You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 5

Quote

5

மதுவின் வீடு.

கார் அங்கே சென்றடையும் வரை இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. விழிகள் மூடிய நிலையில் மது அப்படியே உறங்கிவிட,

“மது” என்று அஜய் அவள் தோளைத் தொட்டு எழுப்பும் வரையில் அவள் உறக்கம் களையவில்லை.

விழிகள் திறந்தவள் மெல்ல எழுந்து வெளியே வர அவளை தன் தோளோடு அணைத்துப்பிடித்துக் கொண்டு அவன் படிக்கட்டு ஏறினான்.

“நானே நடந்து வரேன் அஜய்” என்று அவனிடமிருந்து விலகப் பார்த்தாள்.

“ஒன்னும் வேண்டாம்… படிக்கட்டெல்லாம்  ஒரே ஈரமா இருக்கு… வழுக்கிவிட்டுடும்” என்று எச்சரிக்கை உணர்வோடு சொல்லிவிட்டு அவளைத் தாங்கிப்பிடித்துக் கொண்டே நடந்தான்.

சுரேஷின் இறப்பு அஜய் வீட்டை ரொம்பவும் பாதித்திருக்க, மது அந்தச் சூழ்நிலையில் அங்கே இருக்க வேண்டாமென சுரேஷின் ஈம சடங்குகள் முடித்த கையோடு தன் மனைவியை அவளின் பெற்றோரோடு அனுப்பி வைத்துவிட்டான்.

நேற்றிலிருந்து மது அவள் அம்மா வீட்டில்தான் தங்கியிருந்தாள். தான் செய்த வேலைக்கு அவன் இங்கே திரும்பியும் கொண்டு வந்துவிடுவனா என்றே அவளுக்கு சந்தேகமாக இருந்தது.

ஆனால் மீண்டும் அவளை அங்கே அழைத்து வந்திருப்பது ஆச்சரியம்தான். அஜய் மனதில் என்ன இருக்கிறதோ என்று அவனுக்குத்தான் தெரியும்.

இருப்பினும் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் மௌனமாக அவனுடன் நடந்தாள். முதல் மாடியிலிருந்தது அவளின் வீடு. அவள் பெற்றோரின் சொந்த வீடுதான் அது.

ஆனாலும் அஜய் அந்தஸ்திற்கு நிகரானதா என்றுக் கேட்டால் இல்லைதான். ஒரு மேல்தட்டு நடுத்தர மக்களின் வீட்டின் அமைப்பு எப்படி இருக்குமோ அப்படியிருந்தது.

மது உள்ளே நுழைந்ததும் அவள் அம்மா நந்தினி கோபமாக பொறிந்து தள்ள ஆரம்பித்தார்.

“அறிவில்ல மது உனக்கு… இப்படிதான் சொல்லாம கொள்ளாம கிளம்பி போவியா… கோயிலுக்கு போயிட்டு வரதுக்குள்ள இவ்வளவு களேபரம்… ஏன்தான் நீ இப்படி இருக்கியோ? வயித்துல ஒன்னுக்கு ரெண்டு புள்ளைய சுமக்கிற… அப்போ கூட உனக்கு பொறுப்பு வராலேயே… உன்னைப் பத்தி யோசிக்கலனாலும் அந்தப் புள்ளைங்கள பத்தியாசச்சும்” என்று மகளைக் கடிந்து கொண்டிருந்தவரின் கையை அழுத்தி பிடித்த மதுவின் தந்தை தாமோதரன்,

“பொறுமையா பேசிக்கலாம் நந்து… அவ முதல ஃப்ரெஷாகிட்டு வரட்டும்” என்றார்.

“இல்லைங்க… எனக்கு எவ்வளவு பயமாகிடுச்சு” என்று வேதனையோடு  சொல்லிக் கொண்டிருந்த தன் மனைவியிடம் தாமோதரன் அமைதியாக இருக்கச் சொல்லி கண்காண்பித்தார்.

அந்தப் பார்வைக்கான அர்த்தம் புரிந்த மறுநொடி நந்தினி மௌனமாகிட,

அஜய் உடனே, “நீ உள்ளே போய் ஃப்ரெஷாகிட்டு வா மது… சாப்பிடலாம் டைமாச்சு” என்றான்.

மதுவுக்கு என்ன நடந்திருக்கும் என்றுப் புரிந்து போனது. அஜய் முன்னிலையில் யாருமே அவளைத் திட்டுவதை ஏன் முறைத்து பார்ப்பதைக் கூட அவனால் பொறுத்து கொள்ளவே முடியாது. அவர்கள் யார் என்ன என்ற விதிவிலகெல்லாம் அவனுக்கு கிடையாது.

நந்தினி மகளைக் காணவில்லை என்ற தவிப்பில் அஜய் அருகாமையிலிருப்பதையும் கவனிக்காமல் மகளை உரிமையோடு கடிந்து கொண்டுவிட்டார். ஆனால் அவனின் முகமாற்றத்தைக் கவனித்த தாமோதரன் அவரிடம் அறிவுறுத்தவும் நிலைமையறிந்து அவர் அமைதியாகிவிட,

இதனைப் புரிந்தக் கொண்ட மதுவிற்கும் எரிச்சலாக இருந்தது. தன் அப்பா அம்மா முன்னிலையில் கூட இவன் தன் உரிமையை நிலைநாட்ட பார்ப்பது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

இருப்பினும் அந்தச் சூழ்நிலையில் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் மௌனமாக தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கை கால்கள் அலம்பிக் கொண்டு இரவு உடை மாற்றி கொண்டு அவள் வெளியே வருவதற்குள் முகப்பறையில் அஜயின் குரல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

“மதுவைப் பார்த்துக்கிறதைவிட கோயிலுக்கு போறதுதான் உங்களுக்கு ரொம்ப முக்கியமா மாமி” என்றவன் கோபமாக கேட்க,

“இல்ல தம்பி… மதுவுக்கு சுகபிரசவமாக வெள்ளி கிழமையும் செவ்வாய் கிழமையும் கோயிலுக்கு போய் விளக்கு போடுறேன்னு வேண்டிகிட்டேன்… அதான்” என்று அவர் அமைதியாக பதிலளித்தார்.

“நீங்க எங்க மாமா போயிருந்தீங்க” அடுத்த அவன் தாமோதரன் புறம் திரும்ப,

“இல்லை பத்திரிகை ஆஃபீசுக்கு” என்றவர் தயக்கத்தோடு சொல்ல, “உங்களை நம்பிதானே நான் மதுவை இங்கவிட்டுட்டு போனேன்?” என்றவன் கேட்ட அடுத்த நொடி,

“அஜய்!” என்றுக் கத்திவிட்டாள் மது.

அஜய் அவளைத் திரும்பிப் பார்த்த நொடி அவன் மௌனமானான்.

மது கடுப்பின் உச்சத்தில், “இப்ப எதுக்கு அவங்களைக் குற்றவாளி மாதிரி நிற்க வைச்சு கேள்வி கேட்டிட்டு இருக்க” என்க,

“ஏ அப்படியெல்லாம் இல்லடி… சாதாரணமாதான் கேட்டிட்டு இருக்கேன்” என்றான்.

“எதுவா இருந்தாலும் நீ என் கிட்ட கேளு அஜய்… ப்ளீஸ் அவங்க கிட்ட அப்படியெல்லாம் பேசாத… தப்பு என் பேர்லதான்… நான்தான் யார் கிட்டயும் சொல்லாம கிளம்பி போனேன்” என்றாள் அழுத்தமாக!

அதற்குள் தாமோதரன் முன்னே வந்து, “நீ ஏன் மது டென்ஷனாகிற… மாப்பிளை சாதாரணமாதான் கேட்டிட்டு இருந்தார்… நாங்க பதில் சொல்லிட்டு இருந்தோம்” என்று மருமகனுக்காக சமாளித்தார். ஆனால் மதுவுக்கு தெரியாதா? அவன் எப்படி பேசுவான் என்று!

அவள் எதுவும் பேசாமல் அஜயை முறைக்க அவன் முறுவலித்துவிட்டு,

“சரிடி முறைக்காதே… தெரியாம பேசிட்டேன்… மாமி மாமா சாரி… இனிமே இப்படி பேச மாட்டேன்” என்று அவன் அந்த நொடியே இயல்பாக மன்னிப்பு கேட்டுவிட

“என்ன மாப்பிள்ளை? நீங்க போய் சாரி கேட்டுட்டு… அவ ஏதோ புரியாம பேசுறா” என்று மதுவின் அம்மா நந்தினி பதறினார்.

“மாப்பிள்ளை கிட்ட அப்படியெல்லாம் பேசாத மது… அவர் உன் மேல அக்கறையிலதான் கேட்டார்” என்று நந்தினி சொல்ல மதுவின் முகத்தில் சலிப்புத்தட்டியது.

‘இவங்களுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணதுக்கு எனக்கு வேணும்… நல்ல நாலு டோஸ் விடட்டும்னும் கம்னு வேடிக்கை பாத்திருக்கணும்’ என்றவள் மனதில் எண்ணிக்கொண்டிருக்க,

“மாமி சாப்பாடு எடுத்து வையுங்க… டைமாச்சு மது சாப்பிட்டு மாத்திரை போடணும்” என்றவன் சொன்ன மறுநொடியே, “சரிங்க மாப்பிள்ளை” என்று சமையலறைக்குள் விரைந்தார்.

மதுவின் கோபம் குறையவில்லை. அவள் கோபத்தைக் காட்டுவதற்கு முன்னதாகவே அவனும் இறங்கி வந்துவிடுகிறான். இப்போது எதிலாவது தன் கோபத்தை காட்ட வேண்டுமே என்று யோசித்தவள் அஜயை முறைத்துப் பார்த்து,

“என்னால டைமுக்கெல்லாம் சாப்பிட முடியாது… பசிச்சாதான் சாப்பிட முடியும்” என்றுச் சொல்லிவிட்டு

“எனக்கு பசிக்கல” என்றபடி தன்னறைக்குள் புகுந்து கொண்டாள்.

“மது” என்று அஜயின் அழைப்பை அவள் காதிலும் வாங்கவில்லை.

சில நிமிடங்கள் தாமதித்து அஜய் அவளுக்காக உணவு எடுத்து வந்திருந்தான். படுக்கையில் தலையைப்பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் அவனைப் பார்த்தும் முகத்தைத் திருப்பிக் கொண்டுவிட,

“என் மேல இருக்க கோபத்தை சாப்பாடு மேல ஏன் காண்பிக்கிற?” என்றுக் கேட்டான்.

“பரவாயில்லேயே… நான் உங்க மேலதான் கோபமா இருக்கன்னு உங்களுக்கு புரிஞ்சுடுச்சா” என்று நக்கலாக கேட்டாள்.

“பின்ன புரியுமா? உன் கன்னம் இரண்டும் செரி பழமாட்டும் சிவந்திருக்கே” என்றுச் சொல்லிக் கொண்டே அவள் வாயிற்குள் ஒரு பிடிச் சாதத்தைத் திணித்துவிட்டான்.

“அஜய்” என்றவள் அவனை முறைக்க,

“சாப்பிட்டுட்டு தெம்பா சண்டை போடுடி” என்று மறு வாய் சாதத்தையும் அவளுக்கு ஊட்டிவிட்டிருந்தான்.

“போ அஜய்… நீ இப்படியெல்லாம் பண்ணா நான் எப்படி உன் கூட சண்டைப் போடுறதாம்” என்றவள் சலித்துக் கொண்டே கேட்க, அவன் சிரித்து கொண்டே அவளுக்கு ஊட்டும் வேலையில் கண்ணும்ப் கருத்துமாக இருந்தான்.

“ஒன்னும் வேண்டாம்… எனக்கு பசிக்கும் போது நானே சாப்பிட்டுக்கிறேன்?” என்றவள் மீண்டும் முரண்டு பிடிக்க,

“சரி… நீ சாப்பிட வேண்டாம்… நான் என் லிட்டில் சாம்ப்ஸ் ரெண்டு பேருக்கும் ஊட்டிறேன்” என்றுச் சொல்லி அவளைக் கட்டாயப்படுத்தி அடுத்தடுத்த கவளங்களையும் அவள் வாயிற்குள் திணிக்க, “ஹ்ம்ம்… அஜ.. ய்” என்று திணறியவள் அவனைத் தள்ளிவிட்டு விலகி வந்தாள்.

“ஐயோ! அஜய் போதும்… நான் ஒன்னும் குழந்தை இல்ல… எனக்கு சாப்பிட தெரியும்” என்றாள்.

அவன் வாய்விட்டு சத்தமாக சிரித்து,

“நீ குழந்தை இல்ல அப்படின்னு அடிக்கடி நீ இப்படி சொல்லி எனக்கு ஞாபகப்படுத்திக்கிட்டே இரு மது… இல்லாட்டி நான் மறந்துடுவேன்” என்றான்.

“அப்போ நான் குழந்தை மாதிரி நடந்துக்கிறேன்னு சொல்றியா?”

“அதுல என்னடி உனக்கு சந்தேகம்… குழந்தை மாதிரி இல்ல… குழந்தையேதான்… இன்னும் நான் பார்த்த அந்தக் குட்டி மது கொஞ்சம் கூட மாறவேயில்ல… யார் சொல்றதையும் கேட்க மாட்டா… அறுந்த வாலு… மாமி உன்னை வைச்சிக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நான்தான் கிட்ட இருந்து பார்த்திருக்கேனே”

 “எப்ப பாரு ஏதாச்சும் சேட்டை செஞ்சு ஏதாவது பிரச்சனையில போய் மாட்டிப்பா… அதுவும் அந்த சரவெடி விஷயத்தை இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வருது” என்று சொல்லி அவன் உரக்க சிரித்தான்.

மதுவின் முகம் சுருங்கிப் போனது.

“நீ இன்னும் எத்தனை நாளைக்கு அந்தக் கதையைச் சொல்லிகிட்டே இருப்ப” என்றவள் கடுப்போடுக் கேட்க,

“நமக்கு பேரன் பேத்தி பிறக்கும் இல்ல… அவங்கக் கிட்டக் கூட சொல்லுவேன்” என்றான்.

“போடா” என்றவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு ஜன்னல் அருகில் சென்றுத் திரும்பி நின்றுக் கொள்ள,

“சரி சரி கோச்சிக்காத… இன்னும் ஒரே ஒரு வாய்தான்… சாப்பிட்டுடு… டேப்லட் போடணும் இல்ல” என்று நயமாக பேசி அந்தக் கடைசி வாயை ஊட்டிவிட்டு அந்த வேளைக்கான மாத்திரைகளையும் மருந்துகளையும் அவளுக்கு எடுத்து தந்தான்.

மௌனமாக அவன் கொடுத்த மாத்திரைகளை அவள் விழுங்கி முடிக்கவும் அவன் அவற்றையெல்லாம் எடுத்து வைத்து கொண்டே,

“ஆமா மது… நீ எங்க போன?” என்றுப் பேச்சுவாக்கில் கேட்டான்.

அவளுக்கு திக்கென்ற உணர்வு பற்றிக் கொள்ள, அத்தனை நேரம் அவனிடம் பதிலுக்கு பதில் வாயாடிக் கொண்டிருந்தவள் மௌன கோலம் பூண்டாள்.

“மது” என்றவன் அவள் தோள்களை அழுத்தவும்,

“ஃப்ரெண்டுக்கு ஒரு பிரச்சனை அதான்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.

 “எந்த ஃப்ரெண்டுக்கு என்ன பிரச்சனை” என்று அவன் விடாமல் கேட்க,

“எந்த ஃப்ரெண்டுக்கோ என்னவோ பிரச்சனை… எல்லாத்தையும் நான் உன்கிட்ட சொல்லியே ஆகணுமா அஜய்” என்றுக் கேட்டு அவனை எரிச்சலாகப் பார்த்தாள்.

“நீ சொல்ல கூடாதுன்னு நினைக்கும் போது நானும் கட்டாயப்படுத்தி உன்னைக் கேட்கமாட்டேன்” என்றவன் சொல்ல அவள் பதிலேதும் உரைக்கவில்லை.

‘அப்பாடா விட்டுட்டான்’ என்று அவள் பெருமூச்செறிந்த அடுத்த நொடி,

“ஆனா ஒரு விஷயம் மது… நம்ம அனன்யாவோட புருஷனைக் கொன்னவளுக்காக நீ போலிஸ் ஸ்டேஷன் போனது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றான்.

அவள் அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் விழிகள் கூர்மையாக அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தது.

அவள் தயங்கி தயங்கி, “இல்ல அஜய்… எனகென்னவோ இந்துமதி சுரேஷைக் கொலைப் பண்ணியிருப்பான்னு தோணல” என்றுச் சொல்ல, அவன் விழிகளில் அத்தனை சீற்றம்!

“அவ கொலை பண்ணாளா இல்லையான்னு எனக்கு தெரியல… ஆனா அவ அன்னைக்கு சுரேஷைக் கூட்டிட்டு ஓடிப் போக பார்த்திருக்கா… 

அந்த சுரேஷ் ரேஸ்கல் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணியிருக்கான்… அந்த இந்துமதிக்கும் அவனுக்கும்” என்றுப் பல்லைக் கடித்துக் கொண்டுக் கடுங்கோபத்தோடு அவன் சொல்லி முடிக்க, மது உறைந்து போய் நின்றுவிட்டாள்.

“என்ன அஜய் சொல்ற?” என்றவள் அதே அதிர்ச்சியோடு வினவ,

“அவ எல்லாம் ஒரு பொண்ணா மது… போயும் போயும் அவளுக்காக நீ ஸ்டேஷன் போயிருக்க பாரு” என்று முகச்சுளிப்போடு சொன்னான்.

“நான் சரோக்காகதான்” என்று மது இழுக்க,

“அவன் பொண்டாட்டி லட்சணம் என்னன்னு அவனுக்கு தெரியாதாமா?” என்று அஜய் நக்கலாக கேட்டான்.

மதுவால் எதுவும் பேச முடியவில்லை. சரவணனின் முகம் அவள் கண் முன்னே நிழலாடியது. தன் மனைவிக்காக அவன் எந்தளவு துடித்தான் என்பதை அவள் இன்று கண்ணெதிரே பார்த்தாளே!

அஜய் சொன்னது ஒருவேளை உண்மையாக இருந்தால்… அந்த உண்மையை சரவணனால் எப்படித் தாங்கிக்க முடியும். அவன் நிச்சயம் நொறுங்கிப் போககூடும்.

நண்பனுக்காகத் துடித்தது அவள் மனது. அனிச்சைச் செயலாக அவள் விழிகளிலிருந்து கண்ணீர் வழிய அஜய் பதறிப் போனான்.

“எவன் எவனுக்காகவோ நீ எதுக்கு மது இப்போ ஃபீல் பண்ணிட்டு இருக்க” என்றவன் அவள் கன்னங்களைத் தாங்கிக் கொண்டு,

“உனக்கு எந்த டென்ஷனும் இருக்க கூடாதுன்னுதான் உன்னை நான் இங்க கூட்டிட்டு வந்து விட்டேன்… நீ என்னடான்னா இங்கயும் வந்து உனக்கு தேவையில்லாத பிரச்சனையெல்லாம் இழுத்துப்போட்டுட்டு இருக்க… ப்ளீஸ் மது கண்டவங்களைப் பத்தியெல்லாம் யோசிச்சு நீ உடம்பைக் கெடுத்துக்காதே” என்றபடி அவள் கண்ணீரைத் துடைத்து நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.

அவள் உணர்வே இல்லாமல் நின்றிருந்தாள். அவளை அணைத்தபடி அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துவிட்டு, “கண்ணை மூடித் தூங்கு மது… தேவையில்லாம எதாச்சும் நீ பாட்டுக்கு யோசிட்டு இருக்காதே” என்றான். அவன் சொன்னதற்காக அவள் விழிகளை மூடிக்கொண்டாள். ஆனால் உறக்கம் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அவள் மனம் முழுக்க சரவணன் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தது. அவன் இதையெல்லாம் எப்படி எதிர்கொள்ள போகிறானோ என்று கவலையாக இருந்தது.

****

சரவணன் அந்த இரவு வேளையைப் பற்றியோ அல்லது கொட்டும் மழையை பற்றியோ கொஞ்சமும் கவலைக் கொள்ளவில்லை.

எப்படியாவது தன் மனைவியைப் பார்த்துவிட முடியாதா? என்று அந்தக் காவல் நிலைய வாசலிலேயே தவம் கிடந்தான்.

ஜெயா தம் வேலைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தவள், அங்கே சரவணனைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.

அவள் வாசலில் நின்ற காவலாளியை முறைத்து பார்க்க, “எவ்வளவோ சொன்னேன் மேடம்… கேட்கல… இன்ஸ்பெக்டரைப் பார்த்துட்டுதான் போவேன்னு பிடிவாதமா உட்கார்ந்திட்டு இருக்காரு” என்றான்.

ஜெயாவிற்கு அவனைப் பார்த்து பரிதாப உணர்வு தொற்றிக் கொள்ள, அவனருகில் சென்று நின்றாள்.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவன் இந்துவைப் பார்க்க வேண்டுமென்று செய்கையில் சொல்ல, “அதெல்லாம் கஷ்டம்… இன்ஸ்பெக்டர் கண்டிப்பா ஒத்துக்கமாட்டாரு… நீங்க கிளம்புங்க” என்றாள்.

அவன் அசைந்துக் கொடுக்கவே இல்லை. தான் பார்த்தே ஆக வேண்டுமென்பதில் பிடிவாதமாக நிற்க ஜெயாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

இதே காவல் நிலையத்தில் எத்தனையோ மோசமான கணவன்மார்களைப் பார்த்திருக்கிறாள். மனைவிகளை மதிக்காத அடித்து துன்புறுத்துகிற, ஏன் கொலையும் செய்யும் ஆண்மகன்களுக்கிடையில் தன் மனைவிக்காக இப்படிக் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நிற்கும் இவன் ஒரு ஆச்சரியம்தான்.

சரவணனைப் பார்த்து ஜெயாவின் மனம் இறங்கியது.

சாரங்கபாணி காவல் நிலையத்தில் இல்லையென்பதை யோசித்தவள், “சரி போய் பாருங்க… போயிட்டு சீக்கிரம் பார்த்துட்டு வந்திடுங்க” என்றாள். சரவணன் முகம் பிரகாசிக்க அவளிடம் பார்வையாலேயே நன்றியுரைத்தான்.

“சங்கரன்… இவரைக் கூட்டிட்டு போங்க” என்று அவனுடன் ஒரு கான்ஸ்டபிளை அனுப்பியவள், “சீக்கிரம் பார்த்துட்டு வந்துடனும்” என்று மீண்டும் அழுத்தி சொன்னாள்.

சரவணன் சம்மதமாக தலையசைத்துவிட்டு செல்ல அவள் வெளியே வந்தாள். யாருடைய கெட்ட நேரமோ?

சாரங்கபாணி வந்த வாகனம் அந்த காவல் நிலைய வாயிலில் ஜெயாவின் முன்னே வந்து நின்றது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content