவா கலகலவெனச் சிரித்துவிட்டு, “போடி லூசு… இதெல்லாம் ஒரு விஷயமனு கவலைப்பட்டுட்டு இருக்கியா? எங்க அம்மாவால கூடதான் கண்டுபிடிக்க முடியல… அதுக்காக அவங்களும் என்ன புரிஞ்சிக்கலியா?”
“அதானே… அப்புறம் அக்கா மட்டும் எப்படி கண்டுபிடிச்சா?”
“வி ஆர் ஃபிரண்டஸ்… தட் டூ ஃபார் டுவென்டி இயர்ஸ். அப்படி இருக்கும் போது, விந்தியாவிற்கு இதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல. என்னோட ஒவ்வொரு அசைவையும் அவ கரெக்டா கணிச்சிருவா. நான் அவள ஏமாத்திறது ரொம்பக் கஷ்டம்” என்று அவன் வனிதாவின் எண்ணத்தைத் தெளிவுப்படுத்தினான். ஆனால் அதுவே அவளுக்குள் இருக்கும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
“நான் உங்களுக்கும் அக்காவுக்கும் இடையில வந்துட்டேனா?” என்று தன் மனதில் பட்டதை வனிதா வெளிப்படையாகக் கேட்க சிவாவிற்கு இம்முறை கோபம் ஏற்பட்ட போதும் அதனை மறைத்துக் கொண்டு,
“இப்ப நான் என்ன பதில் சொல்லணும்… ஆமாம்னு சொல்லணுமா? இல்லனு சொல்லணுமா?” என்று கேட்க,
“உங்க மனசில பட்டதைச் சொல்லுங்க” என்றாள். கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்த சிவா மீண்டும் அவளைத் தோள் மீது சாய்த்தபடி,
“இத பாரு வனிதா… நானும் உங்க அக்காவும் நல்ல நண்பர்கள்… அவ்வளவுதான்! அந்த உறவுதான் எங்களுக்கு ரொம்பப் பொருத்தமானதாய் இருக்கும். மத்தபடி பழைய விஷயங்கள் எல்லாம் எங்கள் நினைப்பில் இல்ல.
அதே போல எனக்கு மனைவியாய் நீ மட்டும்தான் பொருத்தமானவளா இருக்க முடியும். புரிஞ்சதா? தேவையில்லாம ரொம்ப யோசிக்காதே.” என்று குழந்தைக்குச் சொல்வதைப் போல் அவளுக்குப் புரிய வைத்தான்.
வனிதா அமைதியடைந்தாலும் மீண்டும் அவள் மனதில் தோன்றிய எண்ணத்தைச் சிவாவிடம் கேள்வியாய் கேட்டாள்.
இத்தனை நேரம் அவன் காத்த பொறுமை உடைந்து போனது. அவன் முகம் கோபத்தில் சிவந்தது. சட்டென்று அவளைக் கைகளில் இருந்து உதறிவிட்டான்.
அந்தக் கோபத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல், “நீ படுத்துக்கோ… எனக்கு வேலை இருக்கு…” என்று சொல்லிவிட்டு சிவா அறையை விட்டு வேகமாய் வெளியேறினான்.
அவன் சென்ற சில நொடிகளில் வனிதா வெளியே வந்து பார்த்த போது, சிவா சோபாவில் தலையைச் சாய்த்தபடி படுத்து கொண்டிருந்தானே தவிர உறங்கவில்லை.
“வெளியே அக்காவும் நீங்களும் என்ன பேசிக்கிட்டீங்க? அக்கா எதற்காக கண்களைத் துடைத்தாள்?” என்று அவள் கேட்ட கேள்வி அவனை ரொம்பவும் காயப்படுத்தியது.
சந்தேகம் அவள் மனதில் விருட்சமாய் வளர்ந்திருக்க அவனின் விளக்கம் எதுவும் அவளின் மூளையைச் சென்றடையவில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.
அதிலும் திருமணத்திற்குப் பிறகு வனிதாவிற்கு உண்மையான கணவனாய் இருந்த சிவாவினால் எப்படி அவளின் சந்தேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். அதுவும் தங்கைக்காகத் தன் காதலை தூக்கி போட்ட விந்தியாவோடு என்பது வனிதாவின் மீது அளவில்லா எரிச்சலை ஏற்படுத்தியது.
