மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: Aathiyum AnthamumAA - 12Post ReplyPost Reply: AA - 12

Quote from monisha on April 5, 2021, 8:34 PM

பூலோகம் சுழன்றது
அமுதா அந்த வார அத்தியாயத்தைச் சரிபார்த்துப் பிரசுரத்திற்கு அனுப்பி வைத்தாள். கருணாகரன் வீடே சோகமயமாய் காட்சியளித்தது. அதுவும் விஷ்வாவின் விழிகள் அழுது அழுது இனியும் அழுவதற்கான கண்ணீர் வற்றிப் போயிருக்க அவன் முகம் அந்தளவுக்கு வாட்டமுற்றிருந்தது. அதுவும் தன் அம்மா சொன்ன உண்மைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவன் இன்னமும் மீளாமல் இருக்க, சாரதா அவனின் வேதனைக் குறித்து சிறிதும் கவலையுற்றதாகத் தெரியவில்லை. அவருக்கு இன்னும் மகனின் மீதான கோபம் தீர்ந்தபாடில்லை. ஆனால் கருணாகரனால் மகனை அப்படி வாடி வதங்கிய முகத்தோடு பார்க்க முடியாமல், "ஏன் விஷ்வா இப்படி என்னவோ போல இருக்க... என்னால இப்படி உன்னை பாக்கவே முடியலடா... நான் ஏதாச்சும் உன் மனசு புண்படற மாறி பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுறா" என்று கொஞ்சமும் வயது வித்தியாசமின்றி அவன் வேதனையைத் தீர்க்க அவர் இறங்கிப் பேச, விஷ்வா பதறிப்போனான். அவர் கைகளை அழுத்தமாய் பற்றிக்கொண்டவன் விழிகளில் கண்ணீரை உகுத்தபடி, "ப்ளீஸ்ப்பா... அப்படி எல்லாம் பேசாதீங்க... எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு... அப்படிப் பார்த்தா நான்தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்... என்னை மன்னச்சிடுங்கப்பா" என்று அழத் தொடங்கினான். விஷ்வாவின் இந்தச் செயல் கருணாகரனை ஆச்சரியப்படுத்தியது. அதேநேரம் சந்தேகத்தையும் தூண்டிவிட, அவர் மகனைக் குழப்பமாய் ஏறிட்டு, "என்ன விஷ்வா? அம்மா ரொம்ப கோபமா பேசிட்டீங்களா?!" என்று கேட்க, "அப்படி எல்லாம் இல்ல... நான் உங்ககிட்ட அப்படி பேசினது எனக்கே கில்டியா இருந்துச்சு... அதுவும் நீங்க என்னைவிட ஆதி மேல ரொம்ப பாசமா இருக்கீங்களோன்னு பொஸஸ்ஸிவ்நஸ்ல யோசிக்காம வார்த்தையை விட்டுட்டேன்" என்று அவன் சொல்லவும் கருணாகரன் மகனைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டார். உண்மையிலேயே அந்த அணைப்பும் ஆறுதலும் விஷ்வாவிற்கு அப்போது தேவைப்பட்டதென்றே சொல்ல வேண்டும். அவனும் தன் தந்தையை இறுக அணைத்துக் கொண்டு, "சாரிப்பா" என்று புலம்பித் தீர்க்க, அந்த நொடி மகனைத் தன்னிடமிருந்து பிரித்தவர், "முதல்ல சாரி சொல்றத நிறுத்து... எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல... புரிஞ்சிதா" என்று தெளிவுபடுத்த அவனும் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினான். அவன் தன் தந்தையை தயக்கத்தோடு பார்த்து, "அப்புறம்... நீங்க கேட்ட மாதிரி நான்... ஆதியை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்ல அவர் அதிசயத்து அவனைப் பார்த்தார். அவனின் சம்மதம் அவருக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்த போதும் நிதானித்தவர், "நீ ஆதியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது எனக்கு சந்தோஷம்தான்... ஆனாலும் இந்த விஷயத்தில நீயும் ஆதியும் ஒண்ணா பேசி முடிவை எடுக்கிறதுதான் எனக்கு சரியா வரும்னு தோணுது" என்றார். "நிச்சயமா நான் ஆதிகிட்ட பேசறேன்ப்பா" என்று விஷ்வா அவரின் வார்த்தைகளை அப்படியே தட்டாமல் கேட்டுக் கொள்ள, அவனின் அந்தப் புதுவிதமான நடவடிக்கை அவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியெல்லாம் தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சாரதாவை.... கருணாகரன் சந்தேகமாய் நோக்கிப் பார்வையாலேயே மகனின் மாற்றத்தைக் குறித்து வினவ, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் தோள்களை குலுக்கினார். விஷ்வாவும் தன் தந்தையிடம் உண்மையெல்லாம் தெரிந்தது போல் காட்டி கொள்ளக் கூடாதென்பதில் தெளிவாய் இருந்தான். ஆதலால் அவன் தன் மனவேதனையெல்லாம் மறைத்து இயல்பாய் இருக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கு பிறகும் சாரதா மட்டும் அவனிடம் பேசாமல் கோபமாகவே இருந்தார். எப்படியாவது தன் அம்மாவையும் சமாதானப்படுத்திட எண்ணியவன், "டிபன் சாப்பிடு" என்று உணவை எடுத்து வைத்து விட்டு முகம் பார்க்காமல் விலகிப் போக இருந்தவரின் கரத்தை அழுத்தமாய் பிடித்து நிறுத்தி, "அம்மா ஒரு நிமிஷம்" என்றான். மகனை அவர் மௌனமாய் பார்க்க, அவன் தழுதழுத்த குரலில், "என் உடம்பில யார் ரத்தம் வேணா ஓடிட்டு போகட்டும்... அத பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்ல... ஆனா ப்ளீஸ் நீங்க மட்டும் என்னை கருணாகரன் மகன் இல்லன்னு சொல்லிடாதீங்க... நான் செத்தே போயிடுவேன்" என்றான் கண்ணீரோடு! "விஷ்வா" என்று சாரதா பதறித் துடித்தார். அவன் மேலும், "இந்த ஜென்மத்தில அவர் மட்டும்தான் என்னோட அப்பா... அதை யாராலும் மாத்த முடியாது" என்று சொல்லி அவன் மேலும் கண்ணீர் வடிக்க, மகனின் கண்ணீரை சாரதா துடைத்துவிட்டு, "இல்ல விஷ்வா... இனிமே அப்படி ஒருநாளும் சொல்ல மாட்டேன்" என்றார். அவர்கள் இருவரும் சமாதானமாகிய பின் ஆதியைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர். சாரதா அவனிடம், "உனக்கு தெரியுமா விஷ்வா? நீ சம்மதம் சொல்லிட்டா ஆதியும் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்னு எங்ககிட்ட சொன்னா" என்றவர் சொல்ல, விஷ்வா சிரித்து விட்டு, "நான் நிச்சயம் சம்மதிக்கவே மாட்டேன்னு ஸ்டிராங்கா நம்பிதான் ம்மா ஆதி அப்படி சொல்லிருப்பா" என்றான். சாரதாவின் முகம் அதிர்ச்சிகரமாய் மாறியது. "இப்ப என்னடா பண்றது?" என்று மகனிடம் அவர் சந்தேகமாய் வினவ, "நீங்க ஒன்னும் டென்ஷனாகாதீங்க... நான் ஆதி கிட்ட பேசிறேன்" என்று தீர்க்கமாய் சொல்ல அவன் முகத்திலிருந்த தெளிவு சாரதாவிற்கு நம்பிக்கையை விதைத்தது. இந்தச் சந்தோஷமான செய்தியை உடனே தொலைப்பேசியில் சாரதா செல்லம்மாவை அழைத்துச் சொல்லவும், அவருக்கோ வார்த்தைகளால் விவரிக்க முடியாதளவுக்கு அத்தனை ஆனந்தம். அந்த நொடியே விஷ்வாவிற்கும் ஆதிக்கும் திருமணம் நடத்தி அதை மனதளவில் கண்டுகளித்துவிட்டார். ஆதி அந்தச் சமயம் அலுவலகத்தில் ஜேம்ஸிடம் தான் விசாரிக்கச் சொன்னவற்றை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "சரவணன் குடும்பத்தைப் பத்தி விசாரிச்சீங்களா ஜேம்ஸ்?" என்றவள் கேட்க, "விசாரிச்சேன் ஆதி... அந்த மேட்டரெல்லாம் கேட்கும் போதே ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு" என்றான். "ஏன்?" அவள் குழப்பமுற வினவ, "அதாவது... ஒரு இருபது வருஷம் முன்னப் பின்னே இருக்கலாம்... அந்த குடும்பத்தில இருக்கிறவங்க நிறைய பேர் வரிசையா இறந்து போயிருக்காங்க... அந்த குடும்பத்திலேயே பெரியவர் ஊர் தலைவரா இருந்த சண்முகவேலன்... அவர் இப்போ உயிரோட இல்லை... அவர் பிள்ளைங்க மொத்தம் அஞ்சு பேர்... அதுல மூணு பேர் ஒரு முப்பது வயசுக்குள்ளேயே இறந்திட்டாங்க ... மிச்சம் மீதி இருக்கிறவங்கனு பாத்தா ஒரு பிள்ளை... பொண்ணு... அந்த வீட்டோட பெரிய பொண்ணுக்கு பிறந்தவன்தான் இந்த சரவணன்... ஊருக்குள்ள அவன் மாமன் ஊர் தலைவனா இருக்கிற தைரியத்துல போக்கிரித்தனம் பண்ணிட்டிருகான்" என்றவன் சொல்ல அவற்றை எல்லாம் கேட்கக் கேட்க ஆதி முகத்தில் அதிர்ச்சியின் சாயல் மெல்லப் படர்ந்தது. அவள் யோசனையோடு, "அது சரி ஜேம்ஸ்... அந்த குடும்பத்து ஆட்கள் பேரை எல்லாம விசாரிச்சீங்களா?" என்று கேட்டாள். அவன் வரிசையாய் அவர்கள் பெயரையும் அவன் கேள்விப்பட்ட விவரத்தையும் சொல்ல தொடங்கினான். கடைசியாய் அவன் சிவசங்கரன் செல்வி என்ற பெயரைச் சொல்ல அவள் அதிர்ந்தாள். சிவசங்கரன் அவள் தந்தையின் பெயர். அவர் பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றி வேறொன்றுமே அவள் அறிந்திருக்கவில்லை. தன் தந்தையை குறித்து அவள் தன் தாயிடம் எழுப்பிய கேள்விக்கு இதுவரையில் பதில் வந்ததில்லை. அவ்விதம் கேட்பது தன் தாயின் மனதை வேதனைப்படுத்துகிறது என்பதை என்று உணர்ந்ததாலோ, அன்றிலிருந்து அவள் தன் தந்தையைப் பற்றிய விவரத்தைக் கேட்பதை நிறுத்திக் கொண்டாள். ஆனால் இன்று அவள் தேடாமலே அவள் தந்தையினைப் பற்றிய தகவல் கிடைத்திருக்க, சந்தோஷப்படுவதா இல்லை வேதனைப்படுவதா என்ற புரியாத நிலையில் அவள் அமர்ந்திருந்தாள். அவளின் மௌனத்தைப் பார்த்த ஜேம்ஸ், "இன்னொரு இன்டிரஸ்டிங் மேட்டரும் இருக்க" என்று சொல்ல, "என்ன ஜேம்ஸ் ?" என்றவள் ஆவல் ததும்பிய விழிகளோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். "அது என்னன்னா அந்த குடும்பத்தில் நடந்த எல்லா டெத்துக்கும்... அந்த வீட்டு கடைசி மருமகள் செல்விதான் காரணம்னு ஊருக்குள்ள சொல்றாங்க" "வாட்?" என்றவள் அதிர்ச்சியானாள். செல்வி என்பது தன் அம்மாவின் பெயர்தான் என்பதை அவள் ஏற்கனவே யூகித்திருக்க ஜேம்ஸ் சொன்ன விஷயம் அவளைக் கதிகலங்க செய்தது. ஜேம்ஸ் மேலும், "அப்புறம் ஆதி... சில பேர் செல்வி அந்தக் குடும்பத்தை பழி