You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 10

Quote

10

கடையிலிருந்து திரும்பியதும் யாத்ரா அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள, “கதவை எதுக்குடி மூடுற?” என்று பிரியா அதட்டினாள்.

“ம்மா எனக்கு டயர்டா இருக்கு, கொஞ்ச நேரம் விடு,” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

“பார்த்தீங்க இல்ல? இப்படித்தான் எந்த வேலையும் செய்ய மாட்டேங்குறா,” என்று புலம்பிக் கொண்டே இந்திரன் பைகளை எல்லாம் தூக்கி வந்து வைத்தான்.

“விடுடா, டயர்டா இருக்காளாம்,” என்று குமார் சொல்ல, “எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம்தான் ப்பா” என்று சலித்துக் கொண்டான் இந்திரன்.

“கடையிலேயே அவ ஒரு மாதிரிதான்டா இருந்தா... என்னனு தெரியல,” என்றார் பிரியா.

ஆனால் யாருக்கும் யாத்ராவின் அப்போதைய நிலைமை புரிய வாய்ப்பில்லை. அவள் ஒரு காதல் போபியாவில் மாட்டிக் கொண்டிருந்தாள். அவன் தொடுகை மட்டும் இல்லை; அவன் பார்வை கூட அவளைப் பாடாய்ப்படுத்தியது.

கடையில் துணி எடுத்து முடித்துக் கிளம்ப, அவர்கள் காரில் இடமில்லை. சௌந்தர்யா அவளை வலுக்கட்டாயமாக கார்த்திக்கின் காரில் ஏற்றிவிட்டாள்.

அவன் சகோதரிகளுக்கு இடையில் உட்கார்ந்தவளுக்கு அப்போதிருந்த பெரிய சங்கடம் கார்த்திக்தான். அவன்தான் காரை ஓட்டினான். ஆனால் அதை மட்டுமா செய்தான்? ஒருபக்கம் ரியர்வியூ மிரரில் அவளைப் பார்வையால் தீண்டிக் கொண்டே வந்தவன், மறுபக்கம் காதல் பாடலாகப் போட்டு அவள் உணர்வுகளைச் சீண்டிக் கொண்டே வந்தான்.

‘உன்னதான பாத்துக்க

நான் இங்க காத்திருக்கேன்

என் நெஞ்சி ஏங்கிருக்க

உன்ன பாக்க வானத்த தாண்டியும் வந்து

என் காதல காமிப்பேன் நா நா நா’

அவளுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. மனம் ரசிக்காமல் ரசித்தது. கண்ணாடியில் முகம் தெரியாமல் தலை திருப்பினாள்; முகத்தை மறைத்தாள்.

இப்படியாக அவர்கள் இருவர் மட்டும் ஒரு காதல் கண்ணாமூச்சியை யாருக்கும் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் சத்தமில்லாமல் அவளுக்குள் கலந்து கொண்டிருந்தான். ஹார்மோன்களுக்குள் கலகம் செய்து கொண்டிருந்தான்.

அவனை நினைத்தபடி அப்படியே படுக்கையில் சுருண்டு கொண்டவளுக்குச் சுரம் அடிப்பது போல உடல் முழுவதும் உஷ்ணமாகத் தகித்தது.

எப்படி அந்தப் புதுவிதமான உணர்வைக் கையாள்வது என்று சத்தியமாக புரியவில்லை. அந்த சமயத்தில், இந்திரன் கதவைப் படபடவென்று தட்டினான். “ஏய் யாத்ரா, வெளியே வா!”

“இப்போ எதுக்கு என்னைக் கூப்பிடுற?”

“வான்னு சொன்னேன்!” அவன் கடுப்பாகக் கத்த, அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“என்னடி இது?” என்றவன் ஒரு துணிப் பெட்டி ஒன்றை காட்ட, “என்ன?” என்று புரியாமல் பார்த்தவள், அந்த ஊதா நிற லெஹங்காவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள்.

“நீ வாங்கினியா இதை?”

“நான்...” என்றவள் திருதிருவென்று விழிக்க, “என்ன, நீ வாங்கலையா?” என்று மீண்டும் கேட்டவன், பில்லைச் சோதித்துவிட்டு, “இதுல லெஹங்கான்னு எதுவும் போட்டு இல்லையே,” என்றான்.

“ஒருவேளை அவங்க யாராச்சும் வாங்கி இருப்பாங்களோ என்னவோ, நீ கார்த்திக்கு போன் பண்ணு,” என்று குமார் சொல்ல, யாத்ரா அந்த உடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்டிப்பாக அதை கார்த்திக்தான் வாங்கி இருப்பான். ஆனால் எப்படி?

அதற்குள் இந்திரன் கார்த்திக்கிற்கு அழைத்திருந்தான், அவன் இந்த லெஹங்காவைப் பற்றி விசாரித்தான். எதிர்புறத்தில் அவன் என்ன பேசினானோ?

 “உங்களுக்கு எதுக்கு செலவு?” என்று கேட்ட இந்திரன், சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“என்னடா சொன்னாரு?”

“இந்த டிரிஸ் யாத்ராவுக்கு நல்லா இருக்கும்னு சௌந்தர்யாதான் அவங்க அண்ணன்கிட்ட சொல்லி வாங்கச் சொன்னாளாம்,” என, “இது விலை ஜாஸ்தியா இருக்குமேடா?” என்று குமார் கேட்க, “நானும் சொன்னேன்... ஆனா அவரு என் அக்கா தங்கச்சிங்களுக்கு வாங்குற மாதிரிதான்னு சொல்லிட்டாரு,” என்றவன் அந்த அட்டைப் பெட்டியை யாத்ராவிடம் நீட்டினான்.

“இது உனக்குதானாம்,” என்று சொல்ல, பிரியாவும் அந்த உடையைத் தொட்டுப் பார்த்து, “கலர் ரொம்ப நல்லா இருக்கு, இவளுக்குப் போட்டா அழகா இருக்கும்... ஆனா சைஸ் கரெக்டா இருக்குமா? ஒரு தடவை போட்டுப் பாரு,” என்றார்.

அவள் மறுபேச்சில்லாமல் அந்த உடையை போட்டுப் பார்த்தாள். உண்மையில் அது அவளுக்காகவே தைத்தது போலிருந்தது. அவள் வீட்டினர் எல்லோருமே அதனை வியந்து பாராட்டினர்.

அதன்பின் மீண்டும் கண்ணாடியின் முன்பாக வந்து நின்றவளுக்கு, அதைக் கார்த்திக்கிடம் காட்ட வேண்டுமென்று தோன்றியது. செல்பேசி எடுத்து கண்ணாடி முன்பாக முகத்தை மட்டும் மறைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

இந்திரனுக்குத் தெரியாமல் கார்த்திக்கின் எண்ணை அதிலிருந்து எடுத்தவள், அவனுக்குத் தன் செல்பேசி மூலமாக அந்தப் படத்தை அனுப்பினாள். ஆனால் வெகுநேரமாகியும் அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. கடுப்பில் செல்பேசியைத் தூக்கிப் போட்டபோது, அவள் அலைபேசி ரீங்காரமிட்டது.

அவசரமாக அதனை எடுத்து காதில் வைக்கவும், “போட்டோவை முழுசா அனுப்பினா என்ன?” என்றான்.

அவன் குரல் கேட்டதும் அப்படியொரு பரவசம் அவளுக்கு. மெல்லிய புன்னகையுடன், “இப்போதைக்கு அவ்வளவுதான் அனுப்ப முடியும்,” என்றாள்.

“உனக்காக எவ்வளவு ஆசையா வாங்கினேன் தெரியுமா?” அவன் குழைய, “நான் கேட்டேனா உங்ககிட்ட?” என்று செல்லமாகக் கோபித்தாள்.

“நீ அந்த டிரஸ் பார்த்த விதத்துல உனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு தோணுச்சு, அதான் வாங்கினேன்.”

“ஆனா அந்த டிரஸ்தான் சேல்ஸ் இல்லன்னு சொன்னாங்களே?”

“சொன்னா விட்டுடுவேனா நான்? அந்த கடை ஓனர்கிட்ட பேசி வாங்கிட்டேன் இல்ல!”

“எதுக்கு கார்த்திக்?” என்றவள் தயக்கமாக கேட்கவும், “உனக்காகத்தான் யாத்ரா,” என்றான். அவன் அப்படிச் சொன்னதும் மனமெல்லாம் ஒரு பூரிப்பு. சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “தேங்க்ஸ்,” என்றாள்.

“எனக்கு உன் தேங்க்ஸ் எல்லாம் வேணாம்.”

“வேற என்ன வேணும்?”

“அடிக்கடி இந்த மாதிரி நீ என்கிட்ட பேசணும்.”

“நான் என்ட்ரன்ஸ்க்கு படிக்கணும்.”

“அப்படியே காலையில இருந்து நைட்டு வரைக்கும் என்ட்ரன்ஸ் படிக்குற ஆளா நீ?”

“நான் நிறைய ட்ரீம்ஸ் வைச்சு இருக்கேன்.”

“ஒரு ஓரமா என்னையும் வைச்சுக்கோ,” என்றதும், அவள் உதடுகளில் உதிர்ந்த புன்னகையை அடக்கிக் கொண்டவள், “என்ன பேசுறீங்க நீங்க?” என்று பொய்க் கோபம் காட்டினாள்.

