En iniya pynthamizhe-4
4
பைந்தமிழ் வீட்டை அடைந்த மாத்திரத்திலிருந்து குமட்டி குமட்டி வாந்தி எடுத்து கொண்டிருந்தாள். இடையிடையே அவனையும் மானவாரியாக திட்டி தீர்த்து கொண்டிருந்தாள்.
“குடிகார பய…. பொருக்கி நாய்… அவன் செஞ்ச வேலைக்கு அம்மி கல்லை ஒரே போடா அவன் மண்டையில தூக்கி போட்டு கொல்லோனோம்… அவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது… மண்ணு லாரில அடிபட்டு துடி துடிச்சுதான் சாவானாக்கும்… பக்கி பரதேசி” என்றவள் பொறிந்து கொண்டிருக்க,
“ஐயோ! நிறுத்து க்கா… நீயும் அந்த கெழவி மாதிரி பேசிட்டு இருக்க” என்றாள் செல்வி.
“முடியலடி… நார பையன்… என்ன கருமத்தை குடிச்சு தொலைச்சான்னே தெரியல… ஒமட்டுதுடி” என்றவள் மீண்டும் குமட்டி கொண்டு வாந்தி எடுக்கவும்,
செல்வி அவள் தலையை அழுத்தி பிடித்து கொண்டாள்.
அப்போது சகுந்தலா தேநீர் கடையை முடித்துவிட்டு, “தமிழு” என்று அழைத்து கொண்டு வீட்டின் பக்கம் வர, தமிழ் அதிர்ந்து பார்த்தாள்.
தங்கை தம்பிகள் புறம் திரும்பியவள், “அம்மா கிட்ட இந்த விஷயத்தை பத்தி யாரும் மூச்சு கூட விட கூடாது… புறவு நான் ஊருக்கு போற காரியமே தடை பட்டு போகும்ல” என்று சொல்ல,
அத்தனை நேரம் அவளையே வைத்து கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த அரசன், “அப்போ இந்த விஷயத்தை சொன்னா அம்மா உங்களை ஊருக்கு போவேணாம்னு சொல்லி போடுவாங்களா க்கா” என்று கேட்டு வைக்கவும் தமிழுக்கு திக்கென்றது.
“என்னை அம்மா ஊருக்கு அனுப்புதோ இல்லையோ… ஏன் கருப்பன் கோயிலுக்கு தனியா போனீங்கன்னு நம்மல எல்லாம் சாத்து சாத்துன்னு சாத்தி போடுவாங்க” என்றாள்.
அரசனுக்கு அச்சம் தொற்றி கொள்ள, “உஹும் சொல்ல மாட்டேனுங்க க்கா” என்றான். அவள் மூச்சை இழுத்துவிட்டு கொண்டாள். அப்போதைக்கு அப்படி ஓரு விஷயம் நடந்தது போலவே மூவரும் காட்டி கொள்ளவில்லை.
“என்னாச்சு… மூணு பேர் மொவரையும் ஒன்னும் சரி இல்லயே” என்று சகுந்தலா கேட்க, “அது வந்துங்க ம்மா” என்று தமிழ் திக்கி திணறினாள்.
அதற்குள் செல்வி முன்வந்து, “இல்லீங்க ம்மா… அக்கா நாளைக்கு ஊருக்கு போவுதா… அதான்” என்று சாமர்த்தியமாக அந்த சூழ்நிலையை சமாளித்துவிட்டாள்.
“அதுக்குதான் இப்படி மூணு பேரும் மொவரையை தூக்கி வைச்சிட்டு உட்கார்ந்து இருக்கீங்களாக்கும்” என்று சகுந்தலா கேட்க மூவரும் அழுத்தமாக மௌனம் சாதித்தனர்.
“இப்படி இருந்தீங்கன்னா ஊருக்கு போறவ மனசு சங்கடப்படாது… அந்த விசயத்தை வுட்டு போட்டு உண்டுட்டு போய் நேரத்தோட படுங்க” என்றதும் மூவரும் கப்சிபென்று சாப்பிட அமர்ந்தனர்.
