மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Muran KavithaigalMuran kavithaigal - 5Post ReplyPost Reply: Muran kavithaigal - 5

Quote from monisha on September 6, 2022, 11:26 AM

5
“டேய் மச்சான்… என்ன எதிர் வீட்டையே பார்த்துட்டு இருக்க… என்ன? அந்த எதிர் வீட்டு ஃபிகரை சைட் அடிக்குறியா?” என்று கேட்டு கொண்டே உதய் படிகள் ஏறி வரவும் நிரஞ்சன் பதறிக் கொண்டு, “இல்ல மாமா… சும்மாதான் பார்த்துட்டு இருந்தேன்” என்றான். “சும்மா பார்த்துட்டு இருந்தியா… அடப்பாவி… எதிர் வீட்டுல சூப்பர் ஃபிகரை வைச்சுக்கிட்டு சும்மா பார்த்துட்டு இருந்தேன் சொல்ற… இந்த ஜென்மதத்துல உனக்கு கல்யாணம் நடந்த மாதிரிதான்” என்றவன் நக்கலடிக்க, நிரஞ்சன் தலையைத் தாழ்த்தி தன் உணர்வுகளை மறைத்தான். உதய் மேலும் ஜோஷியின் அறைக் கதவைப் பார்த்து, “ஹ்ம்ம்… எனக்கு மட்டும் இப்படி ஒரு ஃபிகர் எதிர் வீட்டுல இருந்திருந்ததுன்னு வைய்ய்ய்ய்யு” என்று நீட்டி முழுக்க, “அக்காவைக் கூப்பிடட்டுமா மாமா?” என்று அவன் கடுப்பாகப் பல்லைக் கடித்தான். “ஏய் ஏய்… நீ இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற…? அவ என்ன உன் ஆளா?” என்று கேட்டு அவன் முகத்தை ஆழ்ந்து பார்க்க, “ச்சே… ச்சே… அப்படி எல்லாம் இல்லயே” என்றவன் அவசர அவசரமாக மறுத்தான். “இருக்க வாய்ப்பே இல்ல ராசா…அந்த மாதிரி ஃபிகரை மடிக்க கூட ஒரு முக ராசி வேணும்” என்றவன் எள்ளல் செய்ய, அவனுக்கு உள்ளுர எரிந்தது. மேலும் உதய் அவளின் அறைக் கதவை ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்து, “ஹ்ம்ம்… இன்னைக்கு எனக்குக் கொடுப்பனை இல்ல… சரி விடு… நீ கீழே வா… நம்ம கார்ட்ஸ் விளையாடுவோம்” என்றான். “இல்ல மாமா, எனக்கு மூட் இல்ல” “அட… சும்மா வாடா” என்று அவன் தோள் மீது கையைப் போட்டு இழுத்துக் கொண்டு செல்ல, நிரு அவளின் அறைக் கதவைப் பார்த்தபடியே கீழே சென்றான். ஜோஷிகா தன்னுடைய படுக்கையில் அமர்ந்தபடி அழுதுக் கொண்டிருந்தாள். அப்போது, “ஜோஷி மா” என்ற தந்தையின் குரல் கேட்டு அவசரமாக தன் கண்களை அவள் துடைத்துக் கொள்ள, “குளிச்சிட்டியா ஜோஷி” என்றதும் அவள் பதில் சொல்லாமல் தலையசைக்க, “ஏன் பால்கனி கதவை மூடி வைச்சிருக்க… ரூம் இருட்டா இருக்கு பாரு” என்றவர் கதவைத் திறக்கப் போனார். “டேடி வேண்டாம்… கதவைத் திறக்காதீங்க” “ஏன்?” “வேண்டாம்… திறக்காதீங்க” என்றவள் அழுத்திச் சொல்ல மகள் அருகில் வந்து அமர்ந்தவர், “என்னாச்சு ஜோஷி…? டேடி மேல கோபமா?” என்று கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றாள். “ஜோஷி… ஐம் சாரி” என்றவர் அவள் கரத்தைப் பிடித்து, “உனக்கு பிடிச்ச லஞ்ச் செஞ்சு வைச்சிருக்கேன்… சாப்பிட வா” என்று அழைக்க, “எனக்கு எதுவும் வேண்டாம்… ப்ளீஸ்… என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்று எரிந்து விழுந்தாள். அவர் முகம் சுருங்கிப் போனது. “அதான் டேடி சாரி கேட்கிறேன் இல்ல… எழுந்து வாடா” என்றவர் அவள் தலையை வருடிக் கொடுக்க, “டேடி ப்ளீஸ்… என்னைக் கொஞ்சம் தனியா விடுறீங்களா?” என்றவள் பொறுமையிழந்து கத்திவிட அவர் பெருமூச்செறிந்து இறங்கிச் சென்றார். அத்தனை நேரம் அவள் கட்டுபடுத்தி வைத்திருந்த அழுகை எல்லாம் மடைத் திறந்த வெள்ளம் போல பாய்ந்தது. இந்த இரண்டு வருடமாக அவனை மறந்துவிட்டதாகவும் தன் மனதிலிருந்து அவனை மொத்தமாகத் தூக்கி எறிந்துவிட்டதாகவும் அவள் நினைத்திருந்தது எல்லாம் உண்மை இல்லையென்று அவன் கண்களை நேருக்கு நேராக சந்தித்து நொடி அவள் மனதிற்குப் புரிந்தது. இருப்பினும் அவன் நடந்து கொண்ட விதத்தை மன்னிக்கவோ மறக்கவோ முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. இரண்டாங்கெட்ட நிலையில் அவள் தவித்திருந்த அதேநேரம் நிரஞ்சனும் கூட அதே மாதிரி தவிப்பில்தான் இருந்தான். அவனால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை.  “டேய் மச்சான்… உன் சிஸ்டருங்க இரண்டு பேருமே ஜெயிச்சிட்டு இருக்காளுங்க… நீ இந்த கேம்லயாவது ஜெயிச்சு ஆம்பளைங்க மானத்தைக் காப்பாத்து” என, “ஏன் அதை நீங்க செய்றது?” என்று கிண்டலாகக் கேட்டாள் மிருதுளா. “எனக்கு ரம்மியே சேரல… இதுல எங்க இருந்து ஜெயிக்கிறதாம்” என்று அவன் கடுப்புடன் சொல்ல, நிரஞ்சன் தன்னுடைய சீட்டுக்களை அப்படியே கவிழ்த்துப் போட்டான். “சொன்ன மாதிரி ஆம்பளைங்க மானத்தை காப்பாத்திட்டன்டா” என்று உதய் கர்வமாக நிமிர்ந்து அவன் தோளில் தட்ட, “இல்ல மாமா… ஒன்னும் செட்டாகல… அதான் கீழே வைச்சிட்டேன்” என்றான். மிருதுளாவும் சாதனாவும் சத்தமாகச் சிரிக்க உதயின் முகம் சுண்டிப் போனது. அப்போது ரேணு தேநீரும் பஜ்ஜியும் தயாரித்து தட்டு நிறைய கொண்டு வந்து வைக்க, “நல்ல வேளை மாமி மானத்தைக் காப்பாத்திட்டாங்க… நான் டீ சாப்பிட்டு விளையாடுறேன்” என்று இதுதான் சாக்கு என்று தன் சீட்டையும் கவிழ்த்துப் போட்டான். “மாமா இதெல்லாம் போங்கு… நான் ஒத்துக்கமாட்டேன்” என்று சாதனா கலாட்டா செய்யும் போதே குழந்தையின் அழுகை ஒலிக் கேட்க, “கடவுளே… திரும்பியுமா” என்றவள் சலிப்புடன் தலையைப் பிடித்து கொண்டாள். “போ… போ… உன் ஆட்டமும் முடிஞ்சிருச்சு” என்று உதய் திருப்பிக் கலாய்க்க, “நீ டீ குடி… நான் போய் பாப்பாவைத் தூக்குறேன்” என்று ரேணு உள்ளே சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். “ம்மா… நீங்க டீ குடிக்கலயா” என்று கேட்டுக் கொண்டே நிரஞ்சன் அம்மாவின் அருகில் வர, “நான் அப்புறமா குடிச்சிக்கிறேன்… நீ போய் சூடாறதுக்கு முன்னாடி போய் பஜ்ஜி சாப்பிடு” என்றவர் பேத்தியைத் தூக்கிக் கொண்டு சமாதானம் செய்ய, “நீங்களும் வாங்க மா… சாப்பிடலாம்” என்று அழைத்தான். “சாதனா சாப்பிட்டு வந்து பாப்பாவை வாங்கிக்கட்டும்… நீ போய் முதல குடி… சூடு ஆறிட போகுது” என்று மகனைக் கட்டாயப்படுத்தி அமர்த்தினார். எப்போதும் போல உதய், “மாமி பஜ்ஜி சூப்பர்” என்று பாராட்டுரை வாசித்தான். அவர்களின் மாலை வேளை இப்படியாக