மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Vaadi En thamizhachiMonisha's VET - 39Post ReplyPost Reply: Monisha's VET - 39 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on January 4, 2022, 8:47 PM</div><h1 style="text-align: center">39</h1> விஷ்வாவையும் ஆதியையும் விட்டுச் சென்ற பின் வீரேந்திரனின் வாகனம் அரண்மனை வாசலை நெருங்கியது. அங்கே சென்றதும் அரண்மனைக்குள் நின்றிருந்த ஒரு வாகனத்தைக் கவனித்தான். அது அந்தக் கடத்தல் கும்பலின் வாகனம்தான் என்று ஆதி சொன்ன தகவலை வைத்து கணித்தான். அவன் உடனே அங்கே குவிந்திருந்த காவலர்களில் சிலரை அரண்மனையைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிற்க சொல்லிவிட்டு, சிலரைத் தன்னைப் பின் தொடரும்படி பணித்தான். அவன் உள்ளே செல்ல எத்தனிக்க, அந்தப் பிரமாண்டமான வெளிவாயிற் கதவு உள்பக்கமாய் பூட்டியிருந்தது. உடனே சண்முகத்திடம், "வேற பக்கம் டோர்ஸ் ஓபனாகி இருக்கான்னு செக் பண்ணுங்க" என்று பணித்தவன், தாமதிக்க விரும்பாமல் அரண்மனைக்கு உள்ளே செல்ல வேண்டுமென்ற முடிவோடு, அவன் மட்டும் முன்புறம் சுவரினைப் பிடித்து சாமர்த்தியமாய் ஏறி முதல் தளத்தில் இறங்கினான். அவன் எதிர்பார்த்தது போல் அங்கிருந்த கதவு திறந்திருக்க உள்நுழைந்தவன் சற்றுக் குழப்பமானான். அங்கே இருள் சூழ்ந்திருந்தது. அந்த வாயிற்கதவு திறக்கப்பட்டதும் நிலவின் வெளிச்சம் நுழைந்து ஒளி பரப்பிட, எந்தப்பக்கம் செல்வதென்று புரியாமல் திகைத்தான். அவன் நின்றிருந்த இடத்திலிருந்து சுழன்று செல்லும் படிக்கெட்டுகள் அவன் கண்களில்பட, திருமணத்திற்கு முன்னதாக அரண்மனையில் தமிழைப் பின்தொடர்ந்து வந்த அந்த இரவை நினைவுபடுத்திக் கொண்டான். ஆம், அந்த படிக்கெட்டின் வழியாகவே அவள் ஏறி வந்தாள். அவளுக்குத் தெரியாமல் அவள் பின்னோடு அவளின் தாத்தாவின் அறைக்குள் நுழைந்ததை தன் கண்முன்னே காட்சிப்படுத்திக் கொண்டான். இம்முறையும் அவளே தன்னை வழிநடத்துவதாக எண்ணியபடி ஒரு பிம்பத்தை முன்னிறுத்திக் கொண்டுச் சென்றான். அந்த பிரமாண்டமான அறையின் கதவு திறந்துதான் இருந்தது. இந்த நொடிவரை சிறியளவிலான சத்தம் கூட கேட்காதது ஏன் என்ற சந்தேகம் எழுந்தது. அதுவும் எல்லா அறையின் விளக்குகளுமே அணைக்கப்பட்டிருந்தது. அப்படி ஏதாவதொரு அறையில் விளக்கெரிந்தாலாவது கண்டறிந்துவிடலாம். அந்தக் கடத்தல் கும்பல் நிச்சயம் சமார்த்தியசாலிகள்தான் என எண்ணியவன் தன் கைத்தூப்பாக்கியை உயர்த்திப் பிடித்தபடி அறைக்குள் நுழைய, அங்கே ஆள் அரவமே இல்லை. அந்த அறையின் வாசலில் ஒரு பச்சை நிற திரைச்சீலை பாதியாய் கிழிந்து இருந்ததைக் கவனித்தான். யாரும் இல்லையா அல்லது போலீஸ் வந்தததை அறிந்து எல்லோரும் ஒளிந்து கொண்டிருப்பார்களா என்று எண்ணியவனுக்கு அங்கே தன் பூட்ஸ் சத்தம் மட்டுமே எதிரொலித்தது. அவன் தன் கையிலிருந்த அலைப்பேசியின் ஒளியைக் காண்பித்து அறையின் விளக்கைப் போட்டான். சுற்றும் முற்றும் யாரும் அவன் விழிகளுக்குத் தென்படவில்லை. மீண்டும் அவனுக்கு ஏமாற்றமே மிச்சமாயிருந்தது. அவன் வாழ்வில் இத்தனை மோசமான நாளைக் கண்டதே இல்லை என்றளவுக்கு அந்த நாள் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்க தன் தூப்பாக்கியை இறக்கினான். தன்னவளைக் காண முடியாத தவிப்போடுப் பெருமூச்செறிந்தவன் ஆதி சொன்னதை வைத்து அந்த ராஜசிம்மன் ஓவியத்தை அடையாளம் கண்டு, அந்த ஓவியத்தை அழுத்தமாய் சுழற்றி திறந்து உள்நுழைந்தான். அவனின் செல்ஃபோன் வெளிச்சத்தில் அந்த அறை முழுவதுமாய் தூசு படிந்திருப்பதைப் பார்த்தவன், அதே சமயம் அந்தச் சுரங்கப் பாதையையும் எட்டிப் பார்த்தான். அவனடைய அவர்கள் இந்த வழியாகத்தான் அவர்கள் தப்பிப் போயிருப்பார்கள் என்று சொன்னது. உடனடியாக தன் வயர்லெஸ் மூலம் தாமரை மண்டபத்தில் நிற்கச் சொன்ன கான்ஸ்டெபிள்களுக்குத் தொடர்பு கொள்ள முயற்சி செய்ய அந்தச் சமயத்தில் அங்கு பெரும் களேபரமே நிகழ்ந்து முடிந்திருந்தது. அவன் பேச முயற்சி செய்ய பதிலே இல்லை. "த்ரீ நாட் செவன்... பேசுங்க... அங்கே என்னாச்சு" அவன் ஓயாமல் அழைத்துக் கொண்டிருக்க எதிர்புறத்தில் பதில் இல்லை. என்ன நேர்ந்திருக்கும்... ஆயிரம் யூகங்கள் அவன் மூளையை முற்றுகையிட்டன. அந்த நொடி தலையே சுழன்றது அவனுக்கு... ஒரே கேள்விதான் மீண்டும் மீண்டும் எழுந்து அவனைப் பித்துப் பிடிக்க வைத்தது. எங்கே தன் மனைவி? இந்தக் கேள்விக்கான பதில் எப்போது கிடைக்கும்?! தன் தேடல் எப்போதும் முடியும் என்று தவிப்புற்றவனின் மனம் ரொம்பவும் களைப்புற, அவளில்லாத ஏக்கம் அவனை வெறிக் கொள்ளச் செய்தது. அவளால் மட்டுமே இப்போதைக்கு தன் சோர்வையும் களைப்பையும் தீர்க்க முடியும் என்று எண்ணிக் கொண்டான். ஆம்! அவளால் மட்டுமே முடியும். அதற்கு அவள் தேகத்தை தன் கரத்தால் ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும். தன்னை இப்படி பரிதவிக்கவிட்டு போன ராட்சஸி... இரக்கமில்லாதவள்... இப்படியாக மனதில் வசைப்பாடிக் கொண்டே அந்த அறையின் சுவரில் தன் கரத்தால் குத்தினான். அப்போது அவன் அலைப்பேசி அழைக்க எடுத்தவன் எதிர்புறத்தில் ஆதியின் குரலை உணர்ந்தான். அத்தனை பதட்டத்தோடும் தவிப்போடும் ஒலித்தது அவள் குரல். * ஆதி விஷ்வாவின் கையில் மயங்கி சரியவும் அவனுக்கு ஒரு நொடி என்ன செய்வதன்றே புரியவில்லை. ஒருவாறு அதிர்ச்சியிலிருந்து மீண்டவன், அவளை தன் கரத்தில் தூக்கிக் கொண்டான். கடலின் சற்று அருகாமையில் நின்றிருந்த பழைய மீன் பிடி கப்பல் மீது அவளைச் சாய்த்த மேனிக்குப் படுக்க வைத்துவிட்டு தன் கைக்குட்டையில் கடல் நீரை நனைத்து வந்து அவள் முகத்தைத் துடைத்து, "ஆதி" என்று அழைத்து, தண்ணீரை அவள் முகத்தில் பிழிந்துவிட்டான். மயக்கம் தெளிய விழிகளைச் சுருக்கியவள் உலர்ந்திருந்த உதட்டில் பட்ட நீர்த்துளியைச் சுவைத்த நொடி, "த்தூ...த்தூ" என்று சொல்லியபடி முகத்தைச் சுளித்தாள். விஷ்வா அவள் தோள்களைப் பற்ற… ஆதி அவனை முறைத்தபடி, "என்னடா விஷ்வா... உனக்கு உப்பு தண்ணிதான் கிடைச்சுதா" என்றாள். அவள் எழுந்ததைப் பார்த்து மகிழ்வுற்றவன் அவளின் முகபாவத்தை பார்த்து ,"உப்பு தண்ணி தெளிச்சதுக்கே இவ்வளவு ரியாக்ஷனா? மேடம் கொஞ்சங் கூட மனசாட்சியே இல்லாம எனக்கு உப்பு காபி கொடுத்திங்களே" என்றான். "போடா இடியட்" "இடியட்தான்... உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனே... நான் இடியட்தான்... ஏதோ அவசரத்துக்கு இந்த கடல் தண்ணிதான் கிடைச்சுது... நான் என்ன பண்றதாம்... பக்கத்தில எங்கயும் ஒரு ஷாப் கூட தெரியல... ஹெல்ப்புக்குக் கூட ஆளில்லை..." என்று சொல்லியவன் பின் சலிப்போடு, "உன் கூடபோதும்டா சாமி... முடியல... பேசாம போய் இந்த கடலில் குதிச்சிடலாமான்னு பார்க்கிறேன்" என்று சொல்லியபடி எழுந்து நின்று கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான். "உனக்கு நீச்சல் தெரியாது... தேவையில்லாம அதெல்லாம் ட்ரை பண்ணாதே" என்று சொல்லியபடி ஆதி அவன் கரத்தைப் பற்றி எழுந்து கொள்ள, அவன் அவளை கவனியாமல் நின்றிருந்தான். ஆதி மேலும், "எனக்கு ரொம்ப தாகமா இருக்கடா... போய் தண்ணி வாங்கிட்டு வாயேன்" என்றாள் களைப்போடு! அவன் கோபத்தோடுத் திரும்பி, "என்னை புருஷனா வேண்டாம்... அட்லீஸ்ட் ஒரு மனுஷனாவாவது மதிக்கலாம் இல்ல?!" என்று கேட்டான். "இந்த மாதிரி ஓல்ட் டையலாக் எல்லாம் பேசி என்னை சாகடிக்காதே... உன்கிட்ட சண்டை போடற அளவுக்கு என்கிட்ட தெம்பில்லை... ப்ளீஸ் போய் தண்ணி வாங்கிட்டு வா" என்று கெஞ்சலாகக் கேட்டாள். அவளின் வாடி வதங்கிய முகத்தைப் பார்த்ததுமே அவன் கோபமெல்லாம் கரைந்து போனது. "சரி... வா... கொஞ்ச தூரம் நடந்து போனா ஏதாவது ஷாப் வரும்" என்றான். "நோ... நான் இங்கிருந்து வரமாட்டேன்... தமிழ் நல்லா இருக்காளான்னு தெரியணும்" "உன்னை இப்படி தனியாய் விட்டுவிட்டுப் போறதா? என்னால முடியாது..." என்றவனை அவள் கோபமாய் முறைக்க, அவள் பார்வையைப் புரிந்தவன், "சரி இப்போ உனக்கு தண்ணி வேணும் அப்படிதானே?!" என்று கேட்டான். அவள் வேகமாய் தலையசைக்க, விஷ்வா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவள் எதிர்பாரா வண்ணம் அவளை தன் கரத்தில் பிணைத்து அவளின் உலர்ந்த உதடுகளை தம் உதடுகளால் நனைக்க ஆரம்பித்தான். வற்றாத ஊற்றாய் பெருகும் அவன் காதலால் அவள் தாகத்தை தணிக்கும் முயற்சி கொஞ்சம் வெற்றியும் கண்டது. தாகம் தீர்ந்தபாடில்லை எனினும் அவனின் இதழ்கள் கொஞ்சம் அவளை இளைபாறச் செய்து விடுவித்தது. அவன் செய்த செயலால் கோபமடைந்தவள் அவனை என்ன செய்வதென்று புரியாமல் எரிச்சலடைய அவன் புன்னகையோடு, "முறைக்காதடி... நான் உனக்கு ஹெல்ப்தானே பண்ணேன்" என்றான். "இது ஹெல்ப்பா?!" "பின்ன... நேத்து நீ கொடுத்தியே உளவியல் முத்தம்... அந்த மாதிரி இது கொஞ்சம் மருத்துவ முத்தம்" என்றான். அவள் கோபமாய் பார்வையைச் சுழற்றிப் பார்த்தவள் அவள் அருகில் இருந்த மீன் பிடிக் கப்பலில் இருந்த ஒரு மரப்பலகையைக் கையில் எடுக்க விஷ்வா அச்சத்தோடு, "ஏ... ஆதி வேண்டாம்... " என்று பின்னோக்கி நகர்ந்தான். "நான் இங்க உயிர் போற டென்ஷன்ல இருக்கேன்... நீ என்னடான்னா" "உன் டென்ஷனைக் குறைச்சேன்... அது ஒரு தப்பா?" என்று சொல்லித் தப்பிக் கொள்ள ஓடியவனைத் துரத்திச் சென்றவள், தூரத்தில் நிகழ்ந்த அந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியுற்று நின்றுவிட்டாள். "விஷ்வா... ஒரு நிமிஷம் இங்கே வா" என்று அவள் குரல் கொடுக்க, "நீ அந்தக் கட்டையைக் கீழே போடு அப்பதான் வருவேன்" என்றான் அவன் நிலைமை புரியாமல், "அய்யோ அங்கே என்ன நடக்குதுன்னு பாரு" என்று கைநீட்டி அவள் பார்த்தக் காட்சியைக் காண்பித்தாள். அவன் பார்த்த திசையில் அந்த கடத்தல் கும்பல் தாமரை மண்டபத்திலிருந்து வெளியேறி வந்து கொண்டிருக்க, அவர்களைப் பிடிக்க வந்த கான்ஸ்ட்டபிள்களை சரமாரியாய் தாக்கிவிட்டு வெளியேறினர். "விஷ்வா... வீ நீட் டூ ஸ்டாப் தெம்" என்றாள் ஆதி. விஷ்வா அதிர்ந்து தன் மனைவியைப் பார்க்க, அவளோ தன் தோழியைக் காணவில்லையே, அவளின் நிலைமை என்ன ஆனதோ என்று சிந்திக்கலானாள். அப்படியே நிற்காமல் அவள் விஷ்வாவின் கரத்தைப் பற்றி, "அவனுங்கள தப்பிக்க விடாம பண்ணனும்" என்றாள். விஷ்வா அவள் கையை அழுந்தப் பற்றி நிறுத்தியவன், "நம்ம இரண்டு பேரால என்ன பண்ண முடியும் ஆதி… அவனுங்க ஆறு பேர்... அதுவும் இரண்டு பேர்கிட்ட கன் வேற இருக்கு... பிராக்டிக்கலா ரிஸ்க்" என்று தூரத்திலிருந்தே எல்லாவற்றையும் ஆராய்ந்து எதார்த்தத்தை உரைத்தான். ஆனால் அவளோ உடல் பலத்தை நம்புபவள் அல்ல. மனோபலத்தை நம்புபவள். எதையும் செய்ய முடியுமென்ற திடமான நம்பிக்கை அவளிடம் உண்டு. "விஷ்வா பேசிட்டிருக்க டைம் இல்ல... நீ வீரேந்திரன் நம்பர் வைச்சுருக்கியா?" என்று கேட்க, "ஸ்டோர் பண்ணல... பட் இருக்கும்" என்றான். "சரி உன் ஃபோனை கொடு" என்று வாங்கிக் கொண்டாள். அவள் ஆபத்து என்று யோசிக்காமல் அவன் கரத்தைப் பிடித்து நடந்தபடி அவர்களைப் பிடிக்க என்ன செய்ய வேண்டுமென்று மனதளவில் திட்டமிட்டவள் அதனை தன் கணவனிடம் விவரித்தாள். அதற்குள் அந்தக் கும்பல் மண்டபத்திலிருந்து சிறிது தூரம் நடந்து வந்திருக்க ஆதி திடமாய் அவனைப் பார்த்து, "நான் சொன்ன மாதிரி செஞ்சிரு விஷ்வா" என்றாள். அவன் பதட்டத்தோடு, "ஏ... விளையாடுறியா... நான் எங்கம்மாவுக்கு ஒரே பையன் டி..." என்றான். "நாங்க மட்டும்" "ஆதி... நமக்கு இன்னும் ஒன்னு கூட பிறக்கலயே டி... அதை பத்தியாவது யோசிச்சியா" என்று அவன் அவளுக்குப் பிடிக்கொடுக்காமல் பேசினான். "இப்ப அதுதான் ரொம்ப முக்கியம்" "பின்ன இல்லையா... என் வம்சாவெளி வளர வேணாமா?!" அவள் பார்வை கனலாய் மாற, அவன் பெருமூச்சுவிட்டபடி, "நான் சொன்னா நீ கேட்கவா போற... உன் இஷ்டப்படி செய்... ஹ்ம்ம்... என்னைக் கத்திக் குத்து வாங்க வைச்ச... இப்ப துப்பாக்கி சூடு வாங்க வைக்க போற" என்று முனங்கியவனை நிமிர்ந்து பார்த்தவள், "விஷ்வா இப்படி எல்லாம் பேசாதே... திங் பாஸ்டிவ்... உன் பலம் உனக்கே தெரியாது... யூ கேன்" என்று தைரியப்படுத்தினாள். 'இப்படி உசுபேத்தி உசுபத்தியே உடம்பை ரணகளமாக்கிடுவா போலிருக்கே' என்று எண்ணியவன் வேறு வழியின்றி அவள் சொல்வதைச் செய்ய தயாரானான். ஆதி அவன் அலைப்பேசியில் இருந்து அவள் பத்திரிக்கையில் வேலை செய்யும் ஜேம்ஸுக்கு அழைத்துப் பேசி அவளுக்குத் தேவைப்படும் உதவி பற்றி விவரித்துவிட்டு உடனடியாக தன் திட்டத்தைச் செயல்படுத்த எத்தனித்தாள். அந்தக் கடத்தல் கும்பல் சாலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்க, ஆதி தன் உடல் நிலையை மீறி ஓட்டமும் நடையுமாய் சென்று மூச்சு வாங்கியபடி அவர்களை வழிமறித்தாள். அவர்கள் இவளைப் பார்த்ததும் எரிச்சலடைய அவளோ, "எங்கடா என் ஃப்ரண்டு?" என்று கேட்டாள். உடனே அதில் ஒருவன் ரகசியமாய் தன் கும்பலிடம், "இவ நம்ம எல்லோரையும் பார்த்துட்டா... இவளைக் கொன்னுடலாம்" என்று சொல்லி துப்பாக்கியை எடுக்க அருகிலிருந்தவன் அவனை கையமர்த்தி, "பப்ளிக்கா வேண்டாம்... இப்ப நாம தப்பிச்சு போறதுதான் முக்கியம்" என்றான். அந்தக் கும்பலின் தலைவன் ஆதியை பார்த்து, "எங்க நீ உன் ப்ஃரண்டை விட்டுவிட்டு வந்தியோ அங்கேயே போய் பாரு" என்று சொல்லி அலட்சியமாய் அவளைக் கடந்து செல்ல முயற்சிக்க, ஆதி அவர்கள் செல்வதற்கு முன்னர் அவள் இரு கரத்தில் மூடியிருந்த மணலை அவர்கள் கண்களில் தூவினாள். அவர்கள் எல்லோரும் தங்கள் விழிகளைத் திறக்க சிரமப்பட, அவர்கள் சுதாரித்து கொள்ளும் முன் பின்னோடு வந்த விஷ்வா தன் கையில் இருந்த மரப்பலகையை ஓங்கி அவர்கள் பின்னந்தலையில் அடித்தான். அவனின் தாக்குதலில் மூவர் கீழே விழ, இன்னும் இருந்த மூவரில் இருவர் விஷ்வாவை தாக்க முற்பட அதில் ஒருவன் ஆதியின் கழுத்தை இறுக்கி மூச்சுவிட முடியாமல் தத்தளிக்க செய்தான். விஷ்வா தன் மனைவிக்கு ஆபத்து என்று உணர்ந்ததும் அவனுக்குள் உதித்த வெறி, அவனைத் தாக்க முற்பட்ட இருவரையும் துவம்சம் செய்ய வைத்தது. அத்தனை நேரம் அமைதியின் உருவமாய் இருந்த கடற்பரப்பு இவர்களின் சத்தத்தாலும் கூச்சலாலும் போர்க்களமாய் மாறியிருந்தது. ஆதியின் கழுத்தை இறுக்கியவன் தன் துப்பாக்கியை எடுக்க முயலும் போது விஷ்வா அந்தத் தூப்பாக்கியைப் பறித்துக் கொண்டான். ஆதியின் கழுத்தெலும்பு முறிந்துவிடும் நிலையில் அவளை விடுவித்திருந்தான். அவள் தடுமாறி விழவும் விஷ்வா அவளைப் பிடிக்கும் போது அவன் தப்பித்து ஓட முற்பட்டான். அங்கே நடந்த கலவரங்களைப் பார்த்து மீனவர்கள் சிலர் ஓடி வந்து, தப்பித்துச் சென்ற அந்தக் கடத்தல் கும்பலின் தலைவனைப் பிடித்தனர். ஆதி சற்று தெளிவுப்பெற்று விஷ்வாவை நோக்கினாள். அவன் அவளை கரத்தில் இறுக்கிக் கொள்ள ஆதி அவனிடம், "கையில துப்பாக்கி வைச்சுட்டு வேடிக்கைப் பார்த்துட்டுருக்க... அவனை ஓடவிடாம சுட்டிருக்கலாம் இல்ல" என்று கேட்க, விஷ்வா அவன் கையில் இருந்த துப்பாக்கியை அவளின் கரத்தில் தினித்தவன், "நான் வெறும் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர்... எனக்கு கம்பூயூட்டர்தான் ஆப்ரேட் பண்ணத் தெரியும்... கன்னெல்லாம் ஆப்ரேட் பண்ணத் தெரியாது" என்றான். அவன் சொல்வதும் சரிதான். அவன் கையிலிருந்த நவீனரக துப்பாக்கியைப் பழக்கமின்றி யாரும் உபயோக படுத்த முடியாது. அதே சமயம் ஆதி தன் கணவனை வியந்து பார்த்தாள். முடியாது என்று சொல்லிவிட்டு அவர்கள் ஆறு பேரையும் அசாதாரணமாய் சமாளித்து விட்டானே! அதற்குள் ஜேம்ஸ் அனுப்பிய சில ஆட்களும் வந்துவிட அந்த மீனவர்களின் உதவியோடு அந்தக் கடத்தல் கும்பலின் கரத்தைப் பிணைத்தனர். ஆதி மீண்டும் அந்தக் கும்பலின் தலைவனிடம், "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே என் தலையில துப்பாக்கி வைச்ச..." என்று சொல்லி கோபமாய் முறைத்தவள் , "எங்க என் ஃப்ரண்ட் தமிழ்?" என்று கேட்டாள். அவன் முகத்தில் ஒரு குரூர புன்னகை ஒளிர்ந்தது. ஆதி அதனைக் கண்டு கொஞ்சம் கதிகலங்கி நிற்க, அவன் சொன்ன தகவல் கேட்டு அங்கே நின்றிருந்த எல்லோருமே பதறிப் போயினர். விஷ்வாவும் அதிர்ந்து போக, ஆதிக்கு இதயமே நின்றுவிட்டதாய் ஒரு உணர்வு. ஆதி உடனடியாக வீரேந்திரனின் எண்ணைக் கண்டறிந்து அவனுக்கு அழைப்பு விடுத்து அந்த அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தாள்.</blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா