மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: En Iniya Pynthamizhe!En Iniya Pynthamizhe - 3Post ReplyPost Reply: En Iniya Pynthamizhe - 3

Quote from monisha on March 21, 2022, 8:56 PM

3
பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்திருந்தாள் பைந்தமிழ். மகளின் சாதனையில் சகுந்தலாவும், மதுசூதனனும் மகிழ்ந்து நெகிழ்ந்து போயினர். “படிச்சா நம்ம தமிழைப் போல படிக்கோணோம்” என்று அந்த ஊர் மக்கள் தம் பிள்ளைகளுக்கு பைந்தமிழை ஒரு உதாரண பெண்ணாகக் காட்டினர். அவளின் வெற்றியை அந்த ஊரே கொண்டாட, பேச்சி கிழவிக்கும் சந்திரனுக்கும்தான் இது எதுவும் பிடிக்கவில்லை. கடுப்பானது. அதுவும் அந்த சம்பவத்திற்கு பிறகு சந்திரன் பள்ளிக்கே போக மாட்டேன் என்று சொன்னதில் பேச்சி கிழவிக்கு அவள் மீது அளவில்லா துவேஷம் வேறு! “என்ற பேரனோட படிப்பைக் கெடுத்து போட்டு… இவ மட்டும் நல்லா மார்க் எடுத்து பெரிய படிப்பு படிக்க போராளாக்கும்… எடுபட்ட சிறுக்கி… நல்லாவே இருக்க மாட்டா…. இவ போற இடம் விளங்காம போயிடும்” என்றவர் அவள் வெற்றியையும் வளர்ச்சியையும் பொறுக்க முடியாமல் திண்ணையில் அமர்ந்து கொண்டு வாய் நிறைய அவளுக்கு சாபத்தை சக்கரை பொங்கல் போல வாரி வாரி வழங்கி கொண்டிருந்தார். இன்னொரு புறம் சந்திரனுக்கு தான் ஆசைப்பட்ட கனி தனக்கு எட்டாத தரத்தில் விலகி போய் கொண்டே இருக்கிறது என்ற ஆதங்க தீ மனதில் கொழுந்துவிட தொடங்கியது. ‘சீ சீ இந்த பழம் புளிக்கும்’ என்று அவனால் சாதாரணமாக அவளை விட்டு விலகவும் முடியவில்லை. சமாதானமாகவும் முடியவில்லை. அவள் மீது ஏற்பட்ட ஒரு ஆழமான ஈர்ப்பு. அது வெறும் ஈர்ப்பு மட்டும்தானா என்று அவனுக்கு சொல்ல தெரியவில்லை. என்னவோ அவளைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்தது. அதுவும் பித்து பிடிக்குமளவுக்கு ஒரு பிடித்தம். அந்தப் பிடித்தம் அவள் கருவிழிகள் மீதா அல்லது அவள் கன்னத்தில் விழும் குழியின் மீதா அல்லது கலையான அவளது கருப்பு நிறத்தின் மீதா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. வெளியே வெறுப்பைக் காட்டினாலும் இன்னும் அந்தப் பிடித்தம் அவனுக்குள்ளாக ஆழமாகப் புதைந்து கிடந்த அதேநேரம் புகைந்து கொண்டும் இருந்தது என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் பைந்தமிழுக்கு அவனைப் பற்றிய சிந்தனை கொஞ்சமும் இல்லை. அவளின் பேச்சு, மூச்சு, எண்ணம் எல்லாம் படிப்பு! படிப்பு! படிப்பு மட்டும்தான். அதுவும் அவளுக்கு பொறியியல் கலந்தாய்வில் சென்னையில் உள்ள பெரிய கல்லூரியில் இடம் கிடைத்தது. அதுவாக தேடி வரும் அரிய வாய்ப்பை அவள் தவறவிட விரும்பவில்லை. ஆனால் மதுசூதனனுக்கோ மகளை அத்தனை தூரம் அனுப்ப மனமே இல்லை. பக்கத்திலேயே அவளை ஒரு நல்ல கல்லூரியில் சேர்ப்பதாகச் சொன்னார். ஆனால் படித்தால் சென்னையில்தான் என்றவள் தீர்க்கமாகச் சொல்லிவிட, மதுசூதனனுக்குதான் என்ன செய்வதென்றே புரியவில்லை. “அம்புட்டு தூரம் போய்தான் படிக்கோணுமா? இங்கனயே ஒரு நல்ல காலேசுல சேர்ந்துக்கலாமே… தமிழு கிட்ட வேண்டாம்னு சொல்லு புள்ள” என்று அவர் மனைவியின் உதவியை நாட, “அவ அங்கனதான் படிக்கோணும்னு சொல்றான்னா சரியாதான் இருக்கோங்க மாமா… சேர்த்து போடுங்க” என்று மனைவியும் மகளின் பக்கம் சாய்ந்துவிட்டார். இந்த நிலையில் தமிழின் படிப்பு விஷயம் தெரிந்த அவளின் பெரியப்பா மகன் ரவி உதவி கரம் நீட்டினான். அவள் தன் வீட்டிலேயே தங்கி படித்து கொள்ளட்டும் என்று சொன்னான். உண்மையிலேயே அந்த நொடி மதுசூதனன் மனதிலிருந்த பயமும் கவலையும் நீங்கியிருந்தது. ஒருவாறு அவள் சென்னையில் படிப்பதும் உறுதியானது. கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் இந்த விஷயம் கசிய தொடங்கியதில் எல்லோரும் ஆளுக்கு ஒருவிதமாக கருத்து சொல்ல தொடங்கியிருந்தனர். ‘காலமே கெட்டு கிடக்கு… பொட்ட புள்ளைய அம்புட்டு தூரம் தனியா அனுப்பி படிக்க வைக்கறது எல்லாம் சரியா வராது’ ஆனால் சகுந்தலா இந்த போலியான பயமுறுத்தலுக்கு எல்லாம் அஞ்சிவிடவில்லை. அவருக்குள்ளும் பயம் கவலைகள் நிரம்பவே இருந்தது. இருப்பினும் மகளின் எதிர்காலம் அதை விட முக்கியமாகப்பட்டது. தன்னை போல எந்நிலையிலும் படிப்பறிவு இல்லாமல் அவள் காலத்திற்கும் அடுப்படியில் கிடந்து கஷ்டபட கூடாது என்று எண்ணியவருக்கு மகள் மதிப்போடும் உயர்வோடும் வாழ வேண்டுமென்ற பெரிய கனவு இருந்தது. அதேநேரம் பெண் பிள்ளையைப் பெற்ற தாயிற்கே உண்டான தவிப்பும் சூழ்ந்து கொள்ள அவர் மகளிடம் தெளிவாக, “ஒன்ற அய்யன் நீ ஆசைப்பட்ட காலேசுலயே உன்னை சேர்த்து போட்டாரு… இனிமே உன் வேலை படிக்கிறது மட்டும்தான்… அதை வுட்டு போட்டு காதல் கீதல்னு ஏதாச்சும் தடம் மாறி போனியோ… பெத்த மக ன்னு கூட பார்க்க மாட்டேன்… சங்கை அறுத்து போடுவேன்” என்று எச்சரித்தார். ஆனால் தமிழுக்கு அந்த மாதிரியான யோசனை துளி கூட இல்லை. அவளுக்கு படிக்க வேண்டும். அவ்வளவுதானே ஒழிய காதல் மீதெல்லாம் அவளுக்கு கொஞ்சமும் ஆர்வமில்லை. ஒருவேளை வயதுகோளாறு காரணமாக அவள் அத்தகைய உணர்வில் சிக்கி கொண்டாலும் அதிலிருந்து மீண்டு வருமளவுக்காய் அவளுக்கு முதிர்ச்சியும் தெளிவும் இருந்தது. ஆதலால் தன் தாயின் கைகளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு, “எனக்கு இஞ்சினியரிங் படிக்கோணும் அம்புட்டுதான்… மத்தபடிக்கு எனக்கு வேறெதுவும் முக்கியமில்லிங்க ம்மா… எந்த சூழ்நிலையிலும் நம்ம குடும்பத்தோட பேரை நான் கெடுக்க மாட்டேனுங்க… இது சத்தியம்” என்று திடமாக உறுதி கூறிய மகளைப் பெருமிதத்தோடு உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் பதித்தார் சகுந்தலா. இதெல்லாம் ஒரு புறமிருக்க அரசனும் செல்வியும் அவள் மீது அளவில்லா கோபத்திலிருந்தனர். இருவரும் ஏதோ கப்பல் கவிழ்ந்தது போல கன்னத்தில் கை வைத்து கொண்டு திண்ணையில் அமர்ந்திருக்க, “அரசா… செல்வி…” என்ற தமிழின் அழைப்பில் இருவரும் ஒரே போல முகத்தைத் திருப்பிக் கொண்டனர். “இரண்டு பேருக்கும் என்னாச்சு?” என்றவள் திண்ணையில் அமர இருவரும் அவள் முகத்தைக் கூட பாராமல் தோட்டத்தின் பக்கம் நடந்தனர். “நான் சென்னை போக போறேன்னுட்டு இரண்டு பேருக்கும் கோபமாக்கும்” “ஆமா… கோபம்தான்… நீங்க அம்புட்டு தூரம் போக போறீங்கன்னு எங்ககிட்ட சொல்லோணும்னு கூட உங்களுக்கு தோணலை இல்லிங்க க்கா” என்று செல்வி கோபத்துடன் கேட்க, “ஐயோ! செல்வி… அம்மாதான்… எல்லா முடிவாகிற வரைக்கும் ஊருக்குள்ள யாருக்கும் விசயம் தெரிய வேணாம்னுட்டு சொன்னாங்க… தெரிஞ்சா அதை இதை பேசி தடுத்து போடுவாய்ங்கன்னு… அதான் புள்ள உன்கிட்ட கூட” என்றவளுக்கு வார்த்தை தொக்கி நின்றுவிட, அவளால் அதுக்கு மேல் பேச முடியவில்லை. உள்ளம் குறுகுறுத்தது. மனம் வலிக்க அவர்களை ஏறிட்டு பார்க்கும் துணிவில்லாமல், “சாரி அரசா… சாரி செல்வி… நான் உங்ககிட்ட சொல்லி இருக்கோணும்” என்றவள் மன்னிப்பு கோர அரசன் அவள் இடையைக் கட்டிக் கொண்டு, “வேணாமுங்க க்கா… போவாதீங்க க்கா” என்ற அழத் தொடங்கியிருந்தான். அந்த நொடியே உள்ளம் உருகி அவள் விழிகளிலும் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓட, அவளும் தம்பியை இடையோடு சேர்த்து அணைத்து கொண்டாள். ஆனால் செல்வி கொஞ்சமும் இறங்கி வராமல், “நீ சொன்னா அக்கா போகாமா இருக்க போவுதாக்கும்” என்க, “என்ன புள்ள நீ… அவன்தான் சின்ன பையன் புரிஞ்சிக்காம பேசறான்னா” “ஏனுங்க க்கா… உங்களுக்கு படிக்க இந்த ஊருல காலேஜே இல்லையங்களாக்கும்” என்று செல்வி கேட்டு அவளை முறைத்து பார்த்தாள். “இங்க இஞ்சினியர் காலேஜ் நிறைய கிடக்கு… ஆனா நான் படிக்க போற காலேஜ்ல பீஸும் கம்மி… அதே போல படிப்பும் தரமா இருக்கும்… படிச்ச உடனேவே வேலையும் கிடைக்கும்… தெரியுமா?” என்றவள் மேலும் அவள் சென்னையில் சேர்வதற்கான