You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 6

Quote

6

சாக்ஷியின் மனநிலை

மகிழ் நொறுங்கிப் போய் நின்றிருக்க, மாயா அவன் சட்டையை விடுவதாக இல்லை. அதே கேள்வியைத் திரும்ப திரும்ப அவள் கேட்டு அவனை வேதனைப்படுத்திக் கொண்டிருந்தாள்.

மாயா எதற்காக அப்படி கேட்க வேண்டும்? இந்த கேள்விக்கான காரணத்தை எண்ணியபடியே அவன் சிலையாக சமைந்திருந்தான். மாயாவின் செயலை கவனித்த அவளின் தாய் யாழ்முகை, மகிழை அவளிடமிருந்து விடுவித்து,

"ஏன் மாயா இப்படி நடந்துக்குற?" என்று கோபமாய் கடிந்து கொண்டார். மாயா உடனே முகத்தை மூடி அழ, மகிழ் அதிர்ச்சியில் இருந்து மீளாமலே நின்றிருந்தான்.

யாழ்முகை மகிழை நோக்கி, "ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க மகிழ்... சாக்ஷியோட இழப்பை அவளால தாங்கிக்க முடியல... அதனாலதான் அவ இப்படி நடந்துக்கிட்டா?!" என்றார்.

 மகிழால் அந்த சமாதானத்தை ஏற்க முடியவில்லை. மாயாவின் வார்த்தை ஏதோ உணர்ச்சி வசத்தால் வெளிவந்ததல்ல. அதில் ஆழமான வலி இருந்தது. மாயா நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்க மகிழ் அவளிடம்,

"எதுக்கு அப்படி என்னை கேட்டீங்க? எனக்கு மட்டும் அவ இழப்பு வலியில்லையா மாயா ?!"

மாயா முகத்தைத் துடைத்து நிமிர்ந்தவள், "என்னை விடவா உங்களுக்கு வலியும் இழப்பும்?" என்று கேட்டு நிறுத்த,

அவளுக்கு எப்படி தன் காதலின் வலியை புரிய வைக்க...

"உங்களவுக்கு நான் சாக்ஷி வாழ்க்கையில இல்லதான்... ஒத்துக்குறேன்... ஆனா நான் அவளை உயிருக்கு உயிரா நேசிச்சேன்... அதோடு வலி என்னன்னு உங்களுக்கு நான் சொன்னாலும் புரியாது மாயா" அழுத்தமாய் சொல்லி முடித்தான்.

"சாக்ஷி பேரைக் கூட நீங்க சொல்ல வேண்டாம்" சீற்றமாய் மாயா தன் ஒற்றை விரலைக் காட்டி அவனை எச்சரித்தாள்.

மகிழால் மாயாவின் கோபத்தின் பிண்ணனி என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. யாழ்முகை மாயாவின் தோள்களைப் பிடித்து,

"என்னாச்சு மாயா உனக்கு... ? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குற?" என்றதும் அவள் கோபத்தோடு,

"இவரை முதல்ல இங்கிருந்து போகச் சொல்லுங்கமா" என்று கத்தினாள். யாழ்முகை தன் மகளின் மனநிலையைப் புரிந்து மகிழிடம்,

"இப்போதைக்கும் நீங்க இங்கிருந்து கிளம்புங்க மகிழ்... அப்புறம் பேசிக்கலாம்" என்றார் இளகிய பார்வையோடு!

"இல்ல ஆன்ட்டி... நான் மாயாகிட்ட சில விஷயங்கள் கேட்கணும்... அதுவும் முக்கியமா அவங்க என் மேல ஏன் கோபமா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கணும்"

யாழ்முகைக்கு மாயாவின் மனநிலையை யூகிக்க முடியவில்லை. மாயா அலட்சியமாக திரும்பிக் கொண்டவள், "நான் தேவையில்லாம யார்கிட்டயும் பேச விருப்பப்படலம்மா... அவரைப் போக சொல்லுங்க" என்று சொல்லியவள் திரும்பி நடக்க,

"நில்லுங்க மாயா... சாக்ஷிக்கு எப்படி ஆக்ஸிடென்ட் நடந்துச்சுன்னு சொல்லிட்டு போங்க"

"உங்களாலதான்" என்றபடி திரும்பி நின்றாள்.

