You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilaavin Priyan - Episode 14

Quote

14

‘வெளிப்படையா சொல்லணும்... அவ்வளவுதானே? ஐ லவ் யூ... சொல்லிட்டேன் போதுமா?’

சிவாவிடமிருந்து அப்படியொரு பதிலை நிலா சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. கண்களிலிருந்து கொஞ்ச நஞ்ச உறக்கம் கூட காணாமல் போய்விட்டது. அதற்கு மேல் அந்த உரையாடலை தொடரவும் அவள் விரும்பவில்லை. செல்பேசியை ஓரமாக வைத்துவிட்டு அப்படியே படுக்கையில் விழுந்துவிட்டாள்.  

சிவாவிற்கும் அவளுக்கும் இடையிலான உறவு இப்படியொரு திசையில் நகர்வதற்கான எந்த சாத்திய கூறுகளும் இதுவரையில் இருந்த மாதிரியாகவே அவள் உணரவில்லை. தன் வாழ்க்கையில் ஒரு நல்ல நண்பனாக, வேலையில் ஒரு நல்ல குருவாக என்று சிவாவை மதிப்புக்குரிய மனிதர் என்ற வகையில் முதலிடத்தில் வைத்திருக்கிறாள். அந்த மதிப்பு குறையும் வகையில் சிவாவும் எப்போதும் நடந்து கொண்டதே இல்லை.

இரவு நடுநிசிகள் வரை ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். தன்னந்தனியாகப் பயணித்திருக்கிறோம். ஆனால் எங்கேயும் சிவாவிடமிருந்து ஒரு தவறான பார்வை தீண்டலைக் கூட அவள் எதிர்கொண்டதில்லை. குறைந்தபட்சம் ஓர் ஆணுடன் தனியாகப் பயணம் செய்கிறோம் என்ற பதற்றமோ அல்லது மனச்சங்கடங்களைக் கூட அவளுக்கு ஏற்பட்டதில்லை.

அப்படிப்பட்ட மனிதரிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்பது அவளுக்கு அதிக அதிர்ச்சியைக் கொடுத்தது. புத்திசாலி, திறமைசாலி, அடுத்தவர் உணர்வுகளை மதிக்கக் கூடிய நல்ல மனிதர் இப்படியாக அவளிடம் என்ன கேள்வி கேட்டாலும் ஒரு நொடி கூட யோசிக்காமல் அவள் உச்சரிக்கும் பெயர் சிவாதான்.

அவள் கொண்டிருந்த நம்பிக்கையை, மரியாதையை எல்லாம் அவரின் வார்த்தைகள் கேள்விக்குறியாக்கிவிட்டதோ?

உறக்கமின்றி விட்டத்தைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு விடியலின் நெருக்கத்தில்தான் உறக்கமே வந்தது. அதற்குள் அலாரம் அடித்து அவளுடைய அந்த தூக்கத்தையும் கச்சிதமாகத் துரத்தி அடித்துவிட, எரிச்சல் மிகுதியுடன் கூவிக் கொண்டிருந்த அந்தச் செல்பேசியைத் திரும்பி முறைத்தாள்.

‘எல்லாம் இதாலதான்’ அப்படியே தூக்கிப் போட்டு உடைத்து விடுமளவுக்கு அந்த உயிரற்ற பொருள் மீது ஆத்திரமாக வந்தது.

ஆனால் அதனை மட்டும் குற்றஞ்சொல்லி என்ன செய்ய? சீக்கிரம் எழ வேண்டுமென்று அவள்தானே அந்த அலாரத்தை வைத்தாள். அது மட்டுமா? இரவு சும்மா இல்லாமல் செல்பேசியை எடுத்துப் பார்த்து தூக்கத்தில் கல்லைப் போட்டுக் கொண்ட அறிவாளியும் அவள்தானே.

பிறகு அந்தப் பொருளின் மீது கோபத்தைக் காட்டுவதில் என்ன லாபம். இன்னும் கேட்டால் நஷ்டம்தான். தேவை இல்லாததை எல்லாம் பார்த்து நம் மனதை நாமே குழப்பிக் கொண்டு செல்பேசியின் மீது மட்டும் குறை சொல்வானேன்.

இந்த ஞானோதயம் பிறந்ததில் மெதுவாக எழுந்து செல்பேசியின் அலாரத்தை அணைத்தவளுக்கு மீண்டும் சிவாவின் நினைவு வந்தது. சோம்பலுடன் படுக்கையில் விழுந்தபடியே அடுத்து ஏதாவது குறுந்தகவல் வந்திருக்குமோ என்ற செல்பேசியைத் திறந்தாள். அந்தப் பதிலுக்குப் பிறகு எதுவும் வந்திருக்கவில்லை.

அவள் மனம் யோசனையில் ஆழ்ந்தது.

சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் காதல் குறித்த உரையாடலின் படப்பிடிப்பு நடந்தது. மிக சுவாரசியமான அந்த உரையாடலில் சினிமா ஒரு சிறிய வரையறைக்குள் காதலை அடைப்பதைக் குறித்து மிக முக்கியமாகப் பேசப்பட்டது.  

வெறும் பல்ப் எறிவதும் பட்டாம்பூச்சிகள் பறப்பதும் மட்டும் காதல் இல்லை. காதலின் வரையறைகளும் விருப்பங்களும் மனிதருக்கு மனிதர் மாறுபடுவதாகவும் ஒவ்வொருவருக்கும் அந்தத் தேடல் வெவ்வேறு விதமானதாக இருப்பதாகவும் நிகழ்ச்சியின் இறுதி உரையைக் கூறி தொகுப்பாளர் முடித்தார்.

பெரும்பாலான நிகழ்ச்சிக்கான கருத்துக்கள் யோசனைகள் எல்லாம் சிவாதான். உதவி இயக்குனர்கள் எல்லோரிடமும் கலந்துரையாடினாலும் சிவா இறுதியாகக் கொண்டு வரும் முடிவுரை என்பது மிகச் சிறப்பாகவும் சரியாகவும் இருக்கும்.

எல்லோரும் அன்றைய படப்பிடிப்பைக் குறித்துப் புகழ்ந்து தள்ளினார்கள். அப்போது குழுவிலிருந்து ராஜேஷ், “ஏன் தலை... உங்க லவ் எக்ஸ்பீரியன்ஸ்  பத்தி எங்களுக்கு சொல்லுங்களேன்” என்று கேட்டு வைக்க,

“அப்படி ஒன்னு இருந்தாதானே சொல்றதுக்கு” என்றார்.

“இல்லவே இல்லயா” என்றவன் வியப்புடன் கேட்க, “இல்லவே இல்ல” என்றார் அவரும்.

“இது சும்மா பொய்” என்று அவர்கள் குழுவிலிருந்து மற்றொருவன் சொல்ல,

“நான் ஏன் டா பொய் சொல்ல போறேன்... அப்படி ஒரு அனுபவமே எனக்கு இல்ல” என்றவர் கூற, “ஏன் அப்படி?” என்று நிலா முன்னே வந்து அவரிடம் கேட்டாள். அவள் வேலைக்கு சேர்ந்திருந்த புதிது அது.  

“ஏன் அப்படினா... என்ன சொல்றது நிலா... நான் அவ்வளவு சீக்கிரம் யாரை பார்த்தும் இம்பிரஸ் ஆக மாட்டேன்... அதேபோல யாரையும் சார்ந்திருக்கிறதும் நமக்கு செட்டாகாத விஷயம்” என்றவர் கூற அவள் அதே வியப்புடன்,

“இவ்வளவு வருஷத்துல உங்களை யாருமேவா இம்பிரஸ் பண்ணலயா?” என்றவள் இழுத்து கேட்கவும் ராஜேஷ் இடையில் வந்து, “ஏன் தலை... இதுக்கு அப்புறமாச்சும் அந்த மாதிரி ஏதாவது நடக்க வாய்ப்பு இருக்கிறதா?” என்று கிண்டலாக கேட்டான்.

 “தெரியலயே ராஜி... இருக்க... லாம்” என்று அவர் அலட்சியமாக தோளை குலுக்கி சொல்லிவிட்டு அகன்றார்.

அன்றைய அந்த நாளின் சிந்தனையிலிருந்து வெளியே வந்தவள், ‘அப்படினா நான்தான் அவரை இம்பிரஸ் பண்ண முதல் பொண்ணா... அப்படி நம்மகிட்ட அவர இம்பிரஸ் ஆகுறளவுக்கு... என்ன இருக்கு?’ என்று ஆச்சரியமும் குழப்பமும் மேலிட யோசித்துக் கொண்டவள் அருகே படுத்திருந்த மகளின் பக்கத்தில் தலையணையை அணைத்து வைத்து மெதுவாக எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்.

