மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 18Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 18

Quote from monisha on July 6, 2026, 6:54 PM

18

முதலிரவு சடங்கு பெண் வீட்டில்தான் நடக்க வேண்டும், அதுதான் வழக்கம் என்று தேன்மொழி கண்டிப்புடன் சொல்லிவிட, சௌந்தர்யா - இந்திரன் தம்பதி சென்னையிலும், யாத்ரா - கார்த்திக் தம்பதி ஏற்காட்டிற்கும் புறப்பட்டனர்.

யாத்ராவின் அம்மா, அப்பா மற்றும் சில நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லோரும் அந்த வேனில் அமர்ந்திருந்தனர். மதியம் போலக் கிளம்பிய அந்த வண்டி, இரவு மலையேறத் தொடங்கியது. எல்லோரும் சிரித்துப் பேசிக் கொண்டு வர, கார்த்திக்கும் யாத்ராவும் ஒரு தனித்தீவில் வாழ்வது போல அங்கிருந்த சூழ்நிலையுடன் துளியும் ஒட்டாமல் பயணித்தனர்.

முக்கியமாக இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பிக் கூட பார்த்துக் கொள்ளவில்லை. காதலின் வலியில் இருந்தவர்கள் புதுமணத் தம்பதிகள் என்ற உணர்வை அப்போது வரை சுவீகரிக்கவில்லை. அதற்கான எந்தவித உணர்வும் உற்சாகமும் அவர்களிடம் தென்படவில்லை. இதைக் கவனித்துக் குமார உள்ளூற குமுறினாலும், காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.

ஒரு வழியாக அவர்கள் வீடு வந்து சேர, பிரியா இருவரையும் குளித்துத் தயாராகச் சொன்னார். மஞ்சள் வண்ணத்தில் பூக்கள் சிதறியிருந்த அந்தப் புடவையை உடுத்திக்கொண்டு கண்ணாடி முன்பு வந்து நின்றாள் யாத்ரா. அவளது சங்குக்கழுத்து வளைவில், இன்னும் ஈரம் காயாத மஞ்சள் தாலி புதுமணப் பெண்ணுக்கே உரிய அழகோடு மிளிர்ந்தது.

ஆனால், அந்தத் தாலியின் பொன்னிறப் பொலிவு அவளது முகத்தில் துளிகூடப் பிரதிபலிக்கவில்லை.

சோர்ந்து களைத்துப் போய்க் காணப்பட்டவள், அம்மா எடுத்துத் தந்த நகை, பூவை எல்லாம் கடமைக்கென்று அணிந்து கொண்டாள்.

மகளின் அலங்காரத்தைக் கண்டு அதிருப்தியான பிரியா, “என்னடி பண்ணி வைச்சிருக்க?” என்று கேட்க,

“என்ன பண்ணி வைச்சிருக்கேன்?” என்று அசட்டையாகத் திருப்பிக் கேட்டாள்.

“பூவை இப்படியா குத்துவாங்க... அதுவும் இல்லாம மேட்சிங்கா போடுவன்னு நகை எல்லாம் எடுத்துக் கொடுத்தா... நீ பாட்டுக்கு ஏதோ சம்பந்தமில்லாம ஒண்ணு எடுத்துப் போட்டுட்டு இருக்க... போதும்னு சொன்னா கூடக் கேட்காம எங்க போனாலும் பார்த்துப் பார்த்து டிரஸ் பண்ணுவ... இப்போ என்னடி ஆச்சு உனக்கு?”

“ஆமா பார்த்துப் பார்த்துப் பண்ணுவேன்... எனக்காகப் பண்ணுவேன்... அதுல ஒரு சந்தோஷம் இருக்கும்... ஆனா இதுல...” என்றவள் கண்களில் அத்தனை நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீரெல்லாம் மொத்தமாக வழிந்தூற்றியது.

அதிர்ந்த பிரியா, “யாத்ரா...” என்று மகளை வாஞ்சையுடன் அணைத்துப் பிடித்துக் கொண்டார். மொத்தமாக அழுது தீர்த்தவள் மெதுவாக அம்மாவை ஏறிட்டுப் பார்த்து, “நான் தப்பா வளர்ந்துட்டேனா ம்மா?” என்று கேட்க,

“இல்லமா... நீ சுயமா யோசிக்குற... சுதந்திரமா நினைச்சதை பண்ற... நானும் உங்க அப்பாவும் உன்னை அப்படித்தானே வளர்த்திருக்கோம்... ஆனா அதைப் புரிஞ்சிக்கிற அளவுக்குத் தெளிவும் முதிர்ச்சியும்தான் நம்ம சமூகத்துக்கு இல்ல... சமூகத்துக்கிட்டதான் தப்பு இருக்கு... எங்க வளர்ப்புலயோ இல்ல இல்ல உன்கிட்டயோ இல்லடா...” என்று அம்மாவின் வார்த்தைகள் யாத்ராவை கொஞ்சம் சமாதானப்படுத்தியது.

மேலும் பிரியா மகளின் கண்ணீரைத் தன் புடவை முந்தானையால் துடைத்துவிட்டபடி, “நீ கார்த்திக்கை லவ் பண்ண... அந்தத் காதல் உங்களுக்குள்ள கண்டிப்பா இருக்கும்... நீயும் கார்த்திக்கும் மனசு விட்டுப் பேசுங்க” என, அவளுக்கு அதில் உடன்பாடில்லை.

‘நான் ஏன் பேசணும் அவன் பேசட்டும்... அத்தனை தடவை கால் பண்ணேன், மெசேஜ் பண்ணேன், எடுத்தானா?’ என்றவள் மனதில் கறுவிக் கொண்டாலும், அம்மாவிடம் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. அலங்காரங்களை எல்லாம் சரி செய்து கொண்டு அறைக்குச் சென்றாள்.

அதேநேரம் தோட்டத்தில் தனியாக அமர்ந்திருந்த கார்த்திக்கிடம் வந்த குமார், “கொஞ்சம் பேசலாமா?” என்று அருகே வந்து நிற்க,

“சொல்லுங்க மாமா” என்று எழுந்து நின்றான்.

“என்னவோ உங்களைப் பார்த்த முதல் நாள்லயே எனக்குப் பிடிச்சுப் போச்சு தம்பி... அப்புறம் என் பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் நான் உண்மையிலேயே ரொம்ப சந்தோஷப்பட்டேன்... ஆனா இப்போ நடந்த பிரச்சினை... அதனால நடந்த இந்த அவசரக் கல்யாணம்... இதெல்லாம் ஏத்துக்கக் கொஞ்ச நாள் ஆகும்... அதனால நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும்... என் பொண்ணைப் புரிஞ்சுக்கணும்... நிச்சயம் அவளும் உங்களைப் புரிஞ்சுக்குவா” என்று சொல்லும்போது அவர் கண்களினோரம் கசிந்தது.

“இதெல்லாம் நீங்க சொல்ல வேண்டிய அவசியமே இல்ல மாமா... நான் பார்த்துக்கிறேன்” என்றவர் கையைப் பிடித்து அவன் வாக்குக் கொடுத்தான். அந்தப் பிடி குமாருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.

அதன் பிறகு இருவருமாக வீட்டிற்குள் வந்தனர். அதேசமயம் பிரியா அக்கம்பக்கத்து நண்பர்கள் சிலரின் உதவியுடன் அவர்களுக்கான முதலிரவு அறையைத் தயார் செய்தார்.

தேன்மொழி வீட்டிலோ மூத்த மகள்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டனர். சௌந்தர்யாவையும் அலங்காரம் செய்து அறைக்குள் அனுப்பினர்.

எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்திரன் அவள் உள்ளே வந்து கதவை மூடியதும் ஆசையாகச் சென்று அவள் கையைப் பற்றினான். அவன் தொட்ட கணத்தில் ஏதோ சூடு பட்டது போல அவசரமாக விலகிச் சென்றாள்.

“சௌமி என்ன?” என்றவன் கேட்க,

“என்னைத் தொடாதே!” என்றவள் பதில் குரல் சீறலாக வந்தது. அவன் அதிர்ச்சியுடன்,

“இப்போ என்னாகிடுச்சுன்னு தொடாதுன்னு சொல்ற?” என்று வினவ,

“எதுவுமே ஆகல இல்ல?” என்று அவள் விழிகள் கோபத்துடன் முற்றுகையிட்டன.

“ஏய் எனக்குப் புரியலடி... தெளிவா சொல்லு.”

“உன் தங்கச்சியை எங்க அண்ணன் காதலிச்ச விஷயம் தெரிஞ்சதும் நீ என்ன சொன்ன?”

“என்ன சொன்னேன்?”

“உன் தங்கச்சிகூட எங்க அண்ணன் பழகுனா... நம்ம கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு நீ என் அண்ணன்கிட்ட சொல்லி இருக்க... இல்ல சொல்லல... மிரட்டியிருக்க.”

அவன் முகம் வெளிறியது. “இதைப் பத்தி உங்க அண்ணன் சொன்னானா உன்கிட்ட?” என்றவன் தயக்கத்துடன் கேட்க,

“ஒரு நாள் குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது உளறினாரு... இல்லைனா எனக்கு இந்த உண்மையே தெரிஞ்சிருக்காது” என்றாள்.

“சாரி சௌமி, அன்னைக்கு நான் இருந்த மனநிலைல அப்படி சொல்லிட்டேன்... தப்புதான்... என்னை மன்னிச்சிடு” என்றவன் மீண்டும் அவள் கையைப் பிடிக்கப் போகவும் பின்வாங்கிவிட்டவள்,

“உன் தங்கச்சிக்காக என் வாழ்க்கையைப் பணயம் வைக்கப் பார்த்த உன்னை நான் மன்னிக்கணுமா?” என்று கடுகடுக்க, அவன் முகம் வாடியது.