யாழ்முகை அவளைக் கோபமாய் பார்த்து, "பைத்தியம் மாதிரி பேசாதே மாயா" என்றார்.

"நான் சரியாதான் பேசறேன்மா... இவர் மட்டும் சாக்ஷி வாழ்க்கையில நுழையாம இருந்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காது"

மகிழ் தன் பொறுமையிழந்தான்.

"ஸ்டாப் இட் மாயா... ரொம்ப அதிகமா பேசிட்டிருக்கீங்க... இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் என் ஃப்ரண்டோட மேரேஜுக்காக டெல்லி வரைக்கும் போயிருக்கவே மாட்டேன்... என் விதி.. அவ முகத்தைக் கூட கடைசியா பார்க்க எனக்கு கொடுத்து வைக்காம போச்சே" என்று புலம்பும் போதே அவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

"யாருக்கும்தான் அவ முகத்தைப் பார்க்க கொடுத்து வைக்கலயே மகிழ்" என்று வருத்தமாய் யாழ்முகை உரைக்கவும், மாயா தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"என்ன சொல்றீங்க ஆன்ட்டி ?"

"ஆமாம் மகிழ்... ஆக்சிடென்ட்ல சாக்ஷி உடம்பு மொத்தமா சிதைஞ்சு போச்சு... அவளோட வாட்ச்... அவ கட்டியிருந்த புடவை... அவ கழுத்தில இருந்த ராகவேந்திரா டாலர்... அதை வைச்சுதான் ஐடென்டிபைஃ பண்ணோம்"

மகிழுக்கு இந்த வார்த்தைகள் உச்சப்பட்ச வலியும் வேதனையும் உண்டாக்க, அவன் தடுமாறி நின்றான். மாயா தாங்கமுடியாமல் அழுதபடியே இருந்தாள். சாக்ஷி இறந்த செய்தி அவனுக்கு டெல்லியில் இருக்கும் போதுதான் கிடைத்தது.

அவன் வருவதற்கு முன்னதாகவே அவளின் இறுதி சடங்கெல்லாம் முடிவுற்றிருந்தது. அவன் வீட்டில் உள்ள யாருமே முழுமையாய் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. அவன் தாங்குவானா என்று சொல்லாமல் விட்டார்கள் போல.

சாக்ஷிக்கு இப்படி ஒரு மரணம் நேரிட வேண்டுமா? கலங்கி நின்றிருந்தான் மகிழ். தன் தாய் மீது சாய்ந்து மாயா கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க உணர்வுகளற்ற முகத்தோடு அவள் புறம் திரும்பியவன்,

"எப்படி மாயா சாக்ஷிக்கு இப்படி நடக்க விட்டீங்க?... எப்பவுமே நீங்க அவ கூடதானே இருப்பீங்க?" என்றவன் கேட்க மாயவின் வேதனை அதிகரித்தது.

ஆம்! சாக்ஷியை மாயா எங்கெயுமே தனியாக செல்லவிட்டதில்லை. அதிகபட்சம் மாயாவும் சாக்ஷியையும் தனியாகப் பார்க்கவே முடியாது.

சாரதா இல்லத்தை நடத்திவரும் யாழ்முகை மாதவனின் ஒரே மகள்தான் மாயா. அவர்கள் இல்லமும் வீடும் வேறுவேறு அல்ல. மாயாவும் அங்கே இருந்த குழந்தைகளோடு தான் வளர்ந்தாள்.

 ஒரு மோசமான விபத்தில் சாக்ஷியின் பெற்றோர் இறந்துவிட, அதே விபத்தில் ஐந்து வயது சாக்ஷிக்கு கண்பார்வையற்றுப் போனது. அவளின் உறவினர்கள் யாரும் அவளைப் பொறுப்பேற்று வளர்க்க முன்வரவில்லை. அவள் அனாதரவாய் மாதவன் நடத்திய சாரதா இல்லத்தில் விடப்பட்டாள்.

மாயாவும் சாக்ஷியும் ஒரே வயதினர் என்பதாலோ என்னவோ இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். அதுவும் மாயா சாக்ஷியை நொடி நேரம் பிரியமாட்டாள். அவளுக்கு இசைக்கருவிகள் வாசிக்க ஆர்வமிருப்பதை அறிந்த மாயா, அவள் வீணை பயில்வதற்குத் தன் பெற்றோர்கள் மூலம் ஏற்பாடு செய்தாள்.

பல நேரங்களில் மாயா புத்தகங்கள் படிக்க, சாக்ஷி அதனை உன்னிப்பாகக் கேட்டு உள்வாங்கிக் கொள்வாள். ஒரே ஒரு முறை மாயா படிப்பதைக் கேட்டாலே அந்தப் புத்தகங்களில் உள்ள விஷயங்கள் எல்லாம் அவள் மனதில் ஆழ பதிந்துவிடும் அளவுக்கான நினைவாற்றல் சாக்ஷிக்கு!

சாக்ஷி யார் துணையுமின்றி வெளியே செல்ல பழகியவள்தான். சில நேரங்களில் இசை நிகழ்ச்சிகளுக்கும் தனியாகவும் சென்றிருக்கிறாள். சமீப காலமாய் மாயா சாக்ஷியை தனியாக விடுவதில்லை. அதற்குக் காரணம் யாரையும் நொடி நேரத்தில் வசீகரித்துவிடும் அழகு அவளுக்கு!

இந்த வக்கிரமான உலகத்தின் பார்வை அவளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்ற பயம்தான். மகிழ் சாக்ஷியிடம் காதலைச் சொல்லிய போது கூட மாயாவிற்கு ஏனோ அச்சமே அதிகரித்தது.

மகிழுக்கும் அவளின் அழகின் மீதே ஈர்ப்போ என்ற சந்தேகம். மாயா சாக்ஷியிடம் மகிழை காதலிக்க வேண்டாம் என மறுப்புத் தெரிவித்தாள். ஆனால் மகிழ் ரொம்பவும் ஆழமாய் சாக்ஷயின் மனதில் நின்றுவிட்டானே! அவளால் தன் தோழியின் மனதை மாற்றவே முடியவில்லை.

மௌனமாய் நின்ற மாயாவிடம் மீண்டும் கேட்டான்.

"ஏன் என் கேள்விக்கு பதில் சொல்மாட்டிறீங்க? சாக்ஷிக்கு எப்படி இந்த ஆக்சிடென்ட் நடந்துச்சு?"

அந்த கேள்வியில் மாயாவின் கோபம் தம் எல்லைகளை கடக்க, "ஆக்சிடென்ட் நடந்தது இருக்கட்டும்... உங்க பிறந்த நாளுன்னு சொல்லி சாக்ஷியை தனியா கூட்டிட்டு போனீங்களே... அன்னைக்கு என்ன நடந்துச்சு?" என்றவள் கேட்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.

"எப்பவும் போல அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போனேன்... பேசிட்டு சாப்பிட்டுட்டு அப்புறமா நானே கொண்டு வந்து டிராப் பண்ணிட்டேனே" அவன் இயல்பாக பதிலுரைக்க,

"இல்ல... வேறெதோ நடந்திருக்கு... நீங்க அவகிட்ட தப்பா நடந்துக்கிட்டிருக்கீங்க.. அவளோட இயலாமையை நீங்க பயன்படுத்திட்டிருக்கீங்க" என்று மாயா அழுத்தமாக உரைக்க அவன் அதிர்ந்து போனான்.

"என்ன சொல்ற மாயா?!" என்று மகளின் வார்த்தையை கேட்ட யாழ்முகையும் அதிர்ச்சியானார்.

"நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க... நான் போய் சாக்ஷிகிட்ட தப்பா நடந்துப்பேனா... சத்தியமா இல்லை" என்று மகிழ் பதட்டத்தோடு மாயாவின் வார்த்தையை மறுதலிக்க,

"அப்படி எதுவும் இல்லன்னா... அன்னைக்கு திரும்பி வந்தவ ஏன் அப்செட்டா இருக்கணும்... நான் என்னன்னு கேட்டதுக்கு என்னைக் கட்டிபிடிச்சிட்டு அழணும்?...அதுவும் அவ என்கிட்ட அழுதுகிட்டே என்ன சொன்னா தெரியுமா?!”

 “நீ சொன்னது சரிதான்... நான் மகிழை காதலிச்சு பெரிய தப்பு செஞ்சிட்டேன்னு சொன்னா? மகிழுக்கு என் மேல இருக்குறது உண்மையான காதல் இல்லைன்னு சொன்னா... இப்ப சொல்லுங்க மகிழ்... நீங்க எதுவும் பண்ணாமலா அவ அப்படி ஒரு வார்த்தையை சொன்னா?!"

யாழ்முகை தன் மகளிடம், "என்கிட்ட ஏன் இத பத்தி முதல்லயே சொல்லல?" என்று கேட்க,

"இல்லம்மா... ஏதோ இரண்டு பேருக்குள்ள சின்ன பிரச்சனையா இருக்கும்... மகிழ் டெல்லியில் இருந்து வந்த பிறகு என்ன ஏதுன்னு கேட்டுக்கலாம்ன்னு இருந்தேன்... ஆனா சாக்ஷி எந்தளவுக்கு காயப்பட்டிருந்தா நம்மகிட்ட எல்லாம் சொல்லிக்காம இல்லத்தை விட்டு போயிருப்பான்னு இப்ப தோணுது"

"என்ன மாயா நீ... இதை பத்தி முன்னாடியே என்கிட்ட நீ சொல்லி இருக்கணும்... போலீஸ் நம்மள குற்றவாளி மாதிரி நிற்க வைச்சு கேள்வி கேட்டாங்களே... அப்பயாச்சும் சொல்லி இருக்கலாமே"

"எனக்கு அப்ப இருந்த பதட்டத்தில எதுவும் தோணலமா... ஆனா இப்ப பொறுமையா யோசிச்சு பார்த்தா இவர்தான் எல்லாத்துக்கும் காரணம்னு தோணுது"

இவர்களின் சம்பாஷணைக்கு இடையில் மகிழ் அதீத குழப்பமடைந்து மாயாவைப் பார்த்தவாறு,

"உண்மையிலயே நீங்க சொல்றதை என்னால நம்ப முடியல.. சாக்ஷி அப்செட் ஆகுறளவுக்கு எதுவும் நடக்கல... அன்னைக்கு என் பிறந்த நாள்... சாக்ஷி கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணுச்சு... அதனாலதான் நான் அவளை அழைச்சிட்டு போனேன்"

மாயா உக்கிரத்தோடு, "தப்பு என் பேர்லதான்... உங்க மனசுல இருக்கிற வக்கிரமான எண்ணம் தெரியாம நான் அவளை அனுப்பியிருக்கக் கூடாது" என்க,

"தப்பா பேசுறீங்க மாயா" என்று மகிழ் அவள் வார்த்தையில் ரொம்பவும் காயப்பட்டு நின்றான்.

"நான் தப்பா பேசல... சரியாதான் பேசுறேன்... முதல்லயே எனக்கு தோணுச்சு...அதெப்படி பார்த்த உடனே காதல் வரும்னு... வேண்டான்டி இந்த லவ்னு ஆரம்பத்தில நான் சாக்ஷியை எச்சரிச்சேன்... அவதான் உங்க மேல இருந்த கிரேஸை லவ்னு தப்பா புரிஞ்சுக்கிட்டா”

“அப்புறம் நீங்க பேசினது பழகினதைப் பார்த்து நான் கூட நீங்க ரொம்ப நல்லவர்னு நம்பிட்டேன்... ஆனா இப்ப புரியுது... நீங்க சாக்ஷி மேல வைச்சிருந்தது லவ் இல்ல... இட்ஸ் ஜஸ்ட் அ லஸ்ட்" என்றதும் மகிழின் முகம் வெளிறிப் போனது. செங்குருதிக்குப் பதிலாக அவன் நாளங்களில் செந்தழல் பாய்ந்த உணர்வு.

அவன் விழிகள் சிவக்க, "மாயா... திஸ் இஸ் யுவர் லிமிட்... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேச வேண்டாம்... நீங்க என் காதலை மட்டுமில்ல... என்னையும் சேர்த்து அசிங்கப்படுத்திட்டீங்க... சாக்ஷி ஏன் உங்ககிட்ட அப்படி சொன்னான்னு சத்தியமா எனக்குத் தெரியல... ஆனா சாக்ஷியை நான் எந்தளவுக்கு காதலிக்கிறேன்னு யாருக்கும் நான் ப்ரூஃப் பண்ண வேண்டிய அவசியமில்லை... அது என் சாக்ஷிக்கு நல்லா தெரியும்" என்றான்.

அவன் கோபத்தைக் கண்டு மாயா மௌனம் காத்து நிற்க அவன் உடனடியாக அங்கிருந்து வெளியேறினான்.

மாயா உடனே தன் அம்மாவிடம் திரும்பி, "இந்த விஷயத்தை இப்படியே விடக் கூடாது... போலீஸ்கிட்ட சொல்லணும்" என்றாள்.

"எனக்கு மகிழ் மேல தப்பு இருக்கும்னு தோணலை" என்றார் யாழ்முகை.

"அப்ப சாக்ஷி என்கிட்ட சொன்னது... அவ அப்செட்டா இருந்ததெல்லாம்... அதுவும் நம்ம யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி போயிருக்கான்னா? அவ மனசு எந்தளவுக்கு காயப்பட்டிருக்கும் ம்மா"

"எனக்கும்தான் அந்த விஷயம் புரியல"

"போலீஸ்கிட்ட சொன்னா எல்லா விஷயமும் தானா புரிஞ்சிரும்" என்றாள் மாயா.

"இந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடு மாயா... மகிழ் பத்தி ஏன் இவ்வளவு லேட்டா சொன்னிங்கன்னு போலீஸ் நம்ம கிட்டதான் க்வஷின் பண்ணுவாங்க... ஏற்கனவே சாக்ஷி கேஸ்ல போலீஸ் நம்மலயே குற்றவாளியா பார்க்குது... அதுவும் இல்லாம இந்த விஷயம் பெரிசானா நம்ம ஹோமுக்கு கூட பிரச்சனை வரலாம்... ஸோ இதை பெரிசு பண்ண வேண்டாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

தன் தாய் சொன்னதைக் கேட்டு மாயா எதையும் செய்ய முடியாத கையறுநிலையில் நின்றாள். எவ்வளவு நல்லவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் சுயநலம் பெரிசாகப் போய்விடுகிறது.

சாக்ஷியின் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை உற்ற தோழியான அவளாலும் யூகிக்க முடியவில்லை. மகிழின் நிலைமையும் அதுதான். சாக்ஷியின் மனதில் என்ன இருந்தது. அவள் ஏன் மாயாவிடம் அப்படி சொன்னாள்? அன்று சாக்ஷியை தனியாக வீட்டிற்கு அழைத்துச் சென்ற அந்த நிகழ்வை இப்போது நினைவுபடுத்திப் பார்த்தான்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content