You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-6

Oodal-6

Quote

6

கண்மூடி திறப்பதற்குள் ஒரு வாரம் கடந்துவிட்டது. இந்த ஒரு வாரமும் வீட்டில் ஒரே சண்டைச் சச்சரவுகள்தான். அதோடு கிடைக்கும் சிறுச்சிறு இடைவெளிகளில் எல்லாம் எனக்கு டன்டன்னாக அறிவுரைகள் வேறு.

இந்த அறிவுரைகளால் எல்லாம் என் பிரச்சனை சரியாகிவிட போகிறதா இல்லை குழந்தை இல்லையென்ற என் வேதனைக்குதான் முடிவு வந்துவிட போகிறதா?

இது எதுவுமே சாத்தியமில்லை எனும்போது இந்த அறிவுரைகளை கேட்டு மட்டும் என்ன மாற்றம் நிகழ்ந்திவிடப் போகிறது. இன்னும் சொல்லப் போனால் இப்படியான அறிவுரைகள்தான் என் வாழ்கையை இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்ற எண்ணம் தோன்றியது. அதுவே எனக்குள் எரிச்சல் உணர்வைத் தோற்றுவித்தது.

இது எல்லாவற்றிருக்கும் உச்சம் வைத்தார் போல் அப்பா கெளதமை அழைத்து பேசினார். அதுவும் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல்!

கெளதம் என்னிடம் காட்ட வேண்டிய மொத்த கோபத்தையும் என் அப்பாவிடம் காட்டிவிட்டார்.

“இனிமே உங்க பொண்ணு என் முகத்தில கூட முழிக்க வேண்டாம்… அவளைத் திரும்பி வரவே வேண்டாம்னு சொல்லிடுங்க” என்று அவர் சீற்றமாக சொல்லிவிட என் தந்தையின் மனம் ரொம்பவும் காயப்பட்டு போனது. கெளதமின் இந்தச் செயல் என்னை மேன்மேலும் கோபப்படுத்தியது.

பெண்ணைப் பெற்றவர்கள் என்றாலே எல்லோருக்கும் இளப்பம்தான். இதேபோல நான் அவர் அம்மாவிடம்  பேசியிருந்தால் கெளதமால் ஏற்றுக் கொள்ள முடியுமா? இல்லை அவர் சொன்னது போல நான் அவரை விவாகரத்து செய்வதாக சொல்லியிருந்தால் அவர் இயல்பாக எடுத்து கொண்டிருப்பாரா?

இந்த எண்ணம் வந்த மறுகணமே மடை திறந்த வெள்ளம் போல் என் கண்களில் கண்ணீர் வற்றாமல் வழிந்துக் கொண்டேயிருந்தது.

எப்படி அவரால் இப்படியெல்லாம் பேச முடிந்தது? அப்படியெனில் இந்த ஐந்து வருடமாக நானும் அவரும் வாழ்ந்த வாழ்க்கைக்கு எவ்வித அர்த்தமும் இல்லையா? உள்ளுர நான் உடைந்து நொறுங்கியிருந்தேன். ஆனால் அதை என் பெற்றோரிடம் காட்டிக் கொள்ளவில்லை.

இந்தளவு கெளதம் பேசிய பிறகும் நான் என் தன்மானத்தைவிட்டு அங்கே திரும்பி போவதா? நிச்சயம் முடியாது. முடியவே முடியாது.

தீர்க்கமாக முடிவெடுத்தேன். திட்டவட்டமாக என் பெற்றோர்களிடமும் தெரிவித்துவிட்டேன். ஆனால் அவர்களுக்குதான் என் முடிவில் கொஞ்சமும் உடன்பபாடில்லை.

கெளதமிடம் நேரடியாக பேசினால் இந்தப் பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும் என்று ஓயாமல் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் வார்தைகளுக்கு நான் செவிமடுக்கவில்லை.

அப்படியெல்லாம் என் தன்மானத்தை விடுத்து கெளதமிடம் என்னால் போய் பேச முடியாது. இப்போதைக்கு நான் இந்த பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக வெளியே வரவேண்டும். அதற்காக மீண்டும் நான் வேலைக்குப் போகலாம் என்று முடிவெடுத்தேன்.

அந்த முடிவை விரைந்து செயல்படுத்த எண்ணி அன்றைய நாளிதழின் வேலை வாய்ப்புப் பக்கங்களை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தேன்.

அதனைக் கவனித்த என் அப்பா வேறு என்னை சந்தேக கண்ணோடுப் பார்த்துக் கொண்டுச் சென்றார். அம்மாவிடம் போய் என்ன ஏதென்று விசாரித்துக் கொண்டிருந்தார். நான் எதையும் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவேயில்லை.

