You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Final Episode

Quote

35

லல்லி பரபரப்பாக அர்ச்சனாவின் கரத்தைப் பிடித்து இழுத்து கொண்டு வெளியே வந்தாள்.

“எங்கடி என்னை இழுத்துட்டுப் போற?”

“தோட்டத்துல மாமா… ஸ்ரீயோட” என்றவள் படபடப்பாகப் பேசும் போதே இடைமறித்த அர்ச்சனா,

“புதுசா கல்யாணம் ஆனவங்க என்னவோ பண்ணிட்டுப் போறாங்க… அதை எல்லாம் நீ ஏன் பார்க்கிற… உனக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே இல்லையா? இதுல என்னை வேற இழுத்துட்டு வந்துட்டு” என்று அவள் கையை உதறி விட்டு மீண்டும் உள்ளே செல்ல எத்தனித்தாள்.

“ஐயோ அர்ச்சு… மாமா ஸ்ரீயோட கழுத்தைப் பிடிச்சிட்டு இருக்காரு… எனக்கு பயமா இருக்கு”

“எதையாவது பார்த்து தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டு உளறாதேடி”

“சத்தியமா சொல்றேன்… நீ வந்து பாரு” என்று லல்லி மீண்டும் அர்ச்சனாவின் கையைப் பிடித்து இழுக்க,

“உன் பேச்செல்லாம் நம்பி நான் வரமாட்டேன்… மாமா போய் ஸ்ரீ கழுத்தைப் பிடிக்குறதாவது” என்று அர்ச்சனா மறுத்துவிட்டுச் செல்லும் போது அவள் காதில் வெங்கட்டின் குரல் ஒலித்தது.

“சாவுடி” என்றவன் சீறலாக உரைக்க, அதனைக் கேட்ட நொடி அர்ச்சனா லலிதாவை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“நான் சொன்னேன் இல்ல” என்று லல்லி கூறவும் அர்ச்சனா அவசரமாகத் தோட்டத்திற்குள் புகுந்து சென்றாள். லலிதா பின்னோடு ஓடி வந்தாள். ஆனால் அவர்கள் பயந்தது போன்று அங்கே எதுவும் நிகழவில்லை.

அவர்கள் வரும் சத்தம் கேட்டதுமே மாறா ஸ்ரீயின் கழுத்திலிருந்த கரத்தை எடுத்துவிட்டான். மூச்சு அடைத்ததில் தடுமாறி விழ இருந்தவளை அவன் தாங்கிப் பிடித்திருந்தக் காட்சியைதான் அவர்கள் பார்க்க நேர்ந்தது.

அர்ச்சனா லல்லியை முறைக்க, “இல்ல அர்ச்சு… நான் பார்த்த போது” என்று அவள் குழப்பத்துடன் யோசிக்க,

“பைத்தியம் பைத்தியம்… நீயும் உன் நொள்ள கண்ணும்” என்று திட்டிவிட்டு அர்ச்சனா தோட்டத்தை விட்டு வெளியே வந்துவிட்டாள்.

“அர்ச்சு நில்லு” என்று அழைத்து கொண்டு லல்லி பின்னோடு ஓடி வர,

“இன்னொரு தடவை நீ அந்தப் பக்கம் போய் பாரு… உன் காலை உடைக்கிறேன்” என்றாள் அர்ச்சனா கண்டிப்புடன்.

லலிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ தான்தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம் என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டு அவளும் உள்ளே சென்றுவிட்டாள்.

அதேநேரம் ஸ்ரீ சிரமப்பட்டு மூச்சை இழுத்துவிட்டு கொண்டு நிமிர, அவன் விழிகள் சீற்றத்துடன் அவளை நோக்கின. அவள் உடனடியாக அவன் கரத்தின் பிடியிலிருந்து விலகி நின்றாள்.

அவள் சோர்வுடன் மரத்தில் சாய்ந்து நின்று கொள்ள, “மல்லி எங்கேன்னு இப்பயாச்சும் சொல்றியா” என்று அவன் மீண்டும் கேட்டான்.

“எனக்கு தெரியாது” என்றவளும் விடாப்படியாக அதே பதிலைக் கூறியதும் அவன் கொதித்துப் போனான்.