வாங்கிட்டான்னு சொல்றாங்க.. அந்தப் பொண்ணுக்கு பேய் பிடிச்சிருந்ததுன்னு சொல்றாங்க... ராசி இல்லாதவன்னு பேசறாங்க... அட்லாஸ்ட் கேரக்டர் சரியில்லன்னு" இப்படி அவன் சொன்ன மறுகணமே, "ஸ்டாப் இட்" என்று ஆதி கத்தினாள். அந்த நொடி உடலின் எல்லா அங்கங்களையும் துண்டுதுண்டாகக் கூறு போட்டது போல அவள் துடிதுடித்து போக ஜேம்ஸ் அவள் முகமாறுதல்களைப் பார்த்து, "என்னாச்சு ஆதி?" என்று பதறினான். அவன் அவளை நிமிர்ந்து பாராமல், "போதும் ஜேம்ஸ் நீங்க ப்ப்... போங்க" என்று வார்த்தைகள் தடுமாற சொல்லியவளைப் புரியாத பார்வை பார்த்தபடியே அவன் வெளியேறினான். அவளால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவள் விழி குளமாய் மாறிட சில மணி நேரத்திற்கு இயங்க முடியாமல் மேஜைமீது அப்படியே தலை சாய்த்துக் கொண்டாள். அவள் மெல்ல அந்த நிலையிலிருந்து தெளிவு பெற்றபோது அவளுக்கு சரவணின் நினைவு வந்தது. அவனைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆவல் உதித்தது. இங்கே அவள் சரவணனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் ஊருக்குள் தன் பைக்கை எடுத்துக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருந்த சங்கரியை பின்தொடர்ந்து தன் போக்கிரித்தனத்தைக் காட்டிக் கொண்டிருந்தான். "ஏ சங்கரி... நில்லுவே" என்று அவன் அழைக்க அழைக்க அவள் காதில் வாங்காமல் நடந்துபோய் கொண்டிருந்தாள். "ஏ நில்லுடி" என்றவன் இன்னும் உரக்கக் கத்த அவள் அவனை எரிப்பது போல் திரும்பி முறைத்தபடி, "டீப்போட்டு பேசின பல்லை உடைச்சிடுவேன் பாத்துக்கோ" என்றாள். "என்ன டீச்சரம்மா... பள்ளி கூடத்துல பிள்ளைங்கள மிரட்டற மாதிரியே என்னையும் மிரட்டறியாக்கும்" அவள் கோப பார்வையோடு, "இப்ப உனக்கு என்ன வேணும்?!" என்று கேட்க, "நீ பாடம் எடுத்து எடுத்து பிள்ளைங்கள எல்லாம் தூங்க வைக்கிரியாமே... அதான் என்னன்னு கேட்டு போலாம்னு வந்தேன்" என்று எகத்தாளமாய் சிரித்தான். சங்கரி அவன் பேசுவதை தாங்க முடியாமல் முன்னேறி நடக்க அவனும் விடாமல் தன் பைக்கைப் பொறுமையாய் ஓட்டிக் கொண்டே, "ஏதோ தனியா போறியேன்னு பின்னாடி வந்தா ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிற" என்றான். "வேண்டாம் சரவணா போயிடு... இப்படியே என் பின்னாடி வந்தன்னா நான் எங்க அப்பாக்கிட்டே சொல்லிடுவேன்" என்று சங்கரி மிரட்ட, "போய் சொல்லு... எனக்கென்ன பயமா? அப்படியே இந்தம்மா அழகுல மயங்கிப் பின்னாடியே வந்துட்டோம்னு நினைப்பு... நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளா... எனக்கு சும்மா மார்டனா... ஒசரமா... எப்பேர்பட்ட மாமா பொண்ணு இருக்கா தெரியுமா... போயும் போயும் உன் பின்னாடி எல்லாம் சுத்திட்டிருக்கேன் பாரு... என் நேரம்" என்றவன் சலித்து கொள்ள, அப்போது ஒரு கார் வேகமாய் அவன் அருகில் வந்து நின்றது. உள்ளே இருந்து ஒரு குரல் கனிரென, "எதுக்கு பொட்டைப் பிள்ளைய வம்பு இழுத்திட்டிருக்க... வீட்டுக்கு வந்து சேருடா" என்று மிரட்டலாய் சொல்ல, சரவணன் தாழ்ந்த குரலில், "சரிங்க மாமா" என்றான். இதை சங்கரி பார்த்து விட்டாளோ என்று சரவணன் எண்ணியபோது அவள் வெகுதூரம் நடந்து போயிருந்தாள். *** ஆதி எப்போதும் அலுவலகத்தில் இருந்து உடல் களைப்போடு வருபவள் இன்று மனச்சோர்வோடும் வந்தாள். செல்லம்மாவோ ஆதியின் மனநிலையை அறியாமல் அவள்மீது இருந்த கோபத்தை முற்றிலுமாய் மறந்து அவளை நிறைந்த முகத்தோடு வரவேற்க, அவள் வியப்பானாள். அதுவும் என்றும் இல்லாத திருநாளாய் அன்று சாப்பிடவே விருப்பமில்லாத ஆதிக்கு ஆசையாய் செல்லம்மா உணவு பரிமாற, அம்மாவின் சந்தோஷத்தின் காரணம் புரியாமல், "என்னாச்சும்மா ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல" என்று கேட்டாள். "ஆமா பின்ன... நான் ஆசைப்பட்ட விஷயம் நடக்க போகுதே" என்று சந்தோஷம் பொங்க செல்லம்மா சொல்ல, "என்ன ஆசை பட்டீங்க?... என்ன நடக்க போகுது?... புரியுற மாதிரிதான் சொல்லுங்களேன்" என்றவள் குழப்பமாக வினவினாள். "விஷ்வா உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டான்" என்று குதுகலத்தோடு அவர் சொல்ல... ஆதியால் இதை நம்பமுடியவில்லை. "நோ சேன்ஸ்... நீங்க பொய் சொல்றீங்க" என்றவள் தீர்க்கமாய் சொல்ல, "நான் ஏன்டி பொய் சொல்லப் போறேன்... வேணா நீயே உங்க ஆன்ட்டி இல்ல அங்கிளுக்கு போன் பண்ணி கேளேன்" என்று செல்லம்மா உறுதிபட உரைத்தார். அவளுக்கு தூக்கிவாரி போட்டது. விஷ்வா போய்த் தன்னை மணக்கச் சம்மதிப்பத? அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. அதேநேரம் தன் அம்மாவின் வார்த்தைகள் பொய்யாக அவளுக்குத் தோன்றவில்லை. அவள் மௌனமாய் அமர்ந்திருக்க செல்லம்மா அவளிடம், "பேசாம நீ விஷ்வாகிட்டயே இதைப்பத்தி கேட்டுடு" என்றவர் சொல்ல… அதிர்ந்தவள், "நோ வே... விஷ்வா சம்மதிச்சாலும் ஐ வோன்ட்" என்றாள். "என்னடி? நீ சொன்னது உனக்கு மறந்து போச்சா" செல்லம்மா கோபத்தோடு அவளைக் கேட்க, "மறக்கல.. ஆனா அது விஷ்வா சம்மதிக்க மாட்டான்னு ஒரு தைரியத்தில சொன்னேன்... அவன் இப்படி பல்டி அடிப்பான்னு யாருக்கு தெரியும்… இடியட்" என்றவள் அவனைக் கடிந்து கொள்ள செல்லம்மா சீற்றமானார். "வாய உடைக்கப் போறேன்... எதுக்கு இப்போ விஷ்வாவை திட்டற?" என்றவர் மேலும், "இந்த கல்யாணம் நடக்க போறது உறுதி... நீ ஒழுங்கா சம்மதிக்கிற" என்று மிரட்டினார். "என்னைப் பாத்தா எப்படி தெரியுது உங்களுக்கு... நீங்க சொன்னா நான் அவனை கல்யாணம் பண்ணிக்குவேனா?... நெவர்" என்றவள் தீர்க்கமாய் சொல்லி முடிக்க, "புரிஞ்சிக்கோ ஆதி... அம்மா நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்" என்றவர் இறங்கிய தொனியில் சொல்ல, "தெரியும்மா... நீங்க எனக்கு நல்லதுக்குதான் சொல்வீங்க... நல்லதைதான் செய்வீங்க... ஏன்னா எனக்குதான் அப்பா சித்தப்பா பெரியப்பா தாத்தா அத்தை இப்படின்னு சொல்லிக்க எந்த உறவும் இல்லையே" என்று ஆதி சொல்லித் தன் அம்மாவை குத்தலாய் பார்க்க அவர் துணுக்குற்றார். ஆதி மேலும், "தெரியாமதான் கேட்கிறேன்... நமக்கு எந்த உறவும் இல்லயா... இல்ல இருந்தும் என்கிட்ட நீங்க மறைக்கிறீங்களா?" என்று கேட்க செல்லம்மாவின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் படர்ந்தன. அதனை மகளிடம் காட்டிக் கொள்ளாமல், "நீ தேவையில்லாதது எல்லாம் பேசிட்டிருக்க ஆதி" என்றார். "இல்லம்மா... எனக்கு இது ரொம்ப தேவையானது... நான் தெரிஞ்சிக்க வேண்டியது... எங்க அப்பா சிவசங்கரனுக்கு என்னாச்சுனு நான் தெரிஞ்சிக்கணும் ... எங்க தாத்தா சண்முகவேலனுக்கு என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கணும் ... என் அத்தை மனோரஞ்சிதம் இப்போ எங்க இருக்காங்க... எங்க அப்பா கூட பிறந்தவங்க வேல்முருகன் பெரியப்பாவும் மாணிக்கம் சித்தப்பாவும்... இப்ப எங்கன்னு பதில் சொல்லுங்க" என்று வரிசைக் கட்டி எல்லோருடைய பெயர்களையும் உரைக்க, செல்லம்மா சீற்றத்தோடு, "போதும் நிறுத்து ஆதி" என்று சத்தமிட்டார். "ஆதி இல்ல ஆதிபரமேஸ்வேரி. ஆதித்தபுரத்தில இருக்கிற நம்ம குல தெய்வத்தோடு பேரு... ஆம் ஐ ரைட்?" என்றவள் மேலும் தொடர, செல்லம்மாவால் எதுவும் பேச முடியவில்லை. அதிர்ச்சியே உருவாய் அவர் நின்றிருக்க, ஆதி தன் தாயிடம், "ப்ளீஸ்... நான் கேட்கிற கேள்விக்கு இனிமேயாச்சும் பதில் சொல்லுங்க" என்றவள் கெஞ்சலாய் கேட்க, "முடியாது ஆதி... என்கிட்ட இருந்து உனக்கு எந்தப் பதிலும் கிடைக்காது... இந்த விஷயத்தைப் பத்தி இனிமே பேசாதே" என்றவர் முடிவாய் சொல்லிவிட்டு தன் அறை நோக்கிச் செல்லப் பார்த்தார். அவள் தன் அம்மாவின் காதில் விழும்படியாக, "உங்களுக்கு இரண்டு நாள் டைம் தர்றேன்... எனக்குப் பதில் கிடைக்கணும்... இல்லன்னா அந்தப் பதிலைத் தேடி நான் ஆதித்தபுரத்திற்கு போக வேண்டியிருக்கும்... நீங்க சொல்றீங்களா இல்ல நானா தெரிஞ்சிக்கட்டுமான்னு முடிவு பண்ணுங்க" என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டு அவள் தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்தாள். செல்லம்மா தலையில் கை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, அவருக்கு அந்த நொடி பூலோகமே வேகமாய் சுழல்வது போல் தோன்றியது. செல்லம்மா ஆதியின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து பலமுறை பெருமிதப்பட்டிருந்தாலும் இம்முறை அது அவருக்குப் பயத்தைத் தோற்றுவித்தது. அது ஆதிக்கே ஆபத்தாய் முடிந்துவிடுமோ என்ற எண்ணமே அவரை கலங்கடித்திட, ஆதித்தபுரத்திற்கு மட்டும் ஆதி சென்றால் அது அவள் நிம்மதியை மொத்தமாய் குலைத்துவிடும் என்று எண்ணிக் கொண்டார். இந்தச் சிந்தனையில் அஞ்சிக் கிடந்த செல்லம்மாவிற்கு அப்போது தன் தோழியின் நினைவு வந்தது. அன்று பரமுவிற்கு மட்டும் அப்படி நேராமல் இருந்திருந்தால்... அந்தச் சம்பவத்தை இன்று எண்ணும் போதும் அவர் உடலெல்லாம் நடுங்கி, இதயம் தன் துடிப்பை நிறுத்திவிடும் போலிருந்தது.

Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா