மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumMembersActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-2Post ReplyPost Reply: Oodal-2 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on January 20, 2020, 10:32 PM</div><p style="text-align: center;">2</p> கெளதம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. ஆனால் அவராகவா அப்படிப் பேசினார். இல்லை! அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் அழுகை வரும். பிறகு இரவு முழுக்க உறக்கமின்றி அழுதுக் கொண்டிருக்க நேரிடும். கெளதமும் வேறு இரவு வீட்டுக்கு வரமாட்டார். வேண்டாம்! அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டி நேற்று படித்துக் கொண்டிருந்த நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன். படிக்கப் படிக்க நாவல் ஒன்றும் அத்தனை சுவாரசியமாக இல்லைதான். ஏதோ ஈழத்து மக்களின் அவலநிலையைப் பற்றி ரொம்பவும் ஆழமாக சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர். அதற்கு மேலாக அந்த நாவலை என்னால் படிக்க முடியவில்லை. இப்போதைக்குப் படிக்காமல் கையிலிருக்கும் புத்தகம் இது ஒன்றுதான் என்று அதனை எடுத்து படித்தேன். இது இன்னும் என் மனநிலையை கெடுத்துவிட்டது. இனிமேல் இந்த மாதிரியான நாவல்களை எடுத்துவரவே கூடாது. ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் இதை போன்ற சமூக நாவல்களை வேறு படித்து இன்னும் வேதனைப்படுவானேன். சமூகப் பிரச்னைகளையும் அவலங்களையும் பற்றி நான் படிப்பதன் மூலமாக இந்த நாட்டில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துவிட போகிறதா என்ன? நிச்சயம் கிடையாது. அதுதான் தொலைகாட்சியில் ஒன்றுக்குப் பத்து செய்தி சேனல்கள் வந்துவிட்டதே. இதைப் போன்ற சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கவும் கூடிக் கூடிப் பேசவும். இதைப் பற்றிய விஷயங்களைக் கதைகளில் எழுதி அந்த நாவலாசிரியர் அப்படி என்ன சாதிக்கப் போகிறாரோ? படிப்பதே மனஅமைதிக்காக. அதையும் இதைப் போன்ற நாவல்கள் கெடுத்துக் குட்டி சுவராக்கிவிடுகின்றன. எனக்கு தொலைகாட்சிப் பாரப்பது அவ்வளவாக உவப்பில்லாத ஒன்று. ஆதலால் நான் ரொம்பவும் அரிதாகவே தொலைக்காட்சிப் பார்ப்பேன். நாவல்கள் படிப்பதுதான் என் பொழுதுபோக்கு. பத்தாம் வகுப்பு விடுமுறை நாட்களில் தொடங்கிய நாவல்கள் படிக்கும் பழக்கம் எனக்கு இன்று வரை தொடர்ந்துக் கொண்டிருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் அம்மா சரிகா. அம்மாவுக்கு தமிழ் நாவல்கள் படிக்கும் பழக்கம் ரொம்பவே அதிகம். எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பார். அப்பா கன்னியப்பன் ரயில்வண்டி ஓட்டுனர். அவரை வீட்டில் பார்ப்பதே அரிது. அம்மாவின் பொழுதுபோக்கு பெரும்பாலும் நாவல்கள்தான். நான் வீட்டில் ஒரே மகள். ஆனால் நான் பிறப்பதற்கு முன்பாக ஒரு மகன் இருந்தாராம். எனக்கு அண்ணன். அவர் என் சிறுவயதிலேயே மூளை காய்ச்சல் வந்து இறந்துவிட்டார் என்று அம்மா வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். அதுவும் கூட என் துரதிஷ்டம்தான். வீட்டில் ஒரே மகளாக இருப்பது ரொம்பவும் கஷ்டம். சிறு வயது வரை அதிகம் அக்கம்பக்கங்களில் விளையாடுவேன். ஆனால் ஒரு வயதுக்கு மேல் அப்படி விளையாட முடியாமல் போனது பெண்ணாகப் பிறந்த என் துரதிஷ்டம்! அதற்கு பின்புதான் அம்மாவின் புத்தக அலமாரியை தஞ்சம் புகுந்தேன். நிறைய நிறைய நாவல்களை வாங்கி வைத்திருந்தார். ராணி முத்து போன்ற நிறைய சிறிய பாக்கெட் நாவல்கள் குவிந்து கிடந்தன. நான் எந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று பெரும்பாலும் அம்மாதான் எனக்கு எடுத்து தருவார். படிக்க ஆரம்பித்த பின் என்னையும் வெகுவாகக் கதைப் படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவு பகல் பாராமல் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும். அந்தக் கதையின் சுவாரசியங்களில் தொலைந்து போவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கொஞ்சம் நாட்கள் கழித்து நானே அம்மாவின் புத்தக அலமாரியிலிருந்து எடுத்து படித்தேன். நான் அப்படி எடுத்துப் படித்த நாவலில் ஒன்று எனக்கு உண்மையிலேயே புதுவித அனுபவத்தைப் புகுத்தியது. அந்த நாயகன் முதலில் நாயகியிடம் காட்டிய பழிவுணர்ச்சியும் பின் அவன் அவளிடம் காட்டும் அளவு கடந்த காதலையும் விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. அந்தளவு அந்தக் கதை என்னைப் பாதித்தது. ஆனால் திருமணமான பின்புதான் அதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லை. வெறும் கற்பனையென்று உரைத்தது. அந்தப் புத்தகத்தின் மீது எனக்கிருந்த தாக்கம் இன்றுவரை கூட குறையவில்லை. இப்போது கூட மனம் சஞ்சலப்படும் போது இந்த மாதிரியான கதைகளைத் தேடிப் படிப்பது எனக்கு வழக்கமாகி போனது. ஏன்? அதுவே ஒரு போதையாக மாறி போனது என்று சொல்லலாம். இன்று வரை அந்தக் கதையை என்னால் மறக்கவே முடியவில்லை. அன்று நான் என் அம்மாவிடம் வாங்கிய அடியையும்தான். அந்த நாவலை என் கைகளில் பார்த்தப் பின் அம்மா என்னை நாவல்கள் படிக்கவே கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். ‘என் படிப்புக் கேட்டு போய்விடுமாம்’ உண்மையில் அதுதான் காரணமா? அம்மா அதன் பின் அவருடைய புத்தக அலமாரியை பரண் மீது மாற்றிவிட்டார். நான் படித்துவிட கூடாதென்ற ஒரே காரணத்திற்காக! ஒரு வேளை அப்படி அவர் ஒளித்து வைக்காமல் இருந்திருந்தால் கூட எனக்கு நாவல் படிக்கும் பழக்கம் இந்தளவு ஒரு போதையாக மாறியிருக்காது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் போது அதன் மீது ஏற்படும் ஈர்ப்பு பன்மடங்காகப் பெருகிவிடுகிறது. படிக்க வேண்டுமென்ற ஆவலை அதிகமாகத் தூண்டியது. அந்தப் பழக்கம் என்னை அத்தனை சீக்கிரத்தில் விட்டுவிடுவதாக இல்லை. நானும் அதனை விடுவதாக இல்லை. படிப்பதற்கான வேறு ஒரு உபாயத்தைத் தேடத் துவங்கினேன், அம்மாவுக்குத் தெரியாமல்! அப்போதுதான் பள்ளிக்கு அருகாமையிலிருந்த அரசு