ஆனால் தமிழால் ஒரே ஒரு கவளம் சாதத்தை கூட உண்ண முடியவில்லை. இருப்பினும் அம்மாவின் முன்னிலையில் எதையும் காட்டி கொள்ள கூடாது என்ற காரணத்திற்காக அவர் தட்டில் வைத்த சாதத்தை சிரமப்பட்டு விழுங்கிவிட்டாள்.
ஆனால் அது சில கணங்களில் அவள் வயிற்றை புரட்டி கொண்டு வெளியே வந்துவிட, அவள் துவண்டு திண்ணையில் அமர்ந்து கொண்டாள். செல்வியும் அரசனும் அவளுடன் வந்து அமர்ந்து கொள்ள,
“ராவிக்கு சாப்பிட்டதையும் இப்படி வாந்தி எடுத்து போட்டியே… ஒடம்பு என்னத்துக்கு ஆகும்… நாளைக்கு ஊருக்கு வேற போவோனோம் இல்ல” என்று செல்வி அக்கறையாக கேட்டாள்.
“நானா எடுக்கிறேன்… அதுவா வருது… மூச்சு விடும் போதெல்லாம் சாராயம் வீச்சம் அடிக்கிற மாதிரியே இருக்குடி” என்றாள்.
“எல்லாம் உன் நினைப்புதான் க்கா… அந்த விசயத்தை நீ எப்படியாச்சும் மறந்து போடு… எல்லாம் சரியாயிடும்” என்ற செல்வி அறிவுரை வழங்க,
“சுலபமா சொல்லி போட்ட… மறந்துடுன்னு” என்றபடி தங்கையை முறைத்தவள், “எல்லாம் உங்க இரண்டு பேராலதான்… நான் அப்பவே கிளம்பலாம்னு சொன்னேன்… கிளம்பி இருந்தா இப்படியெல்லாம் ஆயிருக்குமா?” என்றதும் செல்வியின் முகம் சுருங்கி போனது.
“சாரி க்கா” என்றவள் சொல்ல,
“யாரை சொல்லி என்னவாக போகுது… எல்லாம் என்ற தலையெழுத்து” என்று புலம்பியபடி தமிழ் கண்ணீர் விட தமக்கை அழுவதை பார்த்த அரசனும் அழ தொடங்கினான்.
“அம்மா வந்து பார்த்துட போறாங்க க்கா” என்று செல்வி பதட்டம் கொள்ள, தமிழ் உடனே தன் கண்ணீரையும் துடைத்து கொண்டு தம்பியின் முகத்தையும் துடைத்துவிட்டாள்.
அவளை ஆழமாக பார்த்தவன், “ஏனுங்க க்கா அந்த பக்கி பையன் உங்களை அப்படி பண்ணான்?” என்று கேட்க, தமிழின் முகம் சிறுத்து போனது.
அப்போது செல்வி, “அவன் சரியான கிறுக்கு பையன்… மரகழண்டவன்… நீ அந்த விசயத்தை இதோட விடு… வெளிய கிளிய யார்க்கிட்டயும் இதை சொல்லி போடாதே… புறவு நம்ம அக்காவையும் சேர்த்து அசிங்கப்படுத்தி போடுவாங்க… சரியா” என்று தம்பிக்கு பொறுமையாக எடுத்துரைக்க், “உஹும் சொல்ல மாட்டேன்” என்றான் அவன்.
“சரி நீ போய் பாயை விரிச்சு போடு… நானும் அக்காவும் வரோம்” என்று அவனை அனுப்பிவிட்டு செல்வி தன் தமக்கையின் தோள் மீது ஆதரவாக கரம் பதிக்க,
தமிழ் அவமானத்தில் கூனி குறுகி போய் அமர்ந்திருந்தாள். ‘சனியன் பிடிச்சவன்… சின்ன புள்ளைங்க முன்னாடி போய்’ என்று தனக்கு தானே முனகியவளுக்கு அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கமும் ஆத்திரமும் எரிமலையாக உள்ளுர குமுறியது. அவனை கண்டம் துண்டமாக வெட்டி போட வேண்டும் என்றளவுக்கு உள்ளம் கொதித்தது.
ஆனால் அவள் அடுத்த நாள் மாலை சென்னைக்கு புறபட்டுவிட்டதால் அவன் மீதிருந்த கோபமெல்லாம் அப்போதைக்கு அடங்கி போனது. அதோடு அவள் தன் மொத்த கவனத்தையும் படிப்பில் செலுத்தியிருந்த காரணத்தால் அவள் அந்த சம்பவத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருந்தாள்.
