Madhu’s Maran-3
அத்தியாயம் 3
“அந்த இஷ்யூ என்னாச்சு. சீக்கிரம் சால்வ் பண்ணி க்ளோஸ் செய்ய பாருங்க. டைம்குள்ள முடிக்கலனா யூசர் எஸ்கலேட் பண்ணிடுவாங்க. அது பார்த்துக்கோங்க. ஈவ்னிங் மீட்டிங் ஷெட்யூல் பண்ணியிருக்கேன். அப்ப டீடைல்லா சொல்றேன்”
டீம் லீடாய் அவளது பொறுப்புக்கேற்றார் போல் தனக்கு கீழ் வேலை செய்பவர்களின் வேலையை மேற்பார்வை பார்த்தவளின் மனமோ பரபரப்பாய் அடுத்த அரை மணி நேரத்தில் நடக்கவிருக்கும் க்ளைண்ட் மீட்டிங்க்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள முனைப்பாய் இருந்தது.
கொஞ்சம் பதற்றம் கொஞ்சம் சோர்வு என அந்த மீட்டிங்குக்கு தயாராகி கொண்டிருந்தவளின் மனம் அந்த அழுத்தத்தை(ஸ்ட்ரஸை) கையாள முடியாமல் சற்று திணற, அவள் சற்றாய் கண் மூடி தலை சாய்த்த நேரம் மாறனின் முகம் அவள் கண் முன் வந்து நின்றது.
முந்தைய நாள் வர்க் ஃப்ரம் ஹோம்(work from home) செய்ததின் பலனாய் பல வேலைகள் நிலுவையில்(பெண்டிங்கில்) இருக்க, இன்று அனைத்தும் சேர்ந்து அவளை வச்சி செய்தது.
அந்நேரம் தோன்றிய மாறனின் முகம் அவள் முகத்தில் காதல் புன்னகையை தோற்றுவிக்க, கை தானாய் தன் கைபேசியில் இருந்த இணையத்தை (இன்டர்நெட்டை) உயிர்பித்து மாறனுக்கு வாட்ஸப் செய்ய சென்றது.
அவள் குறுஞ்செய்தி அனுப்பும் முன் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வர, “என்ன இன்னிக்கு என் செல்லகுட்டி கிட்டயிருந்து ஒரு மெசெஜும் இல்ல” என அனுப்பியிருந்தான்.
அவனின் குறுஞ்செய்தி பார்த்ததும் அவள் மனம் துள்ளி குதித்து அடங்கியது. சோர்வு பதற்றமெல்லாம் எங்கோ காணாமல் போய் தன்னை சுற்றிலும் அவன் மட்டுமே, தன்னிலும் அவனின் நினைவு மட்டுமே என மனம் மெய் அனைத்தும் அவனையே சுற்றி வந்தது.
“என் செல்ல கண்ணப்பா” என பல ஹார்ட்டின் மற்றும் கிஸ்ஸிங் ஸ்மைலிகளை அனுப்பியவள்,
“ஃபீலிங் சோ ஸ்ட்ரெஸ்டு பா” என பல சோக ஸ்மைலிக்களை அனுப்பினாள்.
“ஒன்னுமில்லடா தங்கம் யு கேன் ஹேண்டுல். எதையும் மனசுக்குள்ள எடுத்துட்டு போகாதே. தலைக்குள்ள வச்சி செஞ்சிட்டு அப்படியே தூரப்போட்டுட்டு வந்துடு. இதெல்லாம் பார்ட் ஆப் லைப் தான். இதுக்காக நம்ம உடம்பை கெடுத்துக்க கூடாது சரியா”
“என் செல்லகுட்டி ஹேப்பியா வீட்டுக்கு வந்தா, உன் கண்ணப்பா நிறைய நிறைய கிஸ் கொடுப்பேனாம்” என பல கண்ணடிக்கும் ஸ்மைலிகளும் கிஸ்ஸிங் ஸ்மைலிக்களும் அனுப்பினான்.
அவளின் மனம் இறகில்லாமல் எங்கோ பறக்க, முகம் வெட்க புன்னகையை பூசிக் கொள்ள, சரியாய் அந்நேரம் அவளருகே அவளின் மேனேஜர் வந்து, “ஆர் யூ ரெடி பார் த மீட்டிங்” என்றார்.
வானில் பறந்துக் கொண்டிருந்த மனம் தொபுகடீரென கீழே விழ பதறியடித்து எழுந்தவள், வாய்க்கு வந்ததை உளறி வைத்தாள்.
அவர் சென்றதும், “நான் வீட்டுக்கு வந்ததும் மீதி ரொமேன்ஸ் வச்சிக்கலாம்” என கண்ணடிக்கும் ஸ்மைலியுடன் மெசேஜ் அவனுக்கு அனுப்பியவள், சற்றாய் மனம் புத்துணர்வு பெற்றதாய் உணர்ந்தவள் தன் வேலையில் கவனத்தை செலுத்தலானாள்.
ஒரு மணி நேரம் கழித்து மீட்டிங் முடிந்து வந்து தன் கைபேசியை பார்க்க,
“இதெல்லாம் ரொமேன்ஸ்னு வெளில சொல்லிட்டு திரியாத மது பொண்ணே… அப்புறம் மாறன் இது தான் ரொமேன்ஸ்னு சொல்லி கொடுத்தாரானு ஊர் என்னை கேலி செய்யும்” என கேலி ஸ்மைலிக்களை அனுப்பிருந்தான்.
அதை கண்டவள் வாய் பொத்தி சிரிக்க, அந்நேரம் அவளருகே வந்த சக பணியாளர், “என்ன மாறன் கூட ரொமேன்ஸ்ஸா?? கல்யாணமாகி ஒரு மாசத்துலயே பழைய ஜோடி ஆயிடுவாங்க. நீ என்னடானா இன்னும் நியூலி மேரீடு எஃபக்ட்லயே சுத்திட்டு இருக்கியே?? என் புருஷனை மாறன் கிட்ட கத்துக்க சொல்லனும் போல” என அவள் தீவிரமாய் மதுவை கிண்டல் செய்ய, மது வாய்விட்டு சிரித்தாள்.
மாலை சீக்கிரமாய் வீடு வந்த மது, தன்னிடம் இருந்த வீட்டு சாவியை வைத்து கதவை திறக்க போன நொடி, கதவு தானாய் திறக்க, “என்னடா கண்ணப்பா ரொமேன்ஸ் பண்ண சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டியா??” என மைண்ட் வாய்ஸுக்குள் அவனிடம் பேசியவள் பொறுமையாய் உள்நுழைந்தாள்.
“ஹய்யா அத்தை!! வந்துட்டீங்களா??” என ஓடி சென்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள்.
“மாமியார் ஊருல இருந்து வந்துட்டாங்கனு சந்தோஷப்படுற ஒரே மருமக நீயா தான் இருப்ப” என்றார் அவளின் மாமனார்.
மாமியார் மருமகள் இருவரும் கலகலவென சிரித்தனர்.
வழமைபோல் மாமியாரிடம் கதை கேட்டுக் கொண்டே அவருடன் இணைந்து இரவுணவை தயார் செய்தாள்.
மனஸ்தாபம் இல்லாத உறவு உலகில் இருக்க வாய்ப்பில்லை. தாய் தந்தையரே ஆயினும் நமது வாழ்நாளில் ஏதோ ஓர் சூழலில் ஏதோ ஓர் நிகழ்வு மனஸ்தாபம் வர வைத்துவிடும். ஆயினும் பெரும்பான்மையான தாய் தந்தையர், மகள் அல்லது மகனின் நலனை மனதில் கண்டு அதனை வெளிக்காட்டாது இருந்துவிடுவர்.
அவ்வாறு இருக்கையில் மாமியார் மருமகள் மத்தியில் மனஸ்தாபம் வராமல் இருக்குமா என்ன??
ஆம் வந்தது. அதற்கு மாறனே காரணமாகவும் அமைந்தான்.
பொதுவாகவே மகனை பெற்ற தாய்மார்கள் அனைவருக்கும் மகனுக்கு திருமணமான பிறகு பொசசிவ்னஸ் வந்துவிடும்.
மகனுக்கு தான் முக்கியமில்லாது மனைவி தான் முக்கியமாகி போய்விட்டதாய் மாயை தோன்றி மனதை அறுக்கும். அதுவே திருமணமான மாமியார் மருமகள் பிரச்சனைக்கு காரணமாக அமையும்.
அவ்வாறோர் பிரச்சனை தான் இவர்களுக்கும் வந்தது. ஆனால் அது திருமணத்திற்கு முன்பே வந்தது.
திருமணம் நிச்சயித்த நாளிற்கு பிறகு பெங்களூருக்கு தொழில் கவனிக்க சென்ற மாறன், தினமும் நம் வாணியிடம் அலைபேசியில் காதலை வளர்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு மாதமாகிய கால நிலையில் வாணி மாறனிடம் பேசிக் கொண்டிருக்க, “அம்மாக்கு என்னாச்சுனு தெரியலை. வர வர ரொம்ப தான் என் கிட்ட சண்டை போடுறாங்க” என்றவன் அவளிடம் கவலையாய் கூற,
“எப்ப பேசுனீங்க அத்தைட்ட” என்றாளவள்.
“ஹ்ம்ம் பேசி இரண்டு நாள் இருக்கும்” என்றவன் கூற,
“என்னது இரண்டு நாளா… அப்புறம் சண்டை போடாம… கொஞ்சுவாங்களா??” என்றாள்
“நீ வேற… அவங்க சண்டை போடுறாங்கனு தான் பேசாம இருக்கேன். நான் எப்பவுமே பெங்களூர்ல இருக்க நேரம், அம்மாகிட்ட அப்பப்ப தான் பேசுவேன். இப்பவும் அப்படி தான் பேசுறேன். என்னமோ இப்ப நான் அவங்களை கண்டுகிறதே இல்லங்கிறது போல பேசுறாங்க. என்ன தான் இருந்தாலும் அம்மா என்னால மனசு கஷ்டபடுறாங்கன்ற எண்ணமே மனசை கஷ்டமாக்குது. என்னனு கேட்டாலும் முழுசா எதுவும் சொல்ல மாட்டேன்றாங்க. நீ என்னனு கேட்டு பாரேன் மது” என்றான்.
“எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு பொசசிவ்னஸ் ஆயிருக்கும்” என்றாள் மது.
“என்னது பொசசிவ்னஸ்ஸா??” என இவன் ஆச்சரியமாய் கேட்க,
“ஆமாங்க. அம்மா பையன்குள்ள இருக்க பொசசிவ்னஸ் செம்ம க்யூட்டா இருக்கும்” என்றவள் ரசித்து கூற,
“என்னைய வச்சி காமெடி கீமிடி ஒன்னும் பண்ணலையே நீ” என்றிவன் கலாய்க்க,
“அட உண்மைய சொன்னா கிண்டல் செய்றீங்க. பொதுவாவே பொண்ணுங்களுக்கு யார் மேல அஃபெக்ஷன் இருந்தாலும் பொசசிவ் வரும். அதுலயும் சொந்த பையன் மேல அம்மாக்கு இருக்க பாசம், அதை பங்கு போட மருமக வந்துட்டா போதும்… அவங்களை மீறி அவங்க மனசுக்கு மருமக பையனை தன்னை விட்டு பிரிக்க வந்த ஆளா தான் தெரிவா… இதுல நீங்க இப்பவே இரண்டு நாள் ஒரு தடவை பேசினா, அவகிட்ட பேச நேரமிருக்கு என் கிட்ட பேச நேரமில்லையானு அவங்க நினைச்சிருப்பாங்க”
“நான் நம்ம நிச்சயத்துக்கு முன்னாடியே பல நாட்கள் ரொம்ப வேலை இருக்கும் போது அப்படி இரண்டு நாளைக்கு ஒரு தடவை பேசிருக்கேன் மது”
“அது அப்ப நீங்க பேசாமலே இருந்தாலும் தோணாதுங்க. இப்ப நான் இருக்கேன்ல. அவங்க என் மகன் என் உரிமைனு நினைப்பாங்க. நானும் என் புருஷன் என் உரிமைனு சண்டை போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கும். அவங்க பெத்து போடலனா எனக்கு இப்படி ஒரு புருஷனே கிடையாது தானே. அதனால நான் விட்டு கொடுக்கிறேன். கொடுக்கனும். இன்னிலருந்து தினமும் அத்தைகிட்ட பேசுறீங்க. அவங்க கிட்ட பேசின பிறகு தான் என்கிட்ட பேசுறீங்க. அப்புறம் உங்களுக்கு நானும் அத்தையும் இரண்டு கண்ணா இருக்கலாம் ஆனா எப்பவும் யார் முன்னாடியும் அம்மாவ விட பொண்டாட்டி தான் பெரிசுனு தூக்கி வச்சி பேசாதீங்க. முடிஞ்ச வர அம்மா எவ்ளோ முக்கியம் எவ்ளோ பாசம் வச்சிருக்கீங்கனு அடிக்கடி காமிங்க. இதெல்லாம் மாமியார் மருமகள் பிரச்சனைய வெகுவாய் குறைக்கும் யுக்திகள்” என மது தன் உரையை முடிக்க,
“சரிங்கம்மணி… நீங்க சொன்னபடியே செஞ்சிடலாம்.” என இவன் பயந்தவனாய் பாவமாய் பேச,
அவள் வாய் விட்டு சிரித்தாள்.
இவ்வாறு தான் விட்டு கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டு கொடுத்து அவ்வப்போது மாமியாரின் திட்டிற்கு மறுவார்த்தை பேசாது அமைதியை கடைபிடித்து ஒருவாறு சண்டை வராமல் மாமியாரிடம் நட்பை வளர்த்துக் கொண்டாள் மது.
இன்று தன் மாமியாருடன் சேர்ந்து சமையல் செய்தவள், அனைவரும் சேர்ந்து உண்ணலாம் எனக் கூறி இவளே பரிமாறினாள்.
இரவு அனைத்து வேலையும் முடித்து அவர்களின் அறைக்குள் அவள் நுழைந்ததும் பின்னிருந்து அவளை அணைத்திருந்தான் மாறன்.
“வெற்றிப்பா ரொம்ப தலைவலிக்குது தைலம் தேய்ச்சி விடுறீங்களா” என்றாள் மது.
மாறன் அவளை தனது மடியில் படுக்க வைத்து தைலம் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தான்.
கண்மூடி அவன் கரத்தின் அழுத்தம் தரும் சுகத்தினை, அது நீக்கும் தன் வலியை, அவனின் ஸ்பரிசத்தை சுகித்திருந்தாள் மது.
தைலம் தேய்த்துவிட்ட வாறே, ” ஆமா ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சன் மது. உன் ஃப்ரண்ட்ஸ்லாம் பேசுறாங்களா?? ஆஷிக் என்கிட்ட பேசியே பல மாசமாச்சே??” என்றிவன் கேட்க,
அவனின் அக்கேள்வியில் கண்ணை திறந்த மதுவின் விழிகள் வேதனையை பிரதிபலித்தது.
— நர்மதா சுப்ரமணியம்
மருமகள் – மாமியார் – மகன் உறவு பாலம் அருமை .. இன்றைய தலைமுறை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நல்ல விஷயம் .. நன்றி கதை ஆசிரியை மற்றும் வாழ்த்துக்கள் . அதனைப் போலவே அப்பா – மகள் – கணவன் அழகு ..