விளையாட்டும் பேச்சுமாகக் கழிய, ரேணு அதன் பின் இரவு உணவிற்கு தயார் செய்ய தொடங்கினார். எல்லோருக்கும் சப்பாத்தி குருமா செய்து ஹாட் பேக்கில் எடுத்து வைத்தவர் சாதனாவிற்கு மட்டும் தனியாக இட்லி செய்து வைத்திருந்தார். “எனக்கும் சப்பாத்தி சாப்பிடணும் போல இருக்குமா” என்று சாதனா கடுப்பாகிக் களேபரம் செய்து அவளை சமாதானம் செய்து என்று ஒருவாறு இரவு உணவும் முடிந்து, அந்த வீடு அமைதி நிலையை எட்டியது. அதன் பின் ரேணு சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்க நிரஞ்சன் அங்கே வந்து நின்று, “ரொம்ப நேரமாயிடுச்சு… இன்னும் நீங்க கிச்சன்லயே இருக்கீங்க” என்று கேட்க, “கிளீனிங் முடிச்சதும் போய் படுத்துடுவேன் டா… நீ போ… நீ போய் நேர்த்தோட படு” என்றார். “நீங்க போய் படுங்க… என்கிட்டே கொடுங்க… நான் கிளீன் பண்றேன்” என்றவன் அவர் கையிலிருந்த துணியை வாங்கப் போக, “அச்சோ அதெல்லாம் வேண்டாம்… ரஞ்சு… நீ போய் படு” என்றார். “உஹும்… குடுங்க இப்படி” என்றவன் பிடிவாதம் பிடிக்க மகனை வாஞ்சையுடன் பார்த்தவர், “இருக்கட்டும் ரஞ்சு… நான் பார்த்துக்கிறேன்டா” என்றார். “நைட்டெல்லாம் ஏற்கனவே பாப்பாவைப் பார்த்துக்கிறதால உங்களுக்குத் தூக்கமே இல்ல… இதுல கிளீனிங் அது இதுன்னு இவ்வளவு நேரம் விழிச்சிருந்தா உடம்பு கெட்டுப் போகாதா… போய் படுங்கமா… இந்த மூணு மாசம் தனியா இருந்ததுல நான் ஒரளவு இந்த வேலையெல்லாம் செய்ய கத்துக்கிட்டேன்” என்றவன் சொல்ல, அவர் முகம் மலர்ந்து கண்கள் பனித்தன. “இப்படி கொடுங்க… நான் கிளீன் பண்றேன்… நீங்க போங்க” என்று கட்டாயப்படுத்தி அவர் கையிலிருந்த துணியை அவன் வாங்கிக் கொண்டான்.  சிங்கபூரில் இருந்த போது கூட, “ரொம்ப வேலையா மா… உடம்பைப் பார்த்துக்கோங்கமா” என்று மிகுந்த அக்கறையுடன் பேசும் மகன் மீது அவருக்குத் தனிப்பட்ட பிடிப்பும் அன்பும் உருவாகி இருந்தது. எந்த நிலையிலும் மகன் தன்னைக் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை புது தெம்பைக் கொடுத்திருந்தது. மகனை நெகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு சமையலறையிலிருந்து வெளியேற போனவர் மீண்டும் திரும்பி வந்து, “டேய் அந்த கேஸை ஆஃப் பண்ணிட்டேனா பாரு” என்றார். “அதெல்லாம் நான் ஆஃப் பண்றேன்மா… நீங்க போங்க” “அப்புறம் அந்த ஈரத் துணியை அப்படியே போட்டிருந்தா… காலையில நாத்தம் அடிக்கும்” “ம்மா எனக்கு தெரியும்மா” என்றவன் சொல்ல, “சரி சரி முடிச்சிட்டு லைட் எல்லாம் ஆஃப் பண்ணிடுறா… மறந்துட போற” என, அவன் மூச்சை இழுத்துவிட்டு முறைக்க, “சரி சரி நான் போயிட்டேன்” என்று அறைக்குள் சென்றார். சாதனாவும் குழந்தையும் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, மாதவன் கீழே மெத்தையை விரித்துப் படுத்திருந்தார். அவர்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து சத்தமில்லாமல் மெல்ல நடந்து வந்து படுக்க எத்தனித்த அடுத்த கணம் குழந்தை வீறிட்டு அழ, அவர் முகம் சோர்ந்து போனது. அந்தச் சத்தத்திலும் சாதனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மகளைத் தொந்தரவு செய்யாமல் பேத்தியை மடியில் வைத்து, “என் தங்கக்குட்டி நீங்க… பட்டுக்குட்டி… பாருங்க அம்மம்மாவுக்கு நிறைய வேலை… சரியா உங்களைத் தூக்கிக் கொஞ்ச கூட முடியல” என்று அவர் கொஞ்சுவதே அந்தச் சின்ன குருத்திற்கு தாலாட்டுப் பாடுவது போலிருந்தது போலும். அவள் மெல்ல கண்களை மூடி உறங்கிப் போக, ரேணுவிற்கும் கண்கள் சொக்கியது. பேத்தியை மெதுவாக படுக்கைமீது கிடத்தியவர் மீண்டும் வெளியே வந்து மகன் விளக்கை எல்லாம் அணைத்திருப்பானா என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தார். அவர் எண்ணியதை விடவும் மிகச் சுத்தமாக சமையல் மேடையைத் துடைத்து வைத்திருந்தான். அவர் கண்களில் தன் மகன் என்ற பெருமை மின்னியது. மீண்டும் அவர் அறைக்குத் திரும்பி வந்து படுத்துக் கொள்ள, தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்த அதேநேரம் கால் வலி உயிர் போனது. எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க அவருடைய வலி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மெல்ல எழுந்து தைலத்தை எடுத்து தேய்த்து கொண்டு அந்த வலியுடனே படுத்துக் கொண்டார். அதன் பின் வலியுடன் போராடி அதிலிருந்து மீண்டு அவர் உறங்க நடுநிசி கடந்திருந்தது. அதேநேரம் தன்னுடைய அறையில் நிரஞ்சன் உதயுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். “என்ன மாமா நீங்க இங்க இருக்கீங்க… தூங்கல” “உனக்காகதான் காத்திட்டு இருக்கேன்” என்றவன் இரண்டு பியர் பாட்டிலை உயர்த்திக் காட்ட நிரஞ்சன் சோர்வுடன்,  “நான் குடிக்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சு மாமா” என்றான். “அடேய் நல்லவனே… பீரெல்லாம் சரக்குலயே சேர்த்தி இல்ல… பொண்ணுங்களே பீர் அடிக்கிறாளுங்க… இவன் என்னவோ ஓவரா பண்றான்” என்றவன் அந்த பாட்டிலை எடுத்துக் கொண்டு, “வா அப்படி காத்தோட்டமா உட்கார்ந்து அடிக்கலாம்” என்று பால்கனியில் தோட்டத்தின் அருகே அமர்ந்து கொண்டான். “மாமா… வேண்டாம் மாமா” என்று நிரஞ்சன் தவிப்புடன் நிற்க, “டேய் சும்மா வாடா” என்று உதய் அவனை விடுவதாக இல்லை. ‘இவர் விட மாட்டாரு போலேயே’ என்று மனதில் நினைத்தபடி அவன் வெளியே வந்த நொடி அவன் கண்கள் அவள் அறைக் கதவை ஏக்கமாகத் தொட்டு மீண்டது. “வாடா… கூலிங் போயிடும்” என்று உதய் அழைக்க, “வரேன்” என்று அவன் அருகில் அமர்ந்து தயக்கத்துடன் ஒரு பாட்டிலை வாங்கிக் கொண்டான். அவனுக்கு அந்த நாள் நிழலாடியது. அன்று குடிக்காமல் இருந்திருந்தால் ஜோவிடம் அப்படி தராதரம் இல்லாமல் வார்த்தையை விட்டிருக்க மாட்டோம் என்ற எண்ணம் எழுந்து அவன் மனதை கனக்க செய்தது. “என்ன மச்சான் குடி… இந்த லாக்டௌன்ல யாருமே கம்பெனிக்கு இல்லாம எப்படி கடுப்பில இருந்தேன் தெரியுமா? நல்ல வேளை நீ வந்து என்னைக் காப்பாத்துன” என்றவன் பியரைக் குடித்துக் கொண்டே பேச, நிரஞ்சன் வேறு வழியின்றி அவனும் அதனை குடிக்க துவங்கினான். அதைக் குடிக்க குடிக்க அவன் மனதின் துயரம் அதிகமானது போல தோன்றியது. உதய் குடித்து முடித்து ஏதேதோ பேசிக் கொண்டே கண்ணயர்ந்துவிட, “மாமா எழுந்திருங்க பெட்ல வந்து படுங்க” என்று அவரை எழுப்பி தன்னறைக்குள் அழைத்து வந்து படுக்க வைத்தான். அதன் பின் அந்த பாட்டில்களை யார் பார்வையிலும் பட்டுவிடாமல் எடுத்து உள்ளே வைத்துவிட்டு தன் அறைக் கதவை மூடச் சென்றவனுக்கு மூடியிருந்த அவள் அறைக் கதவு மனதை வேதனையுற செய்தது. ‘கதவைத் திறக்கவே மாட்டியா ஜோ… அப்படினா இனி நமக்குள்ள எதுவுமே இல்லையா… முடிஞ்சு போச்சா?’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டபடி அவன் அறைக் கதவை மூடினான். ஜோ திரைச்சீலை மறைவில் நின்று கொண்டு அவனுடைய ஏக்கப்பார்வையையும் அவன் கதவை மூடி கொள்வதையும் பார்த்து பெருமூச்செறிந்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது. இருவருக்கு இடையிலும் அந்த கதவுகள் மட்டும்தான் இருந்தன. இரவு தாமதாமாக உறங்கியதால் காலை வெகுநேரம் கழித்தே நிரஞ்சன் விழித்தான். “டேய் அதைச் சுடு” “அதோ கருப்பா வரான் பாரு… அவனை விட்டுடாதே” என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஒலித்த வாரத்தைகளைக் கேட்டபடி அவன் கண்களைத் திறக்க, அருகில் படுத்திருந்த உதயைக் காணவில்லை. ஆனால் எதிரே தொலைக்காட்சியில் தருணும் கௌஷிக்கும், “டேய் அந்த கோல்ட் மாதிரி வர சக்தியை விட்டுடாதே…பிடிச்சிக்கோ” என்று மும்முரமாக கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். நிரஞ்சன் எரிச்சலுடன், “காலங்கத்தலா என்னடா கேம் உங்களுக்கு… இரண்டு பேருக்கும் ஆன்லைன் க்ளாஸ் இல்லையா?” என்று கேட்டு முறைத்தான். “முதல் க்ளாஸ் முடிஞ்சிருச்சு… செகன்ட் க்ளாஸ் ஆரம்பிக்கிறதுக்குள்ள கொஞ்ச நேரம் விளையாடிட்டுப் போயிடுறேன்… ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மாமா மாமா” என்று தருண் கெஞ்ச, “ஆமா மாமா… விளையாடிட்டுப் போயிடுறோம் மாமா” என்று கௌஷிக்கும் சேர்ந்து கெஞ்ச, “என்னவோ பண்ணித் தொலைங்க” என்றவன் எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான். இன்னும் அவள் அறை கதவு மூடியபடியேதான் இருந்தது. ஏக்கப் பெருமூச்சுடன் அதனை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியலறைச் சென்று காலை கடன்கள் எல்லாம் முடித்துவிட்டு வெளியே வர, “ஹாய் ஜோ” என்று தருண் பால்கனியில் நின்று கத்துவது அவன் காதில் விழுந்தது. வெளியே வராமல் எட்டி மட்டும் பார்த்தான். “சாரி தருண்… எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு… நான் அப்புறமா பேசுறேனே” என்றவள் நழுவிக் கொள்ள, “ஓகே பை ஜோ” என்றான். நிரஞ்சன் வெளியே வந்து பார்த்த போது அவள் அறைக் கதவு திறந்திருந்தது. ஆனால் அவள் இல்லை. அவன் தருணிடம் திரும்பி, “யார்கிட்ட பேசிட்டு இருந்த தருண்” என்று கேட்க, “எதிர் வீட்டு மாடில… ஜோகிட்ட பேசிட்டு இருந்தேன்” என்றான். “உனக்கு எப்படி அவங்களைத் தெரியும்?” “நாங்க ஃப்ரண்ட்ஸ்” “ஃப்ரண்ட்ஸா… இது எப்போ?” அவன் குழப்பமாகப் பார்க்க, “அது ஒரு தடவை நானும் கௌஷியும் பால் விளையாடிட்டு இருந்தோம்… அப்போ பால் அவங்க வீட்டுல போய் விழுந்திருச்சு… அதை ஜோதான் எடுத்துக் கொடுத்தா” என்றவன் சொல்லவும் நிரஞ்சன் முறைப்புடன், “அதென்ன எடுத்துக் கொடுத்தான்னு மரியாதையில்லாம பேசுற… அதுவும் ஜோன்னு வார்த்தைக்கு வார்த்தைக்குச் சொல்ற?” என, “ஜோவே என்னை அப்படிதான் கூப்பிட சொன்னா?” என்றதும் அவன் காதை அழுத்தித் திருகி, “ஜோ என்ன உன் க்ளாஸ் மெட்டா… மரியாதையா ஜோ அக்கான்னு சொல்லிப் பேசு… இல்ல அவ்வளவுதான்” என்றவன் எச்சரிக்கை விடுக்க, “வலிக்குது மாமா” என்றவன் தவிக்கவும் அவன் கரத்தை எடுத்துவிட்டு, “அக்கான்னு சொல்லணும் புரிஞ்சுதா” என்றவன் மேலும், “போதும் விளையாடுனது கீழே போங்க” என்றான். “மாமா க்ளாஸ் ஆரம்பிக்க இன்னும் டென் மினிட்ஸ் இருக்கு” என்றவனை முறைப்புடன் பார்த்த நிரஞ்சன்,  “பரவாயில்ல கீழே போ” என்று கண்டிப்புடன் கூற, “வாடா கௌஷிக்” என்று இருவரும் கடுப்புடன் படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றனர். அப்போதுதான் நிரஞ்சனுக்கு தருண் சொன்ன விஷயத்தை வைத்து ஒரு யோசனை உதித்தது. அவசர அவசரமாக தன் அறையிலிருந்த ஒரு பிளேஸ்டிக் பந்தை எடுத்து அதன் மீது, “சாரி ஜோ… ப்ளீஸ் கால் மீ” என்று எழுதினான். அதேநேரம் அறைக்குள் ஜோ நுழைவதைப் பார்த்து அந்தப் பந்தைத் தூக்கி வீச, அது சரியாக அவள் அறைக்குள் விழுந்தது. அவள் சத்தம் வந்த திசையில் பந்து விழுந்து கிடப்பதைப் பார்க்க, உடனடியாக அவன் சுவருக்குப் பின்னே மறைந்து கொண்டான். அவள் அந்தப் பந்தினை எடுத்ததும் அவளுக்கு தருண் நினைவுதான் வந்தது. அவள் அதனை எடுத்துக் கொண்டு பால்கனி கதவருகே வரும் போதுதான் அவள் அந்தப் பந்தில் எழுதி இருப்பதை கவனித்தாள். அவள் முகம் கோபத்தில் சிவந்தது. வேக வேகமாக தன் அறையிலிருந்த மார்கரைத் தேடி எடுத்து அதில் ஒரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையை எழுதி தூக்கி வீச அவள் கெட்ட நேரம் அது அப்போது மாடி ஏறி வந்த ரேணுவின் நெற்றியில் அடித்தது. அவர் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்து கொள்ள, நிரஞ்சனும் கூட இதை எதிர்பார்க்கவில்லை. ரேணு வலியுடன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு, “ஏய் யாரு அது… அறிவில்ல” என்று கோபமாகக் கத்தத் தொடங்க, அவள் கப்சிப்பென்று அமர்ந்து கொண்டாள். நிரஞ்சன் கீழே கிடந்த பந்தை அவசரமாக காலில் தள்ளிவிட்டு, “ம்மா என்ன மா?” என்று எதுவும் அறியாதவன் போல அக்கறையாக விசாரிக்க, “அந்த எதிர் வீட்டுப் பொண்ணுதான்… நான் பார்த்தேன்… பாலை தூக்கி அடிச்சுட்டா… எவ்வளவு திமிரு இருக்கும் அவளுக்கு” என்றவர் கடுப்புடன் அவள் காதில் விழும்படி கத்தினார். ஜோஷிக்கும் கோபம் எழ, பதிலுக்குப் பதில் பேச