You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 61

Quote

61

காதல் செய்த மாயம்

பிரமிப்பூட்டும் அந்தக் கிறிஸ்துவ ஆலயம் ஜெனித்தா டேவிடின் திருமணத்திற்காகத் தயாராகியிருந்தது. வண்ணமயமான பூங்கொத்துக்களின் அலங்கரிப்புகளோடு  பல வண்ண நிற பலூன்கள் அந்த இடத்தில் மேலே மிதந்து கொண்டிருக்க, கண்கொள்ளா அந்தக்  காட்சிகளோடு பல நவீனரக கார்களின் அணிவகுப்புகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன.

எல்லோரும் தங்கள் தங்கள் இடங்களைத் தேடி அமர, எல்லோரின் விழிகளும் ஜென்னி டேவிட் இருவரையும் திருமண கோலத்தில் பார்க்கும் ஆவலில் காத்திருந்தன. தாமஸும் மனநிறைவோடு அவர் கனவு நிறைவேறப் போகும் அந்தத்  தருணத்திற்காகக் காத்துகிடந்தார்.

விக்டரும் ஜெனிபஃரும் தன் சொந்த மகளின் கல்யாணத்திற்கு கூட இந்தளவுக்குப் பூரிப்படைந்திருக்க மாட்டார்கள். ஜெனித்தா அவர்கள் வாழ்வில் நுழைந்து, ரொம்பவும் குறுகிய காலத்தில் அவர்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டிருந்தாள். அவர்கள் சொந்த மகளை இழந்த சுவடே இல்லாமல் மறைத்திருந்தாள்.

சையத் தன் குடும்பம் மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். மதுவும் வாசலை ஆவலாய் பார்த்தபடி,

"உங்களுக்கு ஞாபகம் இருக்காங்க... முதல்முதலா ஜென்னி மேடமை இதே போல ஒரு கல்யாண ஹேட்ல பார்த்தோமே" என்று சொல்ல, அவனும் அதனை நினைவுகூர்ந்து ஆமோதித்தான்.

அங்கே இருந்த எல்லோரின் பார்வையும் அவர்கள் இருவரின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்க, டேவிட் மகிழோடு கம்பீரமாய் நீல நிற கோட் சூட்டில் நுழைந்தான்.

அவனின் நேர்கொண்ட பார்வையும் அவன் இதழ்களில் தவழ்ந்து விளையாடிய வசீகரிக்கும் புன்னகையும் நிமிர்வாய் நடந்து வந்த நடையும் எல்லோரையும் வியக்கச் செய்திட, அவனோ அவளின் வருகையை எதிர்பார்த்தல்லவா காத்திருந்தான். அந்த அகன்று விரிந்த வாசல் புறம் அவன் விழிகள் நிலைகொண்டு நிற்க, ஜென்னி தன் தோழி மாயாவோடு நுழைந்தாள்.

அசறடிக்கும் அவளின் அழகோ இன்று வார்த்தைகளால் விவரிக்க முடியாத வண்ணம் பன்மடங்கு பெருகியிருந்தது. அந்த நீண்ட நெடிய வெள்ளை நிற கவுன் தவழ, தன் கரத்தில் அழகிய வண்ண மலர்சென்டினை ஏந்திய படி,

அவள் நடந்து வர, இளவரசியின் கம்பீரம் இருந்தது அவள் நடையில். அவளின் பளிங்கு நிற மேனி அந்த வெள்ளை கவுனில் அபரிமிதமாய் பளிச்சிட, உலகின் அத்தனை அழகையும் குத்தகை எடுத்துக் கொண்டது போல் இருந்தது அவளின் அழகிய வதனம். அவள் மெல்ல நடந்து வந்து அவன் முன்னே நின்றவளுக்கு அவன் மட்டுமே தெரிந்தான்

. எப்போதும் மாறாமல் அவன் முகத்தோடு ஓட்டிக் கொண்டிருக்கும் அந்தப் புன்னகை  இன்று அதீத வசீகரத்தோடு அவளைக் கவர்ந்திழுக்க,  அவனின் காதல் பார்வைக்குள் சிக்குண்டவள்தான். மீளமுடியாமல் அவனையே பார்த்திருந்தாள். அகண்டுவிரிந்த அந்த உலகம் சுருங்கி  அவனோடே முடிந்துவிட்டிருந்தது.

மாயா அவள் காதோரம், "ஏ சாக்ஷி... கொஞ்சமாச்சும் வெட்கப்படலாம் இல்ல... ஒரேடியா இப்படியா? நீ அவரையே பார்த்துகிட்டிருக்க அவர் உன்னையே பார்த்துகிட்டிருக்காரு... கண்ணாலயே ரொமன்ஸ் பண்ணிக்கிட்டிருக்கீங்க" என்க,

அவள் அப்போதும் தன் விழியை அகற்றிக் கொள்ளாமல், "நான் எதுவுமே பண்ணல மாயா... ஹிஸ் ஐஸ் ஹேஸ் சம் மேக்னடிக் பவர்" என்று காற்றோடு கலந்த குரலில், அவள் சிலாகித்துக் கூற எல்லாம் காதல் செய்யும் வேலையோ என்று மாயா எண்ணிக் கொண்டாள்.

இறுதியாய் டேவிட் அவள் கரம் பற்றி மோதிரத்தை அணிவித்த பின் அவளும் அவனுக்கு மோதிரம் அணிவித்தாள். அந்த நொடி ஒருவருக்குள் ஒருவர் புகுந்துவிட்ட உணர்வு. அவள் வாழ்வில் கடந்து வந்த அத்தனை துயரங்களையும் அவன் கரம் பற்றிய அந்த ஒற்றை நொடி மறக்கடித்திருந்தது. இதற்காகத் தான் அத்தனையுமா என்று கூட யோசிக்கத் தோன்றியது அவளுக்கு.

அவனுக்காக… அவனின் தூய்மையான காதலுக்காக…

எதையும்... எத்தகைய வலியையும் கடந்து வரலாம் என்று எண்ணி அந்த நொடி உள்ளம் பூரித்திருந்தாள்.

அவள் கரத்தை மென்மையாய் பற்றி தன் இதழ்களோடு அவன் ஒற்றி எடுத்த நொடியே வெட்கமென்ற உணர்வு அவளை ஆட்கொள்ள, முத்தத்தைத் தாண்டி மொத்தமாய் நான் என்னை உன்னிடம் சமர்பித்துவிட்டேன் என்ற தகவலை சொன்னது அவன் விழிகள்.

அதனை உணர்ந்தவளுக்கு ஒற்றைத் துளி கண்ணீர் வெளியே வந்து விழுந்து அவள் கன்னத்தை நனைத்துச் சென்றது. அவன் அவள் கரத்தைக் கோர்த்தபடி வெளியேறவும் ஜென்னி தன் கரத்திலிருந்த பூச்செண்டை வீச, அது தியாவின் கரத்தில் சென்று வீழ்ந்தது.

இனி வரும் காலங்கள் எல்லாம் அவனோடு இப்படியாக நீண்டு நெடிய காலம் பயணிக்க வேண்டும் என்று ஆசை கொண்டது அவள் மனம்.

அன்று மாலையே பிரமாண்டமாய் ஒரு ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, பல்வேறு சினிமா பிரபலங்கள் வியாபார பெருந்தலைகள் அரிசியல் பிரமுகர்கள் என அந்த அரங்கமே நிறைந்து கொண்டிருந்தது.

பெரும் இசைக் குழு அந்த இடத்தை அதிரச் செய்ய, பல சேனல்கள் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியை தங்கள் கேமராக்களுக்குள் பதிவு செய்து கொண்டிருந்தன.

போதும் போதும் என்றளவுக்கு வருபவர்களின் பரிசு பொருட்களையும் வாழ்த்தையும் பெற்று இருவரும் சோர்ந்து களைத்துப் போக, மெதுவாக அந்த அரங்கம் வடிந்து நண்பர்களும் விருந்தினர்களும் மட்டும் கூடி இருந்தனர்.

மணமக்களை உற்சாகப்படுத்த மகிழ் அப்போது தம்பதிகள் சிலரைத் திரட்டி ஓர் விளையாட்டை மேற்கொண்டான். ஜென்னியும் டேவிடும் ஆர்வம் மேலிட அதில் கலந்து கொண்டனர்.

கலந்து கொள்ளும் தம்பதிகள் எல்லோரின் பெயரையும் எழுதி  ஒரு குவளையில் போட்டு யார் பெயர் வருகிறதோ அவர்களின் கணவனோ மனைவியோ அவர்கள் விரும்பியதை எதுவாயினும் செய்யச் சொல்லிக் கட்டளையிடலாம்.

முதலில் எல்லோருமே அந்த விளையாட்டில் கலந்து கொள்ள சற்று யோசித்தனர். ஆனால் மகிழின் உந்துதலில் எல்லோரும் பங்கேற்க சம்மதிக்க, ரொம்பவும் குதூகலமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது அந்த விளையாட்டு. ஒருமுறை சீட்டில் மகிழின் பெயர் வர, மாயாவின் முகம் பிரகாசிக்க, ஜென்னி புன்னகையோடு,

"கஷ்டமா ஏதாவது சொல்லு மாயா" என்றாள்.

"ஏன் உனக்கு இந்த கொலைவெறி?" என்று மகிழ் ஜென்னியை பாவமாய் பார்க்க மாயா தீவிரமாய் யோசித்துவிட்டு,

"அவர் செமயா பேசுவாருன்னு எல்லாருக்கும் தெரியும்... ஆனா பாட்டு பாடினா எப்படி இருக்கும்" என்றதும் மகிழின் முகம் இருளடர்ந்து போனது.

"சூப்பர் சூப்பர்" என்று ஜென்னி ஆனந்தம் கொள்ள, மகிழ் பெருமூச்சுவிட்டு தானே இந்த விளையாட்டைத் தொடங்கி சிக்கிவிட்டோமோ என்று யோசித்தான். டேவிட் உட்பட எல்லோரும் அவனைப் பாட சொல்லிக் கட்டாயப்படுத்தினர்.

மகிழ் வேறுவழியில்லாமல் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு பாடத் தொடங்கினான் தன்னவளைப் பார்த்து,

'அடியே அழகே...

என் அழகே அடியே...

பேசாம நூறு நூறா கூறு போடாத

வலியே வலியே...

என் ஒளியே ஒளியே...

நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஒடாத

காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே

ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே

வாயாடிப் பேயா என் தூக்கம் தூக்கிப் போற'

அவனின் கம்பீரம் நிறைந்த வசீகரமான குரல் ஒரு நிமிடம் எல்லோரையும் அவனோடும் அந்தப் பாடலோடும் கட்டிப்போட்டது. ஆனால் மாயா மட்டும் கோபமாக திரும்பி, "வாயாடி பேயா நானு" என்று முறைக்க,

"ஏய் உன்னைப் பத்தி இல்லடி... அந்த பாட்டுல அப்படிதான் வரும்" என்றாள்.

"என்னைப் பத்திதான் பாடுனீங்க எனக்குத் தெரியும்... நீங்க வீட்டுக்கு வாங்க.. உங்களுக்கு இருக்கு" என்றவளை அச்சத்தோடு பார்த்தவன்,

"இந்த மாதிரி நேரத்துல டென்ஷனாகக் கூடாதும்மா"

"ம்ம்கும்" என்று முகத்தை அவள் சுளித்துக் கொள்ள, வீட்டிற்குப் போனால் பெரிய கச்சேரி இருக்கும் போலயே என்று விரக்தியாய் பெருமூச்சொன்றை வெளிவிட்டான்.

அதற்குள் விளையாட்டு முன்னேறிச் செல்ல சீட்டில் மதுவின் பெயர் வர அவள் மிரட்சியுற்று தன் கணவனைப் பார்த்தாள்.

அவன் குறும்புத்தனமான பார்வையோடு, "நான் என்ன கேட்டாலும் இப்ப செய்யணும்" என்று மெலிதாய் அவளிடம் சொல்ல, அப்படியென்ன கேட்கப் போகிறான் என அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

புன்னகை அரும்ப எல்லோரையும் பார்த்த சையத், "சிம்பிள்... ஐ லவ் யூ சையத்னு சொன்னா போதும்" என்க, எல்லோருமே மதுவைப் பார்த்தனர்.

மகிழ் புன்னகையோடு, "பரவாயில்லை ஈஸிதான்... சொல்லிடுங்க மது... டைரக்டர் சார் ஆசைப்படுறாரு" என்க, சையத்திற்குதான் தெரியும்.

அது அவளுக்கு எத்தனைச் சிரமமான விஷயம் என்று. அவள் சார் என்ற வார்த்தையை விட்டொழிக்கவே ஒரு மாதம் பிடித்தது. அதுவும் அவளுடைய வெட்கம் அத்தனை அழகாய் இருந்தாலும் அது பலநேரங்களில் அவனைப் பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

மது தன் கணவனிடம், "எல்லோர் முன்னாடியும் அதுவும் உங்க பேர் சொல்லி... எப்படிங்க?” என்றவள் அவதிப்பட, அவன் மௌனமாய் அவள் அவஸ்தையைய் ரசித்துக் கொண்டிருந்தான்.

மது எல்லோரையும் பார்த்து பேந்த பேந்த விழிக்க, வெகு நேரம் அந்த வார்த்தையை அவளிடம் வாங்க எல்லோரும் போராடி தோற்றுக் கொண்டிருந்தனர்.

ஜென்னி சையத்தைப் பார்த்து, "உங்க பொண்டாட்டிக்கு உங்க மேல அவ்வளவு லவ் இல்ல போல இருக்கே" என்று சொன்ன நொடி மது இல்லையென்பது போல் தலையசைத்து கணவனைப் பார்த்தவள்,

"ஐ லவ் யூ சையத்" என்று அவசரமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாய் நகர்ந்துவிட, சையத் அவர்களை சங்கடமாய் பார்த்து அவள் பின்னோடு சென்றான்.

"என்ன நீ? இதுக்குப் போய்" என்று சொல்லியவன் அவள் விழிகள் கலங்கியிருப்பதைப் பார்த்தவுடன், "அழறியா? ஸாரி ம்மா" என்று இரு காதுகளைப் பிடித்து அவன் மன்னிப்பு கோர,

அவள் அவன் கரத்தை எடுத்து, "என்னங்க? நீங்க போய் என்கிட்ட ஸாரி சொல்லிக்கிட்டு?" என்றாள்.

"அப்போ மேடம் சமாதானம் ஆயிட்டீங்களா? போலாமா?!" என்றவன் கேட்க, "ஹ்ம்ம்" என்று முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

மதுவும் சையத்தும் திரும்பி வந்ததும் ஜென்னி அப்போது, "ஸாரி மது... நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேனா?" என்று கேட்டாள்.

மது பதறிக் கொண்டு, "சேச்சே அப்படி இல்ல மேடம்" என்க,

"மேடம்னு கூப்பிடாதீங்க மது... ஜென்னின்னு கூப்பிடுங்க" என்றாள்.

சையத் சிரித்தபடி, "அதெல்லாம் அவளுக்கு ரொம்ப கஷ்டம்... அவ போக்கிலயே விட்றுங்க ஜென்னி" என்றான்.

"சரி ஒகே... இந்த கேமை பிஃனிஷ் பண்ணிக்கலாம்... லேட்டாயிடுச்சு" என்று ஜென்னி சொல்ல,

டேவிட் பதறிக் கொண்டு மகிழை பார்த்து சமிஞ்சையால் ஏதோ சொல்ல, "இன்னும் கொஞ்ச நேரம்" என்றான் மகிழ்.

அவள் யோசனைகுறியோடு, "ஒகே" என்க, மகிழ் அடுத்த சீட்டை எடுத்தான்.

ஜெனித்தா என்று அவள் பெயர் வர, அவள் துணுக்குற்று டேவிடைப் பார்த்தாள். டேவிட் முகம் அத்தனை பிரகாசமாய் மாறியது. அவன் முன்னமே ஏதோ யோசித்து வைத்திருக்கிறானோ என்றவள் சந்தேகிக்கும் போதே,

"நீ வீணை வாசிச்சு நான் கேட்கணும்" என்று வெகுசாதாரணமாக சொன்னாலும் அவன் முகத்தில் ஒளிர்ந்த புன்னகையின் சூட்சமம் அவளுக்கு மட்டுமே தெரியும். அதற்குக் காரணம் அவன் வீணை வாசிக்கச் சொல்லி கேட்கும் போதெல்லாம் அவள் மறுத்திருந்தாள்.

ஏனோ வீணையைத் தொட்டாலே அவளைப் பழைய நினைவுகள் ஆட்கொள்ள, ராகவ் அன்று புகழ்ந்தது அவளுக்கு எரிச்சல் மூட்டியது. ஆதலாலேயே டேவிட் அவளிடம் பலமுறை கேட்டுப் பார்த்தும் அவள் வாசிக்க மாட்டேன் என்று தவிர்க்க, அவனோ அதை மனதில் வைத்துக் கொண்டு பொதுப்படையாக இப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்கவேயில்லை.

அவள் யோசனையோடு அமைதி காக்க மாயா அவளிடம்,

"வாசி சாக்ஷி... நான் கூட கேட்கணும்னு ஆசையா இருக்கு... அதுவும் பாரதியாரோடு மாலை பொழுதிலொரு பாட்டு பாடிகிட்டே வாசிப்பியே" என்று கேட்க, ஜென்னி பதிலின்றி இருந்தாள்.

டேவிட் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு, "இட்ஸ் ஓகே.. ஜென்னிக்கு விருப்பமில்லன்னா கம்பெல் பண்ண வேண்டாம்" என்க, அங்கே அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளாமல் ஜென்னியை வாசிக்க சொல்லி கட்டாயப்படுத்தினர்.

மகிழ் இடைபுகுந்து, "அதெப்படி?! ரூல் இஸ் அ ரூல்... அது கல்யாண பொண்ணாகவே இருந்தாலும் சரி" என்றான் .

"சரி நான் வாசிக்கிறேன்... ஆனா வீணை" என்றவள் கேட்க,

"வீணை வரும்" என்று டேவிட் சொல்லவும் அவள் புருவங்களை சுருக்கி,

"அப்போ இந்த கேம் நீங்களும் மகிழும் போட்ட ப்ளானா?!" என்றவள் சன்னமாய் கேட்க, அவனிடம் புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது.

டேவிட் சொன்னது போல் வீணை வந்து சேர, அவள் மேடை மீது அமர்ந்து வாசிக்கத் தொடங்கினாள். அதுவும் மாயா சொன்ன அந்த பாரதியார் பாடலைப் பாடியபடி,

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே

வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்

மூலைக் கடலினையவ் வான வளையம்

முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி

நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே

சாலப் பலபலநற் பகற் கனவில்

தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே

ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்

பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்

ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்

ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்

வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!

மாய மெவரிடத்தில்?'என்று மொழிந்தேன்'

அவள் பாடி வாசித்துக் கொண்டிருக்க எல்லோருக்குமே மெய்சிலிர்த்துப் போனது. பாரதியின் வரிகள் இயம்பியது போல் மாயம் எதனிடத்தில்? அவள் குரலிலா அல்லது அவள் விரலிலா என்று அந்த இசையில் லயித்திருந்த எல்லோருமே திகைத்திருந்தனர். அதே நேரம் ஜென்னியும் திகைப்பிலாழ்ந்தாள்.

மாயம் அவனின் காதலிலா அல்லது அவன் விழியிலா ?அவள் விரல்கள் வீணையின் தந்திகளில் வினை புரிய தொடங்கிய போது, டேவிடின் விழிகளைப் பார்த்தவள்தான். அதன் பிறகு அவளின் நினைவுகள் வேறெங்கும் செல்லாமல் அவனிடமே கட்டுண்டது.

அவள் பாடி முடிக்கும் வரை அந்த இடமே நிசப்தமாய் இருக்க, முடிந்த பின்னரும் அந்த அமைதியை விட்டு யாரும் வெளிவராதிருக்க மெல்ல எல்லோரும் மீண்டு... எழுந்து நின்று கைதட்டி அந்த இடத்தை அதிரச் செய்தனர்.

எல்லோருமே அவளைப் பாராட்டி தள்ளிக் கொண்டிருக்க மாயா அவளைக் கட்டி கொண்டு முத்தமிட்டாள்.

டேவிட் அவள் அருகில் வந்து வார்த்தைகளின்றி நிற்க, "நான் வாசிச்சது பத்தி நீங்க எதுவுமே சொல்ல மாட்டேங்குறீங்க" என்று வலியச் சென்று அவளே கேட்க,

"நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னனே... நினைவு இருக்கா? இந்த உலகத்திலயே நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுதான் தி பெஸ்ட்னு... யூ ஆர் தி பெஸ்ட்" என்றவன் பிரமிப்போடு சொல்ல அவன் விழிகள் அவள் விழிகளோடு புணர்ந்தது.

 இன்னும் எத்தனை நேரம் அப்படி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்பது என்ற ஏக்கம் மிகுந்தது அவர்கள் பார்வையில்.

அன்று இரவு ஒரு பெரிய பிரமாண்டமான ரிசார்ட்டில் அவர்களுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அவர்களுக்கான வரவேற்பும் அவர்களின் அறையின் அலங்காரமும் அமோகமாய் இருந்தது.

ரோஜா மலரிதழ்களுக்கிடையில்  படுத்தபடி, "ஜென்னி வா" என்று அவளைத் துடிப்போடு அணைத்துக் கொள்ள அழைத்தான் டேவிட்.

அவளோ அங்கிருந்த மலர்செண்டை அவன் மீது கோபமாய் வீசினாள்.

"என்ன ஜென்னி?" என்றவன்  தன் ஒற்றைக் கரத்தை தலைக்குக் கொடுத்தபடி கேட்க,

"ராகவ் அப்பா விஷயம் என்னாச்சு?"

"அதுதான் இப்போ உன் கோபமா?"

"ஹ்ம்ம்ம்"

"அவர் பாவம்... ஐடி ரைட்ல திக்கி திணறிகிட்டிருப்பாரு" என்றவன் கூற அவள் ஆச்சர்யமாக,

"நிஜமாவா?!" என்று வினவினாள்.

அவன், "ஹ்ம்ம்" என்க, அவள் முகம் மலர்ந்தது.

அவன் தவிப்போடு, "இப்பையாச்சும் பக்கத்தில வரலாமே" என்றவன் கேட்க, அவள் அவன் அருகில் வர அவளை இழுத்து தன்னருகில் படுக்க வைத்தான்.

"ஏன் இவ்வளவு அவசரம் டேவிட்? இது ஒண்ணும் நமக்கு பர்ஸ்ஸ்ஸ்ஸ்ட் நைட்  இல்லையே" என்றவள் கேட்க,

"அன்னைக்கு நடந்தது வெறும் டிரெயிலர்... இதுதான் மெயின் பிக்சர்" என்றான்.

அவள் உடனே தன் பார்வையைச் சுற்றி அலைபாய விட்டு எதையோ தேட, "என்ன ஜென்னி தேடுற?"

"அது... டேவிட் டேவிட்னு ஒரு நல்லவன் இருந்தான்... அவன் எங்கன்னு தேடறேன்" என்று சொல்லி குறும்பாய் பார்த்தவளிடம்,

"அவன் இப்போதைக்கு கிடைக்கமாட்டான்" என்று சொல்லி அவளை மேலே பேசவிடாமல் சேர்த்து அணைத்துக் கொண்டு முத்தமழையில் அவளை மூழ்கடிக்க, சத்தமில்லாமல் அவனின் செய்கைக்கு உடன்பட்டுக் கொண்டிருந்தாள் அவள். எல்லாமே காதல் செய்யும் மாயம்தான்.

ஆனால் அந்தக் காதலும் மாயமும் ஏகாந்தமாய் முன்னமே அவர்களுக்குள் நிகழ்ந்துவிட்டது. அது அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

ஒருவாரம் முன்பு ராகவின் அப்பா செயல்படுத்திய ஒரு காரியம் ஜென்னியின் தயக்கத்தையும் பயத்தையும் போக்கி அவர்களுக்கிடையில் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை உண்டுபண்ணியிருந்தது.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content