You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 4

Quote

ஆக்ஸிடோசின்(Oxytocin) என்ற ஹார்மோன் அன்னியோன்னியத்தால் தூண்டப்படுவது. தாய்-சேய் அன்னியோன்னியம் ஆண்-பெண் அன்னியோன்னியம் எல்லா வகை உறவுகளும் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோனை சுரக்க வைக்கும். 

ஆனால் இந்த ஆக்ஸிடோசின் ஆணில் வேறுமாதிரியும் பெண்ணில் வேறுமாதிரியும் வேலை செய்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.

பெண்ணின் ஈஸ்டிரோஜனுடன் சேரும் போது ஆக்ஸிடோசின் துரித பந்தங்களை ஏற்படுத்திவிடுகிறது. அதனால் பெண்கள் சிறந்த தாய்மை உணர்வு கொண்டவர்களாகிறார்கள். அதே போல மிக வேகமாக மிக அவசரமாக தன் துணைவனிடம் காதலும் கொண்டுவிடுகிறார்கள்.

இதே ஆக்ஸிடோசின் ஆணின் டெஸ்டோஸ்டிரோனோடு கலக்கும் போது பந்தம் உடனே ஏற்படுவதில்லை. இதனால் பெண்களை அன்பின் சின்னமாக பார்ப்பதை விட ஆசையின் சின்னமாக பார்க்கிறார்கள்.

எந்தவித நிரந்த பந்தமும் இன்றி, பல பெண்களுடன் உறவு கொள்ளவும் அவர்களால் முடிகிறது. இந்த மாறுப்பட்ட ஆக்ஸிடோசின்- டெஸ்டோடிரோன் ரியாக்ஷன் ஆண்களை தீராத விளையாட்டு பிள்ளையாக்கிவிடுகிறது.

****************************************************

4

கன்னிகையை திரும்பி பார்த்த்தும் திருநாவுக்கரசு தன் விரலிடுக்கிலிருந்த சிகரட்டை காலில் போட்டு மிதித்தான்.

“என்ன சார்… என்ன விஷயம்… நீங்க இங்க” என்று அவள் விசாரிக்க,

“கொஞ்சம் பேசணும்” என்றவன் ஒரு மாதிரி தயக்கப் பார்வையுடன் அவளை ஏறிட்டான்.

கனி அவனை ஒரு நொடி யோசனையாக பார்த்துவிட்டு பின் வீட்டின் பூட்டை திறந்து, “வாங்க” என்றபடி உள்ளே சென்றாள்.

முகப்பறையில் இருந்த சோபாவை காட்டி, “உட்காருங்க சார்” என,

“இல்ல இருக்கட்டும்.. பரவாயில்ல” என்றவன் தயங்கவும்,

“ப்ச் பரவாயில்ல உட்காருங்க” என்று விட்டு உள்ளே செல்ல,

“இல்ல பரவாயில்ல காபி எல்லாம் வேண்டாம்” என்றவன் குரலை கேட்டும் கேட்காதவளாக சமையலறைக்குள் சென்று ஒரு தட்டில் கேசரியும் வடையும் வைத்து எடுத்து வந்து,

“அத்தைக்காக படைச்சது” என்று அவனிடம் நீட்டினாள்.

மறுப்பு சொல்லாமல் பெற்று கொண்ட போதும் அவன் அதனை உண்ணும் மனநிலையில் இல்லை. மிகவும் சிரமப்பட்டு அந்த கேசரியை அவன் விழுங்கி கொண்டிருந்தான். 

“ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சாப்பிடுறீங்க… நல்லா இல்லையா?”

“ச்சே ச்சே ரொம்ப நல்லா இருக்கு… நான் ஒரு மாதிரி டென்ஷனா இருக்கேன்… அதான் சாப்பிட முடியல” என்றவன் அவஸ்தையுடன் நெளிவதை பார்த்து புன்னகைத்தவள்,

“சரி என்ன விஷயம் சொல்லுங்க” என்றபடி கைகளை கட்டி கொண்டு அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்தாள். 

அவளின் அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவன் அவதியுற, “என்ன விஷயம் நேரடியா சொல்லுங்க” என்று அவள் அழுத்தி கேட்கவும் அவன் பட்டென்று எழுந்து நின்று கொண்டான்.

“என்னாச்சு… ஏன் எழுந்துட்டீங்க” என்றவள் அவன் செய்கை  புரியாமல் கேட்க,  அந்த நொடி அவளை நேராக பார்த்து, “கனி” என்று அழைத்தான்.

