You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 58

Quote

58

லெனின் நந்தினியின் புரிதலும் பிணைப்பும் மிகவும் விசித்திரமானது. இருவரில் யாராவது ஒருவர் ஒரு திட்டத்தை சொல்லுவார்கள். அந்த திட்டத்தில் இருவருக்குமே சம்மதமானால் அதனை செயல்படுத்துவார்கள். அல்லாது விட்டுவிடுவார்கள். இதுதான் அவர்களின் வழக்கம்.

ஆனால் அந்த திட்டத்தை எதற்காக செயல்படுத்த வேண்டும் என்ற காரணகாரியம் பற்றி இருவருமே விவாதிக்க மாட்டார்கள். ஏனெனில் இருவருக்குமே அந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அவரவர்களுக்கான தனிப்பட்ட காரணங்கள் இருக்கும்.

ஒரு வகையில் அறிவழகன் கடத்தல் விஷயமும் அப்படித்தான். அறிவழகனை கடத்த வேண்டுமென்று திட்டத்தை லெனின்தான் முதலில் சொன்னான். அது அவனுடைய பல வருடலட்சியம். நந்தினி அந்த கடத்தலில் தனக்கான சாதக பாதகங்களை யோசித்து அவளும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தாள். ஆனால் இருவரின் எண்ணங்களும் வேறு.

லெனின் தீபம் கட்சியை நிர்மூலமாக்க வேண்டுமென்று எண்ணியிருந்தான். ஆனால் நந்தினி தீபம் கட்சியின் மூலமாகவே பாரதியை முதலமைச்சராக்கிவிட வேண்டுமென்று எண்ணினாள்.

“அப்போ நீ அறிவழகன் சாரை கடத்த ஒத்துக்கினது பாரதியை சிஎம் ஆக்கணும்கிற எண்ணத்தில்தான் இல்ல?” என்று லெனின் இத்தனை வருடங்கள் கழித்து நந்தினியிடம் இந்த கேள்வியை கேட்க,

“ஆமா… அறிவழகன் மாமா கடத்தல் மக்களுக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்தும்… சரியா அதேசமயத்துல முகுந்தனை ஊழல் வழக்கில மாட்டிவிட்டு உள்ளே தள்ளிட்டா கட்சிக்குள்ள குழப்பம் உண்டாகும்… அதை நமக்கு சாதகமா பயன்படுத்தி பாரதியை அந்த இடத்துக்கு கொண்டு வரணும்னு நினைச்சேன்… ஆனா அதுக்குள்ளே எல்லாமே சொதப்பலாகிடுச்சு” என்று நந்தினி சொல்ல லெனின் வியப்பானான்.

அவன் திட்டமோ முற்றிலும் அதற்கு நேர்மார். இந்த கடத்தலின் மூலம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டு தீபம் கட்சி உடைய வேண்டுமென்று எண்ணினான். அந்தளவு அவனுக்கு அந்த கட்சியின் மீது வெறுப்பும் கோபமும் இருந்தது.

லெனினின் யோசனையுடன் அமர்ந்திருப்பதை பார்த்த நந்தினி, “அந்த டைம்ல நான் பாரதி சி எம் ஆக்கதான் இந்த திட்டத்தை நடத்த சம்மதிச்சன்னு சொன்னா நீ நிச்சயம் ஒத்துக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் லெனின்” என்று சொல்ல,

“கண்டிப்பா ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டேன்… திரும்ப திரும்ப இந்த வாரிசு அரசியல் தமிழ்நாட்டையே சீரழிக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை… ஆனா இப்போ அப்படி இல்ல… இந்த ஆறு வருஷத்துல பாரதியோட நல்ல குணத்தை பார்த்து நான் நிறையவே பிரமிச்சிருக்கேன்… நம்ம சுத்தி இருக்கவங்க மேல அன்பு பாசமும் காட்டிறதும் அவங்களை அக்கறையா பாத்துக்கிறதும்… அவங்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் போறதும்னு பாரதி அப்படியொரு நல்லவன்… அதேபோல யாரு என்னன்னு யோசிக்காம அவங்களுக்கு பிரதி உபாகாரம் எதிர்பார்க்காம உதவிறதும்… பணம் காசு மேல கொஞ்சமும் பற்றுதல் இல்லாத குணமும்…  நிச்சயமா பாரதிக்கு முதலமைச்சராக கூடிய எல்லாம் தகுதியும் இருக்கு” என்று லெனின் சொல்ல பாரதி இடைபுகுந்து, “கண்டிப்பா இல்லை” என்று கத்தினான்.

இத்தனை நேரம் இவர்கள் இருவரின் விவாதத்தை கேட்டு உச்சமாக கடுப்பானவன் நந்தினியிடம் திரும்பி, “தேர்தல் விதிமுறைப்படி கொலை குற்றம் செஞ்சு ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கைதிக்கு தேர்தலில் நிற்குறதுக்கான தகுதியே கிடையாது…” என்று அழுத்தமாக கூற,

“எனக்கும் தெரியும் பாரதி… ஆனால் தேர்தலில் நிற்க போறது பாரதி இல்ல அருள்பாரதி” என்றவள் மிக சாதாரணமாக கூற, பாரதி அதிர்வாக பார்த்து,

“அப்படின்னா நான் ஒரு கொலை குற்றாவாளிங்குறதை மறைக்கணும்னு சொல்லறியா?” என்று அவளை கேட்டான்.

“நீ கொலையே பண்ணலன்னு நான் சொல்றேன்… அப்புறம் எப்படி நீ அதை மறைக்கிறதாகும்… எல்லாம் அந்த முகுந்தனோட திட்டம்… அவன் ப்ளேன் பண்ணி உன்னை அப்படியொரு சிட்டுவேஷன்ல சிக்க வைச்சு இருக்கான்” என்றவள் திருத்தமாக கூற,

“நீ சொல்றது சரின்னே வைச்சுபோம்… ஆனா நான் ஜெயிலுக்கு போனதுக்கான ரெகார்ட்ஸ் இருக்குதானே” என்றான் அவன்.  

“நம்ம நாட்டுல எல்லாத்துக்கும் ரெகார்ட்ஸ் இருக்கும்… ஆனா அதெல்லாம் எங்க இருக்கும் எதுல இருக்கும்னு யாருக்கும் தெரியாது… காசு இருந்தா போதும்… நம்ம நாட்டுல புது பாஸ்போர்ட் புது வோட்ரஸ் ஐடி புது ரேஷன் கார்டுன்னு எல்லாத்தையும் வாங்கி உனக்கான புது அடையாளத்தை உருவாக்கலாம்” என்றவள் சொல்ல பாரதி அவளை ஆழமாக பார்த்தான்.

“இதெல்லாம் சாத்தியமான்னுதான்னே பார்க்குற… அப்படி சாத்தியமில்லன்னா துர்கா இப்போ சிஎம் சீட்டுல உட்கார்ந்திருக்கவே முடியாதே” என்று கூற, பாரதிக்கு ஏனோ அவள் சொல்வதில் துளியும் உடன்பாடில்லை.

பொய்யும் புரட்டும் சொல்லி ஒரு பதவியை அடைவது எந்தவிதத்திலும் சரியாக இருக்க முடியாது. தானும் அதே பொய்யை சொல்லி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றால் பின் அந்த அரசியல் கொள்ளை கூட்டத்திற்கும் தனக்கும் என்ன வித்தியாசம்!

இது எல்லாவற்றிருக்கும் மேல அவன் விரும்பாத அருள்பாரதி என்ற அடையாளத்துடன் வாழ்நாள் முழுக்க வாழ்வதுதான். இதே அடையாளத்தை அவன் ஏற்று கொள்ளவதாக இருந்தால் அவன் பத்து வருட காலத்தை சிறையில் வாழ்ந்திருக்கவே மாட்டானே!

தன் தந்தையின் தயவில் இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டு அவன் விடுதலை பெற்றிருக்க முடியுமே! ஆனால் அவன் அதை விரும்பவுமில்லை. ஏற்கவுமில்லை. 

ஆனால் நந்தினிக்கும் லெனினுக்கும் இந்த பொய்கள் எல்லாம் மிகவும் சாதாரணமான விஷயமாக இருந்தது. அவர்கள் பாரதியின் அப்போதைய  மனநிலையை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. அவர்கள் நினைப்பது போல நடந்துவிட்டால் அரசியலில் பெரிய மாற்றம் நிகழும் என்று உறுதியாக நம்பினர்.

லெனினும் அதே சிந்தனையுடன், “நீ சொல்றதை எல்லாம் செய்யணும்னா பணமும் பவரும் வேணும் நந்தினி” என்றான்.  

“முடியும்… பணமும் பவரும் இருக்கிறவங்களை நம்ம சொல்றபடி எல்லாம் ஆட்டி வைச்சா முடியும்” என்று அவள் சொல்ல, அந்த வாக்கியத்தின் சூட்சமத்தை லெனின் மட்டுமே அறிவான்.

“ஆனா இதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு லெனின்… எனக்கிட்ட அறிவு மாமாவும் பாரதியும் ஒண்ணா இருந்த நிறைய போட்டோஸ் இருந்துச்சு… இப்போ அது எதுவும் இல்ல” என்றவள் கவலையுடன் கூற, லெனின் மூளையில் அப்போது ஒரு யோசனை உதித்தது.

“நேத்து நான் மாலதின்னு ஒரு பொண்ணை பார்த்தேன்… அவகிட்ட பாரதியும் வித்யாம்மாவும் இருக்க போட்டோஸ் இருந்துச்சு” என்று கூற,

“ஆமா யார் அந்த மாலதி? அவகிட்ட எப்படி அந்த போட்டோஸ் எல்லாம்” என்று நந்தினி யோசனையுடன் வினவ, லெனின் அவளை பற்றிய விவரங்களை கூறிவிட்டு மாலதியின் திட்டத்தை பற்றியும் கூறினான்.

“மாலதி அந்த துர்கா மேல செம கோபத்துல இருக்கா… அவகிட்ட பாரதியோட பழைய போட்டோஸ்… அப்புறம் நிறைய நியுஸ் பேப்பர் கட்டிங்க்ஸ் இருக்கு… அதுல துர்காவும் இருக்கா… துர்காவை ஆசிரமத்துல இருந்து பாரதி காப்பாத்தின போது வந்த நியூஸ்.. அப்புறம் பாரதி சங்கரை கொலை செஞ்ச இன்ஸிடென்ட்… இதெல்லாமே

இந்த ஆதாரத்தை எல்லாம் வைச்சு ‘மறைக்கப்பட்ட உண்மைகள்’ அபப்டின்னு டிவில ஒரு நிகழ்ச்சி வருது… அதுல பாரதி பேசி மக்களுக்கு துர்காவோட உண்மையான முகமூடியை கிழிக்கணும்னு சொன்னா

எனக்கும் அப்படி செஞ்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு… ஒரு வேளை இந்த நிகழ்ச்சில நமக்கு ஆதரவா சேஷாத்திரியும் மதியழகியும் கூட நம்ம பக்கம் பேசுனா மக்களை நம்ப வைச்சுரலாம்… துர்கா ஒரு போலின்னு புரிய வைச்சுடலாம்” 

“இது பெரிய ரிஸ்க் லெனின்… மீடியாவை எல்லாம் நம்பவே முடியாது… அவங்க எப்பவுமே ஆளுங்கட்சி பக்கம்தான் நிற்பாங்க” என்றாள் நந்தினி.

“சென்செஷனலுக்காகவாவது அவங்க இந்த மாதிரி நியூஸ் போடுவாங்க இல்ல”

“நீ புரியாம பேசுற லெனின்… அவங்களுக்கு தேவை உண்மையான சென்ஸஷனல நியூஸ் எல்லாம் கிடையாது… சும்மா அந்த நேரத்துக்கான பரபரப்பு… கிளுகிளுப்பு அவ்வளவுதான்” என்றவள் மேலும்,

“அந்த பொண்ணோட நம்பர் உன்கிட்ட இருக்கா?” என்று கேட்டாள்.

“இருக்கு… வாங்கி வைச்சி இருக்கேன்”

“முதல அந்த பொண்ணுக்கு ஃபோன் பண்ணி டிவி சேனல்கிட்ட இந்த மாதிரியான ஆதாரத்தை கொடுக்க வேண்டாம்னு சொல்லு” என்றாள். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாகிவிட்டது.

கண்ணனும் மாலதியும் அந்த டிவி சேனல் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்களுடன் படித்த சாலமன் இப்போது அந்த அலுவலகத்தில்தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறான்.

அதுவும் அவன் ‘மறைக்க்கபட்ட உண்மைகள்’ நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக இருக்கிறான். அவர்கள் அவனை பார்த்துவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டனர்.

“சாலமன் இங்கே வேலை பார்க்கிறான்னு உனக்கு எப்படி மாலு தெரியும்” என்று கண்ணன் கேட்க,

“பேஸ்புக் ல தான்… அவனை திருச்சில இருக்கும் போதே கான்டேக்ட் பண்ணி பேசுனேன்… அவனுக்கு நான் வைச்சு இருந்த போட்டோஸ் எல்லாம் வாட்ஸ்அப்ல அனுப்பினேன்… அவன்  ஷாக்காயிட்டான்… உடனே எல்லாத்தையும் எடுத்துட்டு வா… அவன் ஹெட் கிட்ட பேசலாம்னு சொன்னான்…

இது ரொம்ப பெரிய சென்ஸஷனல் நியூஸாக போகுது… நீ பார்த்துக்கிட்டே இரு” என்றவள் ஏதோ சாதித்துவிட்ட உணர்வில் கூறினாள்.

கண்ணன் முகத்தில் தெளிவே இல்லை. அவன் மனதிற்குள் ஏதோ நெருடி கொண்டேயிருந்தது.

“என்ன கண்ணா? ஒரு மாதிரி ஆகிட்ட”

“இல்ல மாலு… நீ எதுக்கும் பாரதி சார்கிட்ட பேசிட்டு அப்புறமா    வந்து சேனலில் நீ பேசியிருக்கலாம்னு தோணுது”

“கரெக்ட்தான்… சாலமன்தான் உடனே வர சொன்னான்… இன்னைக்குதான் அவங்க ஹெட் ஃப்ரீயா இருப்பார்னு கூப்பிட்டான்” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போது ஆட்டோ இடையில் நின்றது. வழியில் நிறைய காவலர்கள் நின்றிருந்தனர்.

“என்னாச்சு? ஏன் இவ்வளவு போலிஸ் நிற்குது” என்று கண்ணன் ஆட்டோகாரரிடம் கேட்க,

 “எலெக்ஷன் டேட் அறிவிச்சிட்டாங்க இல்ல… இனிமே இப்படித்தான்… அங்க அங்க நிறுத்தி செக் பண்ணிட்டு இருப்பானுங்க… பணம் எடுத்துட்டு போறவனை எல்லாம் விட்டுருவானுங்க… நம்ம பொழைப்பை கெடுப்பாங்க” என்றவர் தன் வயிற்றெரிச்சலை சொல்லி கொண்டிருக்கும் போதே ஒரு காவலர் அவர்கள் ஆட்டோவை நெருங்கி வந்து கண்ணன் மாலதி இருவரின் பையையும் திறக்க சொன்னார்.

மாலதி தன் பையை திறந்ததும் அந்த காவலர் அவளை அதிர்ச்சியாக பார்த்து,

“என்னம்மா இது?” என்று மிரட்டலாக கேட்க,

“எனக்கு தெரியல சார்” என்றவள் குழப்பமாக அதனை பார்க்கும் போதே அந்த காவலர் அவள் பையிலிருந்த பொட்டலத்தை வெளியே எடுத்து முகர்ந்து பார்த்து, “என்ன ஹெராயின் கடத்திறீங்களா? நீங்க அந்த மாதிரி கும்பலா?” என்று கேட்க இருவரும் பதறிவிட்டனர்.

“இல்ல சார்… சத்தியமா இது எப்படி உள்ளே வந்ததுன்னே தெரியல” என்று மாலதி படபடப்புடன் கூற, கண்ணனும் அவளுடன் சேர்ந்து அவர்களுக்கு புரிய வைக்க முற்பட்டான். ஆனால் அந்த காவலாளி அவர்கள் சொல்லும் எதையும் காதில் வாங்கவில்லை.

இருவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலிஸ் வாகனத்தில் ஏற்றிவிட்டார். மாலதி கண்ணன் இருவரது கைபேசி உட்பட அனைத்து பொருட்களும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

லெனின் அவர்கள் இருவருக்கும் எத்தனை முறை அழைத்தும் போகவில்லை. அணைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலே திரும்ப திரும்ப ஒலிக்க, “ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?” என்றவன் கவலை கொள்ள,

அத்தனை நேரம் மௌனமாக படிக்கட்டில் அமர்ந்திருந்த பாரதி எழுந்து கொண்டு, “அவங்களை கான்டெக்ட் பண்ண வேறேதாவது வழி இருக்கான்னு பாருங்க” என்றான்.

நந்தினிக்கும் கூட ஏதோ தப்பாக தோன்றியது.

லெனின் சில நிமிடங்கள் அமைதியாக யோசித்துவிட்டு, “நான் அந்த பொண்ணு கொடுத்த விலாசத்துல போய் பார்க்கிறேன்” என்று சொல்ல,

“நானும் வரேன்” என்று பாரதி உடன் வர,

“இல்ல பாரதி… நான் மட்டும் போறேன்… உன் பைக் சாவியும் ஹெல்மெட்டும் கொடு” என்று அவனிடம் கேட்க விஜ்ஜு முன்னே வந்து, “எனக்கு அந்த அட்ரஸ் தெரியும் ண்ணா… நான் போயிட்டு வரேன்” என்றான்.

“ஒன்னு வேண்டாம்… நான் அங்கே போய் பார்த்துட்டு கால் பண்றேன்”

“இல்ல அண்ணா உன் போட்டோ அவங்ககிட்ட எல்லாம் இருக்கு… உனக்கு ஏதாச்சும் பிரச்சனை வந்துட்டா?”

“பைக்ல போறவனை எல்லாம் நிறுத்தி செக் பண்ண மாட்டாங்க விஜ்ஜு… நான் பார்த்துக்கிறேன்” என்றவன் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்காமல் மாலதி கொடுத்த விலாசத்திற்கு சென்று அவளை பற்றி விசாரித்தான்.

அவர்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை. காலையில் கிளம்பி சென்றவள் இன்னும் வந்து சேரவில்லை என்று அவர்களும் பதட்டமாக உரைத்தார்கள்.

அவன் மீண்டும் மாலதியின் எண்ணிற்கு அழைத்து பார்த்தான். ஆனால் இம்முறை இணைப்பு கிடைத்தது.

“ஹெலோ மாலதி” என்றவன் பேச, எதிர்புறத்தில் சில நிமிடங்கள் தாமதித்து அவள் குரல் ஒலித்தது.

“யார் பேசறது?”

“நான் லெனின்… நேத்து நம்ம மீட் பண்ணி பேசினோமே”

“ஆன் ஆமா” 

“இப்போ நீ எங்கே இருக்க? உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றவள் மிக சாதரணமாக கூறிவிட்டு, “நானே உங்களை பார்க்கணும்னு நினைச்சேன்… எங்கே வரட்டும்” என்று கேட்டாள்.

“நானே வரேன்… நீ இருக்கிற இடத்தை சொல்லு” என்றான்.

அவள் தான் எலியாட்ஸ் கடற்கரையில் காத்திருப்பதாக சொல்ல, அவன் விரைவாக அவ்விடத்திற்கு சென்றான். ஆனால் அங்கே மாலதி இல்லை.

அவன் சுற்றும் முற்றும் தேடலாக பார்த்து கொண்டிருக்கும் போதே பின்னிருந்து ஒரு கத்தி அவன் முதுகு புறத்தில் பாய்ந்தது. அவன் வலியால் கத்துவதற்கு முன்பாக அவன் வாயை பொத்தி தூக்கி சென்றுவிட்டனர்.

லெனின் கைபேசியும் மாலதி கண்ணனின் கைபேசிக்கு அருகே கொண்டு வந்து வைக்கப்பட்டது. அதாவது துர்காவின் மேஜை மீது.

சற்று முன்பாக மாலதியின் பேசியை இயக்கியது துர்காதான். லெனினிடம் பேசியதும் கூட அவள்தான்.

அவள் உடனடியாக லெனின் பேசியை எடுத்து இயக்கினாள். அதில் சிம் கார்ட் இல்லையென்பது தெரிந்தது.

“என்ன இதுல சிம்மை காணோம்? இது ஆன் ஆக கூட மாட்டேங்குது” என்றவள் அவள் ஆட்களிடம் விசாரிக்க,

“தெரியல மேடம்… நாங்க அவன்கிட்ட இருந்து ஃபோனே எடுக்கும் போதே இப்படிதான் இருந்துச்சு… அதுல சிம்மும் இல்ல” என்றவன் தெரிவித்தான்.

“அவன் சட்டை பேன்ட் பாக்கெட் சாக்ஸ் ஷூஸ்… எல்லாம் செக் பண்ணீங்களா?”

“பண்ணிட்டோம் மேடம்… கிடைக்கல”

அப்போது அவன் அடைத்து வைக்கபட்டிருந்த இடத்தின் காட்சியை துர்கா தன் கைபேசியின் திரையில் பார்த்தாள்.

லெனின் கைகள் பின்புறம் பிணைக்கப்பட்டிருந்தது. அவன் வயிற்றிலிருந்து குருதி பெருகி கொண்டிருக்க, வலி பொறுக்க முடியாமல் அவன் தவித்து கொண்டிருந்தான். கண்கள் இருட்டி கொண்டு வர, யாரோ அவன் முகதத்தை தூக்கி பிடித்து, 

“எங்கடா உன் ஃபோன்ல இருந்த சிம் கார்ட்” என்று கேட்டான். அவன் பதில் சொல்லவில்லை.

“இப்ப நீ சொல்லல” என்றவன் அவன் முகத்தில் ஓங்கி குத்த வரவும், அவன் தன் வாயிலிருந்த சிம்மை வெளியே துப்பினான். அது தூள் தூளாக நொறுங்கியிருந்தது.

துர்கா உடனடியாக தன் ஆட்களிடம் பேசினாள்.

“நான் அவன்கிட்ட நேரடியா பேசணும்… ஏற்பாடு பண்ணுங்க” என்றவள் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் லெனின் முன்பு ஒரு திரை வைக்கப்பட்டது. அதில் துர்காவின் முகம் தெரிய, துவண்டு சரிந்திருந்த லெனின் முகத்தை ஒருவன் தூக்கி பிடித்தான்.

“யாரும் உள்ளே இருக்க வேண்டாம்… வெளியே போங்க… நான் அவன்கிட்ட தனியா பேசணும்” என்றவள் சொன்ன நொடி எல்லோரும் அந்த அறையை விட்டு வெளியே சென்றுவிட,

“ஹெலோ மிஸ்டர் லெனின்… கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க” என்றவள் சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு பேச, அவன் மெல்ல தன் பார்வையை உயர்த்தினான். அவனின் வலி அவன் கண்களில் அப்பட்டமாய் பிரதிபலிக்க,

“ரொம்ப வலிக்குதோ? சரி… நான் கேட்குற கேள்விக்கு சீக்கிரமா பதில் சொல்லிடு… உனக்கு நான் ட்ரீட்மென்ட் பார்க்க சொல்றேன்”

அவன் நிறுத்தி நிதானமாக ‘முடியாது’ என்பது போல தலையை அசைத்தான். “என்ன பதில் சொல்ல மாட்டியா? அப்போ சாக போறியா?” என்றவள் கேட்க அவன் கொஞ்சமும் தயக்கமே இல்லாமல் ஆமென்று தலையசைத்தான்.

“உன்னை மாதிரி நல்லவனுங்க எல்லாம் எந்த யுகத்தில இருந்துடா வரீங்க” என்று கடுப்பாக கேட்டு மூச்சை இழுத்துவிட்டவள்,

“அப்போ நீ எதுவும் சொல்ல மாட்ட… சாகறதுக்கு தயாராகிட்ட” என்றவள் மீண்டும் கேட்க அவளை நிமர்ந்து நோக்கி, “ஒரே ஒரு விஷயம்… உன்கிட்ட சொல்லணும்” என்றவன் வாய் திறந்து பேசினான்.

“ம்ம்ம் சொல்லு”

“ஆர தீர அந்த சீட்டுல உட்கார்ந்துக்கோ… இனிமே அது உனக்கு கிடையாது… யுவர் கவுன்ட் டவுன் பிகின்ஸ்” என்றவன் அந்த வலியிலும் தீர்க்கமாக அவள் கண்களை நேர்கொண்டு பார்த்து கூற, அவள் அலட்சியமாக புன்னகைத்தாள்.

உடனடியாக தன் ஆட்களை உள்ளே வர சொல்லி, “அவனை அப்படியே கட்டி தலைகீழா தொங்க விடுங்க… அவன் உடம்புல இருக்க இரத்தமெல்லாம் வடிஞ்சு சாகட்டும்” என்று குரூரத்தனமாக சொல்ல,

அவள் கட்டளைக்கு ஏற்ப அவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டனர். அவன் வலியால் துடிதுடித்தான். தலைசாய்த்து அவன் முகத்தை பார்த்தவள், “உன்னை பிடிச்ச மாதிரி அந்த பாரதியும் நந்தினியையும் எப்படி பிடிக்கணும்னு எனக்கு தெரியும்… நீ நிறுத்தி நிதானமா செத்து போ… யுவர் கவுன்ட் டவுன் பிகின்ஸ் நவ்” என்றவள் தோரணையாக சொல்லிவிட்டு,

“குட் பை” என்றபடி திரையை அணைத்து விட்டாள்.

அங்கிருந்த ஆட்கள் எல்லோரும் அவனை அலட்சியமாக பார்த்துவிட்டு அகன்றனர்.

லெனின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலை விட்டு பிரிந்து கொண்டிருந்தது. அந்த இறுதி தருணத்தில் அவன் மலைகளோடும் மரங்களோடும் கொண்டாடி களித்த அந்த காட்டு வாழ்க்கையை பற்றிய நினைவுகள் வந்தது. உள்ளம் குளிர்ந்தது. மனம் அமைதியடைந்தது.

அவன் நேசித்த உயரமான மலை முகட்டிலிருந்த தலை கீழாய் விழுவது போன்ற பிரமையில் ஆழ்ந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடின.

அவன் கனவுகளும் சேர்த்து அதன் வழியாக வழிந்து வெளியேறின.

இயற்கை வளத்தை போற்றி பாதுக்காக்கும் ஒரு வளமான நாட்டிற்கான கனவு

அடிதட்டு மக்களுக்கான அடிப்படை கனவு

நேர்மையான அரசியல்வாதிகளை பற்றிய கனவு

நாட்டு மக்களை பற்றி அக்கறை கொள்ளும் நல்லதொரு அரசாங்கம் அமைந்திட கனவு

லஞ்சமும் ஊழலும் இல்லாத ஒரு நல்ல சமுதாயத்திற்கான கனவு

அவன் கனவுகள் யாவும் அவன் தேகத்தை விட்டு பிரியும் குருதி துளிகளை போல அவன் நினைவுகளை விட்டு மெல்ல மெல்ல அகல, அவன் வலியின் வேதனையில் சோர்ந்தான். இமைகள் சொருகின.

அவன் கனவுகள் யாவும் அந்த மரண பள்ள தாக்கிற்குள் விழுந்து சரிந்து சிதைந்து போயின.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma .

You cannot copy content