நிறைய’ காரணங்களைச் சொன்னாள். செல்விக்கு அதெல்லாம் புரியத்தான் செய்தது. ஆனாலும் மூளை ஏற்பதை மனம் ஏற்க முடியாமல் தவித்தது. “நீ இல்லாட்டி போனா நாங்க எப்படிங்க க்கா” என்று செல்வி முகம் சுருங்க அவளையும் இழுத்து தம் அணைப்பில் வைத்து கொண்ட தமிழ், “மழை வெயில்னு பார்க்காம அய்யன் காட்டுல மாடா உழைக்கிறாக… அம்மா வீட்டு வேலையெல்லாம் முடிச்சு போட்டு கால் கடுக்க நின்னு டீ ஆத்திட்டு கிடக்காவுங்க… நம்மல படிக்க வைக்க அவங்க சுக துக்கத்தை எல்லாம் மறந்து போட்டு எம்புட்டு கஷ்டபடுறாவுங்கன்னு நீயும்தானே பார்க்குற… அதுக்காகவாச்சும் நாம நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போவோணோம்டி… அவங்க கஷ்டத்தை எல்லாம் தீர்க்கோணோம்” என்று மனம் வெதும்பி சொன்ன தமக்கையின் மீது செல்விக்கு பாசத்தை எல்லாம் தாண்டி அந்த நொடி அளவில்லா மதிப்பு உண்டானது. தன் பெற்றோர்களின் துயரங்கள் முன்னிலையில் நம்முடைய பிரிவின் துயரம் அத்தனை பெரியதல்ல என்றவள் சொல்லாமல் சொல்வது புரிந்தது “சரிங்க க்கா… நீங்க சென்னையிலேயே படிங்க… ஆனா லீவு வுட்டதும் எங்களைப் பார்க்க இங்க வந்துடோணோம்” “இங்க வராம… வேறெங்கடி போக போறேன்” என்று சொல்லி தங்கையின் முகத்தைப் பார்க்க, “அப்போ நீங்க கண்டிப்பா போகத்தான் போறீங்களா?” என்று அதே கேள்வியை அரசன் திரும்பியும் கேட்க அவனிடம் இறங்கி அமர்ந்தவள், “அக்கா படிக்க போறேன் கண்ணு… நான் நல்லா படிச்சு வேலைக்கு போன புறவு ஒன்ற படிப்பு செலவை நானே பார்த்துக்குவேன்… நீ ஆசைப்பட்ட படிப்பை இந்த அக்கா படிக்க வைப்பேன்” என்றாள். “உஹும்… எனக்கு அதெல்லாம் வேண்டாமுங்க… நீங்க எங்கயும் போவாம இங்கனயே இருந்து போடுங்க” என அவன் பிடித்த பிடியில் நிற்க தமிழுக்கு சங்கடமாக இருந்தது. “யக்கா… அவன் பிரச்சனை நீங்க இங்கன இருந்து போவுறதில்ல” என்று செல்வி சொல்ல, “புறவு வேறு என்னடி?” என்று புரியாமல் கேட்டாள் தமிழ். “இனிமே யாரு அவனுக்கு குச்சி ஐஸ் வாங்கி கொடுப்பாங்கன்னு மருகுறான்” என்று செல்வி அவனை கலாய்க்க அரசன் தன் அழுகையை நிறுத்திவிட்டு அவளை முறைக்க தொடங்கினான். “சும்மா இருல… புள்ளைய போயிட்டு” என்று தங்கையைக் கண்டித்தவள், “அவ கிடக்கா… என் கண்ணு இல்ல… அழ கூடாது” என்று தம்பியின் கண்ணீரை துடைத்துவிட்டு, “நான் சேர்த்து வைச்சிருந்த காசை எல்லாம் ஒன்ற உண்டியில போட்டு வுட்டுட்டு போறேன்? உனக்கு வேண்டும்னு போது ஐஸ் வாங்கி சாப்பிடு… ஆனா அடிக்கடிக்கு சாப்பிட கூடாது“ என்க, அவன் அழுகை இன்னும் அதிகமானது. “உஹும்… எனக்கு அதெல்லாம் வேண்டாமுங்க க்கா… நீங்கதானுங்க வேணும்” என்று சொல்லி அவள் கழுத்தை மீண்டும் இறுக்கிக் கொள்ள, தம்பியின் பாசத்தில் அவள் தவித்துப் போனாள். அவன் அழுகையை மட்டுபடுத்த அவள் எப்படி எப்படியோ பேசிப் பார்த்தாள். அவள் பிடிவாதமாகப் போக வேண்டாமென்று மறுத்த போது அவளுக்கு உண்மையிலேயே தான் இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தோம் என்று தோன்றியது. செல்விக்கு அவளால் புரிய வைக்க முடிந்தது போல அவனுக்குப் புரிய வைக்க முடியவில்லை. வெகுநேரம் அழுது ஓய்ந்து அவளின் மடியிலேயே படுத்து அவன் உறங்கிப் போக, தமிழின் மனம் கனத்து போனது. அவன் தலையைத் தடவிக் கொடுத்தபடி செல்வியிடம், “தம்பி என்ன தப்பு செஞ்சிருந்தாலும் அவனுக்குச் சொல்லி புரிய வை… அடிச்சு போடாதே… இனிமே நீதான் அவனை நல்லா பார்த்துக்கோணோம்” என்றாள். செல்வியின் விழிகளில் நீர் நிரம்ப அழுகையினூடே வார்த்தைகள் வராமல் சம்மதமாகத் தலையசைத்தாள். எப்படியோ அரசன் இரண்டொரு நாள் அழுதுவிட்டு ஒருவாறு சமாதானம் ஆகியிருந்தான். தமழ் சென்னைக்குப் போகும் நாள் நெருங்கியிருந்த நிலையில் சகுந்தலா மகளுக்கு வேண்டிய பொருட்கள், துணிமணிகள் என்று தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்தார். அவர் வெளிப்படையாக தன் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாவிடினும் மகளின் பிரிவை எண்ணி மனதளவில் வெதும்பிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் மாலை சென்னைக்கு தமிழ் ரயில் ஏறவேண்டும். என்பதால் ஒருவித அழுத்தமான மௌனம் அவர்கள் வீட்டை நிறைத்திருந்தது. அந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற எண்ணி தம்பி தங்கைகளை அழைத்து கொண்டு அவர்கள் நிலத்திற்குச் சென்றாள். இப்படி கால் நடையாக அங்கே செல்வது மூவருக்கும் எப்போதும் வழக்கம்தான். விருப்பமான ஒன்றும் கூட. கலகலப்பாகப் பேசிக் கொண்டே நடந்தவர்களுக்கு நேரம் போனதே தெரியவில்லை. மெல்ல இருள் சூழத் தொடங்கவும் தமிழ் அவர்களிடம், “நேராமவுது… அம்மா தேடுவாங்க…. கிளம்பிலாம்” என்றாள். “இன்னும் செத்த நேரம் இருந்துட்டு போலாமுங்க க்கா” என்று செல்வி இழுக்க, “நாம கருப்பன் கோயிலுக்குப் போயிட்டு போலாம்ங்க க்கா” என்று அரசன் அவளிடம் கெஞ்ச, அவளுக்கு ஏனோ நெருடலாக இருந்தது. பொழுது சாய்ந்ததிலிருந்து காற்றின் வேகம் வேறு கூடிக் கொண்டே போனதை உணர்ந்தவள், “காத்து ஊங்காரம் போட்டுக்கிட்டு வருது… மழை கிழை பிடிச்சுக்கிட்டுன்னா… புறவு வீட்டுக்குப் போக சிரமமா போயிடுமாக்கும்” என்றவள் எடுத்துரைத்த போதும் அவர்கள் இருவரும் கேட்டபாடில்லை. பாவம் போல முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்ட தம்பியைப் பார்த்தவள் மனமிறிங்கி, “சரி கருப்பன் கோயிலுக்குப் போயிட்டுப் போவோம்” என்றாள். மூவரும் அதன் பின் ஊரின் எல்லையிலிருந்த கருப்பன் கோவிலுக்கு வந்துவிட உக்கிரமாக அரிவாளைத் தூக்கிக் கொண்டிருந்த கருப்பனை வணங்கிவிட்டு, “சரி கிளம்புவோம்” என்று சொல்ல அரசன் கேட்காமல் கோவிலின் பின்னிருந்த கொய்யா மரத்திலிருந்த காய்களைப் பார்த்து சப்புக் கொட்டத் தொடங்கினான். “வேண்டாம் டா அரசா” என்று அவள் சொன்னதை செல்வியும் கேட்கவில்லை. அரசனும் கேட்கவில்லை. “சரி சீக்கிரமா வந்துடுங்க” என்று அவர்களை மட்டும் அனுப்பி வைத்தாள். “நீங்க வரலையாங்களா க்கா” என்று செல்வி கேட்க, “இல்ல… நீங்க போங்க” என்று தமிழ் அந்த கோவிலின் சிறிய மண்டபத்தில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு அப்போதைக்கு அந்தத் தனிமை தேவையாக இருந்தது. அவள் மனம் ஏனோ ஒரு நிலைப்பாட்டிற்குள் இல்லை. அவள் ஆசைபட்டது நடக்க போகிறது. எனினும் அதற்குரிய சந்தோஷம் அவள் மனதில் துளியளவும் இல்லை. விடியற்காலைப் பொழுதில் பறவைகளின் கூச்சல்களில் கண்விழிப்பதும், மரம் ஏறி பழம் பறிப்பதும், வயல் வரப்புகளில் நடப்பதும், கன்று குட்டிகளோடுக் கொஞ்சி விளையாடுவதும், திருவிழாவில் கருப்பன் ஆக்ரோஷமாகக் கத்திப் பிடித்து ஆடி வருவதைப் பார்த்து மிரள்வதும், சீம்பால் ருசிப்பதும், மல்லிகை தோட்டத்து மணத்தில் மயங்கி கிறங்கி போவதும் என்று அவள் ரசித்து களித்த நினைவுகளை அசைபோட்ட அதேநேரம், தான் இந்தக் கிராமத்து வாழ்க்கையை விட்டு வெகுதூரம் விலகிப் போகிறோமோ என்ற கவலையும் தெரிந்தது. அந்தச் சிந்தனையில் அவள் மூழ்கி இருந்த கணத்தில், “த…மி…ழ் ழு” என்று மிகவும் குழைவாக அவளை ஒரு குரல் அழைக்கவும் அவள் நிமிர்ந்து பார்க்க, சந்திரன் நின்றிருந்தான். ‘ஐயோ! இவனா?’ என்றவள் தலையிலடித்து கொள்ளும் போதே அவன் அவளுருகில் நெருக்கமாக அமர்ந்துவிட அவள் மிரண்டுப் போனாள். “பொறுக்கிப் பயலே” என்றவள் கோபத்தில் சீறியபடி எழுந்து கொள்ள பார்த்த போது, “ஏ தமிழு… உன் கிட்ட கொஞ்சம் பேசோணும்டி” என்று அவன் அவள் கரத்தைப் பிடித்து இழுத்து அருகில் அமர வைத்துவிட அவள் பதட்டமானாள். எப்போதும் அவன் கிண்டலும் கேலியுமாகப் பேசுவானே ஒழிய இப்படியெல்லாம் அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டானே என்றவள் யோசிக்கும் போதுதான் அவன் தற்போது இருக்கும் நிலைமை