“சௌமி ப்ளீஸ்.”

“நான் உன்னை எவ்வளவோ காதலிச்சேன்... எத்தனையோ பிரச்சினைகள் வந்தபோதும் இந்த கல்யாணம் நடந்துட்டா போதும்னு நினைச்சேன்... ஆனா நீ என்னைப்பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல இல்ல?”

“அப்படி எல்லாம் இல்ல.”

“போதும் இந்திரன், நீ என்னை ஏமாத்துனவரைக்கும் போதும்... உனக்கு என் மேல காதல் இல்லைன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு.”

“என்ன பேசுற நீ?”

“உண்மையைப் பேசுறேன்... உன் தங்கச்சியோட என் அண்ணனுக்குக் கல்யாணம் மட்டும் பிக்ஸ் ஆகலன்னா நானே இந்த கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்” என்றவள் சொன்னதைக் கேட்டு அவன் திடுக்கிட்டான்.

அவள் தொடர்ந்து, “ஆனா இப்போ என்னால ஒண்ணும் பண்ண முடியல” என்று சொல்லிப் பூவலங்காரங்கள் செய்த படுக்கையின் மீது அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதாள்.

“ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு” என்றவன் அருகில் சென்று ஆறுதல் உரைக்கவும், “என்னைத் தொடாதேன்னு சொன்னேன் இல்ல” என்று உடனடியாக எழுந்து நின்று கொண்டாள்.

“அப்போ நீ என்னை மன்னிக்கவே மாட்டியா?”

“தெரியல... மன்னிக்க முடியுமா, பழையபடி உன்னை காதலிக்க முடியுமா... எதுவுமே தெரியல... ஆனா என்னால இப்போதைக்கு இது எதுவும் முடியாது” என்றவள் சொல்ல, அவன் தவிப்புடன் அவளைப் பார்த்தான்.

அவள் வேக வேகமாக ஒரு போர்வையை விரித்துத் தரையில் படுத்துக் கொள்ள, “சௌமி” என்றான். அவள் திரும்பவில்லை. ஆனால் அவளுடைய விசும்பல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

“எல்லாம் என்னோட தப்பு” என்றவன் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான். நிராகரிப்பின் வலி என்பது அவ்வளவு சீக்கிரத்தில் சரி செய்யக் கூடியது அல்ல.

அதேநேரம் கார்த்திக் - யாத்ரா இடையில் இருந்தது ஏமாற்றமோ நிராகரிப்போ இல்லை. முழுக்க முழுக்க ஈகோவும், அதற்கு இடையில் மாட்டிக் கொண்டு சின்னாபின்னமாகும் அவர்கள் காதலும்தான்...

கார்த்திக் அறைக்குள் வருவதை அறிந்ததுமே யாத்ரா அவசரமாகக் கண்களை மூடிக் படுத்துக் கொண்டாள். அவனாக வந்து பேசட்டும் என்று நினைத்தாள்.

கதவு மூடும் சத்தம் கேட்டது. அதன்பிறகு வேறு எந்தச் சத்தமும் இல்லை. தப்பித்தவறி கூடக் கண்களைத் திறந்துவிடக் கூடாது என்று இறுக மூடிக் கொண்டிருந்தாள்.

சட்டென்று, கார்த்திக்கின் பெர்ஃப்யூம் நெடி அவள் முகத்தில் வந்து மோதியது. மிக மிக நெருக்கத்தில் அவனது மூச்சுக்காற்றை அவள் உணர்ந்தாள். அடுத்த நொடியே அவளது உடலில் ஒரு உஷ்ண அலை பரவியது. அவன் தொடவே இல்லை. ஆனால், தொடாமலே அவனது தீண்டலை அவள் தேகம் அணு அணுவாக உணர்ந்து சிலிர்த்தது.

அவள் முகத்தில் உரசிச் சென்ற அவனுடைய வாசமும் சுவாசமும் அவளை கட்டி இழுக்க, அவன் தனக்கு மிக அருகில் குனிந்து நிற்பதை அவளால் தெளிவாக உணர முடிந்தது.

அடிவயிற்றில் ‘ஜிவ்வென்று’ ஒரு மின்னல் உணர்வு இறங்கியது. ‘கண்களைத் திறந்துவிடலாமா?’ என்று அவள் மனம் தவித்த அந்தக் கணத்தில்... அவன் தூரமாக நகர்ந்து கொண்டான். தடைபட்டிருந்த அவளது மூச்சுக்காற்று இப்போதுதான் கொஞ்சம் சீரானது.

மெதுவாகப் போர்வை ஒன்றை எடுத்து அவளது கால் விரல்கள் வரை இழுத்துப் போர்த்திவிட்டான்.

அதன்பிறகு அவன் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொள்ள, யாத்ரா மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள்.

Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா