மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-7Post ReplyPost Reply: Oodal-7

Quote from monisha on January 26, 2020, 10:26 PM

7
வளர்மதி பேசிக் கொண்டிருந்த எதுவும் என் காதில் விழவில்லை. அவளை நான் நிமிர்ந்து பார்க்கக் கூட முடியாமல் பதட்டத்தோடு நின்றுக் கொண்டிருந்தேன். “என்ன காயு! இன்னும் உனக்கு ஷாக் போகலையா?” என்று வளர் கேட்க, “அதெல்லாம் இல்ல… நீ உட்காரு… நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று நழுவிக் கொண்டு, நான் சமையலறைக்குள் நுழைந்துவிட்டேன். எனக்கு அவளிடம் முகம் கொடுத்துப் பேசுவதற்குக் கூடத் துணிவில்லை. சில நொடிகளில் வளர்மதி உள்ளே வந்து, “என்னடி பண்ற நீ? இருக்கிற கொஞ்ச நேரமாச்சும் நாம பேசிட்டு இருப்போம்னு இல்லாம… நீ பாட்டுக்கு காபி போடுறன்னு உள்ளே வந்துட்ட” என்றாள். “இல்ல… அம்மா காபி போட்டு கொடுன்னு சொல்லிட்டுப் போனாங்க… போட்டுக் கொடுக்கலன்னா திட்டுவாங்க” “அம்மாவுக்கெல்லாம் பயப்படுற ஆளாடி நீ” என்று அவள் கேலியாகக் கேட்க, எனக்கு அவளின் வார்த்தைக் குத்தலாகவே விழுந்தது. “அவங்கச் சொல்லிட்டுப் போயிருக்காங்க… அதுவும் இல்லாம நீ முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்க” என்றபடி நான் அவள் முகத்தைப் பாராமலே காபி போடும் வேலையில் மும்முரமாக இருக்க, “உனக்கு தெரியுமா? நம்ம ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் யாரையாவது ஒருத்தரை யாச்சும் பார்த்திரமாட்டோமான்னு ஏங்கிட்டு இருந்தேன்… மாலு வீட்டுக்கு போனா அவ அமெரிக்கால இருக்கா… நந்து மாஸ்கோவ்ல… விஜயா பெங்களூர்ல… யாருமே லோக்கலில இல்ல… உன்னைக் கூடப் பார்க்க முடியும்ன்னு நான் நினைக்கவே இல்ல… ஆனா என் அதிர்ஷ்டம்… நீ கரெக்ட்டா நான் வர நேரம் பார்த்து உங்க அம்மா வீட்டுக்கு வந்திருக்க” என்று பேசிக் கொண்டே போனவள் சட்டென்று தன் குரல் இறங்கி, “நம்ம ஸ்கூல் வாழ்க்கைத் திரும்ப வராதான்னு எனக்கு ஆசையா இருக்கு… எவ்வளவு கலாட்டா… எவ்வளவு அரட்டை… எவ்வளவு சந்தோஷம்… உன் கூட எவ்வளவு சண்டை” என்று மனம் நெகிழ்ந்து அவள் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகளில் தொனித்த ஏக்கம் என்னையும் பற்றிக் கொண்டது. அந்த இனிமையான நாட்கள் என் நினைவுகளையும் தட்டி எழுப்பிவிட, “ஆமா வளர்… எவ்வளவு ஹாப்பியா இருந்தோம் இல்ல… எதைப் பத்தியும் கவலை படாம சந்தோஷமா” என்று சொல்லிக் கொண்டே நானும் அவளும் காபியோடு முகப்பறைக்கு வந்தோம். “நம்ம இரண்டு பேரும் அப்போ ஏன் அப்படிச் சண்டைப் போட்டுகிட்டோம்னு இப்போ யோசிச்சுப் பார்த்தா… சிரிப்புதான் வருது இல்ல” என்று வளர் சொல்ல, “ஆமா” என்று நானும் என் கவலைகளை எல்லாம் மறந்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளி நாட்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே காபியைப் பருகினோம். அத்தனைப் பசுமையாக அந்த அழகிய நாட்கள் எங்கள் நினைவு கூட்டில் சிறைப்பட்டிருந்தது. இன்று அது சிறகை விரித்து பறக்க, மனம் லேசானது எனக்கு. அந்த நொடி என்னுடைய அனைத்து வேதனைகளும் மறந்து போனது. வளர் அப்போது தன் பையைத் துழாவிக் கொண்டே, “உன்கிட்ட பேசிக்கிட்டே நான் வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாரேன்” என்று உள்ளே இருந்து ஒரு அழைப்பிதழை எடுத்து, “எனக்கு வர 6ம் தேதி கல்யாணம் காயு… நீ உன் கணவர் உங்க அம்மா அப்பா எல்லோரையும் கூட்டிகிட்டு வந்துடணும்… சரியா” என்று அவள் அந்த