You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 10

Quote

10

பிரியனின் வார்த்தைகள் அவனை பாதித்ததை விட அதிகமாக நிலாவைத்தான் பாதித்தது. பெற்ற மகள்களே அவளிடம் முகம் திருப்பிக் கொண்டு போனார்கள்.

அதுவும் நேற்று கருக்கலைப்புகள் நியாயமா அநியாயமா என்று விவாதித்துக் கொண்டிருந்த சமூக ஊடகத்தினர் இப்போது பிரியனின் வார்த்தைகளை வைத்து அவனைத் தாறுமாறாக விமர்சிக்கத் துவங்கி இருந்தார்கள்.

இதில் சிலர், ‘பிரியனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா?’ என்பன போன்ற கேள்விகள் கேட்க இன்னும் சிலர், “இவன் கூட எல்லாம் எந்த பொண்ணு சேர்ந்து வாழுவா?” என்று அவர்கள் வாழ்க்கையைப் பற்றி விமர்சித்தார்கள். இதெல்லாம் படிக்க படிக்க நிலாவிற்கு எரிச்சலாகவும் கோபமாகவும் வந்தது.

அவளுடைய குருவான சிவா அவள் உறவைப் பற்றி கருத்து கூறுவதை அவள் விரும்ப மாட்டாள். இதில் யார் இவர்கள் எல்லாம். நானும் பிரியனும் சேர்ந்து வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் இவர்களுக்கு என்ன?

ஆனால் எதார்த்தம் இதுதான். அவன் அப்படியொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளனாக கலந்து கொண்டிருக்கும் போது இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களைக் கடந்துதான் ஆக வேண்டும். அதவும் அதற்கான துருப்புச் சீட்டை அவனே எடுத்துத் தந்திருக்கிறானே. போதாதா!

 எதார்த்தம் உரைத்தாலும் அவள் மனம் அமைதியடைய மறுத்தது. முகநூல், இன்ஸ்டா, ட்விட்டர் என்று அவள் செல்பேசியிலிருந்து செயலிகள் அத்தனையும் நீக்கம் செய்து விட்டாள். வேலைக்குச் சேர்ந்தால் இந்தப் பிரச்சனைகளைக் குறித்து அவள் மனம் யோசிக்காமல் இருக்கும் என்ற எண்ணம் எழ, குளித்துக் கிளம்பி வெள்ளை குர்தி ஒன்றை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து தலையைச் சீவவும்,

“எங்கடி கிளம்பிட்ட?” என்று கேட்டார் ஜானகி.

“எஸ் வி சானலில் வேலை கிடைச்சிருக்கு... இன்னைக்கு ஜாயின் பண்ண போறேன்” என்று தன் தோள் பையை மாட்டிக் கொண்டு வாசலைத் தாண்டியவள், “ஆமா எத்தனை மணிக்கு வருவ” என்று கேட்டபடி அவளை வழியனுப்ப வாயில் வரை வந்தார்.

“இன்னைக்கு முடிஞ்சளவு சீக்கிரம் வந்துருவேன்... லேட்டாச்சுனா கால் பண்றேன்... ஆ அப்புறம் அந்த ஷோவை இனிமே பார்க்க விடாதீங்க” என்று முன்னே நடந்து கொண்டே சொல்ல,

“ஏய் ஏய் உன் பொண்ணுங்க கேட்க மாட்டங்களேடி” என்ற ஜானகியின் குரல் காற்றோடு தேய்ந்து போனது. அவள் அதற்குள் நடந்து பேருந்து நிறுத்தம் வரை வந்திருந்தாள்.  அவள் ஏற வேண்டிய பேருந்தும் வந்தது. கூட்டம் குறைவாக இருந்தது. ஜன்னலோர இருக்கையைப் பிடித்து அமர்ந்து கொண்டாள்.

சிக்னல், மாநகரச் சாலை நெரிசல்களை எல்லாம் கடந்து அவள் செல்லுமிடத்தை அடைய இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். ஜன்னல் வழியாக அரக்க பறக்க ஓடி கொண்டிருந்த மனித சஞ்சாரங்களைப் பார்த்தவள் மனம் பின்னோக்கி நகர்ந்து பழைய நாள்களைப் புரட்டிப் பார்த்தன.

“எனக்கும் பிரியனுக்கும் நாளைக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம்... யார் தடுத்தாலும் எங்க கல்யாணம் நடக்கும்” என்று உறுதியாகக் கூறிவிட்டு அவள் தன் பிறந்த வீட்டை விட்டு வெளியேறினாள். அன்று இரவு மட்டும் தோழி வீட்டில் தங்கியவள் அடுத்த நாள் பிரியனுடன் சென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை முடித்துக் கொண்டு கிளம்பினாள். அவர்களுடன் இருந்த நண்பர்கள் எல்லாம் உணவருந்திவிட்டு பாதியிலேயே கழன்று கொள்ள, அவர்கள் மட்டும் தனியாக தாங்கள் குடிவரப் போகும் வாடகை வீட்டிற்கு வந்தார்கள்.    

அது மாடியிலிருந்த ஒற்றை அறை கொண்ட சிறிய வீடு. மொட்டை மாடியில் ஓர் ஓரத்தில் அந்த வீடு தனித்து நின்றது. பிரியன் சாவி வாங்கி வீட்டைத் திறக்க அவள் உள்ளே அடி எடுத்து வைத்தாள். உள்ளே வந்து பார்த்ததுமே அவள் முகம் சுணங்கிவிட்டது.

ஒரே ஒரு அறை. அந்த அறையின் ஓரமாகச் சமையல் மேடையும் அருகே ஒன்றிரண்டு அலமாரிகளும் இருந்தன. மற்றபடி அந்த வீட்டில் உருப்படியாக வேறு ஒன்றும் இல்லை. தரை ஆங்காங்கே பெயர்ந்து கிடந்தது. கருப்பும் வெள்ளையுமாகக் கரைகள். சுவரில் புதிதாக வர்ணம் பூசக் கூட இல்லை.  ஆங்காங்கே தெரிந்த விரிசல்களும் கருப்பு நிறம் மண்டிய சமையல் திண்டுகளும் அவள் முகத்தைச் சுழிக்க வைத்தன.  

வெளியே குளியலறையுடன் கூடிய மிகச் சிறிய கழிவறை. அதன் கதவுகளும் சரியாக இல்லை. கையோடு கழன்று வந்து விடுவது போல மிகப் பலவீனமாக இருந்தது. குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு வந்தது இதற்காகவா? இப்படி ஒரு வாழ்கையை வாழ்வதற்காகவா? ஒரு நொடி அவள் மனம் அவசரப்பட்டுவிட்டோமோ என்று எண்ணிய கணம் தலையை உலுக்கிக் கொண்டாள்.

மாடியேறி மேலே வரும் வரை கூட அந்த வீடு இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. ‘வீட்டெல்லாம் பார்த்தாச்சு அட்வான்ஸ் கூட கொடுத்தாச்சு’ என்று அவன் சொன்ன போது வீடு எப்படி என்னவென்று கூட கேட்காமலே போய்விட்டோமே என்று அவள் மனம் அந்த நொடி அடித்து கொண்டது.

நேற்று வரை பிரியனைத் திருமணம் செய்தால் போதுமென்று இருந்தாள். அதைத் தவிர வேறு எதையும் யோசிக்கவில்லை. அதன் பிறகான வாழ்க்கை பற்றியும் சிந்திக்கவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் பிரியன் மீது அவளுக்கு இருந்த கண்மூடித்தனமான காதல். கண்ணை மூடிக் கொண்டு அவன் கிணற்றில் குதி என்று சொல்லி இருந்தாலும் செய்திருப்பாளே. ஆனால் இப்படி ஒரு வீட்டில்... பார்த்ததுமே அவள் முகத்தைச் சுழிக்கப் பிரியனோ அவள் மனநிலை புரியாமல், “வீடு நல்லா இருக்கா நிலா?” என்று கேட்டான்.   

அவனைத் திரும்பி முறைத்தவள் வீட்டிற்குள் அடுத்து அடி எடுத்து வைக்காமல் வெளியே இருந்த மாடியின் திண்டில் சாய்ந்து நின்று கொண்டாள்.

