Solladi sivasakthi-29&30
29
யாரை வீழ்த்துவான்?
அந்த முழுச் சந்திரனின் ஒலி சூரியனின் அபரிமிதமான வெளிச்சத்தால் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து போகச் சிவசக்தி மயக்கத்திலிருந்து விழித்தெழுந்தாள்.
அவள் கண்கள் காணும் திசையெல்லாம் முற்றிலும் புதிதாய்க் காட்சியளித்தது. அந்த அறையைப் பார்த்து குழம்பியபடி விழிகளை அலைபாயவிட்டவளின் கையை ஜெயா பற்றினாள்.
“சக்தி ஆர் யூ ஆல் ரைட்?” என்று ஜெயா கேட்கும் போது தலையைப் பிடித்துக் கொண்டு சக்தி எழுந்து அமர்ந்தாள்.
“என்ன சக்தி… என்ன பண்ணுது… ஹாஸ்ப்பெட்டில் போலாமா?” என ஜெயா வினவ சக்தி தலையைக் குனிந்தபடி வேண்டாம் எனத் தலையசைத்தாள்.
“என்னடி ஆச்சு?… சக்தியை பார்க்க வந்த… எப்படி மயங்கி விழுந்த?!” என்று ஜெயா கேட்க ராம் உடனே, “இரு ஜெயா… சக்தி ரிலாக்ஸாகட்டும்… தொல்லை பண்ணாதே” என்றான்.
சிவசக்தி நடந்ததை நினைவுபடுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள். நேற்று இரவு தான் சக்திசெல்வனைப் பார்த்தோம். ஆனால் இப்போது ஜெயா அருகில் இருக்கிறாள் எனில் தான் கண்டது கனவா என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.
ஜெயா மீண்டும் சிவசக்தியின் தோள்களைப் பற்றி,
“போகட்டும் விடு சக்தி… ஏதோ நல்ல நேரம்… விஜய் உன்னைப் பார்த்ததினால எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணான்” என்றாள்.
விஜய் என்ற பெயரை கேட்ட போதும் சக்திக்கு அவனைத் தான் சந்தித்தது நினைவுக்கு வந்தது. பின் ஒவ்வொன்றாய் நிகழ்ந்தவை கண்முன்னே தோன்றக் கடைசியாய் தான் குடித்த பானம் அவளை நிலைதடுமாறச் செய்ததை உணர்ந்தாள். உடனே சக்தி தலையை நிமிர விஜயும் அங்கேதான் நின்று கொண்டிருந்தான்.
சிவசக்தி கோபத்தோடு உச்சத்தில் அவனை நெருங்கி பளாரென்று கன்னத்தில் அறைந்தாள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத விஜய் அதிர்ந்து போக ஜெயாவும் ராமும் புரியாமல் விழித்தனர்.
விஜய் நடந்ததை உணரும் முன்னரே சக்தி அவன் சட்டையைப் பிடித்து,
“என்னடா கூல்டிரங்க்ஸ்ல கலந்து கொடுத்த?… என்ன எண்ணத்தோட அப்படி எல்லாம் செஞ்ச?” என்று சினத்தோடு வார்த்தைகளை வீசினாள்.
இப்போது விஜய் தெளிவுபெற்றனவாய் அவள் கையைத் தன் சட்டை மீதிருந்து உதறியபடி,
“ஸ்டாப் இட் சக்தி… நடந்ததுன்னு என்னன்னு தெரியுமா நீ பாட்டுக்குக் கத்தாதே… என் ப்ஃரண்ட்ஸ் அல்க்கஹால் கலந்து வைச்சிருந்த கூல்டிரிங்ஸஸை நீ குடிச்சிட்ட… நீ தடுமாறின போதுதான் எனக்கே விஷயம் தெரியும்… சரின்னு அந்த நிலமையில் உன்னை எப்படிக் கீதா வீட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னு இந்த ஹோட்டலில் ரூம் எடுத்து இங்கயே ஸ்டே பண்ண வைச்சிட்டு ஜெயாவை கான்டெக்ட் பண்ணி வரச் சொன்னேன்” என்று உரக்கக் கத்தி பொய்யிற்கு உண்மை முலாம் பூசிக் கொண்டிருந்தான்.
ஜெயா உடனே, “நீ இப்படின்னு சொல்லலியே விஜய்?” என்று சந்தேகமாய்க் கேட்டாள்.
“நீங்க டென்ஷனாக வேண்டாம்னு சொல்லல” என்று விஜய் சொல்ல சக்தி அவனை நம்பாமல்,
“நீ சத்தம் போட்டுச் சொன்னா பொய் உண்மையாகிடுமா… யார் காதுல பூ சுத்த பார்க்கிற… உனக்கு என் மேல இருக்கிற வஞ்சத்தைத் தீர்த்துக்க இப்படி எல்லாம் பண்ணிருக்க” என்றாள்.
ஜெயா பின்னோடு நின்றபடி,
“விஜய் மனசில தப்பான எண்ணம் இருந்தா… அவன் அந்தச் சூழ்நிலையைத் தப்பாதானே பயன்படுத்தி இருக்கனும்… உன்னைச் சேஃபா தங்க வைச்சிடட்டு… எங்களை அழைச்சிட்டு வர வேண்டிய அவசியம் என்ன… உன்னை அதே நிலைமையோடு கீதா வீட்டில கொண்டு வந்து விட்டிருந்தா எல்லொரும் உன்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?
உன் பேர் கெடிறதில்லாம கீதாவோடு ப்ஃரண்டு இப்படியான்னு நினைக்க மாட்டாங்களா… அது கீதாவுக்குமே சங்கடமா போயிருக்கும்… உண்மையிலேயே விஜய் சொல்ற மாதிரி ஏதோ தெரியாம நடந்திருக்கு… உனக்கு ஆரம்பத்திலிருந்தே விஜயை பிடிக்காது… அதனால நீ தெரியாம நடந்த தப்பிற்கு அவனைக் காரணம் காட்டிற” என்றாள்.
ஜெயா சொன்ன விஷயங்களைப் பொருத்தி பார்த்த போது சக்திக்கும் இதில் விஜயோட தவறு எதுவுமில்லை என்று தோன்றியது. தான் ஏதோ மனக்குழப்பத்தில் அந்தப் பானத்தை அருந்தி இருக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தன் அவசரத்தினால் விஜயை அறைந்ததை எண்ணி குற்றவுணர்வு அடைந்தாள்.
“சாரி விஜய்… ஐம் வெரி சாரி… ஏதோ குழப்பத்தில… தப்பா நினைச்சிக்காத” என்று உரைத்தாள்.
விஜயிற்கு அவள் மீண்டும் தன்னை அவமானப்படுத்திவிட்டால் என்ற எண்ணம் கோபமாய் ஊற்றெடுக்க சக்தி கண்கலங்கி மன்னிப்பு கோர அவன் மனம் அமைதிப்பெற்றது.
அவன் பதில் பேசாமல் நிற்க சக்தி மேலும்,
“நான் உன்னைத் தப்பான கண்ணோட்டத்திலேயே பார்த்துட்டேன்… ஆனா நீ என்னை ஒரு தோழியா பார்த்திருக்க… நான் அவமானப்படக் கூடாதுன்னு நீ எனக்காக யோசிச்சு பெரிய உதவி செஞ்சிருக்க… தேங்க்ஸ் அ லாட்”என்று சக்தி நன்றி சொல்லும் போது விஜயை குற்றவுணர்வு ஆட்டிப்படைத்தது.
“பரவாயில்ல சக்தி… இட்ஸ் ஒகே” என்று விஜய் உரைத்தான். ஆனால் அவன் தவறை ஏற்றுக்கொள்ள மனம் வராமல் அமைதிக் காத்தான்.
ஜெயா இப்போது மீண்டும் சக்தியிடம்,
“நீ சக்தி ப்ரோவை பார்த்தியா?” என்று கேள்வி எழுப்பினாள்.
இந்தக் கேள்வி மீண்டும் சிவசக்தியின் மனதைச் சலனப்படுத்த படுக்கையின் மீது அமர்ந்தபடி,
“அந்த ரிசப்ஷனிஸ்ட் சக்தி மீட்டிங்ல இருக்கிறாரு… பார்க்க முடியாதுன்னு சொன்னதால நான் கிளம்பிட்டேன்… அப்புறம்தான் விஜயை பார்த்தேன்” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் நினைவுபடுத்தினாள்.
ஜெயா கோபமான குரலில், “அப்போ சக்தி ப்ரோ உன்னைப் பார்க்காம அவாயிட் பண்ணிட்டாரா… என்னடி ஆச்சு அவருக்கு… ஏன் இப்படி எல்லாம் பண்றாரு? முதல்ல சக்தி ப்ரோ நடந்துகிட்டதையும் இப்ப நடந்துக்கிறதையும் பார்த்தா என்னால நம்பவே முடியல… இந்த டிப்பிரெஷன்லதான் நீ என்ன ஏதுன்னு தெரியாம எதையோ குடிச்சிட்ட போல” என்றாள்.
விஜயிற்கு அவர்கள் பேசும் சக்தி என்ற நபர்தான் நேற்று சிவசக்திக்காகப் பரிந்து கொண்டு வந்தவனா என யோசித்துக் கொண்டிருக்க,
சிவசக்தி அவனை நெருங்கி,
“எனக்கு ஒரே குழப்பமா இருக்கு… நான் குடிச்சிட்டு அப்நார்மலா நடந்துக்கிட்டேனா… அப்போ நான் யாரையாச்சும் மீட் பண்ணினேனா?” என்று சக்தி விஜயிடம் சந்தேகமாய்க் கேட்டாள்.
விஜயிடம் ஏற்கனவே சக்திசெல்வன் தன்னைப் பற்றி எதுவும் சொல்ல கூடாதென்று உரைத்திருக்க அவன் தயங்கியபடி,
“அப்படி எல்லாம் எதுவும் நடக்கல… நீ அன்கான்ஸியாகிட்ட… நான் ஜெயாவை கான்டெக்ட் பண்ணி இன்பாஃர்ம் பண்ணேன்… அவ்வளவுதான்… மத்தபடி வேற யாரையும் பார்க்கல” என்று சொல்ல சிவசக்திக்கு நடந்தவையின் உண்மை தெரியாமல் கலக்கம் உண்டானது.
“விடு சக்தி… நீ கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆகு” என்று சொல்லி ஜெயா மற்றும் ராம், விஜய் மூவரும் அவளைத் தனியே விடுத்து அருகில் உள்ள அறைக்குச் சென்றனர்.
சிவசக்தியின் மனம் நிம்மதி அடையாமல் மேலும் மேலும் குழப்பமடைந்தது. அவளின் மன எண்ணங்களும் விஜய் உரைப்பதும் முற்றிலும் முரண்பட்டதாய் இருந்தது. விஜய் எதற்காகப் பொய் சொல்ல வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள எதிலும் சக்திசெல்வன் வந்து சென்றதற்கான சுவடில்லை
. நடந்தவை எல்லாம் தெளிவற்ற நிலையில் அவளுக்குள் பதிந்திருந்தது. சக்திசெல்வனைத் தான் இரவில் பார்த்த விஷயத்தை ஜெயாவிடம் உரைத்தாள் அவன் இப்போது எங்கே என்ற கேள்வி கேட்பாள். போதாக் குறைக்குக் காதல் பைத்தியம் உனக்கு முற்றிவிட்டது என வேடிக்கை செய்வாள்.
இந்த எண்ணத்தால் ஜெயாவிடமும் நடந்ததை விவரிக்க முடியாமல் தவித்தாள். தன்னிடம் இருந்து ஒடி ஒளிய வேண்டிய அவசியம் சக்திக்கு என்ன வந்திருக்க முடியும்.
ஏற்கனவே அவன் கண்ணாமூச்சி விளையாடுவதில் கைதேர்ந்தவனாயிற்றே!
ஆனால் இப்போது அவன் மறைந்திருக்க வேண்டிய அவசியமென்ன. இப்படிப் பலநூறு கேள்விகள் அவளை அழுத்தத்திற்கு உள்ளாக்கின. இதற்கிடையில் அந்த அறையை விட்டுப் புறப்பட எண்ணிய போது படுக்கையின் மீது தட்டுப்பட்ட சட்டை பட்டனை உற்றுப் பார்த்தாள்.
“இது யாரோடது… சக்தியோட ஷர்ட் பட்டனா… சீ… நான் ஏன் இப்படி முட்டாள்தனமா யோசிச்சிட்டிருக்கேன்… எனக்கு உண்மையிலேயே பைத்தியம் பிடிச்சிருக்கு” என்று சொல்லி அந்தப் பட்டனை வீசியெறிந்தாள்.
கடைசியில் அவனைத் தான் கட்டியணைத்துக் கொண்டதாக எண்ணம் தோன்றியது. அவன் தந்த முத்தங்களின் தாக்கம் இன்னும் அவள் நினைவை விட்டு நீங்காமல் தடுமாறச் செய்தது.
சக்தி தனக்குத்தானே தெளிவுப்பெற்றபடி,
“நோ… சக்தி என்கிட்ட ஒருநாளும் அந்த மாதிரி அநாகரீகமா நடந்துக்க மாட்டாரு… இதெல்லாம் வெறும் கனவுதான்… அப்படி எல்லாம் நிச்சயமா நடந்திருக்காது” என்று தனக்குத்தானே சிவசக்தி அழுத்தமாய் எண்ணியபடி அந்தக் குழப்பத்திலிருந்து ஒருவாறு விடுபட்டாள்.
இப்போதைக்கு அவள் நிம்மதிப் பெற்றாலும் அந்த நினைவுகள் நிஜமாய் அரங்கேறியவை என்று தெரியவரும் போது அவள் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளப்போகிறாளோ தெரியாது.
அன்று மாலையில் சக்தியும் ஜெயாவும் கீதாவிடம் கண்ணீரோடு விடைபெற்றுக் கொண்டு டெல்லி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டனர்.
சிவசக்தி தான் அவனைப் பார்க்க வேண்டி வந்து பார்க்காமலே செல்கிறோமே என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் அவள் வந்த எண்ணம் ஈடேறிவிட்டது என்பதை அவள் இன்னும் உணரவேயில்லை.
அந்த விமான நிலையம் சிவசக்திக்கு அவனின் முதல் சந்திப்பை நினைவுபடுத்த அன்று தான் செய்தது பெரிய தவறு என்று இன்று வேதனையுற்றாள்.
ஆனால் அவள் இன்னும் சில நிமிடங்களில் மீண்டும் அதே தவறை செய்யப் போகிறாள். அத்தகைய சூழ்நிலையும் உருவாகப் போகிறது.
சிவசக்தி மனதில் ஏமாற்றத்தைச் சுமந்து கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைய சக்திசெல்வனை அங்கே அவள் எதிர்பாராவிதமாய்ச் சந்திப்பாள் என்று எண்ணவேயில்லை.
பன்னாட்டு விமானங்களில் ஏறச் செல்லும் பயணிகளோடு சக்திசெல்வனும் செவியைக் கைப்பேசியால் மூடிய வண்ணம் நிமிர்ந்த நடையோடு சென்று கொண்டிருக்கச் சிவசக்தி அவனைக் கவனித்தாள். அவளோ அவனைப் பார்த்த வண்ணம் வியப்போடு நிற்க ஜெயாவும் ராமும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.
மீண்டும் சந்தேகத்தோடு உற்றுப் பார்த்த போது அவளின் சந்தேகம் தெளிவானது. அவன் நிச்சயம் சக்திதான். அவனைப் பார்த்து பேசிவிட வேண்டும் என்று எண்ணியபடி அவன் பயணித்த திசை நோக்கி விரைந்தாள். அத்தனை பேர் முன்னிலையில் அவனை அழைப்பது உசிதமில்லை என்று எண்ணிக் கொண்டே பின்தொடர்ந்தாள்.
இடர்பாடாய் நின்ற பெட்டிகளைச் சுமந்த வண்டிகளைக் கடந்து சக்திசெல்வன் தன் வேகத்தை லேசாய் குறைத்தபடி நடக்க வேறுவழியின்றிச் சிவசக்தி அவனைத் தடுக்க அவனின் வலது கரத்தை பற்ற வேண்டி நேரிட்டது. அந்தப் பிடியை உணர்ந்து திரும்பி நோக்கியவனுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
சிவசக்தியை பார்த்து சந்தோஷமடைய முடியாமல் அவள் தவிப்புற, சற்றுத் தொலைவில் நின்றிருந்த மீனாக்ஷியையும் மோகனையும் ஒரு பார்வைப் பார்த்தான். அவளைப் புறக்கணித்து விட்டுச் செல்வதா இல்லை தன் அம்மாவின் வார்த்தையைப் புறக்கணிப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலையில் நின்றான்.
சதுரங்கத்தில் சிவசக்தி வைத்த செக்கில் ராணிக்கும் ராஜாவிற்கும் இடையில் நின்ற குதிரைப் போல் அவன் நிலைமை இருந்தது. காதலிக்கும் அம்மாவுக்கும் இடையில் யாரை வீழ்த்திவிட்டு சக்திசெல்வன் முன்னேறிச் செல்லப் போகிறான்.
30
காதல் போர்
இதே விமான நிலையத்தில் சிவசக்தி அவன் காதலை நிராகரித்துச் சென்ற பின்னும், அவள் வாழ்வில் வம்படியாய் நுழைந்து அவள் எண்ணத்தை மாற்றிவிட்டு இப்போது கண்காணாமல் சென்றதன் அவசியமென்ன என்று அவள் மனம் எழுப்பும் கேள்விக்கான விடையை அவன் மட்டுமே உரைக்க இயலும்.
ஆதலால் அவனை விமான நிலையத்தில் பார்த்த பின்பும் தவிர்த்து செல்ல மனமின்றி அவன் முன்னே துணிவோடு வந்து நின்றாள். அவள் அவனைப் பார்த்த பார்வையில் ஆழமான காதலும் அழுத்தமான கோபமும் ஒரு சேர இருந்ததை சக்திசெல்வன் கவனிக்கத் தவறவில்லை.
ஒருபுறம் அவன் அம்மா மீனாக்ஷியின் பார்வையில் இருந்த எதிர்பார்ப்பையும் கவனித்தான். இப்போது இந்த இரு பெண்களில் யாரை வீழ்த்தினாலும் காயப்படப் போவது தான்தான் என்பதையும் அவன் நன்காகவே உணர்ந்திருந்தான்.
சிவசக்தியும் சக்திசெல்வன் பார்த்த திசையில் நின்றிருந்த மீனாக்ஷி வாசுதேவனைக் கவனித்தாள். ஏற்கனவே கல்லூரியிலும் சில நேரங்களில் தொலைக்காட்சியிலும் அவளைப் பார்த்த நினைவு இருந்தது. இப்போது சிவசக்தி அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை.
அவள் அவனை நேராய் நோக்கி,
“சக்தி… நான் உங்ககிட்ட பேசனும்” என்றாள்.
அவள் என்ன பேசுவாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இத்தகைய சூழல் அதற்கு ஏற்றதல்ல என்று எண்ணியபடி,
“சாரி சக்தி… நாம நெக்ஸ்ட் மீட்டிங்ல பேசுவோமே” என்று பணிவாகவே அவன் உரைத்த போதும் சிவசக்தி அதை அவனின் நிராகரிப்பாகவே எடுத்துக் கொண்டாள்.
சிவசக்திக்கு அளவில்லாத கோபம் பொங்க அவனை வெறுப்போடு பார்த்துவிட்டு,
“அவசியமில்ல… நாம திரும்பியும் மீட் பண்ணவே வேண்டாம்” என்று சொல்லி விட்டு அவள் அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் அகன்றாள். அவனுக்காக அவள் கொடுத்த கடைசி வாய்ப்பும் முடிவடைந்தது.
சக்திசெல்வன்அவளின் அந்தக் கோபத்தை எதிர்பார்த்த போதும் அவள் அப்படிச் சொல்லிவிட்டு சென்றதைத் தாங்க இயலாமல், “சக்தி” என்று அழைத்த போது அவன் குரலுக்கு அவள் செவி சாய்க்கவில்லை.
சக்திசெல்வன் தான் எதற்காக அப்படி அவளிடம் பேசிவிட்டோம் என்று எண்ணிய போது அதற்கான நியாயமான பதில் அவனிடமே இல்லை. சக்தி தவிப்போடும் அதிர்ச்சியோடும் நின்றிருந்தான்.
மீனாக்ஷி அவன் அருகில் வந்து நிற்க சக்தி அவளை நோக்கி,
“இப்போ உங்களுக்கு ஹாப்பியா மாம்… சக்தியை நான் நிராகரிக்கனும்னு நீங்க நினைச்சீங்க அது நடந்துடுச்சு…” என்று வெறுப்பாய் பார்த்தான்.
“நீங்க நிரந்தரமா பிரியனும்னு நான் அப்படிச் சொல்லல” என்று மீனாக்ஷி மகனைப் பார்த்து உரைக்க,
“இப்போ நான் அவளுக்குப் புரிய வைக்கலன்னா… நிச்சயமா இது நிரந்தரமான பிரிவா மாறிடலாம்” என்றான்.
“நீ ப்ஃளைட்டை மிஸ் பண்ணிடுவ சக்தி”
“அது பரவாயில்ல… ஆனா நான் சக்தியை மிஸ் பண்ண விரும்பல மாம்” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் பேச விரும்பமால் சிவசக்தியை தேடிச் சென்றான்.
மோகன் அதிர்ச்சிச்சியில் நின்ற மீனாக்ஷியின் புறம் திரும்பி,,
“ உன் மகனோட பிடி… உன் கையை விட்டு நழுவிப் போகுது… அதுக்கு நீயே காரணமாகிட்ட” என்றார்.
“இப்பவும் சக்தி என் கை மீறிப் போகமாட்டான்” என்று தன் தோல்வியை ஏற்றுக் கொள்ள மனமின்றி மீனாக்ஷி உரைத்தாள்.
மோகன் சிரித்துவிட்டு, “பேசாம அவன் காதலுக்குச் சம்மதம் சொல்லிடு… அதான் இப்போதைக்கு நல்லதுன்னு நான் நினைக்கிறேன்” என்று மீனாக்ஷியிடம் உரைக்க அவள் அந்த முடிவை ஏற்க மறுத்தாள்.
யார் சம்மதம் தெரிவித்தாலும் இப்போதைக்குச் சிவசக்தி சம்மதம் தெரிவிக்க மாட்டாள். ஏனென்றால் சிவசக்திக்கு அவன் மீதான காதல் முழுவதுமாய்க் கோப உணர்வாய் மாறி இருந்தது.
அவனின் நிராகரிப்பு அவளுக்குக் கண்ணீரை சுரக்கவில்லை. மாறாய் அது வெறுப்பாய் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் சக்திசெல்வன் அவள் கண்முன்னே தோன்றாமல் இருப்பதே நல்லது.
சிவசக்தி எப்படியோ தவறவிட்ட ராமையும் ஜெயாவையும் கண்டு விட்டாள். ஆனால் அவர்களோடு விஜய் நின்று கொண்டிருந்தான். சிவசக்தியை பார்த்து அவன் இயல்பாகப் புன்னகை புரிய அவள் இருந்த நிலைமையில் அவளால் புன்னகையிக்க முடியவில்லை.
ஜெயா சக்தியிடம், “விஜய்… உனக்காகதான் வெயிட் பண்ணிட்டிருக்கான் ஏதோ சொல்லனுமாம்” என்றாள்.
சிவசக்தி விஜயை பார்த்து,“சொல்லு விஜய்” என்றாள்.
“சாரி சக்தி… என்னால உனக்கு ரொம்பக் கஷ்டம்… நேத்து தேவையில்லாம உன்னை வற்புறுத்தி பர்த்ட்டே டீரிட்டுக்கு…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவசக்தி இடைமறித்து,
“இதுல உன் தப்பு எதுவுமேயில்லை… நான்தான் புத்திகெட்டத்தனமா என்ன குடிக்கிறோம்னு கூடத் தெரியாம குடிச்சி தொலைச்சிட்டேன்… நீ கில்டியா பீஃல் பண்ண வேண்டிய அவசியமில்லை… லீவ் இட்” என்றாள்.
“இல்ல சக்தி” என்று விஜய் உண்மையை உறைக்க எண்ணிய போது சக்தி அவனைப் பேசவிடாமல்,
“அந்த விஷயத்தைப் பத்தி பேச வேண்டாமே… அதை நான் நினைச்சு பார்க்க கூட விருப்பப்படல” என்று அழுத்தமாய் உரைத்தாள்.
விஜய் தயங்கியபடி நிற்க, “விடு விஜய்… நீ புறப்படு… சென்னைக்கு வந்தா மறக்காம வீட்டுக்கு வா” என்று சொல்லி அவன் பேச நினைத்ததைப் பேசவிடாமல் அனுப்பி வைத்தாள்.
விஜயை திருமண வரவேற்பில் சந்தித்த போது அவளுக்கு இருந்த கோபமும் துவேஷமும் முற்றிலுமாய் மாறி நன்மதிப்பு ஏற்பட்டிருந்தது. அதற்குக் காரணமும் சக்திசெல்வன்தான். ஆனால் இப்போது அவன் மீது அவள் கொண்ட காதலை காப்பாற்ற தவறிவிட்டான்.
சக்தி டிக்கெட்டை பேகிலிருந்து எடுத்தபடி முன்னேறிச் செல்ல ஜெயா அவள் தோள்களைத் தட்டி, “சக்தி ப்ரோ” என்றாள்.
வெகுநாட்களுக்குப் பிறகு சக்திசெல்வனை ஜெயா கண்டதினால் அவள் குரலில் ஆச்சர்யமும் சந்தோஷமும் கலந்திருந்தது.
சிவசக்தி அலட்சியத்தோடு திரும்பி நோக்கினாள். அங்கே அப்படிச் சொல்லிவிட்டு இப்போது அவன் எதற்காகத் தன் முன்னே வந்து நிற்க வேண்டும் என்று புருவங்களை உயர்த்தினாள்.
“சக்தி ப்ரோக்கிட்ட பேசுடி” என்று ஜெயா ஆர்வமாய் உரைக்கச் சிவசக்தி ஏளனப் பார்வையோடு,
“இவரு சக்தி இல்ல மிஸ்டர். எஸ். எஸ்” என்றாள்.
இந்த ஒரு வாக்கியத்தில் அவளிடம் தான் பேச வந்தது வீண் எனச் சக்திசெல்வனுக்குப் புரிந்தது. இருப்பினும் எப்படியாவது தான் சொல்ல நினைத்ததை உரைத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணியபடி,
“சக்தி நான் பேசனும்” என்றான்.
‘இதையேதான் நானும் சொன்னேன்’ என்று சிவசக்தி மனதில் எண்ணமிட்டுக் கொண்டு அவன் புறம் திரும்பி,
“நாம நெக்ஸ்ட் மீட்டிங்ல பேசுவோமே” என்று அவன் பதிலை அவனுக்கே திருப்பி உரைத்தாள்.
“சக்தி கோபப்படாதே… நான் சொல்றதை கேளு” என்றான்.
“கண்டிப்பா கேட்கிறேன்… அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வந்து உங்களை நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது நீங்க சொல்றதை பொறுமையா கேட்கிறேன்” என்றாள் அலட்சிய புன்னகையோடு!
“சக்தி ப்ளீஸ் லிஸன்” என்று அவன் மீண்டும் பேச நினைக்க,
அவள் குறுக்கிட்டு, “அப்பாயின்மென்ட் கொடுத்துட்டு மீட்டிங் போயிட மாட்டீங்களே?” என்று கேள்வி எழுப்பினாள்.
“சக்தி இந்த மாதிரி பேசிறதை நிறுத்து… நான் க்ளியரா நடந்ததைப் புரிய வைக்கிறேன்… அப்புறம் நீ கோபப்படு” என்றான்.
“புரிய வைக்கப் போறீங்களா… ஏதாச்சும் கதை சொல்ல போறீங்களா எஸ். எஸ்… ஐம் வெரி மச் இன்டிரஸ்டட்… சொல்லுங்களேன்” என்றாள்.
இவ்வளவு நேரமாய் அவள் முகத்தில் இருந்த புன்னகை மாறவேயில்லை. அவளின் கோபமான பார்வையை விட இந்த வெறுப்பான புன்னகை அவனைக் காயப்படுத்திக் கொண்டே இருந்தது.
“நான் பேசிறதுக்கு வாய்ப்புக் கொடுக்காம நீயே பேசிட்டிருக்க” என்று சக்திசெல்வன் கோபமானான்.
“நான் பேசிறதுக்கு நீங்க வாய்ப்பு கொடுத்தீங்களா மிஸ்டர்.எஸ்.எஸ் ?” என்றாள்.
“ஸ்டாப் காலிங் மீ எஸ். எஸ்… சக்தின்னு கூப்பிடு” என்று அவன் சீற்றமடைய,
“முடியாது” என்று சொல்லும் போதே அவளின் உண்மையான கோபம் இப்போது வெளிப்பட்டது.
“நான் செஞ்சது தப்புதான்… அதை நான் ஏன் செஞ்சன்னு கேளு சக்தி”
“என்ன பெரிய ரீஸன்… மிஸஸ். மீனாக்ஷி வாசுதேவன் சொன்னதை நீங்க தட்டாம கேட்டிருப்பீங்க” என்றாள்.
இப்போது சக்திசெல்வன் என்ன பேசுவதன்று தெரியாமல் விக்கித்து நின்றான். இனி தான் என்ன உரைத்தாலும் அதனை அவள் சரியாகப் புரிந்து கொள்ள மாட்டாள் என்று மௌனமானான்.
சிவசக்தி மேலும் அவள் கையிலிருந்த வாட்ச்சை கழட்டி அவனிடம் நீட்டி,
“இந்த வாட்சினால என் நேரம்தான் விரயமாகுது… டேக் இட்” என்று அங்கே இருந்து இருக்கையில் வைத்தாள்.
அவளைக் கோபமாய்ப் பார்த்தபடி, “இந்த வாட்சை கழட்டி கொடுத்திட்டா நீ என்னை மறந்திட முடியும்னு நினைக்கிறியா?” என்று கேட்டான்.
“லைஃப்ல ஆக்ஸ்டென்ட்ஸ் நடக்கிறது சகஜம்தான்… நாம அதைப் பத்தி நினைச்சிட்டே இல்லாம அதை மறந்துட்டு முன்னேறி போயிட்டே இருக்கனும்… இப்படி நீங்கதானே என்கிட்ட சொன்னிங்க” என்றாள்.
“ஆக்ஸ்ஸிடென்டன்னு எதைச் சொல்ற… நம்ம இரண்டு பேருக்குள்ள இருக்கிற காதலையா சக்தி” என்று கோபத்தை முயற்சி செய்து கட்டுப்படுத்திக் கொண்டு வினவினான்.
“நம்ம இரண்டு பேருக்குள்ள காதலா… இது எப்போ?” என்று அலட்சியமாக உரைத்தாள்.
இத்தனை நேரம் அவர்களின் உரையாடலை புரிந்து கொள்ள முடியாமல் நின்றிருந்த ஜெயா பலமுறை சிவசக்தியின் தோள்களைத் தட்டி ஆசுவாசப்படுத்த முயிற்சி செய்தாள். ஆனால் சிவசக்தி பொருட்படுத்தவே இல்லை.
தன் தோழியின் செயல்களை ஜெயாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. நேற்றுவரை உருகி உருகி சக்திசெல்வனைக் காதலித்தவளா இவள்!
அவனை இப்படி முகத்துக்கு நேராய் அவமானப்படுத்தினாள். இதற்கு மேல் தன் தோழயின் பேச்சை ஜெயா நிறுத்த எண்ணி,
“சக்தி போதும் டைமாச்சுக் கிளம்பலாம்” என்றாள்.
சிவசக்தி புறப்பட யத்தனிக்க, “சக்தி லாஸ்ட்டா ஒரே ஒரு விஷயம் கேட்கனும்” என்று சக்திசெல்வன் தடுத்தான். சிவசக்தி அப்படி என்ன அவன் கேட்க போகிறான் எனத் திரும்பி முறைத்தபடி நின்றாள்.
“உன் மனசார உண்மையை மட்டும் சொல்லு… நீ என்னைக் காதலிக்கல” என்று வினவினான்.
சிவசக்தி இயல்பாகப் பார்த்தபடி,
“நான் எப்பையாச்சும் உங்களைக் காதலிக்கிறேன்னு சொன்னேனா… அப்படி எதுவும் எனக்கு ஞாபகத்தில் இல்லையே” என்றாள்.
ஆமாம் உண்மையில் அவளுக்கு ஞாபகத்தில் இல்லைதான். ஆதலால்தான் அவனை நோக்கி அவள் அவ்வாறு உரைத்துவிட்டாள்.
இத்தனை நேரம் அவள் பேசியதை எல்லாம் கேட்டு சக்திக்குக் கோபம் வந்தது. இப்போது சிரிப்பும் அவள் நிலையை எண்ணி பரிதாபமும் உண்டானது.
சிவசக்தியின் இந்தக் கேள்விக்கான விடையை சக்திசெல்வன் சுலபமாகச் சொல்லிவிட முடியும். ஆனால் இப்போது அந்த நிகழ்வை விவரித்தால் சிவசக்தியின் கோபம் பன்மடங்கு அதிகமாகும். ஆதலால் அதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல எண்ணி அமைதியாய் நின்றான்.
சிவசக்தி விமானத்தில் ஏறி அமர்ந்த பின் ஜெயா அவளிடம் அந்தப் பயணம் முடிவுறும் வரை எப்படி எப்படியோ அவளுக்கு அவள் செயல் தவறானது எனப் புரிய வைக்க முயற்சி செய்தாள். ஆனால் தான் நடந்து கொண்ட விதத்தில் தவறேதும் இல்லை என்று அவள் உறுதியாய் நம்பினாள்.
சிவசக்தி அவனை வரிக்கு வரி அவமானப்படுத்திப் பேசிய பின் தன் சுயகௌரவத்தை விடுத்து அவள் பின்னோடு செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. நேற்று இரவு சிவசக்தி தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தாள் சக்திசெல்வனுக்கு இப்போது அவள் மீதான காதல் தொலைந்து போய் வெறுப்பே மிச்சமாயிருக்கும்.
அவளின் இந்தச் செயல் தன் மீது அவள் கொண்ட காதலினால் விளைந்த ஏமாற்றத்தினால் உண்டானது என்று அவன் தனக்கே சொல்லி சமாதானம் செய்து கொண்டாலும் அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவனின் இதயத்தைப் பிளவுறச் செய்தன.
இப்போதைக்கு அந்த இடம் விட்டு வெகுதூரம் பயணித்துச் சென்றாள் மட்டுமே அவன் மனதிற்கு ஆறுதல் கிட்டும். ஆதலால் சக்திசெல்வன் தன் தந்தையோடு அவன் பயணத்தை மேற்கொண்டான்.
வேறு வேறு திசையில் பயணிக்கும் அந்த இரு காதல் பறவைகளின் பயணங்கள் நன்றாகவே முடிவுற்றது. ஆனால் அவர்களின் காதல் பயணமோ வழியிலேயே தடம் புரண்டது. சிவசக்தியின் மனநிலையை மாற்றம் பெறும் செய்யும் பிரம்மாஸ்திரம் சக்திசெல்வனிடம் உள்ளது. அதை அவன் சரியான நேரத்தில் சரியாகப் பயணப்படுத்திக் கொண்டாள் நிச்சயம் இவர்களுக்கு இடையில் நடக்கும் காதல் போர் முற்றுப் பெறும்.