“அப்போ உன் புருஷனை நீ உயிரோட பார்க்க முடியாது… இந்த நிமிஷமே இங்கேயே அவனைக் கொன்னுடுவேன்… பரவாயில்லயா” என்று மிரட்ட, அவள் நடுங்கிவிட்டாள்.

“வேண்டாம் ப்ளீஸ் அப்படி எதுவும் செஞ்சுராதே”

“என் கேள்விக்குப் பதில் சொல்லலனா அதுதான் நடக்கும்” என்றவன் தீர்மானமாகச் சொல்ல, அவள் மிகவும் இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டாள். யாரைக் காப்பாற்றுவது? யாரைப் பலிக் கொடுப்பது?

எது நடந்தாலுமே அது வெங்கட் குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக சிதைத்துவிடும்.

எப்படி யோசித்தாலும் இந்தப் பிரச்சனைக்கான தீர்வாக அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. “ப்ளீஸ் மாறா… நீ என்ன கேட்டாலும் நான் செய்றேன்… நீ பழி வாங்குற எண்ணத்தை விட்டுடு” என்றவள் கண்ணீர் மல்க அவனிடம் மன்றாடிப் பார்த்தாள். அது ஒன்றுதான் இப்போது அவளுக்கு இருக்கும் ஒரே வழி.

அவன் அவளை ஏறயிறங்கப் பார்த்து, “நான் என்ன கேட்டாலும் செய்வியா?” என்று வினவ,

“என்னால முடிஞ்சா கண்டிப்பா செய்றேன்” என்றாள்.

“அப்போ மல்லியைக் கொண்டு வந்து என் முன்னாடி நிறுத்து” என்றவன் சொல்ல, அவள் தளர்ந்து போனாள்.

“ஏன் இப்படி பண்ற? வெங்கட்டை நீ கொல்றதும்… வெங்கட் கையால அத்தையைக் கொல்றதுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல… வெங்கட் அவங்க அம்மா மேல உயிரையே வைச்சு இருக்காரு”

“ஏன்? எனக்கு எங்க அம்மா மேல பாசம் இல்லையா? நான் எங்க அம்மா மேல உயிரையே வைக்கலயா… அவங்களைக் காப்பாத்த முடியாத இயலாமைல நான் தினம் தினம் குற்றவுணர்வுல துடிச்சிட்டு இருக்கேனே… எனக்கு வலிக்காதா… என் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லையா?” அவள் என்ன பேசினாலும் அவன் அதற்கும் ஒரு பதிலை வைத்திருந்தான்.

அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் வடிந்து கொண்டிருக்க அவனோ,

“எனக்கு இரக்கம் காட்டாத மல்லிக்கு நான் மட்டும் இரக்கம் காட்டணுமா” என்று முடிவாகச் சொல்லிவிட்டு தன் பாக்கெட்டிலிருந்த கார் சாவியை எடுத்துக் கொண்டு விறுவிறுவென நடந்தான்.

“எங்கே போற நீ” என்றவள் அவன் பின்னோடு ஓட,

“தன்னோட மரணத்தை விட பெத்த மகனோட மரணம் இன்னும் வலியானதா இருக்கும் இல்ல” என்றவன் சொல்லியபடி நடக்க,

“ப்ளீஸ் வேண்டாம்… அப்படி எதுவும் செஞ்சுடாதே” என்றவள் வேண்டிக் கேட்க அவன் அவளைப் பொருட்படுத்தவில்லை. அவன் கையைப் பிடித்து அவள் போகாமல் தடுக்க முயற்சி செய்ய அவன் அசட்டையாக உதறிவிட்டு காரைத் திறந்தான். அதே சமயத்தில் வாயிற் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தனர். ஸ்ரீக்கு வருவது யாரென்று தெரியவில்லை. ஆனால் மாறா ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்துவிட்டான்.

ரத்னாவும் அவள் மகள் ஷாலும் வந்து கொண்டிருந்தனர்.

அவள் வெங்கட்டைப் பார்த்ததும் புன்னகை பூத்தாள். ஆனால் அவனோ ஷாக்கடித்தது போல உறைந்து நின்றிருந்தான்.

“எங்கேயோ வெளியே கிளம்பிட்டு இருக்கீங்க போல” என்று கேட்டுக் கொண்டே அவர்களை ரத்னா நெருங்கி வர, மாறா தான் காண்பது நிஜம்தானா என்று நம்ப முடியாத நிலையிலிருந்தான்.

ஸ்ரீயோ ரத்னாவைப் பார்த்து, “நீங்க யாரு?” என்று விசாரித்தாள்.

“மறந்துட்டீங்களா… வெங்கட் சாரோட பர்த்டே அன்னைக்கு ஷாலுவோட ஸ்கூலுக்கு வந்திருந்தீங்களே… அப்போ பார்த்தோமே” என்று ரத்னா நினைவுப்படுத்த, திருமணத்திற்கு முன்பான சந்திப்பாக இருக்கும் என்பதை யூகித்த ஸ்ரீ, 

“ஆ ஆமா… ஞாபகம் இருக்கு” என்று சமாளித்தாள். அதேநேரம் அவள் மாறாவைத் திரும்பி பார்த்தாள். அவன் என்ன செய்ய போகிறானோ என்ற தவிப்பில் அவள் நிற்க, அவன் பார்வையோ ரத்னாவின் மீதே லயித்து இருந்தது.

இவர்களின் இந்தக் குழப்பத்துக்கு இடையில் ரத்னா, “என்ன உங்க முகத்துல காயம்” என்று ஸ்ரீயைப் பார்த்து கேட்க, அப்போதே தன் நெற்றியில் இரத்தம் உறைந்திருப்பதை ஸ்ரீ தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.

“ஒன்னுமில்ல… இடிச்சுக்கிட்டேன்” என்று அவள் சமாளிக்க, ரத்னாவுக்கு ஏதோ சரியில்லை என்று விளங்கியது.

அதேநேரம் மாறா ரத்னாவையே ஆழமாகப் பார்த்திருக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ஷாலு மாறாவின் கைகளைப் பிடித்து இழுக்க,  அவன் குனிந்து பார்த்தான். அவள் அவனிடம் கைகளை உயர்த்திக் காட்டித் தூக்கு என்பது போல செய்கை செய்தாள்.

அவன் அந்த நொடியே அவளை தம் கைகளால் வாரி அணைத்து கொள்ள, அந்தச் சின்னப் பெண் அவனிடம் தன் கைகளிலிருந்த பரிசைக் காட்டினாள்.

“அங்கிள்… நான் வாங்கினேன்” என்றவள் வித்தியாசமாக தலையசைத்து அவனிடம் அந்தப் பரிசைக் காட்டிய போது அவன் நெகிழ்ந்து போனான். அவன் கண்களில் வழியும் கண்ணீரை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஸ்ரீக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

இத்தனை நேரம் மாறாவின் கண்களிலிருந்த கோபமும் வஞ்சமும் முற்றிலும் மாறி அமைதியும் அன்பும் நிலை கொண்டிருந்தன.

அதேநேரம் வெங்கட் ஷாலுவை அணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக்கிய காட்சியைப் பெருமை பொங்கப் பார்த்த ரத்னா, “ஸ்கூல ஒரு காம்பட்டிஷன்… அதுல ஷாலு வின் பண்ண ப்ரைஸ்தான் அது…  இதெல்லாமே உங்களாலதான் வெங்கட் சார்… ஷாலுவுக்கு எதிர்காலமே இல்லன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்.

எல்லா குழந்தைகளையும்போல அவ இல்லையேன்னு நான் தினம் தினம் அழுதிருக்கேன்… ஆனா இன்னைக்கு…

நான் இந்த நிமிஷம் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உங்களுக்கு எப்படி சொல்லுவேன்… அவ ரைம்ஸ் சொல்லும் போதும் பாட்டுப் பாடும் போது… அவங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் டான் டான்னு பதில் சொல்லும் போது… நான் திக்குமுக்காடிப் போயிட்டேன்

அவ்வளவு ஆச்சரியம்… நீங்க ஷாலுவைப் பத்தி நம்பிக்கையா பேசும் போது கூட நான் நம்பல… எப்படி இவளை வளர்க்கப் போறேன்னு பயம்தான் அதிகமா இருந்துச்சு… ஆனா இப்போ… இந்த நிமிஷம் எனக்கு நம்பிக்கை வந்துருச்சு…

அதான் ப்ரைஸ் வாங்கின கையோடு உங்ககிட்ட காட்டிட்டுப் போகலாம்னு ஓடி வர்றேன்…

ஷாலுவோட அப்பா இருந்தா கூட இப்படி எல்லாம் செஞ்சிருப்பாருன்னு தெரியல” என்று அவள் நெகிழ்வுடன் பேச, அவன் பேச்சற்று அவளைப் பார்த்தான்.

“நீங்க செஞ்ச உதவியை நான் எந்த ஜென்மத்துலயும் மறக்கவே மாட்டேன் சார்… வாழ்க்கைப் பூரா உங்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கேன்” என்று ரத்னா உணர்ச்சிப் பொங்கப் பேச அவன் முகம் களையிழந்து போனது.

அவர்கள் இருவரும் எதுவும் பேசாததில் ரத்னா ஒரு மாதிரி சங்கடமாக உணர்ந்தாள். ஆனால் வெங்கட்டின் கண்களிலிருந்த கண்ணீர் பேசாமல் பேசும் அவன் உணர்வுகளை அவளுக்குப் பறைச்சாற்றியது.

ரத்னா  மேலும், “மல்லிம்மா வீட்டுல இருக்காங்களா?” என்று விசாரிக்க,

“இல்ல… ஸ்கூலுக்குப் போயிருக்காங்க” என்று உடனடியாக ஸ்ரீ பதில் சொல்ல,

“அப்போ அம்மா வந்ததும் சொல்லுங்க… நான் இன்னொரு சமயம் வந்து அம்மாவைப் பார்க்கிறேன்… நீங்க எங்கேயோ வெளியே கிளம்புறீங்க போல… போயிட்டு வாங்க… நான் வேற உங்க நேரத்தை பேசி வீணடிச்சிட்டு இருக்கேன்” என்று ரத்னா சொல்ல,

“ச்சே ச்சே அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க உள்ளே வந்துட்டுப் போங்க” என்று அழைத்தாள் ஸ்ரீ.

“இருக்கட்டும் நான் வர்றேன்” என்றவள் புறப்படும் முன் வெங்கட் தூக்கி வைத்திருந்த ஷாலுவை வாங்க முற்பட, அவன் அவளைப் பிரிய முடியாமல் வேதனையுடன் பார்த்தான். அவன் கண்களில் அப்படியொரு வலி இருந்தது.

“அங்கிளுக்கும் ஆண்ட்டிக்கும் பை சொல்லு ஷாலு” என்று ரத்னா சொல்ல அவள் அழகாகப் புன்னகைத்து கையசைத்துக் கொண்டே வெளியேறினாள். கதவை தாண்டும் வரை அவர்களுக்கு அவள் கையசைத்துக் கொண்டே செல்ல, ஸ்ரீக்கு அந்தச் சின்னவளின் கள்ளங்கபடமில்லா புன்னகையில் அத்தனை நேரமிருந்த கவலைகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டுவிட்டது போலிருந்தது.

மாறாவும் கிட்டத்தட்ட அதே மனநிலையில்தான் இருந்தான். சற்று முன்பு இருந்த கோபமோ வஞ்சமோ அவனிடம் துளியும் இல்லை.

அவன் அப்படியே வாயிற்படிக்கட்டில் அமர்ந்து கொண்டு முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கிவிட்டான். ஸ்ரீ ஏதும் புரியாமல், “மாறா” என்று அழைக்க, அவன் பதிலேதும் சொல்லவில்லை.

“என்னாச்சு மாறா?” என்றவள் மீண்டும் கேட்க,

“ரத்னா என் மனைவி… ஷாலு என் பொண்ணு” என்றவன் கண்ணீருடன் அவளை நிமிர்ந்து பார்த்துச் சொல்ல, அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“அவங்க உன் மனைவியும் பொண்ணுமா?”

“ஹ்ம்ம்… நான் ஜெயில இருந்து தப்பிச்சதுல இருந்து அவங்களைதான் தேடிட்டு இருந்தேன்… ஆனா எங்கே தேடியும் அவங்களை என்னால கண்டுபிடிக்கவே முடியல… ரத்னா ஒரு வேளை குழந்தையோட தற்கொலை பண்ணிக்கிட்டாளோன்னு கூட பயந்துட்டு இருந்தேன்” என்றவன் அழுகையுடன் சொல்ல,

“என்ன மாறா நீ… அவங்க கிட்ட நீ உன்னைப் பத்தி சொல்லி இருக்கலாமே” என்று கேட்டாள்.

“ரத்னாவுக்கு நான் இறந்த விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன்… அவ சந்தோஷமா இருக்கா… இப்போ இதை சொல்லி அவளை நான் கஷ்டப்படுத்த விரும்பல” என்றான்.

அவன் வார்த்தைகளின் மூலம் அவன் குடும்பத்தின் மீது எந்தளவு பாசம் கொண்டிருக்கிறான் என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“நீ யாருன்னு தெரியாமலே வெங்கட் உன் குடும்பத்துக்கு நல்லது செஞ்சு இருக்காரு… ஆனா நீ” என்று நிறுத்தி ஸ்ரீ அவனைப் பார்க்க, மாறா குற்றவுணர்வுடன் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

“இப்போ கூட உன் பழி வாங்குற எண்ணம் சரின்னு நினைக்கிறியா மாறா” என்று அவள் அழுத்தமாகக் கேட்க, அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்நதான்.

“இல்ல… இனி ஒரு நிமிஷம் கூட வெங்கட் உடம்புல நான் இருக்க மாட்டேன்… ஷாலுவும் ரத்னாவும் நல்லபடியா இருக்க வெங்கட் காரணமா இருக்கும் போது அவன் குடும்பத்தோட சந்தோஷத்தை நான் அழிக்க மாட்டேன்” என, ஸ்ரீ அதிசயித்து போனாள். அவள் அத்தனை நேரம் அவனிடம் போராடியது அதற்காகதானே!

 “இனிமே என் ஆத்மா நிம்மதியா இந்த உலகத்தை விட்டு போயிடும்” என்றவன் அவளைப் பார்த்து, “நான் வெங்கட் கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்றியா” என, அவளால் பதில் பேச முடியவில்லை.

அவள் கண்ணீருடன் தலையசைக்க, “நீயும் என்னை மன்னிச்சிடு” என்றவன் அடுத்த சில கணத்தில் வெங்கட் உடலை விட்டு வெளியேறியதில் அவன் மயக்கமுற்றான்.

தலைக்கு வந்தது தலைப்பாகையுடன்  போய்விட்டதாக எண்ணி அவள் நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.

சில நிமிடங்கள் கழித்து வெங்கட் கண்களை திறந்தான். வெகுநேரம் உறக்கத்திலிருந்து விழித்தது போல இருந்தது அவனுக்கு.

கண்களை அவன் திறந்த நொடியே அந்த கருப்பு உருவம் பேசியதெல்லாம் நினைவு வர, “அம்மா” என்றபடி பதட்டத்துடன் எழுந்து அமர்ந்தான்.

“என்ன மாமா… என்னாச்சு… ஏன் திடீர்னு மயங்கி விழுந்துட்டீங்க” என்று அவன் அருகே நின்றிருந்த லல்லி கேட்க, “என்னாச்சு பெரிப்பா உங்களுக்கு” என்று அமிர்தாவும் அவள் பங்குக்குக் கேட்டு வைத்தாள்.

அவர்கள் யாரின் கேள்வியும் அவன் மூளைக்கு எட்டவில்லை.  “இருங்க நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று லல்லி உள்ளே சென்றுவிட அவனுக்கு சுயநினைவு வந்திருந்தது.

அப்போதே அவன் தன் வீட்டின் சோபாவில் படுத்திருந்ததை கவனித்தான். தான் எப்போது வீட்டுக்கு வந்தோம். ஒரு வேளை அம்மாவுக்கு ஏதாவது விபரீதமாக நடந்திருக்குமோ என்று அவன் மூளை பலவிதமாக யோசித்து குழம்பியது.

அவன் வேகமாக எழுந்து வெளியே செல்ல, “உடம்புக்கு முடியாம எங்க மாமா போறீங்க” என்று அர்ச்சனா தடுக்க, அவன் அவளைப் பொருட்படுத்தாமல் வெளியே வர, அங்கே ஸ்ரீ நின்றிருந்தாள்.

“எங்க போறீங்க நீங்க?” என்றவள் அவன் கையைப் பிடித்து நிறுத்த, “இல்ல ஸ்ரீ அம்மாவுக்கு” என்றவன் பேச வரும் போதே அவள் அமைதியாக இருக்கும்படி கண்ணசைத்தாள்.

இவர்கள் பேசுவதைப் பார்த்த பின் அர்ச்சனா உள்ளே சென்றுவிட, வெங்கட்டோ அதே பதட்டத்துடன், “அம்மாவுக்கு என்னாச்சு… அந்த உருவம் அம்மாவை ஏதாவது பண்ணிடுச்சா” என்று அச்சத்துடன் கேட்க,

“யாருக்கும் ஒன்னும் ஆகல… நீங்க வாங்க நான் சொல்றேன்…நாம எல்லாத்தையும் மேலே போய் பேசுவோம்” என்றவள் அவனை மாடியறைக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் கதவை மூடிவிட்டு வரும் வரை கூட அவனுக்குப் பொறுமை இல்லை. “அம்மா எங்கே ஸ்ரீ? சொல்லு ஸ்ரீ” என்றவன் பதற,

 “இருங்க நான் லைன் போட்டுத் தர்றேன்… நீங்களே உங்க அம்மாகிட்ட பேசுங்க” என்றவள் அவர்களை கைப்பேசியில் அழைத்து வெங்கட்டிடம் பேச வைத்தாள்.

“அம்மா உங்களுக்கு ஒன்னும் இல்லையே”

“எனக்கு ஒன்னும் இல்ல வெங்கட்… உங்களுக்கு அங்கே ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்றவர் விசாரிக்க,

“எங்களுக்கு ஒன்னும் இல்லமா… நீங்க எங்கே இருக்கீங்க” என்றவன் கேட்க,

“எங்கே போறதுன்னு ஒன்னும் தெரியல… அதான் திருப்பதிக்குப் போயிட்டு இருக்கோம்… இன்னும் கொஞ்ச நேரத்துல மலை ஏற போறோம்” என்று சொல்ல அவன் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

“சரிமா… நல்லபடியா சாமி பார்த்துட்டு வாங்க” என்றவன் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஸ்ரீயைப் பார்த்து,

“என்ன நடந்துச்சு… அந்தக் கருப்பு உருவம்… அது என்னாச்சு” என்று ஆர்வத்துடன் விசாரித்தான்.

“அது ஒரு பெரிய கதை வெங்கட்” என்றவள் நந்தா மல்லியை மருத்துவமனையில் பார்த்து பேசியது முதற்கொண்டு நடந்த அனைத்தையும் விலாவரியாக விளக்கி முடித்தாள். அவனுக்கு வியப்பில் சில நொடிகள் பேச்சே வரவில்லை.

“உங்க பாக்கெட்ல இருக்க அந்தக் கட்சீஃப்பை எடுங்க” என்று கேட்கவும்தான் அவனுக்கு அதன் நினைவு வந்தது. அவன் அதனைத் துழாவி எடுத்து கொடுக்க, ஸ்ரீ அதனை வாங்கிக் கொண்டு வெளியே வந்து தீயிட்டுக் கொளுத்தினாள்.

“நீங்க இதை எடுத்துட்டுப் போயிருக்கக் கூடாது… மாறா உங்க உடம்புல சுலபமா புகுந்துக்க இது ஒரு வழியாயிடுச்சு” என்றவள் அது முழுவதுமாக எரிந்து முடிந்ததைப் பார்த்துவிட்டு கையைத் தட்டிக் கொண்டு.

“இட்ஸ் ஆல் ஓவர் நவ்” என்றவள் அறைக்குள் திரும்ப அவன் அந்த நொடிதான் அவள் கன்னத்திலிருந்த விரல் தடத்தையும் நெற்றியிலிருந்த காயத்தையும் பார்த்தான்.

“எப்படி இந்தக் காயம் பட்டுச்சு” என்று அவற்றைச் சுட்டிக்காட்டிக் கேட்க,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… விடுங்க” என்றாள் அவள் சாதாரணமாக!

“என்ன ஒன்னும் இல்ல… இரத்தம் வந்திருக்கு பாரு” என்றவன் உடனடியாக அவளைப் படுக்கையில் அமர வைத்து தன்னிடமிருந்த முதலுதவிப் பெட்டியிலிருந்து மருந்தை அவள் நெற்றி காயத்தில் போட்டுக் கொண்டே அவள் கன்னங்களிருந்து விரல் தடங்களைப் பார்த்தபடி, “சாரி ஸ்ரீ… ஐம் எக்ஸ்ட்ரிமிலி சாரி” என்று திரும்ப திரும்ப சொல்ல,

“எதுக்கு சாரி… இது ஒன்னும் உங்களால நடக்கல… நீங்க சாரி கேட்க வேண்டிய அவசியமில்லை” என்றாள்.

“எல்லாமே என்னாலதான்… என்னோட மிஸ்டேக்… நீ சொன்ன எதையும் நான் நம்பல… போதாக்குறைக்கு உன் பேர்லயே பழியைப் போட்டு… வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி… எனக்கே என்னை நினைச்சா அவமானமா அசிங்கமா இருக்கு” என்றான்.

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க… எனக்கு உங்க நிலைமையைப் புரிஞ்சிக்க முடிஞ்சுது… உங்கக் குடும்பத்து மேல நீங்க வைச்சு இருந்த அன்புதான் உங்களை அப்படி பேச வைச்சுடுச்சு வெங்கட்… மத்தபடி என்னைக் காயப்படுத்தணும்னு எல்லாம் நீங்க நினைக்கல… இதுல உங்க தப்பு எதுவும் இல்ல.

இன்னும் கேட்டா உங்க குடும்பத்தை இந்தப் பிரச்சனையில இருந்து காப்பாத்துனது நீங்கதான்… நீங்க ரத்னாவுக்கு செஞ்ச உதவிதான்” என்றாள்.

“நான் செஞ்சதெல்லாம் விட நீ செஞ்சதுதான் பெரிய விஷயம்… நீ மட்டும் சரியான நேரத்துல அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்ணி அனுப்பி வைக்காம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு என்னால யோசிச்சு கூட பார்க்க முடியல”

“விடுங்க வெங்கட்… இப்போதான் எல்லாமே சரியாயிடுச்சு இல்ல… அதுவும் இல்லாம வீட்டுல யாருக்கும் இதை பத்தி தெரியாது… அத்தை மாமாவுக்கு கூட மாறா உங்க உடம்புல புகுந்த விஷயத்தை எல்லாம் நான் சொல்லல… நாமளும் இந்த விஷயத்தைப் பத்தி பேசவே வேண்டாம்”

“சரி நாம பேச வேண்டாம்… ஆனா உன் கன்னத்திலிருக்க காயத்தைப் பத்தி கேட்டா” என்றவன் குற்றவுணர்வுடன் அவளைப் பார்க்க, 

“கேட்டாவா…?  அர்ச்சனாவும் லலிதாவும் ஆல்ரெடி இது என்ன காயம்னு கேட்டு என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க…  எப்படியோ சமாளிச்சுட்டேன்” என்றாள்.

அவனோ அவள் கன்னத்தை வருடியடி வருத்தத்துடன் பார்க்கவும், “ப்ச்… இது ஒன்னும் உங்களால இல்ல… நீங்க ஒன்னும் கில்டியா ஃபீல் பண்ண வேண்டாம்” என்றாள் அவள்.

“என் உடம்பால நான் செஞ்ச காரியத்துக்கு நான் பொறுப்பாளி இல்லன்னா… அப்போ உனக்கும் அப்படிதானே ஸ்ரீ” என்று அவன்  கேட்ட நொடி அவள் மௌனமானாள்.

“என்கிட்ட பேசுனது பழகினது எல்லாம் மாயாதான்னா… அப்போ உனக்கு இந்தக் கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லயில்ல” அவன் கேட்ட கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த அறையை சில நொடிகள் மௌனம் ஆட்சி செய்தது.

ஸ்ரீஅந்த அமைதியைக் குலைத்தாள்.

அவள் வெங்கட்டை நிமிர்ந்து பார்த்து, “உண்மைதான் வெங்கட்… உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கும்போது நான் நிறைய குழப்பத்தோடுதான் பண்ணிக்கிட்டேன்” என, வெங்கட் முகத்தில் அபரிமிதமான ஏமாற்றம் தெரிந்தது.

அதனை கவனித்த ஸ்ரீ, “ஆனா இப்போ நான் ரொம்ப தெளிவா இருக்கேன் வெங்கட்.

வாழ்ந்தா உங்களை மாதிரி ஒருத்தரோடதான் வாழணும்” என, அவன் விழிகள் ஆச்சரியத்தில் பெரிதானது.

“உண்மையா சொல்றியா ஸ்ரீ”

“ம்ம்ம்” என்று புன்னகையுடன் தலையசைத்தவள் மேலும்,

“இங்கே இருக்க நிறைய பேருக்கு அவங்க அவங்க நினைச்ச மாதிரி வாழ்க்கை அமையறது இல்ல…மாயாவோட வாழ்க்கை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு… மகேந்திரனுக்கு அவன் நினைச்சது எதுவுமே நடக்கல… பாவம்… அவன் வாழ்க்கையில கிடைச்சது எல்லாமே ஏமாற்றம்தான்… ஆனா எனக்கு…

நான் நினைக்காமலே இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சிருக்கும் போது நான் எதுக்கு அதை விட்டுக் கொடுக்கணும்… எனக்கு கிடைச்சிருக்க வாழ்க்கையை சந்தோஷமா நான் வாழணும்னு முடிவு பண்ணிட்டேன்… எத்தனை காலம்னு எல்லாம் தெரியாது… ஆனா இருக்கிற காலம் வரைக்கும் உங்ககூடதான் இருக்கணும்னு விருப்பப்படுறேன் வெங்கட்” என்றவள் அவனிடம் சொன்ன மறுகணம்,

“எனக்கும்தான்” என்றபடி அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு, “தேங்க்ஸ் ஸ்ரீ… லவ் யூ” என்று சொல்லிக் கொண்டே அவள் முகம் முழுக்க முத்தத்தால் ஆராதிக்க அவள் அவன் கரங்களுக்குள் கரைய தொடங்கினாள்.

நிறைய குழப்பங்கள் போராட்டங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் தங்கள் உறவைக் குறித்த தெளிவான தீர்மானத்திற்கு வந்திருந்தனர்.

*********நிறைவு*********

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

கதை அருமையாக இருந்தது. கதை முடியப்போகிறது என்று போன அத்தியாயத்தில் கூட எதிர்பார்க்க வில்லை . இறுதி அத்தியாயம் என்று தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி. மாறன் சினிமாவில் வருவது போல் (நல்ல / நியாயமான)ஆவிக்கான வரையரையில் இல்லாததால், எப்படி கதையின் முடிவு இருக்கும் என்று குழப்பத்தில் இருந்தேன். இருந்தாலும் நல்லவிதமாகவே முடித்துள்ளீர்கள். சில நேரங்களில் கதை முடியப்போகிறது என்று தெரியாமல் இருப்பது கூட சுவாரஸ்யமாகவே உள்ளது:-)

 

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from Rathi on July 27, 2023, 11:35 AM

கதை அருமையாக இருந்தது. கதை முடியப்போகிறது என்று போன அத்தியாயத்தில் கூட எதிர்பார்க்க வில்லை . இறுதி அத்தியாயம் என்று தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி. மாறன் சினிமாவில் வருவது போல் (நல்ல / நியாயமான)ஆவிக்கான வரையரையில் இல்லாததால், எப்படி கதையின் முடிவு இருக்கும் என்று குழப்பத்தில் இருந்தேன். இருந்தாலும் நல்லவிதமாகவே முடித்துள்ளீர்கள். சில நேரங்களில் கதை முடியப்போகிறது என்று தெரியாமல் இருப்பது கூட சுவாரஸ்யமாகவே உள்ளது:-)

 

மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து என்னை எழுத ஊக்குவிக்கித்து கொண்டிருப்பதற்கு

Rathi has reacted to this post.
Rathi
Quote

 செம திகிலா இருந்துச்சு

Quote

Very interesting story 

monisha has reacted to this post.
monisha
Quote

Super ma...but malli vanthu innum scenes irundha epdi irukumnu thonuthu

You cannot copy content