You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 13

Quote

13

பௌர்ணமி இரவில் ஒளிரும் வட்ட நிலவைக் கடற்கரை மணலில் அமர்ந்தபடி இரசித்திருந்தாள் ரெஜினா.

இயற்கையை உணர்வுபூர்வமாக இரசிப்பதை விடவும் ஆகச் சிறந்த வேறொரு விஷயம் இப்பூமியில் இருப்பதாய் இதுவரையில் அவள் உணர்ந்ததில்லை.

மனம் அமைதியாக இயற்கையினுள் சங்கமித்த போதும் தன் இயலாமையை எண்ணி அவள் மனம் ஒரு பக்கம் வேதனையுறவும் செய்தது.

இந்த நொடி கால்கள் இருந்தால் அவள் இப்படி அமைதியாக உட்கார்ந்து கொண்டா இருப்பாள்? அந்த மணற்வெளி முழுவதும் அவள் பாதத் தடங்களின் அடையாளங்கள் சிதறிக் கிடந்திருக்கும்.

இயற்கையனூடே அமைதியாக நதி போல பாய்ந்து கொண்டிருந்த அவள் சிந்தனையில் இடையிட முடியாமல் ஆனந்தன் மௌனமாக அமர்ந்திருந்தான்.

பிறந்த நாள் விழா முடித்து அவர்கள் பெற்றோரை வீட்டில் விட்டுத் திரும்பும் போது, “வீட்டுக்குப் போக வேண்டாம்... பீச்சுக்குப் போகலாம்” என்றாள்.

“இந்த நேரத்துலயா” அவன் அவளைத் தயக்கமாகப் பார்த்துக் கேட்டு,

“பகல் நேரத்துல தனியா போனதுக்கே உங்க அப்பா டென்ஷன் ஆனாரு... நீ என்னடானா நட்டநடுராத்திரில போகலாம்குற” என்றவன் மேலும்,

“இப்ப வேண்டாம் ரெஜி... நாம காலைல வேணா வருவோம்” என்றான்.

“திஸ் இஸ் தி ரைட் டைம்” என்றவள் கார் ஜன்னல் வழியாக வானில் மின்னிய முழு நிலவைக் காட்டி, “இந்த மாதிரி ஃபுல் மூன் லைட்ல சீ ஷோர்ல இருந்தா ரொம்ப ரொமான்டிக்கா இருக்கும்... போலாம்” என்றாள்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க, “என்ன ஆனந்த் யோசிக்குற... போலாம்” என்றாள் மீண்டும்.

அவன் தயக்கத்துடன்,  “சரி போலாம்... ஆனா ஜெய்க்கு ஃபோன் பண்றேன்” என்றவன் தன் அலைப்பேசி எடுக்கப் போக,

“வேண்டாம்” என்றவள் அவனைக் கைப்பேசியை எடுக்க விடாமல் தடுத்து, “நீதானே சொன்ன நம்ம இரண்டு பேருக்குள்ள எந்த மூணாவது மனுஷங்களும் வரக் கூடாதுன்னு” என்றதும் அவன் முகம் சுணங்கியது. அவள் அர்ச்சனாவைக் குறிப்பிடுகிறாளோ என்று படபடத்தவன் நேராக காரைக் கொண்டு வந்து கடற்கரையில் நிறுத்திவிட்டு அவளைத் தூக்கி வந்து அமர வைத்தான். 

இருவரும் அங்கே வந்து அமர்ந்து கால் மணிநேரத்திற்கு மேலாகிவிட்டது. அவளாக எதுவும் கேட்காது போக தானாக பேச்சைத் தொடங்க வேண்டாம் என்று அவனும் அமைதி காத்தான்.  

“ஆனந்த்... நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்றவள் இரண்டு கைகளைப் பின்புறமாக ஊன்றி மேலே நிலவைப் பார்த்தபடி வினவ,

 “ம்ம்ம் கேளு” என்றான். அவனுக்கு அவள் என்ன கேட்க போகிறாளோ என்று உள்ளுர பதட்டமாக இருந்தது.

“பி ஹானஸ்ட்... கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு என் பேர்ல இருந்த ஒப்பீனியன் என்ன?”

இதை வந்து இந்த நேரத்தில்தான் இவள் கேட்க வேண்டுமா என்று எண்ணியவன், “கண்டிப்பா இப்போ நான் அதைச் சொல்லியே ஆகணுமா?” என்று யோசனையுடன் அவளைப் பார்க்க,  

“நீதானே கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன் சொன்ன... சொல்லு” என்றாள்.

அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு கடலலைகளைப் பார்த்தபடி, “பணக்கார, திமிர் பிடிச்ச பொண்ணுனு நினைச்சேன்... முதல் தடவை பார்க்கும் போது நீ நடந்துக்கிட்ட விதம் பேசுன விதம்... என் வண்டியை இடிச்சுத் தள்ளுன விதம்... எனக்கு அப்படிதான் தோனுச்சு” என்றான்.

“வண்டியை இடிச்சு தள்ளுனேனா” என்று அவள் யோசிக்க,

“நீ டிரைவிங் கத்துட்டு இருந்த டைம்ல சாரைப் பார்க்க ஆஃபிஸ்க்கு தனியா கார் ஓட்டிட்டு வந்தியே” என்று அவன் நினைவுப்படுத்த,

“எஸ்... எஸ்... ஞாபகம் இருக்கு... ஓஒ அப்போ அது உன் வண்டியா... டேம்... இதை நான் எதிர்பார்க்கல.”

”அன்னைக்கு  டேட் ஏற்கனவே ஏன் டிரைவ் பண்ணிட்டு வந்தேன்னு கேட்டாரா... எங்க தெரிஞ்சா திட்டப் போறாருன்னு இடிச்சதும் பயந்து காரை ஓட்டிட்டு எஸ்கேப் ஆகிட்டேன்” என்று சொல்லிச் சிரித்தவள்,

“ஆனா அதுக்காக நான் ஒன்னும் திமிர் பிடிச்சப் பொண்ணு எல்லாம் கிடையாது... ஓகே” என்றாள்.

“அப்போ எனக்குப் பார்க்க  நீ அப்படிதான் இருந்த” என்றவன் சொல்ல,

“நீ என்னை அப்படி பார்த்தனு சொல்லு” என்றதும் அவன் இருக்கலாம் என்பது போல தோள்களைக் குலுக்க அவள் மீண்டும் கடலைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, “அர்ச்சனா பத்தி எதுவுமே கேட்கல” என்றான்.

“என்ன கேட்கணும்?” என்றவள் அவன் புறம் திரும்ப,

“அர்ச்சனா உன்கிட்ட என்ன சொன்னாலோ அத பத்தி” என்றான்.

“ஏன் கேட்கணும்…? நீ நிக்கைப் பத்தி கேட்டியா?” என்றதும் அவனுக்குக் கோபமேறியது

“இப்போ எதுக்கு நீ நிக்கைப் பத்திப் பேசுற?”

“நீ உன் பாஸ்ட் லவ்வைப் பத்திப் பேசும் போது... நான் என் பாஸ்ட் லவ்வைப் பத்திப் பேசக் கூடாதா?” என்றவள் விதாண்டாவாதமாகக் கேட்க,  

“அர்ச்சனா ஒன்னும் என் பாஸ்ட் லவ் எல்லாம் இல்ல... அவளுக்கும் எனக்கும் இடையில எமோஷனல் ஆர் ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப்னு எதுவும் இல்ல” என்றவன் சொன்ன நொடி,  

 “இப்போ நீ என்ன சொல்ல வர்ற... எனக்கும் நிக்குக்கும் இடையில ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் இருந்துச்சுன்னா?” என்றவள் கடுப்புடன் திருப்பிக் கேட்டாள்.

“உனக்கும் நிக்குக்கும் இடையில இருந்த உறவைப் பத்தி நான் பேசவே இல்ல” என்றான்.

“ஆனா நீ என்னைக் குத்திக் காட்டுற... நானும் நிக்கும் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்ல இருந்திருப்போம்னு நீயா ஒரு கற்பனை பண்ணிட்டு இருக்க…” என்றவள் சொல்லவும் அவன் முகம் இருண்டுவிட்டது.

“ஹ்ம்.... அப்போ உனக்கும் அவனுக்கும் இடையில ஒன்னு இல்லனு மறுக்க போறியா?” என்று அவன் பட்டென்று கேட்டுவிட,

“நீ நினைக்குற மாதிரி டர்டியா எதுவும் இல்ல” என்றாள்.

“ஷட் அப்... நான் அந்த மாதிரி எல்லாம் எதுவும் யோசிக்கல”

“அப்போ ஏன் என்னை நிக்கைப் பத்திப் பேச வேணான்னு சொல்ற... அன்னைக்கு நீ என்னை கிஸ் பண்ணும் போது நான் நிக் பேரைச் சொன்னதுனாலதான… 

”யா இட்ஸ் எ மிஸ்டேக்... தப்புதான்... ஆனா அதுக்காக நிக்கை என்னால மறக்க முடியாது... நான் அவனை லவ் பண்றேன்” என்றாள்.  

“கம் அகைன்... லவ் பண்...றியா?” என்று அவன் திருப்பிக் கேட்கவும்தான் அவளுக்குத் தான் என்ன சொன்னோம் என்று விளங்கியது.

அப்படி அவள் சொன்னது ஒரு வகையில் உண்மைதான் என்று அவளுக்குத் தெரியும். இன்னும் அவள் மனதில் அவனைக் காதலிக்கிறாள்தானே.

அவள் சில நொடி மௌனத்திற்கு பின், “ஆமா பண்றேன்... இப்பவும் நான் நிக்கை லவ் பண்றேன்... எப்பவும்... என்னோட வாழ்க்கையோட கடைசி நொடிகள் வரையும் நிக்கை நான் லவ் பண்ணுவேன்” என்று விட்டாள்.

அவள் தன் வார்த்தைகளை மறுக்காமல் ஏற்றுக் கொண்டது அவனை உடைத்து நொறுக்கியது. ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படி அவள் தன்னுடன் வாழ்ந்து கொண்டு வேறொருவனைக் காதலிக்கிறேன் என்பாள்.

அவன் முகம் கடுகடுத்தது, “அவனை இவ்வளவு டீப்பா லவ் பண்றன்னா ... அப்போ என்னைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொன்னது... நம்ம கல்யாணம்... நம்ம வாழ்க்கை... அது எல்லாம் பொய்யா?” என்று அவன் தீவிரமாகக் கேட்க,

“நான் உன்னையும்தான் காதலிக்கிறேன் ஆனந்த்... உன்கிட்ட உண்மையாதான் இருக்கேன்... உன் கூட இருக்கும் போது நான் சந்தோஷமா இருக்கேன்... மறுக்கல” என்றாள்.

 “என்னையும் காதலிகுறியா... ச்சை... எப்படிறி உன்னால இப்படி பேச முடியுது?” என்று அசூயையாக முகத்தைச் சுழித்தவன்,

“இப்பவும் அதே அரகென்ட் திமிரு பிடிச்சப் பொண்ணுதான் தெரியுறா உன் முகத்துல... உன்கிட்ட போய் உட்கார்ந்து பேசிட்டு இருக்கேன் பாரு... என்னைச் சொல்லணும்” என்று அவன் கட்டுகடங்கா கோபத்துடன் எழுந்து விறுவிறுவென்று நடக்க, அவள் அதிர்ந்தாள்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் திடீரென்று எழுந்துச் செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

“ஆனந்த்.... ஆனந்த்.... ஆனந்த்... என்னையும் கூட்டிட்டு போ...  ஆனந்த் ஸ்டாப்” என்றவள் காட்டு கத்தலாக கத்த, அவள் குரல் கேட்காதத் திசைக்கு அவன் விரைந்து முன்னே சென்றிருக்க, அவள் ஏமாற்றத்துடன் திரும்பினாள்.

செல்பேசியைக் கூட காரிலேயே வைத்துவிட்ட நிலையில் இப்போது எப்படி இங்கிருந்து செல்வது என்று அவளுக்கு புரியவில்லை.

அவளுக்கு உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. செயலிழந்த தன் கால்களைப் பார்த்தவள் கண்களில் கண்ணீர் பெருகி வெளியே வந்து விழுந்தது. தன் இயலாமையை நொந்து கொண்டவள் முகத்தை மூடி அழத் தொடங்கிய சமயம் ஆனந்தன் கரங்கள் அவளை அணைத்துத் தூக்கிக் கொண்டன.

ஒரு நொடி அவளுக்கு உயிர் போய் உயிர் வந்துவிட்டது.

“சாரி கோபத்துல... என்ன செய்றனு தெரியாம நான் பாட்டுக்கு எழுந்து போயிட்டன்... ஐம் சாரி ரெஜி” என்றவன் கூறும் போதே,

அவள் கொஞ்சமும் யோசிக்காமல் பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்துவிட்டாள். அவள் அடியில் அவன் அதிர்ந்து பார்க்க அடுத்த நொடி அவள் கரங்கள் அவன் கழுத்தை இறுகிக் கட்டிக் கொண்டு அழ, அவன் ஆறுதலாக அவள் பிடியை இறுக்கிக் கொண்டான்.

அவன் கழுத்திலிருந்து கைகளை விலக்கிக் கொள்ளாமல் அழுதபடியே இருக்க, “வீட்டுக்குப் போலாமா?” என்று கேட்கவும், 

“ம்ம்ம்” என்றவள் குரல் விசும்பலுடன் வந்தது.

அவளை காருக்குத் தூக்கிச் சென்று அமர வைத்தவன் அவள் கன்னங்களைப் பற்றியபடி கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஐம் சாரி ரெஜி” என்று விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான். 

அதன் பின் கார் அமைதியாக அவர்கள் வீட்டில் வந்து நிறுத்தி அவளை இறக்க முற்படவும், “நான் நிக்கைப் பத்திப் பேசணும்” என்று பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.

“ரெஜி”

“பேசணும்” 

அவள் பக்கமிருந்த கார் கதவைத் திறந்து பிடித்திருந்தவன், “நாம இதைப் பத்தி வீட்டுக்குள்ள போய் பேசலாம்” என,

“இங்க இப்போ பேசணும்” என்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் முகம் இருண்டு போனது. 

“இப்போ டாபிக் நிக்கே இல்ல... அர்ச்சனாதானே... அப்புறம் எதுக்கு நீ தேவை இல்லாம நிக்கை உள்ள இழுத்துட்டு வர?” என,

“ப்ச்... எனக்கு அர்ச்சனா ஒரு மேட்டரே இல்ல... நீ அவளை லவ் பண்ணி இருப்பன்னு நான் யோசிக்க கூட இல்ல. நீ சரியான ஈகோ... அடமென்ட் பெர்ஸன்... நீ உண்மையிலேயே அந்தப் பொண்ணை லவ் பண்ணி இருந்தா... என்ன மாதிரியான பிரச்சனை வந்திருந்தாலும் அவளைப் பிடிவாதமா நின்னு கல்யாணம் பண்ணிட்டு இருப்ப.” என்றவள் சொன்னதைக் கேட்டு ஆச்சரியமுற்றான்.

இவ்வளவு தெளிவாக அவள் தன்னைக் கணித்திருப்பது அவனை வியக்க வைக்க, “உண்மைதான்... நானும் அர்ச்சனாவும் பக்கத்துப் பக்கத்து வீடு... இரண்டு பேரும் ஒன்னா வளர்ந்தோம்... சின்ன வயசுல இருந்தே ஃபிரண்ட்ஸா இருந்தோம்... ஆனால் எனக்கு அவகிட்ட எமோஷனல் பாண்டிங் எல்லாம் இல்ல... எனக்கு நிறைய ஃபேமிலி பிரச்சனை இருந்துச்சு…”

”படிப்பு வேலைன்னு இருந்த எனக்கு லவ் பண்ண எல்லாம் பெருசா டைம் கிடைக்கல.... தங்கச்சி கல்யாணம் எல்லாம் முடிஞ்சு நான் கொஞ்சம் எக்கனாமிக்கலா செட்டில் ஆகி இருந்த போது அர்ச்சனா கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டா... ஒய் நாட்... தெரிஞ்ச பொண்ணு... ஓகே சொல்லலாம்னு நினைச்சு சரின்னு சொன்னேன்” என்றவன் உரைக்க, 

அவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “சரின்னு சொல்லிட்டு அப்புறம் பணத்துக்காக மாத்திப் பேசிட்ட...  இல்ல” என்றதும் அவன் பதில் பேசவில்லை. அவன் மௌனம் அவள் சொன்னதை ஆமோதிப்பது போலிருந்தது. அது பற்றி அவள் மேலே பேச விரும்பவில்லை.

“பைன்... இப்போ என் டர்ன்... நான் நிக்கைப் பத்தி சொல்லணும்” என்றாள்.

அவன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, “ ஓகே சொல்லு... ஆனா வீட்டுக்குள்ள போய்” என்று விட்டு அவளைத் தம் கரங்களில் தூக்கிக் கொள்ள, அவள் நிக்கைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள். 

அவனுக்கு ஏனோ அவளுடைய காதல் கதையைக் கேட்கத் துளி கூட விருப்பமில்லை. அதுவும் தான் உணர்வுப்பூர்வமாக அவளுக்குக் கொடுத்த முத்தத்தை அவள் இந்த நிக்குடன் இணைத்து அவனைத் தன்னிடத்தில் உணர்ந்ததை ஆனந்தனால் எப்படி சாதாரணாமாக எடுத்துக் கொள்ள முடியும்.

அதனாலேயே நிக் என்ற பெயரின் மீது அவனுக்கு அவ்வளவு வெறுப்பு இருந்தது. அந்த வெறுப்பும் கோபமும் ரெஜினாவுக்கும் தனக்கும் இடையிலான உறவைப் பாதிக்கக் கூடாது என்று நினைத்துதான் அந்தப் பெயரை அவள் மீண்டும் சொல்லக் கூடாது என்று அறிவுறுத்தினான்.

ஆனால் அவள் நிக்கைச் சந்தித்ததுத் தொடங்கி அவர்களுக்கு நிகழ்ந்த விபத்து வரை சொல்லி முடித்த போது உண்மையிலேயே அவன் மனமும் நெகிழ்ந்துவிட்டது.

அவள் மேலும், “என்னை யாரும் மீட்க வாராம இருந்திருந்தா... நிக் உடம்போட நான் புதைஞ்சு போயிருப்பேன்... பா... அந்த மொமன்ட்... அந்த மெமரீஸ்... இப்போ யோசிச்சாலும் இட்ஸ் ஹாரிப்பில்.”

”ஏன்... இப்பவும் சில நேரங்களில் நிக்கோட உடம்பு என் பக்கத்துல படுத்து இருக்க மாதிரி தோனும்... அது கனவா நிஜமான்னு எனக்கு ஒன்னுமே புரியாது.”

”அதே மாதிரி ஒரு மனநிலைலதான் நீ ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் கிஸ் பண்ணும் போது என்னையும் அறியாம அவன் பேரைச் சொன்னது... எனக்குத் தெரியும்... நான் அப்படி செஞ்சது உன்னை எவ்வளவு ஹார்ட் பண்ணி இருக்கும்னு.... அப்பவே உனக்குப் புரிய வைக்க நினைச்சேன்... பட் நீ கேட்கத் தயாரா இல்ல..”

”சாரி... நான் இப்பவும் நிக்கை லவ் பண்றன்னு சொன்னது உனக்கு ஏத்துக்க கஷ்டமா இருக்கலாம்... பட் தட்ஸ் ட்ரூ ஆனந்த்... என்னால நிக்கை எந்தக் காலத்துலயும் மறக்க முடியாது” என்றவள் பேசி முடிக்கும் போது அவள் கண்களில் தெரிந்த ஆழமான வலியை ஆனந்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த நொடியே அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு, “ஐம் சாரி... நான் யோசிக்காம கோபப்பட்டுட்டேன்... உன் உணர்வுல எந்தத் தப்பும் இல்ல... நிக் இஸ் ரியலி கிரேட்” என்று தன் தவறை உணர்ந்து பேச அவளும் அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.

எப்படியோ நிக்கைப் பற்றி அவனிடம் பகிர்ந்து கொண்டது அவள் மனதிற்கும் அமைதியையும் நிம்மதியையும் கொடுத்தது.

அவர்களின் திருமண உறவில் நிறைய கோபங்களும் தாபங்களும் இருந்த போதும் ஓரளவு அவர்கள் வாழ்க்கை சுமுகமாகவே பயணித்தது.

 ஆனால் அந்தப் புகைப்படத்தின் பின்னிருந்த உண்மை தெரிய வந்த போது ரெஜினா ஆனந்தனை முழுதாக வெறுக்கும் மனநிலைக்கு சென்றுவிடுவாள் என்றும் அவன் உறவையே தூக்கி எரிய துணிவாள் என்றும் அவளே எதிர்பார்த்திருக்கவில்லை,

kothai.suresh and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
kothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Ivanga ellorum Madhiyoda familya sis?

Quote

Super ma 

You cannot copy content