காலை கடனெல்லாம் முடித்து தேநீர் பருக சமையலறைக்கு வர, அங்கே சந்தியாவும் ஜானகியும் நெருங்கி நின்று எதையோ மும்முரமாகப் பார்த்து தங்களுக்குள்  முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘என்னடா அதிசயம்... மாமியாரும் மருமகளும் ஒத்துமையா எதையோ பார்த்துட்டு இருக்காங்க’ என்று எண்ணியபடியே நிலாவும் அப்படி என்ன அவர்கள் பார்க்கிறார்கள் என்று பின்னே சென்று எட்டிப் பார்த்தாள்.

ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சியை குறித்து யாரோ ஒரு யூ ட்யூபர் தீவிரமாக விமர்சித்துக் கொண்டிருந்தான். நேற்று நடந்த சம்பவங்களை எல்லாம் விவரமாக விளக்கியதோடு நிறுத்தாமல், “பிரியனை பார்த்தா அப்படியே கெட்ட கெட்ட வார்த்தைல திட்டனும்னு தோணுது” என்று அவன் பிரியனைத் தாறுமாறாகத் திட்டத் துவங்கிவிட, நிலாவிற்குக் கடுப்பாகிவிட்டது.

“ம்ம்ம்ம்ம்ம்மா” என்றவள் பின்னோடு நின்று கத்தி விடவும் ஜானகி பதறி திரும்ப, சந்தியாவும் அதே பதற்றத்துடன் அவள் புறம் பார்த்தாள்.

“காலங்கத்தால... என்னம்மா இது வேல” என்று முறைத்தவள் மேலும் , “தினைக்கும் நைட்டுதான் அந்த உறுப்புடாத ஷோவை பார்த்து தொலைக்குறீங்களே... அப்புறம் எதுக்கு இதெல்லாம் வேற பார்க்குறீங்க” என்றவள் கோபமாக பொரிந்தாள்.

“இல்ல நிலா” என்று அவர் ஏதோ காரணம் சொல்ல வர நிலா அவரை பேசவே விடவில்லை.

“என்ன இல்ல... நொள்ள... எவனோ வேலைவெட்டி இல்லாதவன் ரிவியூங்குற பேர்ல உளறிட்டு கிடக்கான்... அதை இரண்டு பேரும் ஜோடி போட்டு பார்த்துட்டு இருக்கீங்க” என்று ஏற்கனவே இருந்த கடுப்பை எல்லாம் அவர் மீது கொட்டி விட்டவள், “ஏன் அண்ணி... அம்மாதான் இப்படி இருக்காங்கனா நீங்களுமா?” என்று கூடவே சந்தியாவிடமும் வாங்கினாள்..

“இல்ல நிலா... அவன் உன் வீட்டுக்காரரைப் பத்தி ரொம்ப மோசமா பேசுறான்” என்றவள் பம்ம,

“ஆமா பேசறான்... அதை நம்ம கேட்டு என்னவாக போகுது... தேவை இல்லாத டென்ஷன்ந்தானே” என்று காரமாகக் கூறியவள் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வெளியே வந்து உணவு மேஜையின் இணை இருக்கையில் அமர்ந்து கொள்ளவும் அங்கே வந்து வினய்,

“அதானே... உன் புருஷன் என்ன செஞ்சாலும் உனக்கு எந்த கவலையும் இல்ல... ஊர் பூரா எங்க பேரும் சேர்த்துதான் நாறுது... கண்டவன் எல்லாம் ஃபோன் பண்ணி இந்த ஷோல உன் புருஷன் பன்றதை பத்தி என்கிட்ட பேசிட்டு இருக்கான்... மானம் போகுது... சை” என்று தங்கையிடம் எகிற ஆரம்பித்தான்.

“ஏங்க காலங்கத்தாலயேவா... சும்மா இருங்க” என்று சந்தியா கணவனை அமைதியாக இருக்கச் சொன்னாள்.

“விடுங்க அண்ணி... உங்க புருஷன் பேசட்டும்... என்னவெல்லாம் பேசணும்னு தோணுதோ... பேசட்டும்” என்று விட்டு நிதானமாக எழுந்து, “பேசு வினய்... பேசு” என்று தமையனைப் பார்த்துக் கூற

“நிலா வேண்டாம்... பிரச்சனையை வளர்க்காத... அமைதியா இரு” என்று ஜானகி மகளை அடக்கினார்.

“நானா ம்ம்மா வளர்குறேன்... நானா வளர்க்குறேன்.... அவன்தான்மா... கூட பொறந்த தங்கச்சினு கூட பார்க்காம தேவ் மேல இருக்க கோபத்தை எல்லாம் என் மேல காட்டிட்டு இருக்கான்” என்றதும் வினய் அவளை சீற்றமாக நோக்கி,

“அவன் செய்ற எல்லாத்தையும் நீதானே சப்போர்ட் பண்ணிட்டு இருக்க... கூட பொறந்த தங்கிச்சினு இப்ப சொல்றியே... அந்த கூட பொறந்த பாசம் எல்லாம் என்னை அவன் அடிக்கும் போதும் அவமானப்படுத்தும் போதும் எங்க போச்சு” என்று கேட்டான்.

“நான் அது பத்தி எல்லாம் அவனை கேட்கவே இல்லன்னு உனக்கு தெரியுமா? நான் உனக்காக எவ்வளவு சண்டை போட்டு இருக்கன்னு உனக்கு தெரியுமா” என்று அவள் கோபமாக பதில் கூற,

“ஆமாமா சண்டை போட்டு கிழிச்ச... நீ எப்பவும் உன் புருஷனுக்குதான்டி சப்போட் பண்ணுவ” என்று எரிந்து விழுந்தான்.

“அவன் இனிமே எனக்கு புருஷன் இல்ல” என்று அப்போதைய நிலாவின் பதிலடி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவள் தொடர்ந்து அதே கடுப்புடன், “எனக்கும் தேவுக்கும் இடைல இனிமே எதுவும் இல்ல... நான் தேவ்வை டிவோர்ஸ் பண்ண போறேன்... போதுமா... உனக்கு சந்தோஷமா” என்று முடிக்கும் போது அவள் குரல் கம்மியது. தொண்டையை அடைத்தது.

வினய் இதை எதிர்பார்க்கவில்லை. அவன் அதிர்வுடன் தங்கையைப் பார்த்தான்.

“நிலா என்ன பேசுற நீ” என்று ஜானகி பதறினார். சந்தியாவோ என்ன பேசுகிறாள் என்பது போலக் குழம்பி நிற்க வினய் ஏதோ பேச எத்தனித்தான்.

நிலா அவனை நிறுத்தி, “இது என் வாழ்க்கை... என் முடிவு... இதுல கருத்து சொல்ல யாருக்கும் உரிமை இல்ல” என்று விறுவிறுவென்று நடந்து வெளியே வந்து படிக்கட்டின் ஓரமாக சென்று அமர்ந்து கொண்டாள்.

ஏதோ கோபத்திலோ உணர்ச்சிவசப்பட்டோ இப்படியொரு வார்த்தையை விட்டு விட்டதாக அவள் நினைக்கவில்லை. இனியும் இந்த உறவில் மூச்சு முட்டி கொண்டு இருக்க அவளால் முடியுமென்று தோன்றவில்லை.

அப்போது மாடியில் நடைப்பயிற்சி செய்து முடித்து கீழே இறங்கி வந்த அவள் தந்தை மகள் அமர்ந்திருப்பதை பார்த்து, “என்னாச்சு... ஏன் இங்க உட்கார்ந்திருக்க?” என்று வினவ அவள் தன் கண்ணீரை மறைத்து கொண்டு, “சும்மாதான்ப்பா” என்றாள்.

உள்ளே சென்றதும் அவள் பேசிய விஷயம் எல்லாம் அறிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க போகிறார் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, “ம்மா... ம்ம்மா உனக்கு ஃபோன்” என்று கவி அடித்து பிடித்து ஓடி ந்தாள். அவள் ஓடி வந்த  வேகத்தில் தாத்தாவின் மீது இடித்து கொள்ள அவள் கையிலிருந்த நிலாவின் கைப்பேசி தவறி விழுந்தது.

“அய்யோ தாத்தா... அம்மா ஃபோன்” என்றவள் அதனை குனிந்து எடுப்பதற்கு முன்பாக கேசவன் எடுத்து கொண்டார்.

 அதில் ‘தலை’ என்ற வார்த்தையுடன் சிவாவின் படமும் ஒளிர அதனை அவர் குழப்பத்துடன் பார்த்தார்.