“என்ன பண்ணிட்டு இருக்க காயு?” என்று சில நிமிடங்கள் கழித்து அப்பாவே என்னிடம் பேசினார்.

“வேலைக்காகப் பார்த்துட்டு இருக்கேன்ப்பா” என்றேன்.

“ஏன் காயு? இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க… முதல நீ மாப்பிளைக்கு ஃபோன் போட்டுப் பேசு” என்று அவர் கறாரான குரலில் சொல்ல,

“முடியாது… என்னை இப்படியே விட்டுடுங்க” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றேன்.

“நீ செய்றது உனக்கே எதிரா முடிய போகுது… உன் மாமியார் இதையே சாதகமா வைச்சுக்கிட்டு மாப்பிளையும் உன்னையும் நிரந்தரமா பிரிச்சிடுவாங்க” இப்படி பயமுறுத்தியது என் அம்மாதான்.

நான் அலட்சியமாகத் திரும்பி, “அம்மா சொல்றதை கேட்டு அவர் என்னைப் பிரியணும்னு முடிவு பண்ணிடுவாருன்னா… அப்படி சுயபுத்தி இல்லாத ஒருத்தரோட எனக்கு வாழவே வேண்டாம்” என்றேன்.

“அவசரப்பட்டு வாயை விடாதே… நீ பேசுறது ரொம்ப தப்பு… மாப்பிள்ளை ஒன்னும் அந்த மாதிரி இல்ல” இப்படி தன் மாப்பிள்ளைக்காக ஆக்ரோஷமாகப் பொங்கிக் கொண்டு வந்தது வேறு யாருமில்லை. என் அப்பாதான்.

அதெப்படி… என் வீட்டிலும் அவருக்கு சாதகமாகத்தான் பேசுகிறார்கள். அவர் வீட்டிலும் அவருக்கு சாதகமாகத்தான் பேசுகிறார்கள். என்ன கொடுமை சார் இது?

அம்மா அடுத்ததாக ஆரம்பித்துவிட்டார். “உன் கோபம்தான் உனக்கு சத்ரு”

இதற்கு மேலும் இவர்களிடம் நின்று பேசினால் கொஞ்சம் நஞ்சம் தெளிவாக இருக்கும் என் மூளையை குழப்பிப் பைத்தியம் பிடிக்கச் செய்து விடுவார்கள். ஆதலால் எதுவும் பேசாமல் நான் பாட்டுக்கு என் அறைக்குள் நுழைந்துவிட்டேன்.

வெளியே அம்மா புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார். அப்பா கோபமாக என்னைத் திட்டிக் கொண்டிருந்தார். நான் அதையெல்லாம் காதில் வாங்கினால்தானே!

இப்போதைக்கு என் கவலை எல்லாம் நான் என்  வீட்டிலேயே மறந்து வைத்துவிட்ட என்னுடைய சான்றிதழ்கள்தான். அவசரத்தில் புறப்பட்டு வந்ததால் முன்னெச்சரிகையாக நான் எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. அன்று பூராவும் எனக்கு இந்த யோசனைதான்.

அம்மாவும் அப்பாவும் என்னிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. ஆனால் அம்மா மட்டும் என்னிடம் அன்று மாலைக் கோயிலுக்கு வர சொல்லி அழைத்தார். நான் வர மறுத்துவிட்டேன்.

“வீட்டுக்குள்ளயே இருந்தா நீ இப்படிதான் கண்டதை யோசிப்ப… ஒழுங்கா கிளம்பி என்னோட கோயிலுக்கு வா”

“முடியாது… எனக்கு கோயிலுக்கு வரவே பிடிக்கல… என்னை கட்டாயப்படுத்தாதே ம்மா”

“உனக்கு சாமி கிட்ட கூட சண்டையாடி?”

“பெரிய பொல்லாத சாமி… என் பிரச்சனையெல்லாம் தீர்த்து வைன்னு வேண்டிக்கிட்டு வீட்டுக்கு வந்தா பக்கத்து வீட்டிலயே எனக்கு ஒரு புதுப் பிரச்சனையைக்கூட்டிட்டு வந்து விடுமா அந்த சாமி” என்று உணர்ச்சி வசத்தால் நான் பேசி முடிக்கும் போது,

“பக்கத்து வீட்டில் யாரு?” என்று அம்மா குழப்பமாகக் கேட்டார்.

‘ஐயோ! உளறிக் கொட்டிட்டேனா? இப்போ எப்படி சமாளிக்கிறது’ என்று தட்டுத் தடுமாறிக் கொண்டே அம்மாவைப் பார்த்தேன். அவரோ என் பதிலுக்காகக் காத்திருக்க,

“இப்ப எதுக்கு என் மூஞ்சியே உத்து பார்க்கிற… பக்கத்து வீட்டில புதுசா ஒருத்தங்க குடித்தனம் வந்திருக்காங்க…. நான் அதைச் சொன்னேன்” என்றேன்.

“அதுவா உனக்குப் பிரச்சனை” என்று விடாமல் அம்மா தோண்டித் துருவ,

“ஆமா பக்கத்து வீட்டில குடித்தனம் வந்தா எனக்கு பிரச்சனைதான்… என் ப்ரைவசிபோயிடும்ல” என்றேன். அம்மா கடுப்பாகத் தலையிலடித்துக் கொண்டார். நல்லவேளையாக நான் சொன்னதை அவர் நம்பிவிட்டார்.

உடனடியாக அந்தப் பேச்சை முடிக்க எண்ணி,

“இப்ப என்னோட பெரிய பிரச்சனையே நீதான்… கோயிலுக்குப் போறேன்னு சொன்ன இல்ல… ப்ளீஸ் கிளம்பு” என்று  நான் அம்மாவைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டேன். அவர் முகம் சுருங்கிப் போனது.

“போறேன்டி… அப்படியே போயிடுறேன்… திரும்பியே வர மாட்டேன்” என்றுக் கோபமாகச் சொல்லிவிட்டு வெளியேறினார்.

‘இமோஷனல் ப்ளேக்மெயில்… எல்லா அம்மாக்களுக்கும இதே வேலை’ அதன் பின் நான் அங்கே நிற்காமல் அறைக்குள் நுழைய,

“காயு இங்கே வா” என்று அம்மா சத்தமாக அழைத்தார்.

‘இன்னும் கிளம்பலையா இவங்க’ என்று நான் உச்சப்பட்சக் கடுப்பாக,

“உன் ப்ரெண்ட் வந்திருக்கா பாரு” என்றார்.

“யாருடா அது எனக்கு ப்ரெண்ட்?” என்று என் அறையிலிருந்தபடி வாசல்புறம் எட்டிப் பார்த்தேன். சற்றும் எதிர்ப்பார்க்காத அதிர்ச்சி எனக்காகக் காத்திருந்தது.

“காயு உள்ளேதான்மா இருக்கு” என்று அம்மா சொல்ல நான் அந்தப் பெண்ணையே விழி எடுக்காமல் பார்த்தேன்.

“வளர்மதியா அது?” இத்தனை வருடங்கள் கழித்து வளர் என்னைத் தேடிக் கொண்டு வந்திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. பள்ளியில் படித்த நாட்களில் அவளுக்கும் எனக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகவே போகாது. அப்படியிருக்க அவள் என்னைத் தேடி என் வீட்டிற்கே வந்திருப்பது சற்றே வியப்பாக இருந்தது.

வளர்மதி உள்ளே வந்த மறுகணமே, “காயு” என்று என்னை இறுக அணைத்துக் கொண்டாள். இன்னும் கூட எனக்கு நம்பிக்கை வரவில்லை. வளர்மதியா என்னைப் பார்க்க வந்திருப்பது.

“நான் சத்தியமா உன்னை பார்ப்பேன்னு எதிர்பார்க்கவேயில்லை… நீ உன் ஹஸ்பேண்ட் வீட்டிலதான் இருப்ப… இந்த இன்விடேஷனை உங்க அம்மாகிட்டக் கொடுத்து உன்கிட்டக் கொடுக்க சொல்லாம்னு வந்தேன்… ஷாக்கிங் சர்ப்ரைஸா நீயே வீட்டில இருக்க… எனக்கு இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” அவள் என்னைப் பார்த்துப் பூரிப்பில் பேசிக் கொண்டேப் போக எனக்கு என்ன பேசுவதேன்றே புரியவில்லை .

அவளைப் பார்த்ததில் எனக்கு அத்தகைய பூரிப்போ சந்தோஷமோ துளிக் கூட இல்லை. அதுவும் நான் இப்போதிருக்கும் மனநிலையில் அவளின் இந்தத் திடீர் சந்திப்பை நான் கொஞ்சம் கூட விரும்பவில்லை.

“என்னடி எதுவுமே பேச மாட்டிற” என்று வளர் கேட்கவும்தான் நான் இயல்பு நிலைக்கு வந்தேன்.

“அது ஒண்ணும் இல்ல… திடீர்னு உன்னைப் பார்த்தும் எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல” என்று மழுப்பிவிட்டு, அவளை எப்படி விரைவாக அனுப்பிவிடுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இத்தனை வருடம் கழித்து என்னைப் பார்க்க வந்தவளை அப்படி துரத்திவிடுவது நன்றாக இருக்காது என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போது,

என் அம்மாவோ, “ரொம்ப நாள் கழிச்சு சிநேகிதீங்க இரண்டு பேரும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க… பேசிட்டு இருங்க… நான் கோயிலுக்குப் போயிட்டுவரேன்” என்றவர் என்னிடம் வந்து,

“உன் ப்ரெண்டுக்கு காபிப் போட்டுக் கொடு… பால் பிரிஜ்ல இருக்கு” என்று அறிவுறுத்திவிட்டுப் போனார்.

“தேங்க்ஸ் ஆன்டி” என்றாள் வளர்மதி.

‘ச்சே! நம்மளும் கோயிலுக்குக் கிளம்பி இருக்கலாம்… இப்ப என்ன பண்றது? இவ கிட்ட இப்படி வகையா வந்து சிக்கிட்டோம்’ என்று நான் எண்ணும் போதே,

“ஆன்டிதான் கிளம்பிட்டாங்களே…. நீ உள்ளே வா காயு” என்று வளர் அழைக்க எனக்கு தலையிலடித்து கொள்ளலாம் போலிருந்தது.

‘என் வீட்டுக்கு வந்துட்டு இவ என்னையே உள்ள கூப்பிடுறா… எல்லாம் என் நேரம்’ என்று மனதில் எண்ணிக் கொண்டே நான் அவள் பின்னோடு செல்ல,

“நாம கடைசியா பார்த்து ஒரு பத்து வருஷம் இருக்கும் இல்ல காயு” என்றாள். எனக்குத் திக்கென்றது. அதெப்படி இவ்வளவு சரியாக நினைவில் வைத்துக் கொண்டுச் சொல்கிறாள்.

அந்த சந்திப்பின்போது நானும் அவனும் தனியாக கடற்கரைக்கு வந்திருந்தோம். அன்றுப் பார்த்து வளர் தன் தோழிகளோடு அங்கே வந்திருந்தாள். வந்தவள் என்னைப் பார்க்காமலாவது இருந்தாளா? என் கெட்ட நேரம். பார்த்துத் தொலைத்துவிட்டாள்.

என்னை அடையாளம் கண்டுக் கொண்டு அவள் பேச வந்த போது நானும் அவனும் நெருக்கமாகக் கைக் கோர்த்து கடலலைகளில் நின்றிருந்தோம்.

எங்கள் இருவரையும் பார்த்த வளர்மதி ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு பின் என்னை மட்டும் தனியே அழைத்துப் பேசினாள்.

“யாரு காயு அது?” என்றவள் கேட்க,

“என் லவர்” என்றேன் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல்.

இப்போது யோசித்தால் எனக்கே அந்த வார்த்தை அருவருப்பாக இருந்தது. ஆனால் அன்று அந்த உணர்வே எனக்கில்லை.

ஆனால் வளர்மதி அதோடு செல்லாமல் மேலும் என்னிடம்,

“அம்மா அப்பாவுக்குத் தெரியுமா காயு?” என்று கேட்டாள். அவள் கேட்ட கேள்வியில் என்னை அச்சம் பீடித்துகொண்டாலும் நான் அந்த உணர்வை கொஞ்சமும் என் முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,

“அது தெரிஞ்சிகிட்டு இப்போ நீ என்ன பண்ண போற… உன் வேலையை பார்த்துக்கிட்டுப் போ” என்று நான் அவளை அலட்சியப்படுத்தினேன்.

வளர் அதற்கு பின் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவள் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள். அந்தப் பார்வை என்னை ஏதோ செய்தது.

அதற்குப் பிறகு ஒரு நொடி கூட நான் அங்கே நிற்கவில்லை. அவனை அழைத்துக் கொண்டுப் புறப்பட்டுவிட்டேன். அன்றிரவு முழுக்க எனக்கு உறக்கமே வரவில்லை.

எங்கே வளர் என் வீட்டிற்கு வந்து என் அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுவாளோ என்ற பயத்தோடே இருந்தேன். நல்லவேளையாக அவள் எதுவும் சொல்லவில்லை.

அதெல்லாம் இப்போது முடிந்த கதைதான் எனினும் நான் அதற்குப் பிறகு கெளதமை மணந்து கொண்ட விஷயம் அவளுக்குத் தெரியாது. தெரிந்திருக்க வாய்ப்பும் இல்லை.

ஆனால் அதுப்பற்றி தெரிந்தால் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாளோ? இத்தனை வருடம் கழித்து இப்படியான சங்கடங்கள் வருமென்று முன்னமே நான் யோசிக்காமல் போனது முழுக்க முழுக்க என் முட்டாள்தனமேயன்றி வேறென்ன?

Uploaded files:
  • an.jpg
Shakthi, Marli malkhan and Rathi have reacted to this post.
ShakthiMarli malkhanRathi
Quote

அருமையான​ பதிவு

Quote

Super ma

You cannot copy content