You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 12

Quote

12

​மண்டபமே வண்ண விளக்குகளின் ஒளியிலும், மல்லிகைப் பூக்களின் நறுமணத்திலும் மிதந்து கொண்டிருந்தது. மேளதாளங்கள் ஒருபுறம் முழங்க, இந்திரன் - சௌந்தர்யா நிச்சயதார்த்த வைபவம் கோலாகலமாகத் தொடங்கியது. தட்டு மாற்றி முடிந்து, மணமக்களை மேடையில் அமர்த்தி நலங்கு வைக்கும் சடங்கு நடந்து கொண்டிருந்தது.

​அப்போதுதான் யாத்ரா தன் அலங்காரங்களை எல்லாம் முடித்து வெளியே வந்தாள். கார்த்திக் அவளுக்கு வாங்கிக் கொடுத்த அந்த ஊதா நிற லெஹங்கா, அவள் மேனிக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. அதில் பதிக்கப்பட்டிருந்த வெள்ளை நிறக் கற்கள், மின்விளக்குகளின் ஒளியில் வைரத் துகள்களாய் ஜொலித்தன. கூட்டத்தில் இருந்தவர்களின் பார்வைகள் அனைத்தும் அவள் புறம் ஈர்க்கப்பட்டன.

​தாமதமாகத் தயாராகி வந்ததால் எரிச்சலில் இருந்த பிரியா, “உனக்கே நிச்சயதார்த்தம் மாதிரி ரெடியாகிட்டு வந்திருக்க” என்று கடிந்து கொள்ள,

​“ம்மா, இந்த டிரஸ் எல்லாம் சும்மா அப்படியே போட்டுட்டு வர முடியாது... பார்த்து பார்த்து ஆர்னமென்ட்ஸ், இயரிங் எல்லாம் போட்டாதான் நல்லா இருக்கும்” என்ற மகளின் விளக்கத்தைக் கேட்டு கடுப்பானாலும், அவளின் அலங்காரமும் அழகும் அவரின் கோபத்தை கொஞ்சம் மட்டுப்படுத்திவிட்டது.

​‘சொன்ன மாதிரி நல்லாத்தான் டிரஸ் பண்ணி இருக்கா’ என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டார். அதேசமயம் மேடையில் அமர்ந்திருந்த இந்திரனும் தன் தங்கையின் உடையைப் பார்த்துப் வியப்பும் பெருமிதமும் கொண்டான். அருகிலிருந்த சௌந்தர்யாவிடம் மெல்ல குனிந்து, "சௌமி... தங்கச்சிக்கு நீ செலக்ட் பண்ண டிரஸ் வேற லெவல்... தேங்க்ஸ்டா!" என்றான்.

​சௌந்தர்யா ஒரு நிமிடம் திகைத்துப் போனாள். "நான் எப்போ டிரஸ் எடுத்தேன்?..." என்று அவள் சொல்லத் தொடங்க, "ஆனா கார்த்திக்தான்..." என்று சொல்ல வருவதற்குள் அவன் பார்வை மேடைக்குக் கீழே நிலைகுத்தியது.

​அங்கே யாத்ரா, கூட்டத்தில் நின்றிருந்த கார்த்திக்கைப் பார்த்து மெல்லச் சுழன்று தன் உடையைக் காட்டி, ‘நான் எப்படி இருக்கேன்?’ என்பது போலக் கண்ஜாடையாலேயே வினவினாள். அவளின் உடையலங்காரங்களை எல்லாம் மெய்மறந்து ரசித்த கார்த்திக், தன் உதடுகளைக் குவித்து ஒரு மெல்லிய முத்தத்தைச் சைகையாகப் பரிமாறினான். அந்த ரகசியப் பரிமாற்றத்தையும், அதில் வழிந்த காதலையும் கண்ட இந்திரன் அப்படியே உறைந்து போனான். அவன் மனதில் கோபமும் அதிர்ச்சியும் ஒருசேரப் பொங்கியது.

​அந்தப் பரபரப்புக்கு நடுவே, மண்டபத்தின் வாசலில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. சினிமா நட்சத்திரம் அமரேஷ் அங்கே வந்து இறங்கினான்! கார்த்திக் அவனுக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தான், ஆனால் அவன் நேரில் வருவான் என்று எதிர்பார்க்கவில்லை. ஈ மொய்ப்பது போலக் கூட்டம் அவனைச் சூழ, பாதுகாவலர்கள் அவர்களை விலக்கி தள்ளி அவனை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

​கார்த்திக், “நீங்க வருவீங்கன்னு சொல்லவே இல்லையே” என்று வியப்புற, “உன் வீட்டு ஃபங்க்ஷனுக்கு நான் வராம இருப்பேனா கார்த்திக்?” என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே அமரேஷ் மேடை ஏறினான்.

கார்த்திக் பெருமையுடன் தன் குடும்பத்தையும், இந்திரன் குடும்பத்தையும் அமரேஷுக்கு அறிமுகம் செய்தான். அவர்கள் எல்லோரிடமும் கை கொடுத்துச் சகஜமாகப் பேசினான். அதேநேரம் கார்த்திக் யாத்ராவை அறிமுகம் செய்ய அவளைத் தேடினான்.

​அவளை எங்கேயும் காணவில்லை. மறுபுறம் மண்டபத்திலிருந்து சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் முந்தியடித்து அமரேஷ் அருகே வந்து செல்பி எடுக்க முயன்றனர். கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்க, அமரேஷ் அவசரமாகக் கிளம்பத் தயாரானான். யாத்ராவைத் தேடிய கார்த்திக், அவள் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளே வர முடியாமல் தவிப்பதைக் கண்டான்.

​உடனடியாக அமரேஷைப் பாதுகாவலர் உதவியுடன் வாயிலுக்கு அழைத்து வந்தவன் காரில் ஏற்றிவிட்டு, “காரை மண்டபத்தோட பின்பக்கமா கொண்டு வாங்க அண்ணா” என்று ஓட்டுநரிடம் சொல்ல, “ஏன் கார்த்திக்?” என்று அமரேஷ் கேட்டான்.

​“ஒரு முக்கியமான ஆளை அறிமுகம் செய்யணும்... ப்ளீஸ் ஒரு டூ மினிட்ஸ்தான்” என்றான். அமரேஷும் சம்மதிக்க, கார்த்திக் உள்ளே ஓடி வந்தான். யாத்ராவின் முகத்தில் அபரிமிதமான ஏமாற்றம். “அமரேஷ் கிளம்பிட்டாரா?” என்ற அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் யாத்ராவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றான்.

​“எங்கே போறோம் கார்த்திக்?” என்று கேட்டுக் கொண்டே அவளும் அவன் பின்னோடு ஓடினாள். இந்த காட்சியைப் பார்த்த இந்திரன் கோபத்தில் பற்களைக் கடித்தான். மேடையிலிருந்து உடனடியாக அவனால் இறங்க முடியாத எரிச்சலில் இருக்க, யாத்ராவோ காரின் அருகே சென்றதும் அப்படியே பேச்சற்று நின்றுவிட்டாள்.

​அமரேஷ் தனியாக நின்றிருந்தான். அவனை அத்தனை அருகில், அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் பார்ப்போம் என்று அவள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. “இவங்கதான் யாத்ரா, என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்க போற இந்திரனோட சிஸ்டர்” என்றவன் அறிமுகம் செய்து கொண்டிருக்கும் போதே, “இருங்க இருங்க நான் சொல்றேன்” என்றவள் குழந்தைத்தனமான உற்சாகத்துடன் குதித்துக் கொண்டே, “உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்... உங்களோட பெரிய ஃபேன் நான்!" என்றாள்.

​“ஓ!” என்றவன் புன்னகையுடன் அவளுக்குக் கை குலுக்கினான். அவளின் அந்த ஆர்வத்தையும் சந்தோஷத்தையும் கார்த்திக் அமைதியாகப் பார்த்து ரசித்தான். ஆனால், அமரேஷின் பார்வையோ வேறு விதமாக ரசித்தது. அவளின் இளமை, அந்த ஊதா நிற உடையின் அழகில் ஜொலிக்கும் அவளது மேனி, அவனது கண்களைக் கட்டிப்போட்டன.

​கை குலுக்கியபோது, அவளது மென்மையான விரல்களைச் சற்றே அதிகமாக அழுத்தியவன் இதழோரம் ஒரு வக்கிரமான புன்னகை அரும்பியது.

"பார்த்தா ஃபேன் மாதிரி தெரியல... ஹீரோயின் மாதிரி தெரியுறீங்க"

"கிண்டல் பண்ணாதீங்க சார்" என்றவள் அசிட்டு சிரிப்புடன் சொல்ல அவனது பார்வை அவளது கழுத்திற்கு கீழே இறங்கி, வக்கிரமான கோணத்தில் அவளை அளவிட்டது.

கார்த்திக் செல்பேசியில் படம் எடுக்கத் தயாராக நிற்க அமரேஷ், சாதாரணமாக அவளது தோளில் கை போட்டான்.

​அவனது கை பட்டதும், யாத்ரா சற்றே திடுக்கிட்டாள். ஆனால், அது அவனது ‘ஃபேன்’ என்ற நினைப்பினால் என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். ஆனால் கார்த்திக்கின் முகம் மாறியது. அமரேஷின் அந்தச் செயல் அவனுக்கு சங்கடத்தைத் தந்தது. புகைப்படம் எடுத்து முடிந்ததும், “என் ஃபிரண்ட்ஸ் எல்லோரும் இந்த போட்டோவைப் பார்த்து பொறாமைப்படப் போறாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்க, கார்த்திக் அவசர அவசரமாக, “யாத்ரா டைமாயிடுச்சு கிளம்பணும்” என்று அந்த உரையாடலை அங்கேயே கத்தரித்துவிட முயன்றான்.

​அமரேஷ் ஒரு குரூரமான பார்வையுடன், “நிச்சயமா! இன்னொரு முறை மீட் பண்ணுவோம்” என்று கை கொடுத்துவிட்டு காரில் கிளம்பிவிட

கார்த்திக் அவள் புறம் திரும்பி, “ஹாப்பியா?” என்று கேட்டதுதான் தாமதம்.

"தேங்க்யூ கார்த்திக்... ஐ லவ் யூ சோ மச்!" என்றவள் துள்ளி குதித்துக் கொண்டே அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக்கொள்ள, "ஏய் விடுறி, யாராவது பார்க்கப் போறாங்க” என்று அவன் விலக்கப் பார்த்தும் விடாமல் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட்டே அவள் விலகினாள்.

​தங்கையைத் தேடி வந்த இந்திரனின் கண்கள் அந்த காட்சியைப் பார்த்து கோபத்தில் சிவந்திருந்தன. அதேநேரம் காரில் சென்று கொண்டிருந்த அமரேஷின் மூளை, ‘எங்கேயோ பார்த்திருக்கிறோமே இவளை’ என்று பின்னோக்கிச் சிந்தித்தது. ‘எங்கே’ என்று சிந்தித்தவனுக்கு மின்னல் வேகத்தில் அவள் ஓங்கித் தன் கன்னத்தில் அறைந்தது நினைவில் வந்து நின்றது.

​‘அதே பெண்தான் இவள்!’ என்று அவனுக்கு ஊர்ஜிதமான மறுகணம், அவள் மீதான அவனது வக்கிரம் இன்னும் அதிகமானது. மனம் அவளை அடையத் துடித்தது. ஆனால் வரப்போகும் விபரீதங்களை அறியாத கார்த்திக், யாத்ரா முத்தமிட்ட அந்த இடத்தைத் ஆசையுடன் தொட்டுப் பார்த்தான். காதலில் திளைத்தான்.

​ஒரு வழியாக நிச்சயதார்த்தம் முடிந்து உறவினர்கள் கலைந்து சென்றுவிட, வீடு அமைதிக் கோலம் பூண்டது. யாத்ரா களைப்பில் உறங்கிவிட, அவள் செல்பேசி மேஜை மேல் மின்னித் தணிந்தது.

சந்தேகத்துடன் அந்தப் போனை எடுத்து திறந்த இந்திரன், அதிலிருந்த கார்த்திக்கின் மெசேஜ்களை எல்லாம் படித்ததும் வெறுப்பானான்.

​மறுநாள் காலையே கார்த்திக்கைத் தனியாகப் பார்க்க அழைத்தான். அந்த அதிகாலைப் பொழுதில், கார் ஒரு வெறிச்சோடிய சாலையோரம் நின்றது. அதே கார்... அதே இருக்கைகள்... ஆனால் இன்று சூழல் தலைகீழாக மாறியிருந்தது.

கார்த்திக் எதார்த்தமாக, ​“என்ன இந்திரன்? என்னாச்சு? ஏன் இவ்வளவு சீரியஸா இருக்க?” என்று கேட்டான்.

கசந்த முறுவலுடன் அவனை ஏறிட்ட இந்திரன் "ஞாபகம் இருக்கா கார்த்திக்? இதே கார்ல வச்சு நீ என் தங்கச்சிகூட பழகினா, நான் உன் தங்கச்சிகூட பழகுவேன்னு மிரட்டுனீங்களே" என்ற கேள்வியில் கார்த்திக் அதிர்ந்து போனான். தன் காதல் இந்திரனுக்குத் தெரிந்துவிட்டதை உணர்ந்தவன், “நானே உன்கிட்ட சொல்லணும்னுதான் நினைச்சேன்” என்று கூற, “எப்போ சொல்வீங்க... என் தங்கச்சி மனசை முழுசா கலைச்ச பிறகா?” என்று வெறுப்பான பார்வையுடன் கேட்டான்.

​பதறிய கார்த்திக், “நீ நினைக்கிற மாதிரி நான் உன் தங்கச்சியோட மனசை கலைக்கல. அவ மேல எனக்கு நிஜமான அன்பு இருக்கு. யாத்ரா ஒரு மெச்சூர்டான பொண்ணு, அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு...” என்று விளக்கமளிக்க

​“போதும் கார்த்திக்!” என்று தடுத்த இந்திரன். “அவளுக்குப் பிடிச்சிருக்கும்னு எனக்கும் தெரியும். அவகிட்ட கேட்டா ‘ஆமாம்’னு ஒத்துக்குவாதான். ஆனா எனக்கு அதுல விருப்பம் இல்லை. உங்க அம்மா உங்க அக்காவையும் தங்கச்சியையும் எப்படி வளர்த்தாங்க, அவங்க விருப்பங்களை எப்படி நசுக்குனாங்கன்னு சௌந்தர்யா என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கா. பெத்த பொண்ணுங்களோட கனவுகளையே அழிச்ச ஒரு வீட்டுக்கு, என் தங்கச்சி மருமகளா வர நான் ஒருபோதும் விடமாட்டேன்.”

​கார்த்திக் அவசரமாக இடைமறித்தான், “இந்திரன், எங்க அம்மா வேற... நான் வேற! நான் யாத்ராவை அப்படி நடத்த மாட்டேன். அவளோட லட்சியங்களுக்கு நான் துணையா இருப்பேன். நான் அவளைக் காதலிக்கிறேன்...”

​“காதலா... என் தங்கச்சி பத்தி முழுசா தெரியுமா உங்களுக்கு?” என்று அழுத்தமாக பார்த்த இந்திரன். “அவ ஒன்னும் சாதாரணப் பொண்ணு இல்லை. ஸ்கூல் ஃபர்ஸ்ட், காலேஜ் ஃபர்ஸ்ட்னு எல்லாத்துலயும் ஃபர்ஸ்ட்... அதுவும் ஐ.ஐ.எம் ல சேர்ந்து படிக்கணும்கிறது அவளோட லட்சியம். தேவையே இல்லாம அவ வாழ்க்கையில காதலைக் கொண்டு வந்து நீங்க குழப்பம் பண்ணிட்டு இருக்கீங்க... உங்களோட இந்தத் திடீர் காதலால அவளோட கரியர் பாழாகுறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியாது.” என்று திட்டவட்டமாக கூற

​“அவ கனவை நான் சிதைக்க மாட்டேன் இந்திரன், என்னை நம்பு...” கார்த்திக் கெஞ்சினான்.

​இந்திரனின் முகம் கல்லாக இறுகியது. “நம்பிக்கையா? என் தங்கச்சிகிட்ட எனக்கே தெரியாம பழகுன உங்க மேலயா...”

​“அது தப்புதான் என்னை மன்னிச்சிடு இந்திரன்... ஆனா ப்ளீஸ் யாத்ராகூட பழகாத, பேசாதன்னு எல்லாம் சொல்லாத.”

​“நான் சொன்னா என் தங்கச்சி கேட்க மாட்டா... ஆனா நீங்க நினைச்சா முடியும்... எக்ஸாம் முடியுறதுக்குள்ள அவகிட்ட இருந்து நீங்களே ஏதாவது காரணம் சொல்லி விலகிடுங்க. காலேஜ் சேர்ந்துட்டா அவளே உங்களை மறந்துடுவா..."

​“என்னால முடியாது... நான் யாத்ராவை விட்டு கொடுக்க மாட்டேன்" என்று கார்த்திக் உறுதியாக சொல்ல,

​“அப்போ என்னாலயும் உங்க தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்று மடக்கினான் இந்திரன்.

​கார்த்திக் சீற்றத்துடன் அவன் சட்டையைப் பிடித்து, "என்ன மிரட்டுறியா" என “எப்படி வேணா நினைச்சுக்கோங்க... நான் சொன்னது சொன்னதுதான்” என்றான்.

சட்டென்று கையை எடுத்த கார்த்திக் மெதுவாக, “இது சௌந்தர்யாவோட வாழ்க்கை. எங்களோட காதலுக்காக அவளை நீ தண்டிக்க கூடாது?” என்றான்.

​“உங்களுக்கு உங்க தங்கச்சியோட கல்யாணம் முக்கியம்னா எனக்கு என் தங்கச்சியோட எதிர்காலம் முக்கியம்" என்று பதிலுரைக்க, கார்த்திக் என்ன பேசுவதென்று தெரியவில்லை. என்ன சொன்னாலும் அவன் ஏற்று கொள்ளும் மனநிலையிலும் இல்லை.

"முடிவு இப்பவும் உங்க கையிலதான் இருக்கு கார்த்திக். உங்களுக்கு உங்க காதல் முக்கியமா? இல்ல உங்க தங்கை வாழ்க்கை முக்கியமான்னு நீங்களே முடிவு பண்ணுங்க” என்று விட்டு காரிலிருந்து இறங்கிய இந்திரன், "நீங்களே யாத்ராவை விட்டு விலகுறதுதான் எல்லோருக்கும் நல்லது" என்று பேச்சை முடித்து திரும்பி பார்க்காமல் நடந்தான்.

கார்த்திக்கின் தலையில் இடியே விழுந்தது போலிருந்தது. ஒருபுறம் உயிராய் நேசிக்கும் யாத்ரா, மறுபுறம் தன் தங்கையின் எதிர்காலம்.

You cannot copy content