நூலகம் என் கண்ணில்ப்பட்டது. நான் தொடர்ந்துப் படிக்க எனக்கு வழிவகைச் செய்தது அந்த நூலகம்தான். சீக்கிரத்திலேயே அங்கிருந்த லைப்ரேரியன் அக்கா எனக்கு ரொம்பவும் பழக்கமாகிவிட்டார். எனக்கு நிறைய புதுப்புது நாவல்களையும் எழுத்துக்களையும் அவர்தான் அறிமுகம் செய்துவைத்தார். அம்மாவுக்கு தெரியாமல் என் பள்ளி பாடப்புத்தகத்தில் உள்ளே வைத்து படித்து கொள்வேன். சில நேரங்களில் பள்ளியில் ஆசிரியர் வராத போது தனியாக ஓரமாக அமர்ந்துப் படிப்பேன். என் தோழிகள் எல்லாம் நான் படித்து சொல்லும் கதைகளை ஆர்வமாக கேட்பார்கள். படித்து முடித்துவிட்டு எல்லோரும் அந்தக் கதையின் நாயகனைப் பற்றித்தான் பேசுவார்கள். அப்படியொருவன் நம் வாழ்வில் வந்தால் எப்படி இருக்கும். அது ஒரு அலாதியான சந்தோஷம்தான் எங்களுக்கு. ஆனால் என் வகுப்பிலிருந்த வளர்மதி என்னவோ நான் தேச துரோகம் செய்வது போல என்னிடம் சண்டைக்கு வருவாள். அவ்வப்போது நான் இந்தமாதிரி கதைகளை வகுப்பில் படிப்பது குறித்து ஆசிரியரிடம் சொல்லிவிடுவதாக மிரட்ட செய்வாள். அவள் பேச்சையெல்லாம் நான் மதிக்கவே மாட்டேன். கதைப் படிப்பது என்ன அத்தனைப் பெரிய குற்றமா? எனக்கு ஒன்றும் அப்படி தோன்றவில்லை. நான் என் படிப்பிலும் என்றும் குறை வைத்ததில்லை. எப்போதும் போல நான் பத்தாவது ரேங்குள்ளாக வந்துவிடுவேன். பின்னர் அது எப்படித் தவறாகும். அவள் சுத்தப் பைத்தியம். இந்த மாதிரி காதல் கதைகளைப் படிப்பது நல்லதில்லை என்று பினாத்தி கொண்டே இருப்பாள். அவள் சொல்வதை யார் காதில் வாங்குவார்கள். அவள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதால் என்ன அவள் தலையில் கொம்பு முளைத்திருக்கிறதா? அவள் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டுமா என்ன? அவள் நன்றாக படித்தாலும் வகுப்பிலுள்ள பெண்கள் எல்லோரும் பெரும்பாலும் என் தோழிகள் என்பதால் அவளுக்கு அத்தனைக் கடுப்பு! பொறாமையும் கூட. அதனால்தான் அவள் என்னிடம் தேவையில்லாமல் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பாள். ஆமாம்! திடீரென்று எனக்கு ஏன் வளர் நினைவு வந்தது? ‘எல்லாம் இந்தப் புக்கால… சை! சரியான மொக்கை… கதைப் புக்ல யாரு இவங்களைக் கருத்தெல்லாம் சொல்ல சொல்றாங்க… யார் கேட்டா’ அந்த நாவலை ஓரமாக வைத்துவிட்டுத் தொலைகாட்சியை இயக்கினேன். ஹ்ம்ம்… ஏதோ உருப்படாத ரியால்டி ஷோ ஓடிக் கொண்டிருந்தது. வேறு வேலையில்லை. இதையெல்லாம் யார் பார்ப்பது? வீட்டிற்குள் அடைந்து கிடப்பது என்னவோ எனக்கு மூச்சு முட்டியது போன்று தோன்றியது. வெளியே போகலாமா வேண்டாமா என்று சில நிமிடங்கள் என் மனம் பட்டிமன்றமே நடத்தி முடித்துவிட்டது. இறுதியாக யார் புதிதாக குடி வந்தால்தான் எனக்கென்ன என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தேன். உண்மையிலேயே யார் குடி வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும் இருந்தது. இப்போதுக் கதவு பூட்டியிருந்தது. ஒருவேளை சுத்தம் செய்துவிட்டு சென்று விட்டார்களோ?! நாளை வருவார்களாக இருக்கும். ஆமாம் யாராக இருக்கும்? தேவையில்லாத யோசனைதான் என்றாலும் என் மனம் ஆர்வமாக அந்தப் பக்கத்து போர்ஷனில் குடிவருபவர்கள் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. கீழே எட்டிப் பார்த்தேன். வீட்டின் உரிமையாளர் யாருடனோ அளவளாவிக் கொண்டிருந்தார். ஒருவேளை அவர்கள்தான் இந்த வீட்டிற்கு குடி வர போகிறவர்களோ?! இன்னும் கொஞ்சம் கீழே எட்டிப் பார்த்தேன். முகம் தெரியவில்லை. வீட்டு ஒனரின் முகம்தான் தெள்ளதெளிவாகத் தெரிந்தது. அவர் பெயர் கனகவேல். மனுஷனுக்கு ஒரு அறுபது வயதிருக்கும் நல்ல திடகாத்திரமான தேக அமைப்பு. நல்ல உயரம் வேறு. அவரின் வழுக்கை தலையும் தொந்தியும்தான் அவர் வயதை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது. வீடு வாடகைக்குக் கேட்டு வரும்போது நல்லவிதமாகத்தான் பேசுவார். ஓரளவு நல்லவர்தான். ஆனால் ரொம்ப நல்லவர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மாதத்திற்கு ஒரு தடவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி வாடகையை ஏற்றி விடுவார். அதனால்தான் பக்கத்து போர்ஷனில் யாரும் குடி வருவதில்லை. அப்படியே வந்தாலும் இவர் வாடகை ஏற்றுவதைப் பார்த்து மிரண்டு, விரைவாகவே வீட்டை காலி செய்து ஓடிவிடுவார்கள். வீட்டின் கீழே இருக்கும் மற்றொரு போர்ஷனுக்கும் அதே நிலைமைதான். ஆனால் சமீபமாக அவரின் மூத்த மகளே அங்கே குடிவந்துவிட்டதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இங்கே நானும் கௌதமும் மட்டும்தான் இளிச்சவாய். அதுவும் கெளதம் அவர் எவ்வளவு வாடகை ஏற்றினாலும் ஒன்றும் பேசாமல் கொடுத்துவிடுவான். அவருக்கு என்ன? வேலை ஒன்றுதான் வாழ்க்கை. சம்பாதிக்க தெரியும். ஆனால் சமாபாதிக்கும் பணத்தை எல்லாம் சேமித்து வைக்கும் எண்ணமே இல்லை. அவர் அம்மா அல்லது சகோதிரிகள் என்று யார் கேட்டாலும் தூக்கித் தாரளமாகக் கொடுத்துவிடுவான். எல்லோருக்கும் ஒரு இளக்காரம். இவர்களுக்கு என்ன பிள்ளையா குட்டியா? அப்படியென்ன செலவு வந்துவிட போகிறதென்று. எங்கு சுற்றினாலும் இந்த விஷயம்தான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது. யார் எங்கே குடி வந்தால் நமக்கென்ன? சலிப்போடு மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டேன். இரவு என்ன சமைப்பது? எப்போதும் போல் உப்புமாதான். அவர் இரவு வீட்டுக்கு வராமல் இருக்கும் சமயங்களில் அதுதான் எனக்கு உணவு. சுலமான வேலையில்லையா? அதுவுமில்லாமல் ருசித்து ரசித்து சாப்பிடும் மனநிலையில் நான் இல்லை. அந்த உப்புமாவைக் கிண்ட எவ்வளவு நேரம் ஆகிவிட போகிறது. பிறகு சமைத்து கொள்ளலாம். பேசாமல் சற்று முன்பு படித்துக் கொண்டிருந்த நாவலை நூலகத்தில் கொடுத்து மாற்றிவிட்டு வந்தாலென்ன என்றுத் தோன்றியது. “அது முடியாதே இன்றைக்கு சனிக்கிழமை. நூலகம் அரைநாள்தான் இயங்கும். உஹும். அந்த யோசனை வீண். பேசாமல் என்னுடைய புத்தக அலமாரியைக் குடைந்தால்வேறு ஏதாவது நல்ல நாவல் கிடைக்கும். படுக்கையறையில் ஒரு சிறியளவிலான கப்போர்ட்தான் என்றாலும் உள்ளே நிறைய தமிழ் குடும்ப நாவல்கள் நிரம்பியிருந்தன. எல்லாமே படித்துவிட்டதுதான் என்றாலும் திரும்பிப் படித்துப் பார்ப்பதுப் போல ஏதாவது தேறுகிறதா என்றுத் தேடிப் பார்ப்போம். ஒரு நாவலை எடுத்து புரட்டினேன். அதற்குள் இருந்து ஏதோ ஒரு காகிதம் தவறி விழுந்தது. என்ன அது? எடுத்து படித்தேன். மூச்சே நின்று போனது. ‘எத்தனை எத்தனையோ கிழிக்கப்பட்ட காகிதங்களுக்குள் இந்த ஒன்றுக்கு மட்டுமே உன் விரல் தீண்டும் பாக்கியம் கிடைத்தது… என்று அந்த பாக்கியம் எனக்கு கிடைக்குமோ…’ ஆழ்துளை கிணறு போல் தோண்டி ஆழத்தில் புதைத்து வைத்திருந்த பழைய நினைவுகள் ஒரு நொடியில் மேலெழும்பி வந்தது. அந்தத் தாளினைப் பிடிக்க சக்தியற்று என் கைகள் வெடுவெடுத்து நடுங்கின. “ஒன்னு விடாம எல்லாத்தையும் அன்னைக்கே நெருப்பில போட்டுட்டேன்தானே… இது மட்டும் எப்படி… ஐயோ!” தலையடித்துக் கொண்டேன். கெளதமுடன் நிச்சயம் முடிந்த மறுநாளே அவன் தந்த வாழ்த்து அட்டைகளும் கடிதங்களையும் எரித்துவிட்டேன்தானே. காகிதங்களைதான் எரிக்க முடியும். பழைய நினைவுகளை அப்படி ஒரு நாளும் அழித்துவிட முடியாது. அது எங்காவது ஒரு மூலையில் நம் மனதில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கும். வேகமாக என் கைகளிலிருந்த அந்த கடிதத்தைச் சுக்குநூறாக கிழித்து ஜன்னல் வழியாகத் தூக்கியெறிந்துவிட்டேன். வீசிய காற்று அந்த காகிதத்தைக் கொண்டுச் சென்றுவிட்டது. ஆனால் மனதிலடித்துக் கொண்டிருக்கும் புயல் பழைய நினைவுகளை மீண்டும் கிளறி வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. யோசிக்காதே யோசிக்காதே என்று சொன்னாலும் அப்படி என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அவன் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் ஒவ்வொன்றும் புதுப்புது விதமாக காதல் மொழி பேசி கொண்டிருந்தன. ஒரு அட்டை விடாமல் மறவாமல் ஒரு கவிதை இருக்கும். ‘நீயில்லாத நான் நிலவில்லாத பூமியடி’ இத்தனை வருடங்கள் கடந்தும் அந்த வரிகள் யாவும் என் நினைவில் தங்கியிருப்பது ஆச்சரியம்தான். ‘பேசும் மொழிகள் எத்தனையோ இருந்த போதும் காதலை சொல்ல ஒரு மொழி கூட கைகொடுப்பதில்லை உனக்காக ஊமையாக ஏங்கும் ஒரு நெஞ்சம்’ அவன் யாரிடமோ முகம் தெரியாமல் கொடுத்தனுப்பிய கடிதம். ஆனாலும் எனக்குத் தெரியும் அது அவன்தான் என்று. பேருந்து நிறுத்தத்தில் நின்று இருவரும் மாறி மாறி பார்வையாலேயே காதல் மொழி பேசிக் கொண்ட தருணங்கள் எல்லாம் இப்போது நினைப்பிற்கு வந்துத் தொலைவானேன். குளிர் ஜுரம் வந்துவிட்டது போல தேகமெல்லாம் உஷ்ணமேறிய அதேநேரம் உடலெல்லாம் நடுங்கியது. நான் திரும்பவும் புரட்டிப் பார்க்கவே கூடாது என்று யோசிக்கும் நினைவுகள். எல்லாமே அவன் எனக்காக எழுதியது. எனக்கே எனக்காக எழுதியது. முதல் முறை இவற்றையெல்லாம் படிக்கும் போது எனக்கு கடவுள் நிலை தொட்டதுப் போன்ற கர்வம். இப்போது யோசித்துப் பார்த்தால் அதெல்லாம் ஏதோ சிறுபிள்ளைத்தனமாகவும் அற்பமாகவும் தோன்றியது. கண்களின் கண்ணீர் பெருகி ஓடியது. இது காதலில்லை