You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 64

Quote

64

நிமிர்வு

ஜே சேனலின் விருது வழங்கும் விழா எப்போதும் போல் பிரமிப்புடனும் பரபரப்புடனும் தொடங்கியது. நட்சத்திரங்களின் படையெடுப்புகள். இம்முறை அவர்களுடன் ஜெனித்தா...

ஊதா நிற கவுனில் பார்த்துப் பார்த்து வடித்த சிற்பமாய் நுழைந்தாள். வானில் முளைத்த  விடிவெள்ளி போல… அவள் மட்டும் தனித்துவமாய் மின்னியபடி!

மாயா அவளுடன் உள்நுழைய, ஜென்னியின் பார்வை அனிச்சையாய் தன்னவனைத் தேடியது.  அவளுக்குத் தெரியும். அவன் வெளியே அரங்கத்தில் இருக்க மாட்டான் என்று. இருப்பினும் எங்கேயாவது அவன் தென்பட்டு விடமாட்டானா?! அவனைப் பார்த்துவிட மாட்டோமா என்ற தாபத்தோடு தேடினாள். அவன் தேர்ந்தெடுத்த உடையல்லவா?!

அவன் தன்னை அந்த ஆடையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு. சரியாய் அந்தச் சமயம் அவளின் கைப்பேசியில் அவன் அழைப்பு..

தன் மனதின் எண்ணத்தை எங்கிருந்தாலும் அவனால் மட்டுமே படித்துவிட முடியும் என்ற அதிசயித்தபடி அவள் அதனை ஏற்க, எடுத்த மறுநொடியே டேவிட் அவளைப் பேசவிடாமல்,

"யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் டுடே" அவள் நெகிழ்ச்சியில் மௌனமாய் நிற்க,

அவன் மேலும், "எக்ஸேக்ட்டா சொல்லனும்னா அழகு தேவதை நீ" என்றவன் ஆழ்ந்து வர்ணித்துக் கொண்டிருக்க,

அவளுக்குத் தேகமெல்லாம் சிலிர்த்துக் கொண்டது. அவள் விழிகள் அவனை ஆவலோடு தேடியபடி, "எங்கே இருக்கீங்க டேவிட்?" என்று வினவ,

"நான் எங்கே இருந்தாலும் உன்னை பார்த்துக்கிட்டே இருப்பேன்... மை டியர் பெட்டர் ஹாஃவ்" என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட நொடி அவள் முகம் மலர்ந்து இதழ்கள் விரிய அவன் மீண்டும்,

"உன் ஸ்மைல் கூட அத்தனை அழகு... இட்ஸ் மெஸ்மரைஸிங் மீ"  என்று அவன் கிசுகிசுத்தக் குரலில் சொல்ல அவள் உணர்வுகள் பொங்கித் திளைக்க,

"டேவிட் இன்னாஃப்... ஃபோனை முதல்ல கட் பண்ணுங்க" என்றாள் தவிப்போடு!

"ஐ கான்ட்... யூ டூ இட்" என்றான் அழுத்தமாக!

அவள் பெருமூச்செறிந்து அழைப்பைத் துண்டித்தவள், அரங்கத்திற்குள் நுழைய டேவிடும் அதே போல் பெருமூச்சுவிட்டு தன்னறையில் இருந்த பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒன்றில் அவளின் வருகையைக் கண்டுகளித்தபடி இருந்தான்.

மாயாவும் ஜென்னியும் இருக்கையில் அமர, இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே மாயாவின் குரல் சுருதி இறங்கியது.

"என்னாச்சு மாயா?!" என்றவள் கேட்டபடியே அவள் பார்த்த திசையில் பார்வையை திருப்ப, அங்கே மகிழும் அவனுடன் ஒரு பெண்  தொகுப்பாளரும் அளவளாவிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.

மாயா கோபம் பொங்க, "நான் இத்தனை நாள் கழிச்சு வெளியூர்ல இருந்து வந்திருக்கேன்... என்னை வந்து பார்த்து பேசணும்னு தோணுச்சா பார்த்தியாடி அவருக்கு?" என்றாள்.

"எப்படி மாயா முடியும்?  இந்த டென்ஷன்ல" என்று ஜென்னி அவன் நிலையை உரைக்க, "மனசிருந்தா முடியும்" என்றவள் கூர்மையாய் மேடையையே பார்த்திருந்தாள்.

மேடையில் மகிழ் அருகில் நின்றிருந்த ப்ரியா அவனை பார்த்து,

"இன்னைக்கு பார்க்கவே ரொம்ப ஸ்பெஷலா  ஸ்மார்ட்டா தெரியிறீங்களே மகிழ்?!"  என்று மைக்கில் ஒரு போடு போட்டாள்.

மாயாவிற்கு உள்ளூர தீ கொழூந்து விட்டு எரிய, "திஸ் இஸ் டூ மச்" என்றவள் பொறும,

ஜென்னி அவளிடம் ,"ஏ லூசு மாயா... நீ ஒரு வீஜே வோட வொய்ஃப்...  இப்படியெல்லாம் ஸில்லியா திங்க் பண்ணக் கூடாது" என்றவள் சொல்லவும்,

அதற்குள் மேடையில் மகிழ், "நீங்களும்தான் ப்ரியா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க" என்று சொல்லித் தொலைத்தான்.

மாயாவின் முகம் சிவப்பேற ஜென்னி புன்னகையோடு, 'மகிழ்  நிலைமை கஷ்டம்தான்' என்று எண்ணிக் கொண்டாள். விளையாட்டாய் பேச்சை ஆரம்பித்து இருவரும் வெகுபிரமாதமாய் அந்த விருது வழங்கும் விழாவை தொகுத்துக் கொண்டிருக்க, மாயாவுக்குதான் உள்ளூர புகைந்து கொண்டிருந்தது.

 வரிசையாகப் பலரும் விருதுகளைப் பெற்று கொண்டிருக்க, சையத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. அவன் ஜென்னியை வைத்து எழுதி இயக்கிய ரௌத்திரம் பழகு என்ற படத்திற்கு. அந்தப் படம் அவன் வீழ்ச்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திருப்பியிருந்தது.

மகிழ் விருது வாங்கி நின்ற சையத்திடம், "என்ன சையத் சார்?... இந்த அவார்ட் இல்லாம...  உங்களுக்கு டபுள் அவார்ட் கிடைச்சிருக்காமே" என்று கிண்டலடித்து சிரிக்க,

அவன் பதில் சொல்லாமல் நெகிழ்ச்சியுற நிற்க, "அதென்ன இரண்டு அவார்ட் மகிழ்" ப்ரியா கேட்டாள்.

"சையத் சாருக்கு ட்வின்ஸ் பிறந்திருக்கு... அதோட இந்த படத்தோட வெற்றி... அதோட வரிசையாய் நிறைய படங்கள் வேற"

"வாவ்... கமான் சையத் சார்... உங்க சந்தோஷத்தை எங்ககிட்டயும் ஷேர் பண்ணிக்கலாமே" என்றாள் ப்ரியா.

சையத் புன்முறுவலோடு,  "எல்லாமே அல்லாவோட அருளாலும் எங்க அம்மா அப்பாவோடு ஆசிகளாலும் என் அன்பான மனைவியாலும்தான்" என்று சொல்லவும் அரங்கம் அதிர கைதட்டல்கள் கேட்டது.

"சொல்ல வேண்டியதை நச்சுன்னு சொல்லிட்டாரு"

"அதுதானே சையத் சாரோட ஸ்டைல்" என்று முடித்தான் மகிழ். இறுதியாய் பெஸ்ட் ஹீரோயின் என்ற கேட்டகிரி வரவும், எல்லோருக்குமே சந்தேகமின்றி தெரியும் அது ஜெனித்தாதான் என்று.

அவள் பெயரை சொல்லப் போகும் தருணத்திற்காக ஆவலாகப் பலரும் எதிர்பார்த்திருக்க, "தி வின்னர் இஸ் கார்ஜியஸ் அன் ப்யூட்டிப்புஃல் லுக்கிங் ஜெனித்தா" என்று அறிவிக்கப்பட்டது.

கைதட்டல் ஒலிகளும் ஆரவாரங்களும் கேட்க ஜென்னி மேடையேறினாள். உள்ளூர பயமும் தயக்கமும் அவளைப் பின்னுக்கு இழுத்தது. அவள் வாழ்க்கையில் கடந்து வந்த சிரமங்கள் தாண்டி இப்போது அவள் கடக்கப் போவதுதான் அத்தனை சிரமத்திற்குரிய விஷயமாய் இருக்கப் போகிறது.

பல பெண்களும் அவளைப் போல் பல சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது மறுக்கப்பட முடியாத நிதர்சனம். ஆனால் அவள் இப்போது செய்யத் துணியும் காரியத்தை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்.

டேவிடும் அவளின் மனநிலையை அவள் முகத்தை வைத்தே ஆராய்ந்து தெரிந்து கொண்டான். அவள் அருகில் இப்போது துணையாய் நிற்க வேண்டும் என்று அவன் மனமெல்லாம் துடிக்க, ஜென்னி மேடையேறி அவளுக்கான விருதைப் பெற்றாள்.

ப்ரியா புன்னகையோடு, "நீங்க உண்மையிலயே அந்த படத்தில நடிச்சீங்கன்னு சொல்ல முடியாது...ஜென்னி... யூ ஜஸ்ட் லிவ்ட் இட்" என்றாள்.

ஜெனித்தா புன்னகை ததும்ப,"தேங்க் யூ ப்ரியா... ஆனா இந்த புகழுக்கும் பாராட்டுக்கும் உரியவர் இந்த படத்தோட டைரக்டர் ஆஸ் வெல் ஆஸ் மை ஃப்ரெண்ட் சையத்... அவருக்குதான் நான் தேங்க் பண்ணனும்" என்றவள் நிறுத்தி,

"தேங்க்யூ சையத்... இப்படி ஒரு கேரக்டர்ல என்னை நடிக்க வைச்சதுக்கு" என்றாள்.

ஜென்னி தயங்கிய பார்வையோடு, "இங்க இன்னும் நான் சில முக்கியமான விஷயங்களை ஷேர் பண்ணிக்கணும்... பண்ணிக்கலாமா?" என்று கேட்க, "ப்ளீஸ்" என்று ப்ரியா அவளைப் பேசச் சொன்னாள்.

இதயம் படபடக்க ஜென்னி பேச ஆரம்பித்தாள்.

"நான் இன்னைக்கு இங்க இருக்கேன்... ஆனா இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு எல்லோருமே தெரிஞ்சிக்கணும்னு ஆசைபடறேன்" என்றவள் சொல்ல மகிழும் மாயாவும் அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தனர்.

ஆனால் டேவிடுக்கு அத்தகைய அதிர்ச்சி இல்லை. அவனிடம் சொன்ன பின்னரே அவள் அந்த காரியத்தை செய்கிறாள். அவனுடைய பயமே அவள் அழுதுவிடாமல் திடமாய் பேச  வேண்டுமென்பதே. ஜென்னி அவள் பார்வையிழந்தவளாய் எதிர்கொண்ட சொல்லவொண்ணாத துயரங்களையும்  விரிவாய் அத்தனை பேர் முன்னிலையிலும் விவரிக்க, அந்த அரங்கமே கனத்த மௌனத்தைச் சுமந்து கொண்டிருந்தது.

அவள் கதையை கேட்ட எல்லோரின் விழிகளிலும்  நீர் துளிர்த்து விழ, அவள் மட்டும் கலங்கவில்லை. மகிழின் முகம் வேதனையில் சிவப்பேறி இருக்க, மாயா தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ஜென்னி திடமாக நின்று அவள் தன் வாழ்வில் கடந்து வந்த சோதனைகளை சொல்லி முடித்து விட்டு, "ஏன் நான் இதையெல்லாம் இங்க சொல்றேன்னு எல்லோருக்கும் தோணும்... என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் முடங்கிப் போயிடக் கூடாது... இனி நமக்கு வாழ்க்கையே இல்லைன்னு தவறான முடிவை நோக்கிப் போயிடவே கூடாது... மனோதிடமா எல்லா பிரச்சனைகளும் கடந்து வந்து அவங்க கஷ்டத்தை ஜெயிச்சு நிற்கணும்”

“அதே போல உடலில் குறை இருக்கிறவங்க அவங்க குறைகளை சுட்டிகாட்டி பேசுறதும் அவங்க பலவீனத்தை நமக்கு சாதகமா பயண்படுத்திக்க நினைக்கிறது... ரொம்ப ரொம்ப தவறான விஷயம்.. இதை நான் வலியோட சொல்றேன்”

“நான் இன்னைக்கு இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன்னா பலரும் எனக்கு உதவியிருந்திருக்காங்க... என் நண்பர்கள் மகிழ் மாயா தியா எனக்கு புது அடையாளத்தைக் கொடுத்த என்னோட பேரண்ட்ஸ் விக்டர் ஜெனிபஃர் அதோட என் மாமனார் தாமஸ்...

லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்...

எனக்கு உயிர் கொடுத்த

எனக்கு விழி கொடுத்த

நண்பனா தோள் கொடுத்த

கணவனா காதல் கொடுத்த

என் வெற்றிக்காக இன்னைக்கு

இந்த மேடையும் கொடுத்திருக்காரு...

மை பெட்டர் ஹாஃவ்... என் லைஃப்ல வந்த ரியல் ஹீரோ... டேவிட்

அவர் இல்லன்னா நான் இல்லை. ஒரு பெண்ணுக்கு அவரை போல ஒரு துணை கிடைச்சுட்டா இந்த வெற்றி எல்லாம் சர்வ சாதாரணம்... என்னோட இந்த அவார்ட்... இந்த வெற்றி இரண்டையும் என்னுடைய ஆருயிர் கணவர் டேவிடுக்காக நான் டெடிக்கேட் பண்றேன்... ஐ லவ் யூ டேவிட்" என்று சொல்லி முடிக்கும் போது அவள் கன்னங்கள் கண்ணீரால் முழுமையாக நனைத்திருந்தன.

மகிழும் அவள் சொன்னவற்றைக் கேட்டு நெகிழ்ச்சியானவன் தன்னிலை பெற்று, "டேவிட் சார்... ப்ளீஸ் கம் ஆன் டூ தி ஸ்டேஜ்" என்றான்.

டேவிடுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் உண்மையைச் சொல்ல போகிறேன் என்று மட்டும்தானே சொன்னாள். ஆனால் அவள் இப்படியெல்லாம் பேசுவாள் என்று அவன் துளியளவும் எதிர்பார்க்கவில்லை.

அவன் இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்தபடி நிற்க, மகிழ் மேடைக்கு அழைத்ததை உணர்ந்து தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவன்,

அந்தப் பிரமாண்டமான மேடையின் பின்புற கதவிலிருந்து மேடைக்குள் நுழைந்தான். அவன் வருகையைப் பார்த்ததும் எல்லோருமே எழுந்து நிற்க, அந்த அரங்கமே கைதட்டல் ஒலியில் மிதந்து மூழ்கிக் கொண்டிருந்தது.

 நெகிழ்ச்சியாய் தன் மனைவியைப் பார்த்து சமிஞ்சையால் ஏன் இப்படி எல்லாம் என்று அவன் கேட்க அவள் அரங்கத்தினர்கள் அவனுக்குச் செலுத்தும் மரியாதையைக் காண்பித்து,

'யூ மஸ்ட் டிஸர்வ் திஸ் டேவிட்' என்று அழுகை தொனியில் உரைக்க, அவன் தன்னவளை பார்த்து பேச்சற்று நின்றான்.

அன்று தாமஸ் தன் மகனைக் கண்டு அத்தனை பெருமிதம் கொண்டவர் ஜென்னி போன்ற பெண் அவனுக்குத் துணைவியாக வந்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார்.

ஒரு தீயவனை அடையாளம் கண்டு தண்டிக்கப்படுவது எத்தனை முக்கியமோ அந்தளவுக்கு ஒரு நல்லவன் அங்கீகரிக்கப்படவும் வேண்டும். டேவிட் போன்றவர்கள் அங்கீகரித்துப் பாராட்ட பட வேண்டியவர்கள்.

நல்லவனாய் வாழ்வது இந்த உலகத்திலேயே சிரமமான காரியம் என்ற நிதர்சனத்தை டேவிட் உணர்ந்தாலும் அவன் நிலையில் இருந்து கிஞ்சிற்றும் பிறழவில்லை.அதனாலேயே இன்று எல்லோர் முன்னிலையிலும் அவன் உயர்வாகவும் நிமிர்வாகவும் நின்றான்.

**************************சுபம்****************************

 

 

 

 

 

 

 

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Super

Quote

Very excellent 👍👌 story 

You cannot copy content