“அன்னிக்கு எங்கள கார்ல கொண்டு வந்து விட்டாரே... அந்த அங்கிள்தான் ஃபோன் பண்றாரு” என்று  கவி சொல்ல, “சரி நான் ஃபோனை அம்மாகிட்ட கொடுக்கிறேன் நீ போ” என்று விட்டு திரும்ப, நிலா மகளின் குரலும் செல்பேசியில் அலறலையும் கேட்டு பின்னே வந்து நின்றாள்.

அதற்குள் அவள் செல்பேசி அடித்து ஓய்ந்திருந்தது. கேசவன் தன் கையிலிருந்த செல்பேசியை மகளிடம் கொடுத்துவிட்டு, “ஆமா யார் அந்த தலை” என்று அவளை அளவெடுப்பது போல பார்த்தார்,

அந்த திடீர் கேள்வியிலும் தீவிர பார்வையிலும் கொஞ்சம் தடுமாறியவள் பின், “அவர்தான் பா நான் முன்னாடி வேலை பார்த்த டாக் ஷோவோட டைரக்டர்” என்றாள்.

“அந்த ஆளு எதுக்கு உனக்கு ஃபோன் பண்றான்... அன்னைக்கு ரோட்ல வேற நின்னு உன்கிட்ட அவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தான்”

“பா அவர்கிட்ட நான் ரொம்ப வருஷமா வேலை பார்க்குறேன்... எனக்கு அவர் நல்ல பிரண்டும் கூட” என்றவள் சொல்ல, “என்னவோ சொல்ற... ஆனா எனக்கு என்னவோ அந்த ஆளை பார்த்தா சரியா படல” என்றவர் அடுத்து அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கூட கேட்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

அப்பாவின் பேச்சில் எரிச்சலானவள் அதேநேரம் சிவாவை மீண்டும் அழைத்து பேச தயங்கினாள். ஆனால் அவளுக்கும் அந்த நொடி சிவாவிடம் பேச வேண்டுமென்று இருந்தது.

‘ஃபோன்ல வேண்டாம்... நேர்ல போய் பேசுவோம்’ என்று எண்ணிய கணமே குளித்து முடித்து நேராக கிளம்பி சிவா வீட்டு வாசலில் சென்று நிற்க, அவளை பார்த்து அவர் திகைத்து நின்றார்.

நேற்றைய உரையாடலுக்கு பின் அவள் தன்னை பார்க்க கூட வரமாட்டாள் என்றுதான் நினைத்தார். ஆனால் திடுதிப்பென்று அவள் தன் முன்பு வந்து நின்றதில் அவளை உள்ளே கூட அழைக்காமல் அப்படியே அதிர்ச்ச்யில் நின்றுவிட்டார்.

“உள்ளே கூப்பிட மாட்டீங்களா தலை?” என்றதும்தான், “வா... வா நிலா” என்று தடுமாற்றத்துடன் அழைத்து வழியை விட்டு நிற்க அவள் நேராக சென்று சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

எப்போதும் என்ன வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்று இருக்கும் சிவாவிற்கு அவளுடைய தற்போதைய வருகை உண்மையில் பதட்டத்தை உணடுப்பண்ணியது. ஏதோ பெரிய தப்பை செய்துவிட்டது போன்ற உணர்வில் தவிக்க செய்தது.

அவளாக எதுவும் கேட்பதற்கு முன்னதாக, “நிலா ஐம் சாரி” என்று அவர் முந்தி கொள்ள, 

“எதுக்கு?” என்று கேட்டாள்.

“இல்ல நான் நேத்து கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டு... உனக்கு வேற ஃபோன் பண்ணு... தேவை இல்லாமல் ஏதேதோ பேசி... ஐம் சாரி” என்றவர் தயங்கி தயங்கி கூற,

“எல்லா ஆம்பளைங்களுக்கும் குடிக்கிறது... தப்பு செய்றதுக்கான எக்ஸ்யூஸ் இல்ல?” என்றவள் கேட்டதில் அவர் முகம் சுருண்டுவிட்டது.

“எப்பவுமே இப்படி எல்லாம் நடந்தது இல்ல... நேத்துதான்” என்றவர் பேச ஆரம்பிக்கும் போதே, “என்ன ஸ்பேஷல் நேத்து... நிறைய உண்மை பேசிட்டீங்க?” என்றவள் நக்கலுடன் கேட்கவும் சிவா அதிர்ந்து நிற்க அவள் தொடர்ந்து பேசனாள்.

“இன்னும் ஏதாவது உண்மை இருக்கா சொல்றதுக்கு”

 “நான் எப்பவுமே உன்கிட்ட பொய்யான முகத்தை எல்லாம் காட்டணுது இல்ல நிலா”

“இல்லையா... அப்போ நேத்து காட்டனது என்ன முகம்... அன்னைக்கு வீட்டுல ட்ராப் பண்ணும் போது காட்டுனீங்களே... அது என்ன முகம்?” அவளுடைய அடுத்தடுத்த கேள்விகள் சிவாவை கோபப்படுத்தியது.

“இப்போ எதுக்கு  உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போற... நான் என்ன என் லவ்வை ஏத்துக்க சொல்லி உன்கிட்ட கேட்டனா? நேத்து குடிபோதைல கொஞ்சம் உளறிட்டேன்... நீ உண்மையை சொல்லுனு கேட்டதும் பட்டுனு மனசுல பட்டதை சொல்லி தொலைச்சிட்டேன்... அதுக்கு நான் சாரியும் கேட்டுட்டேன்” என்று அவர் குரல் சீற்றமாக வெளிவர, அவள் பதில் பேச எத்தனிக்கும் போது கை நீட்டி தடுத்து,

“என் நம்பரையும் என்னையும் ப்ளாக் பண்ணிட்டு போயிடு... எந்த வகைலயும் நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்று முடித்தார். அவரை வேதனையுடன் ஏறிட்டவள்,

 “எவ்வளவு ஈஸியா சொல்லிட்டீங்க... பிளாக் பண்ணிட்டு போயிடுனு... இத்தனை வருஷம் நம்மோட உறவுக்கு நீங்க கொடுக்குற மதிப்பு இவ்வளவுதான் இல்ல

அதானே... உங்களுக்கு யாரை பத்தியும் எதை பத்தியும் கவலை இல்ல... யாரோட பீலிங்க்ஸ் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல... எல்லா உறவும் உங்களுக்கு ஒரே மாதிரிதான்... தனியாவே இருந்த பழகிட்டதால உங்களுக்கு எந்த உறவும் பெருசு இல்ல... தேவையும் இல்ல” என்று அவள் சரமாரியாக வெடிக்க,

“நிலா போதும் நீ அளவுக்கு மீறி பேசுற” என்று சிவாவும் பதிலுக்கு சீறினார்.

“ஆமா அப்படிதான் பேசுவேன்... நீங்க செஞ்ச காரியம் அந்த மாதிரி” என்றவள் நேரடியாக குற்றம்சாட்ட, “லவ் பன்றனு சொன்னது அவ்வளவு பெரிய குத்தமா?” என்றவர் கேட்டதில் அவள் முகம் வேதனையை பிரதிபலித்தது.

“உங்களுக்கு என் பெயின் புரியாது... என் வாழ்க்கைல இந்த நிமிஷம் எனக்குன்னு இருக்க ஒரே சப்போர்ட்டு நீங்க மட்டும்தான்... தெரியுமா? அம்மா அப்பா அண்ணன் யாருமே எனக்காக இல்ல... நான் சொல்றதை புரிஞ்சிக்கவும் தயாரா இல்ல

 யார்கிட்டயாவது மனசை விட்டு பேச முடியும்... என் மனவேதனை எல்லாம் கொட்டி அழ முடியும்னா அது உங்ககிட்ட மட்டும்தான்... ஆனா இப்போ... இந்த நிமிஷம் அதுக்கெல்லாம் வழி இல்லாம பண்ணிட்டீங்க... ப்ரபோஸ் பண்றன்னு மொத்தமா நமக்குள்ள இருக்க நல்ல பிரண்ட்ஷிப்பை ஸ்பாயில் பண்ணிட்டீங்க” என்று தன் உள்ளத்தவிப்பை எல்லாம் கொட்டியவள் முகத்தை இரு கைகளால் மூடி வெதும்ப ஆரம்பித்துவிட, சிவா சங்கடத்துடன் நின்றார். இப்படி ஒரு கோணத்தில் அவர் யோசிக்கவில்லை.

நேற்று அவள் கேட்டதுமே மனதிலிருந்ததைச் சொல்லிவிடச் சொல்லி ஏதோ ஒரு உணர்வு  உந்தி தள்ளியதில் சொல்லியும் விட்டார். ஆனால் அந்த வார்த்தை நிலாவை இந்தளவு பாதிக்கும் என்று தெரிந்திருந்தால் சொல்லி இருக்க மாட்டார்.

அவளை இப்போது எப்படிச் சமாதானம் செய்வது என்று புரியாமல் சிவா தவித்து போய் நிற்க, சட்டென்று நிமிர்ந்தவள் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு வாயிற்புறம் நோக்கி வேகமாக நடக்கத் துவங்கினாள்.

 “நிலா ப்ளீஸ்... நீ இப்படி மனசு கஷ்டத்தோடு போகாத... என்னால தாங்க முடியல” என்றவர் அவசரமாக அவள் முன்னே வந்து வழிமறித்து நிற்க,

“நீங்கதானே ப்ளாக் பண்ணிட்டு போன்னு சொன்னீங்க” என்றவள் பதிலுக்கு கேட்க, “நீ நினைக்கிற அர்த்தத்துல அப்படி சொல்லல நிலா... இதுக்கு அப்புறம் என்னை பார்க்குறதும் பேசுறதும் உனக்கு தேவை இல்லாத சங்கடத்தை ஏற்படுத்தும்னுதான் நான் அப்படி சொன்னேன்” என்று தான் சொன்னதற்கு நிதானமாக விளக்கம் கொடுத்தார்.

 “சமாளிக்காதீங்க... உங்களுக்கு என் நட்பு தேவை இல்லன்னுதான் அப்படி சொன்னீங்க” என்றவள் அப்போது அதே கோபத்துடன் பேச,  

“என் வாழ்க்கை பூராவும் நீ வேணும்னு நினைக்குற நான் ஏன்... நிலா உன்னையும் உன் நட்பையும் வேண்டாம்னு நினைக்க போறேன்?” என்ற அவரது கேள்வி அவளை சங்கடப்படுத்தியது. சிவா மீண்டும் அவசரத்தில் வார்த்தையை விட்டுவிட்டதில்,  

“ஐம் சாரி... திரும்பவும் உன்னை ஹார்ட் பண்ணனும்னு நான் அப்படி சொல்லல” என்றவர் மன்னிப்பை அமைதியாக எதிர்கொண்டவள் நிதானமாக ஏறிட்டு,

“நான் சரியான குழப்பவாதி... எந்த முடிவையும் நான் சரியா எடுத்ததும் இல்ல... என் வாழ்க்கையோட முக்கியமான முடிவையே நான் சொதப்பித்தான் இருக்கேன்... ஏன் இப்போ கூட என் பிர்ச்சனையை தனிச்சு சமாளிக்க முடியாம உங்ககிட்ட வந்து நிற்குறேன்... என்னை மாதரியா ஒருத்திய பார்த்து இம்பிரஸ் ஆக என்ன இருக்கு... எனக்கு புரியல” என்று கேட்டாள்.  

 “உன்னை நீயே குறைச்சு பேசுக்குறத நிறுத்து முதல” என்று கண்டனமாக உரைத்த சிவா, “எவ்வளவோ பிரச்சனைகளை நீ திறமையா ஹாண்டில் பண்ணி நான் பார்த்து இருக்கேன்... நீ இதுநாள்வரையிலும் யாருக்காகவும் உன் இலட்சியத்தை விட்டு கொடுத்தது இல்ல... தொடர்ந்து ஓடணும்கிற உன் தைரியம் சாதாரணமான விஷயம் இல்ல நிலா...

உன் வாழ்க்கையோட முடிவுகளை நீ சரியா எடுத்தியா தப்பா எடுத்தியாங்கிற இரண்டாவது விஷயம்... ஆனா உன் வாழ்க்கையோட முடிவை நீ தனிச்சு எடுக்குற... அந்த முடிவினால வர்ற எல்லா பாதிப்புகளையும் நீ தனியா நின்னு ஃபேஸ் பண்ற

உன்கிட்ட இருந்து உன்னோட வாய்ப்பை ஒருத்தர் தட்டி பறிச்ச பிறகும் நீ சோர்ந்து போகாம போராடுற... எல்லாத்துக்கும் மேல உன் சுயமரியாதையை நீ யாருக்காகவும் விட்டு கொடுத்தது இல்ல...

இதை விடவும் வேற என்ன க்வாலிட்டி வேணும்... இம்பிரஸ் ஆக” என்றவர் அவளைப் பற்றிப் பேசிய ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொரு வார்த்தையும் அவளையே அவளுக்கு காட்டியது. ஆமாம் தான் அப்படித்தான் என்று மனதில் எட்டி பார்த்த கர்வத்தை உள்ளே தள்ளிக் கொண்டவள்,

“அதெல்லாம் சரிதான்னா கூட... நான் உங்களை” என்றவள் பேச ஆரம்பித்துப் பின் நினைத்த வார்த்தையை முடிக்க முடியாமல் தயங்கிய போது, “நீ என்னை லவ் பண்ண மாட்டான்னு எனக்கு நல்லா தெரியும் நிலா” என்றார்.  

அவள் வலியுடன், “தெரிஞ்சும்... ஏன்.. தலை.?” என்று கேட்க,

“ஏன் எதுக்குனு எல்லாத்துக்கும் காரண காரியம் எல்லாம் சொல்ல முடியாத நிலா... எந்த மொமன்ட்ல நான் உன்கிட்ட இம்பிரஸ் ஆனான்னு எனக்கு சத்தியமா தெரியல... ஆனா என்னோட இந்த விருப்பத்துக்கு எந்த அர்த்தமும் இல்ல... எதிர்காலமும் இல்லன்னு எனக்கு தெரியாம இல்ல” என்றவர் கூற,

“நீங்க சுலபமா பேசுறீங்க... ஆனா எனக்குதான் ரொம்ப கில்டியா இருக்கு” என்றாள்.

“நீ கில்டியாக வேண்டிய அவசியமே இல்ல.... நேத்து நான் கொஞ்சம் குடிபோதைல இருந்தேன்... அதான் யோசிக்காம ஃபோன் பண்ணி உன்கிட்ட ஏதேதோ உளறிட்டேன்”

“இவ்வளவு சாதரணமா நீங்க இதை சொன்னாலும்... உங்களுக்கு இது பெயின்தானே”

“எதிர்பார்ப்புகள் இருந்தாதான் ஏமாற்றம் வலி எல்லாம்... உன் மேல எனக்கு உண்டான காதலுக்கு அப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்ல ஏமாற்றமும் இல்ல” என்றவர் சொன்னது இன்னும் அவர் மீதான மதிப்பை அவளுக்கு கூட்டியது.

சிவா மேலும், “ஒரு நல்ல ஃப்ரண்டா என்னை எப்ப வேணா நீ பார்க்க வரலாம் நிலா... உன் மனசுல இருக்கிறதை எல்லாம் பேசலாம்... பகிர்ந்துக்கலாம்... நான் உன் மேல வைச்சு இருக்க காதல் நம்ம நட்பை எந்த விதத்திலும் பாதிக்காதுனு என்னால உறுதியா சொல்ல முடியும்” என, அதற்கு மேல் எதுவும் பேச அவளுக்குத் தோன்றவில்லை. மனம் கனத்து போனது. அமைதியாகத் தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தவள் மனதில் அவருடைய காதல் சிறியளவிலான பாதிப்பைக் கூட ஏற்படுத்தவில்லை என்றால் அது நிச்சயம் பொய்தான்.

இந்த சிந்தனையுடன் நடந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். வீட்டிலிருந்த யார் முகமும் சரியில்லை. தான் காலையில் பேசியதன் விளைவு என்று அலட்சியமாக நினைத்து கொண்டு அவள் அறைக்குள் வந்த போது கவி பின்னோடு வந்து நின்று, “ம்மா உன் போனை காம்மியேன்” என்று கேட்டாள்.

“எதுக்குடி?”

“ம்ம்ம் கொடும்மா... நான் உனக்கு ஒன்னு காண்பிக்கிறேன்” என்றதும் அவள் தன் செல்பேசியைக் கொடுக்க அதில் அன்றைய ஷைனிங் ஸ்டார் நிகழ்ச்சியின் முன்னோட்டத்தை வைத்து தந்தாள். நிலாவிற்கு எரிச்சலானது.  

“கவி உனக்கு வேற வேலையே இல்லையா... எப்பப்பாரு” என்று கடுப்புடன் அதனை அணைக்க எத்தனித்த போது நிகழ்ச்சியில் புதிதாக நுழையும் பெண் போட்டியாளரைக் கண்டு அதிர்ந்தாள்.

‘நித்யாஸ்ரீயா?’ 

shanbagavalli and chitti.jayaraman have reacted to this post.
shanbagavallichitti.jayaraman
Quote

En thala un love ah ava kitta sollamale irunthu irukalam nalla friend dhidir nu love sonna shock ah irukum la, priyan jodi entry aguralo

Quote

Super ma 

You cannot copy content