You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 20

Quote

20

கார்த்திக் மிகவும் சிரமப்பட்டே தன் இமைகளைப் பிரித்தான். இரவின் மயக்கங்கள் எல்லாம் இன்னும் தீரவில்லை என்றே அவன் உடல் சொன்னது. ஒருவித அயர்வு அவனை எழவிடாமல் படுக்கையில் கட்டிப்போட்டது. எல்லாவற்றையும் தாண்டி மனம் அவளை அணைத்துக் கொள்ளத் துடித்தது. ஆனால் அவள் அருகே இல்லை என்று அறிந்த கணமே விழிகளை பெரிதாக விரித்தான். பார்வையைச் சுழற்றினான்.

‘அதோ அங்கே நின்றிருந்தாள் அவன் காதல் தேவதை...’

முதுகுப்புறத்தைக் காட்டிக் கொண்டு கண்ணாடி முன்பு, செவ்வானத்தில் அழகாய் ஒரு புடவையை எடுத்து மடிப்பு வைக்க தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள். மேலும் அவள் கூந்தலை சுற்றியிருந்த துண்டின் வழியாக ஈரம் சொட்டுச் சொட்டாக வழிந்து, வரப்பு மேடு போலிருந்த அவள் பின்புறத்தில் இறங்கியது.

ஆங்காங்கே சில நீர்த்திவலைகள் அவள் முதுகில் மினுமினுத்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் படுக்கையில் படுத்திருக்க முடியவில்லை.

சத்தமில்லாமல் எழுந்து வந்து அவள் இடையை வளைத்துத் தன்புறம் இழுத்தான். “கார்த்திக்” என்று அவள் அதிர்வதைப் பொருட்படுத்தாமல், அவள் முதுகிலிருந்த நீர்த்திவலைகள் ஒவ்வொன்றையும் உதடுகளால் ஸ்பரிசித்தான். அவன் உதடுகள் பட்ட இடமெல்லாம் சிலிர்த்தது. அந்தச் சிலிர்ப்பு நாடி நரம்புகளினூடே பாய்ந்து அவள் தேகத்தை இன்பச்சோலையில் தள்ளியது.

“கார்த்திக் விடு ப்ளீஸ்” என்று சிணுங்கியவளை அப்படியே முன்புறம் திருப்பி, சுவரில் தள்ளி முத்தமிட்டான்.

அவள் தேகம் நெகிழ்ந்து உருகியது. அவன் மெதுவாக அவளை விடுவித்து பின்வாங்கவும், “சீ... போ... போய் பிரஷ் பண்ணு” என்று செல்லமாகத் தட்டினாள்.

அவன் சிரித்துக் கொண்டே நகர்ந்துவிட்டான். அவளுக்குத்தான் ஏதோ போதை மருந்தை உட்கொண்டது போலக் கிறங்கியது. தலையை உலுக்கிக் கொண்டு மீண்டும் புடவைக்கு மடிப்பு எடுக்கும் வேலையை ஆரம்பித்தாள். ஆனால் எது முன்னே பின்னே என்று எல்லாம் மறந்து போனது.

அவன் குளித்து முடித்துத் திரும்பும் வரை அவள் அதனைக்கட்டி முடிக்கவில்லை. “என்ன இன்னும் கட்டிட்டு இருக்க, செகண்ட் ரவுண்ட் போலாமா?” என்று அவன் கிண்டல் செய்து சிரிக்க, “கிட்ட வந்தேனா பாரு” என்று கடுப்படித்தாள்.

“என்ன? கட்ட முடியலையா இல்ல கட்ட தெரியலயா?”

“எல்லாம் தெரியும் எனக்கு” என்றவள் வீம்பாக சொல்ல சத்தமாக சிரித்தவன், “அப்புறம் ஏன்டி தலைகீழா திருப்பி கட்டிட்டு இருக்க” என்று கேட்டான்.

“தலைகீழயா” என்றவள் அப்போதுதான் முந்தானை மடிப்பை பார்த்துவிட்டு, “ஒரே மாதிரி இருந்துச்சு குழம்பிட்டேன்” என்று அவள் தவிப்பும் குழந்தைத்தனமான சிணுங்கலும் அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

“சரி இப்படி வா, நான் ஹெல்ப் பண்றேன்” என்றான்.

“யாரு, நீயா?”

“சத்தியமா பண்றேன்” என்றவன் புடவை முந்தானையைக் கையில் வாங்கிச் சீராகக் கைவிரல்களில் மடிப்பு வைக்கத் தொடங்கினான். அவன் மடிப்பு வைத்த அழகைப் பார்த்து அவள் அப்படியே திகைத்து நிற்க, சட்டென்று அவள் இடுப்பில் கைவைத்துத் தன் பக்கமாக இன்னும் கொஞ்சம் இழுத்தான். அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட, யாத்ராவின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

“என்ன... ஏன் என் மூஞ்சியை அப்படிப் பார்த்துட்டு இருக்க? இந்தா, வாங்கிப் பின் போடு” என்று அவன் காதோரம் கிசுகிசுக்க, அவள் உதடுகள் வெட்கத்தில் விரிந்தன.

“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியுது?” என்று அவள் ஆச்சரியத்துடன் கேட்க,

“அக்கா, தங்காச்சி, அம்மான்னு பொண்ணுங்களுக்கு இடையில் வளர்ந்தவன்டி நான். அதுவும் இல்லாம, புடவை கட்டிக் கொடுக்குற புருஷன் கிடைச்சது உன் அதிர்ஷ்டம்” என்று அவளது கன்னத்தைக் கிள்ளினான்.

“நீ சூப்பர்தான் போ” என்றவள் மெச்சிவிட்டு முந்தானை மடிப்பை வைத்துப் பின் செய்தாள்.

“பேசாம வேலை கிடைக்கலன்னா இதையே வேலையாப் பார்த்துடலாம்னு பார்க்குறேன்.”

“எதே?”

“அதான் புடவை கட்டுறது... சேரி ட்ரேபிங்... ஈவென்ட்ஸ்ல எல்லாம் பொண்ணுங்களுக்குக் கட்டி விடுறாங்களே... இப்போ அந்த வேலையை ஆண்களும் செய்றாங்கதானே” என்றவன் சொல்லி முடிக்கவும் அவனைத் கடுமையாக முறைத்தாள்.

“சும்மா கட்டிவிடுறதுதான்டி... அதுவும் இல்லாம இப்படி ஒரு அழகைப் பார்த்த பிறகு” என்றவன் அவள் முன்னழகை பார்த்து பெருமூச்சுவிட,

“நான் போறேன்” என்றவள் அந்த நொடியே அறை விரையவும், அவன் அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

“விடு கார்த்திக்.”

“பின்னாடி நாட் கட்டலடி” என்றவன் எழுந்து வந்து நிதானமாக அதனை முடி போட்டுவிட்டதோடு, அவ்விடத்தில் தன் அதரங்களின் அடையாளங்களையும் பதித்தான்.

அவள் முகம் விகசித்தது. அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் ஓட்டமும் நடையுமாக நேராகச் சமையலறைக்கு வந்து மூச்சு வாங்க நின்ற மகளைப் பார்த்து, “என்னாச்சு யாத்ரா?” என்று பிரியா பதறினார்.

“ஒன்னும் இல்லமா” என்றவள் இதயம் இன்னும் அதிவேகமாகத் துடித்தது.

“ஒன்னும் பிரச்னை இல்லையே?” என்று அவர் கவலையுடன் கேட்க,

“அதெல்லாம் இல்லமா... டீ குடிக்கலாம்னு வந்தேன்” என்று சொல்ல, மகளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சூடு செய்த தேநீரைக் கோப்பையில் ஊற்றினார்.

அவளோ அம்மாவின் குறுகுறு பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “ம்மா, நான் இந்த பீட்ரூட்டைக் கட் பண்ணட்டுமா?” என்று கவனத்தை வேறுபுறமாகத் திருப்ப முயன்றாள்.

“அதெல்லாம் வேணாம்... நீ முதல்ல இதை கார்த்திக்கிட்ட கொடு” என,

“திரும்பவுமா?” என்றவள் புருவத்தை உயர்த்தினாள்.

“என்ன திரும்பவும்?”

“இல்ல ஒன்னும் இல்ல” என்றவள் தேநீரை எடுத்துச் செல்ல, அவன் முகப்பறையில் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தான்.

மூச்சை இழுத்துவிட்டவள் தேநீரை அவனிடம் நீட்டினாள். அதேநேரம் அவன் கண்களைப் பார்க்காமல் அவள் தவிர்க்க, குமார் அதனை கவனித்தார்.

அவளை பார்த்துக் கொண்டே சூடான தேநீரை வாயில் வைத்தகார்த்திக், “ஆ” என்று அலறிவிட்டான்.

 “பார்த்து தம்பி சூடா இருக்கு” என்று குமார் சொல்ல அந்தக்காட்சியை ஏளன நகைப்புடன் பார்த்தவள், மீண்டும் சமையலறைக்கு வந்து தன்னுடைய தேநீரை எடுத்து அங்கேயே குடிக்கத் தொடங்கினாள்.

“வெளியே போய் குடிக்கிறதுதானே?”

“இல்ல, நான் இங்கேயே குடிக்கிறேன்” என்றவள் சமையல் மேடையில் சாய்ந்து நின்றபடி பருகினாள். பிரியா அப்போதுதான் மகள் நேர்த்தியாகப் புடவை உடுத்தியிருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

“எப்படிடி?”

“என்ன எப்படி?”

“உனக்குப்புடவை ஒழுங்கா கட்டவே தெரியாதே... எப்படி இவ்வளவு நல்லா மடிப்பு வைச்சிருக்கேன்னு கேட்டேன்” என்றதும், தேநீர் அப்படியே தொண்டையில் சிக்கிப் பொறையேறியது.

“என்னாச்சு?” என்று மகள் தலையில் தட்ட,

“ஒன்னும் இல்ல” என்று மீண்டும் சொல்ல, ப்ரியா அவளை முறைத்துப் பார்த்தார்.

“எத்தனை ஒன்னும் இல்லடி?”

“ஐயோ ஒன்னும் இல்லமா... அப்படிப் பார்க்காத” என்றவள் அவசரமாக அந்த கப்பை வாயில் சரித்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டாள். மகளின் செயலை எண்ணி பிரியா குழம்பி கொண்டிருந்த சமயத்தில் குமார் உள்ளே வந்தார்.

“அவங்க இரண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்களா?” என்று மனைவியிடம் விசாரிக்க,

“எனக்கு என்ன தெரியும்... உங்க பொண்ணு விசித்திரமா நடந்துகுறா” என்றார்.

“ஆமா, கார்த்திக் டீ கொடுக்கும் போது அவனை அவ நிமிர்ந்து கூட பார்க்கல.”

இருவராலும் அவர்களைப் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. காலை உணவுக்கு வந்த போதும் யாத்ரா கார்த்திக் பக்கத்தில் அமரவில்லை.

“இங்கே உட்காருடி” என்று சொன்ன பிரியாவிடம்,

“ஏன் மா, இந்தச் சேர்ல உட்கார்ந்தா டிபன் வைக்க மாட்டியா... நான் அப்பா பக்கத்துலயே உட்கார்ந்துக்கிறேன்” என்று கூறி குமாருக்கு அருகில் அமர்ந்தாள். கார்த்திக் அவளைக் கல்மிஷமாகப் பார்த்துச் சிரித்தபடி தன் உணவைச் சாப்பிடத் தொடங்கினான். அந்தப் பார்வையைத் தவிர்க்கவே யாத்ரா பெரும்பாடுபட்டாள்.

அவள் தவிப்பைக் கண்டு கார்த்திக் குறும்புடன் மேஜைக்குக் கீழே யாரும் பார்க்காத வண்ணம் தன் காலை நீட்டி, யாத்ராவின் காலை வம்பிழுத்தான்.

அவள் திடுக்கிட்டுப் போனாள். அவன் கால் விரல்கள் அவள் கால்களை மென்மையாக வருடவும் சாப்பாட்டை வாயில் வைக்கப் போனவள் அப்படியே உறைந்துவிட்டாள். அவனோ ஒன்றும் தெரியாத உத்தமன் போல இட்லியைச் சட்னியில் தொட்டுக் கொண்டிருந்தான்.

அவனை முறைத்துக் கொண்டே அவள் காலை நகர்த்த முயல, அவனோ விடாமல் தன் காலால் அவளது காலைப் பிணைத்துக் கொண்டான். யாத்ராவுக்கு முகம் எல்லாம் சிவந்து, கைகள் நடுங்கத் தொடங்கின. ப்ரியாவும் குமாரும் தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பதற்றத்தில் இட்லியைத் துண்டாக்க முயல, அது அவளது கையை மீறி தட்டில் இருந்து வெளியே தெறித்தது.

“என்ன சாப்பிட சொன்னா தூக்கி போட்டு விளையாடிட்டு இருக்க?” என்று கார்த்திக் எதுவும் தெரியாதவன் போல அவளை எள்ளினான். கடுப்பான யாத்ரா மேஜைக்குக் கீழே அவனது காலைத் தன் காலால் பலமாக மிதித்தாள்.

“ஆ...” என்று கார்த்திக் லேசாக முனக, “என்னாச்சு தம்பி?” என்றார் குமார் பதற்றமாக.

“ஒன்னும் இல்ல மாமா... நாக்க கடிச்சுக்கிட்டேன்” என்று கார்த்திக் யாத்ராவை வஞ்சகமாகப் பார்க்க, அவளோ இப்போதுதான் நிம்மதியாக ஒரு வாய் உணவை மென்றாள்.

இருப்பினும் குமாருக்கும் ப்ரியாவிற்கும் இன்னும் அவர்கள் கோபத்துடன் இருப்பது போலவே தோன்றியது. இதற்கிடையில் மாலை நால்வருமாகச் சேர்ந்து அந்த மலைக்கோவிலுக்குச் சென்றனர். தரிசனம் முடிந்து கோயிலைச் சுற்றி வந்த இருவரின் கைகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பதைப் பார்த்த ப்ரியா, கணவனை அர்த்தப்பார்வை பார்த்தார்.

“அப்போ சமாதானம் ஆகிட்டாங்களா?”

“நல்லாவே” என்று சொல்லிப் ப்ரியா புன்னகை செய்ய, அப்போதும் குமாரின் சந்தேகம் தீரவில்லை.

“என் பொண்ணு அவ்வளவு சீக்கிரத்துல இறங்கி வர மாட்டாளே?”

“எல்லாம் நம்மகிட்டதான் வீம்பு, கோபம் எல்லாம் புருஷன்கிட்டே கிடையாது” என, இருவரும் மீண்டும் அவர்கள் புறம் நோக்கினர். புதுமணத் தம்பதிக்கான பூரிப்பு முகத்தில் அப்பட்டமாக ஜொலிப்பதைக் காண முடிந்தது.

அவர்கள் மனம் நிம்மதி அடைந்தது. இருவரும் மறுவீடு முடித்துச் சென்னைக்குத் திரும்ப, அங்கே இந்திரனும் சௌந்தர்யாவும் ஏற்காடு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர்.

தேன்மொழி ஆரத்தி எடுத்து மகனையும் மருமகளையும் வரவேற்றார். கார்த்திக்கின் சகோதரிகளிடம் யாத்ரா சகஜமாகப் பேச, சௌந்தர்யா மட்டும் உள்ளே சென்றுவிட்டாள்.

யாத்ராவுக்கு அவள் செயல் நெருடலாக இருக்க, அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தாள். சௌந்தர்யா பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“அண்ணி” என்று அழைத்தபடி உள்ளே வந்த யாத்ரா, “என் மேல ஏதாவது கோபமா உங்களுக்கு?” என்று மெதுவாக கேட்டாள்.

அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவள், “எனக்கென்ன கோபம்? அதெல்லாம் ஒன்னும் இல்ல.” என்றாள்.

“இல்ல, என்னமோ இருக்கு” என்றவள் அருகே வந்து தோளை பற்ற,

“ஆமா இருக்கு” என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு, “என் அண்ணன் உன்னைக் காதலிச்சிருக்கக் கூடாது” என்று சொல்ல யாத்ரா அதிர்ந்து நின்றாள். அந்த நொடியே சௌந்தர்யா பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியேறிவிட்டாள்.

எல்லோரும் அவர்களை வாசலில் நின்று வழியனுப்ப, யாத்ராவும் வந்து நின்றாள். இந்திரன் தங்கையின் கையைப் பிடித்து, “அண்ணன் மேல இன்னும் கோபமா?” என்று வினவ, “ச்சே, இல்ல அண்ணா” என்றாள்.

“இப்பதான் நிம்மதியா இருக்கு... பார்த்துப் பத்திரமா இருந்துக்கோ” என்றவன் கண்களில் கண்ணீர் வழிய, அவளும் அழத் தொடங்கிவிட்டாள்.

ஆனால் அண்ணனின் கண்ணீருக்கு காரணம் தன்னை விட்டுப் பிரியும் வேதனை மட்டும் இல்லை என்று தோன்றியது அவளுக்கு.

அறைக்குள் தீவிர யோசனையில் அமர்ந்திருந்த யாத்ராவை பார்த்துத் துணுக்குற்ற கார்த்திக், கதவை மூடிவிட்டு வந்து அவள் முன்னே வந்து நின்றான்.

அப்போது அவனை அவள் கவனிக்கவில்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த மனைவியின் கன்னங்களை இருபுறமும் பற்றித் தூக்கினான். “என்ன டல்லா இருக்க, அண்ணா போன வருத்தமா?” என்று அக்கறையுடன் விசாரிக்கக், 'இல்லை' என்பது போல் தலையை அசைத்தாள்.

“அப்புறம்?”

“அண்ணாவும் சௌந்தர்யாவும் சந்தோஷமா இல்ல.”

“உளறாத, அவங்க இரண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காங்க.”

“பிரச்னை அவங்க காதல் இல்ல... நம்ம காதல்.”

“என்ன சொல்ற நீ?”

“நம்ம காதலால அவங்க இரண்டு பேருக்குள்ள ஏதோ மனஸ்தாபம்னு தோணுது.”

“ஏன் உனக்கு அப்படித் தோணுது?”

“எங்க அண்ணன் அந்த மாதிரி அழுது நான் பார்த்ததே இல்ல கார்த்திக்”

“உன் அண்ணனுக்கு உன் மேல ரொம்ப பாசம்டி”

“அது மட்டும் இல்ல... சௌந்தர்யா இந்திரன்கிட்ட கோபமா இருக்காங்க... அதனால்தான் அவங்க என்கிட்டயும் ஒரு மாதிரி பேசுனாங்க.”

“என்ன பேசுனா?”

“நீ என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாதாம்.”

“சௌந்தர்யா அப்படிச் சொன்னாளா?”

“ம்ம்ம்” என்றவள் முகம் வேதனையில் சுருங்கவும் அவளை தோளோடு ஆறுதலாக அணைத்துப் பிடித்துக் கொண்டவன், “யாத்ரா ரிலாக்ஸ், நான் இந்த பிரச்னையை பார்த்துக்கிறேன்” என்றான்.

“எனக்கு கவலையா இருக்கு கார்த்திக்?”

“ஏய் இங்கே பாரு” என்றவள் முகத்தை தன் புறம் திருப்பி, “அவ்வளவு பெரிய சண்டை எல்லாம் போட்டு நம்மளே சமாதானம் ஆகிட்டோம்... அவங்க ஆக மாட்டாங்களா... ஆயிடுவாங்க... நல்ல சூப்பரான இடமாப் பார்த்து இரண்டு பேருக்கும் ஹனிமூன் டிக்கெட் போட்டுத் தர்றேன்” என்று சொன்ன நொடி, அவள் ஆர்வமானாள்.

“அப்போ நமக்கு?” என்று கேட்டாள்.

“எது, ஹனிமூனா... என்ட்ரன்ஸ் எழுதுற ஐடியா இல்லையா மேடமுக்கு?” என்றவன் முறைக்க,

“ஆமா இல்ல, அடுத்த வாரம் என்ட்ரன்ஸ்... நான் படிச்சதெல்லாம் சுத்தமா மறந்து போச்ச்சே அய்யோ இப்படியே போனா முட்டதான் வாங்குவேன் போல போச்சு எல்லாம் போச்சு” என்றவள் புலம்பத் தொடங்க, அவள் தலையில் தட்டினான்.

 “புலம்பறதை நிறுத்திட்டுப் படிக்குற வழியைப் பாரு... ஒரு வாரத்துக்கு அது மட்டும்தான் உன் வேலை” என்று கண்டிப்புடன் சொன்னான்.

“அப்போ லவ் மேக்கிங்?” என்றவள் சீரியஸான முகபாவனையில் கேட்க, பட்டென்று அவள் தலையில் கொட்டினான்.

“ஆ வலிக்குது கார்த்திக்.”

“பின்ன கேட்குற கேள்வியைப் பாரு, லவ் மேக்கிங்காம்!”

“சும்மா கேட்டேன்.”

“ஆமா சும்மாதான் கேட்ப, அப்புறம் என் வாழ்க்கையை அழிச்சது நீதான்னு என் சட்டையைப் பிடிச்சு உலுக்கு உலுக்குன்னு உலுக்குவ... அதனால ஒழுங்கா படிச்சு, என்ட்ரன்ஸ் பாஸ் பண்ணி எம்.பி.ஏ சேர்ற வழியைப் பாரு” என்று சொன்னது மட்டுமல்லாமல், தன்னுடைய அறையிலேயே அவளுக்கு என்று ஒரு மேஜை நாற்காலியையும் ஒதுக்கிக்  கொடுத்தான்.

You cannot copy content