ஓரளவு பிடிப்பட்டது. “குடிச்சிருக்கியாடா?” என்றவள் அதிர்ச்சியாகக் கேட்க, அவன் பதில் பேசாமல் ஆமோதிப்பாகத் தலையை மட்டும் அசைக்க, “அடப்பாவி!” என்று அதிர்ந்து போனாள். அதேநேரம் அவனும் அவன் தோற்றமும் அவளுக்கு ஒருவிதமான அருவருப்பு தன்மையைப் புகுத்த, “நீ செய்யாத ஒரே காரியம் இதுதான்… அதையும் செஞ்சு போட்ட… சை” என்றவள் முகம் சுளித்துவிட்டு எழுந்து கொள்ள அவன் கரம் அவள் மணிக்கட்டை அழுத்திப் பற்றிக் கொண்டிருந்தது. “கையை வுடுறா… கையை வுடுறாங்கிறேன் இல்ல” என்றவள் தவித்தபடியே, “அரசா… செல்வி…” என்றவள் கத்தத் தொடங்க அவள் குரல் அவர்களின் செவிகளை எட்டவில்லை. அவனோ அவளை மீண்டும் அருகில் இழுத்து அமர வைத்து, “எங்கயும் போயிடாதே தமிழு” என்க, “என்னது?” என்றவள் புரியாமல் விழிக்க, “சென்னைக்குப் போகாதடி… என்னால தாங்க முடியல… மனசு கிடந்து தவிக்குது” என்று உளறிக் கொண்டிருந்தவனை மேலும் கீழுமாக ஒரு அலட்சிய பார்வைப் பார்த்தவள், “கிறுக்கு பய மாதிரி ஒளறிட்டு இருக்காதே…. ஒழுங்கா ஊடு போய் சேர வழிய பாரு” என்றவள் சொல்லிவிட்டு எழுந்து செல்ல எத்தனிக்க, தள்ளாட்டத்தோடு எழுந்து நின்றவன், “என்னைய விட்டு போகாதடி” என்று அதே பாட்டைப் பாட அவளுக்குக் கடுப்பானது. அவனிடம் பேசுவது வீண் என்று புரிந்து கொண்டவள், “டே அரசா செல்வி” என்று அழைத்து கொண்டே பின்புறம் செல்ல காற்றின் சத்தம்தான் ஓங்கி ஒலித்தது “பேசிட்டு இருக்கேன்னு இல்ல… நீ பாட்டுக்கு எழுந்து போய்கிட்டே இருக்க… எனக்கு ஒரு முடிவு சொல்லிட்டுப் போடி” என்று சந்திரன் அவளைப் பின்தொடர்ந்து அவள் கரத்தைப் பற்றிக் கொள்ளவும், “என்கிட்ட நீ சாவடி வாங்க போற… பாரேன்” என்றவள் ஆக்ரோஷமாகக் கத்திவிட்டு அவள் கையை உதறிக் கொள்ள முற்பட, “நீ வா…. எனக்கு இந்த கருப்பன் கோவிலில் சத்தியம் பண்ணிக் குடு” என்றவன் அவளை மீண்டும் கோவிலுக்கு இழுத்துக் கொண்டுப் போக, “சத்தியமா… என்னத்துக்கு?” என்று கேட்டாள். “என்ன ஆனாலும் என்னையதான் கட்டிப்பேனு சத்தியம் பண்ணிக் கொடு” என்ற போது அவள் புருவங்கள் நெறிந்தன. “லூசா டா நீ” என்றவள் கடுப்பாக, “படிக்கோணும்னு போயிட்டு எவனயாவது நீ இழுத்துப் போட்டு வந்துட்டியான்னா… அதெல்லாம் சரியா வராது… நீ சத்தியம் பண்ணு” என்றவன் அவளைக் கோவிலுக்கு தரதரவென இழுத்துக் கொண்டு போனான். மிகவும் பிராயத்தனப்பட்டு அவனை இழுத்து தள்ளிவிட்டவள், “உன்னைய மாதிரி பொறுக்கிப் பயல நான் எதுக்குடா கட்டிக்கோணும்… எனக்கென்னடா தலையெழுத்து… நான் நல்லா படிச்ச ஒழுக்கமான பையனைத்தான் கட்டிக்குவேன்… உன்னைய