வெறும் ஈர்ப்புதான் என்று அப்போதே இந்த மூளைக்கு எட்டாமல் போனதே. என் மீது எனக்கே கோபமாக வந்தது. உணர்ச்சி வேகத்தில் எடுத்த சில முடிவுகள்தான் இன்றும் நம் வேதனைக்கு முக்கிய காரணமாகிவிடுகிறது. வாழ்கையில் எல்லாவற்றிற்கும் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டேன். கொஞ்சம் நிதானித்து யோசித்திருக்கலாம். முடிந்து போன விஷயம்… அதைப் பற்றியெல்லாம் யோசிக்க கூட வேண்டாம். ‘முதல எல்லா புக்கையும் செக் பண்ணுனும்… இந்த மாதிரி வேறேதாவது புக்ல ஏதாச்சும் இருந்து’ அனைத்து புத்தகங்களையும் கலைத்து ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்துத் தேடினேன். “ஷப்பா… வேற எதுலயும் எதுவும் இல்லை’ வெளியே காற்றோட்டமாக பால்கனியில் நின்றால் கொஞ்சம் மனதிற்கு அமைதியாக இருக்கும் என்று தோன்றியது. அவசர அவசரமாகத் தேடுகிறேன் பேர்வழி என்று கீழே தள்ளிய புத்தகங்கள் அனைத்தையும் அலமாரியினுள்ளே திணித்து மூடிவிட்டு வெளியே வந்துவிட்டேன். அப்பாடா! இப்போதுதான் கொஞ்சம் பரவாயில்லையாகத் தோன்றியது. நான் கொஞ்சம் நிம்மதியாக இருப்பது கூட யாருக்கோப் பொறுக்கவில்லை. எங்கோ டங் டங் என்று அடிப்பதுப் போன்ற சத்தம் கேட்டது. அந்த சத்தம் என் மண்டைக்குள் தெறித்தது. அந்தச் சத்தம் என் வீட்டின் பக்கத்து போர்ஷனிலிருந்துதான் கேட்டது. சத்தமில்லாமல் போய் யாரென்று எட்டிப் பார்த்தேன். ‘ப்ச்… வீட்டு ஒனர்தான்’ அந்த வீட்டில் யாரோ ப்ளம்பிங் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். இவர் மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘எங்க வீட்டில கூட பைப் ரிப்பேர்னு எவ்வளவு நாளா சொல்லிட்டு இருந்தேன்… ஆனா கண்டுக்கவே இல்லை… அதென்ன புதுசா குடிவரவங்களுக்கு மட்டும் எல்லா செஞ்சிக் கொடுக்கிறது… இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர்… இன்னைக்கு இதை விடுறதில்லை’ கடுப்பின் உச்சத்திற்கே சென்றேன். அப்போதைக்கு என் கோபமெல்லாம் வீட்டு ஒனரின் மீது திரும்பியது. அவர் என் எதிரேதான் நின்றுக் கொண்டிருந்தார். என் மனநிலைப் புரியாமல் என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தார். ‘வர கோபத்துக்கு’ என்று நான் அவரிடம் பேசுவதற்கு முன்னதாக, “இவர்தாம்மா இங்கே புதுசா குடி வரபோற தம்பி… நமக்கு ரொம்ப தெரிஞ்சவரு” என்று நேரம் காலம் தெரியாமல் புதிதாகக் குடிவருபவர்களிடம் அறிமுகம் வேறு. அவர் கைக் காட்டிய இடத்தில் திரும்பிப் பார்த்து வைத்தேன். ஃபோனும் கையுமாக நெடுநெடுவென உயரமாக ஒரு ஆடவன் வந்து நின்றான். ஒரே ஒரு நொடிதான். அதற்கு மேலாக அந்த முகத்தைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை. அனிச்சையாக என் தலைத் தாழ்ந்துக் கொண்டது. நான் ஜன்னல் வழியாக வீசியெறிந்த காகிதம் மீண்டும் என் முகத்தில் வந்து மோதியதுப் போன்றிருந்தது. </blockquote><br> Cancel “தூரமில்லை விடியல்” என்னுடைய புத்தம் புது தொடர் துவங்கப்பட்டுள்ளது. வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா