You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 2

Quote

2

 பேராசை

மோகன் கன்னத்தில் கை வைத்துக் கப்பல் கவிழ்ந்த நிலையில் அந்த அறையின் படுக்கைமீது அமர்ந்திருக்க, ரஞ்சனோ அப்போது பார்த்துதான் தன் மனைவியிடம் காதல் பொங்கப் பொங்கப் பேசிக்கொண்டிருந்தான்.

திருமணமாகி ஆறுமாதமே ஆன நிலையில் மனைவியை விட்டு வந்த கவலை அவனுக்கு. அதுவும் அவளுக்கோ இப்போது மூன்று மாதம். அதனால் அவளால் வர முடியாது போக மனைவியினைப் பிரிந்திருக்கும் துயர் வெகுவாய் அவனை வாட்டியிருந்தது. அவர்களின் சம்பாஷணையை வேறுவழியின்றி கேட்டும் கேட்காமலும் இருந்த மோகனின் மனக்குமுறல் இன்னும் அதிகரிக்க,

ஷிவானி அந்த கெவின் சியாங்... சே!... சியாங் கெவினை அனுப்பி விட்டாளா என்ற ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். அந்தச் சமயம் மோகனின் தாய் நளினி தன் நாத்தனாரிடம் எல்லாக் கதைகளையும் ஒன்றுவிடாமல் அளந்துவிட்டு அந்த அறைக்குள் நுழைந்தார்.

மோகனின் சோகமயமான தோற்றத்தை அவர் உற்றுப் பார்க்க, அவனோ அவர் வந்த உணர்வே இல்லாமல் பார்வையை எங்கோ வெறித்திருந்தான். அவன் தோளைத் தட்டி, "டேய் மோகன்" என்றவர் அழைக்க, உணர்வுபெற்று அவரை ஏறிட்டான். அவன் முகத்திலோ சொல்லவொண்ணாத பல உணர்வுகள் ஒரு சேரக் கலந்திருந்தது.

நளினி புரியாத பார்வையோடு, "என்னடா ஆச்சு உனக்கு? என்ன? வாணி கூட ஏதாவது பிரச்சனையா? அதுவும் அவ செஞ்சு வைச்சதை எல்லாம் நீ சரியாவே சாப்பிடலைன்னு புலம்பித் தள்ளிட்டிருக்கா" என்றவர் கேட்டு அவனின்  வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச,  அவரை விழிஇடுங்க சற்று கோபமாய் மூச்சிறைக்கப் பார்த்தவன்,

"அதையெல்லாம் சாப்பிடறதுக்குப் பதிலா... ஒரு பாட்டில் விஷத்தைக் குடிச்சிரலாம்" என்று சொல்லிக் கடுகடுத்தான்.

"என்னடா பேசுற?" என்றவர் அதிர,

"போம்மா... நீயே போய் அந்த குங்ஃபு பாண்டாவெல்லாம் சாப்பிட்டுப் பார்" என்றவன் அழாத குறையாகச் சொல்லும் போது, ரஞ்சன் தன் கைப்பேசி உரையாடலை முடித்துவிட்டுத் திரும்பியிருந்தான்.

அதோடு தன் தம்பியை பார்த்து, "டே... குங்ஃபு பாண்டா இல்லடா... குங் பஃவ் சிக்கன்" என்று சொல்லி வைக்க, மோகனுக்குக் கோபமேறியது. அருகாமையில் இருந்த தலையணையை தன் தமையன் முகத்தில் வீசியவன்,

"போடா அங்கிட்டு... அது என்ன எழவா இருந்தாதான் இப்ப என்ன?" என்று சொல்லும்போது நளினி அதட்டலாக,

"டேய்... அண்ணங்கிட்ட கொஞ்சம் மரியாதையாப் பேசு" என்றார்.

மோகன் பதிலுரைப்பதற்கு முன்னதாக, ரஞ்சன் முந்திக் கொண்டு, "விடுங்கம்மா... அவன் இப்போ வேற டென்ஷன்ல இருக்கான்" என்று சொல்லவும் நளினி குழப்பமானார்.

அவர் மோகனை யோசனைகுறியோடுப் பார்த்து, "ஆமா என்னடா பிரச்சனை உனக்கு?... அதையாச்சும் சொல்லி தொலை" என்க, இப்போது ரஞ்சனும் மோகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதி காத்தனர்.

நளினி பொறுமையிழந்து, "என்ன்ன்ன்னங்க டா" என்றவர் இருவரையும் பார்த்துக் கடுப்படித்தார்.

ரஞ்சன் தன் தம்பியைப் பார்த்து, "சொல்றா" என்றதும்

மோகன் தவிப்போடு தன் அம்மாவின் கரத்தைப் பற்றிக் கொண்டு, "எனக்கும் ஷிவாக்கும் எப்போ ம்மா கல்யாணம்" என்றவன் சிறுபிள்ளைத்தனமாகக் கேட்டு வைக்க, அவர் அப்படியே அதிர்ந்தார். என்ன செய்வது? அவன் பிரச்சனை அப்படி?

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டுப் போயிட்டா? அதுவும் ஒரு சைனா மேட்... தாங்க முடியாமல்தான் அப்படிக் கேட்டுவிட்டான். அவன் கவலை புரியாமல் நளினியோ,

"டேய் உனக்கும் அவளுக்கும் இப்போதானேடா இருபது இருபத்தி ஒண்ணு ஆவுது... அதுக்குள்ள என்னடா உனக்கு கல்யாணத்துக்கு அவசரம்?" என்று கேட்க,

"பின்ன... டோங் லீ மாதிரி ஒரு வில்லன் அவன் வாழ்க்கையில வந்தா அவன் என்னதான் பண்ணுவான் பாவம்" என்று தம்பிக்கு ஒத்து ஊதினான் ரஞ்சன். அவன் சொன்னது புரியாமல், "யாருடா அவன் டோங் லீ?" என்று நளினி கேட்க,

"ஏன்ம்மா... நீ ஏழாம் அறிவு பார்த்ததில்லை... ஒருத்தன் ஒசரமா வெள்ளையா" என்று ரஞ்சன் விவரிக்க,

"டேய் அண்ணா" என்று மோகன் எரிச்சலாகி அவன் பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் தன் அம்மாவை நோக்கி,

"ம்மா... ப்ளீஸ் மேரேஜ் கூட வேண்டாம்... பேசாம ஓரு பாஃர்மாலிட்டிக்கு எங்கேஜ்மெண்ட் பண்ணிக்கலாமே" என்று ஏதோ ஒரு வழியிலாவது அவன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள எண்ணினான்.

"என்ன மோகன் பேசுற நீ?... அசல்ல பொண்ணெடுத்தாதான் இந்த மாதிரி சம்பிரதாயம் எல்லாம்... அவ உன் சொந்த மாமன் பொண்ணுடா" என்று மீண்டும் நளினி அவன் விருப்பத்திற்கு பிடி கொடுக்காமலே பேச, அவன் எப்படி தன் நிலைமையை விளக்குவான்.

ரஞ்சன், மோகன் இருவரும் அப்போது மௌனமாய் இருக்க நளினி அவர்களைப் பார்த்து, "இப்படியே லூசு மாதிரி பேசிக்கிட்டில்லாம... நாளைக்கு ஊருக்குப் புறப்படணும்... இரண்டு பேரும் அவங்க அவங்க திங்க்ஸை எல்லாம் எடுத்து பேக் பண்ற் வழியைப் பாருங்க" என்றவர் அதிகாரமாய் சொல்லிவிட்டு வெளியேறினார்.

ரஞ்சன் ஆர்வமாக, "ஆமா மோகன்... டைம் இல்ல... வா வா திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணலாம்" என்றழைத்தான்.

"அதெல்லாம் முடியாது... நான் ஷிவானியை விட்டு வர மாட்டேன்"

"என்னடா உளர்ற?"

"பின்ன... அந்த கியாங் சியாங்கோ... அவன் என் வாழ்க்கையில விளையாடிட்டான்னா? ஷிவானியை கல்யாணம் பண்ணிக்கிற என் ஆசை கனவெல்லாம் என்ன ஆகிறது"

"டேய்... அப்படியெல்லாம் நடக்காதுடா"

"உனக்கு கன்பாஃர்ம்மா தெரியுமா?" என்று கேட்டு மோகன் அவனைக் கூர்ந்து பார்க்க,

"அதில்ல... அவ உனக்குதான்னு ஆல்ரெடி பேசி முடிச்சதுதானே" என்றவன் தம்பியை எப்படியாவது சமாதானம் செய்ய முயற்சித்து பார்த்தான். ஆனால் மோகனின்  மனமோ அமைதியடைய மறுத்தது.

அவன் மனமெல்லாம் ஷிவானியும் அந்த சைனாக்காரனும் நெருக்கமாய் பேசிக் கொண்டிருந்ததை பற்றியே எண்ணிக் கொண்டிருக்க,

அப்போது அந்த அறைக் கதவருகில் வந்து நின்றாள் ஷிவானி.

"வா ஷிவானி" என்று ரஞ்சன் அவளைப் பார்த்துவிட்டு உள்ளே அழைக்க, மோகன் அவளைப் பார்த்ததும் தன் மனநிலையை மாற்றிக் கொள்ள முயன்றான்.

மோகன் சிரமப்பட்டு புன்னகைக்க ஷிவானியோ சந்தேகித்த பார்வையோடு, "என்ன லா... என் குக்கிங் பத்தி எதுவும் சொல்லல... டிஷ்ஷெல்லாம் நல்லா இருந்துச்சா?" என்று கேட்டாள்.

‘படுகேவலம்’ என்று மோகன் வாய்க்குள் முனகிக் கொண்டிருக்கும் போதே ரஞ்சன் அவளிடம்,

"என்ன இப்படிக் கேட்டுட்ட... எல்லாமே செம சூப்பர்... செம டேஸ்ட்" என்க, ‘செம ஒர்ஸ்ட்’ என்று மோகன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

ஷிவானி மோகனின் முகபாவனைகளை கவனித்து, "என்ன மோக்? நீ எதுவும் சொல்ல மாட்டேன்ற... உனக்குப் பிடிக்கலயா?" என்று கேட்க,

"சேச்சே... நீ என்னம்மா சமைச்சிருந்த... அதுவும் அந்த சூப்... சான்ஸே இல்ல... என் வாழ்க்கையில அப்படி ஒண்ணை நான் சாப்ப்ப்ப்பிட்டதேயில்லை" என்றவன் வஞ்சப்புகழ்ச்சி செய்துக் கொண்டிருப்பதை உணராமல்

"நிஜமாவா லா" என்றவள் ஆனந்தமாய் கேட்க, "ஹ்ம்ம்...பின்ன" என்றான்.

"அந்த சூப் இன்னும் மிச்சம் இருக்கு... நான் போய் சூடு பண்ணி உனக்காக எடுத்துட்டு வர்றேன்" என்றவள் சொல்லிவிட்டு செல்லப் பார்க்க மோகன் அதிர்ச்சிக்குள்ளானான்.

ரஞ்சனோ வாயைப் பொத்தி கொண்டு தன் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டிருக்க அவள் வெளியேறுவதற்கு முன்னதாக மோகன் அவளை தடலாடியாகத் தடுத்து நிறுத்தி,

"இப்ப வேண்டாம் ஷிவா... ஆல்ரெடி நீ சமைச்சதெல்லாம் சாப்பிட்டு என் வயிறு புஃல்... இதுக்கு மேல முடியாது... வேணா நைட் சாப்பிடுவோமே" என்று சமாளித்துவிட அவளும், "ஒகே" என்றாள்.

ரஞ்சன் சிரிப்பு தாளாமல் அவர்களை அந்த அறையில் தனியே விடுத்து வெளியேறிவிட மோகனுக்கு அப்போது அந்தத் தனிமை தேவையாயிருந்தது.

"ஏன் சிவா? நாங்க நாளைக்கு சென்னைக்குப் போறோமே... உனக்கு கஷ்டமாவே இல்லையா?" என்று கேட்டு அவள் மனதின் எண்ணத்தை அவன் ஆழம் பார்க்க,

அவள் சோர்ந்த முகத்தோடு "சீரியஸ்லி மோக்... எனக்கு ரொம்ப பீலிங்ஸாதான் இருக்கு" என்றாள். அதைக் கேட்ட நொடி அவன் முகம் பளிச்சென்று ஒளிவீச,

அவள் மேலும், "தெரியுமா லா?... நாளைக்கு உங்களுக்காக இட்டேலியன் குஸைன் ட்ரை பண்ணலாம்னு இருந்தேன்... அதுக்குள்ள நீங்க கிளம்பறீங்க... ஸோ ஸேட்" என்று அவள் வருத்தமுற, அவன் பதறிப் போனான்.

'அடிப்பாவி... இதுக்காகவா நீ பீஃல் பண்ற... நானும் என்னமோன்னு நினைச்சேன்' என்று மனதிற்குள் பொறும,

ஷிவானி அவனை ஏக்கமாய்ப் பார்த்து, "நாளைக்கு கண்டிப்பா போகணுமா மோக்?" என்று கேட்டாள்.

"என்ன ஷிவா? டிக்கெட்டெல்லாம் புக் பண்ணியாச்சே... எப்படி கேன்ஸல் பண்ண முடியும்" என்று மோகன் அவள் சமையலிலிருந்து தப்பிக் கொண்டால் போதுமென்று அவன் சொல்ல,

அவளோ, "ப்ச்... கரெக்ட்தான் லா... எப்படி கேன்ஸல் பண்ண முடியும்?!" என்று வேதனையுற்றாள்.

 "அதை விடு ஷிவா... நாங்க நாளைக்குதானே ஊருக்கு போறோம்... இன்னைக்கு நம்ம இரண்டு பேரு மட்டும் தனியா வெளியே போவோமா?!" என்றவன் ஆவல் ததும்பக் கேட்க,

"சூப்பர் லா... ஆனா தனியா வேண்டாம்... நாம அத்தை ரஞ்சன் எல்லாரையும் கூட்டிட்டுப் போவோம்... பக்கத்தில ஒரு பேஃமஸ் ரெஸ்டாரெண்ட் இருக்கு... அங்க போவோம்... இன்டியன் மலேசியன் சைனீஸ்னு எல்லாமே கிடைக்கும்" என்க, அவன் அவள் எதிர்புறம் திரும்பிக் கொண்டு 'சாப்பாட்டைப் பத்தியே பேசி இப்படி சாகடிக்கிறாளே' என்று தலையிலடித்துக் கொண்டான்.

அவளோ அவன் எண்ண ஓட்டம் புரியாமல், "இரு மோக்... நான் போய் இதைப் பத்தி ரஞ்சன்கிட்டயும் அத்தைக்கிட்டயும் சொல்லிட்டு வந்திடுறேன்" என்றவள் செல்ல எத்தனிக்க அவளைப் போகவிடாமல் கதவருகே வழிமறித்து நின்றான்.

"ப்ளீஸ் சிவா... நான் உன்கிட்ட கொஞ்சம் முக்கியமா பேசணும்" என்றவன் கெஞ்சாதக் குறையாகக் கேட்க, அவள் புருவங்கள் சுருங்க அவனைக் குழப்பமாய் பார்த்தாள். அவனோ பட்டென அவள் கரத்தை பற்றிப் படுக்கை மீது அமரவைத்துவிட்டு அவனும் அவள் எதிரே வீற்று கொண்டான். அவள் பேச வாய் திறக்கும் போதே,

"ப்ளீஸ் சிவா... சாப்பிடறதைப் பத்தியும் சமைக்கிறதைப் பத்தியும் மட்டும் பேசாதே" என்றான்.

"வேற எதைப்பத்தி லா பேசணும்"

"நம்ம லவ்வைப் பத்தி பேசுவோம்... நம்ம ப்யூச்சரைப் பத்தி பேசுவோம்" அவள் விழிகள் இரண்டு இன்ச் பெரிதாகிட, "நம்ம எப்போ லா லவ் பண்ணோம் ?!" என்று கேட்டு அதிர்ச்சியானாள் அவள்!

"இனிமே பண்ணுவோமே... எப்படி இருந்தாலும் ப்யூச்சர்ல நான்தானே உனக்கு ஹஸ்பெண்ட்" என்றான்.

"லூசாயிட்டியா மோக் நீ... ஹஸ்பேண்ட்ங்கிற... லவ்ங்கிற"

"அப்படிதானே நம்ம வீட்டில டிசைட் பண்ணி வைச்சிருக்காங்க"

"அப்படியா என்ன?"

"ஏன் ? உனக்குத் தெரியாதா"

"நோ" என்றவள் உச்சபட்ச அதிர்ச்சியோடு அவனை பார்த்தாள். இதுபற்றி எல்லாம் ஷிவானிக்கு உண்மையில் எதுவும் தெரியாதுதான். ரஞ்சன் திருமணத்திற்குக் கூட அவள் போகவில்லையே. படிப்பின் காரணமாய் மலேசியாவிலேயே அவள் இருந்திருக்க மோகனுக்கும் அவள் பதில் அத்தனை அதிர்ச்சிதான்.

கொஞ்ச நேரம் அந்த அறையே மௌன நிலையில் இருக்க, மோகன் அந்த அமைதியை கலைத்து ஷிவானியிடம்,

"உனக்கு இதுவரைக்கும் இந்த மேட்டர் தெரியாதுன்னா பரவாயில்லை... பட் இப்ப தெரிஞ்சிக்கோ... நான்தான் உன்னோட ப்யூச்சர் ஹஸ்பண்ட்" என்று அழுத்தி அவள் மண்டையில் உரைப்பது போல் அந்த வார்த்தையைச் சொல்ல, அதிர்ந்தபடி அவனை ஏறிட்டாள்.

அவன் மேலும், "புரிஞ்சிக்கோ ஷிவா... ஐ லவ் யூ" என்றவன் அவள் கரத்தை அழுந்தப் பற்றவும் அவசரமாய் அவன் கரத்தை உதறிவிட்டு விலகி நின்றாள்.

அவன் ஏக்கமாய் பார்த்து, "என்னை உனக்கு பிடிக்கலையா ஷிவா" என்றவன் கேட்க,

"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் லா... ஆனா... மேரேஜ் லவ் பண்றளவுக்கு எல்லாம் பிடிக்கும்னு சொல்ல முடியாது" என்று அவள் எண்ணத்தைப் பளிச்சென்று வெளிப்படுத்தினாள்.

அந்த நொடி மோகனுக்கு உள்ளூர இருந்த கோபம் தலையெடுக்க,

"அப்போ அந்த சைனாக்காரனதான் உனக்கு அந்தளவுக்கு பிடிக்குமோ?!" என்று கேட்க,"எந்த சைனாக்காரன்?" அவள் யோசனையோடு வினவ, "அதான் கியாங் கோ சியாங் கோ" என்றான்.

"அய்யோ மோக்... அவன் பேர் சியாங் கெவின்"

"ஆமா... அந்த கெவின்தான்... அவனை நீ லவ் பண்றதானே?"

"அப்படின்னு உனக்கு யாரு லா சொன்னது ?"

"நீங்க இரண்டு பேரும் பேசிக்கிறதைப் பார்த்தாலே தெரியுதே"

அவன் அப்படிச் சொன்ன நொடி சீற்றமாய் மேலும் கீழுமாய் அவனைப் பார்வையால் அளவெடுத்தவள், "ஸாரி மோக்... நீ இப்படியெல்லாம் யோசிச்சீன்னா... நான் சத்தியமா ஒண்ணும் பண்ண முடியாது" என்று சொல்லிவிட்டு,

அதுக்கு மேல் அவனுக்கு எந்தவித விளக்கவுரையும் வழங்க விரும்பாமல் கோபமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

மோகனின் மனதில் எரிந்து கொண்டிருந்தத் தீ தன் அளவைக் கடந்து செல்ல, அவள் சொல்லாதவற்றை எல்லாம் அவனே கற்பனை செய்து கொண்டான். எல்லாம் பருவ வயது படுத்தும் பாடுதான்.

மோகனுக்கும் ஷிவானிக்கும் இடையில் பேச்சு வார்த்தை முற்றிலும் நின்றிருக்க, எல்லோரின் பார்வைக்கும் அது அப்பட்டமாய் தெரிந்தது. ஆனால் அவர்கள் யாரும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் நளினி குடும்பத்தார் கோலாலம்பூர் விமான நிலையத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க,

அப்போது ஷிவானியே வலிய வந்து மோகனிடம், "நேத்து பேசினதை பத்தி எல்லாம் விடு லா... நான் அதையெல்லாம் மறந்துட்டேன்... நீயும் மறந்துடு... நம்ம எப்பவும் போல ப்ரண்ட்ஸாவே இருப்போமே" என்று சொல்ல அவனோ அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் நிராகரித்துச் சென்றுவிட்டான்.

ஷிவானிக்கு உறவுகள்மீது எப்போதுமே அதீதப் பற்று. அது அவளுக்கு அங்கே கிடைக்காத ஒன்று. அதுவும் அவள் சகோதர உறவுகள் கூட இல்லாமல் தனியே வளர்ந்த பெண். அந்தப் பெரிய வீட்டில் அவள் மட்டுமே தனியாக ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்தாலும் ஒரு நிலையில் அது கொஞ்சம் கசந்துதான் போனது. ஆதலாலேயே அவள் ஆண் பெண் பேதமின்றி தன் கல்லூரியில் பெரிய நட்பு வட்டாரத்தை உருவாக்கி வைத்திருந்தாள்.

ஆனாலும் கூட ரஞ்சன் மோகன் மீது அவளுக்குத் தனிப்பட்ட பாசம்தான். ஏனெனில் அவர்கள்தானே அவள் ஓத்த வயதில் இருக்கும் அவளின் ஓரே நெருங்கிய உறவுகள்.

அந்த எண்ணத்தோடுதான் தன் கோபத்தை விடுத்து மோகனிடம் அவள் சென்று பேச, அவனோ அவளின் கள்ளங்கபடமில்லாத அன்பை உதாசீனம் செய்தான்.

ஆனால் அதோடு இந்தப் பிரச்சனை முடியவில்லை. அவர்கள் இடையில் நிகழ்ந்த சம்பாஷணையை ஷிவானியின் தந்தை சபரி கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

விமான நிலையத்தில் தன் தமக்கை குடும்பத்தை இறக்கி விட வந்தவர்,

மோகனை தனியே அழைத்துச் சென்று, "என்னடா மாப்பிளை பிரச்சனை... ஏன் இப்படி முறுக்கிட்டிருக்க?" என்று உரிமையாகவே கேட்டார். சற்று நேரம் மௌனமாய் இருந்தவன் பின் கட்டுப்படுத்த முடியாமல் விழியில் நீர் தளும்பி நிற்க,

"டேய் மாப்பிள்ளை" என்று அவன் தோளை இறுக்கினார். அவர் கரத்தை உதறித் தள்ளியவன்,

"என்னை அப்படிக் கூப்பிடாதீங்க மாமா... போய் உங்க பொண்ணு கட்டிக்கப் போற அந்த சைனாக்காரனைப் போய் அப்படிக் கூப்பிடுங்க" என்றான்.

"என்னடா உளர்ற... யாருடா அந்த சைனாகாரன்?"

"ஆன்... கியாங் செவின்... அதான் உங்க வருங்கால மாப்பிள்ளையோட பேரு" என்று அசாதாரணமாய் ஒர் வெடிகுண்டை அவர் தலையில் போட்டுவிட்டு அவன் பாட்டுக்கு விமானத்தில் ஏறி சென்னைக்குப் பறந்துவிட்டான். சபரியோ அதிர்ந்துதான் போனார். அவன் சொல்வது மட்டும் உண்மையெனில், அதை ஏற்கும் தைரியம் அவருக்கு நிச்சயம் இல்லை.

அதற்குக் காரணம் ரஞ்சனை விடவும் மோகனின் மீது அவர் வைத்திருந்த அலாதியான பாசம். அவன் பிறக்கும்போது சபரி தன் தமக்கையோடு இருந்த காரணத்தால் கொஞ்சம் அவனிடம் மட்டும் அதீத ஓட்டுதல். அதுவும் தாய்மாமன் பற்றுதல் வேறு.

அதோடு அல்லாது அவரின் அன்பில் கொஞ்சம் சுயநலனும் இருந்தது. ஓரே செல்ல மகளை வெளியாட்களுக்குக் கட்டி கொடுப்பானேன். தன் தமக்கை மகனுக்கே கட்டி வைத்து வீட்டோடு மருமகனாக்கிக் கொள்ளலாம் என்ற பேராசை. ஆனால் அந்த ஆசையெல்லாம் தன் மகள் நிராசையாய் மாற்றி விடப் போகிறாளோ என்ற கோபத்தில் அவர் வீட்டிற்கு விரைய இனி நடப்பதெல்லாம் இறைவன் சித்தம்தான்.

நிலைமை இவ்வாறாக இருக்க, அவரின் ஆசையில் மண்ணள்ளி போடவே ஒருவன் வஞ்சம் கொண்டு கடல் கடந்து காத்திருக்கிறானே! (பி.கு. பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும். மருமகன் ங்கிறவன் அவங்க லைஃப்ல என்ட்ரியாகிற பெரிய வில்லன்னு)

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content