Madhu’s Maran-17
அத்தியாயம் 17:
படம் பார்த்து முடிந்தபின் திரையரங்கத்தை விட்டு ஒவ்வொருவராய் வெளி வந்துக் கொண்டிருந்த சமயம், மாறனின் முன்பு வந்து நின்றாள் ஒரு பெண்.
அது இரவு ஒன்பதரை மணியை நெருங்கி கொண்டிருந்த நேரம்.
“ஹாய் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் செய்ய முடியுமா ப்ளீஸ்” என்று கண்கள் சுருக்கி கெஞ்சும் பாவத்தில் அந்த பெண் கேட்க,
“நீங்க யாரு?தெரியாத ஆளு கிட்ட வந்து ஹெல்ப் கேட்டுட்டு இருக்கீங்க” என்று ஆராய்ச்சி பார்வையில் கேட்டான் மாறன்.
“நான் உங்க ஆபிஸ்க்கு எதிரில இருக்க பிஜில தான் தங்கியிருக்கேன். உங்களை அடிக்கடி அந்த பக்கம் பார்த்திருக்கேன். இப்ப இங்க மூவி பார்க்க வந்தேன். என் ஃப்ரண்ட் வரேன்னு சொல்லிட்டு லாஸ்ட் மினிட்ல வராம போய்ட்டா .. இப்ப நான் படம் பார்க்கும் போது என் பின்னாடி சில பொறுக்கி பசங்க ரொம்ப அசிங்கமா என்னைய கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. இப்ப தனியா போக பயமா இருக்கு. அவங்க என்னைய ஃபாலோ பண்ற மாதிரி வேற ஃபீல் ஆகுது. என்ன செய்யலாம்னு யோசிட்டு இருந்தப்ப தான் உங்களை பார்த்தேன். அதான் உங்க கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு தோணுச்சு. என்னைய பிஜில கொண்டு போய் விட்டுட்டு போறீங்களா ப்ளீஸ்” என்று கெஞ்சும் பாவனையில் கேட்க,
“என்னைய மட்டும் எப்படி நல்லவன்னு நம்புறீங்க” என்று மீண்டும் ஆராய்ச்சி பார்வையிலேயே அவன் கேட்க,
“மச்சி உன் வருங்கால மனைவி இந்த பொண்ணா தான் இருக்குமோ” என்று அவன் நண்பன் அவன் காதை கடிக்க,
“ம்ப்ச் சும்மா இருடா” என்று அதட்டியவன்,
“சொல்லுங்க என்னைய மட்டும் எப்படி நம்புறீங்க. இப்படி நைட் டைம்ல கூட யாருமில்லாம வந்ததே தப்பு. உங்க சேஃப்டி உங்க கைல தாங்க இருக்கு” என்று கூற,
“எங்க வோனர் கிட்ட நீங்க பேசினதை பார்த்திருக்கேன். ஒரு லேடிஸ் பிஜி எதிரில இருக்கும் போதும் கூட நீங்க இந்த பிஜில இருக்க பொண்ணுங்களை திரும்பி கூட பார்த்ததில்லை. ஆபிஸ் வருவீங்க நீங்க உண்டு உங்க உண்டுனு உங்க வேலைய மட்டும் பார்த்து போய்டுவீங்கனு எங்க வோனர் அப்ப உங்களை பத்தி பெருமையா சொல்லிட்டு இருந்தாரு. அந்த நம்பிக்கைல தான் இப்ப இப்படி வந்து உங்களை கேட்கிறேன்” என்று தலையை குனிந்துக் கொண்டு மெதுவாய் வாய்க்குள் முணுமுணுக்க,
“மச்சி நீ அவங்களை நம்ம வண்டில கூட்டிட்டு போடா. நான் பஸ்ல வீட்டுக்கு போய்டுவேன்” என்றான் அந்த நண்பன்.
சற்று நேரம் யோசித்த மாறன், “நீங்க ஆட்டோ பிடிச்சி முன்னாடி போங்க. அந்த ஆட்டோவ ஃபாலோ பண்ணிட்டு பின்னாடி நாங்க வரோம்” என்றான் மாறன்.
அவள் ஆட்டோ நோக்கி நடக்க, “ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ உங்க பேர் என்ன?” என்று கேட்டான்.
“தீபா” என்றாள்.
பின் ஆட்டோ பிடித்து அவள் செல்ல, அதன் பின்னோடு இருவரும் சென்று அவள் இறங்குவதை பார்த்ததும் விடை பெற்று செல்ல,
“தேங்க்ஸ் வெற்றி. உங்களை வெற்றினு கூப்பிடலாம்ல” என்று கேட்டாள்.
“ஹ்ம்ம் கூப்பிடலாம்” என்றான்.
“உங்க ஃப்ரண்ட் பேரு சொல்லவே இல்லயே” என்றவள் கேட்க,
“என் பேரு அஸ்வின் சிஸ்டர்” என்றவன்,
“சிஸ்டர் வெற்றி நம்பர் வாங்கிக்கோங்க, உங்களை பார்த்தா பெங்களூருக்கு புதிசுனு தெரியுது. எந்த நேரம் என்ன உதவினாலும் நம்ம வெற்றி செய்வான்” என்று கோர்த்துவிட,
அவனை நன்றாய் முறைத்து விட்டே வெற்றி தனது நம்பரை கொடுத்து அவளுடையதை பெற்றுக் கொண்டான்.
பின் இருவரும் வண்டியில் வெற்றியின் இல்லத்திற்கு சென்றனர்.
அஸ்வின் வெற்றியுடன் கல்லூரியில் படித்த தோழன். பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராய் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறான்.
வெற்றி இங்கு அலுவலகம் தொடங்கியதும் அவனுடன் சேர்ந்து தங்கி கொண்டான்.
வெற்றியின் இந்த காதலை அறிந்த ஒரு நபர் இவன் தான். (பின்னே இந்த காதல தண்ணீ ஊத்தி வளர்த்தது இவன் தானே)
அன்றிரவு வெற்றியிடம், “மச்சி தீபா தங்கச்சி தான்டா உன் வருங்கால மனைவினு எனக்கு பட்சி சொல்லுதுடா. அதெப்படி இத்தனை பேரு இருக்கும் போது அவங்க உன்கிட்ட வந்து உதவி கேட்டாங்க. எல்லாம் விதி அதான் அப்படி நடக்குது” என என்னன்வோ கூறி வெற்றியின் மனதை இவன் கலைக்க,
அவளின் அழகும் தோற்றமும் அவன் கண் முன்னே வந்து போக, “நமக்கு ஏத்த ஜோடியா தான் அந்த பொண்ணு தெரியுது. நமக்கு மனைவியா வர்ற அத்தனை தகுதியும் இருக்கு தான்” என்று எண்ணிக் கொண்டான்.
அப்பொழுது மாறன் திருமணத்திற்கான தகுதியாய் எண்ணியது அழகும் ஜோடி பொருத்தமும் மட்டுமே.
அன்றிரவே அப்பெண்ணிடமிருந்து மாறனுக்கு “பத்திரமாய் வீடு போய் சேர்ந்துட்டீங்களா?” என்றொரு குறுஞ்செய்தி வந்திருக்க,
மாறனின் மனம் பூரித்து குதூகலித்து போனது.
அக்குறுஞ்செய்தியை பார்த்ததும், “அஸ்வின் சொல்ற மாதிரி இவ தான் நான் கட்டிக்க போற பொண்ணா இருக்குமோ?? இவளை கட்டிக்கிட்டா நல்லா தான் இருக்கும்” என எண்ணிக் கொண்டே பதில் செய்தி அனுப்பினான்.
பின் குறுஞ்செய்தியிலேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தங்களின் நட்பை வளர்ந்திருந்தவர்கள்,
வாரயிறுதி நாட்களில் ஊர் சுற்றி, பின் அலுவலகம் செல்லும் நேரமெல்லாம் அவளை நேரில் சந்தித்து உரையாடி என தங்களது நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றிருந்தனர்.
ஒரு நாள் தாங்கள் குடியிருக்கும் இல்லத்திற்கே அவளை அழைத்து சென்றான் மாறன்.
அங்கு தான் தன் காதலை அவனிடம் உரைத்தாள் தீபா.
இங்கு…
கண்ணில் நீர் வழிய அமைதியாய் இவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த வாணி,
“நம்ம இப்ப இருக்க பெங்களூர் வீட்டுலயா இதெல்லாம் நடந்துச்சு” என்று கேட்டாள்.
அவளின் கேள்வியில் சிரிப்பு வந்தது மாறனுக்கு.
“அவ லவ் சொன்னதை விட, எந்த வீட்டுல வச்சி லவ் சொன்னாங்கிறது தான் முக்கியமா மதுபொண்ணு” என சிரித்துக் கொண்டே கேட்க,
“ஆமா நாம இப்ப இருக்க பெங்களூர் வீட்டுல எனக்கு நிறைய நல்ல நினைவுகள் மெமரீஸ் இருக்கு. அங்க வச்சி தான் இதெல்லாம் நடந்திருந்தா இனி இந்த வீடு எனக்கு துயரமான நினைவுகளை வழங்கும் இடமா மாறிடும்” என நா தழுதழுக்க அழுதுக் கொண்டே வாணி கூற,
“ம்ப்ச் மதும்மா நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காதேனு சொன்னேன்” என்று கூறிக்கொண்டே அவளருகில் வந்து அவள் தலையை அவன் கோத,
அவன் மார்பில் சாய்ந்து குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
“இதெல்லாம் அப்ப நடந்தது மதும்மா. அது லவ் கூட இல்ல. ஈர்ப்பு தான்னு தெரிஞ்சிக்கிட்டேன். நான் காதலுக்கான அர்த்தம் தெரிஞ்சிக்கிட்டது உன்கிட்ட தான்.” என்றவன் அவளை ஆறுதல் படுத்த,
அவனில் இருந்து பிரிந்து அமர்ந்தவள், “ம்ம் நான் அழல. நீங்க சொல்லுங்க” என கண்களை துடைத்துக் கொண்டு அழுகையால் ஏற்பட்ட விக்கலில் விக்கி கொண்டே கூற,
சற்றாய் அவளுக்கு வீசிங் தொடங்க ஆரம்பித்தது.
அவளுக்கு குடிக்க தண்ணீர் அளித்து, அவள் சைனஸ்க்கு போட வேண்டிய மாத்திரைகள் அளித்தவன், “இரு வரேன்” என்று எழுந்து செல்ல,
அவன் கையை பற்றியவள், “எங்க போறீங்க? மீதிக் கதையை சொல்லிட்டு போங்க” என்றாள்.
“உன் ஹெல்த் சரியாக்குறது தான் எனக்கு இப்ப முக்கியம் மதும்மா. இதுக்கு தான் நான் சொல்லாம இருந்தேன். பேசி பேசியே என்னை சொல்ல வச்சிட்டல” என்று சற்று கடுப்பாய் உரைத்தவன், சமையலறை சென்றான்.
அவன் அவ்வாறு உரைத்ததற்கும் சேர்த்து அழுதாளவள்.
சமையலறையில் நின்றுக் கொண்டு இவளுக்காக அவன் பால் காய்ச்சி கொண்டு இருக்க, அவனின் மனமெல்லாம் இவளின் அழுகையை எண்ணி வேதனையில் திளைத்திருந்தது.
“இதுக்காக தான் சொல்லாம இருந்தேன். கேட்டாளா?? இப்ப கண்டதையும் கற்பனை பண்ணி அவளையே அவ கஷ்டபடுத்திப்பா. முதல்ல எல்லாத்தையும் முழுசா சொல்லி முடிக்கனும். என் லவ் முழுக்க அவளுக்கு மட்டும் தான்னு புரிய வைக்கனும்” என தனக்குள்ளேயே கூறிக்கொண்டவன் அவளுக்கு பால் கலந்துக் கொண்டு போய் கொடுத்தான்.
அவனிடம் பால் வேண்டாமென கூறியவள், “அப்ப நான் கேட்கலைனா வாழ்க்கை முழுக்க இதை என்கிட்ட சொல்லாம மறைச்சிருப்பீங்களா” என்று அந்த கேள்வியிலேயே அவள் நிற்க,
“நீ பால் குடிச்சா தான் என்கிட்ட இருந்து பதில் வரும்” என்றவன் அவளை தன் கைக்குள் வைத்து அவளுக்கு பாலை புகட்டினான்.
அவனின் இந்த கனிவிலும் காதலிலும் அவளுக்கு கண்ணீர் சுரந்தது.
இவனின் இக்கனிவையும் அன்பையும் ஏற்று கொள்ளவும் முடியாமல் ஏற்று கொள்ளாமல் இருக்கவும் முடியாமல் இருதலை கொள்ளியாய் அவளின் மனம் தவித்தது.
அவள் பால் அருந்தி முடிந்ததும், அவளருகிலேயே அமர்ந்து அவள் மடியில் தலை சாய்த்தவன்,
“இப்ப நம்ம இருக்க பெங்களூர் வீடு நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்ச பிறகு வாங்கி கட்டினது மது. உனக்காக நான் பார்த்து பார்த்து கட்டியது அது” என்றான்.
“நிஜம்மாவா??” என ஆச்சரியமாய் சிறு பிள்ளை போல் அவள் கேட்க,
அவள் கன்னம் பற்றி முத்தமிட்டவன்,
“என் செல்லகுட்டிய விட எனக்கு யாரடா பெரிசா பிடிச்சிட போகுது இந்த உலகத்துல” என்றான்.
“இப்படி பேசி பேசியே என்னைய நீங்க ஏமாத்தி வச்சிருக்கீங்களோனு தோணுது எனக்கு” என்றவள் கூறிய நொடி அவள் மடியிலிருந்து சட்டென்று எழுந்தமர்ந்தான் மாறன்.
–நர்மதா சுப்ரமணியம்
Nalla thanni uthi valakama vittotanga.k kadhaluku….😜😜
Madhura ponnu unmaiya urakka solitiye ma..😝😝