“என்னையும் உன் ட்ரீம்ஸ்ல வைச்சுக்கோன்னுதான் சொன்னேன்... என்ன தப்பா?” என்று இழுத்தான்.

“வீட்டுல சொல்லாம நான் உங்ககிட்ட இப்படி பேசுறதே ஒரு மாதிரி இருக்கு.”

“நீதான் தைரியமான ஆளாச்சே, வீட்டுல சொல்லு.” என்றவன் கேட்ட விதத்தில் அவள் குரல் உள்ளே போய்விட்டது.

“இப்போ வேணாம்... அண்ணன் கல்யாணம் முடியட்டும்.”

“சரி முடியட்டும்... அதுக்குள்ள நீயும் உன் என்ட்ரன்ஸ் நல்லபடியா எழுதி முடி, அப்புறமா பேசிக்கலாம்,” என்றான்.

“அப்போ நான் போனை வைச்சிடவா?” என, “இப்பதானே பேச ஆரம்பிச்சோம்,” என்று குரல் மிருதுவாக ஒலிக்க, அவள் மௌனமாகிவிட்டாள்.

அழைப்பைத் துண்டிக்க மனம் வரவில்லை. அவன் பார்வை பேச்சு எல்லாமே பிடித்திருந்தது. இப்படியாக இவர்களது உரையாடல் தினமும் அரை மணி, ஒரு மணிநேரம் என்று தொடர்ந்தது. இந்த ரகசிய காதல் உணர்வை இருவருமே மனதிற்குள் ரசித்து ஆராதித்தினர்.

அப்படியாக ஒரு நாள், அமரேஷுடன் அவன் ஒரு விளம்பர படப்பிடிப்பில் இருக்கும் போது யாத்ரா அழைத்தாள். ‘நான் பிஸியா இருக்கேன் அப்புறம் பேசறேன்’ என்று குறுந்தகவல் போட்டான்.

பதிலுக்கு அவளும் ஒரு குறுந்தகவலை போட்டாள், ‘பிரண்டு கூட படத்துக்கு போலாம்னு டிக்கெட் எடுத்தேன்... ஆனா அவளால வர முடியல... அதான் நீங்க வரீங்களா’

அவன் உடனடியாக அமரேஷை விட்டு தள்ளி வந்து அவளுக்கு அழைத்தான்.

 “எந்த தியேட்டர்? இன்னும் எவ்வளவு நேரத்துல ஷோ?” என்று கார்த்திக் குரலைத் தாழ்த்திக் கேட்டான்.

“சத்யம்... இன்னும் ஒரு மணி நேரத்துல ஷோ.,” என்று அவள் சொல்ல, “நீ கிளம்பு, நான் அங்க இருப்பேன்!” என்று போனை வைத்தான்.

அமரேஷ் கண்ணாடியின் வழியாகக் கார்த்திக்கைப் பேசுவதை பார்த்து, “என்ன கார்த்திக் ஏதாவது பிரச்னையா” என்று கேட்க,

“அது வீட்டுல கல்யாண வேலை? முடிச்சுட்டு ஈவினிங் வந்துடட்டுமா?” என்றான்.

அவனை ஏறஇறங்க பார்த்த அமரேஷ், “முன்ன மாதிரி நீ இல்ல” என்று சொல்ல,  

“இல்ல தங்கச்சி கல்யாண வேலையாலதான்... போயிட்டு வந்துடுறேன்” என்று சமாளித்து எப்படியோ அனுமதி கேட்டு கிளம்பி வந்து விட்டான்.

தியேட்டரின் மங்கலான இருளுக்குள் நுழைந்ததுமே அவன் விழிகள் யாத்ராவைத் தேட, அவள் உள்ளிருந்து கை காட்டினாள். அவளைக் கண்ட அந்த நொடியே, சாலை நெருக்கடியில் புகுந்து வந்த களைப்பு எல்லாம் காணாமல் போய் அவன் உள்ளம் உவகை கொண்டது. அதே உற்சாகத்துடன் அவள் அருகே வந்து அமர்ந்தான்.

“சாரி ரொம்ப லேட்டாகிடுச்சா?” என்று அவன் தழைந்த குரலில் கேட்க,

“ஆமா பாதி படம் முடிஞ்சிருச்சு” என்றாள் அவள் சிணுங்கலுடன்.

“நான் என்ன படம் பார்க்கவா வந்தேன்” என்றான் கார்த்திக். அவனது விழிகள் திரையைப் பார்க்காமல், ஆசையுடன் அவளையே தழுவி நின்றன.

அவன் தோளில் மென்மையாகச் சாய்ந்து கொண்டவள், “ரொம்ப பிஸியா இருக்கிறப்போ டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று தன் கருவிழிகளை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.

“ஒரு ஆட் ஷூட் போயிட்டு இருந்தது” என்றவன் விழிகளும் அவளின் அழகான கருவிழிகளுடன் கலந்தன.  

“அமரேஷ் உங்க கூட இருந்தாரா?” என்றவள், சட்டென ஆர்வ மிகுதியால் நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.

 “ஆமா.”

“எப்படி? நேர்லயும் அவர் படத்துல இருக்குற மாதிரி ஸ்மார்ட்டா இருப்பாரா கார்த்திக்?”

“இருப்பாரு,” என்றவனுக்குள் அந்த கேள்வி ஒருவித நெருடலை தந்தது.

அவன் மனநிலைப் புரியாமல், “அவர் அடுத்த படம் என்ன நடிக்கிறாரு?” என்று தொடர்ந்து அமரேஷ் பற்றி கேட்டாள்.

“இன்னும் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு.” என்ற அவனுக்கு அவளிடம் அமரேஷை பற்றி பேச சுத்தமாக விருப்பமில்லை. தன் வேலையை எல்லாம் விட்டு அவன் ஓடி வந்தது அவளுடனான அந்த முதல தனிமையான சந்திப்பை அனுபவிக்க... ஆனால் அதனை உணராத யாத்ரா, 

“உதய்குமார் படத்துல அவர் நடிச்சா செமையா இருக்கும் இல்ல?” என்று வார்த்தைக்கு வார்த்தை அவனைப் பற்றியே பேசினாள்.

அவன் பேச்சை மாற்ற எண்ணிய போதும் அவள் விடவில்லை.

“அமரேஷை நேர்ல பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஒரு தடவை கூட்டிட்டு போறீங்களா?” என,

“இப்போ அது முக்கியமா யாத்ரா? நாம இங்க படம் பார்க்க வந்திருக்கோம்,” என்றவன் குரலில் கடுமை ஏறியது.

“நீங்கதானே அன்னைக்கு சொன்னீங்க அமரேஷ் பார்க்க வைக்கிறேன்னு... இப்போ என்னாச்சு?”

“சரி பார்க்கலாம்”

“என்ன பார்க்கலாம்குறீங்க... நீங்க நினைச்சா முடியும் தானே கார்த்திக்... ப்ளீஸ் கார்த்திக்... ஒரே ஒரு செல்பி எடுத்துக்கிட்டா மட்டும் போதும்,” என்றவள் சொன்னது முன்பொரு முறை அமரேஷ் சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்தியது.

‘நான்தான் அவளைத் தொட்டேன்னு தெரிஞ்சா அவ செல்பி கேட்டிருப்பா’

அவ்வளவுதான். அவன் பொறுமை பறந்திருந்தது.

“உன்னைப் பார்க்கணும்னு வேலையையெல்லாம் விட்டுட்டு ஓடி வந்தா, அவனைப் பத்தியே பேசிட்டு இருக்க! இல்ல இதுக்குத்தான் என்னை வரச் சொன்னியா?” என்று கத்திவிட்டான்.

அதிர்ந்து போன யாத்ரா, “ச்சே... இல்ல கார்த்திக்...” என்றாள் மெதுவாக.

“ஓ, அவனைப் பார்த்துப் பேசணும்னுதான் என்கிட்ட பழகிட்டு இருக்கியோ?”

“என்ன பேசுறீங்க நீங்க?”

“நீ என்ன பேசறன்னு யோசிச்சியா முதல்ல?” என்றவன், ஆத்திரத்தில் இருக்கையை விட்டு எழுந்து நின்றான்.

“கார்த்திக், எல்லாரும் பார்க்குறாங்க,” என்று அவள் பதறினாள்.

“யாரு பார்த்தா எனக்கென்னடி? உனக்கு ஹீரோதானே வேணும்? பார்த்துக்கோ. எனக்கு ஆயிரம் வேலை இருக்கு!” என்று கத்தியவன், யாத்ராவின் பதிலுக்குக் காத்திராமல் தியேட்டர் வாசலை நோக்கி விறுவிறுவென்று நடந்தான்.

அந்த இருட்டில் தனியாக அமர்ந்திருந்த யாத்ராவின் உலகம் உறைந்து போயிருந்தது. காதல் எவ்வளவு தூரம் பரவசத்தைக் கொடுக்குமோ, அதே அளவு வலியை கொடுக்கும் என்ற கசப்பான உண்மையை உணர்ந்தவளின் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர், அவளது கன்னங்களில் மௌனமாக வழிந்தது.

You cannot copy content