You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow Kanavugal - Final

Quote

39

புயல், மழை, சூறாவளி போன்ற எதுவுமே நிரந்தரமில்லை. ஒரு வகையில் மனிதன் வாழ்கையில் கடந்து வரும் பிரச்சனைகளும் துயரங்களும் கூட அப்படிதான்!

சூரிய கதிர்கள் பிரகாசமாக ஒளிவீச தொடங்கியிருந்தது. ஓரளவாக மழை நீர் வடிந்திருந்த நிலையில் சாலை போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த மோசமான சூழ்நிலை இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம்.

காலை பத்து மணி அளவில் கமிஷனர் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் ஜெயா. அனுமதி கேட்டு அவள் அறைக்குள் செல்ல,

“நீயெல்லாம் ஏன் யா போலிஸ் வேலைக்கு வர… உனக்கெல்லாம் எவன் யா வேலை கொடுத்தது” அந்தப் பெண் கமிஷனர் சாரங்கபாணியை வெளுத்து வாங்கி கொண்டிருந்தார்.

இந்த வார்த்தைகள் யாவும் அவ்வப்போது ஜெயாவை மட்டம் தட்ட சாரங்கபாணி பேசியவை. இப்போது அது அவருக்கே திரும்பியிருந்தது. கர்மா என்பது பூமராங் போல என்று சும்மாவா சொன்னர்கள். 

தன் உதட்டின் வழியே வெளியே குதிக்க இருந்த புன்னகையை மிகவும் பிரயாத்தனப்பட்டு ஜெயா கட்டுபடுத்திக் கொண்டு இறுக்கமாக ஒரு சல்யுட் அடிக்க, அதன் பின் சுரேஷ் கொலை வழக்கு பற்றிய சில விளக்கங்களை கமிஷனர் அவளிடம் கேட்டறிந்தார்.

கூடவே அவள் முன்னமே கொடுத்திருந்த அந்த காணொளி ஆதாரம்தான் அப்போது உரக்க பேசிக்கொண்டிருந்தது.

மது ஜெயா மூலமாக செய்து முடித்த திட்டம் அது. முதலில் ஜெயாவிற்கு தயக்கமும் பயமும் இருந்தது. இருப்பினும் மது சொன்ன வார்த்தைகள் அவளை திடமாக செயல்பட வைத்தது.

“தப்பு நடக்குதேன்னு மனசுக்குள்ளேயே பொருமிக்கிட்டிருந்தா எதுவும் நடக்காது… கொஞ்சமாச்சும் அதுக்காக நாம ரிஸ்க் எடுக்கணும்… துணிஞ்சு இந்தக் காரியத்தை செய்யுங்க ஜெயா… மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.

அதன் பின் ஜெயா ஒரு சிறிய பட்டனளவிலான வீடியோ கேமராவை ஒரு பைலுக்குள் வைத்து அவருடைய அறைக்குள் பொருத்தினாள். அது மிகவும் பிரமாதமாக வேலை செய்தது.

இந்துவை மிரட்டி அவர் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிய அந்தக் காட்சி காணொளியாக பதிவாக்கப்பட்டு பல தலைமை அதிகாரகளின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே மதுவுக்கு அந்தப் பெண் கமிஷ்னருடன் நல்ல பழக்கம் இருந்தமையால் அவள் நேரடியாக இந்தப் பிரச்சனையை அவரிடமே கொண்டு சென்றுவிட்டாள்.

அதன் விளைவாகத்தான் சாரங்கபாணி இன்று வகையாக சிக்கிக்கொண்டார்.

“ஒரு சீப் கிரிமினல் மாதிரி அந்தப் பொண்ணை மிரட்டி ஸ்டேட்மென்ட் வாங்கியிருக்கீங்க” என்றுக் கோபமாக பொறிந்து தள்ளியவர்,

“ஏற்கனவே இதேபோல ஒரு கேஸ்ல சஸ்பென்சன் வரைக்கும் போய் ரீஜாயின் பண்ணி இருக்கீங்க… அப்ப கூட புத்தி வரல இல்ல… இனிமே என்னால ஒன்னும் பண்ண முடியாது… மேலிடத்தில இருந்து உடனே உங்களை வேலையிலிருந்து தூக்க சொல்லிட்டாங்க… இந்தாங்க உங்க டிஸ்மிஸ் ஆர்டர்” என்று அவர் அந்தக் காகித உரையை நீட்டிய போது சாரங்கபாணி, “மேடம் ப்ளீஸ்” என்றுக் கெஞ்சி பார்த்தும் ஒன்றும் பலனில்லை. அவருடைய பதவி பறிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. மது தான் சொன்னதை செய்துக்காட்டிவிட்டாள்.

அவர் தலையைத் தொங்க போட்டபடி அறையை விட்டு வெளியேற, அந்தப் பெண் கமிஷனர் ஜெயாவின் தைரியத்தைப் பாராட்டியதோடு நில்லாமல் அவள் தற்போது பணிபுரியும் காவல் நிலையத்திலேயே ஆய்வாளாராக பதவி உயர்வும் செய்த ஆர்டரை வழங்கினார்.

ஜெயாவின் முகத்தில் அத்தனை களிப்பு! உண்மைக்கும் நேர்மைக்கும் அங்கீகாரம் கிடைக்க தாமதமானாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அது நிச்சயம் கிடைத்தே தீரும். 

ஜெயாவிற்கு இன்று கிடைத்த பதிவு உயர்வும் கூட அப்படிதான். அந்த சந்தோஷத்தோடு வெளியே வந்தவள் துவண்டு தோற்று போன மனநிலையோடு நின்றிருந்த சார்ஙகபாணியை நெருங்கி வந்தாள்.

“ஹலோ மிஸ்டர் சாரங்கபாணி” என்றவள் எகத்தாளமாக அழைக்க,

“என்ன சொன்ன?” என்றவர் சீற, “இனிமே இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்… அதான் உன் பதிவியை உருவிட்டாங்க இல்ல… ஆனா அதோடு எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு நினைக்காதே… நீ அந்த இந்து பொண்ணுகிட்ட நடந்துகிட்ட விதத்துக்காக உன் பேர்ல தனி கேஸ் ஒன்னு பதிவு பண்ணி விசாரிக்க சொல்லி இருக்காங்க” என்றதும் அவர் முகம் வெளிறி போனது.

 “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை மட்டும் கொளுத்த கூடாது… அப்படி செய்ற உன்னை மாதிரியான ஒவ்வொருத்தனையும் உயிரோட வைச்சு கொளுத்தணும்” என்றுக் கொந்தளிப்போடு விழிகள் சிவக்க சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள். 

அன்றிலிருந்து அந்தக் கொலை வழக்கு ஜெயாவின் அதிகாரத்திற்கு உட்பட்டது. முதலில் ஜெயா அந்த வழக்கில் அஜய்தான் குற்றவாளி என்று நினைத்தாள். அதனால்தான் அன்று மதுவிடமும் அவள் அப்படி சொன்னாள்.

ஒரு வகையில் அதற்கு காரணம் அந்தக் காணொளி! சாரங்கபாணி இந்துவை மிரட்ட அஜயைக் குற்றவாளி என்று சொல்லியிருந்தார். 

 ஆனால் அந்த வழக்கு அனு கொடுத்த வாக்குமூலம் மூலமாக முற்றிலுமாக வேறு திசையில் திரும்பியிருந்தது. அன்று இரவு வீடியோ கால் மூலமாக மது அஜயிடம் பேசியதைக் கேட்ட அனு சீற்றமாக தன் உடன் பிரிந்தவனைப் போட்டு உலுக்கி எடுத்தாள்.

“ஏன் டா சுரேஷை… கொலை பண்ண?” என்றவள் ஆக்ரோஷமாக கேட்க,

“நான் ஒன்னும் சுரேஷைக் கொலை பண்ணல” என்றவன்,

“நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீதான்டி காரணம்… எல்லாம் உன்னலா தான்டி” என்று அவன் அனைத்து உண்மைகளையும் தன் சகோதரியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டான்.

தன் தந்தையின் தவறான புரிதலில் ஏற்பட்டது சுரேஷுடைய மரணம். அதில் அவரையும் குற்றம் சொல்ல இயலாது. தான் சொன்ன பொய்யின் விளைவுதான் இதெல்லாம் என்று உணர்ந்த அனுவிற்கு மனம் கனத்து போனது.

அதுவரையில் சுரேஷ் வாழ்க்கையை அழித்துவிட்டோம் என்ற குற்றவுணர்வில் தவித்தவளுக்கு அஜய் சொன்ன உண்மையின் மூலம் அவள் செய்த தவறுகளின் தீவிரம் உரைத்திருந்தது.

தன் தந்தையின் கோபம் சுரேஷின் மரணம் இரண்டுக்குமே தான் மட்டும்தான் காரணம் என்ற முடிவுக்கு வந்தவள் அந்த நொடியே தாமதிக்காமல் சுரேஷ் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்துவிட்டாள்.

அஜய் எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை.

“இல்ல அஜய்… நான் இந்தக் குற்றத்தை ஒத்துகிட்டு தண்டனையை அனுபவிக்கிறதுதான் சரி… நீ சொன்ன மாதிரி நடந்த எல்லா பிரச்சனைக்கும் மூலகாரணம் நான்தான்… நான்தான் அதுக்கான தண்டனையை அனுபவிக்கனும்… அதுதான் சரியாக இருக்கும்” என்று பிடிவாதமாக நின்றவள் இறுதியாக கண்ணீர் மல்க அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு,

“அருணைப் பார்த்துக்கோ அஜய்… எனக்கு நம்பிக்கை இருக்கு… நீயும் மதுவும் அவனை நல்லா பார்த்துப்பீங்க” என்று சொன்ன சகோதிரியிடம், “பார்த்துக்கிறேன் அனு” என்றபடி அவளை அணைத்துக் கொண்ட அவன் விழிகளிலும் கண்ணீர் கசிந்தது.

என்னதான் அனு மீது கோபம் இருந்தாலும் சகோதிரி என்ற பாசம் விட்டுபோய்விடுமா என்ன? இருவருக்கும் இடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் கோபங்கள் இருந்தாலும் என்றுமே அவளை அவனால் விட்டுக்கொடுக்க முடியாது

இது ஒரு புறமிருக்க மகள் சுரேஷ் கொலை வழக்கில் சரணடைந்ததாக கேள்விபட்ட பாஸ்கரனுக்கு ஒன்றும் புரியவில்லை. உண்மையில் அவருக்கு அப்போதும் தான்தான் அந்தக்கொலைக்கு காரணம் என்று தெரியாது.

சுரேஷ் செய்த தவறுக்காகதான் மகள் இந்தக் கொலை செய்திருக்க கூடும் என்று உண்மை தெரியாமல் மகளுக்காக பேசிய தன் கணவனிடம் அதற்கு மேலாக ரேவதி எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை.

மகளைப் பற்றி அனைத்து உண்மைகளையும் அவர் சொன்ன மறுகணமே பாஸ்கரன் நொறுங்கி போயிருந்தார். இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அவர் உயிரை காப்பாற்றியிருந்தாலும் தன் மகளைப் பற்றிய கசப்பான பின்னணி அவரை உயிரோடுக் கொன்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

அன்று சுரேஷிடம் தான் கோபம் கொண்டதில் எந்த நியாமுமில்லை என்று அவருக்கு அப்போதே புரிந்தது. ஒரு தந்தையாக தான் தோற்றுவிட்டதாக பாஸ்கரன் உடைந்து போனார்.

உண்மையில் இதில் பாஸ்கரன் மீதும் எந்த தவறுமில்லை.

இங்கே ஒரு குழந்தைக் கெட்டு போவது பெற்றோர்கள் மட்டுமே காரணம் இல்லை. சுற்றத்தார் சமூகம் சினிமா என்றுக் கெட்டு சீரழிய நிறைய காரணிகள் நம் அன்றாட வாழ்க்கை முறைகளில் நம்மோடு பயணித்து கொண்டிருக்க, இனி வரும் சந்ததிகள் நல்லொழுக்கத்தோடு வளர்வதும் வளர்ப்பதும் மிக பெரிய சவால்தான்.

அதேநேரம் அனன்யா செய்தவற்றை நியாயப்படுத்திவிடவும் முடியாது. அவளுக்கு கிடைத்த சுதந்திரத்தையும் வசதி வாய்ப்பையும் அவள் தவறாக பயன்படுத்திக் கொண்டதன் விளைவுதான் ஒரு உயிர் அனாவசியமாக மடிந்து போனதற்கு காரணம்.

அனு தன் தவறை உணர்ந்து திருந்தி அந்தத் தண்டனையை ஏற்க முன் வந்திருந்தாலும் பாஸ்கரனும் ரேவதியும் மகளை இனி மன்னிப்பார்களா என்பது காலத்தின் கையில்தான் இருக்கிறது.

அவர்கள் மன்னிக்காவிடிலும் மது அனுவை அப்படியே விட்டுவிடவில்லை. தன்னுடைய வக்கீல் நண்பர்கள் மூலமாக அவளின் தண்டனை காலத்தைக் குறைக்க முடிந்தளவு முயன்றுக் கொண்டிருந்தாள்.

“வேண்டாம் மது… விட்டுடு… எனக்கு என்ன தண்டனை கிடைச்சாலும் நான் அதை ஏத்துகிறேன்” என்று அனு மறுக்க,

“இதை நான் உங்களுக்காக செய்யல… நம்ம அருணுக்காக செய்றேன்… ஒரு குழந்தைக்கு எத்தனை உறவு இருந்தாலும் அம்மாங்கிற உறவுதான் முதல” என்றாள்.

“ஆனா அவனுக்கும் நான் ஒரு நல்ல அம்மாவா இல்ல” என்று வருத்தப்பட்ட அனுவிடம், “நடந்து முடிஞ்சது எல்லாம் விடுங்க அனு… இனிமே நடக்க போறதை மட்டும் யோசிப்போம்” என்று நம்பிக்கை தந்தாள்.

அதற்கேற்றார் போல அனுவுக்கு கிடைத்த இரண்டு வருட கடுங்காவல் தண்டனையை தன் வாதத்திறமையால் ஓராண்டாக குறைத்திருந்தாள்.

இப்படியே ஐந்து மாதகாலம் கழிந்து போனது.

அன்றுதான் மது தன் அம்மா வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்குத் திரும்பினாள். பேரனும் பேத்தியும் வீட்டிற்கு வந்ததில் பாஸ்காரனும் ரேவதியும் அளவிட முடியாத சந்தோஷத்திலிருந்தனர். அருணும் கூட குதூகலிக்கத் தொடங்கினான்.

அவர்களின் சந்தோஷத்தைப் பார்த்து மதுவும் முகமெல்லாம் புன்னகையாக நின்றிருக்க, அப்போது அஜய் அவள் கரம் பற்றி வீட்டிற்கு வெளியே அழைத்துவர அவள் தன் கரத்தை உதறிக் கொண்டு எரிச்சலும் கோபமுமாக அவனை முறைத்துப் பார்த்தாள்.

இன்று வரை அவள் அவனை மன்னிக்கவே இல்லை. மன்னிக்கவும் விழையவில்லை. அவன் மறைத்த விஷயங்கள் ஒன்றா இரண்டா? 

வீட்டிலுள்ளவர்கள் முன்னிலையில் அவள் சகஜமாக பேசினாலும் தனிமையில் அவள் அவனிடம் பேசுவதில்லை என்றுப் பிடிவாதமாக இருந்தாள். எவ்வளவோ அவளிடம் இறங்கி அவன் கெஞ்சி பார்த்தும் அவள் இறங்கி வருவதாக இல்லை.

ஒரு நிலைக்கு மேல் அவனும் அவளாக சமாதானமாகட்டும் என்று அமைதியாக இருந்ததில் இருவரின் உறவும் இந்த ஐந்து மாதகாலமாக ஏதோ பெயரளவில் இருந்தது. அவ்வளவுதான்.

ஆனால் அன்று அவன் வலுக்கட்டாயமாக அவள் கரத்தைப் பற்றி தனியாக அழைத்து வரவும் அவள் கோபம் மீண்டும் தலையெடுக்க அவனோ அமைதியாக,

“நீ என்கிட்ட பேச வேண்டாம்… ஆனா நான் உனக்காக வைச்சு இருக்க சர்பரைஸ் மட்டும் பாரு” என்றுச் சொல்லி வீட்டிற்கு அருகில் அமைத்திருந்த அந்த தனி அறைக்கு அழைத்து சென்றான்.

அந்த அறையின் வாயிலில் ‘மதுபாலா பி எ பி எல்’ என்று பொன்னிறத்தில் பொறிக்கப்பட்டிருக்க, அவள் விழிகள் வியப்பில் விரிந்தன.

அஜயை அவள் திரும்பி குழப்பமாகப் பார்க்க அவன் அவளை அறைக்குள் அழைத்து சென்றான். அழகாகவும் நேர்த்தியாகவும் அமைக்கப்ப்பட்டிருந்த அந்த அலுவலக அறையினுள் அவளுக்கென ஒரு கம்பீரமான இருக்கையும் கூடவே அதன் அருகிலிருந்த மேஜையின் மீதிருந்த பலகையில் அவள் பெயரும் பட்டமும் புது பொலிவோடு மிளிர்ந்தன.

அந்த நொடி தன் கணவன் முகத்தை வாஞ்சையாக பார்க்க அவன் மெல்லிய புன்னகையோடு, “என்ன இருந்தாலும் உன்னோட ஃபர்ஸ்ட் அன் ஃபோர் மோஸ்ட் லவ் உன்னோட வேலைதானே… நான் அதை உன்கிட்ட இருந்து பறிச்சிருக்கக் கூடாது… தப்பு பண்ணிட்டேன்… பெரிய தப்பு” என்றவன் அவள் கரங்களை தம் கரங்களுக்குள் பிணைத்து கொண்டு,

“உன் லவ்வை நான் உனக்குத் திருப்பி தந்துட்டேன்… அதேபோல நீயும் என் லவ்வைத் திருப்பி தந்துடு மது… ப்ளீஸ்” என்று சொன்ன நொடி அவள் விழிகளில் நீர் கசிந்தது. அதற்கு மேலும் அவளால் தன் கோபத்தை இழுத்து பிடித்திருக்க முடியவில்லை.

அவன் சொற்களில் நெகிழ்ந்து கரைந்து போனவள், “அஜய்” என்று தன்னவனை இறுக்கமாக அணைத்து கொண்டு, “நீதான்டா என்னோட ஒன் அன் ஒன்லி லவ்… எவ்வளவு கோபமும் வருத்தமும் இருந்தாலும் உன்னை என்னால வெறுக்கவோ பிரிஞ்சி இருக்கவோ முடியாது” என்றாள்.

அவன் விழிகளிலும் நீர் கசிந்துருகியது. அவர்கள் கொண்ட ஊடல் ஓர் அழகான புரிதலோடு மீண்டும் காதலாக மலர்ந்தது. அவளை முத்தத்தால் மூழ்கடித்து இறுதியாக அவள் இதழுக்குள் குடிபுகுந்து முத்தெடுக்க முனைந்து அவளை மூச்சு திணற வைத்தான் அவளின் காதல் தீவிரவாதி!

40

‘தவமின்றி கிடைத்த வரமே!

இனி வாழ்வில் எல்லாம் சுகமே!’

பசுமையான அந்த கிராமபுறச் சாலையில் சென்று கொண்டிருந்தப் பேருந்தின் ஒலிப்பெருக்கியிலிருந்து மிதமாக ஒலித்தது அந்தப் பாடல்!

வழி முழுதும் மரங்கள் தூண்களைப் போல நின்றிருக்க, இயற்கையோடும் இசையோடும் பயணித்து செல்வதே ஓர் அலாதியான சுகம்தான்.

 அந்தச் சுகத்தில் வெகுவாக லயித்திருந்த இந்துமதி தன் பிறந்த ஊரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வகையில் அனைத்து பிரச்சனைகளும் தணிந்து ஓரளவு இலகுவான சூழ்நிலை உருவாகியிருந்தது. இந்து மதுவுக்கு பிரசவம் பார்த்த அந்த சம்பவத்திற்கு பிறகு துர்காவும் இந்துவின் மீது கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை முழுவதுமாக மாற்றிக் கொண்டுவிட்டார் அவளிடம் இயல்பாக பழகினார்.

அதேசமயம் அந்தச் செய்தி அவர்கள் தெரு முழுக்க பரவியதோடு அல்லாமல் அது சமூகவலை தளங்களிலும் பிரபலமாக பேசப்பட்டு செய்திதாளிலும் பிரசுரமாகியிருந்தது.

அவளை வாயிற்கு வந்தபடி அவதூறாக பேசிய அவளின் ஊர்மக்களும் கூட ‘இந்து எங்க ஊரு பொண்ணு’ என்றுப் பெருமை பேசுமளவுக்காய் அந்த நிகழ்வு பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் உண்டாக்கியிருந்தது.

செல்விக்கும் மகளை எண்ணி பெருமைத் தாங்கவில்லை. அன்றிலிருந்து மகளை ஊருக்கு வர சொல்லி அழைத்திருந்த போதும் சரவணனுக்கும் இந்துவுக்கும் இன்றுதான் அதற்கான சந்தர்ப்பமே வாய்த்தது.

அந்தப் பேருந்து இந்துவின் ஊர் நிறுத்தத்தில் நின்றதும் இருவரும் இறங்க, அவர்களுக்காக இந்துமதியின் அண்ணன் இசக்கியப்பன் காத்திருந்தான்.

“வாம்மா இந்து… வாங்க மச்சான்” என்று அழைத்தபடி அவர்கள் பையை வாங்கிக் கொள்ள, இந்துவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

நகையை எடுத்த விஷயத்தை அவள் தந்தை தாயிடம் சொல்லும்படி சரவணன் தெரிவித்திருந்தான். அவளும் இனி எதையும் மறைக்க வேண்டாமென அனைத்து உண்மையையும் தன் பெற்றோரிடம் சொல்லி அந்த நகைகளை அவர்களிடமே திருப்பியும் கொடுத்தாள்.

அவளின் பெற்றோருக்கு இந்துவின் செயலில் நிறைய கோபமும் வருத்தங்களும் ஏற்பட்ட போதும் சரவணன் இருப்பக்கமும் நின்று சுமூகமாக அந்தப் பிரச்சனையை முடித்து வைத்தான். அதோடு அல்லாமல் அவன் முயற்சி எடுத்து இசக்கியப்பனைத் தேடி கண்டுப்பிடித்து குடிப்பழக்கத்திலிருந்து மீட்கும் ஓர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் சேர்த்திருந்தான்.

ஏற்கனவே குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டிருந்த இசக்கியப்பன் மனதளவிலும் உடலளவிலும் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தான். ஒதுங்க ஒரு இடம் கூட இல்லாமல் பசி பட்டினி என்றுக் கிடந்தவனுக்கு திருத்தி கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பாகவே அந்த இடமும் சூழலும் அமைந்ததில் அவன் விரைவாக குடிப் பழக்கத்திலிருந்து மீண்டு ஒரு புதிய மனிதனாக மாறியிருந்தான்.

“ரொம்ப நன்றி மச்சான்” என்று வீடு வரும் வரை அவன் சரவணனிடம் நன்றியுரைத்துக் கொண்டு வந்ததைப் பார்க்க இந்துவிற்கு ஒருபக்கம் பூரித்து போனது என்றால் இன்னொரு பக்கம் தன் தமையன் இயல்பாக பேசுவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தது.

மேலும் அவர்களின் வருகையால் ஊரிலும் சரி. வீட்டிலும் சரி. தடபுடலான வரவேற்பு விருந்து என்று அன்றைய நாள் முழுவதும் அதகளப்பட்டது. இந்துமதிக்கு பறக்காத குறைதான். இத்தனை சந்தோஷமாக அவள் என்றுமே இருந்ததில்லை.

அதே பூரிப்பு உணர்வோடு இந்துமதி தன் தாயிடம் பேசினாள்.

 “அண்ணே! ரொம்ப மாறிடுச்சு இல்ல மா” என்று அவள் சொல்லவும்,

“ம்ம்ம் ஆமா இந்துமா… ஒரு வகையில் எல்லாத்துக்கும் மாப்பிளைதான் காரணம்… வெள்ளம் வந்ததுல அவருக்கு எவ்வளவோ நஷ்டம்… அப்ப கூட… நிலத்தை மீட்க மாப்பிளை நகையோட சேர்த்து பணமும் கொடுத்து உதவனதாலதான் இன்னிக்கு நாங்க நிம்மதியா இருக்கும்… அப்புறம்… இசக்கி அப்பா கூட நிலத்துக்கு போய் வேலைப் பார்க்கிறான்… இன்னும் கேட்டா இப்போ அவன்தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறான்… அதுவுமில்லாம இந்த வருஷம் நல்ல மழைனால விளைச்சலும் அமோகமா இருக்கு” என்று சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்தாள்.

“அப்படியே” என்று இழுத்த செல்வி, “உனக்கும் ஒரு புள்ளைப் பொறுந்துட்டா” என்றவர் நிறுத்த இந்துவின் முகம் மாறியது.

ஒரு எள்ளல் பார்வையோடு அவரை ஏறிட்டவள், “அது எப்படி இந்த மனுஷ மனசு எம்புட்டு நல்லது நடந்தாலும் கவலை பட எதாச்சும் ஒரு குறையைத் தேடி கண்டுபிடிச்சுக்குது” என்றுச் சொன்னதைக் கேட்டு, “அப்படி இல்லடி” என்று ஏதோ பேச வந்த தன் தாயைக் கைமர்த்திவிட்டு அவளே தொடர்ந்தாள்.

“உனக்கு தெரியாதா ம்மா? இந்த அஞ்சு மாசமா நிறைய பிரச்சனை… கூடவே வெள்ளம் வந்ததுல மாமா கடையில இருந்த பொருளெல்லாம் நாசமா போச்சு… அதுல இருந்து இப்பதான் மாமா கொஞ்சம் மீண்டு வந்திருக்காக… இந்த மாதிரி நேரத்தில குழந்தையைப் பத்தி எல்லாம் யோசிக்க எங்களால முடியல… நாம நினைக்காமலே இவ்வளவு நல்லது நடத்திருக்கும்போது அதுவும் நடக்கும்

எப்போ எப்படி நடக்கணுமோ அப்படி நடக்கும்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்று மன முதிர்ச்சியோடு பேசிய மகளை ஆச்சர்யமாகப் பார்த்தார் அவர். 

அன்று இரவு உணவு முடிந்த பின் இந்து கணவனை காணாமல் தேட, அவன் கைப்பேசியை வைத்து கொண்டு பின்வாசலில் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள்.

அவன் அருகில் சென்று அமர்ந்தவள் அவன் முகத்தில் ஒளிர்ந்த புன்னகையைப் பார்த்து செய்கையில் என்னவென்று விசாரிக்க, அவன் மது அனுப்பிய குறுந்தகவலைக் காண்பித்தான். அவள் முகத்திலும் புன்னகை அரும்பியது.

அதோடு இயல்பைவிடவும் அதிகமாக அவள் முகத்தில் தெரிந்த பிரகாசத்தைப் பார்த்து என்னவென்று விசாரிக்க, அவள் அவன் கரத்தைப் பற்றிப்பின்னோடு அழைத்து சென்றாள்.

பின்கட்டு வீட்டின் அருகே ஓங்கி வளர்ந்திருந்த அரசமரத்திற்கு அடியில் சென்று நின்று அவன் முகத்தை அவள் பார்க்க, அவள் கண்கள் சொல்லும் செய்தியை அவனால் அறிந்து கொள்ள முடியாதா?

அதே மரத்திற்கடியில் அவளைக் கண்ணீரோடுப் பார்த்த அந்த நாள் அவன் கண் முன்னே நிழலாடியது.

தன் வேதனைகளுக்கும் வலிகளுக்கும் யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா என்றவள் ஏங்கி தவித்த நாட்கள்!

ஆறுதல் சொல்ல முடியாவிட்டாலும் அந்த மரம்தான் அவள் உணர்வுகளையும் அவள் அழுகையையும் தாங்கிகொண்டது.

தற்போது அந்த மரத்தின் மீது சாய்ந்தபடி அவனையே பார்த்திருந்த அவள் விழிகளில் கண்ணீர் இல்லை. காதலும் அபிரிமிதமான நன்றியுணர்வும் தளும்பி நின்றது.

இரவோடும் நிலவோடும் அரச மரத்தில் வீசும் தென்றல் காற்றோடும் சேர்த்து காதலோடு அவன் விழிகளுக்குள் கலந்த அவள் பார்வை அவனைக் கட்டி இழுக்க, அவளை நெருங்கி வளைத்திருந்தன அவன் கரங்கள்.

மௌனமாக பேசின அவர்களின் இதழ்கள்!

இரவு பகலுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அவள் வானவில்லைப் பார்த்த தருணம் அது! அழகான காதல் வானவில்… தம் அகக்கண்களில் அதனை ரசித்தவளின் செவிகளில் மெல்லிய தென்றல் காற்றோடு அவளுக்காக… அவளுக்கு மட்டுமே ஒலித்தது அந்த இன்னிசை கானம்!

தவமின்றி கிடைத்த வரமே!

இனி வாழ்வில் எல்லாம் சுகமே!

Quote

Nice story 👍

You cannot copy content