En iniya pynthamizhe – 8
8
தேர்வுகள் முடிந்து தன் ஊருக்கு ரயில் ஏறி புறப்படயிருந்த தமிழை வழியனுப்ப வந்த மஞ்சுளா தேம்பி தேம்பி அழ, அவளை சமாதானப்படுத்த முயன்று ஒரு நிலைக்கு மேல் கடுப்பானவள்,
“அட ச்சை! அழுறதை நிப்பாட்டு… நம்ம இரண்டு பேரும் ஒரே கம்பெனிலதானே செலக்ட் ஆகியிருக்கும்… இன்னும் ஆறு மாசத்தில ட்ரைனிங் போட்டுட போறாங்க… அங்கன போய் பார்க்கத்தானே போறோம்” என்று சொல்ல,
“உஹும்… எங்க வீட்டுல அனுப்புவாங்கனு தோணல தமிழு” என்று அவள் சொன்னதை கேட்டு தமிழ் அதிர்ந்தாள்.
“என்னடி சொல்ற?”
“ஆமா தமிழ்… எங்க வீட்டுலலல” என்று இழுத்தவள், “கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க” என்க, தமிழ் விழிகள் பெரிதாகின.
“என்னடி திடீர்னு இப்படி சொல்ற?”
“திடீர்னு எல்லாம் இல்ல… முன்னாடியே பேசி வைச்சதுதான்… எங்க அம்மாவோட தம்பிக்குதான் பேசியிருக்காங்க… அவங்க சவுதில இருக்காங்க… கல்யாணம் முடிச்சா நானும் அங்கே போயாகணும்” என்றவள் சொன்ன தகவலை கேட்டு தமிழின் விழிகள் கலங்கியது. அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அப்போ உன் ஆசை கனவு” என்றவள் கேட்ட போது,
“ம்க்கும்… அதை பத்தி எல்லாம் யாருக்கு இங்க கவலை இருக்கு” என்று நொடித்து கொண்டவள், “நீயாச்சும் வேலைக்கு போ” என்றவள் ஏக்கத்தோடும் வலியோடும் சொல்லி முடிக்கும் போது ரயில் புறபட தயார் நிலையில் சத்தமிட, தோழிகள் இருவருக்கும் கண்ணீர் ஊற்றாக பெருகிற்று.
தன் தோழிக்கு நடக்கும் அநியாயத்தை மனதளவில் எண்ணி வருந்தி கொண்டே போனவளுக்கு அதே போல ஒரு நிலைமை தன் வீட்டிலும் காத்திருக்கிறது என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள்.
ஏற்கனவே நடந்த பிரச்சனையால் காமராஜை வேலையை விட்டு நீக்கியதை அவளால் தாங்கவே முடியவில்லை. குற்றவுணர்வில் கூனி குறுகி மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தவளிடம்
காமராஜ்தான், “இதெல்லாம் மனசுல வைச்சுக்கிட்டு பரீட்சைல எதுவும் கோளாறு பண்ணிட கூடாது தமிழு… முக்கியமா கேம்பெஸ்ல நீ செலெக்ட் ஆகணும்… அதுமட்டுமில்ல… நீ பெருசா எதாச்சும் சாதிக்கோனோம்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டே அவன் விடைபெற்றான்.
உண்மையிலேயே அவன் அப்படி சொல்லவில்லை என்றால் அவளால் அந்த பிரச்சனையை விட்டு வெளியே வந்திருக்கவே முடியாது.
தற்போது அந்த படிப்பும் பட்டமும் அவள் கனவு லட்சியம் என்பதை விட அவன் வார்த்தையில் இன்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகப்பட்டதில் அவள் தம் இறுதி தேர்வுகளை இன்னும் சிறப்பாகவே எழுதியிருந்தாள்.
அதே போல கேம்பஸில் ஒரு மிக பெரிய நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட முப்பது நபரக்ளில் அவள் பெயர்தான் முதலில் இடம்பெற்றது. அவள் மீது அவதூறான பழிகளை சுமத்தியவர்கள் முன்பாக இந்த சந்தர்ப்பத்தில் தன் திறமையை அவள் நிருபித்தும் காட்டிவிட்டாள்.
ஆனால் அந்த சந்தோஷத்தை தன் மதிப்புக்குரிய ஆசனான காமராஜிடம் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது அவள் துரதிஷ்டம்தான். அன்று இருந்த அந்த இக்கட்டான சூழ்நிலையில் அவன் தொடர்பு எண்ணை அவள் வாங்கவில்லை.
இவற்றையெல்லாம் எண்ணி ஏற்கனவே அவள் மனதளவில் மருகி தவிப்புற்று கொண்டிருக்க மஞ்சு சொன்ன தகவல் இன்னும் அதிகமாக அவள் வேதனையை கூட்டியிருந்தது.
இத்தகைய மனநிலையோடே பேருந்தில் அவள் தன் ஊர் எல்லையை அடைந்தாள். தோளில் ஒரு பையும் கையில் ஒரு பெரிய பையுமாக அவள் இறங்கும் போது அவள் கால்கள் இடறி தடுமாறிய சமயத்தில் முன்னே இறங்கிய பயணி அவள் பையை தன் கையில் வாங்கி கொண்டு, அவள் இறங்க உதவினான்.
“தேங்க்ஸ்” என்று அவள் சொல்லி தன் பையை வாங்க முற்பட்ட போதுதான் அவனை பார்த்து அவள் அதிர்ச்சியாக, அவளை பார்த்து அவன் கடுப்பானான்.
சந்திரனா அது? அவளால் நம்பவே முடியவில்லை.
அன்று குடிகாரனாக பொறுப்பில்லாதவனாக அவள் பார்த்த தோற்றத்திற்கு முற்றிலும் மாறுப்பட்டவனாக அவள் எதிரே நின்றிருந்தான் அந்த சந்திரன்.
திடகாத்திரமான ஆண்மகனாக, வலிய புஜங்களோடு உயரமும் கம்பீரமுமாக முறுக்கு மீசையோடு நின்ற அவனை தன்னையும் அறியாமல் அவளுடைய ஆழ்மனம் வியக்கவும் ரசிக்கவும் தொடங்கியிருந்தது.
அவனை பார்வையால் அளவெடுத்தபடி அவள் நிற்க,
“நீயா” “சை இது உன்னுடைய பேகா?!” என்று அடுத்தடுத்து அவள் மீது வெறுப்பை உமிழ்ந்தவன் அந்த நொடியே அவளின் பேகை தன் கையிலிருந்து உதறிவிட்டு முன்னே செல்ல, அவளுக்கு கோபமேறியது.
தன் பையை தூசி தட்டி கையிலெடுத்தவள், “எருமை பன்னி! இவனை யாரு பேகை வாங்க சொன்னது… நான் கேட்டேனாக்கும்” என்று புலம்ப, அவள் திட்டியது அவன் காதுகளையும் எட்டியது.
அவன் கடுப்போடு அவளை திரும்பி ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு முன்னேறி நடக்க, அந்த பார்வை அவளை என்னவோ செய்தது.
கடந்த மூன்று வருடங்களாக அவள் விரும்பினாலும் விரும்பாவிடிலும் அவனை பற்றிய தகவல்கள் அவளை எட்டி கொண்டுதான் இருந்தன.
தன் பாட்டியின் நிலத்தையும் தான் ஆசையாக வளர்த்த காளையனையும் அவன் பஞ்சாயத்தில் பேசி தன் பெரியம்மாவிடம் கேட்டு வாங்கியிருந்தான். பஞ்சாயத்தில் சொன்னதால் கோமதியாலும் மறுக்க முடியவில்லை. அதேநேரம் அந்த வீட்டையும் பாட்டி வைத்திருந்த கறவை மாட்டையும் அவள் தரமாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.
அவனும் அதில் எல்லாம் பங்கு கேட்கவில்லை. அவன் அந்த நிலத்திலேயே தான் தங்குவதற்கு ஏற்றார் போல அங்கேயே சிறிய கூரை வீட்டை அமைத்து கொண்டான். அதேநேரம் ஊரிலிருந்தவர்களின் உதவியோடு தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டதும் கடந்த வருடம் ஈரோடு ஜல்லிக்கட்டில் அவன் பங்கேற்று வெற்றி பெற்றதும் அவளுக்கு வந்த தகவல்கள்தான்.
ஆனால் அவற்றையெல்லாம் கேட்டும் கேட்காமல் அவள் இருந்துவிடுவாள். அதே போல ஊர் பொது இடங்களில் அவனை பார்க்க நேர்ந்தாலும் பார்த்தும் பார்க்காமல் இருந்துவிடுவாள்.
அவனும் அப்படிதான் இருப்பான். என்னதான் பார்த்தும் பார்க்காமல் கேட்டும் கேட்காமல் இருந்தாலும் அவன் வளர்ச்சியில் ஏதோ ஒரு ஒரத்தில் அவள் ஆழ்மனம் சந்தோஷப்பட்டு கொண்டதும் உண்மை.
அதற்கும் மேலாக அன்று அவன் விடுத்த சவாலை எண்ணி கொள்ளும் போது பேச்சி கிழவியின் வளர்ப்பு தப்பாக போகவில்லை என்பதை அவள் மனம் ஏற்று கொள்ளவே செய்தது.
அவளுக்கே தெரியாமல் அவன் மீது அவளுக்குள் உண்டாகியிருந்த நல்ல அபிப்பிராயங்கள் பழைய விஷயங்களை ஒருவாறு ஓரங்கட்டிவிட்டது. ஆனால் அவனுக்கு அப்படியில்லை. தினம் தினம் அவள் மீதான வெறுப்பிலும் கோபத்திலும்தான் கண்விழிக்கவே செய்தான்.
அவள் முன்பாக வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறியிலேயே அல்லும் பகலும் பாராமல் உழைத்ததன் பலனாக அவன் நிலம் நல்ல விளைச்சலை கொடுத்திருந்தது.
ஆனால் அந்த வெற்றியெல்லாம் அவனுக்கு போதவில்லை. இன்னும் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று அவன் உள்ளம் ஒய்வில்லாமல் தவித்து கொண்டிருந்தது.
அதனால்தான் இந்த மூன்று வருட கால இடைவெளியும் அவன் கோபத்தை கொஞ்சமும் குறைக்கவில்லை. எனினும் அவள் மீதான கோபத்தில் அவன் மனம் அதிகமாக சிந்தித்ததும் அவளை பற்றிதான்.
அதனால்தான் அவளை பார்த்த மாத்திரத்தில் அந்தளவு வெறுப்பை அவன் பார்வையாலேயே வீசியது.
அவள் பின்னே நடக்க, அவன் வேகமாக முன்னே நடந்து சென்றான். அவளோ அதற்கு மேல் அந்த பைகளை சுமந்து கொண்டு நடக்க முடியாமல் ஓய்ந்து போய் ஒரு மரத்தின் நிழலில் சாய்ந்தபடி பையிலிருந்து கைபேசியை எடுத்து வீட்டிற்கு அழைக்க எத்தனிக்க, அதில் பேட்டரி தீர்ந்து அணைந்து போயிருந்தது.
‘கடவுளே!’ என்று அலுப்பும் சலிப்புமாக மீண்டும் தன் பையை தூக்கி கொண்டு அவள் நடக்க, முன்னே சந்திரனை நிறுத்தி வைத்து ஒரு பெண்மணி பேசி கொண்டிருந்தார்.
“ஐயோ! பரிமளம் சித்தியா? இவங்க பேச ஆரம்பிச்சா இப்போதைக்கு நிறுத்த மாட்டடங்களே” என்றவள் யோசிக்கும் போதே பரிமளத்தின் கடைக்கண் பார்வை இவள் மீது விழுந்துவிட்டது.
“அட நம்ம தமிழு! எப்படி கண்ணு இருக்க? ஆளே இளைச்சி போயிட்டாயிட்டுமா இருக்கு” என்றவர் தம் நலவிசாரிப்புகளை அவளை போக விடாமல் தொடர, அவளுக்கோ ஒரு பக்கம் தோளில் மாற்றியிருந்த பை கனத்தது, இன்னொரு பக்கம் நிற்க முடியாமல் பாதங்கள் கெஞ்ச தொடங்கின.
இதுவல்லாது சந்திரனையும் போகவிடாமல் அவர் நிறுத்தி பிடித்து பேசி கொண்டிருந்தார். அவனுக்கோ அவள் அருகில் நிற்க சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவன் முகபாவனையே காட்டி கொடுக்க அவள் பொறுமையிழந்து,
“சித்தி… நேரமாவது… வீட்டுக்கு போகோனோம்” என்று உள்ளே போன குரலில் அவள் சொல்லவும்,
“சரி கண்ணு நீ கிளம்பு” என்று எப்படியோ மனசு வந்து அவளை அனுப்பிவிட்டு சந்திரனிடம் திரும்பியவர் சட்டென்று முன்னே சென்றவளை, “தமிழு” என்று அழைக்க,
‘ஐயோ! இந்த ரம்பம் விடாது போலேயே’ என்றவள் உள்ளுர கடுகடுத்தபடி, “என்னங்க சித்தி?” என்று திரும்ப,
“ஆமா… வர வெள்ளிகிழமை மாப்பிளை வூட்டுக்காரவங்க எத்தனை மணிக்கு வராங்க?” என்று கேட்டார்.
“மாப்பிளை வீட்டுக்காரங்களா? யார் வீட்டுக்கு” என்றவள் குழப்பத்தோடு வினவ,
“நல்ல்ல்ல்லா கேட்ட போ” என்றவர் நீட்டி முழக்கி, “ஒன்ற வீட்டுக்கு… ஒன்னைய பார்க்கத்தான் வாராங்க… என்னவோ தெரியாத மாதிரி கேட்குற?” என்க, அவள் தலையில் இடியே இறங்கியது.
அவள் அதிர்ந்து நிற்க நிலைமை புரியாமல் பரிமளமோ, “மாப்பிளை கூட ஒன்ற படிப்புதான் படிச்சு இருக்காராம் இலல்… தோப்பு துறவு எல்லாம் இருக்காம்… எந்த கெட்ட பழக்கமும் இல்லையாம்… சும்மா சொல்ல கூடாது அதிர்ஷ்டகாரிதான்டி நீயி” என்றவர் பாட்டுக்கு பேசி கொண்டிருக்க,
அவள் பதிலேதும் சொல்லவில்லை. அதேசமயம் சந்திரன் அவரிடம்,
“எனக்கு நிலத்தில கொஞ்சம் வேலை கிடக்கு அத்தை… நான் புறவு வந்து உங்ககிட்ட பேசுறேன்” என்று சொல்லி அவன் விறுவிறுவென நடக்க, அவள் பார்வை சந்திரனை நோக்கியது.
இவ்வளவு நேரம் அவன் காட்டிய கோபத்தை விடவும் தற்போதுதான் அவன் அதிக கொந்தளிப்பாக இருந்தான். அவன் முகம் கன்றி சிவந்திருந்தது. ஒரு நொடி அவன் சென்ற திசையை பார்த்திருந்த முகபாவத்தை உற்று கவனித்த பரிமளம்,
“என்னடி உனக்கு மாப்பிளை பார்க்குற விசயமே தெரியாதா? ஒனக்கு சொல்லாமல மயினி இம்புட்டு ஏற்பாடு பண்ணியிருக்காவுங்க” என்று அவர் கேட்ட கேள்வியில் அவள் யோசனையாக அவரை நோக்கினாள்.
‘தெரியாது’ என்று சொல்லிவிட்டால் தன் பெற்றோரை அவமானப்படுத்தியதாகிவிடுமோ என்று எண்ணியவள், “இல்லீங்க சித்தி… வர போறாங்கன்னு தெரியும் ஆனா எப்போன்னு சொல்லல” என்று தன் உள்ளத்தின் வேதனையை மறைத்து கொண்டு சமாளிப்பாக பதிலளித்தாள்.
“அப்படியா கண்ணு” என்று புன்னகைத்தவர், “சரி நீ கிளம்பு… நான் வேலையெல்லாம் முடிச்சு போட்டு வூட்டுக்கு வரேன்” என்க, அவள் அந்த கணமே அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் பாதங்கள் அனிச்சையாக அவள் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தன.
அத்தனை நேரம் கனமாக இருந்த பை கூட அப்போது அவளுக்கு கனக்கவில்லை. வலித்து கொண்டிருந்த கால்களின் வலியை கூட அவள் அப்போது உணரவில்லை. அவள் மனதில் ஏறியிருந்த பாரத்தின் முன் அந்த பையின் கனமும் அந்த வலியும் அவளுக்கு பெரிதாக இல்லை. உணர்வுகள் மொத்தமும் வடிந்த நிலையில் அவள் நடந்தே தன் வீட்டை அடைந்தாள்.
பரிமளம் சித்தி சொன்ன செய்தி உண்மையாக இருக்க கூடாது என்று மனிதினோரமாக இருந்த கொஞ்சம் நம்பிக்கைதான் இன்னும் அவள் உடையாமல் இருக்க காரணம்.
To comment please click here
குறிப்பு – 7
மண்ணின் வளம்
‘சிறு துளி பெரு வெள்ளம்’ போல இங்கே என்னுடைய குறிப்புகள் யாவும் சிறு துளிதான். இன்னும் கேட்டால் இந்த குறிப்புகள் மழை பெய்வதற்கு முன்னால் மண்ணை தொட்டு சிலிர்க்க வைக்கும் முதல் துளி!
அந்த முதல் துளியை வெள்ளமாகவும் பெரு மழையாகவும் மாற்றும் தேடலும் உழைப்பும் இனி உங்களுடையதுதான்.
மாடித்தோட்டம் வைத்ததுமே அது காய் காய்த்து தொங்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீங்க. அதற்கு முன்பாக நம் நிறைய சோதனைகளை பார்க்க வேண்டும்.
சில செடிகள் பெரிதாக வளர்ந்து காய் காய்க்காது. சிலவை காய்ப்பதற்கு முன்னதாக பூச்சியால் பாதிக்கபடும். சிலவை காயத்தாலும் நாம் எதிர்பார்த்தளவுக்கான பலனை தாரது. இதெல்லாம் ஆரம்ப கட்ட நிலை.
எடுத்துக்காட்டுக்கு பள்ளியில் முதல் வகுப்பிலிருக்கும் குழந்தையை நாம் பொறுமையாக பாடம் சொல்லி கொடுப்பது போலதான். ‘ஷப்பா முடியல’ என்றளவுக்கு படாத பாடு படுத்திவிடுவார்கள்.
ஆனால் வளர்ந்த பிறகு நாம் சொல்லி கொடுத்ததை பிடித்து கொண்டு அவர்களே படிக்க கற்று கொள்வார்கள். அப்படிதான் நம்முடைய மண்ணும். முதலில் அதில் பெரிதாக சத்து இருக்காது, ஆனால் நாம் விதைக்க விதைக்க அது விளைய விளைய கொஞ்சம் கொஞ்சமாக வளம் பெற தொடங்கும்.
அது வளம் பெற்ற பிறகு நாம் அதுக்கு எதுவும் சொல்லி தர தேவையில்லை. அதுவே தன் வேலையை செவ்வனே செய்துவிடும். தொடக்க காலங்களில் தேவைப்படும் கவனிப்பு போக போக தேவைப்படாது.
நம் உழைப்பிற்கு ஏற்ற பலனை அது கொடுக்க தொடங்கிய பிறகு நாமே நினைத்தாலும் அதன் விளைச்சலை தடுக்க முடியாது.
மண்ணின் வளம். அது ஒரு ப்ரோஸஸ். ஆரம்ப காலங்களில் மாடுகளை வைத்து உழவு செய்தார்கள். அந்த மாட்டின் சாணத்தை நிலத்திலிட்டு உரமாக்கினார்கள்.
அது விளைந்து அறுவடைக்கு பின் மீதமாகும் வைக்கோலை மாட்டுக்கு உணவாக தந்தார்கள். மாட்டுக்கு விவசாயி உதவினான். விவசாயத்திற்கு மாடு உதவியது. இந்த சைக்கிள் உடைந்த பிறகுதான் விவசாயி நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது.
அதே போல மண்ணில் லட்சக்கணக்கான நுண்ணியிரிகள் வாழ்கின்றன. அதுதான் மண்ணை செம்மைப்படுத்தி வளப்படுத்தவும் செய்கிறது. நாம் தெளிக்கும் பூச்சி கொல்லிகள் மற்றும் போடும் இராசயன உரங்கள் இந்த நுண்ணியிரிகளைதான் முதலில் அழிக்கின்றன. மண்ணை மலடாக்கிய பின் அதில் விதைப்பதும் காய் காயப்பதும் எப்படி சாத்தியம்!
ஒவ்வொருவனுக்கும் தேச பற்று வேண்டுமென்று சொல்லி தரும் நாம் இன்னொரு பற்றையும் சொல்லி தர வேண்டும்.
அதுதான் பூமி பற்று!
நம் நிலத்தையும் விவசாயத்தையும் காப்போம்!
முந்தைய பதிவில் மூலிகை பற்றி சொல்லி இருந்தேன். அது பற்றி இணையத்திலிருந்த ஒரு பதிவு.
வீட்டிலிருக்க வேண்டிய பதினைந்து மூலிகைகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறைகள்!
To comment please click here
Nice update.