ஒரு வருட படிப்பு காலம் முடிந்து கல்லூரியில் விடுமுறை அறிவித்திருந்தார்கள். அவளுடைய பயணச்சீட்டு உறுதி பெறாத காரணத்தால் அவளுக்கு பெர்த் கிடைக்கவில்லை.
அமர்ந்து கொண்டு பயணம் செய்தவள் அப்படியே உறங்கி போக, கனவிலும் அந்த சம்பவம்தான் வந்து தொலைக்க வேண்டுமா?
அதுவும் அவள் கண்டது கனவு போலவே இல்லை. உண்மையாக அந்த நிகழ்வை அப்படியே அவளுக்கு நினைவுறுத்திவிட பதறி துடித்து கண்விழித்தவள் குமட்டுவது போல வாயை மூடி கொள்ள அவள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தான்.
சட்டென்று தண்ணீர் பாட்டிலை எடுத்து அருந்தி கொண்டு தன்னை நிலைப்படுத்தி கொண்டாள்.
“ஏனுங்க எதாச்சும் பிரச்சனைங்களா? உடம்புக்கு முடியலீங்களா?” என்று எதிரே இருந்தவன் அக்கறையாக வினவும், அவனை திகைப்பாக பார்த்துவிட்டு பின் ஒன்றும் இல்லை என்பது போல மறுப்பாக தலையை மட்டும் அசைத்தாள்.
இந்த ஒரு வருடத்தில் சில முறைகள் அவள் ஊருக்கு பண்டிகைகள் மற்றும் விடுப்புகளுக்கு வந்து சென்றிருந்த போதும் ஒரு முறை கூட அவனை மீண்டும் பார்க்கும் சூழ்நிலை அமையவில்லை. அவனை பார்ப்பதை அவளும் விரும்பவில்லை.
இருப்பினும் அவனை பற்றிய செய்திகள் அரசல் புரசல்களாக அவள் காதுகளிலும் விழத்தான் செய்தன. அவன் வேலை வெட்டி இல்லாமல் குடித்துவிட்டு சுற்றி கொண்டிருக்கிறான்.
‘தருதலை’ ‘குடிகார பையன்’ என்று ஊர்க்காரர்கள் அவனுக்கென்று பிரத்தியேக அடைமொழிகளும் வைத்திருந்தனர்.
ஏனோ அவனை பற்றி அவள் யோசிக்க கூடாது என்று நினைத்தாலும் அவள் மூளை ஏதாவதொரு விஷயத்தில் அவனை நினைவுப்படுத்தி கொண்டிருந்தன.
தொலைகாட்சியில் எம். ஜி. ஆர் படக்காட்சிகளை பார்த்தால் கூட ஒரு காத தூரம் ஓடிவிடவில்லை. ஏன்? வீதி சுவர்களில் ஓட்டியிருக்கும் எம்.ஜி.ஆரின் சுவரொட்டிகளை பார்த்தால் கூட அவன் நினைவு வந்து தொலைவதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.
இதெல்லாம் கூட பரவாயில்லை. சினிமாவில் வரும் முத்தக்காட்சிகளை கூட அவள் அறவே வெறுத்தாள்.
காதலின் அடுத்த படிநிலையான காமத்தின் முதல் படிநிலை முத்தம். ஆனால் அவன் செய்த வேலையால் முத்தமென்ற ஒன்றின் மீதே அவளுக்கு மொத்தமாக வெறுப்பு வந்திருந்தது.
அதுவும் அந்த வருட முடிவில் வந்திருக்கும் நீண்ட கால விடுமுறை என்பதால் இம்முறை ஊரிலிருக்கும் போது அவனை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்துவிடுமோ என்ற பயத்தில் கண்ணயர்ந்தவளுக்கு அந்த நிகழ்வு அப்படியே கனவாக வந்து அவளின் உறக்கத்தையும் நிம்மதியையும் மொத்தமாக கெடுத்துவிட்டது.
அதுவும் அந்த சம்பவம் இப்படி அவள் கனவில் வருவதொன்றும் முதல் முறையும் அல்ல. அந்த கனவு வரும் போதெல்லாம் அவனை அவள் திட்டி தீர்ப்பதும் புதிதல்ல.
அப்படியாக அவள் அன்றும் அவனை முனகியபடி திட்டி தீர்க்க அப்போது அவள் எதிரே அமர்ந்திருந்த ஆடவன் துணுக்குற்று,
“இப்ப யாரை வைஞ்சிட்டு இருக்கீங்க… என்னையவா?” என்று கேட்க, அவள் உதட்டை கடித்து கொண்டு, “உஹும்… உங்களை இல்லீங்க… வேறு ஒருத்தனை” என்றதும் அவளை விசித்திரமாக பார்த்தவன்,
பின் புன்னகைத்துவிட்டு, “அப்படின்னா சரிங்க” என்று சொன்னதோடு நிறுத்தி கொள்ளாமல், “ஆமா நீங்களும் நம்மூர் பக்கம்தானுங்களோ?” என்று கேட்டதில் அவள் முகம் கடுகடுத்தது.
பதில் சொல்லாமல் அவனை அவள் ஏறஇறங்க ஒரு பார்வை பார்க்க, “இல்லீங்க… உங்களை நம்ம காலேஜுல பார்த்திருக்கேன்… அதான் ஒரே ஊரான்னும் தெரிஞ்சிகலாம்னுட்டு” என்று இழுக்க அவன் ஒரே கல்லூரி என்றதில் அவள் புருவங்கள் நெறிந்தன.
“என்னைய நீங்க பார்த்தது இல்லீங்களா? நான் கம்புயுடர் சைன்ஸ்” என்று அவன் ஆரம்பிக்கும் போதே கை காட்டி அவனை பேச வேண்டாமென்று நிறுத்துவிட்டு.
“இத பாருங்க… நீங்களும் நானும் ஒரே காலேஜ்ல படிக்கலாம்ங்க… ஏன்? ஒரே ஊர் பக்கமா கூட இருக்கலாம்ங்க… ஆனா அதுக்காக எல்லாம் நான் உங்ககிட்ட பேசோனோம்னு எந்த அவசியமும் இல்லீங்க… அதனால உங்க வேலையை நீங் பாருங்க… என்ற வேலையை நான் பார்துக்கிறேனுங்க” என்றவள் மேலும் இதை பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்பது போல தம் காதுகளில் ஹெட்செட்டை மாட்டி விழிகளை மூடி கொண்டாள்.
அவள் பேசிய விதமும் கோபத்தை காட்டிய விதமும் எந்தவிதத்திலும் அவனுக்கு கோபத்தையோ அல்லது வெறுப்பையோ வரவழைக்கவில்லை. மாறாக அவளின் திடமான பேச்சு மற்றும் தெளிவான சிந்தனையை பார்த்து மதிப்பு உண்டாகியிருந்தது. மெல்லிய புன்னகை இழையோட அவளை பார்த்தவன் அதன் பின் அவளுடன் பேசும் எண்ணத்தை கைவிட்டு தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அதனை படிக்க இறங்கியிருந்தான்.
சில மணி நேரங்கள் கழித்து மெல்ல அவள் விழிகளை திறந்த போது அவன் மொத்தமாக புத்தகத்திற்குள் மூழ்கியிருந்தான்.
“கம்புயுடர் சைன்ஸ் இன்ஜினியரிங்க படிக்கிறவனுக்கு எதுக்கு இயற்கை விவசாயத்தை பத்தின புக்கு” என்று கொஞ்சம் குழப்பமும் கொஞ்சம் ஆச்சரியமுமாக பார்த்தவள் பின் தனக்கு என்ன வந்தது என்று தன் பையை எடுத்து கொண்டு இறங்க தயாரனாள்.
இருவரும் அவரவர்கள் பாதையில் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர், ஆனால் யார் யாரின் பயணம் எந்த திசையில் எப்படி திரும்பும் என்பதெல்லாம் மனதனின் கணிப்புகளுக்கு அப்பாற்ப்பட்டது.
பேருந்தின் மூலமாக தமிழ் தன் ஊர் எல்லையை வந்தடைந்திருந்தாள். ஆனால் ஊருக்குள் பேருந்து செல்லாத காரணத்தால் எப்போதும் உள்ளே வரை நடைபயணம்தான். ஒரு வேளை அதிர்ஷ்டவசமாக ஊர்கார்கள் அல்லது உறவுக்கார்கள் யாராவது பைக்கில் வந்தால் சௌகரியமாக போய் இறங்கி கொண்டுவிடலாம்.
தமிழும் அப்படி யாராவது வருகிறார்களா என்று களைப்பும் சோர்வுமாக நடந்து வந்து கொண்டிருக்க நல்ல வேளையாக அவளின் மாமா சங்கரன் அவள் வருவதை பார்த்துவிட்டு, “வா தமிழு.. உன்னைய வீட்டுல கொண்டு போய் விட்டுடுறேன்” என்று அழைக்கவும், ‘நல்லதா போச்சு’ என்று அவளும் அவர் பைக்கில் ஏறி கொண்டாள்.
அவரோ. “நம்ம தோப்புக்குள்ள காய் அறுக்க சொல்லி இருக்கேன்… பேசி போட்டு வந்துடுறேன்… செத்த நேரம்தான்… இங்கனயே இரு… வீட்டுக்கு போயிடலாம்” என்றவர் பைக்கை கருப்பன் கோவிலில் நிறுத்திவிட்டு செல்ல, அவளுக்கு பதட்டமானது.
“மாமா நில்லுங்க” என்றவள் சொன்னதை அவர் காதில் வாங்கவில்லை.
அந்த சம்பவம் நடந்த பின் அந்த கோவில் பக்கம் வருவதையே அவள் தவிர்த்திருந்தாள். ஆனால் எந்த விதியோ அவளை அங்கே இழுத்து வந்துவிட்டது. அவளுக்கு அந்த இடத்தில் நிற்க கூட பிடிக்கவில்லை.
“இதென்னடா தொல்லையா போச்சு” என்றவளுக்கு நடந்தே போய்விடலாமா என்ற யோசனையும் வந்தது. இருப்பினும் அவர் திரும்பி வந்தால் நம்மை தேடுவாரே என்று கடுப்போடு அவள் அங்கே காத்திருந்தாள். .
அவள் கவனம் அப்போது ஆக்ரோஷமாக அரிவாளை உயர்த்தி பிடித்து கொண்டிருந்த கருப்பன் புறம் திரும்ப, எப்போதும் அவளுக்கு அவன் மீதிருக்கும் பயபக்தி இப்போது துளி கூட இல்லை. மாறாக கோபம்தான் வந்தது.
“கத்தியை தூக்கி பிடிச்சிக்கிட்டு சும்மா உருடாப்பு (அல்டாப்பு) காட்டிக்கிட்டு இருக்கியாக்கும்… அன்னைக்கு அவன் செஞ்ச காரியத்துக்கு அவன் கழுத்துல ஒரே போடா போட்டு இருக்க வேண்டாமா… அப்படி போட்டு இருந்தேன்னா நீ காவல் தெய்வம்… வேடிக்கை பார்த்து இல்ல நின்னுட்டு இருந்த.. நீயெல்லாம் சாமியே இல்ல… வெறும் கல்லுதான்” என்றவள் தன் மனதிலிருந்த கோபத்தை அப்போதிருந்த மனநிலையில் வாய்விட்டே சொல்லிவிட,
“ஆரு டி அவ… சாமியை போய் கல்லுங்கிறது” என்று ஒரு குரல் அவளை அதட்டியது. அவள் திரும்பி பார்த்த திசையில் பேச்சி கிழவி நின்றிருக்க, அவள் கோபம் இன்னும் பன்மடங்கானது.
“என்னை ஆருன்னு உனக்கு தெரியல” என்றவள் எகத்தாளமாக கேட்டு கொண்டே பேச்சியின் முன்னே சென்று நிற்க, அவர் நெற்றியில் கையை வைத்து உற்று பார்த்துவிட்டு,
“அந்த டீ வீக்குற மவதானே நீயி” என்றார்.
அந்த வார்த்தையிலிருந்த ஏளனம் அவள் கோபத்தை இன்னும் அதிகப்படுத்த, “ஆமா… எங்க அம்மா டீ தான் விக்குறாங்க… டீ வித்துதான் என்னைய என் தம்பி தங்கச்சிங்கல படிக்க வைக்குறாங்க… ஒழுக்கமாவும் வளர்த்திருக்காங்க… ஆனா நீயி” என்றவள் நிறுத்தி,
“உனக்கு இருக்க ஒரே பேரனை செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்து குட்டி சுவாரிக்கி வைச்சு இருக்க… அந்த தருதலை இப்போ குடிச்சு போட்டு ஊரை சுத்திட்டு கிடக்கு… இதுல நீ ஊருக்கெல்லாம் சாபம் கொடுத்துட்டு இருக்க… நீ செஞ்ச காரியத்துக்கு உனக்கு யாரு கிழவி சாபம் கொடுக்கிறது” என்றவள் கோபத்தில் வெடிக்க, அதிசயிக்கும் விதமாக பேச்சி கிழவி அவளை எதிர்த்து எதுவும் பேசாமல் மௌனமாக நின்றிருந்தார்.
அதுவும் அவளை ஏறிட்டும் பார்க்காமல் அவர் தலையை தாழ்த்தி கொண்திருக்க, அவள் அதோடு நிறுத்தவில்லை. அவன் மீதான கோபம் அப்போதும் அவளுக்கு அடங்கவே இல்லை.
“அப்படி ஒரு கேடு கெட்டவனை வளர்த்ததுக்கு நீயெல்லாம் நாண்டுகிட்டு சாகோணும்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து அகன்றுவிட்டாள்.
வீடு வரும் வரை தான் ஏன் அப்படி பேசினோம் என்ற யோசனையெல்லாம் அவளுக்கு இல்லை. தன் கோபத்தை கொட்டிவிட்டோம் என்று ஒருவகையில் அவளுக்கு நிம்மதியாகவே இருந்தது.
ஆனால் வீட்டை அடைந்த பின்தான் பேச்சியம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற எண்ணம் தோன்ற, அவளுக்கு ஏதோ நெருடலாக இருந்தது. எந்நிலையிலும் பேரனை விட்டு கொடுக்காமல் அவன் எது செய்தாலும் நியாயம் என்று அடித்து பேசுபவர் ஏன் மறுப்பாக அவளிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை?
அவள் யோசனையோடு தங்கையிடம் கோவிலில் நடந்தவற்றை சொல்ல செல்வியோ அச்சம் மேலிட,
“போச்சு போ… அந்த கெழவி வரிஞ்சு கட்டிகிட்டு நம்ம வீட்டு வாசலில வந்து நிற்க போவுது” என்றாள். ஆனால் அவர்கள் பயந்தது போல அப்படி ஒன்றும் நிகழவில்லை. ஆனால் விடியற்காலையில் அவர்கள் எதிர்பாராத வேறு ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது,
பேச்சி கிழவியின் மரணம்!
To comment, click here
மாடித்தோட்ட குறிப்பு – 3
முந்தைய குறிப்பில் தேங்காய் நார் கழிவு(coco peat) பற்றி விளக்கியிருந்தேன். ஏன் தேங்காய் நார் கழிவு உபயோகிக்க வேண்டும்?
செடிகளுக்குள் வேருக்குள் எப்போதும் ஈரபதத்தை தக்க வைக்கும். மண்ணில் வைக்கும் செடிகளுக்கு தேவை படும் தண்ணீரை விட தேங்காய் நார் கழிவுக்கு தேவைப்படும் தண்ணீர் மிக மிக குறைவுதான். ஆனால் அதற்காக தேங்காய் நார் கழிவை மட்டும் வைத்து செடி வைக்க முடியாது.
அனுபவத்தின் அடிப்படையில் யாம் அறிந்தது 1:1:1:1 விகிதத்தில் மண்,தேங்காய் நார் கழிவு, உரம்(compost),ஆற்று மணல் இவைகளை நன்கு கலந்து growbag இல் இட்டு வளர்த்தால் நல்ல மகசூல் எடுக்கலாம். அதிலும் ஆரம்பத்தில் கீரை விதைகளை பயிருடுவதன் மூலம் மண் வளம் பெறும். ஆர்வம் இருப்பவர்கள் இது குறித்த வீடியோக்களை தேடி பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்கும்.
To comment, click here