மாதிரி குடிகார பயலைச் செத்தாலும் கட்டிகிட மாட்டேனாக்கும்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென கோவில் மண்டபத்திலிருந்து பின்னே வந்தாள். அரசனும் செல்வியும் கொய்யா கனிகளைப் பறித்துக் கொண்டு நடந்து வர, “உங்க இரண்டு பேரையும் எத்தனை வெசை கூப்புடுறது” என்றவள் அவர்களிடம் கோபமாகக் கத்த, “இல்லைங்க க்கா” என்று ஏதோ பேச எத்தனித்த செல்வியை, “வாயை மூடிட்டு வா” என்று அவளை அடக்கிவிட்டு முன்னே செல்லும் போது நீண்டிருந்த அவள் கூந்தலை சந்திரன் பற்றி இழுத்தான். “ஆஆஆஆஆஆஆஆஆ” என்றவள் வலியில் கத்த அரசனும் செல்வியும் அதிர்ந்து போயினர். “வலிக்குதுடா… என் முடியை வுடுறா” என்றவள் சத்தமிட, “என்னைய வுட்டு போட்டு வேற ஒருத்தனைக் கட்டிகிடுவியா டி சிறுக்கி மவளே” என்றவன் கரம் இன்னும் மூர்க்கமாக அவள் கூந்தலைப் பற்றி இழுக்க, “அம்ம்ம்ம்ம்ம்மா” என்றவள் வலியில் கதறினாள். “வுடுறா அக்காவை” என்று அரசனும் செல்வியும் அவனை அடிக்க, அவன் அவர்களைப் பொருட்டாகவும் மதியாமல் தள்ளிவிட்டு, “எங்கன போனாலும் நீ என்னய மறக்கவே கூடாதாக்கும்” என்றவன் கொத்தாகப் பிடித்திருந்த கூந்தலோடு அவளை அருகில் இழுத்து அணைத்திருந்தான். முரட்டுத்தனமான அவன் பிடியில் அவள் சிறைப்பட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவிக்கும் போதே தம் இதழ்களால் அவள் இதழ்களை அழுத்தி மூடியிருந்தான். அரசனும் செல்வியும் அதிர்ந்து போயினர். நடப்பது இன்னதென்று புரியவே அவர்களுக்கு சில நொடிகள் பிடித்தது. அதற்குள்ளாக அவன் நினைத்ததை செய்து முடித்த திருப்தியோடு அவளை விலக்கிவிட, “அக்கா” என்று செல்வி தமக்கையை அணைத்து பிடித்துக் கொள்ள, சந்திரன் தன் கைலியை மடித்து கட்டிக் கொண்டு, “மவளே! இனிமே என்னைய வுட்டு போட்டு வேறு எவனயாச்சும் கட்டிக்கிறேன் சொல்லுவ” என்று மிரட்டலாக சொல்லிவிட்டு நகர பார்த்தான். அந்த நொடி அரசன் உக்கிரமாகி, “டே உன்னைய” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கத் தொடங்கியிருந்தான். “அரசா வேண்டாம் விட்டுடு” என்று செல்வி சத்தமிட அவன் கேட்கவில்லை. சந்திரனோ அவனை அனாயசமாக, “போடா” என்று பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். ஆனால் தமிழ் இது எதையுமே கவனிக்கவில்லை. அவள் அப்படியே தரையில் சரிந்து தலையைப் பிடித்தபடி குமட்டிக் கொண்டிருந்தாள். அந்தக் கணத்தில் உலகின் ஒட்டுமொத்த அசூயை உணர்வையும் அவள் தாங்கி நின்றது போன்ற பிரமை உண்டானது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா