Solladi Sivasakthi-25&26
25
மீண்டும் ஓர் பயணம்
அன்று பள்ளியில் பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சிவசக்தியும் ஜெயாவும் நிற்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினருக்கான வரவேற்பு உரை, மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசு தொகை என எண்ணற்ற வேலைகளை இரு தோழிகளும் கவனித்துக் கொண்டனர். பரிசு வழங்க மாவட்டச் செயலாளர் விருந்தினராய் அழைக்கப்பட்டிருந்தார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் எதிர்காலக் கனவையும் புதுக் கல்லூரிப் பயணம் குறித்தும் ஆர்வமாய்த் தங்கள் இருக்கையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.
மாணவர்களின் இரைச்சல் சத்தம் விழா அரங்கைச் சுற்றி ஒலிக்க, விருந்தினர் நுழைந்த மறுகணம் அமைதி ஏற்பட்டு விழா ஆரம்பமானது. எல்லோரின் காத்திருப்பும் கேள்வியும் சக்திசெல்வனைப் பற்றியே இருந்தது. ஜோதி சாரும் கூட ஆவலோடு அவனை மீண்டும் பார்க்க காத்துக் கொண்டிருந்தார்.
ஜெயா தம் ஆவலை சிவசக்தியிடமும் வெளியிட்டாள்.
“என்ன சக்தி… விழா ஆரம்பிச்சிடுச்சு… சக்தி ப்ரோ வரலியே… பசங்க எல்லாம் கூட ரொம்ப எதிர்பார்த்திட்டு இருக்காங்க” என்றாள்.
சிவசக்தி அவளை நோக்கி,
“சக்தி வரமாட்டாரு ஜெயா… தேவையில்லாம எதிர்பார்க்காதே” என்று தீர்க்கமாய் உரைத்தாள்.
“நீதான்டி மெயில் அனுப்பு சொன்னே”
“மெயில்தான் அனுப்பச் சொன்னேன்… சக்தி வருவார்னு சொன்னனேனா ?!” என்றாள் சக்தி.
ஜெயாவுக்குச் சிவசக்தி சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால் சிவசக்தி அவனைச் சரியாகவே கணித்திருந்தாள். தன்னைத் தவிர்த்து விட்டுச் சென்றவன் இன்று மீண்டும் அவள் முன்னிலையில் வருவானா என்ற அவளின் எண்ணம் சரியாகவே இருந்தது. அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த எல்லோருக்குமே ஏமாற்றமே மிச்சமாயிருந்தது.
சக்திசெல்வன் முழுமையாய் அவர்களை ஏமாற்றிவிடவில்லை. அவனின் சார்பாக விழா நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நபர் வந்து இறங்கினர். அவர் ஜெயாவை பற்றிக் கேட்க அவளும் யாரென்று புரியாமல்,
“யார் நீங்க… என்ன வேணும் உங்களுக்கு?” என்று வினவினாள்.
அந்த நபர் ஒரு கடிதத்தை நீட்டினார். அதைப் பிரித்தவள் சக்திசெல்வனின் கையெழுத்தைக் கண்டு ஆர்வமாய்ப் படிக்கலானாள்.
“ஜெயா,
நான் பாராட்டு விழாவுக்கு வர முடியல. ஐம் எக்ஸ்ட்டிரீம்லி சாரி. எல்லா ஸ்டூண்டட்ஸுக்கும் கிஃப்ட்ஸ் அனுப்பி இருக்கேன். எல்லார்க்கிட்டையும் என்னோட விஷ்ஷஸை மறக்காம கன்வேபண்ணிடு… ஜோதி சார்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடு” என்று முடிந்திருந்தது.
ஜெயாவிற்கு இது எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது.
அந்தக் கடிதத்தில் சக்தியை பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடவில்லை என எண்ணும் போது சக்திசெல்வனின் மீது ஜெயாவிற்குக் கோபத்தை உண்டுபண்ணியது.
சக்திசெல்வன் அனுப்பிய நபர் எல்லா மாணவர்களுக்கும் அவன் கையெழுத்துடன் கூடிய பரிசை வழங்கினார். அந்த நபர் ஆனந்தியிடம் தனிப்பட்ட முறையில் சக்திசெல்வன் கொடுத்த பரிசையும் தந்து விட்டு விரைந்தார்.
சக்திசெல்வன் எங்கே இருந்தாலும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவதில் அவனுக்கு நிகர் அவனே. மாணவர்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் அவன் அனுப்பியிருந்த பரிசுகள் அவர்களை வியப்பில் ஆழ்த்தின.
சக்திசெல்வன் வரவில்லை என்றாலும் தான் யாரையும் மறந்துவிடவில்லை என்பதை உணர்த்திவிட்டான். எப்படியோ பாராட்டு விழா திருப்திகரமாகவே முடிவடைந்தது.
சிவசக்தி அவன் வர வாய்ப்பில்லை என்று கணித்தாலே ஒழிய இப்படி அவன் எல்லோருக்கும் பரிசு அனுப்பி வைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த யோசனையில் அவள் ஆழ்ந்திருக்க ஜெயா விழா முடிந்துவிட்ட நிம்மதியில் பெருமூச்சு விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.
“சக்தி ப்ரோ எல்லோருக்கும் கிஃப்ட்ஸ் அனுப்பினது இல்லாம எல்லாத்திலயும் கையெழுத்தையும் போட்டு கொடுத்திருக்காரு… இவ்வளவும் செய்ய முடிஞ்ச சக்தி ப்ரோ நினைச்சிருந்தா நேர்ல வந்திருக்கலாமே… ஆனா ஏன் வரல… என்ன காரணம்?” என்று ஜெயா எழுப்பிய சந்தேகம்
சிவசக்தியின் மனதிலும் உதித்தது. அதே சமயம் ஆனந்தி சக்திசெல்வன் அனுப்பிய பரிசை சிவசக்தியிடம் காண்பித்தாள்.
அது பாராதியர் கவிதைகள் புத்தகம். அதற்குள் அன்புத் தங்கை ஆனந்திக்கு என்று தன் கையாலேயே எழுதி கையெழுத்தும் போட்டிருந்தான். சக்தியின் முகம் பிரகாசமானது. இதைக் கவனித்த ஜெயா புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டாள்.
சிவசக்தி முகம் மலர,
“சக்தி ஏன் வரல?… எதுக்கு வரலன்னு எனக்குத் தெரியல?… ஆனா இந்தப் பாரதியார் கவிதைகளை சக்தி ஆனந்திக்கு அனுப்பினதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்… ஆனா எனக்குத் தோன்றது ஒரே காரணம்தான்” என்றாள்.
ஜெயா ஆர்வமாய் “என்னது?” என்று கேட்டாள்.
“எனக்கு எப்பவுமே உன் ஞாபகம் இருக்கு சக்தின்னு எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்றாருன்னு தோணுது” என்றாள்.
ஜெயாவுக்கு ஏனோ அவள் சொன்ன காரணத்தில் நம்பிக்கை வரவில்லை. அவள் உடனே சக்தியின் இடது கையில் உள்ள கை கடிகாரத்தைக் காண்பித்து,
“இதுக்கென்ன அர்த்தம்?” என்று விளையாட்டுத்தனமாய்க் கேட்க,
“நான் எப்பவுமே உன் கையை விடமாட்டேன் சக்தின்னு இருக்கலாமே” என்றாள் சிவசக்தி புன்னகையோடு!
இதைக் கேட்ட ஜெயா உண்மையிலேயே கவலையுற்றாள். சிவசக்திக்கு காதல் பைத்தியம் முற்றிவிட்டதோ என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
சக்திசெல்வன் தன்னவளுக்கு உணர்த்த நினைத்ததை அவள் சரியாகவே புரிந்து கொண்டுவிட்டாள். ஆனால் அது இரு சக்திகள் மட்டுமே உணர முடியும் காதல் மொழி.
சிவசக்திக்கு ஐ. ஏ. எஸிற்கான அடுத்த நிலை தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் முழுக் கவனத்தையும் செலுத்தி படித்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஜெயா சக்தியை இல்லத்தில் பார்க்க வந்திருந்தாள்.
ஆனால் ஜெயா வந்ததைக் குறித்து ஆர்வம் காட்டாமல் சக்தி தலையை நிமிராமல் படித்துக் கொண்டிருந்தாள்.
“ஏ… சக்தி” என்று ஜெயா அழைத்தபடி அவள் அருகில் உட்கார, “ம்ம்ம்” என்று சிரத்தையின்றித் தலையசைத்தாள்.
“கீதா மேரேஜ் இன்விட்டேஷன் பாத்தியா?” என்று கேட்டாள் ஜெயா.
“ம்… பார்த்தனே” என்று எதையோ எழுதிக் கொண்டே அவள் பதிலுரைக்க,
“நாம போயிட்டு வரலாமா?”
“மேரேஜ் டெல்லியில… நான் வரல… பார்வதிம்மாவுக்கு உடம்பு சரியில்லை… எனக்கு வேற நிறையப் படிக்கனும் ஜெயா… நீ போயிட்டு வா” என்றாள் சிவசக்தி விருப்பமில்லாமல்!
“கண்டிப்பா வரமாட்டியா?” என்று ஜெயா அழுத்தம் கொடுத்த கேட்க,
“நோ ஜெயா… டிஸ்டர்ப் பண்ணாதே… கிளம்பு… எனக்குப் படிக்கனும்” என்று சிவசக்தி விருப்பமில்லாமல் தவிர்த்தாள்.
“ஒகே… நான் கிளம்பிறேன்… லாஸ்ட்டா ஒரு மேட்டர்… அங்கதான் சக்தி ப்ரோ இருக்காராம்… அங்க போனா ராம் நமக்காக அவருக்குத் தெரிஞ்சவர் மூலம் சக்தி ப்ரோ கூட மீட்டிங் அரேஞ்ச் பண்றன்னு சொன்னாரு… இப்போ மேடம் வர்றீங்களா?” என்று ஜெயா கேட்க அத்தனை நேரம் நிமிர்ந்து கூடப் பார்க்காத சிவசக்தி யோசிக்கத் தொடங்கினாள்.
ஜெயாவும் அவள் முகத்தில் உண்டான மாற்றத்தைக் கவனித்தாள்.
“பொய் சொல்லலியே ஜெயா நீ” என்று சந்தேகமாய்க் கேட்க, “ஐம் வெரி ஸீரியஸ்… நீ வர்றியா இல்லயா ?” என்று அழுத்தமாய்க் கேட்டாள் ஜெயா.
“நம்ம இரண்டு பேரும் போயிட்டா அப்பா தனியா வேலையெல்லாம் எப்படிச் சமாளிப்பாரு ?” என்று தயங்கியபடி சக்தி கேட்க,
“அதெல்லாம் அப்பா பாத்துப்பாரு… நீ வர்றேன்னு சொல்லு” என்று ஜெயா சொல்ல சிவசக்தி தன் தலையை அசைத்துச் சம்மதத்தைத் தெரிவித்தாள். ஜெயா இந்தச் செய்தியை சொல்லிவிட்டு அவசரமாய்ப் புறப்பட்டுவிட்டாள்.
ஜெயா இவ்வாறு சொன்ன பிறகு சிவசக்திக்கு அதற்கு மேல் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சக்தியை பார்க்க கிடைக்கப் போகும் அந்த வாய்ப்பை அவள் தவிர்க்க விரும்பவில்லை. அவன் தன்னைத் தவிர்க்கிறான் என்று தெரிந்த பின்பும் தான் அவனைப் பார்க்க தேடிச் செல்வது சரியா என்ற கேள்வி அவளை அழுத்தியது. இருப்பினும் அவன் மீதான காதல் அவளை யோசிக்கவிடவில்லை.
சிவசக்தி பார்வதியம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை ஞானசரஸ்வதியிடம் கொடுத்துவிட்டு வந்தாள். ஆனந்தி தன் படிப்பில் கவனம் செலுத்தினாலும் சக்தி புறப்படுவதற்கான ஏற்பாடுகளுக்கும் உதவிப் புரிந்தாள். பள்ளியில் தன்னுடைய வேலைகளையும் சிலரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தாள்.
ஜோதி சார் சக்திக்கு சுலபமாய் அனுமதிக் கொடுத்துவிட்டார். ஆனால் ஜெயாதான் போராடி அவரிடம் அனுமதிப் பெற வேண்டியதாயிற்று.
மீண்டும் சிவசக்தியோடு நாம் இரயிலில் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆனால் இம்முறை அது டெல்லிவரை தொடர இருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் அவனைத் தேடிய ஒரு பயணம்.
டெல்லியில் நிகழ்ந்த முதல் சந்திப்பில் சிவசக்தி சக்திசெல்வனைத் தவிர்த்து ஓட நினைத்தாள். இம்முறை அது தலைகீழாக நடக்கக் கூடும்.
சிவசக்தி இரயிலில் ஏறுவதற்கு முன்பு பெயர் பட்டியலை இரு முறை சரிபார்த்தாள். எதில் பார்த்தாலும் அவனின் ஞாபகம் அவளைத் துரத்திக் கொண்டே இருந்தது.
மூவரும் தங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தனர். மூவரில் ஒருவர் நம் தோழி ஜெயாவின் வருங்காலக் கணவன் ராம். ஜெயாவிற்கு இது கொஞ்சம் புதுமையான அனுபவம்.
ஆனால் இந்தப் பயணம் சிவசக்திக்குக் கொஞ்சம் சோகம் கலந்த சுகமான நினைவுகளை எழுப்பிக் கொண்டிருந்தது.
சிவசக்தி ஜெயாவிடம், “நீ ராம் கூட வர்றதை பத்தி அப்பாகிட்ட சொன்னியா?” என்று கேட்டாள்.
“ஜோதிக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவாரு… நீ சொன்ன நான் உன்னைக் கொன்னுடுவேன்” என்றாள்.
“எனக்கெதுக்கு வம்பு ?” என்று சொல்லியபடி ராமை பார்த்து, “நீங்க உங்க வேலை எல்லாம் விட்டுவிட்டு எங்களுக்காக வந்திருக்கீங்க… ரொம்பப் பெரிய விஷயம்” என்றாள்.
ராம் சிரித்தபடி, “நானா எங்க வந்தேன் சக்தி… உங்க சக்திசெல்வனைப் பத்தி சொல்லி… லவ்ன்னா அவரை மாதிரி இருக்கனும்னு ஒரே அட்வைஸ்… போதாக் குறைக்கு அவ்வளவு பிஸி மேன் காதலுக்காகத் தான் வேலை எல்லாம் விட்டுவிட்டு வரும் போது உங்களுக்கு என்னன்னு மேடம் கேட்டாங்க… நியாயமான கேள்வி… ஸோ ஆனது ஆகட்டும்னு கிளம்பி வந்துட்டேன்” என்று ராம் உண்மையைப் போட்டு உடைக்க,
ஜெயா எதிரில் அமர்ந்து சொல்ல வேண்டாம் எனச் சைகைச் செய்ததை அவன் பொருட்படுத்தவில்லை. சக்தி ஜெயாவின் பின்மண்டையிலேயே அடித்து,
“இதெல்லாம் ஒரு பொழப்பு” என்றாள்.
“பொய்” என்று ஜெயா உரைக்க,
“உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி” என்றாள் சக்தி.
மூவருமே அந்தப் பயணத்தை முடிந்த வரை கலகலப்பாகவே அனுபவித்தனர். சக்தி சிலமணி நேரம் அவர்கள் இருவரையும் தனியே விடுத்து இங்கிதமாய் ஒதுங்கியபடி அமர்ந்து கொண்டாள்.
இந்த டெல்லிப் பயணம் சக்திசெல்வனைச் சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தாலும் அவனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை அவளுக்குக் குறைவாகவே இருந்தது.
அந்த இரயில் இருளுக்குள் ஊஞ்சலாட்டத்தோடு செல்ல சிவசக்தி சக்திசெல்வனை எண்ணியபடி,
“சக்தி… நீங்க உண்மையிலேயே ரியல் ஹீரோதான்… நான் சொன்னதெல்லாம் பெரிய தப்பு… உங்களைப் பார்த்து என் மனசில இருக்கிற காதலை சொல்லனும்… வேர் ஆர் யூ… ப்ளீஸ் என் கண் முன்னாடி வாங்க”என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.
இன்று உருகி உருகி தன் காதலை சொல்லிக் கொண்டிருக்கும் சிவசக்திக்கு அவனைப் பார்க்கும் தருணம் கிட்டும் போது அந்தக் காதல் கோபமாய் மாறிப் போகும் என்று சொன்னால் நம்புவீர்களா!
சக்திசெல்வனைச் சிவசக்தி சந்திப்பாலோ என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் சக்திசெல்வனை மீண்டும் காண இருக்கிறோம்.
26
எதிர்பாராத சந்திப்பு
அந்த நீண்ட நெடிய இரயில் பயணம் முடிவுற மூவரும் களைப்போடும் சோர்வோடும் இரயில் நிலைய நடை மேடையில் இறங்கினர். ராம் நம் இரு தோழிகளுக்கும் துணையாய் வந்ததுமில்லாமல் உடனே டாக்ஸி ஒன்றை வரவழைத்து அவர்களைப் பொறுப்போடு கீதாவின் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். ராம் உடன் வந்ததால் அவர்கள் சிரமும் தேடலுமின்றி விரைவாகச் சென்றடைந்தனர்.
கீதா ஆனந்தமாய் நம் இரு தோழிகளை வரவேற்றாள்.
கீதாவின் உடன் கல்லூரியில் இருந்த நெருங்கிய தோழிகள் கூட டெல்லி வரை திருமணத்திற்கு வரத் தயக்கம் காட்டினர். இந்நிலையில் எப்பவுமே முறைத்துக் கொண்டு நின்ற சக்தியும் ஜெயாவும் வந்தது, கீதாவை எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சிவசக்தி வந்ததன் நோக்கம் வேறாய் இருந்தாலும் அந்தத் தோழிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாய் அது இருந்தது.
அங்கே தமிழும் ஹிந்தியும் மாறிமாறி ஒலிக்க ஒவ்வொருவரும் வெவ்வாறான பாணியில் வரவேற்றனர். இந்தியாவின் வடதுருவமும் தென்துருவத்தையும் ஒருசேரக் கண்டது போல் அந்தத் திருமண வீடு காட்சியளித்தது. அங்கே ஏற்கனவே கூட்டநெரிசல் அதிகமாய் இருக்க ராம் தனியே ஹோட்டலில் தங்கிக் கொள்வதாகச் சொல்லி விடைபெற்றான்.
ஜெயா கீதாவிடம், “நம்மூர் பையனை எல்லாம் விட்டுவிட்டு சேட்டுப் பையனை எப்படிப் பிடிச்ச?” என்று கேட்டாள்.
“ஆபிஸ் கொலிக்… அப்புறம் நட்பாகி… காதலா மாறிடுச்சு… வீட்டில சம்மதம் வாங்கிறதுக்குள்ள நொந்துட்டேன்… ஜாதி வேறயா இருந்தா கூடப் பரவாயில்லை… ஆனா மொழியும் கலாச்சரமும் வேற வேற இருந்தா ரொம்பச் சிரமம்…
சென்னையில கல்யாணம் வைக்கனும்னு வீட்டில பிடிவாதம் பிடிச்சாங்க… ஆனா அவர் வீட்டில சம்மதிக்க மாட்டேன்னு அடம்… எப்படியோ ஒத்துக்க வைச்சா… எங்க வீட்டு சடங்குக்கு அவர் வீட்டு சடங்குக்கும் நிறைய வித்தியாசம்…
எதைச் செய்றதுன்னு பிரச்சனை… கல்யாண்மனா சந்தோஷமான விஷயம்… ஆனா இங்க ஒவ்வொரு நிமிஷமும் கத்தி மேல நடக்கிற மாதிரி இருக்கு… அப்பப்பா… உங்க இரண்டு பேரையும் பாத்த பிறகுதான் எனக்கு நிம்மதியா இருக்கு, ”என்று கீதா தன் நிலைமையைச் சொல்லி பெருமூச்சுவிட்டாள்.
சக்தி லேசான புன்னகையோடு, “காதலிச்சவரை கல்யாணம் செய்வது என்ன சாதாரண விஷயமா? இந்த மாதிரி போராட்டமெல்லாம் சந்திச்சுதான் ஆகனும்” என்றாள்.
“எனக்கு இந்த விஷயத்தில் அனுபவம் இல்லை” என்று ஜெயா உரைத்தாள்.
“அடிப்பாவி… கூடவே ஒருத்தரை கூட்டிட்டு வந்திருக்கிறாரே, அவர் யாருடி ?” என்று சக்தி கேட்க கீதா புரியாமல் பார்த்தாள்.
“அவர் எங்கப்பா பாத்த மாப்பிள்ளை… நான் யாரையும் காதலிக்கல”
“ஒ… காதல் இல்லாமதான் டெல்லி வரைக்கும் அவரை டார்ச்சர் பண்ணிக் கூடவே கூட்டிட்டு வந்தாளான்னு கேளு கீதா” என்று சக்தி உரைக்க,
“ஓ… கதை அப்படிப் போகுது” என்று கீதா சிரித்தாள்.
பிறகு ஜெயாவை அவர்கள் இருவரும் கேலி செய்தே கலங்கடித்தனர்.
பெண்களுக்குத் தோழமை என்பது ரொம்பவும் அழகான உணர்வு. ஆனால் குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த பின் அது கனவாகவும் ஞாபகார்த்தமாகவுமே நின்று விடுவது வருத்தத்திற்குரிய விஷயமே.
இரவு வரவேற்பு நிகழ்ச்சி ஆடலும் பாடலுடன் களைக்கட்டியது. நட்சத்திரமாய் மின்னும் புடவை உடுத்தியபடி பெண்கள் அந்த இடத்திலேயே வான்வீதியாய் மாற்றிக் கொண்டிருந்தனர். வடநாட்டுக் கூட்டங்களில் நம்மவர்கள் கொஞ்சம் குறைவுதான். இருப்பினும் தமிழ் பெண்கள் அவர்களுக்கே உரியக் காஞ்சி பட்டில் கம்பீரத்தோடு காட்சியளித்தனர்.
கீதாவும் வடநாட்டு மணப் பெண் சாயலிலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தாள். மாப்பிள்ளைக்கு நிறமும் உயரமும் நிறைவாய் இருந்த போதும் ஆண்மகனுக்கே உரிய மீசை இல்லாமல் குறையாய் தோன்றியது.
இந்தக் கூட்டத்தில் சிவசக்திஅழகான நீல நிற சுடிதாரை உடுத்தியபடி எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தாள். அவளின் வசீகர அழகு தனித்தன்மையோடு இருந்தது. அவளின் அழகை ரசிக்கக் கண் கோடி வேண்டும்.
ஆனால் அவள் எதிர்பார்த்த இரு கண்கள் மட்டும் அந்த அற்புத அழகை ரசிக்கவில்லையே என்ற ஏக்கம் சிவசக்தியின் முகத்தில் சோகமாய்ப் படர்ந்திருந்தது. ஜெயாவும் அழகான சிவப்பு வண்ண புடவையில் அம்சமாய் இருக்க ராம் அவள் அழகுக்குப் புகழாரம் சூட்டினான்.
எல்லா ஏற்பாடுகளும் நேர்த்தியாகவும் நிறைவாகவும் இருக்க ஜெயாவுக்கு மட்டும் ஒரே ஒரு குறை. அதைச் சிவசக்தியிடம் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள்.
“சாப்பாடு சகிக்கல” என்றாள் ஜெயா.
“நம்ம ஊரு சாப்பாடு மாறியே இருக்குமா என்ன? விடு ஜெயா” என்று சக்தி சமாளித்தாள்.
பின்னர்ச் சிவசக்தி ராமின் புறம் திரும்பி “சக்தி அப்பாயின்மென்ட் கொடுத்துட்டாரா?” என்று வினவும் போதே ஏக்கமும் காதலும் அவள் வார்த்தையில் வெளிப்பட்டது.
ஜெயாவும் ராமின் புறம் திரும்பி அவன் பதிலை எதிர்பார்த்தாள்.
“என்னோட நண்பர்… நரேன் எஸ். எஸ் டிரஸ்ட்ல ஒரு மெம்பர்… அவனுக்கு எஸ். எஸ்ஸை நல்லா தெரியுமாம்… நான் அப்பாயின்மென்ட் வாங்கித் தர்றேன்னு சொல்லி இருக்கான்… கண்டிப்பா அரேஞ்ச் பண்ணிடுவான்” என்றான்.
ஜெயா புன்னகையோடு, “சூப்பர்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ராமை நோக்கி, “நான் உங்ககிட்ட கேட்டது?” என்று வினவினாள்.
ராம் தன் இயல்பான சிரிப்போடு,
“நாளைக்குப் பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் நாம தாஜ் மஹாலை பார்க்கிறோம்… ஒ. கே வா” என்றதும் ஜெயா, “அய்” என்று குழந்தையாக மாறி களிப்படைந்தாள்.
இவர்களின் உரையாடல் தடைப்படும் விதமாய்ச் சிவசக்தியின் கண்களை யாரோ மூடினர். உடனே சக்தி, “யாரு?” என்று அந்தக் கையை விலக்க முயற்சி செய்தாள்.
“கண்டுபிடி சக்தி” என்ற ஒரு ஆணின் குரல் ஒலித்தது. சக்தி ரொம்பவும் தெரிந்த குரல் என்று உணர்ந்தாளே ஒழிய யாரெனக் கண்டறிய முடியாமல், “தெரியலியே ப்ளீஸ்… யாரு” என்று கேள்வி எழுப்பினாள்.
அவன் கையை விலக்கி கொள்ள முயற்சி செய்ய,
“நாம இரண்டு பேரும் சண்டை போட்டதில் நம்ம டிபார்ட்மண்டே ரணகளப்பட்டதே… பிரின்ஸ்ப்பால் மேடம் ரூம்ல போய்த் திட்டு வாங்கனியே… மறந்துட்டியா சக்தி” என்று அவன் உரைத்தவுடன் சக்தி, “விஜய்” என்றாள்.
அவன் கைகளை விலக்கியபடி அவள் முன்னே வந்து நின்றான். கல்லூரியில் பார்த்தது போலவே இருந்தாலும் கொஞ்சம் கம்பீரமும் மிடுக்கும் அவனிடம் கூடியிருந்தது. ஆனால் அவனின் உடையிலும் தோரணையிலும் அதீத ஆடம்பரத்தோடு திமிரும் வெளிப்பட்டது. போதாக் குறைக்கு அவன் குறும்புத்தனமான பார்வையோடு சக்தியை நோக்க, அந்தச் சந்திப்பை அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுக்கு அவனைக் கல்லூரியில் இருந்தே சுத்தமாகப் பிடிக்காது. பெண்களிடம் அவன் நடந்து கொள்ளும் விதம் தவறான கண்ணோட்டத்தில் இருக்கும் என்பது அவளின் எண்ணம். என்றுமே இருவரும் முறைத்துக் கொண்டே நிற்க இன்று அவன் சம்பந்தமில்லாமல் நெருக்கமாய்ப் பேச, சக்திக்கு அவன் செயல் குழப்பத்தையும் எரிச்சலையும் தோற்றுவித்தது.
“என்ன சக்தி… எப்படி இருக்க?… உனக்கும் எங்க டிபார்ட்மென்டுக்கும்தான் செட்டாகாதே… அப்புறம் எப்படி நீ கீதா மேரேஜ்ல” என்று வினவினான்.
“நானும் கீதாவும் பிரண்ட்ஸாகி ரொம்ப நாளாச்சு… அதுவும் இல்லாம காலேஜ் டேஸ்ல நடந்த சண்டை எல்லாம் பெரிய விஷயமா என்ன?” என்று சக்தி பதிலுரைத்தாள்.
“கரெக்ட்தான்… அப்போ நம்ம பிரச்சனையையும் மறந்துட்டதானே” என்று விஜய் யோசித்தபடி கேட்க,
சக்தி தயங்கி கொண்டு, “ம்ம்ம்” என்று சொல்லி விருப்பமின்றி ஆமாம் எனத் தலையசைத்தாள்.
பின்னர் அவன் ஜெயாவின் புறம் திரும்பி விசாரித்து விட்டு ராமிடமும் அறிமுகமாகி கைக் குலுக்கினான்.
அவன் இயல்பாகவே பேசினாலும் சக்திக்கு ஏனோ அவனை இன்றும் பிடிக்கவில்லை.
“என்ன சக்தி… நீயும் ஜெயா மாதிரி கமிட்டெட்டா?” என்று கேட்க சக்தி அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள். மீண்டும் விஜயே ஏதோ எண்ணியபடி,
“அப்படி எவனாச்சும் கமிட்டாகி இருந்தாலும் உன் திமிரான ஆட்டிடியுட் பார்த்து தெறிச்சு ஓடி இருப்பானே” என்று வேடிக்கையாகச் சொன்னான். அந்த வார்த்தை சக்தியை காயப்படுத்த அவன் புறம் திரும்பி
“விஜய் போதும்… என் பெர்ஸலனை பத்தி கேள்வி கேட்கிறது… கமென்ட் பன்றதெல்லாம் வேண்டாம்” என்று அழுத்தமாக உரைக்க அவன் அவள் கோபத்தை இயல்பாய் எடுத்துக் கொண்டபடி, “ஒ. கே” என்று சொல்லி தலையசைத்தான்.
இருந்தும் அவன் கேலியும் கிண்டலான பேச்சை நிறுத்தாமல் சக்தியினை ஏதாவது சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். அவன் சென்ற சில நிமிடத்தில் சக்தி ஜெயாவிடம்,
“போயும் போயும் இவனைப் பார்க்கவா இவ்வளவு தூரம் வந்தேன்” என்று அலுத்துக் கொண்டாள்.
ஜெயா புரியாமல் “ஏன் சக்தி… அவன் ஜாலியாதானே பேசிறான்… நீ ஏன் அவனை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற ?”என்று கேட்டாள்.
“ஜாலியும் இல்ல… ஒரு மண்ணும் இல்ல… இவன் எல்லாம் திருந்தவே மாட்டான் ஜெயா… அவன் வந்து கண்ணை மூடினதும் விஜய்னு சொல்லிருக்கலாம்ல… இடியட்… அவன் பார்வையே சரியில்ல… அவனைக் கண்டாலே பிடிக்கல… இப்ப கூடப் பாரு… அவன் என்னைப் பத்திதான் ஏதோ தப்பா பேசிட்டிருக்கான்” என்று சக்தி சொல்லும் போதே தூரத்தில் நின்று விஜய் பேசிக் கொண்டிருந்ததைச் சுட்டிக்காட்டினாள்.
“நீ பாட்டுக்கு ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காதே… ரிலாக்ஸ்” என்று ஜெயா சொல்ல ஏனோ சக்தியால் அமைதியடைய முடியவில்லை. அவளின் கணிப்பு சரியாகவே இருந்தது.
விஜய் தன் நண்பர்களோடு சக்தியை பற்றிதான் பேசிக் கொண்டிருந்தான். பேசினான் என்று சொல்ல முடியாது. அவளைத் திட்டி கொண்டிருந்தான் என்றே சொல்லலாம்.
“அவளோட திமிரும் தெனாவட்டும் கொஞ்சங் கூடக் குறையல… பெரிய இவன்னு நினைப்பு… ரொம்பச் சீன் போடறா” என்று நண்பர்களிடம் தன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தான்.
அதோடு நிற்காமல் விஜய் மனதிற்குள்,
“அவ்வளவு சீக்கிரம் எப்படி நீ எனக்குச் செஞ்ச அவமானத்தை எல்லாம் மறந்துடுவேன்… எல்லாத்தையும் உனக்குத் திருப்பிக் கொடுக்கிறேன்…” என்று எண்ணிக் கொண்டான்.
இவர்கள் இருவருக்கிடையில் கல்லூரி நாட்களில் உருவான துவேஷமும் கோபமும் கொஞ்சம் கூடக் குறையவில்லை.
வரவேற்பு நிகழ்ச்சி நிறைவுபெற்று அரங்கத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து கொண்டே வந்தது.
சக்தி தனியே அவள் தோழியை விட்டு யோசனையில் அமர்ந்திருக்க மீண்டும் விஜய் அவளை நெருங்கி வந்து, “சக்தி” என்றழைத்தான்.
“கிளம்பிட்டியா விஜய்… ஒகே பை” என்று அவனை வெட்டி விடுவது போலப் பேசினாள்.
“ஆமாம் கிளம்பிட்டேன்… அப்புறம்… நான் ஏதாச்சும் தப்பா பேசி இருந்தா சாரி” என்று விஜய் சொல்ல சக்தி அவனை நம்பாமல் சந்தேகமாய்ப் பார்த்தபடி,
“இட்ஸ் ஒகே விஜய்…” என்றாள்.
“அப்புறம் நாளைக்கு என்னோட பிறந்த நாள… பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் நீயும் வர்றியா ?” என்று கேட்டான்.
“ஸோ சாரி… எனக்கு நிறைய வொர்க் இருக்கு… எனி வே அட்வான்ஸ் ஹாப்பிப் பர்த்டே விஷ்ஷஸ்” என்று சொல்லிவிட்டு மேலே அவனைப் பேச விடாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
சக்தி அவனை அவ்வாறு தவிர்த்து விட்டுச் செல்ல விஜயின் கோபமும் பழி வாங்கும் எண்ணமும் ரொம்பவும் அதிகமாகவே தூண்டப்பட்டது.
ஹோட்டல் எஸ். எஸ். சக்திசெல்வன் தன்னுடைய அலுவலக அறையில் கம்பீரமாய் அமர்ந்தபடி வேலையில் மும்முரமாக இருந்தான். அவனுடைய செகரட்ரியிடம் சில வேலைகளைக் குறித்து வரிசையாய் பட்டியலிட்டான்.
பின்பு ஏதோ நினைவு வந்தவனாக,
“நரேன் அவரோட பிரண்ட் ராமசாமிங்கிறவருக்காக அப்பாயின்மென்ட் கேட்டிருந்தார்… அதை ஒகே பண்ணுங்க… நாளைக்கு நைட் செவனோ க்ளார்க் ஷார்ப் வரச் சொல்லுங்க… ரைட்” என்று சொல்லிவிட்டுத் தம் இருக்கையிலிருந்து எழுந்து புறப்பட்டான். நாளை இதே சமயம் இரு சக்திகளும் தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரும். அந்தத் தருணம் சக்தி செல்வனின் என்றென்றும் மறவாத இன்பகரமான பதிவாய் நிலைகொண்டுவிட, சிவசக்திக்கு அது ஏமாற்றத்தோடு கூடிய கனவாய் முடியப்போகிறது.