You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 25

Quote

25

தேன்நிலவு முடித்து சென்னைக்குத் திரும்பிய இந்திரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. கார்த்திக் கைது செய்யப்பட்ட விவரம் அறிந்து, பதற்றத்துடன் அவனும் சௌந்தர்யாவும் தேன்மொழியைப் பார்க்க வர, அங்கே ஏற்கனவே ஒரு பெரிய பஞ்சாயத்தே ஓடிக்கொண்டிருந்தது.

வரவேற்பறையில் குமாரையும் பிரியாவையும் தேன்மொழி மிக மோசமான வார்த்தைகளால் நிந்தித்துக் கொண்டிருக்க, யாத்ராவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவள் பேச முற்பட, பிரியாதான் மகளின் கையை இறுக்கமாகப் பற்றி அவளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.

இந்தச் சமயத்தில் அங்கே வந்து மாட்டிய இந்திரனையும் சௌந்தர்யாவும் கூட தேன்மொழி விட்டுவைக்கவில்லை.

“குடும்பமா சேர்ந்து வெறும் பொய் மட்டும்தான் சொல்லியிருக்கீங்க! என் குடும்பத்தையே நடுத்தெருவுல நிக்க வச்சுட்டீங்க!” என்று அவர் ஆவேசமாக ஏற, இந்திரன் கொஞ்சமும் யோசிக்காமல் திருப்பி அடித்தான்.

“பொய் சொன்னது எல்லாம் நாங்க இல்ல அத்தை... உங்க புள்ளதான்!” என்று அவன் முகத்திலடித்தது போலக் கூறிவிட, தேன்மொழி அப்படியே வாயடைத்து நின்றுவிட்டார்.

குமார் உடனே, “இதெல்லாம் இப்போ பேச வேண்டிய விஷயம் இல்லை. கார்த்திக் ஜெயில்ல இருக்கான்... நாம முதல்ல அந்தப் பிரச்னையை எப்படி முடிக்கிறதுன்னுதான் பார்க்கணும்,” என்று அறிவுறுத்த, அவன் அமைதியானான்.

ஆனால் தேன்மொழி, “நீங்க யாரும் எனக்கோ என் பையனுக்கோ எதுவும் செய்யத் தேவை இல்லை. உங்க உதவி எங்களுக்கு வேண்டாம்,” என்று கண்டிப்புடன் மறுத்தார்.

“அண்ணன் உள்ள இருக்கும்போது இந்த வீம்பு இப்போ தேவைதானா ம்மா?” என்று கேட்டாள் சௌந்தர்யா.

“நீ எதுவும் பேசாத... உங்க அண்ணன் இன்னைக்கு ஜெயிலுக்குப் போகவே நீதான்டி காரணம்!” என்று தேன்மொழி மகளையே குற்றம் சாட்டினார். அந்தப் பேச்சு நீண்டுகொண்டே போனதே ஒழிய முடிவுக்கு வரவில்லை.

“ம்மா! நீ பேசுறது கொஞ்சம் கூடச் சரியில்லை,” என்று சௌந்தர்யா சற்றே சத்தமாக அடித்துச் சொல்ல, தேன்மொழியின் முகம் உக்கிரமானது.

“உன் மாமனார் மாமியாரையும் கூட்டிக்கிட்டு முதல்ல என் வீட்டை விட்டு வெளியே போடி!” என்று ஒரேடியாகச் சொல்லிவிட்டு, விறுவிறுவென்று தன் அறைக்குள் சென்று கதவை படாரென்று சாத்திக்கொண்டார்.

எல்லோரின் முகத்திலும் அதிர்ச்சி!

“இந்த நேரத்துல கூட உங்க அம்மா இப்படிப் பேசுறாங்க...?” என்று இந்திரன் கடுப்பாக, “அவங்க எப்பவுமே இப்படித்தான்... தப்பு யார் மேல இருந்தாலும் அடுத்தவங்க மேல பழி போடுறதுதான் அவங்க குணம்,” என்று சௌந்தர்யா வருத்தப்பட்டாள்.

“இதுக்கு மேலயும் நாம இங்கே இருக்க வேண்டாம்... அப்பா, அம்மா வாங்க போகலாம்,” என்று இந்திரன் கிளம்ப ஆயத்தமாகி, பின் தன் தங்கையைப் பார்த்தான்.

“நீயும் துணியை எடுத்துக்கிட்டு கிளம்பு,” என்றான்.

அவள் தயங்க, “அந்த அம்மா உன்னை இங்கே நிம்மதியா இருக்க விடாது யாத்ரா. பேசிப் பேசியே உன்னை உசுரோட கொன்னுடும்... கிளம்பு, கார்த்திக் வந்த பிறகு நீ இங்க வந்துக்கலாம்,” என்று இந்திரன் சொல்ல, “அண்ணன் சொல்றதும் சரிதான் யாத்ரா... கிளம்பு,” என்றார் பிரியாவும்.

சில நொடிகள் யோசித்தவள் பின், “இல்லம்மா, நான் வரல... நீங்க போங்க,” என்றாள் தீர்க்கமாக.

“யாத்ரா!” என்று குமார் மகளின் கையைப் பிடிக்க, “கவலைப்படாதீங்கப்பா... நான் பார்த்துப்பேன். சீக்கிரம் கார்த்திக் வந்துடுவான்,” என்று அவர்களுக்குத் தைரியம் சொல்லி அனுப்பினாள்.

ஆனால் இந்திரனுக்குத் தன் தங்கையைத் தனியாக அந்த நரகத்தில் விட்டுச் செல்ல மனமில்லை. அவன் சௌந்தர்யாவிடம் திரும்பி, “இந்தப் பிரச்னை முடியுற வரைக்கும் நீயும் இங்கேயே யாத்ராகூட இரேன் சௌமி,” என்றான்.

ஆனால் சௌந்தர்யாவோ, “என்னால முடியாதுங்க... அம்மா இப்போ இருக்குற கோபத்துக்கு நான் இங்க இருந்தா இன்னும் சண்டைதான் அதிகமாகும்,” என்று வெட்டொன்றாக மறுத்துவிட்டாள்.

அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை. “அந்த அம்மா ரொம்ப பேசுச்சுனா, உடனே எனக்குப் போன் பண்ணுடி... நான் வந்து உன்னைக் கூட்டிட்டுப் போயிடுறேன்,” என்று தங்கையின் கையைப் பற்றிச் சொல்லிவிட்டு இந்திரன் கிளம்ப, யாத்ரா அவர்கள் போவதையே சோர்வுடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.

கார்த்திக் இல்லாமல் அந்த வீட்டில் இருக்க அவளுக்கும் விருப்பமில்லைதான். ஆனாலும், இதை மட்டுமே ஒரு காரணமாக வைத்து வீட்டை விட்டுவிட்டுப் போவதும் சரியில்லை என்று தோன்ற அமைதியாக அறைக்கு வந்து கண்களை மூடிப் படுத்துக்கொண்டாள்.

சற்று முன்பு போனில் பேசிய அந்த குரல் மீண்டும் அவள் காதில் ரீங்காரமிட்டது.

“யாரா... நான்தான் டார்லிங், உன் ஹீரோ அமரேஷ் பேசுறேன்!”

“செருப்பாலடிப்பேன் நாயே... யாருடா உனக்கு டார்லிங்?” என்று பதிலுக்கு யாத்ரா கத்த, அமரேஷ் நக்கலாகச் சிரித்தான்.

“வேற யாரு... நீதான் என் டார்லிங்.”

“போன்ல பேசாம நீ நேர்ல இருந்திருக்கணும்டா...”

“என்ன டார்லிங் பண்ணுவ நேர்ல வந்தா?”

“அன்னைக்கு உன் மண்டையை மட்டும்தானே பொளந்தேன்... இன்னைக்கு என் முன்னாடி இருந்திருந்தா, மூஞ்சி முகரையெல்லாம் பேத்திருப்பேன் பார்த்துக்கோ!”

“உன் புருஷனை உள்ள வச்சுட்டேன்னுதானே இவ்வளவு கோபம் உனக்கு?”

“கார்த்திக் எப்படியாவது வெளியே வந்துடுவான்!”

“வாய்ப்பே இல்லை... நான் விட மாட்டேனே.”

“நீ என்னடா விடுறது? கார்த்திக்குக்குத் தெரியும் எப்படி வெளியே வரணும்னு!”

“கார்த்திக்கிட்ட மூளை இருக்கலாம்... ஆனா என் அளவுக்கு அவன்கிட்ட பணமும் பவரும் இல்லையே டார்லிங். நான் நினைச்சேன்னா... அந்த ஜெயிலுக்குள்ள வச்சே அவனைச் சமாதி கட்ட முடியும்!”

அமரேஷ் அந்த வார்த்தையைச் சொன்ன நொடி, யாத்ராவின் பேச்சு அப்படியே நின்றுவிட்டது. நெஞ்சு படபடவென்று அடிக்க, தொண்டை வறண்டது.

“என்ன ஜான்சி ராணி... பேச்சைக் காணோம்? பயந்துட்டியா?”

“நான் ஒன்னும்... பயப்படல...” என்று அவள் குரல் நடுங்கச் சொல்ல, “அப்படியா? சரி... உனக்கு எப்ப நிஜமா பயம் வருதோ, அப்ப எனக்குக் கால் பண்ணு டார்லிங்,” என்று வக்கிரச் சிரிப்புடன் அவன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

கார்த்திக் எப்படி இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வரப்போகிறான் என்று யோசித்து யோசித்து, ஒரு கட்டத்திற்கு மேல் அவள் மூளை சூடானதில் அப்படியே அயர்ச்சியில் உறங்கிவிட்டாள். ஆனால், நள்ளிரவில் திடீரென ஒலித்த அலைப்பேசி அழைப்பில் பதறிப்போய் எழுந்து உட்கார்ந்தாள்.

அதுவும் ஒரு புதிய எண். அமரேஷாகத்தான் இருக்கும் என்று நினைத்து அவள் அந்த அழைப்பை ஏற்கவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் வேறு ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

‘ஏதாவது முக்கியமான அழைப்பாக இருந்தால்...’ என்ற யோசனையில் அழைப்பை ஏற்க, மறுமுனையில் இருந்தவன் கன்னாபின்னாவென்று பேசினான். மிகவும் அருவருப்பான, வக்கிரமான முறையில் அவளை வர்ணிக்கத் தொடங்க, யாத்ரா அலறி அடித்துக்கொண்டு போனை கட் செய்தாள்.

ஆனால், அது அத்தோடு நிற்கவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து புதுப்புது எண்களிலிருந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்தவண்ணம் இருக்க, உடல் நடுங்க கைப்பேசியை மொத்தமாக அணைத்து வைத்தாள்.

இரவு முழுக்க உடல் பயத்தில் உதறிக்கொண்டே இருந்தது. உறங்காத காரணத்தால் காலையிலேயே அவளுக்குக் கடுமையான தலைவலி வந்துவிட்டது. காபி போடலாம் என்று சமையலறைக்குச் செல்ல, அங்கே தேன்மொழி நின்றிருந்தார்.

அவளை ஒரு புழுவைப் போலப் பார்த்தவர், “உங்க அம்மா அப்பா கூட நீயும் போக வேண்டியதுதானே? இங்க எதுக்கு இன்னும் ஒட்டிக்கிட்டு இருக்க?” என்று கேட்க, ஏற்கனவே இருந்த கடுப்பு இப்போது அவளுக்கு இன்னும் அதிகமாகிவிட்டது.

“நான் ஏன் போகணும்...? இது என் வீடு,” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டாள்.

“எது... உன் வீடா?”

“நான் கார்த்திக்கோட வொய்ஃப்... அப்போ இது என் வீடும்தான்,” என்று சொல்லிவிட்டு, அதற்கு மேல் அவரிடம் பேச்சு கொடுக்காமல் காபியைப் போட்டு எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.

தன் செல்பேசியைப் பார்க்கும்போதே அவளுக்கு ஏதோ டைம் பாபைப் பார்ப்பது போன்றிருந்தது. பதற்றத்துடன் போனை மெதுவாகக் கையிலெடுத்து ஆன் செய்தாள்.

இன்பாக்ஸிலும், மிஸ்டு கால்களிலும் புதுப்புது எண்கள் அடுக்கடுக்காக வந்து நின்றன. இதுவும் நிச்சயமாக அந்த அமரேஷின் வேலைதான்.

காபி குடித்துக்கொண்டே அமைதியாக யோசித்தாள். அவளுடன் படித்த தோழியின் அக்கா சைபர் கிரைம் பிரிவில் வேலை செய்வது நினைவுக்கு வர, உடனே அவளுக்கு அழைத்து விபரத்தைக் கூறினாள்.

“நீ உடனே சைபர் கிரைம் ஆபீஸிற்கு வர முடியுமா யாத்ரா?” என்று அவர் கேட்க, அவள் உடனடியாகக் கிளம்பிச் சென்றாள்.

அங்கே சென்று சோதித்த போதுதான் அவளுக்கு அந்தப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏதோ ஒரு மோசமான ஆபாச இணையத்தளத்தில் அவளது புகைப்படத்தைப் பதிவேற்றி, அதற்குக் கீழே அவளது பெயரையும், அலைப்பேசி எண்ணையும் கொடுத்திருந்தார்கள். அதனால்தான் நள்ளிரவிலிருந்து அவளுக்கு இது போன்ற அழைப்புகள் வந்திருக்கின்றன.

சைபர் கிரைம் போலீசார் உடனடியாக அந்தத் தளத்தை முடக்கினர். அப்போதைக்கு அந்தப் பிரச்னையும் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

ஆனால், யார் இந்த வேலையைச் செய்தது என்று அவர்களால் உடனடியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. “உங்க நம்பருக்கு வர்ற கால்களைக் கண்காணிக்கிறோம்,” என்று சொன்னார்களே ஒழிய, முழுமையான தீர்வு என்று எதையும் கொடுக்கவில்லை.

யாத்ராவாலும் அமரேஷ் போன்ற ஒரு பெரிய சினிமா ஸ்டார் மீது நேரடியாகக் குற்றம் சுமத்த முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் இந்தச் சமூகம் அதை அவ்வளவு எளிதாக ஏற்காது. அமரேஷ் சொன்னது போல... இங்கே பணமும் அதிகாரமும்தான் பேசும்!

அந்த நாள் முதல்... யாத்ராவின் வாழ்க்கை மெதுவாக, மிக மெதுவாக மாறத் தொடங்கியது. சில நாட்கள் அழைப்புகள் குறைந்தன.

“ஒருவேளை பிரச்னை முடிஞ்சிருச்சோ...?” என்று ஒரு நிமிடம் அவள் நெஞ்சில் நிம்மதி தலைகாட்டியது.

ஆனால் அது... ஒரு பெரிய புயலுக்கு முன்னால் நிலவும் அமைதி என்பதை அவள் அறியவில்லை.

அவள் வீட்டை விட்டு வெளியே போகும்போதெல்லாம், யாரோ தன்னைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஓர் இனம்புரியாத பயமுணர்வு அவளைத் துரத்தியது. தெருவின் மூலையில் நின்று கொண்டிருக்கும் அந்த உறைந்த கருப்புக் கார்... அவள் எங்கே போனாலும், அதே கார் மீண்டும் மீண்டும் அவள் கண்ணில் பட்டது.

ஒருமுறை அவள் மளிகை சாமான் வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்ப, அதே கார் எதிரே வந்தது. அவள் நெருங்கி வரவும் சட்டென்று அது நின்றுவிட்டது.

காரின் கதவு திறப்பது போலத் தெரியவும் அவள் உடல் நடுங்கியது. பந்தயக் குதிரையாக நெஞ்சு அடித்துக்கொண்டதில், அவள் அடித்துப் பிடித்து அங்கிருந்து ஓடி வந்து வீட்டு வாசலில் மூச்சு வாங்க நின்றாள். அதே பயத்துடன் அவள் திரும்பிப் பார்க்க, அங்கே அந்த காரைக் காணவில்லை.

“நான் தான் ஓவரா யோசிச்சு பயப்படுறேனா...?” என்று தன் தலையிலேயே அடித்துக்கொண்டு வீட்டுக்குள் நடக்க, அங்கே தேன்மொழி நின்றிருந்தார்.

“எங்க ஊர் சுத்திட்டு வர்ற நீ?” என்று அவர் காட்டமாக கேட்க,

“என்ன ஊர் சுத்திட்டு வர்றேனா... வீட்டுல மளிகை சாமான் எல்லாம் தீர்ந்துபோச்சு, அதை வாங்கப் போனேன்.” என்றாள்.

“நானே என் புள்ள ஜெயில்ல இருக்கான்னு கவலைல இருக்கேன்... உனக்கு அப்படியே ருசியா சமைச்சு கொட்டிக்கணுமா?” என்றவரின் ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி போன்று விழுந்தது.

அவள் தாங்க முடியாமல், “நான் என்ன பண்ணாலும் தப்புதான் இல்ல உங்களுக்கு?” என்று புழுங்க,

“ஆமான்டி... உன்னாலதான் என் பையன் இப்போ ஜெயில்ல இருக்கான்...” என்றார் முகத்தில் அடித்தாற்போல. யாத்ரா தன் தலையைப் பிடித்துக் கொண்டாள்.

காலை, மாலை, இரவு என்று பொழுதெல்லாம் அந்த ஒரு வரியை மட்டுமே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவளது சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருந்தார்.

இத்தனை மன உளைச்சலுக்கு இடையில் புது எண்களின் அழைப்புகள் வேறு. அவள் எடுக்க மாட்டாள். ஆனால்... அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் அனானிமஸ் மெசேஜ்கள் அவளைத் துரத்தினார்ப்போல் வந்தன.

“மிஸ் யூ டார்லிங்…”

“சிங்கிளா இருக்கியா?”

“ரேட் எவ்வளோ…?”

மெசேஜ்களை அழிப்பது, அந்த எண்களை பிளாக் செய்வது என்று தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு நாள் அவளது கல்லூரித் தோழி பதற்றத்துடன் அழைத்தாள்.

“யாத்ரா... நீ ஓகேதானேடி...?”

“ஏன்... என்னாச்சு...?”

“இன்ஸ்டாகிராம்ல... ஒரு புதுப் பேஜ்ல...”

அவள் உடம்பு முழுக்க ரத்தம் உறைந்து, குளிர்ந்து போவது போல இருந்தது. அவள் பெயரையும் படத்தையும் போட்டுப் புது ஃபேக் ஐடி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதில் நிறைய அருவருப்பான பதிவுகள் இருந்தன.

மீண்டும்... சைபர் கிரைம். மீண்டும் பிளாக்... இப்படியாக இரண்டு  மாதங்கள் ஓடிவிட்டன.

கார்த்திக்குக்கு ஜாமீன் கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும்போதும் “Bail Rejected” என்ற அந்த ஒரே ஒரு வார்த்தை, யாத்ராவின் நம்பிக்கையை மெதுவாகச் சுருட்டிக் குடித்துக் கொண்டிருந்தது.

போதாதகுறைக்கு அவள் செல்லும் இடமெல்லாம் நிழல் போல ஒரு கண்காணிப்பு... அவள் பேசும் நபர்களுக்கு, அவளது பேராசிரியர்களுக்கு எல்லாம் அறிமுகமில்லாத எண்களிலிருந்து அழைப்புகள் சென்றன.

“அவ கேரக்டர் சரியில்லாதவள்...” என்று அவதூறு பரப்பினர். மெது மெதுவாக... இந்த உலகத்திலிருந்து அவள் தனிமைப்படுத்தப்பட்டாள்.

வீட்டில் தேன்மொழியின் கொடுமை வேறு விதமாக இருந்தது. “என் பையன் வாழ்க்கையைக் கெடுத்துட்டு, இன்னும் இங்க வந்து நிம்மதியா உட்கார்ந்து திங்குறியே...”

யாத்ரா பதில் பேசுவதையே நிறுத்திவிட்டாள். உண்மையில் அவரிடம் பேசுவதற்கு வார்த்தைகளோ, எதிர்த்து நிற்பதற்கான தெம்போ அவளிடம் மீதமில்லை.

ஒரு நாள்... குளித்துவிட்டு வந்து கண்ணாடி முன் நின்றவள், தன் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் கண்கள் அழுது அழுது வீங்கிப் போயிருந்தன. முகம் பொலிவிழந்து, கறுத்துச் சோர்ந்திருந்தது. அவளுக்கே அவளை அடையாளம் தெரியவில்லை.

அப்போது அவள் செல்பேசி அடித்தது. இந்திரன்தான் அழைத்திருந்தான்.

“யாத்ரா, என்ட்ரன்ஸ் ரிசல்ட் வந்திருச்சாமே பார்த்தியா?” என்று அவன் ஆர்வமாகக் கேட்க, “தெரியல, பார்க்கல,” என்று விட்டேற்றியாகச் சொன்னாள்.

“முதல்ல பாரு,” என்றவன் சொல்ல, அவள் முடிவுகள் வந்த இணையதளத்தைத் திறந்தாள். மடிக்கணினியின் ஒளி மட்டும் அவள் முகத்தில் விழுந்தது. தேர்வு எண்ணைத் தட்டச்சு செய்தவள் கை, என்டர் பொத்தானை அழுத்தத் தயங்கியது.

ஆழமாக மூச்சுவிட்டாள். பின்னர் அழுத்தினாள். திரை அப்படியே உறைந்து நின்றது... அவளது வாழ்க்கையும்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாகத் திரை மாறியது. அவள் பெயர், தேர்வு எண் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது.

இறுதியாக முடிவு: 96.8 சதவீதம்.

நம்ப முடியாமல் கண்களை மூடிப் பார்த்தாள். எதுநாள் வரை அவள் வாழ்வின் ஆகப்பெரும் கனவாக இருந்ததோ, அந்த வெற்றியைத் தற்போது கண்டு அவளால் துள்ளிக் குதித்துச் சந்தோஷப்பட முடியவில்லை.

கார்த்திக் இல்லாத எதுவுமே அர்த்தமற்றது போலத் தோன்றியது. அவள் காதலும் கனவும் எதிரெதிர் திசையில் நின்றன.

You cannot copy content