அழைப்பிதழை என்னிடம் நீட்டினாள். அதனைப் பெற்றுக் கொண்டே அவளைக் குழப்பமாகப் பார்த்த நான், “இன்னுமா நீ கல்யாணம் பண்ணிக்காம இருக்க?” என்று கேள்வி எழுப்பினேன். ஆனால் அடுத்த நொடியே நான் கேட்ட கேள்வி தவறென்று உணரந்து உதட்டைக் கடித்துக் கொள்ள, வளர்மதி சகஜமாகச் சிரித்துக் கொண்டே எனக்குப் பதிலளித்தாள். “எனக்கு ஜஸ்ட் தர்ட்டிதான் ஆகுது” என்றவள் சொல்லவும் நான் அவளை வியப்பாகப் பார்த்தேன். “யார் யார் வாழ்க்கையில் எது எது எப்பப்ப நடக்கணும்னு இருக்கோ அது அது அப்பப்பதான் நடக்கும்… எல்லோரோட லைஃப்பும் ஒரே ஃபார்மேட்ல இருக்க முடியாது… உனக்கு ஒன்னு சொல்லட்டுமா… லேட்டானாலும் என்னை நல்லா புரிஞ்சிக்கிட்ட ஒரு பெட்டர் லைஃப் பார்ட்னர் எனக்கு கிடைச்சிருக்காரு” என்றாள் புன்னகை முகமாக! அவள் சொன்ன பதிலில் என் வாழ்க்கைக்கான விடையும் இருந்ததுபோல உணர்ந்தேன். “சரி நான் கிளம்புறேன் காயு… லேட்டாகுது… அம்மா வந்தா சொல்லிடுறியா?” என்று வளர் புறப்பட எனக்கு அவளிடம் இன்னும் சில மணிநேரங்கள் பேச வேண்டும் போலிருந்தது. வளர் கிளம்பும் அவசரத்தில் என் கைபேசி எண்ணை வாங்கிக் குறித்துக் கொண்டு, அவள் எண்ணையும் தந்துவிட்டு சென்றாள். இத்தனை வருடங்கள் கடந்த பின் வளர்மதியுடன்தான் பள்ளி நாட்களில் தேவையில்லாமல் பகைமையை வளர்த்துக் கொண்டது தவறாகத் தோன்றியது. அவள் கொடுத்த அழைப்பிதழை அப்போதுதான் கூர்ந்து கவனித்தேன். அழகான அதே சமயம் எளிமையான திருமண அழைப்பிதழ். வளர்மதி வெட்ஸ் சஞ்சய். இருவருமே மருத்துவர் என்ற அடைமொழி இருந்தது. அதுவும் வளர்மதி மனநல மருத்துவர் என்ற வார்த்தையைப் பார்த்து எனக்கு அடங்கா ஆச்சரியம் உண்டானது. இத்தனை நேரமாக அவள் இதைப் பற்றி சொல்லவேயில்லையே! அவள் சொல்லவில்லை என்பதைவிட நான் அவளைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை! அவளும் கூட என்னிடம் எதுவும் கேட்கவில்லை. முக்கியமாக எல்லோரையும் போல எனக்கு குழந்தை இல்லையா என்று! ஒரு சில நிமிடங்கள் பழகியவர்கள் கூட அந்தக் கேள்வியை தொடுக்காமல் இருந்தததில்லை. ஆனால் வளர் என்னிடம் அதுப்பற்றி எதுவும் கேட்கவுமில்லை. முக்கியமாக அந்த கடற்கரை சந்திப்பைப் பற்றியும் அவள் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. உண்மையிலேயே ஆச்சரியம்தான். அவள் மறந்துவிட்டிருப்பாள் என்றுத் தோன்றவில்லை. நாகரிகம் கருதி அவள் பேசாமல் இருந்திருக்கக் கூடும். எனக்கு இப்போது அவளிடம் பேச வேண்டுமென்ற ஆர்வம் கூடியது. ஒரு வகையில் என் பிரச்சனைக்கும் குழப்பத்திற்கும் அவளால் விடைக் காண முடியுமென்று தோன்றியது. நான் இந்த யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது அம்மா கோயிலிலிருந்துத் திரும்பியிருந்தார். “என்னடி உன் ப்ரெண்ட் கிளம்பிட்டாலா?” என்று கேட்கவும், “ம்ம்ம்” என்றேன் சிரத்தையின்றி! “இத்தனை வருஷம் கழிச்சு அந்தப் பொண்ணு உன்னைத் தேடி வந்திருக்கு பாரேன்” “ம்ம்ம் ஆமா” “என்ன சொல்லிச்சு?” “அவளுக்கு கல்யாணமாம் இன்விடேஷன் வைக்க வந்திருக்கா” “கல்யாணம் ஆகலையா அந்தப் பொண்ணுக்கு… உன் கூட படிச்சி பொண்ணுன்னா இந்நேரம் முப்பதை தாண்டியிருக்கனுமேடி” எனக்கு சுர்ரென்றுக் கோபமேறியது. “முப்பதைத் தாண்டினா என்ன? எல்லா பொண்ணுங்களையும் மாதிரி கல்யாணம் குழந்தைன்னு பிக்கல் பிடுங்கல் இல்லாம இத்தனை வருஷம் சுதந்திரமா இருந்துட்டு இப்போ பண்ணிக்கிறா… அது உனக்கு பொறுக்கலையா” என்று