வேண்டுமென்ற எண்ணத்தைப் பிரயாத்தனப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அதற்குள் நிரஞ்சன் அம்மாவின் நெற்றியைத் தேய்த்துவிட்டு, “ஏதோ தெரியாம வந்து விழுந்திருக்குமா… நீங்க வாங்க… உள்ளே வந்து உட்காருங்க” என, “தெரியாம எல்லாம் இல்ல… தெரிஞ்சேதான் அந்தப் பொண்ணு தூக்கிப் போட்டிருக்கா” என்ற ரேணு பொங்கிக் கொண்டிருக்க அவர் நெற்றியைத் தேய்த்துவிட்டவன், “அப்படி எல்லாம் இல்லமா… தருண் பால் விளையாடிட்டு இருந்தான்… அவன் அந்த வீட்டுல தூக்கிப் போட்டிருப்பான்… அந்தப் பொண்ணு அதைத் திருப்பித் தூக்கிப் போட்டிருக்கும் மா” என்று சமாதானப்படுத்தினான். “அதை கூட… இப்படியாடா போடும்… அதுவும் எப்படித் தூக்கிப் போட்டுட்டு ஒரு சாரி கூட கேட்காம” என்றவர் கடுப்புடன் சொல்ல, அவனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. ஒருவாறு அவரே சமாதான நிலைக்கு வந்துவிட்டு, “சரி சரி… அந்தப் பொண்ணு எப்படியோ போகுது… நீ டிஃபன் சாப்பிட வா” என, “அதுக்கு ஏன் மா மேலே ஏறி வந்தீங்க… நானே வந்திருப்பேன் இல்ல” என்றார். “இல்லடா அப்படியே தோட்டத்துக்குத் தண்ணி விட்டுட்டு காய் பறிச்சிட்டுப் போலாம்னு” என்றவர் அதன் பின் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச அவருக்கு உதவியாக இருந்தவன், “செமையா மெய்டைன் பண்றீங்க மா” என்றான். “எவ்வளவு வேலை செஞ்சாலும் இந்தத் தோட்டத்தைப் பராமாரிக்கும் போது மனசுக்கு ஒரு தனி நிறைவு கிடைக்குதுடா” என்றவர் செடியில் காய்த்துத் தொங்கிய தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் எல்லாவற்றையும் பறித்து கிண்ணத்தில் வைத்து கொண்டார். “பரவாயில்ல மா… இவ்வளவு காய் காய்ச்சிருக்கு” “இதெல்லாம் கம்மி ரஞ்சு… நிறைய காய்ச்சு முடிஞ்சு போச்சு” என்றவர் மேலும், “சரி சரி… நீ டிஃபன் சாப்பிட வா… நான் கீழே போறேன்” என்று இறங்கிப் போக இருந்தவர் மீண்டும் அவன் புறம் திரும்பி, “மாப்பிள்ளை கூட… நீயும் குடிச்சியா?” என்று கேட்டு வைக்க, ‘அம்மாவுக்கு எப்படி’ என்று ஒரு நொடி ஜெர்க்கானவன், “ச்ச்சே இல்லமா… அவர் மட்டும்தான்… அதுவும் பீர்தான் அடிச்சாரு” என்று அவசரமாக மறுத்துவிட்டான். “பீரோ… என்ன எழவோ… நீ அதெல்லாம் குடிக்கிற வேலை வைச்சுக்காதே” என்றவர் கண்டிப்புடன் சொல்லிவிட்டு இறங்கிச் சென்றார். ‘அம்மா கண்ணுல இருந்து எதுவும் தப்ப முடியாது’ என்று எண்ணி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவன் அதன் பின் ஜோ எறிந்த பந்தை கீழே குனிந்து தேடி எடுத்து அதில் எழுதி இருந்த வரிகளைப் பார்த்த நொடி, அவன் உதடுகள் துடித்தன. கோபமேறியது. அவன் நிமிர்ந்து அவள் அறையைப் பார்க்க அவள் கதவை மூடிவிட்டிருந்தாள். அந்தப் பந்தை வைத்துக் கொண்டு சில நொடிகள் தலை கவிழ்ந்து யோசித்தவன் பின் ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இறங்கிச் சென்றான்.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா