Iru thruvangal-Final
40
இனிமையான தனிமை
சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன் மனோஜை கைது செய்வதில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மனோஜை காப்பாற்றினாலோ அல்லது தலைமறைவாய் வைத்திருந்தாலோ அது அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு பிரச்சனை ஏற்படலாம் என அமைதி காத்தார். ஆனால் அந்த மெளனத்தின் பின்னே பெரிய திட்டத்தையே வடிவமைத்துக் கொண்டிருந்தார் வித்யாதரன்.
மனோஜுக்கு ஆதரவாக சமுத்திரன் வாதாட முடிவெடுத்தான். அவன் அதற்காக ரொம்பவும் மும்முமரமாக குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். தன் மனைவி சுபாவை நேரடியாக நீதிமன்றத்தில் எதிர்கொள்ள ரொம்பவும் ஆவலாய் இருந்தான். அவளைத் தோல்வியுற செய்து மீண்டும் வீட்டுக்குள் தன் காலடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என பகல் கனவு கண்டு கொண்டிருந்தான்.
சுபாவிற்கு சமுத்திரனின் புத்திசாலித்தனம் நன்றாகத் தெரியும். அவனை அத்தனை சீக்கிரத்தில் தன் தோல்வியை ஒத்துக்கொள்ளவும் மாட்டான். சமுத்திரனை எதிர்த்து வாதாடப் போவது சுபாவுக்கு நிச்சியம் சவாலாய் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த சவாலை மீறிக் கொண்டு அவள் வெற்றி பெறுவாளா என்பது பெரும் புதிராய் இருந்தது.
போலிஸ் ஸ்டேஷனில் மனோஜ் உட்கார வைக்கப்படிருந்தான். அதுவும் ராஜ மரியாதையுடன். வேணு மகாதேவன் அசிஸ்டன்ட் கமிஷனராய் இருந்து கொண்டு அவனுக்கு பணியாளன் போல வேலை செய்து கொண்டிருக்க சிவாவுக்கு எரிச்சலாய் வந்தது.
வேணு மகாதேவன் சிவாவின் அருகில் வந்து, “உன்னோட போலீஸ்கார திமிரை மனோஜிடம் காண்பிக்காதே… நான் கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்று வெளியே புறப்பட்டார்.
மனோஜ் கால் மீது கால் போட்டுக் கொண்டு சிவாவை சொடுக்கு போட்டு தன் அருகில் அழைத்தான்.
சிவா தன் கம்பீரம் குறையாமல் அவன் அருகில் வந்து நின்றான்.
“கேத்ரீன் கேஸில் உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது… இந்தக் கேஸ் முடியும் போது உன் லைஃப்… வைஃப்… எதுவும் இல்லாம பண்ணிடுவேன் பாத்துக்கோ”
சிவா எதுவும் பேசாமல் பொறுமையாகவே நின்றிருந்தான்.
“எப்படி இருக்கா அந்த அரபியன் குதிரை?”என்றான்.
சிவா கொஞ்சம் யோசித்தபடி மனோஜை பார்க்க, “உன் ஃபிரண்டு விந்தியாவைத்தான் சொல்றேன்” என்று மனோஜ் சொல்லி முடிக்க… சிவாவிற்கு அவன் எண்ணம் புரியும் போது மனோஜின் கன்னத்தில் விழுந்த அடி அவன் தாடை சிவந்து வீங்கிப் போனது.
“என்ன மனோஜ்… இதுதான் போலிஸ் அடி வாங்கி இருக்கியா? என்ன கோபம் வருதா? என்ன செய்வ? என்ன செய்யணும்னு விருப்பப்பட்டாலும் இன்னைக்குள்ள செஞ்சிடு.
நாளைக்கு உன்னோட சாப்டர் க்ளோஸ்… உங்க அப்பா செஞ்ச பாவம்… நீ செஞ்ச பாவம் எல்லாமே உன் தலையிலதான் விடியப்போகுது” என்றான் சிவா.
“எங்க அப்பாவோட பவர் என்னன்னு தெரியுமா உனக்கு?”
“நல்லா தெரியும்… அந்தப் பவரும் பதவியையும் காப்பாத்திக்கவாச்சுசம் உங்க அப்பன் நிச்சயம் உன்னைக் காப்பாத்தமாட்டான்”
“இந்தக் கேஸில எனக்கெதிரா எந்த ஆதாரமும் இல்ல…”
“நீ நாலு வருஷத்துக்கு முன்னாடி விதைச்ச விதை உனக்கெதிரா வளர்ந்து நிக்குதே”
“என்ன சொல்ல வர்ற?”
“நீ கேத்ரீன் பார்ட்டிக்கு அழையா விருந்தாளியா போனல்ல… அங்க நீ செஞ்ச லீலைக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு “
“நீ பொய் சொல்ற… சும்மா என்னைப் பயப்படுத்திப் பாக்கிற… தேவையில்லாம பேசி என்னைக் குழப்பாதே… எதாவது இனி பேசணும்னா என் வக்கீல்கிட்ட பேசிக்கோ”
சிவா அவனைப் பார்த்துக் கள்ளத்தனமாய் சிரித்தான்.
“அந்த சமுத்திரனை தானே சொல்ற… அவனுக்கு அவன் சுயநலம்தான் பெரிசு. அவன் தான் தலைக்கு கத்தி வராதவரைக்கும்தான் உனக்காகப் பேசுவான்.
ரொம்ப யோசிக்காதே மனோஜ்… கேத்ரீனுக்கு நீ செஞ்ச பாவத்துக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு விசாரணை அறையை விட்டு வெளியேறினான்.
சிவா அடித்ததை விட அவன் சொன்ன வார்த்தைகள்தான் அவனை அதிகமாய்க் கலவரப்படுத்தின. வித்யாதரன் தன்னைக் காப்பாற்றுவாரா என்ற புரியாத குழப்பம் மனோஜ் மனதில் வளர்ந்தது. அதைதான் சிவாவும் விரும்பினான்.
விந்தியா தன் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். திடீரென்று எதிர்பாராத நினைவுகள் கனவுகளாய் தோன்றி அவள் உறக்கத்தைக் கலைத்தன. மனதிற்குள் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது.
தரையில் உறங்கி கொண்டிருந்த ஆதித்தியாவை காணாமல் அவனைத் தேடிக் கொண்டு போனவள் அவன் எங்கேயும் காணாமல் பதற்றம் அடைந்தாள். அந்த இரவு நேரத்தில் அவன் மாடிக்குப் போயிருக்கக் கூடுமா என்று யோசித்தபடி அந்த இருளில் படிக்கட்டு ஏறிப் போனாள்.
வானின் இருளை முடிந்தளவுக்கு விரட்டிக் கொண்டிருந்த நிலவின் வெளிச்சத்தில் நடுநிசியில் ஆதித்தியா சிகரெட்டும் கையுமாய் நின்று கொண்டிருந்தான்.
விந்தியாவைப் பார்த்தவுடன் சிகரெட்டை காலில் போட்டு மிதித்தான்.
“நீங்க இன்னும் இந்தக் கெட்ட பழக்கத்தை விடலயா?” என்று மிரட்டலாகக் கேட்டாள் விந்தியா.
“ஜஸ்ட் ஒன்…”
“இட்ஸ் நாட் குட் பாஃர் ஹெல்த்துனு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப இந்த சிகரெட்டை பிடிச்சு உடம்பை ஏன் கெடுத்துக்கிறீங்க?”
“டென்ஷனா இருந்துச்சு… நாளைக்குக் கோர்ட்டில என்ன நடக்குமோ… அந்த வித்யாதரனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்… யாருக்காவது ஏதாவது பிரச்சனை வந்துட்டா… அதுவும் இல்லாம கேத்ரீனோட ஞாபகம் வந்தாளே நான் ரொம்பவும் ரெஸ்ட்லெஸ்ஸா ஃபீல் பண்றேன்”
“இன்னிக்கு யோசிச்சி என்ன பன்றது… அன்னிக்கு அவங்க ப்ரபோஸ் பண்ணும் போதே யோசிச்சிருக்கலாம்”
“ஓகே சொல்லி இருக்கணும்னு நினைக்கிறியா?”
“ஒய் நாட்… அம்மா அப்பா இல்லாத ஒரு பொண்ணோட மனநிலை எப்படி இருக்கும்… நமக்கு எப்பவும் உறுதுணையா இருக்கிற கணவன் வேணும்னு நினைச்சிருக்கா… நீங்க அப்படி இருப்பீங்கனு அவ யோசிச்சிருக்கா… இதில தப்பென்ன இருக்கு?”
“நான் சம்மதமே சொல்லி இருந்தாலும் எங்க ரிலேஷன்ஷிப் ரொம்ப நாள் நீடிச்சிருக்காது”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
“என்னை உண்மையிலேயே புரிஞ்சிக்கிட்டுருந்தா அப்படி ஒரு பழியை என் மேல போட்டிருக்க மாட்டா”
“அவளோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சு”
“என்ன பெரிய சூழ்நிலை… உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் மாசக்கணக்குதான்… ஆனா இந்தக் கொலைப்பழி என் மேல விழுந்த போதும் நீ என்னை ஒரு கேள்விகூடக் கேட்காம நம்பின இல்ல… அந்த லாயர் இஷ்டத்துக்குப் பேசின போது முகத்திலறைந்த மாதிரி நான் அப்படிப்பட்டவன் இல்லனு அழுத்தம் திருத்தமா சொன்னியே… ஆனா வருஷக்கணக்கா நான் அவ கூடப் பழகியிருந்தும் அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லையே”
அவனின் பதிலுக்கு அவள் என்ன பேசுவதென்றே புரியாமல் நின்றிருந்தாள்.
“நீ சொல்லனாலும் உனக்கு என் மேல இருக்கிற காதலும் நம்பிக்கையும் உன்னோட ஒவ்வொரு செயலிலும் தெரியுது… இந்த நைட்டில் என்னைத் தேடிட்டு வந்ததையும் சேர்த்து.
ஆனா உன் பிடிவாத குணத்தால ஒரு தடவை கூட நீ மனசவிட்டு எதுவும் சொன்னதில்லை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் அமையாது விந்தியா… எனக்காக ஒரே தடவை உன் மனசில இருக்கிறதை சொல்லிடேன்”
“அப்புறம் பேசிக்கலாம் ஆதி… ஆல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு… நாளைக்கு காலையில கோர்ட்டுக்கு வேற போகணும்” என்று அவள் சமாளித்துவிட்டு திரும்பி போகப் பார்த்தவளை வழி மறித்து நின்று கொண்டான். அந்த இருளும் தனிமையும் அவளை மனம் திறந்து பேச வைக்கும் என்று எதிர்பார்த்தான்.
“கோபத்தை வெளிப்படுத்த தெரிஞ்ச அளவுக்கு காதலை வெளிப்படுத்த தெரியாதா உனக்கு?”
“வழி விடுங்க நான் போகணும்” என்று அடாவடியாக அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பிடிவாதமாய் இறங்கி போகப் பார்த்தாள் விந்தியா.
“கணவன் மனைவிக்குள்ள இந்த பிடிவாதமெல்லாம் எதுக்கு?”
“ஆதித்தியா… எனக்குத் தலைவலிக்குது… வழி விடுங்க”
அதற்கு மேல் அவளை வழிமறிப்பதில் பயனில்லை என்றெண்ணி இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து வாயில் வைத்துக் கொண்டான். அதைப் பார்த்தவள் அவன் வாயில் வைத்திருந்த சிகரெட்டை பிடுங்கி கீழே எரிந்தாள்.
“இப்பதானே சொன்னேன் ஸ்மோக் பண்ண வேண்டாம்னு”
“நான் சொல்றத ஏதாவது நீ காதில போட்டுக்கிறியா? நீ சொல்றத மட்டும் நான் கேட்கணுமா.? இப்போ நான் இந்த பேக்கெட் முழுசையும் காலி பண்ணிட்டுத்தான் வருவேன்… நீ போய் தூங்கு”
அவனை அப்படியே விட்டுவிட்டு போக அவளுக்கு மனம் வரவில்லை.
“ப்ளீஸ் ஆதி… அந்தப் பாக்கெட்டை என் கிட்ட கொடுத்துடுங்க… பிடிவாதம் பிடிக்காதீங்க…”
“நானா?”
“இல்ல நான்தான்… நான்தான் பிடிவாதம் பிடிக்கிறேன்… என் மனசில இருக்கிறத சொல்லாம பிடிவாதம் பிடிக்கிறேன்…
உங்களை விட்டு பிரிஞ்சி இருக்க முடியாதுனு எனக்குத் தெரியும்… ஆனா அதை நான் ஒத்துக்க மாட்டேன்…
நான் உங்களை மனசாரக் காதலிக்கிறேன்… இருந்தும் வாயை திறந்து சொல்லித் தொலைய மாட்டேன்…
நீங்க என் பக்கத்தில இருந்தா ஒயாம சண்டை போட்டுக்கிட்டே இருப்பேன்… ஆனா உங்களை விட்டு தள்ளி வந்துட்டா எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும்…
இந்த ஜென்மம் முழுக்க ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை உங்கக் கூட நான் வாழணும்… நான் எவ்வளவு கோபப்பட்டாலும் சண்டை போட்டாலும் அதை எல்லாம் தாண்டி என்னைக் காதலிக்க நீங்க என்னோட கடைசிவரை கூட இருக்கணும்…
என் மனசில இருக்கிறதை சொல்லிட்டேன்… போதுமா… அதை தூக்கி போடுங்க ஆதி” என்று சொல்லி அவன் கையில் இருந்த சிகரெட் பேக்கெட்டை வாங்கித் தூக்கி போட்டாள்.
கண்ணில் நீர் பெருக அவனை ஏறிட்டும் பார்க்காமல் வேக வேகமாய் படியிறங்கி போனாள்.
அந்த நிலவொளி நிரம்பிய இரவில் விந்தியா பேசிவிட்டு போனதெல்லாம் கனவோ என்று சந்தேகம் எழுந்தது ஆதித்தியாவிற்கு.
கீழே இறங்கி வந்தவன் அறைக்குள் விந்தியா படுக்கையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தான். அவளின் கைககளைப் பிடித்துக்கொண்டே அவளின் மடியில் படுத்துக் கொண்டான்.
“இந்தக் காதல் போதும்… இந்த ஜென்மம் இல்ல இன்னும் நூறு ஜென்மத்திற்கு. எத்தனை தூரமானாலும் எத்தனை காலமானாலும் உன் கூடவே வருவேன் அள்ள அள்ள குறையாத இதே காதலோடு… லவ் யூ சோ மச் டியர்” என்று விந்தியாவின் கண்களைப் பார்த்தபடி சொன்ன ஆதித்தியா, தன் காதலைக் கொண்டு அவள் பிடிவாதத்தையும் இறுக்கத்தையும் உடைத்து சுக்குநூறாக்கினான்.
பிரிந்திருந்த அந்தக் காதல் பறவைகளை இனிமையான அந்த தனிமையில் விடுத்து இப்போதைக்கு நாம் விலகி செல்வோமாக.
விந்தியா ஆதித்தியாவின் வாழ்க்கை… போராட்டங்களைத் தாண்டி மரணிக்காத காதலோடு அவர்களின் இந்த காதல் அத்தியாயம் முடிவு பெறப் போவதில்லை.
41
ஆபத்தின் அறிகுறி
இருள் விலகி கதிரவன் காலை பொழுதை பிரகாசமாய் மாற்றிக் கொண்டிருக்க சுபாவின் மனதில் சூழ்ந்திருந்த இருள் மட்டும் விலாகமலே இருந்தது. திருமூர்த்தி அவளைப் பார்த்து பெருமைப்பட்டுக் கொள்ள, பலரிடம் இருந்து பாராட்டுக்கள் அவளின் வாதத்திற்கு குவிந்த வண்ணம் இருக்க, அவள் மனம் களிப்படையவில்லை. அப்படி அவளைச் சூழ்ந்து கொண்டிருந்த கவலை எதை பற்றியது என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.
இவை எல்லாவற்றையும் மீறி நீதிமன்றத்திற்கு புறப்படத் தயாரானாள்.
சுபாஷ் மழலை மொழி மாறாமல்,. “அப்பா எங்கே… காணோம்?” என்று சுபாவிடம் கேட்க நேற்று இரவு சமுத்திரன் அவளிடம் கோபமாய் சண்டை போட்டு விட்டு கூடிய சீக்கிரத்தில் டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப போவதாக சொல்லிவிட்டு சென்றதை நினைவுப்படுத்தியது. அதற்குள் சுபாவின் அம்மா கையில் பூஜை தட்டோடு வந்து நெற்றியில் குங்குமம் இட்டுவிட்டாள்.
“முதல்முறையா கடவுள் கிட்ட போய் நிற்கும் போது நான் என்ன வேண்டிக்கணும்னு குழப்பமா இருக்கு சுபா” என்றாள் சுபாவின் அம்மா.
“இனிமேயாவது உன் பொண்ணு யாரையும் சார்ந்து வாழக் கூடாதுன்னு வேண்டிக்கோ” என்றாள் சுபா.
“என் மகள் ஜெயக்கிணும்னு எனக்கும் ஆசைதான்… அது உன் வீட்டுக்காரரை தோற்கடிச்சிதான் நடக்கணுமா சுபா?” என்றாள் அவளின் அம்மா.
சுபா சிரித்தபடி, “யாரு ஜெயிக்க போறோம் என்பதெல்லாம் முக்கியமில்லம்மா… தப்புச் செஞ்சவங்களுக்குத் தண்டனை கிடைக்கணும்… அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டு சுபா திருமூர்த்தியுடன் புறப்பட அவளின் அம்மாவின் கண்களில் நீர் தேங்கியிருந்து.
கணவன், குடும்பம், குழந்தைகள் என்ற வரையறைக்குள் தேங்கி கிடந்தவள் இன்று ஆற்றுவெள்ளமாய்ப் பெருகி ஓட தொடங்கும் போது பாதை கொஞ்சம் கரடுமுரடானதாகவே இருக்கும் என்பதே சுபா அம்மாவின் மனதில் உள்ள கவலை.
உண்மை இல்லாத உறவுகள் என்றாவது ஒரு நாள் அதன் சுயவடிவத்தைப் பெறும் போது நிச்சியம் பிரிவை சந்தித்தே தீரும். அதே போல் நிதர்சமான அன்பு கொண்டவர்களின் உறவு எத்தனை பிரிவை கடந்தும் நிலைத்து நிற்கும். நம் விந்தியா ஆதித்தியாவின் காதலைப் போல.
கடந்து வந்த பிரிவுகளைத் தாண்டி அவர்களுக்கு இடையில் நெருக்கம் அதிகமானது.
ஆதித்தியா விந்தியாவைக் கண்இமைக்காமல் இடது புற கன்னத்தை கைககளில் தாங்கி பிடித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்க… அவள் கருநீல நிற புடவையை உடுத்தி கொண்டு கண்ணாடியை பார்த்தபடி நெற்றியின் வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள்.
“ஆதி டைமாச்சு. ஏர்போர்ட்டுக்கு போய் ஷபானாவை பிக்அப் பண்ணனும்… அப்புறம் கோர்ட்டுக்கு வேற போகணும்”என்று அவள் சொல்லிவிட்டு திரும்ப அவன் இருந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்தான்.
அவன் அசையாமல் சிலை போல் உட்கார்ந்திருக்க விந்தியா அவன் முன்னே கைகளை அசைத்து பார்த்தாள்.
“ஹெலோ மிஸ்டர்… கோர்ட்டுக்கு போணும் வர்றிங்களா இல்லையா? அப்புறம் ஜாமீன் கேன்ஸலாகும்… போலிஸ் தேடி வரும்… சொல்லிட்டேன்”
அவள் அருகில் நின்றதை அவன் சாதகமாய் மாற்றிக் கொண்டு இழுத்து மடியில் அமரவைத்து அணைத்துக் கொண்டான்.
“விடுங்க ஆதி… டைமாச்சுன்னு சொல்லிட்டிருக்கேன் விளையாடிட்டு இருக்கீங்களே”
“என் கண் முன்னாடி இப்படி தேவதை மாதிரி அலங்கரிச்சிட்டு… போயும் போயும் வா கோர்ட்டுக்கு போகலாம்னு கூப்புடுற…”
“வேற சாய்ஸே இல்ல… இப்ப கோர்ட்டுக்கு கிளம்பித்தான் ஆகணும்… அந்த மனோஜ் என்ன சொல்லப் போறான்… சமுத்திரன் உங்க மேல என்னவெல்லாம் பழி போட போறானோன்னு நினைச்சா கவலையா இருக்கு”
“இன்னிக்கு எதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்ல… எனக்கு நம்பிக்கை இருக்கு… இனிமே எல்லாமே நல்லதாகவே நடக்கும்” என்று சொல்ல அவனை உதறி விட்டு எழுந்து கொண்ட விந்தியாவின் மனதில் ஒருவிதமான படபடப்பும் பய உணர்வும் ஏற்பட்டிருந்தது.
ஏதோ தப்பாக நடக்கப் போகிறதென அவள் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டிருந்தது. அவளின் இந்த எண்ணங்களுக்கு இடையில் ஆதித்தியா அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தை நேர்த்தியாகச் சரி செய்துவிட்டான். அதற்குள் நந்தினி கதவை தட்டி காலை உணவு சாப்பிட அழைக்க விந்தியா அவன் கைகளைப் பிடித்து இழுத்தபடி
“நேரமாச்சு ஆதி… சாப்பிட்டு கிளம்பலாம்”என்றாள்.
அவர்கள் இருவரும் உணவு உண்ணும் போது பேசிக் கொண்ட விதம் விந்தியாவின் முகத்தில் கோபம் மறைந்து வெட்கத்தால் பொலிவடைத்த அழகைக் கண்ட நந்தினி ஒருவாறு யூகித்து விட்டாள். அதை மாதவியிடம் சொல்லி மகிழ்ச்சி அடைந்தாள். மாதவிக்கும் அவர்கள் இருவரின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர விந்தியாவைத் தனியே அழைத்தாள்.
“நீயும் மாப்பிள்ளையும் சமாதானம் ஆயிட்டீங்களா?” என்று மாதவி கொஞ்சம் தயங்கியபடி கேட்க விந்தியா மெளனமாகச் சிரித்தாள்.
“எவ்வளவு தடங்கலுக்கு அப்புறம் உனக்குக் கல்யாணம் கூடி வந்தது… உன் பிடிவாத குணத்தை எல்லாம் தாண்டி எப்படி வாழப் போறியோ பயந்துட்டே இருந்த விந்தும்மா… ஆனா மாப்பிள்ளை உன்னை இந்தளவுக்கு புரிஞ்சிக்கிட்டு நடந்துக்குறது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு…” என்று மாதவி உணர்ச்சி பொங்க பேசினாள்.
“போதும்மா உன் மாப்பிள்ளை புராணம்” என்றாள் விந்தியா.
“சரி சரி… இனிமேயாச்சும் சண்டை கிண்டை போடாம ஒழுங்கா இரு“ என்றாள் மாதவி
“உன் மாப்பிள்ளை என்னவோ மகாத்மா மாதிரியும், நான்தான் எல்லாம் பிரச்சனைக்கும் காரணம் மாதிரி பேசிட்டிருக்க”
ஆதித்தியா பின்னாடி வந்து அவள் தலையில் தட்டினான்.
“அம்மா ஏதோ சொல்றாங்கன்னா அதைக் கேட்டு நடந்துக்கோ… அதை விட்டுட்டு ஏன் விதண்டாவாதம் பண்ற” என்றான்.
“நீங்க ரொம்ப ஒழுக்கம்… எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க” என்று கோபித்துக் கொண்டு விந்தியா அந்த இடத்தை விட்டுக் கோபமாக அகன்றாள்.
ஆதித்தியா மாதவியைப் பார்த்து, “அத்தை… உங்க பொண்ணால என் கூடச் சண்டை போடாம இருக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ… அவ்வளவு உண்மை என்னால உங்க பொண்ணைப் பிரிஞ்சு இருக்கவே முடியாதுங்கறது… நீங்க அதனால எதுக்கும் கவலைப்படாதீங்க” என்று உரைத்தான்.
மாதவியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அவர்கள் இருவரையும் ஆனந்தமாய் வழியனுப்பி வைத்தாள்.
விமான நிலையத்தில் இருந்து ஷபானாவையும் அவள் மகன் ஆஷிக்கையும் அழைத்துக் கொண்டு விந்தியாவும் ஆதித்தியாவும் காரில் நீதிமன்றத்தை நோக்கி விரைந்தனர்.
ஷாபானாவை ஆதித்தியாவிற்கு முன்னாடியே கேத்ரீன் மூலமாக அறிமுகம் என்பதால் காரை ஒட்டிக் கொண்டே இயல்பாக அவளிடம் பேசிக் கொண்டு வந்தான். விந்தியா முன்புற இருக்கையில் அமர்ந்திருக்க ஷாபானாவும் ஆஷிக்கும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
“இவங்கதான் உங்க மனைவியா?” என்று ஆதித்தியாவிடம் ஷபானா வினவினாள்.
“சாரி ஷாபனா… அறிமுகப்படுத்தவே மறந்துட்டேன்… இவங்கதான் என் மனைவி விந்தியா” என்றான்.
“எப்படி ஆதி சார்? ஆச்சர்யமா இருக்கு… நீங்க காதல் கல்யாணத்தில் எல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்வீங்க” என்றாள் ஷபானா
“விதி யாரை விட்டுச்சு” என்றுஆதி சொல்ல விந்தியா அவன் புறம் திரும்பி கோபமாய் பார்க்க ஆதித்தியா சமாதனமாய், “சும்மா டார்லிங்” என்று அவள் புறம் திரும்பி கண்ணடித்தான்.
ஷபானா அவர்களைக் கவனிக்காதது போல் அமர்ந்திருக்க ஆதித்தியா கேத்ரீன் பற்றி அவன் மனதில் ரொம்ப நாள் தேங்கியிருந்த சந்தேகத்தைக் கேட்டான்.
“ஷபானா… கேத்ரீனுக்குச் சென்னையில் கெஸ்ட் ஹவுஸ் இருக்கும் போது அவ ஏன் ஹோட்டலில் ஸ்டே பண்ண முடிவு எடுத்தா?”
“மேடமுக்கு உங்களை மீட் பண்ற ஐடியா இருந்திருக்கலாம்”
“நிச்சயமா அப்படி இருக்காது… கேத்ரீனுக்கு என் மேல இருந்த கோபம் அவ்வளவு சாதாரணமானது கிடையாது”
“இல்ல சார்… மேடம் வெளிப்படையா சொல்லல… இருந்தாலும் அவங்க மனசில் அப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கு.
அன்னைக்கு ஹோட்டலில் கிளைன்ட் மீட்டிங் நடந்துட்டு இருந்த போது நீங்க மேடம பாத்துட்டு கிராஸ் பண்ணி போனீங்க இல்ல… அப்போ மேடம் கண்ணில் உங்கள பாத்து பேசணும்னு தவிப்பு இருந்துச்சு” என்றாள் ஷபானா.
“கேத்ரீன் ஆதித்தியாவை பாத்துப் பேசியிருந்தால் தப்பா எதுவும் நடக்காம இருந்திருக்குமோ என்னவோ?” என்றாள் விந்தியா.
“நடத்து முடிஞ்சதை பத்தி நாம என்ன பேசி என்ன ஆகப் போகுது?” என்று ஆதித்தியா சொல்ல விந்தியா “தட்ஸ் ரைட்” என்றாள்.
நீதிமன்ற வாசலில் வந்து கார் நிற்க ஷபானா தன் முகத்தைக் கருப்பு துணியால் மூடி பர்தாவை உடுத்திக் கொண்டாள்.
“விந்தியா… நீ முன்னாடி போ… நம்ம கேஸ் ஹியரிங் ஆரம்பிக்கும் போது நான் ஷபானாவை கூட்டிட்டு வர்றேன்” என்று ஆதித்தியா சொல்ல விந்தியா நீதிமன்றத்தில் சுபா நின்றிருந்த திசை நோக்கி நடந்து சென்றாள்.
அந்த நேரத்தில் ஷபானா தன் பேக்கில் இருந்த லேப்டாப்பை ஆதித்தியாவிடம் கொடுத்தாள்.
“இந்தாங்க சார்… இது கேத்ரீன் மேடமோட லேப் டாப். மேடம் லாக்கரில் இருந்த ஆதாரத்தை எல்லாம் எப்படியோ எடுத்துட்டாங்க… இதைப் பத்தி தெரிஞ்சிருந்தா நிச்சயம் இதையும் விட்டு வைச்சிருக்க மாட்டாங்க”
ஆதித்தியா குழப்பத்தோடு அதனைக் கையில் வாங்கிக் கொண்டான்.
“நான் சென்னையில் இருந்து கேத்ரீன் மேடமை தனியா விட்டுட்டு கிளம்பும் போது, ‘நான் வரவரைக்கும் இந்த லேப்டாப்பை பத்திரமா வைச்சுக்கோ’னு சொல்லி கொடுத்தாங்க… பட் நவ்… ஷீ இஸ் நோ மோர்” என்று சொல்லி கண்கலங்கியபடி மேலும் தொடர்ந்தாள்.
“இதை நான் யார்கிட்ட கொடுப்பேன்? நீங்கதான் மேடமுக்கு ரொம்ப நம்பிக்கைக்குரியவர்… அதனால்தான் உங்கக்கிட்ட கொடுக்கிறேன் “ என்று ஷபானா சொல்லி முடிக்க ஆதித்தியா அந்த லேப்டாப்பை வாங்கி இயக்கி பார்த்தான். ஆனால் அது பாஸ்வார்ட் கேட்டது.
சுபாவை பார்த்த சமுத்திரன் அவள் அருகாமையில் வந்து நின்றான்.
“உனக்கு ரொம்பதான் தைரியம்… என்னை ஜெயிக்க முடியும்னு எந்த நம்பிக்கையில் கோர்ட்டு வரைக்கும் வந்திருக்க?” என்றான் சமுத்திரன்.
சுபா அவனிடம் எதவும் பேச விருப்பப்படாமல் மௌனமாகவே நின்றிருந்தாள்.
“பூனை சூடு போட்டுக்கிட்டாலும் புலியா மாறிட முடியாது… தெரியுமா?” என்று மீண்டும் அவளைச் சீண்டும் விதமாகப் பேச விந்தியா அவர்களை நோக்கி வந்தாள்.
“பூனை தன்னை புலினு நினைச்சிக்கிட்டா பரவாயில்ல… எலி விவஸ்த்தையே இல்லாம தன்னை புலினு நினைச்சுக்குது” என்றாள் விந்தியா நக்கலாக!
“என்ன சொன்ன?” என்று சமுத்திரன் விந்தியாவை நோக்கி கேட்க… அவள் சிரித்தபடி, “இதுவே உனக்கு விளங்கல… நீ எல்லாம் வாதாடினா எங்க விளங்கப் போகுது?” என்று சொல்லிக் கொண்டே சுபாவை அங்கிருந்து நகர்த்திச் சென்றாள்.
நீதிமன்றத்தில் கேத்ரீன் வழக்குக்கான விசாரணை தொடங்க மனோஜை அழைத்துக் கொண்டு சிவா உள்ளே சென்றான்.
வழியில் நின்றிருந்த சமுத்திரன் சிவாவை நோக்கி, “நீ விளையாடுகிற விளையாட்டு உனக்கே வினையா முடியப் போகிறது சிவா… ஜாக்கிரதையா இரு “என்றான்.
சிவா அந்த வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் போனாலும் அது ஏதோ ஆபத்தின் அறிகுறியாய் அவன் மனதில் உறுத்தியது.
42
சவால்
நீதிமன்றத்தில் நுழைந்த பின்னும் சுபா கொஞ்சம் தெளிவு இல்லாதவளாகவே தோன்றினாள். அதற்கு நேர்மாறாக சமுத்திரனின் முகத்தில் தன்னம்பிக்கை மிளிர்ந்து கொண்டிருந்தது.
ஆதித்தியாவும் சிவாவும் தங்களுக்குள்ளேயே ஏதோ ஒன்றை பற்றி ரகசியமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். மனோஜிடம் சமுத்திரன் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று அவன் பாடம் எடுத்துக் கொண்டிருக்க மனோஜின் கண்கள் கோபத்தோடும் சலனத்தோடும் விந்தியாவையே கவனித்துக் கொண்டிருந்தன.
தன் கணவன் மீது இத்தனை பெரிய பழி இருக்கும் போதும் அவள் இயல்பாய் அமர்ந்திருப்பது அவனைப் பெரிதும் குழப்பமடையச் செய்தது. அதுவும் இல்லாமல் சமுத்திரன் மீது மனோஜிற்கு நம்பிக்கை குறைவாகவே இருந்தது.
இதற்கிடையில் நீதிபதி கம்பீரமாய் வந்து தம்முடைய இருக்கையில் அமர, எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு விதமான பதட்டம் தொற்றிக் கொண்டது சமுத்திரனை தவிர. அவன் மட்டும் ஒருவிதமான அதீத நம்பிக்கையோடு காட்சியளித்தான்.
நீதிபதி இன்ஸ்பெக்டர் சிவாவை பார்த்து, “முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையில் சொன்னது போல் மனோஜை ஆஜர் படுத்தினீர்களா?” என்று கேட்க
“எஸ் யுவ்ர் ஆனர்”என்று சிவா சொல்லி அவனைக் கூண்டின் மீது ஏறி நிற்கும்படி சொன்னான்.
“இப்போது இந்த வழக்கு சம்பந்தபப்பட்ட வாதங்களைத் தொடங்கலாம்”.
சமுத்திரன், “எனது கட்சிக்காரர் மனோஜுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இருப்பினும் எதிர்க்கட்சி வக்கீல் தம்முடைய வாதத்திறமையால் எமது கட்சிக்காரரை குற்றாவாளி என்ற பிரம்மையை உருவாக்கி நீதமன்றத்தில் ஆஜர் படுத்த வைத்திருக்கிறார்.
ஒரு பொய்யை உண்மை முலாம் பூசி எல்லோரையும் ஏமற்றும் கைதேர்ந்த வித்தையை தெரிந்தவர் எதிர்க்கட்சி வக்கீல் என்பதில் எனக்கு ஐயப்பாடில்லை.
அப்படியே எனது கட்சிக்காரரே குற்றவாளி என வைத்துக்கொண்டாலும், எதிர்க்கட்சி வக்கீல் அது சம்பந்தமாக எந்தவித வலுவான ஆதாரத்தையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. இனிமேலும் முடியாது.
ஆதித்தியாவிற்கு ஏற்கனவே என் கட்சிக்காரர் மீது தனிப்பட்ட முறையில் வன்மம் இருப்பதைத் தீர்த்துக் கொள்ள இப்படி ஒரு நாடகத்தை அவருடைய வக்கீலின் துணையோடு அரங்கேற்றியுள்ளார்.
இவை எல்லாம் ஒரு புறமிருக்க கேத்ரீனின் இறப்பு கொலையா தற்கொலையா என்ற பெரும் குழப்பத்தோடு இருக்கும் எதிர்க்கட்சி வக்கீல் கொலையாளி என என் கட்சிக்காரர் மனோஜை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது” என்று சமுத்திரன் சொல்லி முடித்தான்.
நீதிபதி சுபாவை பார்த்து “நீங்கள் உங்கள் வாதங்களை எடுத்துரைக்கலாம்” என்றார்.
“இந்த வழக்கை பொறுத்தவரை என் கட்சிக்காரர் ஆதித்தியாவை குற்றாவாளி என போலீஸ் தரப்பு ஒருதலைபட்சமாய் விசாரித்துக் கூண்டில் ஏற்றி விட்டது. ஆனால் காவல்துறை மனோஜிடம் இதுவரையில் எந்தவித விசாரணையும் நடத்தவில்லை.
ஏனென்றால் பணம் செல்வாக்கு பதவி என சேரக்கூடாதது எல்லாம் ஒன்றாய் சேர்ந்த மொத்த வடிவமாய் நிற்கிறார் இந்த மனோஜ். வழக்கின் உண்மை குற்றவாளியை தோலுரித்துக் காட்டுவதன் மூலமாகத்தான் என் கட்சிகாரர் ஆதித்தியாவை நிரபராதி என நிருபிக்க முடியுமே எனில் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இது கொலையா தற்கொலையா என்ற குழப்பம் எனக்கு மட்டுமில்லை. இங்கிருக்கும் எல்லோருக்கும் இருக்கிறது. கேத்ரீன் தனித்து வாழ பழகியவள். பெரும் நிர்வாகத்தைக் கட்டிக்காப்பவள். தைரியத்தின் மறுவுருவம் என்று சொல்லலாம்.
இருப்பினும் ஒரு பெண்ணிற்கு அவளால் தாங்க முடியாத துன்பம் நேரிடும் போது… அதை அவளால் சகித்துக் கொள்ள முடியாமல் போகும் போது… மனக்குழப்பத்தின் காரணமாக தற்கொலை என்பது தீர்வாய் அவளுக்குத் தோன்றி இருக்கலாம். அப்படி ஒரு நிலைக்கு கேத்ரீனை தள்ளியவனும் கொலைக் குற்றம் செய்யும் கொலையாளிக்கு நிகரானவனே.
அந்த உண்மையைக் கண்டறிய வேண்டுமெனில் கூண்டில் நிற்கும் இந்த மனோஜை சில கேள்விகள் கேட்க அனுமதிக்க வேண்டும் யுவர் ஆனர்”
நீதிபதி, “ப்ரொசீட்”என்றார்.
சுபா மனோஜ் நிற்கும் கூண்டின் அருகில் வந்து நின்றாள்.
“நீங்கதானே மனோஜ்?”
“ஆமாம்”
“உங்களுடைய அப்பா பெயர் என்ன?”
“வித்யாதரன்”
“சென்டிரல் மினிஸ்டர் வித்யாதரன்தானே”
உடனே சமுத்திரன், “அப்ஜக்ஷன் யுவர் ஆனர்… என் கட்சிக்காரர் குற்றவாளியா இல்லையா என்று விசாரிப்பதை விடுத்து அவரின் குடும்ப வரலாறை கேட்டு அவரின் சமுதாய அந்தஸ்த்தை குலைக்கும் நோக்கில் செயல்படுகிறார் “
சுபா நீதிபதியின் புறம் திரும்பி, “மனோஜின் தந்தையின் செல்வாக்கை தெரிந்து கொண்டால்தான் காவல்துறை இவரை விசாரிப்பதில் தயக்கம் காட்டுவதின் பிண்ணனி உங்களுக்கு புரியும் யுவர் ஆனர் “
நீதிபதி, “அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்… நீங்க விசாரணையைத் தொடரலாம்” என்றார்.
சமுத்திரன் கோபக் கனலோடு அமர்ந்து கொள்ள சுபா தன் விசாரணையை மனோஜிடம் தொடர்ந்தாள்.
“நீங்க சொல்லுங்க மனோஜ்… சென்ட்ரல் மினிஸ்டர் வித்யாதரன்தானே உங்க அப்பா”
“ஆமாம்”
“உங்க அப்பாவோட பதவியும் பெயரும் இருக்கிற அகந்தையில் பல பெண்கள் கிட்ட நீங்க அநாகரிகமா நடந்துக்கிட்டு இருக்கீங்க… இல்லையா?”
“நான் அந்த மாதிரியானவன் இல்லை… அதே போல் பதவி பெயர் புகழுக்கு எல்லாம் என் அப்பா மயங்குகிறவர் இல்லை… என்னையும் அப்படி வளர்க்கல… அவருக்கு மக்கள் சேவைதான் முக்கியம்…
அதனாலதான் என் மேல விழுந்த அபாண்டமான பழியை பொய்யாக்க ஒருநாளும் அவருடைய பதவி பெயரை பயண்படுத்தக்கூடாதுனு கண்டிப்பா சொல்லி இருக்காரு” என்று அவன் ரொம்பவும் பவ்யமாய் நடித்துக் கொண்டிருப்பதை சுபாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“இத பாருங்க மனோஜ்… இது கட்சி மீட்டிங் இல்ல… இங்க இருக்கிறவங்க யாரும் ஏமாந்த பொது ஜனமும் இல்ல… அதனால கொஞ்சம் உண்மையே பேசுங்க”
“நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் இதுதான் உண்மை”
“உண்மைன்னே நம்புறேன்… இவ்வளவு ஒழுக்கமா இருக்கிற உங்களை ஏன் கல்லூரியை விட்டு நீக்கினாங்க?”
“என்னைத் தப்பானவனும்… பெண்கள் கிட்ட தப்பா நடந்துக்கிறேன்னும் வாய் கூசாம ஒரு பொய்யான பழியை என் மேல போட்டு கல்லூரியை விட்டு நீக்கிட்டாங்க”
“அத்தனை பெரிய கல்லூரி நிர்வாகம் உங்க மேல ஆதாரம் இல்லாம பொய்யான பழியைப் போட்டுட்டாங்கன்னு நீங்க சொல்றது நம்பும்படியாக இல்லை” என்றாள்
“அப்படின்னா எனக்கு ஒரு சந்தேகம்… உங்கக்கிட்ட கேட்கலாமா” என்றான் மனோஜ்
“கேளுங்க” என்றாள் சுபா.
“இந்த வழக்கில் ஆதித்தியாவிற்கு எதிராக வலுவான ஆதாரம் இருக்கும் போதும் நீங்க அவர் குற்றாவாளி இல்லன்னும்… சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சு போச்சுனு நீங்க வாதாடிறீங்க… ஏன் என்னையும் அதே போல் சந்தர்ப்பும் சூழ்நிலையும் தப்பானவனாய் என் கல்லூரி நிர்வாகம் முன் நிறுத்திருக்கக் கூடாது… உங்க கட்சிக்காரருக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?”
இந்தக் கேள்வி சுபாவிற்குக் கொஞ்சம் நெருக்கடியாகவும் திகைப்பாகவும் இருந்தது. அதே சமயத்தில் ஆதித்தியாவிற்கு மனோஜின் குணம் நன்றாகத் தெரியும். ஆனால் இன்று அவனுடைய தெளிவு ஆதித்தியாவிற்கும் ரொம்பவும் ஆச்சர்யமாய் இருந்தது.
எல்லாவற்றை மீறி சுபா அவன் சிக்கப் போகும் ஒரு தருணத்திற்காகக் கேள்விகளை வரிசையாய் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“சரி அது போகட்டும்… கேத்ரீனுக்கும் உங்களுக்குமான பழக்கம் எப்படி?”
“கேத்ரீனை நான் மனதார நேசித்தேன்… அவளுக்கும் என் மீது கொஞ்சம் விருப்பம் இருந்தது. ஆனா ஆதித்தியா எங்க இருவருக்குள்ள பிரிவினை உண்டாக்கினது மட்டுமில்லாம என்னைப் பத்தி தப்புத் தப்பா சொல்லி கேத்ரீனை நம்பவும் வைச்சுட்டான்”
“கேத்ரீன் இன்னைக்கு உயிருடன் இல்லாததினால் நீங்க சொல்வதெல்லாம் உண்மையா மாறிடாது மனோஜ்”
“கேத்ரீன் உயரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” என்று கண்ணீர் வடித்தான். சுபாவிற்கு அவன் நிதானமும் பதட்டமில்லாமல் கோர்வையாய் பொய் சொல்லும் விதம் அவளை மிரள வைத்தது.
“கடைசியாய் நீங்க கேத்ரீனை எப்போ சந்திச்சீங்க?”
“அது…” என்று கொஞ்சம் இழுத்தான் மனோஜ்.
“மறந்துட்டீங்களா? நான் வேணும்னா ஞாபகப் படுத்தட்டுமா?”
“அவசியமில்லை… கேத்ரீனோட இறப்பு நடந்த அன்று இரவுதான் கடைசியா அவங்களை ஒரு ப்ரைவட் பாரில் பார்த்தேன்… பேசினேன்…” என்று அலட்சியமாகச் சொன்னான்.
அவன் இல்லை என்று மறுப்பான் அல்லது தடுமாறுவான் என்று எதிர்பார்த்தாள். சுபாவிற்கு இம்முறையும் அவனுடைய தெளிவு மிரட்சியாய் இருந்தது. அவனிடம் கேள்விகளைத் தொடர்ந்தாள் சுபா
“அப்படின்னா அவங்களைக் காயப் படுத்துகிற அளவுக்கு நீங்க ஏதோ பேசியிருக்கீங்க… குடிக்கிறளவுக்கு அவங்களுக்கு நீங்க மனஅழுத்தம் கொடுத்திருக்கீங்க… உங்களுடைய சந்திப்புதான் கேத்ரீனோட தற்கொலைக்கு காரணமாவே அமைஞ்சிருக்கு… சரிதானா மனோஜ்?”
“இல்லை…” என்று திட்டவட்டமாய் மறுத்தான் மனோஜ்.
“அப்போ கேத்ரீன்கிட்ட நீங்க அப்படி என்ன பேசினீங்க?”
“நான் கேத்ரீனை உண்மையா காதலிச்சேன்னு சொன்னேன். ஆதித்தியாதான் நம்ம பிரிவுக்குக் காரணம்னு சொன்னதும்… பாவம் கேத்ரீனால் அதை நம்ப முடியல… ஆதித்தியாவின் சுயரூபத்தைப் பற்றி தெளிவா புரியும்போது கேத்ரீன் அவனைக் காதலிச்சதுக்காக அவமானப்பட்டாங்க…
அதுவே கேத்ரீன் குடிக்கிறதுக்கும் மன அழுத்தத்திற்கு காரணமாய் அமைஞ்சது… ஆனா அதுக்காக எல்லாம் கேத்ரீன் தற்கொலை பண்ணி இருக்கிற ஆள் இல்லை. இந்த ஆதித்தியாதான் கேத்ரீன் கொலைக்கு நிச்சயம் காரணமா இருக்க முடியும்”
“சபாஷ் மனோஜ்… எவ்வளவு பிரமாதமா பொய் சொல்றீங்க! கேத்ரீனை நீங்க காதலிக்கிறேன்னு சொன்னது அப்பட்டமான பொய்… நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் சுயநினைவு இல்லாத போது அவ வாழ்கையை நீங்க கெடுத்திருக்கீங்க…
பாவம்… அந்த உண்மை தெரியாத கேத்ரீன்கிட்ட நீங்க எல்லாத்தையும் சொல்ல அதை அவங்களால தாங்கிக்க முடியல. ஆதித்தியா மேல பழி போட்டதுனால ஏற்பட்ட குற்றவுணர்வும் தன்னோட வாழ்க்கையை உங்கள மாதிரி ஒருத்தரால் கெட்டுப்போச்சே என்கிற வேதனையும் கேத்ரீனை குடிக்க வைச்சிருக்கு.
அந்த போதையினால் ஏற்பட்ட மனஅழுத்தம் கேத்ரீனை தற்கொலை பண்ணிக்க வைச்சிருக்கு… இதுதான் உண்மை… அதுக்கான ஆதாரமும் என்கிட்ட இருக்கு”
உடனே சமுத்திரன் எழுந்து கொண்டு, “அந்த ஆதாரத்தைக் காண்பீங்க மிஸஸ். சுபா” என்றான்.
சுபா பதட்டமாய் சிவாவின் முகத்தைப் பார்த்தாள். சிவா காண்பிக்கச் சொல்லி தலையசைக்க, அவள் நீதிபதியின் புறம் திரும்பினாள். ஏற்கனவே நடந்த விசாரணையின் போது ரகசியமான ஆதாரம் ஒன்றை சமர்ப்பித்தாள்.
அது மனோஜும் கேத்ரீனும் ஒரு பாரில் நின்று பேசி கொண்டதற்கான கண்காணிப்புக் கேமராவில் பதிந்த வீடியோ ஆதாரம். அது எல்லோர் முன்னிலையில் போட்டு காட்டப்பட அதில் மனோஜ் ஏதோ பேச, கேத்ரீனின் முகம் வேதனைப்படுவதையும் கண்கலங்கி நிற்பதும் பதிவாகி இருந்தது. ஆனால் அந்த ஆதாரத்தில் அவர்கள் சம்பாஷணைகள் கொஞ்சம் கூட கேட்கவில்லை.
அந்த ஆதாரத்தை சுபா முதலிலேயே நீதிபதியிடம் கொடுத்து ரகசியமாய் வைத்துக் கொள்ளச் சொன்னதன் காரணம் மனோஜ் தான் கேத்ரீனை சந்திக்கவேயில்லை என்று பொய்யுரைப்பான் என எதிர்பார்த்தாள். கடைசியில் எல்லாம் சுபா எண்ணத்திற்கு நேர்மாறாய் அமைந்தது.
சமுத்திரன் ஒருவாறு அந்த ஆதாரத்தை யூகித்திருக்க வேண்டும். அதில் குரல் பதிவாக வாய்ப்பில்லை என்று கணித்துவிட்டு அதற்கு ஏற்றவாறு பொய்யை தயார் செய்து அதில் மனோஜை கச்சிதமாய் நடிக்க வைத்திருக்கிறான்.
சமுத்திரன் மேலும் சுபாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வாதத்தை எடுத்துரைத்தான்.
“இந்த ஆதாரத்தில் மனோஜ் கேத்ரீன் சந்திப்பு மட்டுமே பதிவாகியிருக்கும் நிலையில் எந்த அடிப்படையில் மனோஜ் மீது இத்தனை பெரிய குற்றச்சாட்டைத் திணிக்கிறீர்கள் மிஸஸ் சுபா” என்றான்.
“இந்த ஆதாரத்தில் குரல் பதிவாகாத காரணத்தால் நான் சொல்வது எல்லாம் பொய்யென்று ஆகிவிடாது… மனோஜ் மீதான குற்றத்தை நிச்சயம் நிருபிப்பேன்” என்று சுபா உணர்ச்சிவசப்பட…
சமுத்திரன் தன் இருக்கையில் அமர்ந்தபடி, “முடிந்தால் முயற்சி செய்யுங்கள்” என்றான் சவால் தொனியில்.
43
அனல் பறக்கும் விவாதம்
சுபாவின் நிதானமும் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து கொண்டே வந்தது. மனோஜிடம் சுபா கண்டிப்புடன் இன்னும் சில கேள்விகளைக் கேட்டாள்.
“இத பாருங்க மனோஜ்… இது வரையில் நீங்க சொன்ன கதை எல்லாம் சரி… இனிமே நீங்க சொல்ல போற ஒவ்வொரு பதிலும் உங்க விதியை தீர்மானிக்கப் போகுது… அதனால கொஞ்சம் ஜாக்கிரதையா பதில் சொல்லுங்க…” என்றாள்.
அதற்கு மனோஜ் ‘தன்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது‘ என்று மனதில் நினைத்தபடி ஏளனச் சிரிப்புச் சிரித்தான்.
சுபா தன் மனதில் நிரம்பிய கோபத்தை மறைத்தபடி மனோஜின் முன் நின்று கேள்விகள் கேட்டாள்.
“நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் ஆதித்தியா பிறந்த நாளுக்காக ஏற்பாடு பண்ண விருந்துக்கு நீங்க போனீங்களா?”
“ ஆமாம் போனேன்” என்றான் இயல்பாக
“கேத்ரீன் உங்களை அழைச்சாங்களா?”
“இல்லை”
“அப்புறம் ஏன் போனீங்க? அவங்க மேல உங்களுக்கு இருந்த வக்கிரத்தை தீத்துக்கவா?…”
“நோ… நான் மனசில இருந்த காதலை கேத்ரீனை பார்த்து சொல்லலாம்னு போனேன்… அதுல ஏதாவது தப்பு இருக்கா?” என்றான்
“ திஸ் இஸ் டிஸ்கஸ்டிங்” என்று சுபா மனதில் நினைத்துக்கொண்டு பல்லை கடித்துக் கொண்டாள்.
“நீங்க செய்த தப்பிற்குச் சாட்சிகள் இல்லைனு நினைச்சுக்கிட்டு பொய்களை அடுக்காதீங்க”
“நான் எந்தப் பொய்யும் சொல்லல. அன்னைக்கு நான் கேத்ரீனை சந்திக்கப் போனேன்… ஆனா கேத்ரீன் என் கண்முன்னாடியே அந்த ஆதித்தியாவை காதலிக்கிறேன்னு சொன்ன பிறகு என்னால ஒரு நிமிஷம் கூட அங்க இருக்க முடியாம நான் உடனே புறப்பட்டுட்டேன். ஆனா ஆதித்தியா தான் என்ன நினைச்சானோ அதை சாதிச்சிட்டான்”
“நீங்க செய்த குற்றத்தை ஆதித்தியா மேல போடாதீங்க”
உடனே சமுத்திரன் எழுந்து நின்று, “என் கட்சிகாரர்தான் தப்பு செய்தார்னு உங்களால நிரூபிக்க முடியுமா? அதே போல கேத்ரீன் சந்தேகப்பட்டது மாதிரி ஆதித்தியா தப்பு செய்யலனு உங்ககிட்ட ஆதாரம் இருக்கா?”
சுபா சிரித்தபடி, “இருக்கு சமுத்திரன்… ஆதித்தியா தப்பு செய்யலனும் என்னால நிரூபிக்க முடியும்… உங்க கட்சிக்கார்தான் எல்லாத்துக்கும் காரணம்னும் என்னால நிருபிக்க முடியும்” என்றாள்.
சமுத்திரன், “நிரூபிங்க மிஸஸ் சுபா… அதுக்காகத்தான் நானும் காத்திட்டிருக்கேன்”
சுபா நீதிபதியை பார்த்து, “கேத்ரீனிடம் பி. ஏ வாக இருந்த மிஸஸ். ஷபானாவை இந்த வழக்கு சம்பந்தமாய் விசாரிக்க அனுமதி வழங்கணும் யுவர் ஆனர்” என்றாள்.
“எஸ் ப்ரொசீட்” என்றார்.
“ஷபானா ஷபானா ஷபானா” என்று மும்முறை அழைத்ததும் ஷபானா கூண்டில் ஏறி நின்றாள்.
“நீங்கதானே ஷபானா?”
“ ஆமாம்”
“நீங்க அமரேஷ் லிக்கர் பாஃக்டரியில் கேத்ரீனிடம் பி. ஏவா வேலை பாத்துட்டு இருந்தீங்களா?”
“ஆமாம்”
“எத்தனை வருஷமா கேத்ரீன்கிட்ட வேலை பாத்திட்டிருந்தீங்க?”
“எட்டு வருஷமா” என்றாள்
“அப்போ ஆதித்தியாவை உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் தானே?”
“நல்லாவே தெரியும். கேத்ரீனோட கிளோஸ் ஃபிரண்ட்… அஸ் வெல் அஸ் மேடமோட ஃபிலாசஃபர், கைடுனு கூட சொல்லலாம்”
“சரி… கேத்ரீன் நடத்துகிற பார்ட்டி, மீட்டிங்னு எல்லாத்தோட ஏற்பாட்டையும் நீங்கதான் பண்ணுவீங்களாமே?”
“ஆமாம்… மேடம் அந்த மாதிரியான முக்கியமான பொறுப்புகளை என்னை நம்பித்தான் கொடுப்பாங்க”
“அப்படின்னா நாலு வருஷத்துக்கு முன்னாடி கேத்ரீன் ஆதித்தியா பிறந்த நாளுக்காக நீங்கதான் விருந்துக்கு ஏற்பாடு பண்ணி இருந்தீங்க… ஞாபகம் இருக்கா உங்களுக்கு?”
“அத்தனை சீக்கிரத்தில் அன்று நடந்ததை எல்லாம் மறக்க முடியாது… நான்தான் பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணேன்… மேடம் ஆதித்தியா பேரில ஐம்பது பர்சன்ட் ஷேரை மாத்த சொன்னாங்க… அந்த டாக்குமென்ட்டையும் நான்தான் ரெடி பண்ணேன்…
பட் ஆதித்தியா சார் மேடமோட ப்ரப்போஸல், கிஃப்ட் இரண்டுத்தையும் ரிஜெக்ட் பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் மேடம் டிப்ரஸ் ஆகி ரொம்பவும் அதிகமாகக் குடிச்சி தடுமாறிட்டு இருந்தாங்க… ஆதித்தியா சார்தான் அவங்கள ரூமுக்கு அழைச்சிட்டு போய் படுக்க வைச்சாரு”
“ஆதித்தியா கேத்ரீன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டு இருப்பார் என்ற பழி உண்மையா இருக்குமா? ஏன்னா நீங்க அந்த இடத்தில இருந்திருக்கீங்க… உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும்”
“அப்படி ஒரு செயலை ஆதித்தியா சார் செஞ்சிருக்க வாய்ப்பில்லை. மேடமோட ரூமுக்கு போன உடனே சார் திரும்பி வந்ததை நான் பார்த்தேன். பார்ட்டி முடிஞ்சு எல்லோரையும் அனுப்பிட்டு புறப்படும் போது ரொம்ப லேட்டாயிடுச்சு… அன்னைக்கு சார்தான் என்னை வீட்டில டிராப் பண்ணாரு”
“சரி… எதிர்க்கே நிற்கிறாரே மிஸ்டர் மனோஜ்… அவரை நீங்க அந்தப் பார்ட்டில பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கா?”
“நல்லா ஞாபகம் இருக்கு. பார்ட்டில மேடமும் இவரைப் பாத்து டென்ஷன் ஆனாங்க… அப்புறம் தேவையில்லாம பிரச்சினை வேண்டாம்னு அமைதியா இருந்துட்டாங்க”
“மனோஜ் பார்ட்டில இருந்து வெளியே கிளம்பும் போது நீங்க பார்த்தீங்களா?”
“இல்ல பார்க்கல”
“தட்ஸ் ஆல் யுவர் ஆனர்… ஆதித்தியா கேத்ரீன்கிட்ட தப்பா நடந்துக்கல என்பதற்கு இந்த ஆதாரமே போதுமானது”
உடனே சமுத்திரன் எழுந்து நின்று கொண்டு, “ஷபானாவை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் யுவர் ஆனர்” என்றான்.
“எஸ் ப்ரொசீட்” என்று அனுமதி வழங்க சமுத்திரன் ஷபானா நின்றிருந்த கூண்டிற்கு அருகில் வந்து நின்றான்.
“மிஸஸ் ஷபானா… ஆதித்தியா தப்பு செய்யலனு இவ்வளவு தெளிவா சொல்ற நீங்க, கேத்ரீனுக்கு ஆதித்தியா மீது ஏற்பட்ட தப்பான அபிப்ராயத்தை சரி செய்திருக்கலாமே”
“எனக்கு முன்னமே அவர்களுக்குள்ள இருந்த பிரச்சனை பத்தி தெரிஞ்சிருந்தா நான் நிச்சயம் சால்வ் பண்ணி இருப்பேன்… பட் கடைசி வரைக்கும் கேத்ரீன் மேடம் இத பத்தி என்கிட்ட சொல்லாத போது நான் என்ன பண்ண முடியும்?”
“சரி… மனோஜை நீங்க பார்ட்டில பாத்தீங்க… சரி… ஆனா கேத்ரீனோட அறைக்கு போன மாதிரியோ இல்ல திரும்ப வந்த மாதிரியோ பாத்தீங்களா?”
“இல்ல”
“சரி நீங்க போகலாம்” என்று சொல்லிவிட்டு,
நீதிபதியின் புறம் திரும்பிய சமுத்திரன், “ஆதித்தியா தப்பு செய்யலனு திட்டவட்டமா சொல்ற ஷபானா அதே நேரத்தில் மனோஜை தப்பு செய்தார்னு சுட்டி காட்ட முடியல. தேவையில்லாம இந்த வழக்கில் என் கட்சிக்காரர் மனோஜை இழுத்து விட்டிருக்காங்க. அதற்குக் காரணம் மனோஜின் மீது ஆதித்தியாவிற்கு இருக்கும் தனிப்பட்ட கோபமும் வஞ்சமும்தான்” என்றார்.
“அப்படி ஒரு எண்ணம் என் கட்சிக்காரருக்கு நிச்சயமா இல்லை… நீங்க இப்படி எல்லாம் பேசி மனோஜை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கப் பார்க்கிறீர்கள்”
“அப்படின்னா தப்பு செய்தார் என்பதற்கான ஆதாரம் எங்கே?”
சுபா கொஞ்சம் தயங்கியபடி சிவாவின் முகத்தைப் பார்க்க, அவனின் கைகடிகாரத்தைக் காண்பித்து சைகையில் ஏதோ சொன்னான்.
சுபாவின் மெளனத்தைச் சாதகமாகக் கொண்டு சமூத்திரன் நீதிபதியின் பக்கம் திரும்பினான்.
“என் கட்சிக்காரருக்கு எதிரான ஆதாரம் என்று இதுவரை எதிர்கட்சி வக்கீல் எதையும் காண்பிக்கவில்லை. இதை கருத்தில் கொண்டு என் கட்சிக்காரருக்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை என கணம் நீதிபதி அவர்கள் அறிவிக்க வேண்டும்” என்றதும்…
சுபா பதட்டத்தோடு, “என் ஆதாரத்தை உங்கள் முன் நிறுத்த எனக்கு அரைமணி நேரம் அவகாசம் வேணும் யுவர் ஆனர்” என்றாள்
“இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல்“ என்றான் சமுத்திரன் .
“உங்கள் கட்சிக்காரர் குற்றவாளி இல்லாத பட்சத்தில் அரைமணி நேரத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது?”என்று சுபா சமுத்திரனை கேட்டாள்
“என் கட்சிக்காரர் தவறு செய்யாத போது அவர் எதற்காக காத்திருக்க வேண்டும்?”
“காத்திருப்பது அல்ல உங்கள் பிரச்சனை… மாட்டிக் கொள்வோமோ என்ற பயம்தான் பிரச்சனை”
“எங்களுக்கு எதைக் கண்டும் பயமில்லை”
இவ்வாறாகச் சமுத்திரனும் சுபாவும் அனல் பறக்க விவாதம் மேற்கொண்டிருக்க நீதிபதி, “ஆர்டர் ஆர்டர் ஆர்டர்” என்று கையில் உள்ள சுத்தியலால் அடித்தார்.
“இது உங்க வீடில்லை… இது கோர்ட்… அரைமணி நேரம் அவகாசம் கொடுக்கணுமா என்பதை ஒரு நீதிபதியாய் நான்தான் முடிவு பண்ணனும். நீங்க இரண்டு பேரும் உங்கள் இருக்கையில் அமருங்க…” என்றதும் இருவரும் அமைதியாய் தங்கள் தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.
“இத பாருங்க சுபா… நான் உங்களுக்கு நீங்க கேட்டது போல் அரைமணி நேரம் அவகாசம் தர்றேன்… அதற்குள் மனோஜ் மீது நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டை நிருபிக்கணும்… இல்லன்னா மனோஜ் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றதுனு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டி வரும். இந்த வழக்கின் விசாரணை அரைமணி நேரம் கழித்து மீண்டும் நடைபெறும்” என்று சொல்லி நீதிபதி தம் இருக்கையில் இருந்து எழுந்து சென்றார்.
சுபா வேகமாக சிவாவின் அருகில் போய், “ ஃபாதர் அந்தோனி எப்போ வருவார் அண்ணா?”
“கண்டிப்பா வந்துருவாரு. டென்ஷன் ஆகாத சுபா… உன் நம்பிக்கையை விட்டு விடாதே. இப்ப நீ செய்ய வேண்டியதெல்லாம் சமுத்திரனை பேச விடாம பண்ணனும்… மனோஜுக்கும் சமுத்திரனுக்குமான பாண்டிங்கை பிரேக் பண்ணனும்” என்றான்.
“நான் எப்படி அண்ணா?”
“உன்னால மட்டும்தான் முடியும் சுபா” என்று சொல்ல… சுபா தான் செய்ய வேண்டியது என்னவென்று யோசித்து விட்டு சமுத்திரனிடம் சென்றாள்.
சமுத்திரனிடம் சுபா தனியாகப் பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றாள். அவளைப் பார்த்தும் ஏளனப் புன்னகை புரிந்தவன்… அவள் அவனிடம் பேச பேச கொஞ்சம் கொஞ்சமாய் டென்ஷனாக ஆரம்பித்தான்.
மனோஜ் சுபாவும் சமுத்திரனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் பார்த்தான் என்பதை விட பார்க்கும் இடத்தில் அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
இவை எல்லாம் ஒரு புறமிருக்க நம் காதல் பறவைகள் எப்போதும் போல் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அரைமணி நேரம் அவகாசம் முடிய எல்லோரும் தங்கள் தங்கள் இடங்களில் அமர்ந்தனர். மனோஜின் முகத்தில் ஒரு விதமான குழப்பம் தென்பட்டது. சமுத்திரனின் கண்கள் ஒரே இடத்தில் நிலை கொண்டு ஏதோ ஒன்றை பற்றி ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தன. சுபா இம்முறை ரொம்பவும் தெளிவாகவும் உற்சாகமாகவும் இருந்தாள்.
நீதிபதி தம் இருக்கையில் அமர்ந்து விட்டு சுபாவை பார்த்தார்.
சுபா எழுந்து நின்று கொண்டு, “யுவர் ஆனர்… கேத்ரீனுடன் கடைசி வரை துணையாயிருந்த ஃபாதர் அந்தோணியை விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் “ என்றாள்.
“எஸ் ப்ரொசீட்” என்றார்.
சமுத்திரன் எதைப்பற்றியும் கவனிக்காமல் இருக்க, மனோஜ் அவன் முகத்தைப் பார்த்து சலனமுற்றிருந்தான்.
“ஃபாதர் அந்தோணி… ஃபாதர் அந்தோணி” என்று அழைக்க ஃபாதர் அந்தோணி கூண்டில் ஏறி நின்றார்.
சுபா அவர் அருகில் போய் நின்று கேள்விகளைத் தொடுத்தாள். அந்தோணியின் முகத்தில் அமைதியும் நிதானமும் நிரம்பி இருந்தது.
“நீங்கதானே ஃபாதர் அந்தோணி?”
“ஆமாம்”
“கேத்ரீனை உங்களுக்குத் தெரியுமா?”
“நல்லாவே தெரியும்… ஏழைகள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய அந்த ஆண்டவன் அனுப்பிய தேவதை” என்றார்
“நீங்க கேத்ரீன் பற்றிய ஒரு ரகசியத்தை இந்த நீதிமன்றத்தில் மறைக்காம சொல்லணும்”
“அதுதான் கர்த்தரின் விருப்பம்னா… நான் நிச்சியமா சொல்றேன்”
44
பொய்மையும் வாய்மையிடத்து
“சில வருடங்களுக்கு முன்பு கேத்ரீன் உங்க ஆசிரமத்தில் ஒரு பிறந்த குழந்தையை சேர்த்தது உண்மைதானே?”
“ஆமாம்…”
“அந்த குழந்தையோட பெயர்? “
“சோபியா வேலட்டீனா”
“இந்தப் பெயரை கேத்ரீனே அந்தக் குழந்தைக்கு வைச்சாங்களோ?”
“ஆமாம்”
உடனே சுபா நீதிபதியின் பக்கம் திரும்பி, “நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர். சோஃபியா என்பது கேத்ரீனின் அம்மாவின் பெயர்… அதே போல வேலட்டீனா என்பது கேத்ரீனோட கடைசிப் பாதிப் பெயர்” என்று சொன்னாள்.
மீண்டும் ஃபாதரின் பக்கம் திரும்பி கேள்விகளைத் தொடர்ந்தாள்.
“ஃபாதர்… அந்த குழந்தையின் மீது கேத்ரீனுக்கு தனிப்பட்ட முறையில் பிரியம்… இல்லையா?”
“ஆமாம்… அந்தக் குழந்தைக்கான செலவுகளையெல்லாம் தானே தனிப்பட்ட முறையில் பாத்துப்பாத்து கவனிச்சிக்கிட்டாங்க”
“அந்தக் குழந்தையின் மீது கேத்ரீனுக்கு அப்படி என்ன பிரியம்?”
“அது எனக்குத் தெரியாது… என் வாழ்க்கையை மாற்றியது அந்தக் குழந்தைதான்னு கேத்ரீன் அடிக்கடி சொல்லுவாங்க… அதுவும் இல்லாம அந்தக் குழந்தையைப் பார்க்க கேத்ரீன் வாரத்துக்கு ஒரு முறையாவது மறக்காம வந்துட்டு போவாங்க”
“அந்தக் குழந்தையை நாங்க இப்போ பார்க்கலாமா?” என்று சுபா கேட்க… ஃபாதர் தலையாட்டி விட்டு அந்த அழகான பெண் குழந்தையைத் தூக்கி கொண்டு வந்து கூண்டில் நின்றார்.
சுபா நீதிபதியின் புறம் திரும்பி, “இந்த சோஃபியா வேலட்டீனா என்ற சின்னக் குழந்தை கேத்ரீன் வளர்ப்பில் பல ஆதரவற்ற குழந்தைகளில் ஒன்றல்ல… அவள் வாழ்கையில் நடந்த மோசமான சம்பவத்தின் அடையாளம்.
சமுதாயத்தில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் பெண் துணை யாருமில்லாமல் ஒரு குழந்தையைத் தன்னுடையது என்று எப்படி அடையாளம் காட்ட முடியும்? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தான் கேத்ரீன் சிக்கிக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய தாயின் பெயரைக் கொடுக்க முடிந்த அவளால் தன்னுடைய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் கொடுக்க முடியவில்லை. இருப்பினும் அவளுடைய சொத்தில் சில பங்குகளை அந்தக் குழந்தையின் மீது எழுதி வைத்திருக்கிறாள்” என்று சொல்லி ஒரு பத்திரத்தை நீதிபதியிடம் கொடுத்தாள்.
“இந்தப் பெண் குழந்தை கேத்ரீனின் மகள்தான் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?”
நீதிபதி உட்பட எல்லோரும் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்க மனோஜின் முகம் வியர்த்துக் கொட்டியது. சமுத்திரனோ குறுக்கே எந்த விசாரணையும் செய்யாமல் அமைதியாக இருந்தான். அங்கேதான் சுபாவின் தந்திரம் வேலை செய்தது. சுபா இப்போது மனோஜை நெருங்கி வந்தாள்.
“என்ன மனோஜ்… அந்தக் குழந்தையை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?”
“இல்ல தெரியல”
“உங்க குழந்தையே உங்களுக்கு அடையாளம் தெரியல?”
“இல்ல… அது என் குழந்தை இல்ல”
“அந்தக் குழந்தை கேத்ரீனோடது… அப்போ அது உங்க குழந்தைதானே”
“நான்தான் எந்த தப்பும் செய்யலயே… அப்புறம் எப்படி அது என் குழந்தையாகும்?”
“கரெக்ட்… அப்படின்னா அந்தக் குழந்தை ஆதித்தியா உடையதா?”
“இருக்கலாம்”
“இப்ப வரைக்கும் ஆதித்தியாதான் தப்பு செஞ்சிருப்பார்னு அழுத்தம் திருத்தமா சொன்னீங்க…”
“அது… இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லும் போதே நாக்குழறியது.
“நீங்க ஏன் பதறீங்க மனோஜ்? டி என் ஏ டெஸ்ட் எடுத்தா தெரிந்துவிடப் போகுது”
இதைக் கேட்டதும் மனோஜுக்குப் பதட்டம் அதிகரிக்க… சுபா சமுத்திரனின் பக்கம் திரும்பி, “டி. என். ஏ டெஸ்ட் எடுக்க என் கட்சிக்காரர் ஆதித்தியாவிற்கு எந்த வித தயக்கமும் இல்ல… அதே போல் உங்க கட்சிக்காரர் மனோஜுக்கும் சம்மதம்தானே?”
சமுத்திரன் எழுந்து தயக்கமில்லாமல், “சம்மதம்” என்றான். அப்போது சமுத்திரனின் மனநிலை வேறொரு குழப்பத்தில் இருந்தது.
சுபா மனோஜின் புறம் திரும்பி, “உங்க வக்கீலே சொல்லிட்டாரு… இனிமே நீதிபதி அனுமதி கொடுக்க வேண்டியதுதான் பாக்கி… நீங்க கேத்ரீனை காதலித்தேன் என்று சொன்ன அப்பட்டமான பொய் முதல் எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிடும்.
அப்புறம் கேத்ரீனின் தற்கொலைக்கு நீங்கதான் காரணம்னு எந்த வித சந்தேகமும் இல்லாம நிரூபணம் ஆகிவிடும்… இனிமே எந்த பொய்யும் உங்களைக் காப்பாற்ற போவதில்லை” என்றாள்.
“என் வக்கீல் சொல்றார் என்பதுக்காக எல்லாம் டி. என். ஏ டெஸ்ட்டுக்கு என்னால ஒத்துக்க முடியாது”
“ஏன் ஒத்துக்க முடியாது? உங்க பயமே சொல்லுது… நீங்க கேத்ரீன் வாழ்கையைக் கெடுத்திருக்கீங்க. அந்த உண்மையை கேத்ரீன் கிட்ட சொல்லி அவளை வேதனை படுத்தி இருக்கீங்க… தற்கொலைக்கும் தூண்டி இருக்கீங்க… இந்த டி. என். ஏ டெஸ்ட்டில் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடுமோனு பயப்படுறீங்க…”
“நான் பயப்படல… கேத்ரீனோட இறப்புக்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை”
“பொய் சொல்லாதீங்க மனோஜ்… கேத்ரீனோட வாழ்க்கையைக் கெடுத்தது நீங்கனு நிரூபணமானதும் கேத்ரீனோட தற்கொலைக்கும் நீங்கதான் காரணம்னு தெரிந்துவிடும்”
“ஸ்டாப் இட்… நான் அன்னைக்கு தப்பு செய்தேன்… ஆனா கேத்ரீனோட இறப்புக்கு நான் காரணமில்லை” என்று மனோஜ் உரக்கச் சொல்ல… சுபா அமைதியாய் நிற்க… அந்த இடமே நிசப்தமாய் மாறியது.
பிறகு சுபா அங்கே இருந்த நிசப்தத்தைக் கலைத்தாள்.
“அப்படின்னா கேத்ரீன் சுயநினைவு இல்லாத போது அவளைக் கெடுத்தது நீங்கதான் இல்லையா?”
மனோஜ் தான் என்ன சொல்லிவிட்டோம் என உணர… சில நேரம் அமைதியானான்.
“பதில் சொல்லுங்க மனோஜ்… இனிமே மறைக்க என்ன இருக்கு? கேத்ரீன் தற்கொலைக்கும் நீங்கதான் காரணம்னு ஒத்துக்கோங்க”
“இல்ல நான் ஒத்துக்க மாட்டேன்… கேத்ரீன் தற்கொலையே பண்ணிக்காத போது நான் எப்படி அதுக்குக் காரணமா இருக்க முடியும்?” என்று மனோஜ் உளற சமுத்திரன் எழுந்து நின்று கொண்டான்.
“அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்… என் கட்சிக்காரரை எதிர்க்கட்சி வக்கீல் குழப்பிக் கொண்டிருக்கிறார்”
நீதிபதி உடனே, “வழக்கு இப்பதான் தெளிவான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது… நீங்க கொஞ்ச நேரம் அமைதியாய் உட்காருங்க சமுத்திரன்” என்று சொல்ல… சமுத்திரன் இயலாமையோடு அமர்ந்தான்.
சுபா மனோஜின் புறம் திரும்பினாள்.
“இனிமே பேசுவதற்கு எதுவுமில்லை மனோஜ்… நீங்கதான் கேத்ரீனின் தற்கொலைக்கு காரணம்னு உங்க பயமே காட்டிக் கொடுத்திடுச்சு”
மனோஜ் மெளனமாய் நின்றான்.
“யுவர் ஆனர்… மனோஜின் மெளனமே கேத்ரீனின் தற்கொலைக்குக் காரணம்னு உங்களுக்குத் தெளிவா புரிஞ்சிருக்கும்… அதுவுமில்லாம கேத்ரீன் சுயநினைவு இல்லாத போது அவளைக் கற்பழித்த காரணத்திற்காக ஐ. பி. சி செக்ஷன் 375, அவளை தற்கொலைக்கு தூண்டியதற்காக ஐ. பீ. சி செக்ஷன் 306ன் கீழ் தண்டனை வழங்க வேண்டும்” என்று சுபா சொல்ல மனோஜின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது.
நிச்சயம் தன் தந்தை வித்யாதரன் தன்னைக் காப்பாற்ற மாட்டார்… அவருக்கு அவரின் அரசியல் வாழ்க்கையே முக்கியம் என்று தோன்ற அவனின் மெளனம் கலைந்தது.
“கேத்ரீன் தற்கொலை பண்ணிக்கிட்டாதானே… அதற்கு நான் காரணமா இருக்க முடியும்?”
சுபா அவன் புறம் திரும்பி, “அப்படின்னா கேத்ரீனை கொலை பண்ணிருக்காங்கனு சொல்ல வர்றீங்களா?”
“ஆமாம்” என்றான் மனோஜ்.
“நீங்க சொல்றது நம்பும்படி இல்லை… ஏன்னா ஆதித்தியாவே கேத்ரீன் தானே கீழே விழுந்ததைப் பார்த்திருக்கார்”
“கேத்ரீன் தானா விழல… அதுதான் சமுத்திரனோட புத்திசாலித்தனம்” என்றான்.
சமுத்திரன் எழுந்து, “மனோஜ் சொல்வதெல்லாம் பொய்” என்றான்.
நீதிபதி “இத பாருங்க சமுத்திரன்… இப்படி எல்லாம் விசாரணையின் போது குறுக்கிடக்கூடாது… நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்களோ அதை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது சொல்லலாம்” என்றார்.
சுபா மனோஜை பார்த்து, “சமுத்திரன் பெரிய கிரிமினல் லாயர்… கொலை எல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்ல”
“பணத்துக்காக சமுத்திரன் எதையும் செய்வார்”
“நிறுத்துங்க மிஸ்டர். மனோஜ்… அவர் கிட்ட இல்லாத பணமா?”
“ஆமாம்… அவர் கிட்ட இல்லாத பணம்தான்… கோடிக்கணக்கில் எங்கப்பா பணம் கொடுக்கும் போது அவர் கொலையும் செய்வார்… அதுக்கு மேலயும் செய்வார்” என்று மனோஜ் சொல்லி முடிக்க சுபா பெருமூச்சிவிட்டாள்.
“உங்க அப்பான்னா… மினிஸ்டர் வித்யாதரனா?”
சுபா மனோஜிடம் கேட்க, அதற்குள் மனோஜின் மீது குறி பார்த்த துப்பாக்கியை ஆதித்தியா கவனித்தான்.
மனோஜின் கூண்டிற்கு அருகில் நின்றிருந்த ஆதித்தியா, “மனோஜ்” என்று கத்தி தள்ளிவிடத் துப்பாக்கி குண்டு ஆதித்தியாவின் வலது கையின் தோள்பட்டையைத் துளைத்து ரத்தம் சிதறியது.
எல்லோருமே சிலைப் போல் உறைந்து போக, சிவா தன் துப்பாகியை எடுத்து அந்த மர்ம நபரை ஒரே நொடியில் துப்பாக்கியால் சுட்டு ஒட விடாமல் செய்தான்.
அங்கே நடந்த சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கீழே நிலைதடுமாறி விழுந்த ஆதித்தியாவை சுபா தாங்கிக் கொள்ள, விந்தியா கண்ணீரோடு அருகில் ஓடி வந்தாள்.
ஆதித்தியா அந்த வலி வேதனையிலும், “எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக்கூடாது” என்று சொன்ன ஆதித்தியா… சுபாவிடம் ஷபானாவை காண்பித்து ஏதோ சொன்னான்.
சிலமணி நேரங்களில் ஆம்புலன்ஸ் வர ஆதித்தியாவை அழைத்துச் செல்ல பெரும் வேதனையைச் சுமந்தபடி விந்தியாவும் அவனுடன் சென்றாள். மனோஜிற்கு நடந்தவை எல்லாம் கனவா நினைவா என்று புரியாமல் நின்றிருந்தான்.
நீதிமன்றத்தில் எல்லாம் பழைய நிலைக்கு திரும்ப… நீதிபதி, “நீதிமன்ற வளாகத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது அவமானத்திற்குரிய ஒன்றாகும். இதைப் பற்றி விசாரணை நடத்தி காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிடுகிறேன்.
இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை மனோஜ் சமுத்திரன் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுகிறேன். இந்த வழக்கின் விசாரணையை இப்போதைக்குத் தொடர முடியாத காரணத்தால் நாளை ஒத்திவைக்கிறேன்” என்றார்.
சிலையென அமர்ந்திருந்த சுபா எழுந்து நின்று கண்களைத் துடைத்தபடி, “இந்த வழக்கின் விசாரணையை இப்போதே நடத்தி முடிக்காமல் போனால், நாளை பெரிய பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எல்லாமே தலை கீழாய் மாறிப் போகலாம். யுவர் ஆனர்” என்றாள்.
“ஏற்கனவே கால தாமதம் ஆகி விட்ட காரணத்தினால் இப்போதைக்கு இந்த வழக்கின் விசாரணையைத் தொடர முடியாது” என்று திருத்தமாய்ச் சொல்லிவிட்டு நீதிபதி எழுந்து கொள்ள…
சுபா மேலும், “உங்களை மறுத்து பேசுவதற்காக மன்னிக்கணும் யுவர் ஆனர்… ‘ ஜஸ்டிஸ் டிலேட் இஸ் ஜஸ்டிஸ் டினைட்‘ என்ற ஒரு வாக்கியம் உண்டு. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.
ஏற்கனவே இந்த வழக்கிற்கு வழங்கப்பட வேண்டிய நீதி ரொம்பவும் கால தாமதமாகவிட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்னும் சில நாட்கள் ஒத்தி வைக்கப்படுவது சரயில்லை…
உண்மையை இன்று வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியாமல் போனால் அது மீண்டும் இருளிலேயே சென்று மறைந்துவிடலாம்… அதுவும் இல்லாமல் நாளை யாருடைய உயிருக்கும் உத்திரவாதம் இல்லை…
என் உயிரை பற்றி கவலையில்லை… ஆனால் நீதியும் அதை நிலைநாட்டும் நம் சட்டமும் பொய்த்து விடக்கூடாது… அதனால் இன்றே இப்பொழுதே இந்த வழக்கின் விசாரணையைத் தொடர வேண்டும் யுவர் ஆனர்” என்று அவள் அதிகார தொனியில் உரைத்தது பார்ப்பவர்கள் எல்லோரையுமே கதிகலங்கச் செய்தது.
அவளின் வாதத்தையும் தைரியத்தையும் கண்டு சமுத்திரனே மிரண்டு போனான். அவன் இத்தனை வருடமாய் பார்த்த சுபா அவள்தானா என்ற சந்தேகம் எழுந்தது.
அது கோர்ட்டாக மட்டும் இல்லாமல் இருந்தால் சிவா கைகளைத் தட்டி ஆரவாரித்திருப்பான். பத்திரிக்கை நண்பர்கள் அந்த வழக்கை பற்றிய செய்திகளைச் சேகரிக்காமல் மெய்மறந்து அமர்ந்திருந்தனர். இவற்றை எல்லாம் ஒரு புறமிருக்க நீதிபதி பதில் பேசாமல் அப்படியே தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
“சரி… இந்த வழக்கின் விசாரணையை இப்போதே தொடரலாம்“ என்றார்.
சுபா மனோஜின் புறம் திரும்பி, “இன்று உங்க உயிரை ஆதித்தியா காப்பாத்தி இருக்கலாம்… ஆனா இதுக்கப்புறம் இதே போல் சம்பவம் நடக்காதுனு உத்திரவாதம் கொடுக்க முடியாது. இதற்கெல்லாம் யார் காரணம்னு நீங்க இப்பையாவது வெளிப்படையா சொல்லுங்க” என்றாள்.
மனோஜின் மனம் வெகுவாக மாறி இருந்தது
“நான் இப்போ சொல்ல போறது மறைக்கபட்ட உண்மை… திட்டமிட்டு நடந்த இந்தக் கொலையில் என்னோட பங்கும் இருக்கு… கேத்ரீன் இறப்புக்கு முன்னாடி அன்று இரவு நான் அவளைச் சந்திச்சேன்…
நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்தை நான் கேத்ரீனுக்கு ஞாபகபடுத்தினேன்… அன்று நடந்த எல்லாத்துக்கும் காரணம் நான்தான் சொன்னேன்… நான் நினைச்ச மாதிரி அவளைப் பழிவாங்கிட்டேன்னு சொன்ன போது கேத்ரீன் நிலைகுலைந்து போனா…
ஷீ வாஸ் ஆல்மோஸ்ட் டிப்பிரஸ்ட்… அவளோட மனதைரியம் எல்லாம் உடைஞ்சு போயிருந்தது… வரைமுறை இல்லாம கேத்ரீன் குடிக்க ஆரம்பிச்சா…
அங்கதான் சமுத்திரனோட மாஸ்டர் பிளான் இருந்துச்சு… போதையில் நிலை தடுமாறி ஹோட்டல் அறைக்குள் போன கேத்ரீனை தள்ளிவிடணும் என்பதுதான் அவனோட நோக்கம்… அந்த மாஸ்டர் பிளானோட மாஸ்டர் மைன்ட் எங்க அப்பா மினிஸ்டர் வித்யாதரன்” என்றான்.
சுபா நீதிபதியிடம் திரும்பி, “மனோஜ் சொன்னதைத் தாண்டி இந்த வழக்கில் தெரிய வேண்டியதும் சொல்ல வேண்டியதும் நிறைய இருக்கு யுவர் ஆனர்… ஆனால் அதுக்கு முன்னாடி இங்க ஒரு உண்மையை சொல்லியே ஆகணும். அதாவது சோஃபியா வேலட்டீனா கேத்ரீனின் மகள் இல்லை” என்றதும் மனோஜ் அதிர்ச்சியானான். நீதிபதியும் கிட்டதட்ட குழப்பமடைந்தார்.
சுபா மேலும் தொடர்ந்தாள்.
“அந்தப் பெண் குழந்தை கேத்ரனாவுடையது இல்லைதான். ஆனால் அந்தக் குழந்தை மனோஜ் ஏமாற்றிய பல பெண்களில் ஒருவரான ஜெனிதாவினுடையது… அவள் கேத்ரீனின் கல்லூரி தோழி.
அந்தப் பெண்ணின் மீது இரக்கப்பட்டு கேத்ரீன் அடைக்கலம் கொடுத்தாள். அந்தக் குழந்தை கேத்ரீன் ஆதித்தியாவை பிரிந்த பிறகு ஏற்பட்ட தனிமையின் போது, தாயினை இழந்து அநாதரவாய் பிறந்ததினாலோ என்னவோ அந்தக் குழந்தையின் மீது கேத்ரீனுக்குத் தனிப்பட்ட அன்பும் பிரியமும் ஏற்பட்டது.
கேத்ரீன் அந்தக் குழந்தையைத் தன் சொந்த குழந்தையாகவே பாவித்தாள். அந்த அன்புதான் கேத்ரீனின் மரணத்தின் பெரிய புதிருக்கு விடையாய் மாறி இருக்கிறது. நீதிமன்றத்தில் இத்தனை பெரிய பொய்யை சொன்னது சில உண்மையை வெளிக்கொணர்வதற்கே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது தவறென்னும் பட்சத்தில் நான் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறேன்”
இதைக் கேட்ட சமுத்திரனுக்குக் கோபம் வர… அவன், “நீதிமன்றத்தில் பொய்களைச் சொல்லி எதிர்க்கட்சி வக்கீல் ஏமாற்றி இருக்கிறார். இதைப் போன்ற கட்டுக்கதைகளைச் சொல்லி இந்த வழக்கில் என்னையும் சிக்க வைக்கப் பார்க்கிறார்”
“இத பாருங்க சமுத்திரன்… நீங்கள் ஒரு கொலை குற்றவாளி. என்னை கேள்வி கேட்க எந்த வித தகுதியும் உங்களுக்கு இனி இல்லை” என்றாள் சுபா.
“அந்த மனோஜ் உணர்ச்சிவசப்பட்டு உளறுவதால் நான் குற்றவாளி என்று ஆகி விடாது” என்று சமுத்திரன் சொல்ல நீதிபதி அவனுக்குப் பதில் உரைத்தார்.
“இத பாருங்க சமுத்திரன்… நிதானமாய் யோசித்துச் சொல்வதுதான் பொய். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு பேசும் போது பல நேரங்களில் உண்மைதான் வெளிவரும். உங்கள் மீது விழுந்த கொலை பழிக்கு விளக்கமளிக்க வேண்டுமென்றால் கூண்டில் ஏறிதான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்” என்றதும் சமுத்திரனின் முகம் சிறுத்துப் போனது.
நீதிபதி சுபாவை பார்த்து, “நீங்கள் பொய் சொன்னாலும் அது மனோஜிடமிருந்த உண்மையை வரவழைக்க நீங்கள் செய்த யுக்தி என்பதினால் அதை இந்த நீதிமன்றம் வரவேற்கிறது” என்றார்.
45
உண்மையின் பலம்
சுபாவின் யுக்தியை நீதிபதி பாராட்டியதிற்காக அவள் நன்றி உரைத்தாள்
“தேங்க் யூ யுவர் ஆனர். இனி இந்த வழக்கில் தெரிய போகும் உண்மைகள் அனைத்தும் பெரும் அதிர்வை ஏற்படுத்தப் போகின்றன.
இங்கே கூண்டில் நிற்கும் சமுத்திரன் சட்டம் படித்துவிட்டு, அந்த சட்டத்தைத் தான் நினைத்தபடி எல்லாம் வளைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டார். அது முற்றிலும் தவறு என்று அவருக்கு இப்பொழுது புரிந்திருக்கும்”
“நான் எந்த கொலையும் செய்யவில்லை”
“கவலைப்படாதீங்க சமுத்திரன். நீங்க எப்படிக் கொலை செய்தீங்க… அதன் பிண்ணனி என்னன்னு இன்ஸ்பெக்டர் சிவா உங்களுக்கு விளக்கமா சொல்வார்” என்றார்.
நீதிபதி, “இன்ஸ்பெக்டர் சிவாவா?”
“ஆமாம் யுவர் ஆனர்… இன்ஸ்பெக்டர் சிவாதான் தனிப்பட்ட முறையில் இந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டறிய உதவியவர். சமுத்திரன் புத்திசாலிதனமாய் திட்டமிட்டு காவல்துறையை ஏமாற்றி கேத்ரீனின் இறப்பை விபத்து என நம்பும்படி செய்த திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆனால் அவர் ஒன்றை மறந்துவிட்டார். வல்லவனுக்கும் வல்லவன் இந்த வையகத்தில் உண்டு. இன்ஸ்பெக்டர் சிவா இந்த வழக்கில் திறமையோடு செயல்பட்டு சமுத்திரன் புத்திசாலித்தனமாய் மறைத்த குற்றத்தை இங்கே ஆதாரத்தோடு நிருபிக்க இருக்கிறார்”
சிவா நீதிபதி தலையசைப்புக்கு ஏற்ப கூண்டில் ஏறி நின்றான். “இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே எனக்கு ரொம்ப பெரிய சவால். சுழலில் மாட்டின மாதிரி கடைசி வரை குழப்பமாய் இருந்தது. சமுத்திரனின் இந்த கொலைக்கான திட்டமிடலை யாராலும் அத்தனை சீக்கிரத்தில் கணிக்கவும் முடியாது. அத்தனை தெளிவான க்ளீன் பிளான்.
எந்த இடத்திலும் எந்த வித ஆதாரத்தையும் விட்டு வைக்காத திறமையான எக்ஸீக்யூஷன். கேத்ரீனை கொலை பண்ண அவளைக் குடிக்க வைக்கணும் என்ற அவனுடைய திட்டத்திற்காக மனோஜை கரெக்டா யூஸ் பண்ணி இருக்கான்.
அத்தனை சீக்கிரத்தில் ஹோட்டல் ஆதித்தியாவின் செக்யூரிட்டியை மீறி ஒரு கொலையை சாதாரண ஆளால் செய்ய முடியாது. அது அந்த ஹோட்டல் ஆதித்தியாவின் ஒவ்வொரு இண்டு இடுக்கும் தெரிந்தவனால்தான் முடியும். அப்படித் தெரிந்தவர்களில் சமுத்திரனும் ஒருவன்.
ஹோட்டல் ஆதித்தியாவில் வேறு ஒரு பெயரில் தன் முகமே தெரியாதது போல மாறு வேடமணிந்து ரூம் நம்பர். 606ல் மிஸ்டர். சமுத்திரன் ஆல்பர்ட் என்ற பெயரில் தங்கியிருக்கிறார்.
கொலை நடந்த இரவு அந்த அறைக்குப் பின் பக்கம் இருக்கிற பால்கானி வழியா பைப் லைன் மூலமா கேத்ரீன் தங்கியிருந்த ரூம் நம்பர். 603 பால்கனியில் இறங்கியிருக்கிறார். கேத்ரீன் தங்கியிருந்த நாட்களில் அவளை நல்லாவே நோட்டமிட்டிருக்கிறார்.
எந்நேரமானாலும் கேத்ரீன் அந்த பால்கனி கதவை திறந்து வெளியே வேடிக்கை பார்க்கிற வழக்கத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கப் பாத்திருக்காரு. எல்லாமே சமுத்திரனின் திட்டபடி ரொம்ப சரியா நடந்துச்சு.
கேத்ரீன் அன்னைக்கு ஆதித்தியாவை சந்திச்சிருந்தா இவங்க திட்டமெல்லாம் சுக்குநூறாய்ப் போயிருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாய் அது அப்படி நடக்கல. கேத்ரீனை பால்கனியில் இருந்து கீழே தள்ளிட்டு அவள் குடிபோதையில் தவறி விழுந்துட்டானு ரொம்ப நேர்த்தியா திட்டத்தைத் தீட்டியிருக்கார்.
என்னதான் அறைக்குள் இருள் இருந்தாலும் பால்கனியின் வழியே ஆட்களின் நடமாட்டமும் அலங்கார விளக்குகள் பிரகாசமாய் இருந்துச்சு. பால்கனிக்கு கைபிடி கம்பிகளை நெருங்கி நடந்து வரும் வழியில் ஏதோ ஒரு கண்களுக்கு புலப்படாத தடுப்பை உருவாக்கி இருக்கிறார் அது கயிறு போன்ற ஏதாவதாக இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.
அவள் போதையில் இருப்பதால் நிச்சயம் அந்தத் தடுப்பை அவளால் கவனிக்க முடியாது. கேத்ரீன் பால்கனி கதவை திறக்கவும் சமுத்திரன் கதவின் இடுக்கில் ஒளிஞ்சிட்டிருக்கணும். அவள் அந்த கம்பிகளை நெருங்கி வர அவ கால்கள் தடுக்க முன் புறம் வழுக்கி கைப்பிடியை தாண்டி அவள் கீழே விழுந்திருக்கணும்.
அந்த நேரத்தில் அவள் விழுந்ததைப் பார்த்த பதட்டத்தில் ஆதித்தியா சமுத்திரனை பார்க்க வாய்ப்பில்லை. கேத்ரீன் விழுந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் கீழே இறங்கி அவளைக் காப்பாத்த ஓடி இருக்கிறார்.
அதுதான் சமயம்னு அந்த அறைக்குள் போய் கேத்ரீனிடம் இருந்த லாக்கர் சாவியைத் தேடி எடுத்திருக்கிறார். பெட்ரூமில் உள்ள ஜன்னலின் வழியா இறங்கி அந்த ஓரத்திலேயே நடந்து தன் அறைக்குள் போய் சேர்ந்திருக்க வேண்டும். இதை எல்லாம் செய்யப் பெரிய அசாத்தியமான தைரியம் வேணும்”
சமுத்திரன் சிரித்தபடி, “இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு சிவா… ஆனா இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. நான்தான் கொலை செய்தேன்னு வாயால் கதை அளப்பதை விடுத்து ஆதாரம் இருந்தா நிரூபிங்க…
அட்லீஸ்ட் ரூம் நம்பர் 606ல் நான் தங்கியிருந்ததற்கான ஆதாரம்… நிச்சயம் இருக்குமே… ஹோட்டல் ஆதித்தியாவின் சீசிடிவியில் பதிவாயிருக்குமே” என்று சிவாவை கேள்விகள் கேட்டு அதற்குப் பதிலும் சொன்னான் சமுத்திரன்.
நீதிபதி சிவாவை பார்த்து, “சமுத்திரன் சொன்ன மாதிரி நீங்க சொன்னவற்றிற்கு ஆதாரம் ஏதாவது இருக்கா சிவா?” என்றார்.
சிவா பதில் எதுவும் சொல்லாமல் சுபாவை பார்க்க, அவள் ஒரு சீடியை எடுத்து அதை பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள்.
அந்த வீடியோ பதிவில் அறை எண். 606ல் இருந்து வெளியே வந்த நபரின் முகம் ஓரிடத்தில் கூட தெளிவாகத் தெரியவில்லை.
நீதிபதி அந்த வீடியோவை பார்த்து, “அந்த நபர் சமுத்திரன்தான் நீங்க எப்படிச் சொல்றீங்க சிவா” என்று கேட்க…
உடனே சுபா, “இந்தக் கேள்விக்கு நான் சமுத்திரனின் மனைவியாய் சில கேள்விகளை அவரிடம் கேட்க ஆசைப்படுகிறேன் யுவர் ஆனர்” என்றாள்.
நீதிபதி, “அப்படின்னா நீங்க கூண்டில் ஏறி நின்றுதான் கேட்கணும் சுபா” என்றார்.
சுபா தன் கோர்ட்டை கழட்டி விட்டுக் கூண்டில் ஏறி சமுத்திரனின் நேரெதிர் நின்றாள்.
“ஹோட்டல் ஆதித்தியாவின் கண்காணிப்பு கேமிராவில் ரூம் நம்பர். 606ல் இருந்து வெளியே செல்லும் நபர் நீங்க இல்லையா?”
“நான் இல்லை” என்றான் அலட்சியமாக.
“நீங்க ரொம்ப புத்திசாலிதான்… ஆனா என்னை நீங்க முட்டாள்னு நினைச்சிட்டு இருக்கீங்க”
“நினைச்சிட்டு இல்லை… அதான் உண்மை… இல்லாட்டி போனா வேற எவனையோ பாத்து நான்னு கைகாட்டுவியா?”
“எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை… அது நீங்கதான்”
“அதெப்படி அவ்வளவு ஸ்டிராங்கா சொல்ற?”
“உங்க கையில் இருக்கிற வாட்ச்… நாம கல்யாண ஆன புதுசில் நான் உங்களுக்கு கிஃப்ட் பண்ண வாட்ச். அது என் ரேஞ்சுக்கு இல்லனு சொல்லி அந்த வாட்ச் எப்பவுமே நீங்க கட்டினதில்ல. முதன்முதலில் அந்த வீடியோவை சிவா என்கிட்ட காட்டின போதே நான் கவனிச்சது அந்த வாட்சைத்தான்…”
“வாட்ச்செல்லாம் அந்த வீடியோவில் தெரியுதா என்ன?”
“உண்மையைத் தெரிஞ்சிக்கப் பார்வையும் கொஞ்சம் கூர்மையா இருக்கணும்”
“என் கண்ணுக்கு எதுவும் தெரியலியே” என்றான்.
சுபா மீண்டும் அந்த வீடியோவை ஒட விட்டு அந்த வாட்ச்சை பெரிது பண்ணி காண்பித்தாள்.
“யுவர் ஆனர்… நான் அந்த மாதிரி வாட்ச் எல்லாம் கட்டவே மாட்டேன். அவங்க சொல்ற மாதிரியான வாட்ச் என்கிட்ட இல்லவே இல்லை. எல்லாமே பொய்… தேவையில்லாம என்னை மாட்டி விட இவங்க சதி பண்றாங்க” என்றான் சமுத்திரன்.
“பொய் சொல்லாதீங்க சமுத்திரன்… அந்த மாதிரி வாட்ச்சை நான் உங்களுக்கு வாங்கித் தரல”
“எத்தனை தடவை கேட்டாலும் இல்லை என்பதுதான் என்னோட பதில்”
“எத்தனை பெரிய புத்திசாலியும் ஒரிடத்தில் தப்பு பண்ணுவான்… அதுக்கு நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன? உங்க முன்னாடி இன்னொரு வீடியோவை நான் பிளே பண்ணி காட்டட்டுமா?” என்று சொல்லி வேறொரு சீசிடிவி பதிவை காண்பித்தாள்.
கேத்ரீன் மரணத்திற்கு பிறகு, அந்த மர்ம நபர் வெளியே போன பிறகு சமுத்திரன் உள்ளே வரும் காட்சி பதிவாகி இருந்தது. உற்றுக் கவனித்த போது அதில் சமுத்திரன் அதே வாட்ச்சை கையில் அணிந்து கொண்டிருந்தான்.
அந்த வீடியோவை பார்த்த மாத்திரத்தில் சமுத்திரனின் கண்கள் அகல விரிந்தன.
சுபா அவன் புறம் திரும்பி, “என்ன மிஸ்டர். சமுத்திரன்… உங்க வேஷத்தை கலைத்த நீங்க அந்த வாட்ச்சை கழட்டி வைக்க மறந்திட்டீங்களோ?” என்றாள் கிண்டலாக.
“இனியும் நீங்க சொல்ல பொய் ஏதாவது இருக்கா?” என்று சுபா சமுத்திரனை பார்த்து கேட்டாள். அவனின் கண்களில் கோபம் தெறித்தது.
“இன்னும் நான் உங்களைப் பத்தி சொல்றதுக்கு சில உண்மைகள் இருக்கு. அதுதான் உங்க பெயரில் வி. டி பில்டர்ஸ் மூலமா 50 கோடி மதிப்புள்ள சிங்கள் ஹவுஸ் ரெஜிஸ்டராகி இருக்கு… அதுவும் கேத்ரீன் மரணத்திற்குப் பிறகு. அதுக்கான மூலதனம் ஏதுன்னு இப்போ இந்த நீதிமன்றத்தில் சொல்ல முடியுமா?” என்று கேட்க அவன் திருதிருவென்று விழித்தான்.
சுபா நீதிபதியின் புறம் திரும்பி, “யுவர் ஆனர்… இதோ அந்த சொத்து சம்பந்தபட்ட பத்திரம்… மினிஸ்டர் வித்யாதரன் கேத்ரீனை கொல்ல சமுத்திரனுக்குக் கொடுத்த சன்மானம். இவ்வளவுதானா… இல்லை இன்னும் எத்தனை கோடி பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறது என்பது நாம் அறியாத உண்மை… சமுத்திரன் ஆரம்பித்திலிருந்து பொய்யை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் கொலையையும் செய்துவிட்டு ஆதித்தியாவின் மீது பழியும் போட்டார். அதுவுமில்லாமல் சம்பவம் நடந்த பிறகு ஆதித்தியா தலைமறைவாகி விட்டதாய் குற்றம் சாட்டினார். உண்மையிலேயே ஆதித்தியா தன் தோழியின் இறுதி சடங்கிற்காக கோவாவிற்கு சென்றிருந்தார் என்பதுதான் உண்மை.
ஆதித்தியாவின் மீதான குற்றம் முழுக்க முழுக்கப் பொய் என்பது தெளிவாகிவிட்டது. ஆனால் அதைவிட முக்கியத்துவம் வாய்ந்தது கேத்ரீனை மினிஸ்டர் வித்யாதரன் திட்டமிட்டு கொலை செய்ததிற்கான காரணம் அறிந்து கொள்வது” என்றாள்.
நீதிபதி, “நீங்கள் குற்றம் சுமத்துறது மத்திய அமைச்சர் வித்யாதரன் மேல… அதுவும் கொலைப்பழி. கண்கொத்தி பாம்பாய் பாத்திட்டிருக்கப் பத்திரிக்கைகளின் மூலமாக மக்களுக்குப் போய் சென்றடையப் போகிறது. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்… தெளிவான ஆதாரத்துடன் உங்கள் வாதத்தை எடுத்துரைக்க வேண்டியது ரொம்பவும் அவசியம் மிஸஸ். சுபா” என்றார்.
சுபா கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.
“நேற்று வரை இந்த வழக்கின் உண்மை வெறும் வார்த்தை வடிவமாகவே இருந்தது… ஏன் நீதிமன்றம் வரும் வரை கூட எங்களிடம் மினிஸ்டர் வித்யாதரனுக்கு எதிரா எந்த ஆதாரமும் இல்லை… இல்லைனு சொல்வதை விட அந்த ஆதாரங்கள் எல்லாம் மறைக்கப்பட்டது.
கேத்ரீனை கொலை செய்த சமுத்திரன் லாக்கர் சாவியைத் திருடி இருக்கிறார்… ஆனால் லாக்கரின் ரகசிய எண் தெரியாமல் அந்த லாக்கரின் உள்ளே இருந்த ஆதாரத்தை வித்யாதரனால் எடுக்க முடியாமல் இருந்தது. இன்ஸ்பெக்டர் சிவாவும் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவனும் இந்த வழக்கை தீவரமாய் விசாரிக்கத் தொடங்கினர்.
சிவா அந்த லாக்கர் எண்ணை ஆதித்தியாவின் பிறந்த நாள் என்று யூகித்த போது… அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவன் மினிஸ்டர் வித்யாதரனுக்கு உளவாளியாக வேலை பார்த்து, அந்த லாக்கரில் கேத்ரீன் வித்யாதரனுக்கு எதிராய் சேகரித்து வைத்திருந்த ஆதாரம் எல்லாவற்றையும் கைக்குக் கிடைக்காமல் செய்துவிட்டார்”
உடனே அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவன் எழுந்து, “இது பொய்” என்றார்.
“எது பொய்? உங்க மகளை வித்யா மெடிக்கல் காலேஜில் சேர்க்க நீங்க விலையாய்க் கொடுத்தது உங்க நேர்மையை… இல்லைனு சொல்லுங்க பார்க்கலாம்? மினிஸ்டர் வித்யாதரனின் பதவிக்காகவும் பணத்துக்காகவும் லாயரா இருந்துட்டு கொலை பன்றார் ஒருத்தர்… போலீஸ் அதிகாரியாய் இருந்துட்டு அந்தக் குற்றத்தை நீங்க மறைக்க முயற்சி செய்றீங்க.
இதை எல்லாம் பார்க்கும் போது சட்டத்தின் மீதான நம்பிக்கையே குறைஞ்சிட்டு வருது… உண்மையிலேயே அந்த மினிஸ்டர் மீதான குற்றத்தை நிருபித்தால் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்குமா என்பது கூடச் சந்தேகம்தான்…” என்றாள் உணர்ச்சி வேகத்தில்.
நீதிபதி அவளைப் பார்த்து நிதானமாக, “உங்க கேள்வியும் சந்தேகமும் நியாயமனது… சிலர் செய்கிற தப்பினால் நம்முடைய சட்டங்கள் தப்பாகிடாது… நம்முடைய சட்டம் எல்லோருக்குமே பொதுவானது.
அதனால் நீங்க எந்தப் பயமும் இல்லாம மத்திய அமைச்சர் வித்தியாதரனுக்கு எதிரான ஆதரத்தை சமர்ப்பிக்கலாம். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு அந்தக் குற்றத்திற்குக் காரணமானவர் யாராயிருப்பினும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவருக்கான தண்டனை பாரபட்சமின்றி வழங்கப்படும்” என்றார்.
“இப்போதைக்கு நம்முடைய சட்டத்தை நம்புவதைத் தவிர்த்து எனக்கும் வேறு வழியில்லை யுவர் ஆனர்… இது வெறும் கேத்ரீனின் கொலை சம்பந்தபட்ட வழக்கு மட்டுமல்ல… நம் நாட்டு மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய்க் குடித்துக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி சம்பந்தபட்டது… மது குடித்து விட்டு வீழ்ந்து கிடப்போர் மீது நாம் இரக்கப்படவும் கவலை கொள்ளவும் மாட்டோம்.
ஏன் உயிரே போனாலும் குடி போதை என்று கெட்ட பழக்கத்தினால் நடந்தது என நாம் சாதரணமாகக் கடந்து விடுவோம். ஆனால் அதுதான் அவர்களுக்கு சாதகமாய் அமைந்துவிட்டது.
எம். வி. டி லிக்கர் பாஃக்டரியில் இருந்து உற்பத்தியாகும் மதுபாட்டில்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் கொல்லும் விஷம் என்று சொன்னால் நம்புவீர்களா? அரசாங்கத்தின் அங்கீகாரத்தோடு விற்கும் இந்த மதுபானம் போலியானது என்பதை கேத்ரீன் கண்டறிந்தாள்.
மதுபான உற்பத்தியில் எத்தனால்(Ethanol) பயன்படுத்துவதுதான் முறை. ஆனால் எம். வி. டி லிக்கர் பாஃக்டிரியில் மெத்தனால் (Methanol) பயன்படுத்தபடுகிறது. இரண்டுமே ஒரே மாதிரியான போதையை ஏற்படுத்தினாலும் மெத்தனால் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இதை அருந்துகின்ற அடித்தட்ட மக்களுக்குத் தெரியாது, அவர்கள் உட்கொள்வது கிட்டதிட்ட விஷத்திற்கு நிகரான மெத்தனால் என்று.
மலிவாய் உற்பத்தி செய்யபட்டு அதனைப் பெருமளவு லாபத்தில் விற்று அந்தக் கோடிக்கணகான பணத்தைத் தன்னுடைய அரசியல் சாம்ராஜ்யத்தின் அடித்தளமாய்க் கொண்டிருக்கிறார் மிஸ்டர். வித்யாதரன். இதுவரை மக்களின் பொருளாதாரம் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது அவர்களின் ஆரோக்கியமும் சேர்த்து சுரண்டப்படுகிறது.
இதைப்போன்ற அரசியல்வாதிகளாலும் விழிப்புணர்வில்லாத மக்களாலும் பல நாடுகளில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் எனத் தடை செய்யபட்ட உணவுப் பொருட்கள் பகிரங்கமாய் நம் நாட்டில் விற்கப்படுகிற அவலம். அமிலத்திற்கு நிகரான குளிர்பானங்கள் கூட அங்கீகாரத்தோடு விற்கப்படுகின்றன. குப்பை என்று வீசப்பட வேண்டிய பொருட்கள் எல்லாம் விற்பனைக்கூடத்தில் இருக்கின்றன.
இதுதான் மக்களுக்காக நடைபெறும் மக்களாட்சியா? இன்றைய காலகட்டத்தில் பணமும் பதவியும் பிரதானமாய் இருக்கும் நிலையில் இதைக் கேள்வி கேட்போரோ தட்டி கேட்போரோ யாருமில்லை. ஆனால் கேத்ரீன் தன் கண்முன்னாடி நிகழ்ந்த கொண்டிருந்த குற்றத்திற்காக ஒற்றைக் குரலில் துணையின்றிப் போராடினாள்.
அவளின் நியாயமான எண்ணம் அந்த எம். வி. டி லிக்கர் பாஃக்டரியை மூட வேண்டும், அதில் உற்பத்தியாகும் பானங்கள் தடை செய்யப்பட வேண்டும்… இவை எல்லாவற்றிற்கும் காரணமான மினிஸ்டர் வித்யதரனின் பதவி பறிக்கபட்டு, அரசியல் வாழ்க்கை முடக்கப்பட்டு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் அவளின் உயிர் உள்ளவரை அவளின் எண்ணம் எதுவும் ஈடேறவில்லை. வித்யாதரன் தன்னுடைய அரசியல் பின்புலத்தாலும் அதிகார பலத்தைக் கொண்டும் கேத்ரீனின் எல்லா முயற்சிகளையும் தோற்கடித்தார்.
ஆனால் உண்மையின் பலம் கேத்ரீன் இறந்த பின்பும் அவள் வித்யாதரனுக்கு எதிராய் தன் லேப்டாப்பில் சேகரித்த ஆதாரங்கள் இன்று அவரின் விதியை தீர்மானிக்கப் போகிறது” என்று சுபா கோபத்தோடும் வேதனையோடும் உரைக்க எல்லோருடைய பார்வையும் அவள் மீதே லயித்திருந்தது.
சுபா முச்சு வாங்கி நிற்க ஷாபானா அந்த லேப்டாப்பை நீதிமன்றத்தில் ஒப்படைத்தாள். அதன் பாஸ்வார்ட் ‘வேலட்டீனா 25’ என்று ஆதித்தியா நீதிமன்ற வாசலில் நின்றிருந்த போது முயற்சி செய்து திறந்து பார்த்தான். ஏற்கனவே கேத்ரீனின் லேப்டாப்பை ஆதித்தியா பலமுறை உபயோகப்படுத்தி இருந்ததினால் அவனின் கணிப்புச் சரியாக இருந்தது.
46
நீதிபதி தீர்ப்பு
நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட கேத்ரீனின் லேப்டாப்பில் இருந்த ஆதாரங்கள் முழுவதையும் ஷபானா தெளிவாகப் பிரித்துக் காண்பித்தாள். அதில் எம். விடி லிக்கர் பாஃக்டரியில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் உடலுக்குக் கேடானது என்பதற்கான ஆதாரங்களும்… கேத்ரீனை வித்யாதரன் மிரட்டியதற்கான வீடியோ ஒன்றும் பதிவாகியிருந்தது.
இவற்றை எல்லாவற்றையும் விவரமாய் படித்துப் பார்த்து தெரிந்து கொண்ட பின்னர், நீதிபதி தான் வழக்கு சம்பந்தமாய் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாய் எழுதி கொண்டார்.
பின்னர் எல்லோரையும் பார்த்து கேத்ரீன் வழக்கின் விசாரணையைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
“கேத்ரீனின் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விபத்து எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வேறு சில முக்கியக் காரணங்களுக்காக இதை கொலை வழக்கென தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இதன் விசாரணையின் இறுதிக்கட்டத்தில் ஹோட்டல் அதிபரின் மகன் ஆதித்தியாவை கொலை குற்றவாளி என ஆஜர்படுத்தியது.
நீதிமன்றத்தில் நடைபெற்ற பலதரப்பட்ட விசாரணையினாலும், ஆதித்தியாவிற்காக வாதாடிய வக்கீல் சுபாவின் வாதத் திறமையினாலும் ஆதித்தியா கொலை குற்றவாளி அல்ல என்பது தெள்ளத் தெளிவாய் நிரூபணமானது.
அதுமட்டுமின்றி… நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அசம்பாவிதத்தில், மனோஜின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்ததைப் பார்க்கும் போது அவர் நிச்சயம் கொலை குற்றவாளியாய் இருக்க முடியாது என முடிவு செய்து அவரை இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.
மேலும் இந்த வழக்கின் போக்கு பெரிய பெரிய திருப்பங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் தன் வாதத் திறமையால் வக்கீல் சுபா தெளிவுபடுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி மனோஜ் தான்தான் கேத்ரீனின் சுயநினைவு இல்லாத போது கற்பழித்ததாக ஒத்து கொண்டிருக்கிறார்.
மேலும் கேத்ரீனின் கொலைக்குத் தானும் உடந்தை என வாக்குமூலமும் தந்திருக்கிறார். அவரின் சாட்சியும் சமர்ப்பிக்கப்பட்ட கண்கானிப்பு கேமராக்களில் பதிவான ஆதாரங்கள் யாவும் சமுத்திரன்தான் கொலையாளி என நமக்கு தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறது.
கேத்ரீனின் கொலைக்குப் பிண்ணனியில் முக்கியக் காரணமாக தற்போது மத்திய அமைச்சராய் பதிவியில் இருக்கும் வித்யாதரன் எனக் கேத்ரீனின் லேப்டாப்பில் உள்ள ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எம். வி. டி லிக்கர் பாஃக்டரியின் உண்மையான நிறுவனரும் வித்யாதரன்தான் என கிடைத்த ஆதாரங்களின் மூலமாக நமக்கு வெட்ட வெளிச்சமாகிறது.
அதுவல்லாது அங்கே உற்பத்தியாகும் மதுபானம் உடல் நலத்திற்கு கேடானது என்ற சுபாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட இந்த நீதிமன்றம் அதைப் பற்றிய உண்மை தன்மையை ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு அது சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிடுகிறது.
அதுவரை அந்த நிறுவனத்தின் மதுபானத்திற்கான விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கிறேன். மேலும் கொலைக்கு உடந்தையாய் இருந்த மனோஜையும், மற்றும் கொலை குற்றவாளி சமுத்திரனையும் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்.
முக்கியக் குற்றவாளி எனக் கருதப்படும் அமைச்சர் பதவியிலிருக்கும் வித்யாதரனை உடனடியாகக் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இந்தக் குற்றங்கள் நிரூபிக்கபட்டுத் தீர்ப்பு வழங்கும் வரை வித்யாதரனின் பதவி மற்றும் சொத்துக்களை இந்த நீதிமன்றம் முடக்கி வைக்கிறது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்பிய குற்றத்திற்காகவும், தன் பதவியைத் தவறாய் பயன்படுத்திய குற்றத்திற்காகவும் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவனின் மீது விசாரணை நடத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன்.
வக்கீல் சுபா திறமையோடு வாதாடி இந்த வழக்கின் விசாரணையை இத்தனை துரிதமாய் முடித்ததிற்காக இந்த நீதிமன்றம் அவரைப் பாராட்டுகிறது. மேலும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சிவாவின் திறமையான விசாரணையைப் பாராட்டி காவல்துறை அவருக்குப் பதவி உயர்வு வழங்க இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கின்றது.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும் 28ம் தேதி நடைபெறும். அன்று இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாய்க் கருதப்படும் வித்யாதரன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கான விளக்கத்தை அளித்த பின்னர், இந்த வழக்கில் சமிர்க்கப்பட்ட ஆதாரங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து… கேத்ரீன் கொலை வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும். இத்துடன் இந்த நீதிமன்றம் கலைகிறது” என்று சொல்லி நீதிபதி அவர் எழுதிய வைத்திருந்த பக்கங்களை எடுத்து வைத்துவிட்டு எழுந்து சென்றார்.
நீதிபதியின் வாசிப்பை கேட்ட சுபாவின் மனதிலிருந்த இறுக்கம் ஒருவாறு தளர்ந்தது.
அவளுக்கு ஆதித்தியாவை பற்றிய கவலை அதிகரிக்கத் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவளை சமுத்திரன் கோபத்தோடு பார்த்தான்.
கான்ஸ்டபிள்ஸ் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்து வர அவன் சுபாவின் அருகில் வந்ததும், “நீ என்ன பெரிய பொது நலவாதியா?” என்று கேட்டான் கோபத்தோடு.
“நான் பொதுநலவாதி எல்லாம் இல்ல… ஆனா உன்னை மாதிரி ஊரையே சுடுகாடாய் மாத்திட்டு தான் மட்டுமே வாழணும்னு நினைக்கிற சுயநலவாதி இல்ல” என்றாள்.
அங்கே வந்த சிவா அவளைப் பார்த்து, “இவன்கிட்ட எதுக்குமா நீ பேசிட்டிருக்க… சீக்கிரம் புறப்படு” என்றான்.
சமுத்திரனின் முகத்தில் கோபம் தெறிக்க, “இவன் இருக்கிற தைரியத்திலதான் நீ என்னைச் சிக்க வைச்சிட்ட இல்ல… இவன்தான் உன் கூட கடைசி வரைக்கும் துணைக்கு வரப் போறானா?” என்றதும் சிவாவிற்குக் கோபம் வர தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தான்.
“ரொம்ப பேசற நீ… இப்ப நான் உன்னைச் சுடறேன்… யார் உன் கூட துணைக்கு வரான்னு பாக்கலாமா?”
சுபா உடனே, “அண்ணா விடுங்க… நீங்க சுடற அளவுக்குக் கூட இவனுக்கெல்லாம் தகுதி இல்ல”என்றாள்.
சமுத்தினின் முகம் கறுத்துப் போக, சிவா நெற்றியில் வைத்த துப்பாக்கியை எடுத்து உள்ளே வைத்தான்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளூத்துவோம். படிச்சிருக்கியா? ஜெயிலுக்குப் போய் படிச்சு தெரிஞ்சிக்கோ” என்றான் சிவா.
பின்னர், “இவனை இழுத்திட்டு போங்க” என்று கான்ஸ்டபிளிடம் சொன்னான்.
சமுத்திரன் நகர்ந்த பிறகு சுபா கண்கள் கலங்க, “ஆதி அண்ணாவுக்கு எப்படி இருக்கோ தெரியல”
“ஆதித்தியா கூட விந்தியா இருக்கும் போது அவனுக்கு ஒண்ணும் ஆகாது. சாவித்ரி புருஷனுக்காக எமன்கிட்ட போராடினா… ஆனா எமனே வந்து விந்தியாக்கிட்ட போராடினாலும் ஒண்ணும் நடக்காது” என்றதும் சுபாவின் சோகம் படர்ந்திருந்த முகத்தின் லேசாய் புன்னகை மலர்ந்தது.
47
பயணம் முடிவடைகிறது
சிவா விந்தியாவை பற்றிச் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
ஆதித்தியா அவன் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மனதைரியத்தோடு அதிகமாய்ப் போராடியது விந்தியாதான். வலிகள் வேதனைகள் நிறைந்திருந்த அந்த நாட்களை நம் காதல் பறவைகள் ஒருவருக்கு ஒருவர் துணையாய் சேர்ந்தே கடந்து வர… ஒரு மாதம் சில நொடிகளென கரைந்து போனது.
தொலைகாட்சியில் செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது.
உயிர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த கேத்ரீனின் கொலை வழிக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். வழக்கறிஞர் சமுத்திரன் கொலை குற்றாவாளி என தீர்ப்பாகி அவர் பார் கவுன்சிலில் இரூந்து நிரந்தரமாய் நீக்கப்பட்டார்.
கேத்ரீனை கொலை செய்த குற்றத்திற்காகவும் அதனை மறைக்க முயற்சி செய்த குற்றத்திற்காகவும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் குற்றத்திற்குத் துணைபுரிந்ததிற்காக முன்னாள் அமைச்சர் மகன் மனோஜிற்குப் பத்தாண்டு காலச் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி முக்கியக் குற்றாவாளியாய் கருதப்படும் முன்னாள் அமைச்சர் வித்யாதரனின் ஊழல் வழக்கு மற்றும் போலி மதுபான உற்பத்தி செய்த குற்றங்களின் வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என்று செய்தி வாசிப்பாளர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விந்தியாவிடம் இருந்த ரிமோட்டை ஆதித்தியா பறித்து சேனலை மாற்றினான்.
“எதுக்கு மாத்தறீங்க… நான் பாத்திட்டிருக்கேன் இல்ல” என்று விந்தியா சத்தம் போட்டாள்.
“அவனுங்க பேரை எல்லாம் கேட்டா எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு விந்து”
“சரி மாத்துனு சொல்லி இருக்கலாமே… அதுக்கு எதுக்கு ரிமோட்டை பிடுங்கினீங்க”
“அது பெரிய குத்தமா?”
“நீங்களே எதையாச்சும் பாத்து தொலைங்க” என்று விந்தியா கோபம் கொண்டு அறைக்குச் செல்ல படியேறினாள்.
அவளின் பின்னோடு வந்த ஆதித்தியா அவளை இரு கைகளால் தூக்கி கொண்டான்.
“விடுங்க ஆதி”
“நீ பிரக்னன்டா இருக்க இல்ல டார்லிங்?!”
“அதுக்கு???”
“படிகெட்டு ஏறிப் போனா கஷ்டமா இருக்கும்… சேஃபும் இல்லை…”
“நீங்க இருக்கும் போது ஓகே… நீங்க ஆபிஸ் போயிட்டா?”
“அதுக்கு ஒரு வழி இருக்கு… பேசாம நம்ம ரூமை கீழே ஷிஃப்ட் பண்ணிடலாம்…”
“நோ வே… நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்…”
“பிடிவாதம் பிடிக்காத விந்து… நான் உன் நல்லதுக்காகதான் சொல்றேன்…”
“நோ…” என்று ஒற்றை வார்த்தையில் மறுத்தாள்.
“உன் பிடிவாதம் மட்டும் மாறவே மாறாதா?” என்று ஆதி சொல்லிக் கொண்டே அறையில் அவளை இறக்கி விட்டான்.
“மாறிட்டா நான் விந்தியாவே இல்லை” என்று சொல்லியபடி விந்தியா படுக்கை தலையணையை நிமிர்த்திவிட்டு அமர்ந்து கொண்டாள்.
“அதுவும் கரெக்ட்தான்…” என்று சொல்லிக் கொண்டே ஆதி அவளை நெருங்கினான்.
“இதே வேலையா போச்சு…” என்று சொல்லி விந்தியா அவன் தோள்களைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
ஆதி தம் வலது தோள் பட்டையைப் பிடித்து “வலிக்குது…” என்று கத்தினான்.
குண்டு பாய்ந்த இடத்தில் லேசாய் வலி ஏற்பட விந்தியா அவள் தவறை உணர்ந்தவளாய் எழுந்து, “சாரி… சாரி… எக்ஸ்டிரீம்லி சாரி” என்று வேதனையோடு உரைத்தாள்.
அந்த வலியில் இருந்து மீண்டவனாய், “இட்ஸ் ஓகே பேபி…” என்றான்.
அவன் சொன்ன விதம் விந்தியாவிற்கு ஏதோ ஒரு பழைய ஞாபகத்தை நினைவுபடுத்தியது.
ஆதியை பார்த்து, “இப்ப என்ன சொன்னீங்க?” என்று கேட்டாள்.
“இட்ஸ் ஓகே பேபினு சொன்னேன்”
விந்தியா சிரித்துக் கொண்டே, “நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவை நம்ம ஹோட்டலுக்கு வந்தேன். ஒரு சின்னப் பிரச்சனையால மாமாவை பாத்துட்டு வெளியே வரும் போது நான் இதே வார்த்தையைக் கேட்டேன்… சேம் டோன்…”
ஆதி சிறிது நேரம் யோசித்த பின்னர், “எஸ் விந்து… ரைட்… எனக்கும் ஞாபகம் இருக்கு. ஒரு பொண்ணை இடிச்சிட்டு அவ முகத்தைக் கூடப் பார்க்காம… நீயா விந்து அது?”
பதில் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து சிரித்தாள்.
ஆதி அவள் சிரிப்பை உணர்ந்தபடி, “அன்னைக்கே நான் உன்னைப் பார்த்திருந்தா கதையே மாறி இருக்கும்”
“என்ன மாறி இருக்கும்?”
“உன்னைத் துரத்தி துரத்தி காதலிச்சிருப்பேன்”
“சும்மா கதை விடாதீங்க”
“சத்தியமா… உன்னை முதன் முதலில் பார்த்த போதே நினைச்சேன், ஏன் உன்னை முன்னாடியே பாக்காம போனோம்னு. உண்மையிலேயே சொல்றேன்… நீ என் வாழ்கையை மாற்றிய தேவதைதான்”
“சார்… இப்போ எதுக்கு ஐஸ் வைக்கிறீங்க?”
விந்தியாவைக் கை பிடித்து அருகில் இழுத்தபடி தன் இதழ்களை அவள் கன்னத்தில் பதித்து விட்டு, “நாளைக்கு நான் கான்ஃபரன்ஸ் போகணும் இல்ல டியர்… வர இரண்டு நாள் ஆகும்” என்று ஆதி சொல்ல விந்தியா அதிர்ச்சியானாள்.
“என் கிட்ட சொல்லவே இல்ல…”
“என்ன பண்றது விந்து? நேத்து வரைக்கும் மேனேஜர் ரமேஷைதான் அனுப்பலாம்னு இருந்தேன். ஆனா சூழ்நிலை நானே போகிற மாதிரி அமைஞ்சு போச்சு. ஜஸ்ட் டூ டேஸ்தான் வந்துடுவேன்” என்று ஆதி சொல்ல விந்து அவன் பிடியிலிருந்து விலகி வந்தாள்.
“ஜஸ்ட் டூ டேஸ்னு இவ்வளவு ஈஸியா சொல்றீங்க”
“இல்ல விந்து” என்று அவள் அருகில் போனவனை, “டோன்ட் டச் மீ… ஆதி” என்று கோபித்துக் கொண்டு தலையணையை எடுத்து சோபாவின் மீது போட்டு படுத்து கொண்டாள்.
“விந்து ப்ளீஸ்… டோன்ட் டூ திஸ் டு மீ” என்று ஆதித்தியா கெஞ்சினான்.
“இரண்டு நாள்… நான் இல்லாம இருக்கப் போறீங்க… இன்னைக்கு மட்டும் என்னவாம்?” என்று திரும்பி படுத்தபடி பதில் உரைத்தாள்.
“பெட்ல வந்து படுறி… சோபாவில சௌகரியமா இருக்காது”
“எனக்கு இதுதான் ரொம்ப சௌகர்யமா இருக்கு” என்று முகத்தில் போர்வையைப் போர்த்திக் கொண்டாள்.
ஆதி படுக்கையில் படுத்து விட்டு சிறிது நேரம் கழித்து “விந்து” என்று அழைத்துப் பார்த்தான்.
“நான் தூங்கிட்டேன்” என்று அவளின் குரல் கேட்டது. ஆதி சிரித்தபடி சோபாவின் அருகில் சென்றவன், மீண்டும் தன் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான்.
‘நோ ஆதி… கோபமா இருக்கா… விருப்பமில்லாம தொட்டுட்டேன்னு பெரிய பஞ்சாயத்தே வைச்சிடுவா. என்னை விட உனக்கு அந்த சோபாதான் ரொம்பப் பிடிச்சிருக்கு இல்ல… இருக்கட்டும்… கான்ஃபரன்ஸ் போயிட்டு வந்து முதல் வேளையா அந்த சோபாவை இந்த ரூம்ல இருந்து தூக்கிற்றேன்… அப்புறம் நீ கோச்சுக்கிட்டு எங்க படுப்பேன்னு பாக்கிறேன்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே இன்னும் விந்தியாவின் கோபத்தைச் சமாதானம் செய்யும் வழிமுறை தெரியாமல் தனிமையில் தவித்தான்.
நம் கதைநாயகி விந்தியா காதலையும் கோபத்தோடே வெளிப்படுத்துகிறாள். என்ன செய்வது அந்தக் கோபத்தையும் சேர்த்தே நம் கதைநாயகன் ஆதித்தியா காதலித்துவிட்டான்.
காலை வேளையில் சூரியனின் ஓளி பிரகாசமாய் மிளிர்ந்து கொண்டிருந்தது.
அசிஸ்டன்ட் கமிஷனர் என்ற பதவி உயர்வுக்குப் பின் சிவாவிற்குத் தரப்பட்ட குவாட்டர்ஸும் கொஞ்சம் பெரிதாய் இருந்தது. வீட்டின் முன்புறத்தில் தனசேகரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க அதில் வித்யாதரன் மீதான கோபம் மக்களுக்கு அடங்காமல் இருப்பதையும் உருவ பொம்மைகள் எரிப்பதையும் காட்டிக் கொண்டிருந்தன.
வித்யாதரனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற விவாத மேடையில் இது குறித்து விவாதங்கள் நடைபெற்று கொண்டிருப்பதைத் தனசேகரன் மும்முரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு பக்கம் சரோஜா வீட்டைச் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் சிந்துவை துரத்தியபடி உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
சிவா தன் அறையில் காக்கிச்சட்டை அணிந்து கொண்டு இன்னும் அதிகரித்த மிடுக்கும் கம்பீரத்தோடும் எதையோ தேடிக் கொண்டிருந்தவன் “வனிதா… வனிதா…” என்று அழைக்க, வனிதா சமையலறையில் இருந்த ஓடி வந்தாள்.
“கேஸ் பைஃலை காணோம்… நீ பாத்தியா?”
வனிதா சிரித்தபடி அந்தப் பைஃலை டிராவில் இருந்து எடுத்து கொடுத்து விட்டு, “ஏ. சி சார் இப்ப கொஞ்ச நாளா எல்லாத்தையும் மறந்திடறீங்க”
“நானா அங்கே வைச்சேன்?” என்று கேட்டான் சந்தேகத்தோடு.
“பின்ன நானா?” என்று வனிதா கேட்க அவன் குழம்பியபடி நின்றான்.
“பிரமோஷன் கிடைச்சதிலிருந்து ஏ. சி சாருக்கு பொறுப்பு குறைஞ்சு போச்சு” என்று கிண்டலடித்தாள்.
“இப்ப எதுக்கு ஏ. சி சார் ஏ. சி சார்னு ஏலம் விட்டிட்டு இருக்க… எப்பவும் எப்படி கூப்பிடுவியோ அப்படி கூப்புடுறி…” என்றான்.
“அசிஸ்டன்ட் கமிஷனராச்சே… மரியாதை கொடுக்க வேண்டாமா?” என்றாள்.
“கன்னத்திலேயே ஒண்ணு வைச்சேனா பாரு” என்று அவன் கைகளை ஓங்க வனிதா மிரண்டபடி, “வேண்டாம் மாமா” என்றாள்.
சிவா அவளைத் தன் அருகில் இழுத்து “நான் ஒண்ணு சொல்லவா?” என்றான்.
வனிதா புருவத்தை உயர்த்தியபடி, ‘என்ன’ என்று கேட்டாள்.
“அது… உங்க அக்காவுக்கும் ஒரு குழந்தை பிறக்க போகுது… போதாக் குறைக்கு வருணுக்கு வேற பிறக்க போகுது. நமக்கு இன்னொன்னு பிறந்தா நல்லாருக்கும் இல்ல?” என்றதும் வனிதா அவனை விட்டு விலகி வந்து அவனின் சட்டையைச் சரி செய்தபடி,
“நேர்மையான போலீஸ் ஆபிஸர் நீங்க. இன்னைக்குக் காலக் கட்டத்தில செலவை எல்லாம் சமாளிச்சு கணக்கு போட்டு குடும்ப நடத்த வேண்டாமா… அதனால நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்றாள்.
வனிதாவின் பதிலை கேட்ட சிவா, “தெளிவாதான்டி இருக்க” என்று சொல்லிவிட்டு தொப்பியை தலையில் மாட்டிக் கொண்டான். வாசல் வரை அவன் செல்ல அவன் நிழலென வனிதாவும் அவனை பின்தொடர்ந்தாள்.
சிவா தன்னுடைய பைக்கில் ஏறி மின்னலென வேகமாய் வனிதாவின் பார்வையில் இருந்து மறைந்தான்.
சுபாவிற்கு கேத்ரீன் வழக்கிற்கு பிறகு கிடைத்த பாராட்டுக்கள் கணக்கிலடங்கா. ரொம்பவும் குறுகிய காலத்தில் அவள் பிரபலாமாக மாற வேலை பளுவும் அதிகமானது. தன் வழக்கிற்கான விவரங்களைத் தேடியபடி சட்டம் புத்தகங்களுக்கு இடையில் அவள் சிக்கிகொண்டிருக்க சுபாவின் அம்மாவிற்கு பேரன் பேத்திகள் பின்னாடி ஓடுவதற்கே நேரம் சரியாயிருந்தது.
வருண் வேகவேகமாய் ஆபிஸுக்கு புறப்பட அவனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நந்தினியை மாதவி விழுந்து விழுந்து உபசரித்துக் கொண்டிருந்தாள்.
“இந்த மாதிரி நேரத்தில் சாப்பிட்டே ஆகணும்” என மாதவி சொல்ல நந்தினி முடியாது என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள்.
வருண் மாதவியின் அருகில் வந்து, “எங்கம்மா என் லஞ்ச் பாக்ஸ்?” என்று கேட்க மாதவியோ “டேபிள் மேல இருக்கு… போய் எடுத்துட்டுச் சீக்கிரம் கிளம்பு” என்றாள் சலித்துக் கொண்டபடி,
“இந்த வீட்டில எனக்கு மரியாதையே இல்லை “ என்று சொல்லி விட்டு புறப்பட்டவன் வாசலில் போய் நின்று கொண்டு “பை மா… பை நந்து “ என்று கிளம்பினான்.
அவனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் மாமியாரும் மருமகளும் உள்ளே பாசமழையை மாறி மாறி பொழிந்து கொண்டிருந்தனர்.
ஆதித்தியா தன்னுடைய வீட்டின் ஹாலில் ரொம்பவும் பாஃர்மலாய் உடை அணிந்து கொண்டு நின்று கொண்டிருக்க விந்தியா அவன் நின்றிருந்த திசையில் நேர்மாறாய் திரும்பி சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
“விந்து” என்றான். அவன் அழைப்பிற்குப் பதில் இல்லை.
“விந்து டார்லிங்” என்றான் கொஞ்சலாக. அப்போதும் அவளிடமிருந்து பதில் இல்லை.
“ப்ளீஸ் விந்தியா… என்னைப் பாருடி… என்கிட்ட பேசுடி” என்று கெஞ்சினான்.
“சரி பேசிறேன்… ஆனா நீங்க கான்ஃபரன்ஸுக்கு போகக் கூடாது” என்றாள் விந்தியா அவன் புறம் திரும்பி.
“அதெப்படி முடியும்?” என்றான்
“முடியாது இல்ல… அப்போ கிளம்புங்க” என்றாள்.
“இப்படி கோபமா வழியனுப்பிச்சா எப்படி… திஸ் இஸ் நாட் பேஃர்” என்றான்.
“ம்… எவிரித்திங் இஸ் பேஃர் இன்… லவ் அன் வார், நீங்க சொன்னதுதானே” என்றாள்.
ஆதித்தியாவின் முகத்தில் புன்னகை மலர அவன் விந்தியாவுடன் சோபாவில் உட்கார அவள் உடனே எழுந்து நின்று கொண்டாள்.
“விந்தியா…” என்று அவளை அருகில் இழுத்து நிறுத்தினான்.
“ஆதி”
“உன் கிட்டதானே பேசக்கூடாது… நான் என் பேபிக்கிட்ட பேசப் போறேன்”
“பாப்பாவுக்கு நீங்க பேசிறெதல்லாம் கேட்க அஞ்சு மாசமாவது ஆகணும்”
“நான் பேசுதை புரிஞ்சிக்க உணர்வுகள் இருந்தா போதும்… காதுகளும் மொழியும் தேவையில்லை”என்றான்
“ம்… அப்புறம்”
அவள் வயிற்றைப் பார்த்தபடி, “பேபி டார்லிங்… ஜஸ்ட் டூ டேஸ்… போயிட்டு வந்துருவேன்… நீதான் உங்க அம்மாவை பாத்துக்கணும்…
என்னைப் பத்தியே நினைச்சிட்டு இருப்பா… ஒழுங்கா சாப்பிட மாட்டா… ஒழுங்கா தூங்க மாட்டா… சோ மை பேபி டார்லிங்… டேக் கேர் ஆஃப் ஹர் அன் யுவர்செல்ஃப்… ஓகேவா… ஐ லவ் யூ சோ மச்” என்று சொல்லிவிட்டு ஆதித்தியா தன் பிடியை தளர்த்த விந்தியா அவனை விட்டு நகர்ந்து வாசல் கதவோரமாய் நின்று கொண்டு கண்களைத் துடைத்து கொண்டாள்.
“டைமாச்சுடி… கிளம்பட்டுமா?” என்றான்.
அவள் சரி என்று தலையாட்டினாள்.
“இப்படிக் கடமைக்குத் தலையாட்ட கூடாது… மனசிலிருந்து சொல்லு” என்றான்.
விந்தியா அழகாய் மலர்ந்துவிட்ட இதழ்களோடு, “யூ ஆர் மை ஒன் அன் ஒன்லி லவ் ஆதி… டேக் கேர்…” என்றாள்.
“ஷபானாகிட்ட சொல்லிருக்கேன்… நான் வரவரைக்கும் அவ வந்து உன் கூட இருப்பா… ஓகே வா?” என்றான்
“ ம்” என்று தலையசைத்தாள்.
பின்புறமாய் அவளைப் பார்த்துக் கொண்டே நடந்த போய் காரில் ஏறிக்கொள்ள விந்தியா கை அசைத்து வழியனுப்பினாள்.
கார் கேட் வரை பொறுமையாய் ஊர்ந்து செல்ல விந்தியா அதைப் பார்த்தபடியே வாசல் கதவோரமாய்ச் சாய்ந்தபடி நின்று கொண்டாள்.
வெகுதூரம் சென்றாலும் அவர்களின் அந்தப் பிரிவு மனதளவில் நெருக்கத்தையே அதிகரித்தது. இரு துருவங்களாய் நின்றிருந்தவர்கள் இனி எத்தனை தடங்கல் வரினும் அவர்கள் பயணம் இணைந்தேதான் இருக்கும்.
ஆனால் அவர்களுடனான நம்முடைய இந்த விந்தையான பயணம் இங்கே இந்த இடத்தில் முடிவடைகிறது.
*********முற்றும்********
Excellent story