 அவள் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு, “என்னாச்சு நிலா... உனக்கு பிடிக்கலையா?” என்று கேட்க,

“வீடா தேவ் இது... கூண்டு மாதிரி இருக்கு... ஒரு தனி கிச்சன் கூட இல்ல” என்று அவள் கோபத்துடன் பேச, “என் நிலைமை என்னனு தெரிஞ்சும் நீ இப்படி பேசுனா என்ன அர்த்தம்... அதுவும் சென்னைல இந்த வாடகைக்கு இதை விட பெட்டரா எங்க கிடைக்கும்... நானே என் சையினை வைச்சுதான் அட்வான்ஸ் கொடுத்தேன்... தெரியுமா?” என்றவன் நிலைமையைக் கூற அவள் மனம் சமாதானமாகவில்லை.

“உனக்குப் பணம் வேணும்னா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம் இல்ல”

“இப்போ இந்த வீட்டுக்கு என்னடி குறை?” பிரியன் குரலும் உயர்ந்தது.

“இது பார்க்க எனக்கு வீடு மாதிரியே இல்ல” என்று அவள் கடுப்பாகப் பதில் தந்தாள்.  

“கொஞ்ச நாளைக்கு இங்க இருக்கலாம்... அப்புறம் நல்ல வேலை கிடைச்சா வேற வீடு பார்த்து மாறிடலாம் நிலா” என்று மிதமாகக் குரலில் சொல்லிக் கொண்டே நிலா அருகே வந்து அவள் தோளில் கையை போட எத்தனித்தான். அதற்குள் அவள் தள்ளிச் சென்று விட்டாள்.  

“கல்யாணமான முதல் நாளே சண்டை போட்டுக்கணுமாடி” என்றவன் கவலையுடன் மொழிய, “நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்” என்று நிலா திடமாகக் கூறினாள்.

“ஒரு மூணு மாசம்... அப்புறமா மாறிடலாம்” என்று அவன் மீண்டும் அதே சமாதானத்தைக் கூற,

“மூணு மாசமெல்லாம் முடியவே முடியாது தேவ்... அட்வான்ஸ் திருப்பி வாங்கு... வேற வீடு பார்த்து போலாம்” என்றதும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது. குரலிலும் எரிச்சல் மண்டியது.  

“என்னடி விளையாடுறியா... சென்னைல வீடு கிடைக்கிறது என்ன அவ்வளவு ஈஸியான விஷயம்னு நினைச்சியா... இந்த வீடு கிடைக்கவே நான் மூணு வாரம் தெரு தெருவா அலைஞ்சேன் தெரியுமா... ஈஸியா சொல்ற... வேற வீடு பார்த்து போலாம்னு” என்று அவன் சீற்றமாகச் சத்தமிட அவள் முகம் வாடியது. கண்களில் நீர் நிறைந்தது.

“நான் சொல்றத கேளு நிலா” என்றவன் அவள் கண்ணீரைப் பார்த்து கொஞ்சம் இறங்கிப் பேசவும், “ப்ளீஸ் தேவ் என்னைக் கொஞ்ச நேரம் தனியா விடு” என்றாள்.

“ஏய் நிலா” என்று பேச வந்தவனிடம், “நமக்குள் சண்டை வேண்டாம்னு நினைக்கிறேன்... ப்ளீஸ்ஸ்ஸ் தேவ்... என்னை தனியா விடு” என்று அழுத்திக் கூற அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக வீட்டிற்குள் சென்று விட்டான்.

மாலை நேர மஞ்சள் பூசிய வானத்தை வெறித்தவள் கண்களில் சரசரவென்று கண்ணீர் இறங்கியது. அவள் கனவு எல்லாம் அந்த கண்ணீரில் கரைந்து போவது போலிருந்தது. பிரியனின் நிலைமை அவளுக்குத் தெரிந்தது. ஆடம்பரமும் வசதியுமான வாழ்க்கைக்கு எல்லாம் அவள் ஆசைப்படவில்லை.

ஆனால் நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தாலும் இரண்டு படுக்கையறை கொண்ட பெரிய வீடு என்று ஓரளவு வசதியாக வாழ்ந்து விட்டு இப்போது இது போன்ற வீட்டில் வசிப்பதை யோசிக்கும் போது மனம் கலக்கமுற்றது.

இதற்கு முன்பு இது போன்ற இடத்தில் எல்லாம் அவள் ஒருநாள் கூட தங்கியது கிடையாது. வெகுநேரம் யோசித்தபடி நின்றவளுக்குக் கால்கள் வலியெடுத்தன.பிரியனும் வெளியே வருவது போல தெரியவில்லை. தயங்கித் தயங்கி அவளே உள்ளே நுழையப் பிரியன் வீட்டிற்காக வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தான்.

‘நான் அவ்வளவு தூரம் சொல்லியும் இந்த வீட்டுல திங்க்ஸ் எல்லாம் அடுக்கிட்டு இருக்கான்’ என்று அவளுக்கு உள்ளூற கடுப்பேற்றியது. அவனோ சாவகாசமாக அவளை நிமிர்ந்து பார்த்து,

“டிபன் வாங்கிட்டு வந்து வைச்சு இருக்கன்... சாப்பிடலாமா” என்று கேட்டான். இதுதான் எதார்த்தம் என்றான பின்பு வீம்பு பிடிப்பதில் எந்த பலனும் இல்லை என்று எண்ணியவள் மெல்லிய குரலில், “வெளியே போய் உட்காந்து சாப்பிடலாமா?” என்று கேட்டாள்.   

“வெளியே இருட்டிடுச்சுடி... வெளிச்சம் கூட இல்ல... இங்கேயே சாப்பிடலாம்” என்று பிரியன் கூற, அவள் யோசனையுடன் அந்தத் தரையைப் பார்த்து முகத்தைச் சுருக்கினாள்.  

“இப்ப எதுக்கு அப்படி பார்க்குற... இப்பதான் கிளீன் பண்ணேன்... உட்காரு சாப்பிடலாம்”  என அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. எனினும் மறுக்க முடியாமல், “சரி நான் டிரஸ் சாஞ் பண்ணிட்டு வரேன்” அங்கே ஓரமாகக் கிடந்த அவள் துணிப்பையிடம் சென்றாள். அதிலிருந்த துணிகளைத் துழாவி இரவு உடைகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனிக்க, “இங்கேயே டிரஸ் மாத்திக்கலாம்” என்று குரல் கொடுத்தான்.

“அப்படினா நீ கொஞ்சம் நேரம் வெளியே இரு”

“நான் ஏன் வெளியே இருக்கணும்”

“தேவ்” என்றவள் அவனை முறைப்புடன் பார்க்க அவள் அமைதியாக வெளியே சென்று விட்டான். உடைமாற்றி வந்தவள், “நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என்று விட்டு வெளியே சென்று குளியலறையின் ஸ்விட்சை போட உள்ளே பெரிதாக இரண்டு பல்லிகள் அங்கும் இங்கும் ஓடின. மேற்சுவர் வேறு மிகவும் குட்டையாக இருந்தது.

“தேவ்... தேவ்” என்றவள் கத்த, “என்னடி” என்று கேட்டபடி வந்து நின்றவன் அவள் காட்டிய திசையில் பார்த்து, “பல்லியா” என்று அலட்சியமாக பார்த்தான்.

“எனக்கு பல்லினால... ம்ம்ம் உவேக் அருவருப்பா இருக்கும்... அதை துரத்தி விடு” என்று முகத்தை சுழிக்க அவள் முகபாவத்தை பார்த்து சிரித்தவன், “சரி சரி இரு துரத்தி விடுறேன்” என்று விட்டு உள்ளே சென்று அதனை துரத்தவும்தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனாலும் அந்தக் கழிவறையைப் பயன்படுத்துவதற்கு அவளுக்குப் பயமாக இருந்தது. இன்னும் இப்படி என்னவெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கிறதோ என்ற யோசனையுடனே அவனுடன் உணவருந்தி முடிக்க, பிரியன் அவர்கள் படுத்துக் கொள்ளப் புதுப் பாயும் தலையணையையும் எடுத்து விரித்தான்.

 “எனக்கு பாய் தலகாணியும்?” என்று கேட்டாள்.

“ஒண்ணுதாண்டி வாங்குனேன்”

“என்னது... ஒண்ணுதான் வாங்குனியா”

“நம்ம இரண்டு பேருக்கு ஒண்ணு போதும்னு நினைச்சேன்... ஏன் போதாதா” என்று அவன் கேட்க, அவள் ஏற்கனவே இருந்த கடுப்பிற்குச் சீற்றத்துடன் அவனைக் கத்திவிட்டாள்.

“உன் கஞ்ச பிசானாரித்தனத்தை இதுல கூடவா கட்டுவ” என்றாள்.

“நான் என்னவோ காசு வைச்சுகிட்டே செலவு பண்ணாத மாதிரி பேசுற... இருந்தா வாங்கி இருக்க போறேன்” என்று அவன் கூற, “கடவுளே” என்று தலையிலடித்து கொண்டவள்,

“எனக்கு தலகாணி இல்லாம தூக்கமே வராது” என்றாள்.

“தலைகாணி எல்லாம் இருக்கு பேபி... கம்மான் நான் இடம் கொடுக்கிறேன்” என்றவன் கூற அப்போதும் அவனை முறைத்தபடியே நின்றாள்.

“இப்போ என்ன...  உனக்குனு தனியா பாய் தலகாணி வேணுமா... சரிம்மா படுத்துக்கோ” என்று விட்டு தரையில் சென்று தள்ளிப் படுத்துக் கொண்டான். அவன் செய்கையில் அவள் முகம் சுருண்டது.

“நான் ஒன்னும் உன்னை தரைல படுக்க சொல்லல”

“எனக்கு ஒண்ணும் கஷ்டமா இல்ல... இதெல்லாம் எனக்கு பழக்கம்தான்” என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கையை தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டான்.  தான் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசி விட்டோமோ என்று குற்றவுணர்வு அடைந்தவள்

“தேவ் எழுந்து வந்து பாயில படு... தேவ் வா... வா தேவ் இரண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்று அழைத்த போதும் அவன் அசையவில்லை. “தேவ்” என்று அவன் முகத்தைத் தொட்டுத் திருப்பும் போதுதான் அவன் கண்களின் வழியே கண்ணீர் சரிந்திருந்ததை பார்த்தாள்.

“தேவ்  அழுறியா... தேவ்... தேவ் இங்க பாரு... சாரி பா” என்று அவள் அவனைச் சமாதானம் செய்ய,

“எனக்கும் உன்னை வசதியா வைச்சு பார்த்துக்கனும்னு ஆசை  எல்லாம் நிறைய இருக்கு நிலா... ஆனா என்ன பண்றது... இப்போ என் நிலைமை இப்படி இருக்கு” என்று  அவன் வருத்தத்துடன் கூற,

“சாரி... நான்தான் புரிஞ்சிக்காம கொஞ்சம் கோபமா பேசிட்டேன்... தப்புதான்.. நீ வா... நீ வந்து பாயில படு” என்று சொல்லி அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டாள். அதன் பிறகு அவனைப் பேசி சமாதானம் செய்து பாயில் படுக்க வைத்தவள் அவன் அருகே தலையணையைப் பகிர்ந்து கொண்டு அவளும் படுத்தாள்.

நிலாவின் முகத்தைத் தன் புறம் திருப்பிய பிரியன், “இது நிரந்தம் இல்ல... நம்ம நல்ல நிலைமைக்கு வருவோம் நிலா... என்னை நம்பு” என்றபடி அவள் கன்னத்தை வருட, “உன்னை நம்பாமலா நான் உன் பின்னாடி வந்தேன் தேவ்... என்னவோ இந்த வீட்டை பார்த்ததும் கொஞ்சம் அப்ஸட் ஆகிட்டேன்... ஆனா இதனால எல்லாம் உன் மேல இருக்க லவ் எனக்கு எப்பவுமே மாறாது” என்றாள்.

 “நிஜமா?” என்று இருளில் மெதுவாக அவள் கன்னத்தை தன் கைகளால் மிதமாக வருடியபடியே கேட்டான். அவனுடைய வருடல் அவள் உணர்வுகளைத் தூண்டியது. அவள் முகத்தில் மோதிய அவனது மூச்சுக் காற்றில் வயிற்றுக்குள் ஜிவ்வென்று ஓர் உணர்வு இறங்கியது.

இருவரும் காதலித்த காலத்தில் கூட பெரிதாகத் தொட்டுப் பேசிக்  கொண்டது இல்லை. கைகள் கோர்த்து நடந்த போதிலும் காதலைத் தாண்டிய வேறெந்த உணர்வையும் அந்தப் பிடியில் அவள் உணர்ந்ததில்லை. ஏன் இத்தனை நாளில் கன்னங்களில் முத்தமிட்டது கூட இல்லையே.

திடீரென்று அவனது இந்த தீண்டல் புதுமாதிரியாக உணர வைக்க, “ம்ம்ம் நிஜ..மா” என்றாள் குரலில் மெல்லிய தடுமாற்றத்துடன். மறுகணமே அவள் கன்னத்திலிருந்து அவன் கரம் அவள் பின்னங்கழுத்தில் அழுந்தி அவளை முன்னே இழுத்தது. அவள் என்னவென்று உணர்வதற்குள் அவன் உதடுகள் அவள் உதட்டை தொட்டிருந்தன. இணக்கமாக உறவாடின. அமைதியாக அவன் முத்தத்தை வாங்கி கொண்டவள் அவன் மெல்ல விலகவும், “தேவ்வ்வ்வ்வ்” என்று இழுத்தாள்.

“புரியுது... இப்போ இதெல்லாம் வேண்டாம் அதானே” என்று கேட்கவும், “ம்ம்ம்” என்றதும் அவன், “சரி வேண்டாம்... நீ புரண்டு படுத்துக்கோ... நான் உன்னை அணைச்சிட்டு மட்டும் படுத்துக்கிறேன்” என, அவள் மெல்லத் திரும்பிப் படுக்க அவன் அவள் இடையை அணைத்தபடி கொண்டான். இருவரின் மனஸ்தாபமும் அந்த நொடியே காற்றோடு கரைந்து போனது.  

ஆரம்பத்தில் அந்த வீட்டில் இருக்க நிலாவிற்குப் பிடிக்கவில்லைதான். ஆனால் அவளது தயக்கமெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து போனது. அதற்கு காரணம் பிரியன்தான். சின்ன சின்னதாக அவனால் முடிந்த சில மாற்றங்களைச் செய்தான். சுவரில் வர்ணம் அடித்தான். கழிவறை கதவைச் சரி செய்தான்.

சம்பளம் வந்ததுமே அந்த மொட்டை மாடியை முழுவதுமாக ஒளியூட்டும் வகையில் அழகாக ஒரு மின்விளக்கைப் பொருத்தினான். பூச்செடிகள் சிலவற்றை வாங்கி வைத்தான். பணத்திற்காக இருவரும் சிரமப்பட்ட நிலையிலும் இது போன்ற சின்ன சின்ன செலவுகள் அவர்கள் உறவையும் வாழ்க்கையையும் அழகுபடுத்தின.

அதன் பின் மாடியிலேயே உணவு உண்ணுவது, உறங்குவது என்று அவ்விடத்திற்கு நிறைய ஆனந்தமான நினைவுகள் அவர்களுக்கு உண்டு.

அதுவும் அங்கே இருந்த வரை அவர்கள் படுத்துக் கொள்ள அந்த ஒற்றை பாயும் தலையணையும்தான். எவ்வளவு சண்டைகள் போட்டாலும் கோபங்கள் வந்தாலும் உறங்கும் போது இருவரும் இணக்கமாகிவிடுவார்கள். ஆதலால் இன்னொரு பாயும் தலையணையும் வாங்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படவே இல்லை .  

அந்த சாதாரண ஒற்றை அறை வீட்டில் வந்த உறக்கம் இன்று இத்தனை வசதிகளுக்கு இடையிலும் பிரியனுக்கு வரவில்லை. வாயிலில் புல்வெளியில் பீன் பேகை கொண்டு வந்து போட்டு அமர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்தான். தேய் பிறை.

பாதி நிலவு மட்டுமே இருந்தது. நிறையச் சூழ்நிலையில் அவளைப் பிரிந்து வந்திருந்தாலும் என்னவோ இங்கே அவளுடைய ஞாபகம் அதிகமாக வந்தது. அதனை எப்படி கடப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. மனம் தன்னவளை பார்க்க வேண்டும் பேச வேண்டுமென்று துடித்தது.

இறுதியாக அவளுடன் பேசிவிட்டு வந்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து அவன் மனதை வேதனைப்படுத்தியது.

“நீ இந்த ஷோல கலந்துக்கிட்டனா... அதோட நம்ம உறவும் முடிஞ்சு போயிடும் தேவ்... நீயே முடிவு பண்ணிக்கோ”

“அப்படிதான் நம்ம உறவு முடியனும்னா அதுக்கு யார் என்ன பண்ண முடியும் நிலா”

மனதிலிருந்து அந்த வார்த்தையை அவன் பேசவில்லை. கோபத்திலும் இயலாமையிலும் வெளியான வார்த்தைகள்தாம் அவை. ஆனால் இப்போது யோசித்து பார்த்தால் அப்படி பேசி இருக்க வேண்டாம் என்று தோன்றியது. குற்றவுணர்வாக இருந்தது.

“என்ன பிரியன்... நீங்க இன்னும் தூங்கலயா?” என்று உதய் கேட்டுக் கொண்டு வந்தான்.

“தூக்கம் வரல உதய் அதான்”

“ஆமா எனக்கு கூட... நாளைக்கு என்ன டாஸ்க் கொடுப்பாங்களோனு பக்கு பக்குனு இருக்கு... இன்னும் வர போற வீக்ல ஷோ ரொம்ப சீரியஸா போகுமாம்” என்றவன் கவலையுடன் பேச,

“நான் அதை பத்தி எல்லாம் யோசிக்கல உதய்” என, “அத பத்தி இல்லனா... வேற எதை பத்தி” என்று கேட்டு கொண்டே அருகே வந்து புல்தரையில் சாய்ந்து அமர்ந்தவன் மேலே பார்த்துவிட்டு,

“ஓ நிலாவை பத்தியா” என்று கேட்டான். பிரியன் அர்த்தப் புன்னகையுடன் அவனைப் பார்க்க,

“சரி உங்களுக்காக... அடியேன் ஒரு நிலா பாட்டு பாடட்டுமா?” என, பிரியன் முகம் மலர்ந்தது.  

“மௌன ராகம் படத்துல வருமே... நிலாவே வா... அந்த பாட்டு பாடு உதய்” என்று ஆர்வமாகக் கேட்டு அவன் முகம் பார்த்தான்.

“எஸ் பி பி பாட்டு... செமையா இருக்குமே” என்று விட்டு அவன் அந்தப் பாடல் வரிகளை அதன் உணர்வுகள் தளும்பப் பாடினான்.

‘நிலாவே வா...

செல்லாதே வா...

என்னாளும் உன்...

பொன்வானம் நா..ன்

எனை நீதா..ன் பிரிந்தாலும்..

நினைவாலே.. அணைப்பே..னே

நிலாவே வா...

செல்லாதே வா...’

 பிரியனுக்கு அவ்வரிகளை அவன் குரலில் கேட்கும் போதே கண்களில் நீர் நிறைந்துவிட்டது. மனைவியைப் பார்க்க வேண்டுமென்று எண்ணம் இன்னும் அதிகரித்தது. அவளுடைய வாழ்ந்த நினைவுகள் கண்முன்பு காட்சிகளாக அலைமோதின.

அந்த காணொலியை உள்ளே இருந்த பார்த்த பெரொஸிற்கு நிலாவை எண்ணி வருத்தமாக இருந்தது. அவளுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. கிருஷ்ணா நிச்சயம் இந்தக் காட்சியை மொத்தமாக கத்தரித்துவிடச் சொல்வான்.

 கதைகளில் காட்டப்படுவது என்னவோ சில பக்கங்கள்தான். ஆனால் அதில் காட்டப்படாத நிறையப் பக்கங்கள் உண்டு.  

அங்கே பிரியன் அவளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த அதே நொடிகளில் நிலா அவனை அதிதீவிரமாக வெறுத்து கொண்டிருந்தாள். இனி அவன் முகத்தில் விழிக்கவே கூடாது என்று மனதிற்குள் சங்கல்பம் எடுத்தாள்.

********

இப்படிக்கு இலக்கியநாசினி - அத்தியாயம் 6 

shanbagavalli and chitti.jayaraman have reacted to this post.
shanbagavallichitti.jayaraman
Quote

Aramba kaalathula kashta pattalum nimmadi konjam irunthadu thookkam um nalla vandathu aduve vasathi vanda piragu ellam irunthum sandai adigam ah varum thukkam varathu nimmadi irukathu enda onda life nu thonum anda, priyan ini avathu nila ah purimjika try panna nallathu 

Quote

Super ma 

You cannot copy content