என்ன செய்வது?
பரந்த மனப்பான்மை கொண்ட பெண்கள்கூடக கணவன் என்று வந்து விட்டால் சுயநலமாக மாறிவிடுவது இயல்புதானே வாசகர்களே!
9
பார்க்காமலே…
விந்தியாவின் தலையில் எண்ணெய்யை தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள் மாதவி.
“தலைமுடியெல்லாம் மெலிஞ்சு போச்சு… இப்படியே போனால் அப்புறம் அவ்வளவுதான்” என்று மாதவி மகளை அக்கறையோடு கடிந்து கொண்டாள்.
“அம்மா வலிக்குது… என் பிடி உன் கையில மாட்டிக்கிச்சுனு ஒரு வழி பண்ணாதே” என்று வலியால் விந்தியா கத்தினாள்.
“உனக்கு ஒரு கல்யாணம் பண்ற வரைக்கும் உன்னோட பிடி என் கையிலதான்”
“இப்ப அதெல்லாம் முடியாது” என்று அழுத்தமாய் சொன்னாள் விந்தியா.
“இப்பவே இருபத்தியெட்டு வயசாச்சு… இப்ப கல்யாணம் செய்யாம கிழவி ஆனப் பிறகு செஞ்சிப்பியா?” என்றாள் மாதவி.
“போதும் நிறுத்தும்மா” என்று சொல்லிக் கொண்டே ஈர முடியை துணியில் கட்டினாள் விந்தியா.
அவள் தன் முகத்தைக் கண்ணாடியில் உற்றுப் பார்த்தாள்.
“அப்படியா வயசாகிட்ட மாதிரி தெரியுது? அப்படி ஒண்ணும் தெரியலயே… அம்மா ஏதாச்சும் சொல்லட்டும்… விந்துமா நீ அழுகுதான்!” என்று தன் முகத்தைத் தானே ரசித்துக் கொண்டாள் நம் கதை நாயகி.
விந்தியா உடையை மாற்றிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
சோபாவில் அமர்ந்தபடி வருண் தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“அம்மா… எனக்கும் தோசை“ என்று விந்தியா கத்தினாள்.
“நீயே செஞ்சுக்கோ… நான் வேலையா இருக்கேன்”
“லேட்டாகுதும்மா… எனக்கும் தோசைக்கும் ஏழாம் பொருத்தம்… உனக்குத் தெரியாதா?” என்றாள் விந்தியா.
“ஒன்னும் தெரியல… ஆனா வாய் மட்டும் பாரு” என்று திட்டியபடி தோசை எடுத்து வந்து வைத்தாள் மாதவி. விந்தியா வருணை அருகில் அழைத்து,
“உனக்குத் தோசை சுடத் தெரியுமா?” என்று கேட்க அவன் ‘இல்லை‘ என்பது போல் தோள்களைக் குலுக்கினான்.
“அப்புறம்… ஏன் நான் மட்டும்?” என்று விந்தியா அலுத்துக் கொண்டாள்.
“நீ பேசாம. வீட்டிலிருந்து வீட்டு வேலைகளைச் செய்யக் கத்துக்கோ” என்று சமையலறையில் இருந்தபடி மாதவியின் குரல் கேட்டது.
விந்தியா உடனே கோபத்தில், “நிச்சயமா முடியாதும்மா. ஐம் சாரி… உனக்கு முடியலன்னா வேலைக்கு ஆள் வைச்சுக்கோ… என்னைப் போட்டு படுத்தாதே” என்றாள்.
உடனே சமையலறையில் இருந்து கரண்டி பறந்து வந்தது. அலறியபடி எழுந்து கொண்டான் வருண்.
“யம்மா… அடிக்கிறதுன்னா குறிபார்த்து அடி” என்றான்.
“நல்லா வேணும்டா உனக்கு” என்று கலகவெனச் சிரித்து விட்டு விந்தியா, இதற்கு மேல் இங்கே இருந்தால் மாதவியின் கோபம் அதிகரிக்கும் என்பதால் அவசரமாகத் தன் பேகை எடுத்துக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
விந்தியா வெளியே கிளம்பியதை பார்த்த மாதவி வருணை அருகில் அழைத்தாள்.
“டே… அக்காவுக்கு மாப்பிள்ளை பார்க்கிற விஷயமா சொன்னனே… என்னாச்சு?” என்று கேட்டாள் மாதவி.
“அக்கா ஃபோட்டோ டீடைல்ஸ் எல்லாம் மேட்ரிமோனியில் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்”
இப்படி வருண் அம்மாவிடம் சொல்லிவிட்டு அவனும் வேலைக்குப் புறப்பட்டான். வாசலில் விந்தியா சுவற்றில் சாய்ந்தபடி வருணை முறைத்தபடி நின்றாள்.
“யாரை கேட்டு மேட்ரிமோனியில என் ஃபோட்டோ கொடுத்த?” என்று கோபமாய்க் கேட்டாள்.
“அம்மாதான் கா…” என்றான் வருண் திணறியபடி.
“அப்படியா! இருடா… இரு. உன்னோட லவ் ஸ்டோரிய அம்மாக்கிட்ட வத்தி வைக்கிறேன்” என்று மிரட்டினாள்.
“அக்கா ப்ளீஸ்…” என்று அவன் கெஞ்சுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் புறப்பட்டாள்.
விந்தியாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பது அத்தனை சுலபமாக இல்லை.
விந்தியாவின் வயது, உயரம், படிப்பு என்று எல்லாமே கொஞ்சம் அதிகம்தான். இவை எல்லாம் தப்பித்தவறி பொருந்தி வந்தாலும் அம்மாவுக்கு ஜாதகம் வேறு பொருந்த வேண்டும்.
கடைசியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்தத் தேடலுக்குப் பலன் கிடைத்தது. ஆனால் பெண் பார்க்க வருவதாக விந்தியாவிடம் சொல்ல வருண் பயந்து நடுங்கி கொண்டிருந்தான்.
விந்தியா அன்று இரவு அவள் அறையில் இருந்த கிருஷ்ண குமார் என்பவனின் ஃபோட்டோவை பார்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா… மாப்பிள்ளை லண்டனில் டாக்டர்” என்றான் வருண்.
இதைக் கேட்டதும் விந்தியாவின் கோபம் பன்மடங்கானது.
“என்னை ஊரு விட்டு ஊரு இல்ல… கண்டம் விட்டு கண்டம் துரத்த பிளான் போட்டிருக்கியா?” என்று சொல்லி வருணை துவைத்தெடுத்தாள்.
“நாளைக்குப் பொண்ணு பாக்க வர்றாங்க… அதனால சீக்கிரம் வந்துரு”
“நாளைக்கு எனக்கு வேலை இருக்கும்மா”
“அப்படின்னா நீ பேசாம வேலையை விட்டிடு விந்து”
விந்தியா அதிர்ச்சியானாள்.
“என்னம்மா… இதுக்கெல்லாம் போய்?”
“அப்போ சீக்கிரம் வா…”
“சரி… ஓகே. நான் சீக்கிரம் வர முயற்சி செய்றேன்”
“சீக்கிரம் வந்தே ஆகணும் விந்து” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு மாதவி அமைதியானாள். விந்தியாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
ஹோட்டல் ஆதித்தியா.
எம். டி அறையில் சந்திரகாந்த் கேமராவில் தெரிந்த காட்சியைக் கவனித்துவிட்டு தரைதளத்தில் நடந்து கொண்டிருந்த கலவரத்தை பற்றி விசாரித்தார். ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்டிருந்த ஐம்பதாயிரம் மதிப்புள்ள பெல்ஜியம் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதும் சந்திரகாந்த அதிர்ச்சியானார்.
“என்ன ரமேஷ்… இவ்வளவு ஈஸி யா சொல்றீங்க… எப்படி?”
“கஸ்டமர் அந்த மிரர் பக்கத்தில் நின்னு செல்ஃபி எடுக்க ட்ரை பண்ணி மிரர் மேலயே சாய்ந்திட்டார். அப்படியே ஸ்க்ராட்ச் விழுந்துடுச்சு…”
“கேர்லெஸ்னஸ்…” என்று சொல்லியபடி மீண்டும் கேமராவின் காட்சியில் தெரிந்த முகத்தைக் கவனித்தார். ஏதோ ஞாபகம் வந்தவராய், “அவங்க எல்லாரையும் என்னோட ரூமுக்கு அழைச்சிட்டு வாங்க” என்று சந்திரகாந்த் சொன்னதும் ரமேஷ் ஒன்றும் புரியாமல் ரெஸ்டாரண்டுக்கு செய்தி அனுப்பினான்.
விந்தியா நண்பர்களோடு அந்த அறைக்குள் நுழைந்தாள். சந்திரகாந்த்தை பார்த்ததும் சட்டென்று அவரை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
“சார் நீங்களா… நான் உங்கள இங்க எதிர்பார்க்கவேயில்லை”
“நானும்தான் விந்தியா” என்றார்.
“கிட்டதட்ட நாம சந்திச்சு நாலு மாசம் இருக்குமே சார்… இருந்தும் என் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கே!” என்று கேட்டாள் ஆச்சரியமாக.
“மறக்கக் கூடிய உதவியா அது?”
இப்படி அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மேனேஜர் ரமேஷும், விந்தியாவின் நண்பர்களும் அதிசயத்தபடி பார்த்து கொண்டிருந்தனர். ரவி மட்டும் ஏதோ புரிந்தவனாக விந்தியாவிடம் மெலிதாகக் கூறினான்.
“அவரை உனக்குத் தெரியும்னா… நம்ம பிரச்சனைய சொல்லி ஏதாச்சும் கன்ஸஷன் கேளும்மா”
விந்தியா உடனே அவனைத் திரும்பி ஒரு முறைமுறைத்தாள். இதைக் கவனித்த சந்திரகாந்த், “டோன்ட் ஒரி… நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ரமேஷிடம் திரும்பி, “எந்தவிதமான டேமேஜுக்கும் சார்ஜு செய்ய வேண்டாம்” என உரைத்தார்.
“நாங்க எல்லோரும் ஆபிஸிலிருந்து டீம் லஞ்சுக்கு வந்தோம். துரதிஷ்டவசமா இப்படி நடந்து போச்சு… சாரி உங்களுக்குத் தேவையில்லாத நஷ்டத்தை ஏற்படுத்திட்டோம்” என்று வருத்தமுற்றாள் விந்தியா.
“நோ பிராப்ளம்” என்றார் சந்திரகாந்த்.
கடைசியில் விந்தியாவும் அவள் நண்பர்களும் சந்திரகாந்திடம் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டனர்.
“ரவி … இனிமே நீ செல்ஃபி எடுத்த… அவ்வளவுதான்” என்றான் நண்பர்களில் ஒருவன்.
சந்திரகாந்த் ஏதோ நினைவு வந்தவராக விந்தியாவை மீண்டும் அழைத்து அவளின் கைகளில் ஒரு அழைப்பிதழை கொடுத்தார்.
“என் சன்னோட என்கேஜ்மென்ட்… நீயும் உன்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் கண்டிப்பா வரணும்” என்றார்.
விந்தியா அதனைப் பெற்றுக்கொண்டு கண்டிப்பாக வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினாள். அவள் நண்பர்கள் எல்லோரும் கொஞ்ச தூரத்தில் நடந்து சென்று கொண்டிருக்க அவள் மட்டும் தனியே வந்தாள்.
அவளுடைய கைப்பேசியிலிருந்து வந்த அழைப்பில் வருண், மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதாகவும், ‘அம்மா நீ எப்போ வருவேன்னு கவலையாக இருப்பதாக’ சொல்லவும் விந்தியா பதட்டமடைந்தாள்.
‘மறந்திட்டேனே’ என்று எண்ணிக் கொண்டே நடந்தவள், எதிரே வந்த ஆடவனைக் கவனிக்காமல் அவன் மீது மோதினாள். அந்த ஆடவனும் ஏதோ ஒரு நினைப்பில் அவளைக் கவனிக்காமல் நடந்து வந்து வலது தோள்களில் இடிப்பட்டு சுதாரித்துக் கொண்டான்.
கீழே தவற விட்ட இன்விட்டேஷனை கைகளில் எடுத்துக் கொண்டு, அவனைப் பார்க்காமலே “சாரி” என்றாள் விந்தியா.
“இட்ஸ் ஓகே பேபி!” என்று சொல்லிவிட்டு அவளைக் கவனியாமல் மின்னலாய் மறைந்தான் அந்த ஆடவன்.
அவன் பதில் சொன்ன விதம் விந்தியாவைத் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் அவன் வெகு தூரம் சென்றுவிட அவள் மீண்டும் பரபரப்போடு நடக்கத் தொடங்கினாள்.
மின்னலெனக் கடந்து சென்றவனை விந்தியா மட்டுமல்ல நம் வாசகர்களும் கண்டிருக்க முடியாது. ஆனால் அவன்தான் ஆதித்தியா என்று கணித்திருப்பீர்கள்.
நம் கதையின் நாயகனும் நாயகியும் எதிர் எதிர் திசையில் பயணித்துக் கொண்டிருக்க இம்முறை விந்தியாவை விட்டுவிட்டு நாம் ஆதித்தியாவை பின்தொடர்வோம்.
பார்க்காமலே நிகழ்ந்து விட்ட இந்தச் சந்திப்பை நாம் விதியிடமே விட்டு விடுவோம்.
10
வரும் பதினெட்டாம் தேதி
ஆதித்தியா!
நிமிர்ந்த நடையோடும், மின்னலென வேகத்தோடும் சந்திரகாந்தின் அறைக்குள் நுழைந்தான். அவனின் வேகத்துக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் பின்னோடு ஆதியின் நெருங்கிய நண்பன் சமுத்திரனும் வந்தான்.
சந்திரகாந்த் அவர்கள் இருவரையும் அமரச் சொல்ல, ஆதித்தியா மட்டும் அந்த இடத்திற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாதவன் போல் நின்று கொண்டிருந்தான்.
நிமிர்ந்து பார்க்க செய்யும் உயரமும், அவனின் உடலமைப்பை பளிச்சென்று காட்டும் டீ ஷர்ட்டும், அவன் அதில் மாட்டியிருந்த கூலிங் கிளாஸும், ஸ்டைலாக நிற்கும் தோரணையும் அவனின் ஆண்மையை மட்டுமல்ல அவனுடைய திமிரையும் பறைசாற்றியது.
சந்திரகாந்த் ஆதியை சிறிதளவும் கவனிக்காமல் சமுத்திரன் முகத்தைப் பார்த்தபடியே வினவினார்.
“வீட்டில் சுபா உன் ரெண்டு வாலு பசங்களும் நல்லா இருக்காங்களா?” என்று சந்திரகாந்த் சமுத்திரனை விசாரித்தார்.
“ம்… ரொம்ப நல்லா இருக்காங்கப்பா” என்றான் சமுத்திரன் புன்னகை அரும்பிய முகத்தோடு.
“நீயும் பிஸியா இருக்க… அவனையும் பிடிக்க முடியல… சோ நானே இன்விடேஷன் மாடலை சூஸ் பண்ணிட்டேன்” என்று சொல்லி இன்விடேஷனை சமுத்திரன் கையில் காட்டினார்.
அதில் ‘ஆதித்தியா வித் மதுமிதா’ என்று அச்சிடப்பட்டிருந்ததை சமுத்திரன் கவனித்தான். ஆதியின் முகம் கடுகடுவென மாறியது.
சந்திரகாந்த் பேசிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
ஆதித்தியாவின் செயலால் கோபமான சந்திரகாந்த்தை சமுத்திரன் முடிந்தளவு சமாதானம் செய்தான். ஆதியின் அனுமதியின்றி அவனுக்குத் திருமணம் ஏற்பாடுகள் செய்தது தவறென்று சந்திரகாந்த்துக்குத் தெரிந்த போதும், அதில் அவருக்கான சில நியாயங்கள் இருப்பதைச் சமுத்திரனிடம் புரிய வைத்தார்.
நாளுக்கு நாள் அவனுடைய பொறுப்பின்மை வளர்ந்து கொண்டே போவதால் இதுதான் சரியான முடிவு என்று அவர் கருத, சமுத்திரனும் ஆதித்தியாவை திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி வெளியேறினான்.
சிறிது நேரத்தில் வெளியே கோபத்தின் உச்சத்தில் நின்றிருந்த ஆதித்தியாவின் தோள் மேல் சமுத்திரன் கை வைத்தான்.
“என்ன ஆதி இது? இப்படியா அப்பா பேசிட்டிருக்கும் போதே மேனர்ஸ் இல்லாம…” என்று அவன் பேசி முடிக்கும் முன்னரே தன் கூரிய விழிகளால் ஆதி சமுத்திரனை முறைத்தான்.
“என்னோட என்கேஜ்மன்ட்டை என்னோட அனுமதி இல்லாம மிஸ்டர் சந்திரகாந்த் டிசைட் பண்றதுதான் மேனர்ஸா சமுத்திரா?“ என்றான் ஆதி.
“கமான் ஆதி… விஜய் குரூப் ஆஃப் இன்டஸ்ட்டிரீஸோட ஓரே மகள் மதுமிதா. ஸ்டேட்ஸிலிருந்து எம். எஸ் முடிச்சிட்டு நாளைக்கு வர்றா”
ஆதி சிரித்தபடி “கேல்குலேட்டிவா இருந்தா அது பிஸ்னஸ்… லைஃப் இல்ல. பொண்ணுங்க லைஃப்ல இருந்தா இன்டிரஸ்டிங்… பட் ஒரே பெண்ணே லைஃபா மாறிட்டா இட்ஸ் டிஸ்கஸ்டிங்” என்றான்.
“அப்போ என்ன செய்யலாம்… அப்பாகிட்ட உனக்கு விருப்பமில்லனு சொல்லிடுவோம்” என்றான் சமுத்திரன்.
“வேண்டாம்… என்னைக் கேட்காம பிஃக்ஸ் பண்ணாரில்ல… இந்த என்கேஜ்மென்ட் தானா நிக்கனும்… மிஸ்டர். சந்திரகாந்த் கில்டியா ஃபீல் பண்ணனும்” என்று ஆதி ஏதோ உள்நோக்கத்தோடு சொல்ல சமுத்திரன் யோசனையில் ஆழ்ந்தான்.
ஆதி மேலும் சமுத்திரனை நோக்கி, “ஏன்டா… நீ பெரிய கிரிமனல் லாயர்தானே… என்கேஜ்மென்ட்டை ஸ்டாப் பண்ண ஒரு ஐடியா கொடேன்”
“நோ வே… அப்பாகிட்ட சிக்கிட்டா அவ்வளவுதான்” என்று சமுத்திரன் தயங்கினான். சட்டென்று ஆதித்தியா ஏதோ ஞாபகம் வந்தவனாக
“நீ என்ன சொன்ன?” என்று சமுத்திரனிடம் கேள்வி எழுப்பினான்.
“நோ வேனு சொன்னேன்” என்றான் சமுத்திரன்.
“அது இல்ல… நாளைக்கு… வாட்ஸ் ஹெர் நேம்… எஸ்… மதுமிதா… ஷீ இஸ் ரிடனிங் டு சென்னை ரைட்?” என்று சொல்லி மனதில் ஏதோ ஒரு திட்டத்தை வகுத்தான்.
“என்னடா… என்ன செய்யப் போற?”
“வெயிட் அன் வாட்ச்” என்றான் ஆதி.
இருவரும் அங்கிருந்து கொஞ்சம் தொலைவு வந்தவுடன் ஆதி அப்படியே சிலை போல் நின்றுவிட்டான்.
“வாட்… ஆதி?” என்று சமுத்திரன் அவன் அருகில் நின்றான்.
“இங்கதான் ஒரு பொண்ணு என்னை இடிச்சிட்டுப பாஸ் ஆகிட்டா… சாரியும் கேட்டா… பட் டென்ஷனில் அவ முகத்தைப் பார்க்க மிஸ் பண்ணிட்டேன்” என்றான் ஆதி அவள் முகத்தை நினைவுபடுத்தியபடி.
“இப்ப அது ரொம்ப முக்கியமா?”
“நானா யோசிக்கல சமுத்திரா… தானா தோணுது. நின்னு அவ முகத்தைப் பார்த்திருக்கணும்” என்று ஆதி சொல்ல மின்னலென அந்த நிகழ்வு அவன் மனதில் தோன்றி மறைந்தது.
“நல்ல வேளை நீ அவள பார்க்கல… இல்லாட்டி போனா நீ அந்தப் பொண்ணு பின்னாடி போயிருப்ப… அப்புறம் நான் வேற உன்னைத் தேடணும்”
“இத்தனை வருஷமா நீ என் கூட இருக்க. இன்னும் நீ என்னைப் புரிஞ்சிக்கலயே… பெண்கள் எப்பவும் நம்ம பின்னாடி வரணும் சமுத்திரா… நாம அவங்க பின்னாடி போகக் கூடாது” என்று ஆதி சமுத்திரனிடம் சொல்லும் போது அவனுடைய ஆண்மையின் திமிரும் ஆணவமும் கொஞ்சம் அதிகமாகவே தலைதூக்கியது.
“உன்னைத் திருத்தவே முடியாது” என்று சமுத்திரன் முன்னாடி நடக்க, ஆதியும் அவனின் பின்னோடு சென்றான்.
அவன் பார்க்க முடியாமல் போனதாக வருத்தப்படும், அந்த முகம் தெரியாத அவளைச் சந்திக்கும் தருணத்தில் நம் கதாநாயகனின் தலைக்கணம் நிச்சயம் தரைமட்டமாகப் போகிறது.
இங்கே நாம் ஆதியை கவனித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் அங்கே விந்தியா பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டிருந்தாள்.
மாப்பிள்ளை கிருஷ்ண குமார் அவளின் எதிரே நின்று கொண்டு அவனுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க கதைகளைக் கூறிக் கொண்டிருந்தான். போதாக் குறைக்கு அவளின் படிப்பு, சம்பளம் பற்றிக் குடைந்து குடைந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமா என்பது பற்றி அவன் சிறிதும் கவலை கொள்ளவில்லை. கடைசியாக அவன் பேசி முடித்தபின் அவள் அவனிடம் பெருமூச்சுவிட்டபடி,
“சோ சாரி… மிஸ்டர். கிருஷ்ண குமார். இதுதான் என்னோட உலகம்… ஐ வான்ட் டு பி இன் இந்தியா… எனக்கு லண்டனில் வாழ துளி கூட விருப்பமில்லை” என்று விந்தியா ஒருவித அலட்சிய தொனியில் உரைத்தாள்.
விந்தியா இப்படிச் சொல்லவும் அவன் ஷாக்கடித்ததைப் போல நின்றுவிட்டான். பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டவனாய்…
“நீங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.
‘லூசா இருப்பானோ? நாம தெளிவாதானே சொன்னோம்… அப்புறம் எதுக்கு என்னை யோசிக்கச் சொல்றான்’ என்று விந்தியா குழம்பினாள்.
இப்படி விந்தியா எண்ணமிட்டுக் கொண்டிருக்க ஒவ்வொருவராக அவள் மீது படையெடுத்து வந்தனர். முதலில் அவளுடைய அம்மா கண்ணீரால் மிரட்டினாள். வருண் வயதுக்கு மீறிப் பேசினான்.
வனிதாவோ சிவாவை நினைவில் வைத்துக் கொண்டுதான் அவள் திருமணத்தை நிராகரிக்கிறாளோ என சந்தேகத்தோடு பார்த்துவிட்டு போனாள். அவளை ஒரு குற்றவாளியை போலவே பாவித்தனர்.
திருமணத்திற்கான முடிவை எடுப்பது அவளுடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று யாருக்கும் புரியவில்லை. அவளின் அம்மா உட்பட. வீட்டில் நடப்பவை எல்லாம் விந்தியாவை திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கும் நோக்கத்திலேயே நடந்தது.
அவர்கள் கிருஷ்ண குமாரை மாப்பிள்ளையாக முடிவெடுத்து விட்டு அந்த முடிவை விந்தியாவின் மீது திணித்தனர்.
வேறு வழியின்றி வீட்டாரின் விருப்பத்திற்காக விந்தியா திருமணத்திற்கு சம்மதிக்க நேரிட்டது. அவள் விருப்பமின்றி சம்மதம் சொன்னதைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் அதனைக் கொண்டாடினர்.
கிருஷ்ணகுமாருக்கு உடனே லண்டன் புறப்பட வேண்டி இருப்பதால் அவசர அவசரமாக நிச்சியதார்த்த ஏற்பாடுகள் நடைப்பெற்றன. வரும் பதினெட்டாம் தேதி நிச்சியதார்த்தம் என முடிவு செய்யப்பட்டது.
அந்த தேதி சந்திரகாந்த் அழைப்பிதழில் இருந்த தேதி என்பதை விந்தியா நினைவுப்படுத்திக் கொண்டாள். அந்த அழைப்பிற்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தமுற்றாள்.
Super ma