நான் சீற்றமாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட, அம்மா அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் கப்சிப்பென்று ஆகிவிட்டார். அன்று மாலை முழுவதும் ஒரே யோசனையாக இருந்தது. வளர்மதியை நேரில் சந்தித்து என் மனவேதனைகளை எல்லாம் கொட்ட வேண்டும் போல் தோன்றியது. அவளால் நிச்சயம் என் தவிப்பையும் கவலையையும் புரிந்துக் கொள்ள முடியும். நட்பை விட வெளிப்படையான ஆழமான ஒரு உறவு இருக்கவே முடியாது. நண்பனிடம் மட்டும்தான் நம் மனகுமுறல்களை முழுமையாகக் கொட்ட முடியும். என் மூளைத் தொடர்ந்து வளர்மதியிடம் பேசிப் பார்க்கலாமே என்று அறிவுறுத்திக் கொண்டேயிருந்தது. நெடுநேர யோசனைக்கு பின் வளர்மதி கொடுத்த அவளின் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தேன். “ஏ சொல்லு காயு” உற்சாகமாக வெளிவந்த அவள் குரலுக்கு பதில் சொல்ல முடியாமல் நான் தயங்க, “காயு” என்று மீண்டும் அழுத்தமாக அழைத்தாள். “வளர்… நான் உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றேன். “காலையிலதானே பார்த்துப் பேசிட்டு வந்தோம்” “இல்ல வளர் கொஞ்சம் பெர்சனலா பேசணும்?” “பேசலாமே… நான் ஃப்ரீயாதான் இருக்கேன் சொல்லு” “இல்ல நான் உன்னை நேர்ல பார்த்துப் பேசணும்” “ஓ! அப்படின்னா ஒன்னு பண்ணு.. நீ என் வீட்டுக்கு வா” “உன் வீடு எங்கே இருக்கு வளர்?” “என் வீடு தெரியாதாடி உனக்கு… நம்ம படிச்ச ஸ்கூல் பக்கத்திலதான்…” “ஓ! இப்பவும் அங்கதான் இருக்கியா?” “ஹ்ம்ம்… அங்கயேதான்… நீ புறபட்டு வா நம்ம பேசுவோம்” “எப்ப வரட்டும்” “நாளைக்கு ஈவனிங் வர்றியா?” “ஹ்ம்ம் சரி” அதோடு எங்கள் உரையாடல் முடிந்துவிட்டது. வளர்மதியிடம் பேசிவிட்ட பிறகும் என் மனதிலிருந்த குழப்பம் மாறவேயில்லை. தயக்கத்தோடே அவள் வீட்டிற்கு சென்றேன். குறுகிய அந்த தெருவில் பெரிய வீடு அவளுடையதுதான் என்று பார்த்த மாத்திரத்தில் சொல்ல முடிந்தது. மேலே வீடும் கீழே அவளுடைய கிளினிக்கும் இருப்பதாக சொல்லியிருந்தாள். உள்ளே நுழைந்ததும் என்னை ஆச்சரியப்படுத்தியது அந்த வீடு! ஒரு மருத்துவமனை அமைப்பை எதிர்பார்த்துதான் உள்ளே சென்றேன். ஆனால் அது ஒரு பெரிய கூட்டு குடும்பம் வசிக்கும் வீடு போல இருந்தது. ஒரே சிரிப்பும் கலாட்டாவாகவும்! வயதானவர்கள் குழந்தைகள் என்று எல்லோரும் ஆளுக்கொரு விளையாட்டை குழுவாக சேர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். பல்லாங்குழி, கல்லாங்காய் என்று பாரம்பரிய விளையாட்டில் தொடங்கி செஸ் கேரம் என்று இன்றைய காலக்கட்ட விளையாட்டுக்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். ‘வீடு மாறி வந்துவிட்டேனோ. இல்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. வாயிலில் வளர்மதி மனநல மருத்துவர் என்றிருந்தது. ஒருவேளை இவர்கள் எல்லாம் மனநலம் சரியில்லாதவர்களோ? சட்டென்று என்னைப் பயம் தொற்றி கொள்ள, வளர்மதியை அழைத்து பேசிவிடலாம் என்று எண்ணி என் கைபேசியை வெளியே எடுத்தேன். சரியாக அதேசமயத்தில் வெளியே வந்தாள் வளர்மதி! “ஏ காயு! வந்துட்டியா வா… உள்ளே வா” என்றவள் அழைக்க அவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டே நான் உள்ளே நடந்தேன். அவளின் அந்த சந்திப்பு என் வாழ்க்கையை என் சிந்தனையை ஏன் என்னையே மாற்றிவிடும் ஒரு சந்திப்பாக இருக்கப் போகிறது என்று நான் யூகித்து கூடப் பார்க்கவில்லை. வாழ்க்கையின் மீதான என் பார்வையே மாறிய தருணம் அது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா