You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

vithai panthu-8

Quote

விதைப் பந்து – 8

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,

ஓது பற்பல நூல்வகை கற்கவும்,

இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று

புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள்

பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்;

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்;

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;

சவுரி யங்கள் பலபல செய்வராம்;

மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;

மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;

காத்து மானிடர் செய்கை யனைத்தையும்

கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;

ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;

இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!

மகாகவி பாரதியின் இந்த வரிகள் புதுமைப் பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

இதைச் செய்த, செய்துகொண்டிருக்கிற, இன்னும் செய்யப்போகிற பெண்கள் ஏராளம் ஏராளம்!

அதில் சந்தகமே இல்லை.

ஆனால் 'மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;' என்று சொல்லியிருக்கிறாரே இந்த மூத்த பொய்மையிலும் மூட கட்டுக்களிலும் இன்றளவும் உழன்று கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் அதிகம்தான்.

அதனால்தான் பெண்கள் பார்க்கும் தொலைக்காட்சி தொடர்களிலும் பெண்கள் வாசிக்கும் கதைகளிலும் அந்த மூட கட்டுகளையும் மூத்த பொய்களையும் பிடித்துத் இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

'கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?' என்ற கேள்வி மாதிரி 'இவர்கள் கேட்கிறார்கள் நாங்கள் கொடுக்கிறோம்! இவர்கள் கொடுக்கிறார்கள் நாங்கள் கேட்கிறோம்!' எனச் சொல்லிக்கொண்டே ஒரு கால் நூற்றாண்டு கழிந்துவிட்டது.

இனிமேலும் இது தொடர்ந்தால், விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை விரும்பி ஏற்கும் வீரப் பெண்கள்தான் நாங்கள்' என்ற நிலை வந்துவிடும் அபாயம் இருக்கிறது.

இந்த பொந்திலிருந்து பெண் சமுதாயம் மெல்ல மெல்ல வெளியேறி வர எத்தனை வீர பெண்மணிகள் எந்த அளவுக்குத் தியாகம் செய்திருக்கிறார்கள் என ஒவ்வொருவரும் சிறு துளியேனும் அறிந்தால் இந்த மடமை கொஞ்சம் மாறலாம்.

அதில் ஒரு துளி இதோ...

'தாசிகளின் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்'

இது 1936ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாவலின் பெயர்.

'இது ஒரு 'Anti-Hero' கதையா என யாராவது கேட்டுக்கொண்டு வந்தாலும் வரலாம்!

ஒன்றும் சொல்வதற்கில்லை.

உண்மையில் தேவதாசிகளின் பரிதாப வாழ்வையும், அதை படைத்தவரின் சொந்த அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட நாவல் அது.

தமிழகத்தில் 'தேவதாசி' முறையை ஒழித்துக்கட்ட இந்த நாவல் ஒரு பெரும்பங்கு ஆற்றியதென்றால் அதன் ஆழம் எப்படி இருக்கும் என அறிந்துகொள்ள முடியும்.

'புழுங்கிய மனதில் தோன்றிய எனது உணர்ச்சியின் பயனாக எழுந்தது இந்நாவல்' என்கிறார் தன் வாழ்க்கையில் பட்ட வலிகளை ஒரு வரலாற்று ஆவணமாக வடித்த அந்த சிங்க பெண்மணி!

இவர் சுயமரியாதை இயக்க முன்னோடிகளில் ஒருவர்.

இவர்தான் அனைவராலும் 'மூவலூர் மூதாட்டி' என அன்புடன் அழைக்கப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

இந்தியப் பண்பாட்டிற்கே களங்கமாக விளங்கிய 'தேவதாசி' முறையை ஒழிக்க முழு மூச்சுடன் போராடியவர் இவர்.

மகாத்மா காந்தி அவர்கள் தேவதாசிகளை 'வழுக்கி விழுந்தவர்கள்' என்று சொல்லி, அவர்கள் வாழ்க்கை மேம்பட காங்கிரஸ்வாதிகள் போராடவேண்டும் என ஊக்குவித்து அதில் அக்கறை செலுத்தவே, அம்மையாருக்குக் காங்கிரஸ் கட்சியின்மேல் ஒரு ஈடுபாடு உண்டானது.

கதர் துணியின் முக்கியத்துவம் உணர்ந்து அதைத் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கப் பெரியாருக்கு இணையாக உழைத்துள்ளார் அவர்.

காக்கிநாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்குக் கொடி பிடித்துச் செல்லக்கூடாது என உத்தரவு போட்டனாராம் வெள்ளைக்காரர்கள்.

எனவே பல கொடிகளை ஒன்றாக இணைத்து அதைப் புடவையாகக் கட்டிக்கொண்டு அந்த மாநாட்டிற்குச் சென்றாராம் ராமாமிர்தம் அம்மையார்.

காங்கிரசிலிருந்து பெரியார் வெளியேறிய பொழுது காங்கிரசின் அதே சனாதன கொள்கையை எதிர்த்து வெளியேறி அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.

அதன் பின் இவருடைய அனல் பறக்கும் கட்டுரைகள் 'குடியரசு' இதழில் தொடர்ந்து வெளிவந்தன.

அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஏட்டில் ‘தமயந்தி’ என்கிற தொடர்கதையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக இஸ்லாம் பற்றிய அவரது எழுத்து முக்கியமானது.

பெண்கள் அடக்குமுறை, உடன்கட்டை ஏறுதல் , கைம்மை நோன்பு, குழந்தை திருமணம் எனப் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக ஓங்கி ஒலித்தது அவரது குரல்.

வறுமை தாளாமல் இவரது தந்தை குடும்பத்தை நிர்க்கதியாக விட்டுவிட்டு எங்கேயோ சென்றுவிட, ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த இவரை வெறும் பத்து ரூபாய்க்கும் ஒரு பழைய புடவைக்கும் ஒரு தேவதாசியிடம் விற்றுவிட்டார் இவரது தாய் சின்னம்மா.

அதன் பின் ஆடல் பாடல் என பல கலைகளைக் கற்றார் இவர்.

இவருக்குப் பொட்டுக் கட்டும் சமயத்தில் பல இடையூறுகள் வர, பதினேழே வயதான ராமாமிர்தம் அம்மையாரை ஒரு வயதான கிழவருக்குத் திருமணம் செய்யும் ஏற்பாடு நடக்க, அதை எதிர்த்து சபதம் செய்து அவரது சங்கீத ஆசிரியரான சுயம்பு பிள்ளை என்பவரை மணந்தார்.

அவருடைய இல்லற வாழ்க்கையைக் குலைக்கப் பலவாறு முயன்றவர்கள், ஒரு பெண்ணை அவர் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தி அவரை சிக்க வைக்க முயன்றனர்.

அந்த பெண்ணை உயிருடன் அழைத்துவந்து நீதிமன்றத்தில் நிறுத்தி, யார் யார் அந்த பெண்ணை அடைத்துவைத்து கொடுமைப் படுத்தினர் என்பதை நிரூபித்து அவர்களுக்குத் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.

அதற்கு பிறகுதான் தேவதாசி முறையையே வேரோடு களையவேண்டும் என முழு மூச்சுடன் போராடத் தொடங்கினார் அவர்.

1917இல் மயிலாடுதுறை பகுதியில் தன் போராட்டத்தைத் துவங்கினார்.

தேவதாசி பெண்களைத் தேடிச்சென்று அந்த இழிவான வாழ்க்கையிலிருந்து வெளியேறுமாறு அவர்களை வலியுறுத்தினார்.

தேவதாசிகளை உறுப்பினர்களாகக் கொண்டு 'நாகபாசத்தார் சங்கம்' என்கிற அமைப்பைத் தொடங்கினர்.

அதன் பின் தேவதாசி முறைக்கு எதிராக இரண்டு மாநாடுகளையும் கூட்டினர்.

அதனால் அரசியல் தலைவர்கள், ஜமீன்தார்கள், மைனர்கள், காவல் துறையினர் எனப் பலரிடம் மிகப்பெரிய எதிர்ப்பையும் சம்பாதித்தார்.

வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், யாருக்காக இவர் போராடினாரோ அந்த தேவதாசி இன பெண்களே இவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிராக நின்றனர்.

ஒரு இசை வேளாளர் வீட்டில் அமர்ந்து அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த வீட்டுப் பெண்மணி குடிக்கப் பால் கொடுத்தார். ஒரு மிடறு பருகியதும் வாய் எரிந்தது. காரணம் அந்த பாலில் விஷம் கலந்திருந்தது. எவ்வளவு கேட்டும், போலீஸாரிடம் பால் கொடுத்தவரை காட்டிக் கொடுக்கவில்லை ராமாமிர்தம் அம்மையார்.

தேவதாசி முறைக்கு எதிராக இவர் நடத்திய நாடகத்தில் அம்மையார் நடித்துக்கொண்டிருந்த பொழுது மேடையிலேயே இவரது கூந்தலை அறுத்தெறிந்தனர் இவருடைய எதிர்ப்பாளர்கள்.

அதன் பின் கூந்தலை வளர்த்துக்கொள்ளாமல் 'கிராப்' உடனேயே இருந்துவிட்டாராம் அவர்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதற்காகச் சட்டமன்றத்தில் வாதாடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும் ஆழமான நட்பு இருந்தது.

பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947ஆம் ஆண்டு ஒருவழியாக தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தேவதாசி முறை ஒழிக்கப்பட்டாலும் ரகசியமாகப் பல இடங்களில் அந்த முறை தொடர்ந்து நடந்து வந்தது. அங்கெல்லாம் நேரடியாகச் சென்று, விசாரணை நடத்திப் பல பெண்களை விடுவித்தார்.

அண்ணா, சிவாஜி கணேசன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடித்த நாடகங்களில் தாயார் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து, எழுத்து மூலமும் கலை மூலமும் புரட்சியை செய்தார் அம்மையார்.

அவர் வாழும் போது அறிஞர் அண்ணா தன் கையால் திமுக சார்பில் விருது கொடுத்து அவரை கௌரவித்தார்.

அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் அவரின் பெயரால் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ஒன்றை அறிவித்தார். அதுவே மூவலூர் ராமாமிர்ந்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டமாகும்.

பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வராத காலகட்டத்திலேயே ஒரு மாபெரும் சமுதாய புரட்சிக்காக உறுதியுடன் போராடிய இந்த பெண்மணியைப் பற்றி அறியும்பொழுது, 'நாமெல்லாம் என்ன செய்து கிழித்துவிட்டோம்?' என்ற எண்ணம் தோன்றுகிறது.

இன்று எல்லா தளைகளையும் உடைத்தெறிந்துவிட்டு சுதந்திர காற்றை ஒரு பெண் சுவாசிக்கிறாள் என்றால் இவரைப் போன்றோரின் தியாகம் அந்த காற்றில் கலந்திருப்பதால்தான் என்பதை மறுக்க இயலாது.

ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை நாம் முறையாகத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் குடும்பத்தில் எதார்த்தமாக நடக்கும் சிறு சிறு பிரச்சினையைக் கண்டே ஓய்ந்து போகும் அளவுக்குப் பெண்கள் வலிமை குன்றிப்போய் இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

நம் சமுதாய அவலங்களை யாரேனும் சுட்டிக்காட்டினால் 'எங்களுக்கு கனமான விஷயங்கள் வேண்டாம். மதியைத் தற்காலிகமாக மயங்க வைக்கும் மென் காதல் அல்லது சிற்றின்ப கதைகள் போதும்!

தயவு செய்து யாரும் கருத்துச் சொல்லாதீர்கள்' என்கிற மனோபாவம் அதுவும் பெண்கள் மத்தியில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருப்பது நகைப்பிற்கும் வேதனைக்கும் உரிய விஷயம்.

காரணம் சமுதாயத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பெண்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிந்திப்போம்!

விதைப்போம் நற்சிந்தனைகளை.

 

Uploaded files:
  • விதை.jpg
Avinash Tony has reacted to this post.
Avinash Tony

You cannot copy content