 அவள் புருவங்கள் முடிச்சிட்டன. என்ன திடீரென்று மிஸ் என்ற அழைப்பை தவிர்த்துவிட்டான் என்று அவள் யோசித்து முடிக்கும் போது,  

“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு விருப்பப்படுறேன்” என்று பளிச்சென்று தெரிவிக்க, அவள் வியப்புடன் அவனை நோக்கினாள்.

அவனுக்கும் அவளை பிடித்திருந்தது என்ற போதும் எப்படி திடீரென்று அவனின் இந்த அணுகுமுறையை எதிர்கொள்வதென்று அவளுக்கு புரியவில்லை. அதுவும் அன்று அவள் விதவை என்றறிந்து அதிர்ந்தவனுக்கு இப்போது என்னவாயிற்று என்றவள் யோசித்தபடி மௌனமாக நிற்க, அவனோ தன் மனஎண்ணங்களை அவளிடம் பகிர துவங்கினான்.  

“தினம் தினம் அம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி நச்சரிப்பாங்க… ஆனா எனக்கென்னவோ சுத்தமா கல்யாணம் பண்ணிக்கிறதுல இன்டிரஸ்ட் இல்ல… அம்மா தொல்லை தாங்காமதான் இடம் மாத்திக்கிட்டு வந்தேன்… ஆனா இங்கே வந்த பிறகு… உங்களை பார்த்த பிறகு… எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல கனி… உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு… அதேமாதிரி….. உங்களுக்கும்…. என்னை?” என்றவன் இழுத்தபடி கேள்வியாக நிறுத்தவும்,

அவனை நிமிர்ந்து பார்த்து, “நான் விடோங்கிறது தெரிஞ்ச பிறகுமா இப்படி என்கிட்ட கேட்குறீங்க?” என்று குத்தல் பார்வையுடன் கேட்டாள்.

அவன் பதட்டத்துடன், “சாரி கனி… அன்னைக்கு ஒரு மாதிரி ஷாக்காயிட்டேன்தான்… ஆனா அப்பவும் சரி இப்பவும் சரி…. எனக்கு உங்களை பிடிச்சிருக்குங்குறதுல எந்த மாற்றமும் இல்ல” என்று திடமாக உரைக்க, அவள் யோசிக்க துவங்கினாள். அவனின் பதில் அவளுக்கு ஒரளவு ஏற்புடையதாகவே இருந்தது.

சில நிமிடங்கள் அவள் மௌன நிலையை அப்படியே நிற்க திருநாவுக்கரசு அவள் என்ன பதில் சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன் அவளை வைத்து கண் வாங்காமல் பார்த்திருந்தான்.

கன்னிகை மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்து நிதானமாக பேசினாள்.

“அத்தை ரொம்ப பயந்துட்டு இருந்தாங்க… அவங்களோட கடைசி நிமிஷம் வரைக்கும் அவங்களுக்கு ஒரே பயம்தான்… நான் தனியா நின்னுடுவேனோன்னு… அதான் எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க… ஆனா அவங்க இருந்த வரைக்கும் அவங்க ஆசைப்பட்டது நடக்கல… எதுவும் கூடி வரல  

இப்போ அவங்க இறந்த பிறகு நீங்க இப்படி வந்து கேட்குறீங்க… ஒரு வேளை இந்த நிமிஷம் அவங்க இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க… சின்ன குழந்தை மாதிரி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பாங்க” என்றவள் பெருமூச்செறிந்து,

“கொஞ்சம் மனநிறைவோட அவங்க செத்து கூட போயிருக்கலாம்” என்று சொல்லும் போதே அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. அவள் கட்டுபடுத்த முடியாமல் தன் முகத்தை மூடி அழ தொடங்கிவிடவும் அவன் துணுக்குற்று,

“சாரி கனி… இந்த சூழ்நிலைல நான் இப்படி வந்து கேட்டிருக்க கூடாது… தேவையில்லாம உங்க மனகஷ்டத்தை நான் அதிகப்படுத்திட்டேன்… நான் அப்புறமா வந்து பேசுறேன்” என்று விட்டு வெளியேற எத்தனித்தான்.

அவள் சட்டென்று முகத்தை துடைத்து கொண்டு நிமிர்ந்து, “திருநா” என்று அழைக்கவும் அவன் வியப்புடன் திரும்ப,

“எனக்கும் உங்களை பிடிச்சிருக்கு… ஒரு வேளை நம்ம கல்யாணம் நடந்தா அத்தையோட ஆத்மா சாந்தியாகும்னு நான் நம்புறேன்” என்றவள்  சுற்றி வளைக்காமல் நேரடியாக தன் பதிலை சொல்லிவிட அவன் முகம் பிரகாசித்தது.

வியப்பு நீங்காமல், “கடவுளே! நீங்க என்ன சொல்வீங்கன்னு பயந்துட்டே இருந்தேன் கனி… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… அம்மாவை கூட்டிட்டு வந்து” என்று அவன் படபடவென்று பேசவும் அவள் இடைமறித்து,

“இல்ல இல்ல… அத்தையோட காரியமெல்லாம் முடியட்டும்… அப்புறமா பேசிக்கலாம்” என்றாள்.

“பைன் ஓகே… முடியட்டும்… ஒன்னும் பிரச்சனையில்ல” என்றவன் புன்னகையுடன் சொல்லிவிட்டு,

“சரி நான் கிளம்புறேன்” என்றவன் வாசலை கடப்பதற்குள் பத்து இருபது முறைக்கு மேல் அவளை திரும்பி பார்த்து கொண்டே செல்ல,

“திருநா… வாசப்படி இடிக்க போகுது முன்னாடி பார்த்து போங்க” என்றவள் எச்சரிக்கவும்தான் அவன் எதிரே இருந்த நிலைப்படியில் மோதி கொள்ள போய் சுதாரித்து கொண்டான்.  

உதட்டை கடித்து கொண்டு அவன் வாயிலை கடக்க, அவளுக்கு அவனின் செய்கையை பார்த்து இதழ்களில் புன்னகை விரிந்தன.

அவளுக்குள்ளும் அந்த கணம் புது பிரவாகமாக உணர்வுகள் பொங்கிப் பெருகின.

அவன் புல்லட் வாயிலை கடக்கும் வரை நின்று பார்த்துவிட்டு உள்ளே செல்ல எத்தனிக்கும் போதுதான் எதிர் வீட்டுகாரம்மாள் அரிசி புடைக்கிறேன் என்று அவள் வீட்டையே நோட்டம் விட்டு கொண்டிருப்பது தெரிந்தது.

சட்டென்று தன் உதடுகளிலிருந்த புன்னகையை விழுங்கி கொண்டு உள்ளே நடந்தவளுக்கு தான் தனிமையில் இருக்கிறோம் என்று அவரின் சந்தேக பார்வையின் மூலம் ஆணியடித்தார் போல மண்டையில் உரைத்தது.

அத்தை இருந்த வரை யார் இங்கே வந்து போனாலும் அது ஒரு விஷயம் இல்லை. ஆனால் இனி அப்படி முடியாது.

சுற்றியுள்ள கழுகு பார்வைக்கு தான் ஒரு நாளும் தீனியாகிவிட கூடாது என்று எண்ணி கொண்டபடி முற்றத்தில் வந்து அமர்ந்தவள் நிதானமாக திருநா பேசியதை மனதில் ஒட்டி பார்த்தாள்.

பருவ பெண்ணை போன்று மனதில் மீண்டும் புதிது புதிதாக ஆசைகள் துளிர்விட்டன. நாடி நரம்புகளில் எல்லாம் ஏதோ இனம் புரியாத ஒரு சிலிர்ப்புணர்வு பரவியது.

கனவா நனவா என்று பிரித்தறிய முடியாத நிலையில் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். கன்னத்தில் கை வைத்து கொண்டு எதிர்கால வாழ்வை நோக்கிய எதிர்பார்ப்புகளில் அவள் மிதந்து கொண்டிருக்கும் போது,

“எனக்கு ரொம்ப சந்தோஷம் கனி” என்று அம்பிகாவின் குரல் அவள் காதில் ஒலிக்க,

“அத்தை” என்று அதிர்ந்து நிமிர்ந்து, “அத்தை நீங்களா நீங்களா பேசுனது” என்று ஆர்வம் பொங்க கேட்க,  

காற்றின் ஓசை கூட இல்லாத அந்த அமைதியுனூடே அவர் குரல் மீண்டும் அவள் காதில் ஒலித்தது.

“நான்தான்டி பேசினேன்”

“எங்கே இருக்கீங்க அத்தை”

“உன் கூட தான்டி இருக்கேன்… உன்னை விட்டு எங்கடி போவேன்”

“நிஜமாவா அத்தை… என் கூட இருக்கீங்களா? எங்க இருக்கீங்க?” என்றவள் உற்சாகத்துடன் எழுந்து நின்று சுற்றும் முற்றும் தேடலாக பார்க்க, 

“உன்னை சுத்தி தான்டி இருக்கேன்… உனக்கு ஒரு நல்லது நடக்கிற வரைக்கும் உன்னை விட்டு போகமாட்டேன்டி” என்றவர் குரலை கேட்டு நெகிழ்வுற்றவளாக அவள் கண்ணீர் வடிக்கும் போது,

“மிஸ் மிஸ்” என்றபடி அவளிடம் பயிலும் மாணவர்கள் உள்ளே நுழைந்தனர்.

“என்ன மிஸ் யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க… வெளியே சத்தம் கேட்டுச்சு” என்றவர்கள் கேட்கவும்தான் தனியாக தான் உளறி கொண்டிருந்தோம் என்று புரிந்து தலையில் தட்டி கொண்டவள்,

“யார்கிட்டயும் இல்ல… சும்மாதான்” என்று அவர்களை சமாளித்துவிட்டு,

“சரி சரி உட்காருங்க… நான் பலகாரம் எடுத்துட்டு வரேன்” என்றவள் உள்ளே சென்று அவர்கள் ஐவருக்கும் தனித்தனியாக தட்டில் கேசரியும் வடையும் எடுத்து வந்து தந்தாள்.

“ரொம்ப நல்லா இருக்கு மிஸ்”  என்று ருசித்து அவர்கள் சாப்பிடுவதை பார்க்க அவளுக்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது. அதன் பிறகு அவளிடம் அவர்கள் பேசி சிரித்துவிட்டு கிளம்பும் தருவாயில்,

“மிஸ் மிஸ் ஸ்கூலுக்கு வாங்க மிஸ்… நீங்க இல்லாம செம மொக்கையா போகுது” என்று அவளை சுற்றி கொண்டு அவர்கள் கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர்.

அவளுமே நாளை பள்ளிக்கு செல்ல வேண்டுமென்ற மனநிலையில்தான் இருந்தாள். தனிமையிலிருந்து மீள்வது ஒரு காரணமென்றால் திருநாவை பார்க்க வேண்டுமென்பது அடுத்த காரணம்.    

“சரி சரி நாளைக்கு நான் ஸ்கூலுக்கு வரேன்” என்று சொல்லவும் அவர்கள் எல்லோர் முகத்திலும் அப்படியொரு பிரகாசம்.

அவர்களை வழியனுப்பிவிட்டு நேராக அத்தையின் படம் முன்னே வந்து கண் மூடி நின்று, “என் கூடவே இருங்க அத்தை… எல்லாமே நல்லபடியா நடக்கணும்னு கடவுளா இருந்து ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டாள்.

அடுத்த நாள் காலை மனம் கொஞ்சம் தெளிவுபெற்றிருக்க அவள் பள்ளிக்கு புறபட்டு சென்றிருந்தாள். ஆனால் பார்ப்பவர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று அத்தையை பற்றி பேசி பேசி அவளின் தெளிந்த மனதில் மீண்டும் கல்லெறிந்தனர். வேதனையை கிளறிவிட்டனர்.

இருப்பினும் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் போது எல்லாவற்றையும் அவள் மறந்து போனாள். மேலும் திருநாவின் நேரடியான காதல் பார்வைகளை எதிர்கொள்ளும் போது அவள் மனம் அலைபாய்வதில் மற்ற எண்ணங்கள் யாவும் பின்னுக்கு சென்றன.

ஆனால் பள்ளியிலிருந்து திரும்பியதும் அந்த பெரிய விசாலமான வீடு நடுக்கடலின் நிர்சலனத்தை போல அவளை முழுவதுமாக விழுங்கி ஏப்பம்விட காத்திருந்தது.  

மாலையில் அவளின் மாணவர்கள் வந்து அவளுடன் சில மணிநேரங்கள் பேசிவிட்டு போவார்கள். அதன் பின்னர் அவள் சமைக்கலாம் என்று தொடங்கினால் அது அரைமணி நேரம் கூட நீடிக்காது.

 நேரத்தை ஓட்ட காய்திரிக்கு அழைத்து பேசினால் அவள் எப்போதும் குழந்தைகளை பார்த்து கொள்வதில் மும்முரமாக இருப்பாள். இல்லையென்றால் அவள் கணவன் வந்துவிட்டான் என்று ஒரு வரியில் பேசி அழைப்பை துண்டித்துவிடுவாள்.

அப்படியே அவள் பேசினாலும் அரைமணி நேரம் மேல் கூட அந்த உரையாடல் நீளாது. அதற்கு மேல் பேசுவதற்கு இருவருக்கும் வேறு விஷயமே இருக்காது.   

இறுதியாக அன்றைய நாள் முடிவுற்று இருள் சூழ தொடங்கும் போது கப்பென்று ஒரு பயஉணர்வு அவள் கழுத்தை நெரித்து மூச்சு முட்ட செய்யும். ஒவ்வொரு நாளின் இரவையும் கடப்பது ஏதோ ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் கடப்பது போன்றதொரு உணர்வை கொடுக்கும்.

அவளது தனிமையின் தவிப்பையும், எப்போது விடியுமென்ற அவளது காத்திருப்பின் வலி மிகுந்த நிமிடங்களையும் வார்த்தைகளால் விளங்க வைத்துவிடவே முடியாது.

உறக்கம் வராமல் படுக்கையில் புரள்வதும் எழுந்து நிலா முற்றத்தில் அமர்ந்து வானின் நட்சத்திரங்களை பார்த்தபடி அப்படியே தூணில் சாய்ந்த மேனிக்கு உறங்கி போவதும் அவளுக்கு சமீபகாலத்தின் வழமையான வழக்கங்களாகி போனது.   

இதற்கிடையில் சொற்பமான அந்த தூக்க நேரத்திலும் கூட அத்தை கனவில் வந்து போவார். பேசுவார். கோபப்படுவார். அழுவார். சில நேரங்களில் விழித்திருக்கும் போதும் கூட அதேபோல நடக்கும். எது கனவு நினைவென்று புரியாதளவுக்கு பெரும் குழப்பமாக இருக்கும் அவளுக்கு.

இந்த கொடுமையான தனிமையிலிருந்து தப்பிக்கவாவது திருநாவுக்கரசுடன் தனக்கு சீக்கிரம் திருமணமாகிவிட்டால் நல்லது என்று எண்ணி கொள்வாள். ஆனால் அவனிடம் அத்தையின் காரியம் முடியும் வரை பொறுத்திருக்க சொன்னதே அவள்தானே!

எனினும் அதற்குள்ளாக தனக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்க வேண்டுமே என்று அவள் உள்ளம் கிடந்து தவித்தது.

shanbagavalli, Chitrasaraswathi and 6 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathijamunaraniRathiThani Sivaindra.karthikeyanchitti.jayaramaneswari.sasi
Quote

எதிர் வீட்டு பெண் போல் அநேகம் பேர் 😡😡😡 வேலை இல்லைன்னா இப்படி தான் அடுத்த வீட்ல இருக்கிறவங்க என்ன பண்றாங்கனு பார்க்க தோன்றும்

Thani Siva has reacted to this post.
Thani Siva
Quote

Kalyanam panna ivanuku ok ivanoda amma ku iva widow nu terimja ok solluvamgala adu yosikalaye kani, inda kalyanam avathu avaluku thanimai la irunthu nimnadi kidaikatum nalla oru thunai ah irunda nalla irukum, naa kuda thanimai la dan irupaen pa en paiyan wedding shoot ku poita thaniya dan irupaen appo ninaipaen sikiram ah vidimja nalla irukum nu bayam ellam illa pa ana thaniya thunga dan kashtam ah irukum kandai um yosika thonum thukkam varathu palasu ellam mind la odite irukum pa konjam kashtam dan en periya paiyan naa Canada la iruka naa thumga mataen nu terimji thittitu irupan pa ana thanimai kashtam dan, nice update dear thanks.

Thani Siva has reacted to this post.
Thani Siva
Quote

தனிமை உயிரை கொல்லும் நோயும் கூட....கனி தனிமையில

இருக்கிறாள் அதானால அத்தை அவளுடன் பேசிக்கிறது போல் நினைக்கிறாளா???

திருநாவு திருமணம் புரிய கனிகிட்ட கேட்டது சூப்பர் 😀

Quote

Super ma 

You cannot copy content