You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 1

Page 1 of 2Next
Quote

கல்யாணம்@(at the rate of)

1

காலை வேளை. அலுவலக நேரம் நெருங்க நெருங்க அந்த மாநகர பேருந்து நிறுத்தத்திலும் மக்கள் கூட்டம் மெது மெதுவாக அதிகரித்துக் கொண்டிருந்தது. எட்டு மணியைப் போல வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை.

அந்தப் பேருந்தை நம்பியிருந்தவர்கள் முகத்தில் கவலையும் பதட்டமும் அதிகரிக்க, எதனால் தாமதம் என்று அங்கிருந்தப் பலரும், குழப்பமான மற்றும் கவலையான பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர்களுள் சிலர் நிமிடத்திற்கு ஒருமுறை செல்பேசியில் நேரத்தையும் சாலையையும் மாற்றி மாற்றி பார்க்க, அப்போதுதான் அங்கே வந்தாள் மதி.

எல்லோரின் கண்களும் ஒருமுறை அவளைத் தொட்டு மீண்டு பின் பழையபடி பேருந்திற்குக் காத்திருந்தது. இது போன்ற பார்வைகள் அவளுக்குப் பழக்கப்பட்ட போதும் அது அவளுக்கு அதீத சங்கடத்தையும் அவ்வப்போது தோற்றுவிக்காமல் இல்லை.

அப்போது மிகத் தாமதமாக வந்த அந்தப் பேருந்து, அவர்கள் நிறுத்தத்தில் வந்து நிற்க தபதபவென்று ஒரு கூட்டம் மதியைத் தள்ளிக் கொண்டு உள்ளே ஏறியது. தானும் அப்பேருந்தில் ஏற நினைத்த மதி கூட்டம் பிதுங்கி வெளியே தொங்குவதைப் பார்த்துவிட்டு அப்படியே தேங்கி நின்றுவிட்டாள்.

அடுத்த பத்து நொடியில் ஒரு வெள்ளை போர்ட் பேருந்து அதிக கூட்டம் இல்லாமல் பின்னோடு வரவும், மதி அதில் ஏறிக் கொண்டாள். சற்று முன்பு அடித்துப் பிடித்து ஏறிய கூட்டத்தை நினைத்து மதிக்கு சிரிப்புதான் வந்தது.

‘Life was always a matter of waiting for the right moment to act’ என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் பவுலோ கோய்லா (paulo coelho) வரிகள் நினைவில் எட்டிப் பார்த்தன.

மனிதர்களின் மனநிலையில் காத்திருப்பது நிச்சயமற்ற ஒன்று.  கிடைப்பதும் இல்லாமல் போய்விட்டால் என்ற பயத்தில் கிடைத்ததைப் பற்றிக் கொள்ளத் தோன்றும் அவசரம் அது. 

இந்தச் சிந்தனையுடன் பேருந்தில் ஏறிய மதி இருக்கைகளை நோக்கி நகர்ந்தாள். மகளிர் இருக்கைகளில் ஒன்றே ஒன்று காலியாக இருக்க, அதில் அவள் அமர செல்லும் போது, “இருங்க இருங்க... என் ஃப்ரண்டு வரா பின்னாடி” என்று தடுத்துவிட்டாள் அந்த இருக்கையில் அமர்ந்திருந்த பெண்.

“வாடி” என்று பின்னே வந்த பெண்ணைக் கைக் காட்டி அமர வைத்துக் கொள்ள, அவர்கள் இருவரின் பார்வையிலும் அந்நியத்தன்மை தெரிந்தது. நீ பெண்ணே இல்லை என்ற அந்நியத்தன்மை. 

அந்தப் பார்வைகள் முள்ளாகக் குத்தவும் மதி அவ்விடத்தை விட்டுத் தள்ளி வந்து கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். என்னதான் அவள் தன்னைப் பெண்ணாகவே பாவித்தாலும் மனதளவில் பெண்ணகாவே உணர்ந்தாலும் பெண்ணுடைகளை அணிந்தாலும் இந்தச் சமுதாயம் அவளை முழுப் பெண்ணாக ஏற்றுக் கொள்வதில்லை.

ஆண் போன்ற அகண்டு விரிந்த தோள்களும் தோற்றமும் அவளை ஆணாகத்தான் காட்டுகிறது.

பயணச்சீட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த நடத்துனர் அவள் அருகே வந்து மேலும் கீழுமாக ஒரு பார்வையை ஓட்ட, அவள் தன் அடையாள அட்டையை உயர்த்திக் காட்டினாள். அதனை உற்றுப் பார்த்தவர் எதுவும் பேசாமல் நகர்ந்தார்.

 அந்த வெள்ளை போர்ட் பேருந்தில் பெண்களுக்கு இலவசம். திருநங்கைகளுக்கும்தான். ஆனால் அவள் திருநங்கைதானா இல்லை ஆணா என்ற சந்தேக பார்வைத்தான் அந்த நடத்துனருடையது.

சமுகத்தின் பார்வையில் மதி என்கிற மதியழகன் ஒரு திருநங்கை.

முன்பொரு முறை இதே போன்ற வெள்ளை போர்ட் பேருந்தில் ஏறும் போது ‘நீ திருநங்கைதாங்குறதுக்கு என்ன ஆதாரம்... ஐடி ஏதாவது வைச்சு இருக்கியா?’ என்று அங்கீகார அட்டைக் கேட்டார். 

அப்போது அவளிடம் அது போன்ற அட்டை எதுவும் இல்லை. கோபம் கொண்டு அவருடன் அவள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.  பதிலுக்கு அவர் அவளைப் பாதி வழியிலேயே இறக்கிவிட்டு விட்டார்.

ஒரு வகையில் அவள் அந்தப் பிரச்சனையை சுமுகமாக முடிக்கப் பயணச்சீட்டு வாங்கி இருக்கலாம். ஆனால் அது தன் அடையாளத்தைத் தானே அவமானப்படுத்துவதாக ஆகிவிடும் என்று மறுத்து இறங்கிவிட்டாள். அந்தப் பேருந்தில் இருந்த ஒருவர் கூட அவளுக்காகப் பேசவில்லை என்பதுதான் அவளுக்கு அதிக வருத்தம்.

இந்தச் சமூகம் என்னதான் திருநங்கை என்று மரியாதையாக விளித்தாலும் அந்த மரியாதை உள்ளத்தில் இல்லை. இன்னும் அவர்களுள் ஒருவராகத் தங்களை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. வித்தியாசமாக விசித்திர ஜந்துவாகத்தான் பார்க்கிறார்கள்.

சிறுவயதிலிருந்து ஆணாகவே வளர்ந்தாலும் வளர்க்கப்பட்டாலும் மதியழகன் தனக்குள் இருக்கும் பெண்மையைப் பெண்ணுணர்வை அவனால் எப்போதும் மறுக்கவும் மறைக்கவும் முடிந்தது இல்லை.

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என்று அத்தனை பேரின் பார்வைக்கும் ஆணாகத் தெரிந்தாலும் அவனாகிய அவள் தனக்குள் பார்த்ததும் உணர்ந்ததும் ஒரு பெண்ணைத்தான்.

நோட்டு புத்தகத்தின் முன்னே மதியழகன் என்ற பெயர் ஒட்டி இருந்தாலும் கடைசிப் பக்கத்தில் மதியழகி என்று எழுதிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வான்.

ஆனால் அவன் அப்பா மதியிடமிருந்தப் பெண்மையை அவ்வப்போது கவனித்தும் கண்டித்தும் வந்திருக்கிறார். பள்ளியில் மாணவர்கள் சிலர் அவனைக் கிண்டலடித்துச் சிரிக்க, அவர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ள அவன் பெரும்பாடுப்பட வேண்டியிருந்தது. ஆனால் உடன் பிறந்த சகோதரனும் அவமானமாக உணர்ந்து ஒதுக்கி வைத்ததில் மதி உள்ளுர நொறுங்கிப் போனான்.

அப்பாவின் சரமாரியான அடிகளும் திட்டுக்களும் அம்மாவின் சமாதானங்களும் அறிவுரைகளும் தனக்குள் இருக்கும் பெண்மை உணர்வுகள் வெளிப்படுத்துவது குற்றம் என்று உணர்ந்து தன்னைத் தனக்குள்ளாகவே மறைத்துக் கொண்டான்.

தனக்குள் வெளிப்படும் பெண்மையை வெகுவாக மறைத்துக் கொள்ள மதி போராடிய போதும் அது அவனையும் மீறி வெளிப்பட்டுக் கொண்டே இருந்தது.

தங்கையின் உடைகளைத் தொட்டுப் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத ஏக்கம் உருவாகும். உள்ளத்திலும் உடலிலும் புதுவிதமான கிளர்ச்சி உணர்வு பொங்கும்.

அதேநேரம் பள்ளிகளில் ஆண் பிள்ளைகளுடன் இணக்கமாக அமர்ந்து உரையாடவோ விளையாடவோ சங்கடமாக இருக்கும்.

ஆனால் அறிவியல் அறிவின் மூலமாக தன் உடலில் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் மாற்றங்களை குறித்து ஓரளவு மதியால் புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் ஆண் என்ற அடையாளத்தை ஒரு முகமூடி போல அவனால் உதறிவிட முடியவில்லை.

குடும்பத்தின் கௌரவம் அம்மா அப்பாவின் கனவுகள் தங்கையின் திருமணம் என்று அத்தனையும் மனதில் கொண்டு தன் பெண்மையைப் புதைத்துக் கொண்டான். தன்னை ஏமாற்றிக் கொண்டான்.

 பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் சென்று இளங்கலை பயின்று கொண்டிருந்தவன் உடன் படித்துக் கொண்டிருந்த சக மாணவர்கள் மூலமாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டான்.

அவர்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகமாக ஒரு நிலைக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் குடும்பத்தினரிடம் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொண்டவன், இனி எதையும் மறைக்க வேண்டாமென்று தன்னைப் பற்றிய உண்மையை மொத்தமாகப் போட்டு உடைத்துவிட்டான்.

ஆனால் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சொன்ன உண்மை, அவனுக்கு எதிராகத்தான் முடிந்தது. பெற்ற தாய், தந்தை, உடன் பிறந்த சகோதர உறவுகள் என அத்தனை பேரும் நிரதாட்சண்யம் பார்க்காமல் அவனை ஒதுக்கி வைத்தார்கள். இரக்கமில்லாமல் வீட்டை விட்டுத் துரத்தினார்கள்.  

அத்தனையும் இழந்து அநாதரவாக நடுவீதியில் நிறுத்தப்பட்டான். கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் போக, பசி, பட்டினி, பாலியல் துன்புறுத்தல் என அத்தனையும் அவன் கடந்த வர நேரிட்டு இறுதியாக திருநங்கைகளுக்கு உதவும் ஒரு இயக்கத்தின் மூலமாக உதவிக்கரமும் பெற்றான்.

 ஜெயா என்ற மற்றொரு திருநங்கையருடன் நட்பாக இணைந்தான். அதன் பிறகு தன்னுடைய அடையாளத்தை மதியழகனிலிருந்து முழுவதுமாக மதியழகியாக மாற்றிக் கொண்டாள்.

ஜெயா வேலை செய்து கொண்டிருந்த பள்ளியின் தாளாளர் ஜஸ்டின் தாமஸ் மிகவும் நல்லவர். மதியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் தன் அலுவலகத்தின் நிர்வாகப் பணிகளில் அவனை அமர்த்தினார்.

முதல் ஒரு வருடத்தில் மதியின் புத்திசாலித்தனத்தையும் அறிவுக்கூர்மையையும் பார்த்து வியந்தவர் பின் அவளைத் தன் மகளின் உதவிக்காக அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து மதியின் வாழ்க்கையில் ரெஜினா என்பவள் ஒரு முக்கிய அங்கமாக மாறினாள்.

கடந்த ஒரு வருட காலமாக ரெஜினாவின் காரியதரிசியாக மற்றும் கவனிப்பாளார் பணியில் இருந்து வருகிறாள். 

மதியழகி. இருப்பினும் ரெஜினா மதியை தன் நெருங்கிய தோழியாகத்தான் பாவிக்கிறாள். அப்படித்தான் அவளை நடத்துகிறாள். 

ரெஜினா மதியின் வாழ்க்கையில் வந்த பிறகு மதி தன் வாழ்வில் கடந்த வந்த துயரமான நாட்களிலிருந்து ஓரளவு மீண்டு வந்துவிட்டிருந்தாள்.

பேருந்திலிருந்து இறங்கிய மதி ஷேர் ஆட்டோ பிடித்து ரெஜினாவின் வீட்டு வாசலை அடைந்தாள். பிரமாண்டமான அந்த இரும்பு கதவின் முன்னிருந்த காவலாளி அவளுக்காக கதவைத் திறந்துவிட்டான்.

ரெஜினாவின் காரியதரிசியான பிறகு அவள் அங்கேதான் தங்கி இருக்கிறாள். நேற்று ஜெயாவிற்குப் பிறந்த நாள் என்பதால் அவள் அறைக்குச் சென்று அவர்கள் திருநங்கை நண்பர்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடி விட்டுத் திரும்ப, தோட்டத்திலிருந்த இருக்கையில் ஜஸ்டின் கவலையுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து உள்ளே செல்லாமல் அவரிடம் வந்து நின்றாள்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க ஜஸ்டின் தாமஸ் தோற்றத்தில் இளமையும் கம்பீரமும் கொண்டவர். கருப்பு டீ சர்ட்டும், சாம்பல் நிற ட்ரேக்கும் அணிந்திருந்த ஜஸ்டினின் வயதைக் காட்டிக் கொடுப்பது அவரின் ஏறிய நெற்றியும் ஆங்காங்கே தலை முடியில் எட்டிப் பார்த்திருக்கும் நரைத்த முடியும்தான்.  

“சார்” என்று அழைத்தபடி மதி வந்து நிற்க,

“வா மதி” என்றவர் முகத்தில் எப்போதும் வெளிப்படும் பளிச் புன்னகையும் உற்சாகமும் கொஞ்சமும் இல்லை.

“என்னாச்சு சார்…? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றவள் விசாரிக்க,

அந்த இருக்கையின் மற்றொரு மூலையைக் காண்பித்து மதியை அமர சொன்னார். அவர் முகத்தில் படிந்திருந்த கவலை ரேகைகளைப் பார்த்தபடி அவள் தயக்கத்துடன் அமர்ந்தாள்.

“என்ன விஷயம் சார்?”

“நேத்து ஜான் வந்திருந்தான்”

“ஓ... யூ எஸ்ல இருந்து  ஜான் சார் வந்துட்டாரா?”

“ம்ம்ம் வந்தான்” அவர் குரலில் சுரத்தையே இல்லை.

“என்னாச்சு? ரெஜி மேடம் ஜான் சார்ட்ட பேசுனாங்களா?”

“ஆமா என்னைக் கூட பேச வேணான்னு சொல்லிட்டு அவளேதான் நேரடியா ஜான்கிட்ட பேசுனா?”

“ஜான் சார் என்ன சொன்னாரு?” மதியின் குரலில் பதட்டம் தொற்றிக் கொள்ள ஜஸ்டின் தலை மறுப்பாக அசைந்தது.

மதி அதிர்ச்சியுடன், “ரெஜி மேடமோட க்ளோஸ் ஃபிரண்ட் ஜான் சார்” என்று இழுக்க,

“நட்பு வேறயாம், காதல் வேறயாம்... சொல்றான்” என்றதும் மதியின் முகம் சுருண்டது. கண்களில் நீர் திரண்டது.

ஜான் ரெஜியிடம் நெருக்கமாகப் பழகிய விதத்தைப் பார்த்த போது மதிக்கும் கூட அது காதல் என்றுதான் தோன்றியது. அவன் வெளிநாடு சென்றதிலிருந்து அவனுடைய பிரிவை மிக மிக ஆழமாக உணர்வதாகச் சொன்ன ரெஜி நட்பின் அடுத்தப்படி நிலையைத் தொட்டிருந்தாள்.

அதன் பின் ரெஜினா ஜானை நேசிப்பதை உணர்ந்த மறுகணம் அந்த உணர்வை முதல் முதலாகக் கூறியது அவளிடம்தான். ஜான் இந்தியா வந்ததும் நேரில் பேச வேண்டுமென்று ரெஜினா ஆவலாகக் காத்திருந்தாள்.

ஆனால் இப்படி எல்லாம் தலைகீழாக முடியுமென்று மதி எதிர்பார்க்கவில்லை. ஜஸ்டினின் மௌனத்துடன் இணைந்து கொண்ட மதிக்கு ரெஜினாவின் இப்போதைய மனநிலை எப்படி இருக்கும் என்று யோசிக்கவே அச்சமாக இருந்தது.

 “ரெஜி மேடம் ரொம்ப அப்செட்டா இருக்காங்களா சார்?” என்று தன் மௌனத்தை அவள் கலைக்க,

“இல்ல... கொஞ்சம் கூட இல்ல... இட்ஸ் ஓகேனு சாதாரணமா சொல்லிட்டா... என்ன ரெஜி உனக்கு வருத்தமா இல்லையான்னு கேட்டதுக்கு, இட்ஸ் ஓகே டேடி இதுல என்ன இருக்குன்னு எனக்கு சிரிச்சிட்டே சமாதானம் சொல்றா” என, மதிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

“அவ ஒரு வேளை அழுதாளோ, கோபப்பட்டாளோ கூட நான் கொஞ்சம் சமாதானமாகி இருப்பான்... ஆனா அவ சிரிக்குறா மதி... ரொம்ப கேஷுவலா பேசுறா... அதான் எனக்கு பயமா இருக்கு”

   “நீங்க எதுக்கு சார் அதுக்குப் போய் பயப்படணும்... அவங்க இதை கேஷுவலா எடுத்துட்டு கூட இருக்கலாம் இல்ல”

“அதெப்படி முடியும்... இப்படியொரு ஏமாற்றத்தை யாரால சாதாரணமா தாங்கிக்க முடியும்... அதுவும் வாழ்க்கைல மோசமான ஏமாற்றத்தை மட்டுமே பார்த்துட்டு இருக்க ரெஜி மாதிரியான பொண்ணால” என்ற போது அவர் கண்களில் நீர் வழிய, மதியின் கண்களிலும் நீர் எட்டிப் பார்த்தது.   

அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெதுவாக அவரிடம், “புரியுது சார்... ஆனா” என்று சமாதானம் சொல்ல முயல, அவர் நிமிர்ந்து அவளை இடைமறித்தார்.

“உனக்கு புரியல மதி... அவ உள்ளுக்குள்ள ரொம்ப நொறுங்கிப் போயிட்டா... ஆனா அந்த வலியை என்கிட்ட காட்டாம மறைக்குறா... என்னைக் கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்குறா... தட் ஹார்ட்ஸ் மீ அ லாட்” என்றவர் கண்களில் கண்ணீர் சுரந்த வண்ணம் இருந்தது.

அந்த ஒரு நொடி மதியின் மனம் தன்னை நிராகரித்த தன் அப்பாவை ஜஸ்டினுடன் ஒத்துப் பார்த்தது. ரெஜினாவிற்கு எத்தனை மோசமான ஏமாற்றங்கள் வாழ்க்கையில் இருந்தாலும் ஜஸ்டின் போன்ற தந்தை கிடைத்திருப்பது அதிர்ஷ்டம்தான் என்று எண்ணிக் கொண்டவள் அவரிடம்,   

“சார்... நீங்க நினைக்குற மாதிரி இல்ல... ரெஜி மேடம் ரொம்ப தைரியமானவங்க... அவங்களால அவங்க எமோஷன்ஸ் தனியா ஹாண்டில் பண்ண முடியும்” என்றாள். அவள் பார்த்துப் பழகிய வரைக்கும் ரெஜி அப்படியான பெண்தான்.

ஆனால் ஜஸ்டின் மனம் அமைதியடையவில்லை.

“என்னோட பயமும் அதுதான் மதி... அவ எமோஷன்ஸ் கடைசி வரைக்கும் அவ தனியாவே ஹான்டில் பண்ற மாதிரி ஒரு சூழ்நிலை உருவாயிட்டா?” என்று நிறுத்தி ஜஸ்டினின் யோசிப்பதைப் பார்த்து,

“இப்போ என்ன சார் யோசிக்க்குறீங்க... மேடம்கிட்ட நான் வேணா பேசிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் மதி.   

“இல்ல வேண்டாம்” என்றவர் மேலும்,

“கூடிய சீக்கிரம் நான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்”

“சார் என்ன சொல்றீங்க?”

“ஆமாம்...  பண்ணி வைப்பேன்... அவளை உயிருக்கு உயிரா நேசிக்குறவனா அவளை சந்தோஷமா பார்த்துக்குறவனா ஒருத்தனைத் தேடிப் பிடிச்சு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்...

என் டாட்டர் வாழ்க்கைல அப்படி ஒருத்தனைக் கொண்டு வர்ற வரைக்கும் எனக்கு நிம்மதியே இல்ல... அப்படி ஒருத்தனை என் ரெஜிக்கு கல்யாணம் செஞ்சு வைக்க நான் என்ன விலை வேணாலும் கொடுக்க தயாரா இருக்கேன்.” என்றவர் உறுதியாகக் கூற, மதி ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்திருந்தாள்.

shanbagavalli, thavamalar.jagan and 3 other users have reacted to this post.
shanbagavallithavamalar.jaganmadhivadhani.storiesanu.shreebhavanya lakshmi.nagarajan
Quote

interesting start... 

 

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from madhivadhani.stories on December 11, 2023, 3:36 AM

interesting start... 

 

Thank you

 

Quote

Hi moni sis 

Quote
Quote from bhavanya lakshmi.nagarajan on December 29, 2023, 6:17 PM

Hi moni sis 

ஹாய் மா. வணக்கம் மற்றும் வருக வருக 

 

Quote

Hi Moni sis I am new to this site only but ungaloda ella storyum padithuvitten. I am very big fan of you. I love all of your story very much. Prabanjan from “Avanindry ore anuvum” my favorite hero and my favorite story. In ungal storyla ulla ella heroins my favorites. Senthamizh character enakku romba pidicha and ennai admire panna character. Ungal ella kadhayilum edho oru samooga karuthu nichayam irukkum. I like your way of writing. Hero or heroin pattri romba exaggerate pannamal romba edharthamana kadhai mattumillai kadhapathirangalum enakku pidikkum. Oru essay ezhudum alavukku naan ungalai pattri ezhuda sonnaal ezhudhuven sis. Ippothan indha story start panni irukken adhanaal padichitu comment panren sis. My best wishes to you sis 💐💐💐

Quote

Belated new year wishes sorry sis. Wish you happy new year to you and your family sis 

Quote
Quote from bhavanya lakshmi.nagarajan on January 3, 2024, 7:43 PM

Hi Moni sis I am new to this site only but ungaloda ella storyum padithuvitten. I am very big fan of you. I love all of your story very much. Prabanjan from “Avanindry ore anuvum” my favorite hero and my favorite story. In ungal storyla ulla ella heroins my favorites. Senthamizh character enakku romba pidicha and ennai admire panna character. Ungal ella kadhayilum edho oru samooga karuthu nichayam irukkum. I like your way of writing. Hero or heroin pattri romba exaggerate pannamal romba edharthamana kadhai mattumillai kadhapathirangalum enakku pidikkum. Oru essay ezhudum alavukku naan ungalai pattri ezhuda sonnaal ezhudhuven sis. Ippothan indha story start panni irukken adhanaal padichitu comment panren sis. My best wishes to you sis 💐💐💐

எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. உங்க கருத்தை படித்ததும் அவ்வளவு சந்தோஷமாகவும் நெகிழ்வாகவும் இருக்கு. உங்க பாராட்டுக்கும் அன்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா. 

 

Quote

Super ma 

Quote

Super ma 

Page 1 of 2Next

You cannot copy content